"இப்போது நமக்கு ஒரு புது பிரச்சினை" என்றான் அந்த மூவரில் ஒருவன்..
"என்ன பிரச்சினை?" இன்னொருவன் கேட்க
"இந்த செல்களை பற்றி முழுவதும் நாம் கொன்ற அந்த ஆளோடு சேர்த்து இன்னொருத்திக்கும் தெரியும்..முடிந்தால் பிரகாலத்தில் அவளால் இதைபோன்ற ஒன்றை எளிதாக உருவாக்க முடியும்..அதுவும் மிக பாதுகாப்பான முறையில்" என்றான்
"இப்போது என்ன செய்வது..அப்படி அவளால் உருவாக்கி விட்டால் நாம் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டது எல்லாம் வீண்..அதனால் அவளையும் கொன்றுவிடுவதுதான் நல்லது என்றான்" ஓருவன்..
"இப்போது அவள் இருப்பது காவல்துறையின் கண்காணிப்பில்...அவள் எப்போது அதில் இருந்தது வெளிவருகின்றளோ அப்போதுதான் நம்மால் எதுவும் செய்யமுடியும்..அதுவரை காத்திருக்கவேண்டும்" என்றான்.
இல்லை அதுவரை காத்திருக்க வேண்டாம்..அவளால இந்த செல்களை உருவாக்கும் முறையை மற்றவருக்கு விளக்கமுடியும்..இதுவும் நமக்கு ஆபத்தானது..எனவே அவளை எவ்வளவு சீக்கிரம் கொலை செய்கின்றமோ அவ்வளவு நல்லது"..என்றான் ஒருவன்
இதுவே முடிவாக எடுத்துகொள்ளபட்டு இருந்தது.யார் புனிதாவை கொள்வது என்றும் முடிவாகியிருந்தது...
"நிஷி இந்த செல்கள் விசயம் ரெம்ப சிக்கலாக இருக்கே..எங்கே இருந்து தொடங்க என்றே நமக்கு இதுவரை தெளிவாகவில்லை ஏதாவது உருப்படியாக இருந்தால் சொல்லேன்"என்றான் கணேஷ்
"இதை செய்தவர்கள் கண்டிப்பாக நான் நினைக்கும் இரண்டு பிரிவுக்குள்தான் இருப்பார்கள்..ஒன்று இதே செல்களை உருவாக்கும் துறையில் இருக்கின்றவர்கள்,அடுத்து கடவுளை எல்லாம் செய்தவர் என்று நம்புகின்றவர்கள்.".என்றது நிஷி
"முதலில் நீ சொன்ன விசயம் எனக்கு புரிந்தது இந்த கொலையை தொழில்போட்டிக்கு அவர்கள் செய்து இருக்கலாம்...ஆனால் நீ சொன்ன கடவுள் விசயம் எனக்கு புரியவில்லை" என்றான்
"கணேஷ் நான் இந்த செல்களை முழுவதும் அலசிப்பார்த்ததில் இந்த செல்களை கொண்டு கண்டிப்பாக ஒரு இறப்பு இல்லாத உயிரை உருவாக்க முடியும்..அப்படி உருவாக்குவது என்பது நீங்கள் நம்பும் கடவுளின் படைப்புக்கு எதிரானது...பிறப்பு...இறப்பு..அப்புறம் மோட்சம் அல்லது செய்த கருமத்திற்க்கு ஏற்ப மறுபிறவி இதுதானே நீங்கள் காலம் காலமாக நமபிவருவது..இந்த அழியாத உயிரியை உருவாக்கினால் அந்த கருத்து அழிந்துவிடும் அதான் இதற்கும் கடவுளை அதிகமாக பின்பற்றும் ஒரு கூட்டத்திற்கு தொடர்பு இருக்கலாம்..."என்றது நிஷி.
"ஆமாம் இது எனக்கு தெரியாமல் போச்சே?" என்றான் கணேஷ்
"உனக்கு எப்படி தெரியும்..என்ன காரணமோ தெரியவில்லை புனிதாவை பார்த்ததும் நீ மாறுகின்றாய்..இந்த மனிதர்களுக்குள் ஒரு பெண்ணை பார்த்தவுடன் என்ன நடக்கும் என்று எந்த நாய்க்கு தெரியும் அவளை பார்த்தவுடன் உன் பேச்சு மாறுகின்றது...உன் பார்வை மாறுகிறது.."".
"நிஷி இதை எல்லாம் நீ ஏன் கவனிக்கின்றாய்...இது எல்லாம் அப்படித்தான்..இது எங்களின் உணர்ச்சி..உன்னை போன்ற நாய்க்கு புரியாது.".
"என்ன புரியுதோ இல்லையோ...இந்த கொலைக்கு அந்த புனிதாவும் உதவி இருப்பாள்.. என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது" என்று சொல்லிவிட்டு நிஷி மறு அறைக்கு சென்று ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தது..
அன்றைய இரவு நிஷி தனது செயற்கை கண்ணால் நீண்டநேரம் விழித்து புத்தகம் படித்து கொண்டு இருந்தது...மறு நாள் காலையில் "அப்படி என்ன படித்தே நிஷி இரவு நீண்ட நேரம்? என்றான் கணேஷ்
"மனிதனால் எந்தெந்த விதத்தில் எல்லாம் சங்கேத மொழிகளை எழுதமுடியும் என்ற தகவல்களை படித்து கொண்டு இருந்தேன்.. சரி நீ அவ்வளவு நேரம் தூங்காமல் என்ன செய்தாய்?"
"நீ வேற புனிதா இந்த கொலைக்கு உதவி இருப்பாள்னு சொல்லிட்டே அதான் அதை நினைச்சி எனக்கு தூக்கமே வரலை"
"இதுக்கும் உன் தூக்கம் போனதுக்கும்..என்ன காரணம்...நான் படித்து இருக்கிறேன் உங்களுக்குள் இந்த காதல் பேரிக்காய் எல்லாம் வருமாமே..அந்த மாதிரி ஏதாவது உனக்கும் அவளுக்கும் வந்துருச்சா?"
"நிஷி இந்த காதல் எனும் மனிதனின் மேன்மையான உணர்ச்சி பற்றி உனக்கு தெரியாது..அதனால் அதை பற்றி நீ பேசாதே"..என்றான்
"எப்படியோ..அவளுக்கு உதவி செய்து காப்பாற்ற நினைத்து அவள் மாட்டிக்கொண்டால் உனக்கும் பிரச்சினை பார்த்துகொள்" என்றது நிஷி
"ச்சே ச்சே புனிதாவை பார்த்தால் அப்படியா இருக்கு?" என்றான்
"சரி இன்று அவளை வரவழைத்து அந்த பெட்டி சம்பந்தமான விஷங்களை விளக்கச்சொல்" என்றது நிஷி
கணேஷ் அந்த இடத்திற்கு போகும்போதே புனிதாவை வீட்டிற்கு சென்று அழைத்துபோக எண்ணி அவளின் வீட்டிற்கு சென்றான்..
இருந்தாள்..இரவு துங்காமல் முகம் சற்று வீங்கியிருந்தது...நேற்று கணேஷ் பார்த்த புனிதாவுக்கும் இப்பொது பார்ப்பதற்கும் இதுவே வித்தியாசம்...
"என்ன இரவு முழுவதும் துங்கவில்லையா?"
"எப்படி தூங்குவது நேற்று மாலையில் ஒருவன் வந்து சில மணிநேரம் என் வீட்டிற்கு எதிரில் இருந்து நோட்டம் விட்டு இருக்கிறான்...நான் இல்லை என்று தெரிந்தவுடன் போய்விட்டானாம் அம்மா சொன்னார்கள்..அதான் பயம்..அடுத்த குறி நான்தான் என நினைக்கிறேன்".என்றாள்
"அவனை உங்கள் அம்மா பார்த்தார்களா?" என்றது நிஷி
"முதலில் யாரோ என்றுதான் நினைத்து இருக்கிறார்கள்..அப்புறம் அவன் எங்கள் வீட்டை பார்ப்பது தெரிந்து..உற்று நோக்க அவன் கிளம்பி விட்டான்" என்றாள்.
அதற்குள் அந்த அய்வுகூடத்திற்கு வந்து இருந்தார்கள்..அந்த பெட்டி சம்பந்தமான விசயங்கள் அடங்கிய பகுதியை கணினியில் இருந்து காட்டினாள்
முதல் சில பகுதிகளில் அந்த பெட்டியின் அளவுகள்,அது செயல்படும் முறைகள் குறித்த தகவல்கள் இருந்தன...சில பக்கங்கள் கழித்து அந்த ரகசிய எழுதுக்கள் எப்படி அளிப்பது...அந்த ரகசிய எழுத்துக்கள் என்ன எனபதை பற்றி இருந்தன...
அந்த பகுதி மொத்தமே இரண்டு பக்கங்கள்தான் இருந்தன..ஒரு பக்கத்தில் ஒரு விசித்திரமான ஒரு செயற்கையான செல்லை பற்றிய தகவல்...அடுத்த பக்கத்தில் ஒரு ஒட்டக சிவிங்கியின் படம்..
இதை பார்த்ததும் சற்று குழம்பிய நிஷி"இதில் சொல்லியிருக்கும் செல்களை பற்றி உனக்கு தெரியுமா? என்றது
"ஆமாம் இதை உருவாக்க சில அடிப்படை உதவிகள் மட்டும் நான் செய்தேன்..மற்றபடி முழுமையான செயற்கை வடிவமைப்பு தலைவாரால் செயபட்டது" என்றாள்
"முடிவில் எதுக்கு இந்த படம்?" என்றான் கணேஷ்
"இந்த ஆள் ஏதோ நிறையா யோசித்து பண்ணி இருக்கிறார்" என்றது நிஷி
அந்த நேரத்தில் கணேஷ்க்கு ஒரு அலைபேசி அழைப்பு வர அவன் கொஞ்சம் விலகி வெளியில் சென்றான்..இப்போது நிஷிவும் புனிதாவும் மட்டும் ஒரு அறையில் இருந்தார்கள்...புனிதா நிஷி அந்த மேசையில் அங்கும் இங்கும் நடப்பதை உற்று பார்த்தாள்..
"என்னை ஏன் அப்படி பார்க்கிறே?..இதே பார்வையை கணேஷ்டம் பார் இரவில் நிம்மதியாக உறங்குவான்" என்றது
"இல்லை ஒரு நாய் எப்படி இவ்வளவு புத்திசாலியாக என்றுதான் பார்க்கிறேன்" என்றாள்
"என்னை உனக்கு பிடிக்குமா"என்று கேட்டது நிஷி
"ஆமாம் ரெம்ப ஆனா நீதான் உன்னைப்பற்றி எதுவுமே சொல்ல மாட்டிங்கிறியே""என்றாள்
"என்ன பற்றி உனக்கு என்ன தெரியணும்"
"எல்லாம்"
"அப்படின்னா ஒரு விசயம் உனது பேரை நான் அளைப்பது பிடிக்கவில்லை"
ஏன்? என்றாள்
"புனிதா என்பதில் கடைசியில் முடியும் இந்த "தா" எழுத்து ஏதோ நான் உன்னிடம் எதையோ "தா" என்று கேட்பது போலவே இருக்கின்றது"..என்றது.நிஷி
"சரி ஏதாவது கேள் தருகிறேன்" என்றாள்
"அப்படி என்ன உன்னிடம் இருக்கின்றது எனக்கு கொடுக்கும்படி" என்றது நிஷி
"அதை நீதான் சொல்லவேண்டும்" என்றாள்
"சரி நீ மீண்டும் ஜீனோ என்ற புத்தகம் படிச்சு இருக்கியா?"
"ஆமாம் சுஜாதா எனக்கு மிக பிடித்தவர்"என்றாள்.
"அந்த கதையில் என்னை மாதிரியே ஒரு அதிசய நாய் வருமே?"
"ஆமாம் அதுக்கு என்ன?"
"அதே கதையில் நிலா என்ற உன்னை போல அழகான பெண் இருப்பாள்..அந்த நாய் ஏதாவது உருப்படியாக செய்தால் தன மார்போடு அணைத்து ஒரு முத்தம் கொடுப்பளே..அதே மாதிரி நீயும் எனக்கு முத்தம் கொடுப்பியா? "
"நான் உனக்கு முத்தம் கொடுப்பதால் உனக்கு என்ன லாபம்..மனிதனுக்கு இருக்கும் உணர்ச்சிகள் எல்லாம் உனக்கு உண்டா என்ன? "என்றாள்
"இல்லை இந்த ஒரு முத்தத்திற்கு எத்தனை பேர் எப்படி அலைகிறார்கள்..என்று நான் கவிதை,கதைகளில் படித்து இருக்கிறேன்..அதான் இதன் மீது ஆர்வம்" என்றது நிஷி
"முத்தம் கொடுத்தல் என்னை நீ புனிதா என்று அழைப்பாயா?"
"இல்லை எனக்கு எப்போது எல்லாம் வேண்டுமோ அப்போது புனி "தா" என்பேன் சாதரணமாக உன்னை புனி என்றே அழைக்கிறேன்" என்றது நிஷி
நிஷியை தூக்கி மார்போடு அணைத்து அதான் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்..
"நல்லாத்தான் இருக்கு" என்றது நிஷி
"என்னது முத்தமா?"
"இல்லை"
அதற்குள் கணேஷ் வந்தான்.."புனிதா உனக்கு பாதுகாப்பு அளிக்க நான் பேசிவிட்டேன் நீ கவலைப்பட தேவை இல்லை" என்றான்.
"அப்படி என்றால் எனக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கு அப்படித்தானே?"
"நாங்கள் இருக்கிறோம் பயப்படாதே" என்றான்.
"என்ன நிஷி அந்த ரகசிய எழுத்துக்கள் பற்றி ஏதாவது உனக்கு தெரிந்ததா?" என்றான்
"அந்த எழுத்துக்கள் எல்லாம் ஒரு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட செல்லில் எழுதப்பட்டு இருக்க வேண்டும்....அந்த செல்கள் உருவாக்கபட்டதற்கான தகவல்கள் எல்லாம் இருக்கின்றன ஆனால் அதன் இறுதி வடிவமைப்பு மட்டும் இல்லை...அதோடு இல்லாமல் சற்றும் பொருந்தாத இந்த ஒட்டகசிவிங்கியின் படம் வேறு......அந்த பெட்டியில் சங்கேத எழுத்துக்களை கொடுக்க எந்த மாதிரியான வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்தால் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியும்" என்றது நிஷி
"சரி அதை பெட்டி கிடைத்த பின்னர் பார்க்கலாம்..பிரேத பரிசோதனையில் சாவுக்கு காரணம் தலையில் பாய்ந்த குண்டுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது,அவரின் உடலை இந்த பிரச்சினைகள் முடியும்வரை பாதுகாப்பாக வைத்து இருக்க உத்தரவு போட்டு இருக்கிறேன்" என்றான்
"அந்த உடலும் ஒருவிதத்தில் நமக்கு உதவலாம்"என்றது நிஷி
இருவரையும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த புனிதாவிடம்"சரி கிளம்பு உன்னை வீட்டில் விட்டுவிட்டு செல்கிறேன்" என்றான்
"என்னோடு நிஷியையும் இருக்க சொல்லுங்களேன்".என்றாள்
"இதைபார்த்து கூட்டம் கூடி விட்டால்?" என்றான்
"இல்லை நான் பார்த்துகொள்கிறேன்..எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்" என்றாள்
"என்ன போகின்றாயா நிஷி?"
"அவள் என்னை கூட்டம் போட்டு காட்டாமல் இருந்தால் நான் போகிறேன்"
புனிதா அவள் வீட்டில் இறங்கும்போது நிஷியையும் துக்கிக்கொண்டாள்
"எங்கள் ஆட்கள் உங்கள் வீட்டை கண்காணிப்பார்கள்..நீ கவலை இல்லாமல் தூங்கு" என்றான்
"புனிதாவை நான் பார்த்துகொள்கிறேன் நீ அவளை நினைக்காமல் தூங்கு" என்றது நிஷி
இருவரும் பார்த்து சிரித்து கொண்டார்கள்
புனிதா வீட்டுக்குள் போகும்போது "புனி தா" என்றது நிஷி
முத்தம் கொடுத்தாள்
"புனி நீ இரவில் தனியாகத்தான் படுப்பியா?"
"ஆமாம் ஏன்?" என்றாள்
"இல்லை கேட்டேன்" என்றது நிஷி
சாப்பிட்டு துங்கும் வேளையில்.."நிஷி இப்பவாது உன்னை பற்றி சொல்லேன்" என்றாள்
"நான் ஒரு சாதாரண பேசத்தெரிந்த நாய் அவ்வளவுதான்..வேறென்ன தெரியவேண்டும் உனக்கு?"
"அதான் நீ எப்படி பேசுகின்றாய்?எப்படி புத்தகம் படிக்கின்றாய்? உனக்கு எப்படி இரண்டு மூளை?"
"சொல்லித்தான் ஆக வேண்டுமா?"
"ஆமாம் கண்டிப்பாக" என்றாள்
"நீங்கள் உங்கள் அய்வுகூடத்தில் உருவாக்கிய அந்த அழியா செல்கள் நீங்கள் நினைப்பது போல முதன்முதலாக உருவாக்கப்படவில்லை....ஏற்க்கனவே அந்த செல்களை வைத்து ஒரு உயிர் படைக்கபட்டுள்ளது..அது நான்தான்..என்னை இந்த முறையில் உருவாக்கியது பொற்கொடி எனும் வேற்றுகிரக பெண்.அவள்தான் முதன்முதலில் இந்த மாதிரியான செல்களை உருவாக்கினாள்..அதில் தேவையான மாற்றங்களை செய்து என்னை பேச வைத்தாள்..செயற்கையான கண்கள்,நினவுபகுதி என எல்லாவற்றையும் பொறுத்த உதவி செய்தாள்..ஆனால் அவள் இப்போது இல்லை."என்றது நிஷி
"நிஷி நீ அழியா செல்களின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறாயா?" என்றாள்
"ஆமாம் வேண்டுமானால் என் காதை கொஞ்சம் வெட்டி பார் கொஞ்ச நேரத்தில் தானாக வளரும்" என்றது
"வேண்டாம் வேறென்ன உனக்குள்?" என்றாள்
"ஒரு செயற்கையான கண்...அது செயற்கை நினவுப்பகுதியுடன் இனைக்கபட்டு இருக்கும்...என்னால் அதன் மூலம் படிக்க.படம பிடிக்க,அளக்க என எல்லா வேலைகளையும் செய்ய முடியும்,இந்த செயற்கையான நினைவுபகுதியையும்,இயற்கையில் இருக்கும் மூளையையும் என்னால் சேர்த்து செயல் படுத்த முடியும். என்னை எது தாக்கினாலும் எனக்கு ஒன்றும் ஆகாது.".என்றது
"அப்படி என்றால் உனக்கு எல்லாம் தெரியுமா என்ன?"
"இல்லை இதுவரை நான் படித்து தெரிந்துகொண்டது,எனது செயற்கை நினைவுபகுதியில் ஏற்றம் செய்யபப்ட்ட தகவல்களை தவிர எனக்கு ஒன்றும்தெரியது..மற்றபடி நான் ஒரு சாதாரண நாய்தான்" என்றது.
இந்த முறை நிஷி கேட்காமலேயே முத்தம் கொடுத்தாள்
"அதிகம் கொடுக்காதே கணேஷ் அழுவான்"
"அவன் எதுக்கு அழவேண்டும்"
"நீ கொடுத்ததை அவனிடம் நான் சொல்லுவேன்"
"அவனை பற்றி கொஞ்சம் சொல்லேன் நிஷி" என்றாள்
"அவன் சோம்பேறி,என்னைவைத்து நல்ல பெயர் வாங்குகிறான்.நான்குவருடமாக பெண்கள் பின்னாடி சுற்றி இதுவரை எந்த பெண்ணும் அவனுக்கு கிடைக்கவில்லை என்று என்னிடம் புலம்புவான்...நானே அவனுக்கு அந்த விசயத்தில் அறிவுரை வழங்கி இருக்கேன் என்றால் பாரேன.."என்றது நிஷி
புனிதா மெல்ல சிரித்தாள்.
"இப்போது காதல் பேரிக்காய்க்காக உன்னை சுற்றுகிறான்..கவனமாக இருந்துகொள" என்றது
"அப்படி சொல்லாதே அவன் நல்லவன் என மீது எவ்வளவு அக்கறை வைத்து இருக்கிறான்" என்றாள்
"இப்போது எனக்கு தெரிந்து விட்டது நீ அவனை பற்றி கேட்டது எதற்கு என்று உங்களின் ஹோர்மொன்களின் சேட்டைகளுக்கு என மூளையை நான் ஏன் குழப்பி கொள்ள வேண்டும் என்னவோ செய்யுங்கள்" என்றது நிஷி
"அப்படியே இரு அதுதான் உனக்கும் நல்லது" என்றாள்
புனிதா நிம்மதியாக உறங்கினாள்..நிஷி உறங்காமல் அந்த சங்கேத எழுத்துக்கள் பற்றி யோசித்து கொண்டு இருந்தது.
மறுநாள் மாலையில் கணேஷ் வந்தான்
"புனிதா நீ வந்து உனக்கு ஆபத்து இருப்பதாக முறைப்படி ஒரு விண்ணப்பம் கொடுத்தால் உனது பாதுகாப்பை நீடிக்க எனக்கு உதவியாக இருக்கும்" என்றான்
போய்விட்டு திரும்பும்போது இருட்டுயிருந்தது....நிஷி புனிதாவின் மடியில் உட்கார்ந்து இருந்தது...இவர்களின் வாகனத்தை முந்தி சென்ற ஒரு வாகனம் திடிரென்று வேகம் குறைந்து அதில் இருந்து துப்பாக்கி சுடும் சததம் கேட்க...அடுத்த நொடி கணேஷ்ன் கார் கண்ணாடி உடைந்தது...குண்டுகள் தொடர்ந்து வர..கணேஷ் காரை நிறுத்திவிட்டு கிழே குனிந்தான்..புனிதவோடு கிழே இருந்த நிஷி மெதுவாக நழுவி மேலே சென்று குண்டுகள் வரும் இடத்தை பார்த்தது..
ஒருவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருக்க மற்றொருவன் சுட்டு கொண்டு இருந்தான்..
"நிஷி கிழே வந்து தொலை சுட்டுவிடப்போகிறார்கள்"என்றாள்
அதை காதில வாங்காமல் அந்த வாகனத்தையே பார்த்து கொண்டு இருந்தது..அதே நேரத்தில்..கணேஷ் தனது துப்பாக்கியுடன் மறைந்து கிழே இறங்கி அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தான்..
கணேஷ் சுட்டதால் அந்த வாகனம் கொஞ்சம் வேகமாக நகர..அதை துரத்திக்கொண்டே ஓடினான்..
கணேஷ் பின்னால் ஓடிவருவதை பார்த்த அவர்கள் நிறுத்தி அவனை குறிவைத்து சுட்டனர்..அதில் இருந்து தப்பிக்க சாலை ஓரத்தில் சரிவாக இருந்த பள்ளத்தில் குதித்தான்.
கணேசை காணவில்லை என்றவுடன் அவர்கள் போய்விட்டார்கள்..அதே நேரத்தில் அதே வழியில் மற்றொரு வாகனமும் வந்து கொண்டு இருந்தது..
"புனி நீ இங்கேயே இரு வெளியில் வராதே அவர்கள் திரும்பி வரலாம்" என்று சொல்லிவிட்டு தாவிகணேஷ் கிழே விழுந்து கிடந்த பள்ளத்தை நோக்கி ஓடியது..விழுந்ததில் மயங்கி இருந்தான்...வேகமாக திரும்பி காருக்கு வந்த நிஷி "புனிதா" என்று அழைத்தது..
கதவை திறந்துகொண்டு வெளியில் வந்த புனிதா நிஷியை அணைத்து முத்தம் கொடுத்தாள்
"விளங்கிபோச்சு..அவசரத்தில் உன் பெயரை முழுசாக சொல்லிவிட்டேன்....அங்கே மயங்கி கிடக்கிறான்..அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வா" என்று சொல்லி நிஷி முன்னால் ஓடியது அதை பின்தொடர்ந்தாள்...
அவன் மயங்கி கிடந்ததை பார்த்தவுடன்..அவனை தன் மடியில் வைத்து முகத்தில் நீர் தெளித்தாள்..உணர்ச்சிகள் ஏதும் இல்லை..கொஞ்சம் பயந்தாள்
அதே நேரத்தில் நிஷி ஏதோ யோசித்து கொண்டு இருந்தது..
"நிஷி இவன் முழிக்க மாட்டிக்கிறான் எனக்கு பயமாக இருக்கு" என்றாள்
"அவனுக்கு ஒன்றும் இல்லை நீ மடியில் வைத்து இருக்கின்றாய் என்பதற்காக அவன் நடிக்கிறான்..அவனுக்கு சாதாரண மயக்கம்தான் என்றது" நிஷி.
இதை கேட்டவுடன் இயல்பாக கண்விழிப்பது போல கண்விழித்தான். புனிதா அவனை முறைத்தாள்
"இந்த பிரச்சினை இத்தோடு முடிந்தது..அவர்கள் வந்த வண்டி எண்ணை சேமித்து வைத்து இருக்கிறேன் உடனே அடுத்து இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி அவர்களை பிடிக்க சொல் கணேஷ்" என்றது நிஷி
கணேஷ் வேகமாக சென்று தகவல் கொடுத்தான் வாகனம் எந்த வழியில் வருகின்றது போன்ற தகவல்களையும் சொன்னான்.
திரும்பும்போது "இந்த முயற்சி யாரை கொல்ல?" என்றாள்....
0 comments:
Post a Comment