எல்லாம் நேரம்....!!!

     மீண்டும் அவளது நினைவு......எப்போதெல்லாம் அவளது நினைவு வருகின்றதோ கொஞ்சம் மனது வலிக்கும்...

     குழந்தை வெளியில் விளையாட போய் இருந்தாள்...மனைவி நான் அமர்ந்து இருந்த இடத்தை நோக்கி வரும்போது அன்றைய நாள்காட்டியில் முந்தைய நாளை கிழித்தாள் இன்றைய தேதியாக 10.12.2028 என்று காட்டியது...அந்த காகிதத்தைக் கையில் வைத்து கொண்டு என்னருகில் வந்தவள்..

"என்ன சோகமாய் இருக்கிற மாதிரி இருக்கு?" என்றாள்

    திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் அடிக்கடி வந்து வலி தரும் அவளின் நினைவுகளை பற்றி மனைவியிடம் இதுவரை சொல்லவில்லை...

      அவளின் கேள்விக்கு இப்போதும் உண்மையான பதிலை சொல்ல மனம் இல்லை...இருந்தாலும் இவ்வளவு காலம் அவளை ஒருவிதத்தில் ஏமாற்றி இருக்கிறேன்..இனிமேலும் அது தொடர வேண்டுமா என்று நினைகும்போது..அந்த விசயத்தை சொல்லலாம் என நினைத்தேன்...

    “இங்கு வா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று அழைக்க அருகில் உட்கார்ந்தாள்

“என்ன சொல்லபோகின்றிர்கள்...”

 “திருமணத்திற்கு முன் நான் ஒரு பெண்ணை காதலித்தேன்”

     இதை நான் சொல்லி முடித்ததும் அவளின் மனநிலை  முற்றிலும் மாறியது...எல்லா பெண்களுக்கு இருக்கும் அதே உணர்வு....

    “அப்படியா அந்த காதல் என்ன ஆச்சு? எதுக்கு என்னை திருமணம் செய்தீர்கள்” என்றாள் இயல்பாய் ...உணர்வை மறைத்து..

   "காதல் தோல்வி ஒன்றும் இல்லை.....எங்கள் காதல் பிரிந்தது எல்லாம் காலத்தின் கொடுமை...காலம் ரெம்ப வலிமையானது..."என்றேன்

“அப்படி எப்படி காலம் உங்களின் காதலை பிரித்தது”என்றாள்

       "நாங்களும் மற்ற காதலர்களை போலத்தான்...காதலை தொடங்கினோம்....தேவையில்லாத சந்திப்புகள்,பேச்சுக்கள்..பல வண்ண வண்ணத்து பூச்சிகளை மனதில் பறக்க விட்டோம்....வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருண்டை எல்லாம் சரியாக உருண்டது....ஒரு நேரத்தில் எங்களின் வீட்டில் காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்காலம் என்று நினைக்கும்போது...

      ”எப்படியும் வீட்டில் ஜாதகம் பார்ப்பார்கள் எனவே முதலில் நாமே ஜாதகம் பார்ப்போம்,சரியாக பொருந்தி இருந்தால் வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்போம்,இல்லை என்றால்...சம்மதம் இல்லாத திருமணம்” என்றாள் அவள்

      அவளின் கருத்தும் சரி என பட்டதால் ஜாதகம் பார்த்தோம் இருவரின் பொருத்தமும் சரியாக இருந்தது ஆனால் ஒரு பிரச்சினை...அவளின் வயது என் வயதை விட ஒரு வருடம் அதிகம்..இதற்கு வீட்டில் எப்படியும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்..இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்...

      சம்மதம் இல்லாத திருமணத்தில் பிரச்சினைகள் அதிகம்..முடிந்தவரை உறவினர் சம்மதத்தோடு திருமணம் செய்வது நலம்..என்ற என் கருத்தை அவளிடம் சொன்னேன்...

“அதற்கு அவள் என்ன சொன்னாள்?” என்றாள் மனைவி ஆர்வமாக


       இதற்கு தீர்வாக, அவள் பணிபுரியும் இடத்தில் இருந்து ஆய்வுக்காக விண்வெளிப்பயணம் செல்ல இருப்பதாகவும் அதில் தானும பங்கு எடுத்துக்கொண்டால் அவளின் வயது என் வயதை விட குறைய வாய்ப்பு இருப்பதாக சொன்னாள்.



“இது எப்படி சாத்தியம்?”என்றாள்  மனைவி


     "இதைத்தான் நானும் அவளிடம் கேட்டேன், சிறப்பு சார்பியல் தத்துவத்தின் (special relativity theory) படி, இரண்டு வெவேறு இரு நிலைகள் இருப்பதாக வைத்துகொள், அதில் ஒன்று நிலையாகவும் மற்றொன்று வேகமாக நகர்வதாக கொண்டால்......இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவர் கடிகாரத்துடன் இருந்து காலத்தை கணக்கிட்டால், நிலையாக இருப்பவரின் கடிகாரம் நகரும் அளவைவிட நகரும் நிலையில் உள்ளவரின் கடிகாரம் மெதுவாக நகரும்...இதை time dilation என்று சொல்வார்கள்" என்றேன்


"இது என்னங்க புதுக்கதையா இருக்கு?"என்றாள்

   "இல்லை இது ரெம்ப பழைய கதைதான் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து உண்மை என்று நிரூபித்து இருக்கிறார்கள்..இதைப்பற்றி அப்புறம் தெளிவாக சொல்கிறேன்." என்றேன்


   "இதை பற்றி எனக்கு தேவை இல்லை அவள் அடுத்து என்ன ஆனாள் என்பதை சொல்லுங்கள் முதலில்" என்றாள்


    "இந்த முறையில் அவள் பயணித்தால் அவளின் காலம் பூமியில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் குறையும்...அதாவது காலம் குறைந்தால் வயதும் குறைந்த மாதிரிதானே...அதான் அந்த பயணம் செய்யபோவதாக சொன்னாள். நானும் சிறு தயக்கத்திற்கு பின்..எப்படியும் எங்களின் காதல் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சரி என்றேன்".

"சரி அவள் அந்த பயணம் போனாளா?" என்றாள்

   "ஆமாம் போனாள்.... ஆனால் திரும்பி இன்றுவரை வரவே இல்லை..என்ன ஆச்சு என்றும் தெரியவில்லை."


"ஏன் ஏதும் விபத்து ஆகிவிட்டதா?"

    "இல்லை அதுபற்றி ஒரு தகவலும் இல்லை...இந்த நேரத்தில் தான் என் வீட்டில் திருமணத்திற்கு கட்டாய படுத்தினார்கள்..நான் திருமணம் வேண்டாம் என்று சொல்ல இந்த காரணத்தை சொன்னால் நம்ப மாட்டார்கள் ....அதான் உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விட்டேன்"

     "இப்போது வருத்தபடுவதற்க்கு காரணம் அவள் திரும்பி வந்துவிடுவாளோ என்ற பயமா? இல்லை உண்மையாக காதலித்து அவளை பிரிந்த சோகமா?" என்றாள் மனைவி

   "எங்களின் காதலுக்காக ஏதோ ஒன்று செய்ய போய் அவள் என்ன ஆனாள் என்று தெரியாத போது நான் மட்டும்  இங்கு குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கிறேன்..இத்தனைக்கும் அவளை உணமையாக காதலித்தும் இருக்கிறேன்....அதான் அவள் நினைவு வரும்போது  கொஞ்சம் மனது வலிக்கின்றது." என்றேன்

   என் மனைவிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கையில் இருந்த அந்த நாள்காட்டி காகிதத்தை கோபமாக கசக்கி கொண்டு இருந்தாள்.

    விளையாட சென்ற என் குழந்தை சந்தோசமாக ஒருவரை வழிகாட்டி அழைத்து வந்து கொண்டு இருந்தாள்...

     "அப்பா இவங்க உங்களை தேடி வந்து இருக்காங்க...இவங்க பேர்கூட என் பெயர்தான்...ரெம்ப அழகா இருக்காங்க...." என்றாள் என் மகள் அவளின் கையை பிடித்தபடியே

      அவளின் முகத்தை பார்த்த அந்த நொடியில் எழுந்து நின்றேன்...நான் சில வருடங்களுக்கு முன்னால் பார்த்து பார்த்து காதலித்த முகம்......என்னோடு ஒப்பிட்டால் கொஞ்சம் மாறியிருந்தாள்...அவளுக்கு எல்லாம் புரிந்து இருந்தது...எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது அந்த குழந்தைக்கு அவள் பெயரை வைத்து இருப்பது.....


    வசாலில் நின்று இருந்தாள்...அடுத்து என்ன செய்வது என்று அறியாமல்...எப்போதும் எனக்கு  அவளின் அழகான கண்களை பார்த்தால்...வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே  உருளும் ஒரு உருண்டை...இப்போது என் அடிவயிற்றில் மட்டும் வேகமாக உருண்டது.








(time dilation படிக்க கொஞ்சம் ஆர்வமான விசயம்...அதே நேரத்தில் கொஞ்சம் குழப்பமான விசயமும் கூட...இது எப்படி என்பது பற்றி  விளக்கமாக ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் தொடரில் சொல்கிறேன்... மேலே சொன்ன கதையில் அதிகம் சொல்லவில்லை...அதை விளக்கினால் கதை நீளும் என்பதால் இது மட்டும் இப்போதைக்கு.))

8 comments:

மதுரை சரவணன் said...

அருமையா இருக்கு ... வயது குறைய எடுத்த ஐடியா நிஜ வாழ்வுக்கு ஒத்து வராது என்பதை கதை சொல்லுகிறது . வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

நிலாமதி said...

வித்தியாசமான் கதை . விஞ்ஞானத்தை புகுத்த முனைந்து இருக்கிறீர்கள் .
முயற்சிக்கு வாழ்த்துக்கள் .மேலும் தொடருங்கள்.

கணேஷ் said...

Blogger மதுரை சரவணன் said...
அருமையா இருக்கு ... வயது குறைய எடுத்த ஐடியா நிஜ வாழ்வுக்கு ஒத்து வராது என்பதை கதை சொல்லுகிறது . வாழ்த்துக்கள்///

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

கணேஷ் said...

philosophy prabhakaran said...
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்..////

கருத்துக்கும்..தொடர்வதுகும் மிக்க நன்றி..

கணேஷ் said...

நிலாமதி said...
வித்தியாசமான் கதை . விஞ்ஞானத்தை புகுத்த முனைந்து இருக்கிறீர்கள் .
முயற்சிக்கு வாழ்த்துக்கள் .மேலும் தொடருங்கள்.////

உங்களின் கருத்துக்கு நன்றி..தொடர்கிறேன்..

Kousalya Raj said...

மிகவும் ரசித்தேன் கணேஷ்....அதைவிட இறுதியில் நன்றாக சிரித்தேன்.....அறிவியல் பற்றி நிறைய தெரிந்து இருந்தாலும் அதை கதையுடன் இணைப்பதற்கு ஒரு திறமை, ரசிப்பு தன்மை வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது....! வாழ்த்துக்கள்....!

அப்புறம் அந்த நேரம் பற்றி 'எல்லாம் நேரம்.......!' :))

கணேஷ் said...

மிகவும் ரசித்தேன் கணேஷ்....அதைவிட இறுதியில் நன்றாக சிரித்தேன்.....அறிவியல் பற்றி நிறைய தெரிந்து இருந்தாலும் அதை கதையுடன் இணைப்பதற்கு ஒரு திறமை, ரசிப்பு தன்மை வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது....! வாழ்த்துக்கள்....!

அப்புறம் அந்த நேரம் பற்றி 'எல்லாம் நேரம்.......!' :))////

உங்களின் கருத்துக்கு நன்றி...

ஆமாம் எல்லாம் நேரம்தான்...