அருள்

     பளிங்குத்தரையில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்  அந்த பெண் தள்ளியதில் நின்றிருந்த சிறுமி வழுக்கி அருகில் இருந்த சுவற்றில் முன்தலையை மோதி அப்படியே பின்னோக்கி விழுந்தாள். கிழே கிடந்தவளை பார்த்து எதோ அந்த வீட்டுப்பெண் கோபமாக திட்டிவிட்டு உள்ளே செல்லும்போது அடிபட்ட தலையில் தடவி ரத்தம் வருகிறதா என பார்த்துகொண்டாள். வரவில்லைபோலும் மீண்டும் மீண்டும் தடவி அது வீங்குகிறதா என்பதை ஒரு கையால் பார்த்துகொண்டே மற்றொரு கையால் அந்த அழுக்கு தண்ணீரில் தவறி போட்ட வெள்ளை சட்டையை மீண்டும் துவைக்க வாளிக்குள் எடுத்து போட்டாள்.


     அதற்க்காகத்தான் அந்த பெண் கோபத்தில் தள்ளிவிட்டதும் திட்டியதும் என்பதை எதிர்வரிசையில் இரண்டாவது வீட்டின் மாடியில் இருந்து பார்த்த எனக்கு  புரிந்தது. தரையை கழுவி, துடைத்தபின் கிழே விழுந்த சட்டையை அலசி போட்டுவிட்டு வெளியேறி தெருவில் நடந்த அந்த சிறுமி இன்னும் தலையை தடவிகொண்டேதான் இருந்தாள் . வீங்கியிருக்க வேண்டும். வயது பதினான்கு இருக்கும், காலையில் மட்டும் அந்த வீட்டுக்கு வந்து வேலை செய்வாள். பள்ளி சென்று கொண்டிருக்க வேண்டும். சில நாள்களில் அவள் பள்ளி சீருடை ஸ்வெட்டர் அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். இரண்டு புறமும் வரிசையாக வீடுகளை கொண்ட அந்த நீளமான தெருவின் முடிவில் அவளது வீடு இருந்தது. சொந்தமான இடம் இல்லை. யாரோ வீடுகட்டாமல் விட்ட இடத்தில் இவர்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைத்து இருந்தார்கள்.

      அவள் தெருவை கடந்துபோகும் போது சயாங்காலம் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விழாவுக்கு பந்தல் போடுவதை சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றாள். இப்போது என் கவனம் அந்த சிறுமியில் இருந்து விலகி அந்த பந்தல் மீதும் அதை எப்படி போடுகிறார்கள் என்பதின் மீதும் சென்றது. விடுமுறை நாள் என்பதால் டெல்லி குளிருக்கு வெயிலில் மொட்டைமாடியில் உட்கார்ந்து இருந்த எனக்கு இந்த மாதிரி சில காட்சிகள் நேரத்தை கடத்திச்சென்று கொண்டிருந்தன.

       நேரம் கடந்து போயிருந்தது வேலையில் மூழ்கி இருந்த எனக்கு நான்கு மணியளவில் காலையில் தயாரான பந்தல் தோரணங்கள் எதுக்கென்ன்று அங்கிருந்து ஒலிபெருக்கியில் வந்த செய்தி உணர்த்தியது. எல்லாம் பஜனைகூட்டத்துக்கு. ஒரு அம்மன் சிலை இருக்க ஒரு சாமியார் அல்லது குழு பாடகர்கள் வந்து இரவு ஒரு மணிவரை பாட்டிசைத்து துதிப்பார்கள் இறைவனின் அருளுக்காக. இது அதிக குளிர் நேரம் என்பதால் சீக்கிரம் தொடங்கியிருப்பார்கள். யராவது ஒரு வீட்டில் உள்ளவர் இதை முன்னிறுத்தி நடத்துவார்கள்.


      அந்த கூடாரத்தை சுற்றி கூட்டம் கூடிக்கொண்டிருக்க அதன் ஒருபக்கத்தில் எல்லோர்க்கும் சாப்பாடு தயார் செய்வதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அனேகமாக இரவு பத்து மணிவரை நீடிக்கலாம். எனது அறையில் இருந்து அங்கு நடப்பதை பார்க்க முடிந்தது. வந்தவர்கள் தனக்கு பிடித்த இடங்களில் அமர அந்த பாடகர் அல்லது சாமியார் அருகில் இருந்த அம்மன் சிலையை தொட்டு கும்பிட்டுவிட்டு பாட ஆரம்பித்தார். இடையிடையே சிறு கதைகள் சொல்ல கூட்டம் பக்தி மழையில் நனைந்து இருந்தது அவர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் அந்த படகரோடு சேர்ந்து பாடிய விதத்தில் இருந்து தெரிந்தது.

         சிலமணிநேரங்கள் கடந்து இருக்க இன்னும் அதே உற்சாகத்தோடு பாடிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன் இப்போது கூடுதலாக சில விசயங்கள் எனது பார்வைக்கு கிடைத்தன. சிலர் பக்தி பரவசத்தில் அமர்ந்து இருந்தபடியே கைகளை கூப்பி உடலை அசைத்து ஆடிக்கொண்டு இருந்தனர். முக்கியமாக பெண்கள். அந்த கூடாரத்தின் வெளியில் சற்று தள்ளி அதாவது சமையல் ஆகி கொண்டிருக்கும்  இடத்துக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் இருந்தது. அவர்களின் கையில் இருந்த பொருள்களை பார்த்த போது அவர்கள் கண்டிப்பாக கடவுளின் அருளை பெற வந்தவர்கள் இல்லை எனபது தெளிவாகியது.



             உணவு படைப்பதற்காக தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து கொண்டு இருந்த  பின் வந்த கூட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அதில் நான் காலையில் பார்த்த சிறுமியும் இருந்தாள்.ஆனால் அவள் நின்றிருந்த இடம்வேறு. பஜனை நடக்கும் பந்தலின் ஒரு ஓரத்தில் நின்று எல்லோரின் பக்தியை அளந்து கொண்டு இருந்தாள். முக்கியமாக தன்னை காலையில் தள்ளிவிட்ட எஜமானியம்மாவின் பக்தி அவரை அறியாமல் உடலை ஆடசெய்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சிறுமி எதுக்கு சிரித்தாள் என்று என்னால் குறிப்பாக ஒரு காரணம் கொண்டு யோசிக்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் அங்கு நின்று இருந்தவள் பின் தன் கூட்டத்தோடு போய்ச்சேர்ந்தாள்.

             பஜனை முடிந்து இருந்தது. பிரசாதமாக அந்த பாடகர் அல்லது சாமியார் ஒரு சிகப்பு கயிறையும் கொஞ்சம் லட்டும் கொடுக்க எல்லோரும் வரிசையாக வந்து வாங்கி சென்றார்கள். சிலர் மறக்காமல் கண்ணில் ஒத்திகொள்ள தவறவில்லை. சிலர் அந்த சாமியாரையே கட்டிவிட சொன்னார்கள்.ரசிகர்களாக அல்லது பக்தர்களாக மாறியிருக்ககூடும். அதே நேரத்தில் சமையல் செய்தவர்கள் விரைவாக  வரிசையில் சில பெஞ்சுகளை போட்டு உணவுகளை பரிமாறிக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள்.

            எல்லோரும் தனக்கு பிடித்த உணவுகளை பரிமாறி தின்று முடித்த பிறகு காலி தட்டுக்களை போடும் இடத்தில் கையில் பாத்திரங்களோடு இருந்த அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி கை கழுவிவிட்டு வந்தார்கள். கடவுள் இவர்களின் பக்திக்கு இல்லாவிட்டாலும் அங்கு சமைக்கப்பட்டிருந்த விதமான சமையளுக்காகவது கண்டிப்பாக அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்ம் அவ்வளவு சமையல் வகைகள். பக்தி செய்யும் இடத்தில் இவ்வளவு விதமான ருசிகள் எதுக்காக என்று யோசித்தும் என்னால் விடை காணமுடியவில்லை.அங்கு காத்து இருந்தவர்களின் நேரம் இப்போது நெருங்கி இருந்தது. ஆம் சாப்பிடுவோரின் கூட்டம் குறைந்து கொண்டே இருக்க அவர்களுக்கும் ஒருவித ஆர்வம.

         இந்த ஆர்வம கலந்த ஆசை சில் நேரங்களில் நிறைவேறாமல்கூட போய் விடும். சமையல் மீதி இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்காமல் மீதி இருப்பதை சமைத்தவர்கள் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.அல்லது உணவு பற்றாக்குறை ஆகிவிடும். அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற ஏக்கம் அல்லது வேண்டுதல் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. எப்போதாவது கிடைக்கும் நல்ல விருந்து சாப்பாடு இது.


       பஜனைக்கு வராமல் வெறுமனே சாப்பிட மட்டும்வந்தவர்களோடு சேர்த்து பார்க்கும்போது இதுதான் கடைசியாக இருக்கவேண்டும் அந்த கூட்டம் இப்போது கொஞ்சம் முன்னாடி வந்து இருப்பதில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் நடவடிக்கைககளை பார்க்கும்போது முதலில் சாப்பிட்டுவிட்டு பின் மீதுவதை எடுத்துபோகலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் போல.

          இப்போது கூட்டம் எல்லாம் கலைந்து போய் கொண்டு இருந்தது.  நான் இருக்கும் வீட்டை கடந்து செல்லும் சிலர் நான் மேலே இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதை கவனிக்க தவறவில்லை. இப்போது சமையல் செய்தவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் சமையல்காரர்களோடு ஏதோ பேசுவது தெரிந்தது. மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. அவர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த வெவ்வேறான பாத்திரங்களை பிரித்துவைத்து கொண்டு இருந்தனர்..

           இருவர் வந்திருந்த சாமியாருக்கு பணம் கொடுத்து அவரை வழியனுப்பும் வேலையில் இருக்க அந்த சாமியார் விடைபெறும்போது பெரியதாக சிரித்தார். அவர் சென்றுவிட காசு கொடுத்து கடவுளின் அருளை வளர்த்த அல்லது பெற்ற திருப்தியில் வழியனுப்பியவர்கள் திரும்புகையில் அந்த கூட்டம் இப்போது பஜனை நடந்த கூடாரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். ஒருவேளை அவர்கள் எதாவது சொன்னால் சமைப்பவர்கள் சாப்பாடு கொடுக்கலாம் என்பதால் அவர்கள் முகம் எதிர் வருபவர்களை நோக்கி இருக்க கண்டுகொள்ளாமலே சென்றனர். இப்போது இவர்களுக்கு அருள்புரிய இருப்பது இரண்டு பேர் மட்டுமே. ஒன்று அங்கு பஜனை செய்ப்பட்ட கடவுள், இன்னொன்று சமையல்காரர்கள். அவர்களின் குழந்தைகள் மடியில் கிடந்து தூங்கி போக அதிக குளிராமல் இருக்க தாய் துணியால்  இழுத்தி மூடியிருந்த நிலையில் காத்து இருந்தார்கள்.


            கடைசியில் யார் அருள் அவர்களுக்கு கிடைத்தது என்பதை பார்க்கவில்லை. ஒருவேளை கிடைக்காமலும் போய் இருக்கலாம். தூங்கிப்போனேன்.மறுநாள் காலையில் அந்த பந்தல் இல்லை. உணவு தட்டுகள் தெருவில் சிதறி கிடக்க அதில் மிதிக்காமல் கவனமாக நடந்து எப்போதும் போல அந்த சிறுமி வேலைக்கு வந்தாள். உற்றுப்பார்த்தேன் தலையில் அந்த சிறிய வீக்கம் இன்னும் இருந்தது.



நிஜமாகும் நிழல்கள் -2

       முந்தைய பாகம் படிக்க.......
                                                                   நிஜமாகும் நிழல்கள் -1



    அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு   இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  

    சென்றுவந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சினை இல்லாததால் அந்த குறிப்பிட்ட நோய் பரவுவதைவிட ஒரு வதந்தி பரவி இருந்தது. அதாவது இவர்கள மீது எதோ தவறு இருக்கிறது அதான் அந்த சாமியே தண்டனை கொடுத்து இருக்கிறது என்பதுதான்.பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் சுகாதார மையத்தில் காட்டிவிட்டு முனேற்றம் இல்லாமல் அருகில் இருந்த நகரத்தில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    ஆச்சர்யம் என்னவென்றால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கே என்னவித நோய் என்ற முழுவிவரம் இப்போதைக்கு தெரிந்து இருக்கவில்லை. சாதாரண வயிற்று போக்குக்கு கொடுக்கும் சிகிச்சையை கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் சுகமானதால் அதைப்பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்த நோய் தொடர்ந்து  ஊரில் மக்களுக்கு பரவிக்கொண்டிருந்தது. அந்த ஆசிரமத்துக்கு போகதவர்களுக்கும் வந்தபோதுதான் அந்த வதந்தி கொஞ்சம் நின்று போய் இருந்தது. மக்கள் உணர தொடங்கி இருந்தார்கள் எதோ ஒரு தோற்று நோய் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதை.



   ழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது. ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த பயம் தேவையற்றதாக இருந்தது.வீசி அடிக்கும் காற்றில் முகத்தில் வந்து விழும் முடியை கண்ணை சுருக்கியபடி பின்புறம் எடுத்து விட்டுக்கொண்டே..


    "நம்ம ஊரில் புதுசு புதுசா என்னவெல்லாம் நடக்குது பார்த்தியா?" கேட்டாள் புனி

    "ம்ம கேள்விபட்டேன்..அந்த சாமியார், ஒரு நோய் வேற பரவுதுன்னு" என்றான் கணேஷ்


"சரி சொல்லு கணேஷ் நீ என்ன நினைக்கிறே அந்த சாமியார் பத்தி?"

"என்ன சொல்ல சொல்ற, நம்புறியா நம்பலையான்னு கேட்கிறியா?"


    "அதான் நீ நம்பமாட்டேன்னு தெரியுமே அங்கு நடப்பதை பத்தி என்ன சொல்ற?" என்றாள்


"இதுவரை இந்த மாதிரி நிறையா சாமியார் செய்த புரட்டு எல்லாம் வெளியில் வந்து இருக்கு இதுவும் ஒருநாள் வரும் அப்பா பார் "என்றான்

     "பார் கணேஷ் எதையும் ஆதாரத்தோடு எதிர்நோக்கு அந்த சாமியார் என்னதான் கடவுள் சக்தியை உதவியா வச்சி செஞ்சாலும் அது எப்படின்னு யோசிச்சியா அதாவது அறிவியலில் அது சாத்தியாமான்னு?"


     "என்ன பேசுறே நீ?  உனக்கே தெரியாதா என்ன இதெல்லாம் சாத்தியமில்லைன்னு ஒருவேளை அவர் ஹிப்னாடிசம் செய்றாருன்னா ஓரளவுக்கு நம்புற மாதிரி இருக்கும். ஆனால் இங்க அதுவும் இல்லை பின்னே எந்த ஆதாரத்தை வச்சி யோசிக்க சொல்றே?"



"சரி அப்ப அந்த நோய் பரவுதே அது எப்படி?"

"அதை நீதான் சொல்லணும் நீதானே மருத்துவம் படிச்சி இருக்கே?"


    "எனக்கென்னவோ அந்த சாமியாருக்கும் இந்த நோய்க்கும் எதாவது தொடர்பு இருக்கும்னு தோணுது" என்றாள்


"அப்ப நீ அதை எல்லாம் உண்மைன்னு நம்புறே கொடுமை"


      "கொடுமையுமில்லை ஒண்ணுமில்லை உனக்கு பிடிச்ச ஐன்ஸ்டீன் என்ன சொல்லி இருக்காரு ஒருவேளை  இந்த பிரபஞ்சத்தை படைச்சது கடவுளா இருந்தாலும் அதை எப்படின்னு விளக்குவது கண்டிப்பா அறிவியல விதிகாளாகத்தான் இருக்கணும்னு அப்படி பார்த்தா இது கடவுளின் வேலையா இல்லியான்னு  நமக்கு எப்படி தெரியவரும் சொல்லு ?"


     "நீ ஊருக்கு என்னை எதுக்கு கூப்பிட்ட காதல் செய்யவா? இல்ல இந்த மாதிரி சயின்டிஸ்ட் வேலை பார்க்கவா?"


    "அட நீ வேற எனக்கும் நம்பிக்கை இல்லைதான் முதல்ல ஆனால் நம்ம முன்னோர்கள் செஞ்ச சில விசயங்களை இதோடு பொருத்தி பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் உண்மை மாதிரி இருந்துச்சி அதான் உன்கிட்ட சொல்லலாம்னு சொன்னேன் உனக்கு பிடிக்கலேன்னா விடு வேற பேசுவோம்" என்றாள்


    "ச்சே அபப்டி இல்லை அந்த விசயத்துல பேச என்ன இருக்கு அதான் அப்படி சொன்னேன்  ஆனா இப்ப நீ எதோ புதுசா சொல்றே என்ன அது நம்ம முன்னோர் விசயம்?"


    "ம்ம் அப்படி வா வழிக்கு சரி  இந்த மனவசியம், இயற்கையை தன்வசம் வைத்து சில வேலைகளை சித்தர்கள் செய்தார்கள்னு உனக்கு தெரியும்தானே?" என்றாள்


     "ஆமா அதுக்கென்ன இப்ப அதுவும் இதுவும் ஒண்ணுதான்னு சொல்லி சாமியாரும் அப்படியொரு சித்தர்னு சொல்ல வாரீயா?"


"இல்ல அவங்க எப்படி பண்ணினாங்கணு தெரியுமான்னு கேட்டேன்?"


"தெரியல அதெல்லாம் உணமையான்னு கூட எனக்கு தெரியாது" என்றான்

     "உண்மையாத்தான் இருக்கணும் ஏன்னா நம்ம அறிவியல் சொல்றபடி பார்த்தால் நம்ம மூளையில் இருந்து மின்காந்தஅலைகள்னு சொல்ற BEETA,THETA,DELTA, ALPHA  waves எல்லாமே 7~30 HZ அளவுல வெவேறு நேரத்துல வெளிப்படுத்தும். இந்த அலைகளை இன்னும் அதிகமாக்கி அவங்களுக்கு  தேவையானதை நிறைவேற்றி இருக்கலாம்ல?"

     "அப்படியே அவங்க அலைகளை அதிகமாக வெளியிட்டாலும் அதை வச்சி என்ன பண்ண முடிந்திருக்கும் சொல்லு?" என்றான்


    "இங்கதான் எனக்கு சந்தேகம் இருக்கு ஆனா இப்படியும் இருக்கலாம்னு தோணுது அந்த அலைகளை வச்சி வளிமண்டலத்துள இருக்கிற அணுக்களை கிளர்ச்சி அடையச்செய்து அந்த அணுக்களின் மூலம் தனது தேவையை நிறைவேற்றி இருக்கலாம்"


   "அப்படின்னா அந்த அணுக்கள் போய் அடுத்தவங்க மனசை மாத்துதுன்னு சொல்ல வர்றியா?"


     "ம்ம ஆமாம் அதாவது மற்றவர்களின் மூளையில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளை வெளியில் இருக்கும் கிளர்ச்சி அடைந்த அணுக்களின் மூலம் கட்டுபடுத்தி தனக்கு தேவையானதை செய்து இருக்கலாம்"

     "இதுக்கு எப்பயுமே ஒரே அலைநீளம்,அதிர்வெண்ணில் அலைகள் தேவைப்பட்டு இருக்காது வெவ்வேறான அளவுகளில் தேவைப்பட்டு இருக்கும் அதை எப்படி அவங்க சரியா வெளியிட்டு இருக்க முடியும்? அதோடு இல்லாம அவங்க அதை செய்யும்போது குறிப்பா அந்த ஒரு நபரை மட்டும் எப்படி அதுபோய் சேர்ந்து மாற்றுது இடையில் உள்ளவங்களும் பாதிக்க படுவாங்கள்ள?" என்றான்


     "நீ சொல்றது புரியுது ஆனால் இதுலே எதாச்சும் நமக்கு தெரியாம இருக்கலாம்ல?"

     " நம்ம புத்திக்கு தெரியாதது எல்லாம் கடவுள் செயல்னு முடிவுக்கு வர்றது இப்ப மட்டும் புதுசா என்ன இதை முன்னாடி இருந்தேதான் செஞ்சிக்கிட்டு வர்றோம் "


      "நீ என்ன சொல்லு கணேஷ் இதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு அறிவியல் காரணம் இருந்துதான் ஆகனும் அதுவும் இல்லாம நம்ம ஊரில் பரவும் நோய்க்கும் அந்த ஆசிரமத்துக்கும் கண்டிப்பா காரணம் இருக்கும்னு தோணுது?"

     "இருந்தாமட்டும் நீ என்ன செய்யபோறே? போய் கண்டுபிடிச்சு சொல்ல போறியா என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல படிக்க போயிருவே? அதுக்கு எதுக்கு இப்ப நம்ம சந்திச்சு காதலிக்கிற நேரத்தையும் அதைபத்தி பேசி வீணடிக்கணும் சொல்லு?"


     "கண்டுபிடிக்கேறேனோ இல்லியோ நாளைக்கு நம்ம சுகாதார மையத்துக்கு போய் என்னன்னு பார்த்துட்டு வர்ற போறேன் குறைஞ்சது பரவுற நோய் பத்தியாச்சும் தெரிஞ்சா நிம்மதியா இருப்பேன்"


   "எப்படியோ இன்னைக்கு கிடைச்ச நேரம் இதுலே போயிருச்சி..நான் எதெல்லாம் கிடைக்கும்னுவந்தேன் கடைசில ஒன்னுமே கிடைக்கலை"


"அலையாதே நாளைக்கு நீயும் வர்றியா அங்க?"

"நான் வரலை இப்பயே தலை சுத்துச்சு நீதான் போய் ஆராச்சி செய்" என்றான்


     கொஞ்சம் மங்கும் இருட்டு சூழ்ந்து இருக்க இருவரும் எழுந்து மண்ணை தட்டியபடியே கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அந்த அமைதியில் புனியின் மனதில் நாளைக்கு சுகதாரமையத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது.




    அந்த ஆசிரமத்தில்  சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் சில வடிவமைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. முக்கியமாக அந்த சாமியாரின் அறையில் காற்று புகும் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு பிராதன வழியிலும் புதியத சில கருவிகள் பொருத்தப்பட்டன.இப்போது அந்த அறைக்கு ஒரே வழி. அதுவும் சில சாதனங்களின் முழுச்சோதனைக்கு பின்னே யாரும் உள்ளே வெளியே போகும்படி இருந்தது. இது அங்கு வருவோருக்கு எந்தவிதத்திலும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தனர்.ஒருபுறம் வேலைகள் நடந்து கொண்டு இருக்க இன்னொரு தனி அறையில் சாமியார் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.....


"இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது"

"..........................."


    "நீங்கதானே சொன்னிங்க இதனால மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுன்னு இப்பயே நிறையே பேர் நோய்வந்து சந்தேகம் நம்ம பக்கம் திரும்பிரிச்சு"


".............."


   "நீங்க சொல்ற மாதிரி அந்த நோயெல்லாம் கடவுளின் தண்டனைன்னு போய் சொல்லி  மாற்றினாலும் அதுவும் ரெம்ப நாளைக்கு தாங்காது"


"..............."



    "இதுதான் கடைசி முயற்சி இந்த சுத்தபடுத்தும் கருவிகள் பயனளித்தால் நான் இதற்கு மேல் இந்த வேசத்தை தொடருவேன் இல்லை என்றால் என்னால் இங்கு தொடர்வது கஷ்டம அப்புறம் உங்களது எல்லா திட்டங்களும்,முயற்ச்சிகளும் வீண்தான்"


"......"


   "சரி நம்பிக்கை இருக்கு..நான் இப்ப வைக்கிறேன் யாரோ வர்ற மாதிரி இருக்கு" என்று சொன்னவர் அலைபேசியை  மறைத்தார். 




                                                 இன்னும் நிழல்கள் நிஜமாகும் ...... 

இதுவரை ~ இனி....

   இதுவரை  ......

     இப்போதுதான் தொடங்கியதுபோல இருக்கிறது  வருடம் ஆனால் இன்றோடு முடிந்து புதிய வருடம் பிறக்க போகிறது. இந்த வருட தொடக்கம் என்று இல்லை எந்த வருட தொடக்கத்திலும் பொதுவாக எடுத்துகொள்ளும் உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கும் பழக்கம் இதுவரை இல்லை.எங்காவது தேதி எழுதும்போது வருடம் கொஞ்ச நாளைக்கு நினைவு இருந்தாலே போதும். மற்றபடி எல்லா நாலும் நன்னாலே.

    ஆனால் பொதுவாக எல்லோரும் புது வருடம் பிறக்கப்போகிறது என்பதுடன் அதோடு சில மாற்றங்களையும் எதிபார்ப்பது வழக்கம்தான். நான் இன்றையில் இருந்து இதை செய்வேன், அதை செய்ய மாட்டேன் இந்த மாதிரி. உணமையில் இப்படி செய்பவர்களில் 98% பேர் வெற்றி பெருவதில்லைதான். காரணம் பழக்கவழக்கம்  உடனே ஒரு புதியவருடத்திற்காக மாறிவிடுவது இல்லை என்பதே. மாற்றம் வேண்டுமானால் அதை இன்றுகூட வரவைக்கலாம்.

    சரி இந்த வருடம் எனது வலைப்பூ வாழ்க்கை எப்படி என்றால் சென்ற வருடம் போல இல்லைதான். ஆனால் சில முக்கியமான விஷயங்கள் நடந்தேறியது. கதைகளை தொகுத்து மின்புத்தமாக வெளியிட்டது, உருப்படியாக சில கதைகளை எழுதி திருப்தி அடைந்தது இந்த மாதிரி. வழக்கமான "என் கதையை படித்துவிட்டு கருத்துகள் சொல்ல மறுக்கிறார்கள்" என்ற புலம்பளோடு இந்த வருடமும் நிறைவடைகிறது.

   ஆனால் சொந்த வாழ்க்கையில் நிறையா மாற்றங்கள் எல்லாமே சந்தோசமானைவைகள் ஒரு சில தவிர்த்து. புதுவீடு கட்டியது, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஒரே ஒருமுறை லேசான கால்வலிக்கு மருத்துவமனை சென்றது போன்ற பல சந்தோசங்கள பல நிறைந்தே இருந்தது. பொதுவாக எதுக்கும் பெரியதாக அலட்டிகொள்வதில்லை என்பதாலோ என்னவோ எதையுமே பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு வருத்தபடுவதிலை. காரணம் எதுக்குமே தீர்வு நம்மிடம இருந்தே வெளிப்பட வேண்டும் கட்டாயம் வெளிப்படும் எனக்காக கடவுளோ மற்றவர்களோ உதவி செய்வார்கள் என்று நினைக்கும்போதுதான் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ஏமாற்றம் போன்ற பிரச்சினைகள் வருகிறது.


    அனேகமாக பிரச்சினைகள் வந்து இருந்தாலும் எனக்கும்சரி எல்லோர்க்குமே பொதுவான ஒரு விசயம் பிரச்சினைகள் இரண்டு விதம்  இயற்கையானவை அல்லது நம்மால் மற்றும் சகமனிதனால் நமக்கு வருபவை. முதல் வகையில் நோய் நொடிகளை சேர்த்து கொள்ளலாம். தகுந்த மருத்துவ உதவியை நாடினால் அதுவும் சுபமே. ஆனால் பெரிதும் பாதிக்கபடுவது மனிதனால் மனிதனுக்கு வரும் பிரச்சினைகள்.இதில் விஷயம் என்னவென்றால் நமக்குள்ளே பிரச்சினைகள் செய்துகொண்டு அதை தீர்க்க இல்லாத எல்லாம்வல்ல இறைவனை நாடுவதே.

      இந்த வகையான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வுதான். முடிந்தவரை மற்றவர்களிடத்தில் அன்பாக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். இப்படி செய்தாலே உலகத்தில் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடும்.சந்தேகம் என்றால் தனியாக உட்கார்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வரிசையாக எழுதுங்கள் அதில் எத்தனை உங்களது எதிரிகள் என்று கருதப்படும் நபர்களால் அல்லது வேலை செய்யும் இடத்தில இருந்து வருகிறது என்று பாருங்கள்.

     இதை சரி செய்வதில் இருக்கும் பெரும் பிரச்சினை "சரி நான் மற்றவர்களிடத்தில் நல்லவிதத்தில் நடந்து கொள்கிறேன் ஆனால் மற்றவர்கள் ஏன் என்னிடத்தில் அப்படி இல்லை" என்று யோசிப்பதே. இதுதான் மாறுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் முட்டுக்கட்டை. அவளும் குப்பையை தெருவில்தான் கொட்டுகிறாள் நானும் அங்குதான் கொட்டுவேன் என்பவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.  ஆனால் இப்படி இருப்பதில் ஒரே லாபம் மனதிருப்தி நான் நல்லவிதமாக இருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும். சிலருக்கு இது போதுமானதாக இருக்கும்.


    என்னைபொருத்தவரையில் அடித்து பிடித்து பணம் சம்பாரித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதில்லை. அன்றாடம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்து வாழ்க்கை சுபமாக கழிந்தாலே போதும்தான். வாழ்க்கையை வாழவேண்டும் அதுவும் அதன் போக்கிலேயே கட்டாயமாக இழுத்துக்கொண்டு திரியதேவை இல்லை. போதுமானவரை அன்போடு பழகி வருகின்ற வருடத்தில் பிறரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தாலும்கூட நம்மால் நமக்கு எதுவும் வராமல் பார்த்துகொண்டு வருடத்தை இனிதாக களிப்போம்.


   அதோடு இந்த வருடத்தில் சில விசயங்கள் "ஏன் இப்படி?" என்றிருந்தது. அதில் போனவருடமும் இந்தவருடமும் பொதுவாக இருப்பது என்னதான் கொட்டகொட்ட முழித்து படித்து கதைகளில் அறிவியல் சேர்த்து எழுதினாலும் படிக்க மாட்டிக்கிறார்கள் அதோடு ஒரு படம் சில வரிகள் கவிதை என்ற பெயரில் எழுதுவதையும், விழிப்புணர்வு பதிவு என்ற பெயரில் எழுதும் எழுத்துக்களைத்தான் ரசிக்கிறார்கள். என்ன காரணம் இதுவரை புரியாத ஒன்று. கொடுமை என்னவென்றால் இந்த விழிப்புணர்வு பதிவுதான் என்ன சொல்ல...எல்லாமே பொதுவான ஜனங்களுக்கு தெரிந்த விசயம்தான் அல்லது செய்திகளில் நாளிதழ்களில் வந்த விசயத்தை தனது கருத்தையும் நான்கு வரிகளாக சேர்த்து எழுதுகிறார்கள். கட்டாயம் இணையம் வந்து பதிவுகளை படிப்பவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளாமல் தூங்குவார்கள் என்பது போலதான் இருக்கும் அவர்களது எழுத்து.



    அடுத்து கோபம்வரும் விசயம் என்னவென்றால் இதை சொல்லும்முன் THE GRAND DESIGN புத்தகத்தில் படித்த ஒரு விசயத்தை சொல்கிறேன்.மத்திய ஆப்ரிக்காவில் வாழும் BOSHONGO இன மக்களிடையே ஒருகதை பழக்கத்தில் உண்டு.  தொடக்கத்தில் வெறுமனே மூன்று விசயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தில் இருந்ததாம். இருட்டு,தண்ணி, BUMBA எனும்  கடவுள். ஒருநாள் அந்த கடவுள் அதிக வயிற்றுவலி வர வாந்தி எடுக்கிறார் அதில் சூரியன் முதலில் வந்து அங்கிருந்த தண்ணியில் விழுகிறது. கொஞ்சநேரத்தில் அது உலர்ந்து கரைசேருகிறது.இன்னும் வலி நிக்காத அந்த கடவுள் தொடர்ந்து உவ்வே செய்ய மற்ற கொள்களான செவ்வாய்,புதன் எல்லாம் வரிசையாக வர அடுத்து வந்த உயிரினங்களை தொடர்ந்து கடைசியாக மனிதன் வந்து விழுகிறான்.

   இந்த விசயத்தை   இதுதான் இந்த முழு பிரபஞ்சம் உருவான unified Theory என்று சொன்னால் நம்புவீர்களா? இதே போல  சில படித்தவர்களே மூடநம்பிக்கைகளை வெளிப்படையாகவே எழுதி வருகிறார்கள். அவர்கள் இஷ்டம் எழுதட்டும் என்று இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் கோபத்துக்கு காரணம். ஒருவரை நீங்களே அதிகமாக ஊக்கப்டுத்தும்போது தனது வேலையில் அவர் மும்மரமாக இறங்குவார். அதோடு அந்த செயலுக்கு நீங்களும் உதவி போகிறீர்கள்.

   மூடநம்பிக்கையில் ஆவது ஒன்றுமில்லைதான். ஆனால் மக்களின் மனதில் அது அழமாக பதிந்து அகல மறுக்கும் ஒன்று. அதுக்குப்பிறகு நீங்கள் என்னதான் அவருக்கு அறிவியலை எளிமையாக கணிதம் கொண்டு விளக்கினாலும் இந்த பிரபஞ்சம் வாந்தி எடுக்கப்பட்டதுதான் என்பதே அவரது முடிவாய் இருக்கும். அந்த அளவு வலிமை வாய்ந்தது மூடநம்பிக்கைகள். 

    நான் சொல்லவருவது அதை எழுதுபவர்கள் அவர்களின் மன திருப்திக்காக எழுதட்டும் ஆனால் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு "அருமை, வாய்ப்பே இல்லை" போன்ற பின்னுட்டங்களை இடுங்கள். எதையும் முழுவதும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் அடிப்படையில் அறிவியல் கொண்டு யோசிக்கலாம். எல்லாமே சரியாக அறியப்படவேண்டியதுதான் ஆனால் அறிகின்ற விதம்தான் தவறாக இருக்க கூடாது.

      இந்த அறிவியல் காலத்திலும் அண்மையில் ஒரு பதிவு படிக்க நேர்ந்தது அதில் ஒரு எலியை தண்ணியில் இரண்டாக வெட்டினால்அதில் ஒன்று மிதக்கும் இன்னொரு பாகம் முங்குமாம்  இரண்டையும் எரித்து சாம்பலாகின பிறகு ஒன்றைவைத்து மார்பகத்தை பெரிதாக்கவும்,மற்றொன்றை வைத்து சிரிதாக்கவும் முடியும் என்ற அர்த்தத்தில் இருந்தது அது. இந்த விஷயத்திற்கும் நான் மேலே சொன்ன கதைக்கும் எதாவது வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். இரண்டுமே ஒரே எலி. முடிந்தவரை இந்த விளம்பரங்களை தவிர்க்கலாம் குவாண்டம் தத்துவத்தை விட இது வேகமாக பரவும் என்பது எல்லோர்க்கும் தெரிந்திருக்கும்.


      உங்கள் கண்முன் அறிவியல் விரிந்து கிடக்கிறது.  அனைத்தையுமே அதைகொண்டு பார்க்காவிட்டாலும் சில அடிப்படையான விசயங்களையாவது பார்த்து தேர்வு செய்துகொள்வது நல்லது.


     அடுத்து போனவருடத்தை விட இந்தவருடம் புத்தகவாசிப்பு என்னிடம் குறைந்தது. காரணம் இணையம்தான். ஆர்வம் அதிகம் இருந்தபோதும் பொழுது போக்கு அம்சங்கள் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. அதோடு இதுக்குமுன் இருந்தஇடம் புத்தக வாசிப்புக்கு துணையான ஒன்று. நடைபாதைகடையில் புத்தகங்கள மிக மலிவாக கிடைக்கும். ஒரு புத்தகம் நூறு ரூபாய். அதோடு படித்துவிட்டு திரும்பி கொடுத்தால் வாங்கும் புதிய புத்தகத்திற்கு 50% தள்ளுபடி வேறு. ஆனால் இப்போது இருக்கும் இடத்தில அதே புத்தகம் மூன்று மடங்கு விலையில் கிடைக்கிறது. வேறுவழியில்லாமல் வாங்கித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.


                                                 *************  

     இந்த வருடத்தில் நடந்த சில அறிவியல் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். இதே மாதிரி சுஜாதாவும் தனது கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அருமையான ஒன்று.அந்த அளவு சிறப்பாக விரிவாக இல்லாமல் பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய போது குறிப்பெடுத்த விசயங்களையே சொல்கிறேன். இந்த விசயங்களை ஏற்க்கனவே கட்டுரையாக கதையாக எழுதி இருக்கிறேன்.


1) முதலில் செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சியில் ஒரு படிக்கல்லாய் சில நிமிடங்கள் மட்டும் நினைவு இருக்கும் விதத்தில் மூளையின் சிறு பகுதியை முயற்சித்து இருக்கிறார்கள். அதாவது நமது மூளையில் நினைவுபகுதியாக விளங்குவது Pre frontal cortex. இதில்தான் அன்றாடம் நடக்கும் செயல்கள் thalamocorical loop, reciprocol loop போன்றவைகளால் பதியப்பட்டு தேவையான் போது திரும்பி கிடைக்கும்படி இருக்கும்.இதை அடிப்படையாக வைத்து சில பாலிமர் பொருளோடு ப்ரோடின்களை ஒட்டவைத்து அதை ஒரு வட்டவடிவமாக அமைத்து அதில் தகவல் சேமிப்பு 12 நொடிகள் இருக்குமாறு சோதித்து இருக்கிறார்கள். இதுக்கு தகவல் கடத்த தேவையான நியூரான்கள் எலிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது.

2) அடுத்தவிசயமும் மூளையோடு சம்பந்தபட்டதுதான். விபத்தில் இதயகோளறு ஏற்ப்பட்டவ்ரின் மூளையை எடுத்து அதை MRI மற்றும் பலவிதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி உண்மையான மனித மூளையின் வரைபடம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதுதான் முதன்முறை.

3) மனித இனத்தை அதிகம் பலிவாங்கிய நோய்களுள் ப்ளு காய்ச்சலும் ஒன்று. அதுக்கென சில மருந்துகள் இருந்தாலும் முழுதும் வீர்யம் மிக்கவைகளாக இல்லை. OXFORD UNIVERSITY யை சேர்ந்த விஞ்ஜானிகள்ஆய்வில் HINI, H3N2 போன்றவற்றின் பல்கிப்பெருக காரணமாக இருக்கும் இரண்டு ப்ரோடீன்களை அழிப்பதின் மூலம் அதை முழுமையாக தடுக்கலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தனர்.

4) இனிவரும் காலத்தில் மருத்துவ துறையில் முழுவதும் ஸ்டெம் செல்களின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தனியாக இதயத்தை ஸ்டெம் செல்களை கொண்டு வளர்த்து சாதனை செய்துவிட்டார்கள்.இதன்மூலம் இதய நோய் சம்பந்தபட்டவர்கள் கொஞ்சம் நிம்மதியடையாலம் வருங்காலத்தில்.

5) புதிய பதிவர்கள் அதிகம் வந்ததாலோ என்னவோ இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிகை இந்த வருடத்தில் இரண்டு பில்லியன்கள் ஆனதாக சொல்கிறார்கள்

6) இதுவரை பலமுறை பல் சோதனைகளை செய்ததில் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஐன்ஸ்டீன் தாத்தாவின் GENERAL RELATIVITY THEORY மீண்டுமொருமுறை நாசாவின் GRAVITY PROBE  - B என்ற செயற்கைகோளால் நிருபணம் செய்யபட்டுள்ளது.

7) அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தத்துவத்துக்கு கொஞ்சம் திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு கிளம்பியது CERN அமைப்பு அறிவித்த ஒளியை மிஞ்சும் வேகம் கொண்ட NETRINO எனும் துகள். ஆனால் கடைசியில் அதில் இருந்த சிறு தவறுகளால் நிருபனமற்று போனது. அதில் இன்னும் நுட்பமான முடிவுகளை செய்யுமாறு ஹவ்கிங் போன்றவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

8)    இதயம் பாதிப்புள்ளவர்கள் மாற்று சிகிச்சைக்கு அவர்களின் சொந்த ஸ்டெம் செல்கலையே பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தார்கள். வேறொருவரின் தானம் இதுக்கு தேவையில்லை.

9)  குழந்தையின்மைக்கு முக்கிய ஒரு காரணமாக இருக்கும் ஆண்மலட்டுதன்மைக்கு முடிவாக செயற்கையாக விந்து அணுக்களை உருவாக்கி இருந்தார்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த kyoto university ஐ சேர்ந்த அறிவியலர்கள்.

10) கடைசியாக  ஸ்டெம் செல்களை  வைத்து தனியாக உறுப்புகளை வளர வைக்க சோதனைகூடங்கள் இல்லாமல் ஒரு உயிரின் கருமுட்டையில் ஸ்டெம் செல்களை செலுத்தி அதை அதுனுல்லேயே முழுவதுமாக வளர வைக்கமுடியும் என்பதை நிருபித்து இருந்தார்கள். அதாவது மனித உறுப்புகளை உருவாக்க  ஸ்டெம் செல்களை பன்றியின் கருமுட்டையில் நுழைத்து அதை முழுவதும் வளரச் செய்யலாம் என்கிறார்கள்.   

     இவையெல்லாம் இந்த வருடத்தில் நடந்தேறிய நான் படித்த அறிவியல் விஷயங்கள். இதுதவிர பல அருமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடமும் நிறையா எதிர்பார்க்கலாம். முக்கியமாக நான் இயற்பியல் துறையில் எதிர்பார்ப்பது யாரவது இந்த unified theory யை உருவாக்கினால் பிறவிப்பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். குறைந்தது என் வாழ்நாளிலாவது கண்டுபிடித்தால் போதும்.

     இனி என்று பார்த்தால் முதல் பத்தியில் சொன்னது போல பெரியதாக எந்தொரு பெரிய உறுதிமொழிகளும் எடுத்துகொள்ளவிலை. வழக்கம்போல வாழ்க்கை போகின்ற போக்கில் வாழ்வதுதான எனக்கும் பிடிக்கும் அதையே செய்ய போகிறேன். பார்க்கலாம் என்ன நடகிறது என்று.

     சரி எதுஎப்படியோ இந்த புதுவருடம் எல்லோர்க்கும் இனிமையான ஒன்றாக அமையட்டும். அல்லது அதை அமைத்துவிடுங்கள் எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது. எல்லோர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிஜமாகும் நிழல்கள்...

      அந்த நகரத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அருகில் இருந்த கிராமங்கள் கட்டாயமாக அதோடு இணைத்துக்கொள்ளப்பட்டு அங்கிருக்கும் கிராமியத்தன்மையை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நகரமாக்கும் வேலையை அரசாங்கம் மெதுவாக செய்ய தொடங்கியிருந்தது. மக்களுக்கும் அது பிடித்துபோய்தான் இருந்தது. எதோ வயதான உடலைவிட்டுவிட்டு புதிய உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்வதை போல.பின்வரும் சம்பவங்கள்  நடந்தேரியதும் அப்படியொரு கிராமியம் அழிந்துகொண்டு இருக்கும் ஒரு நகரத்தில்தான்.

      மேம்படுத்தும் பணி என்ற பெயரில் சாலையின் இருபுறம் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெறிச்சோடி போய் இருக்க சில வீட்டுக்கு முன்னால் இருந்த மாட்டு தொழுவம் எல்லாம் இடம் மாறியிருந்தது. புகை கக்கிகொண்டு சில பேருந்துகள் வந்து போய்க்கொண்டு இருந்தன. புதிதாய் சில கடைகள். இன்னும் சில அறிகுறிகளோடு அந்த கிராமம் நகரமாக மாறும் முயற்சியில் இருந்தது.


      அது கிராமமாக இருந்தபோது ..........ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.


       பெரிய அளவில் வசதிகள் ஏதும் இதுவரை அந்த ஊரில் இருந்ததில்லை. ஒரு ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே. அதிலும் இரண்டு செவிலியர்கள் இருப்பார்கள் மருத்துவர் ஒருநாளைக்கு சில மணிநேரங்கள் மட்டும் வந்துவிட்டு போவார். இன்றுவரை அதை நம்பாமல் அருகில் இருக்கும் நகரத்தின் மருத்துவமனையை நாடியவ்ரே அதிகம்.  சில சிறிய அவசர சிகிச்சைகளுக்கு அங்கு சென்று வந்தார்கள்.


      அந்த ஆரம்ப சுகாதார மையத்தை பற்றி பேசும்போது கண்டிப்பாக புனி யை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவள் சிறுமியாக இருக்கும்போது அதன் கட்டுமான பணிகள் நடந்தது. அது முடிந்து செயல்பட தொடங்கிய காலத்தில் அவளின் ஊருக்கு வந்த செவிலியர்கள், அங்கு இருந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாமே அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிக்கு மனதில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது.




       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறை நாள் ஒன்றில் சும்மாவே அந்த மையத்துக்கு போய் இருந்தாள். அங்கு வேலை பார்த்தவர்கள் ஊர்க்கதை பேசிக்கொண்டு இருக்க அவர்களோடு புனி யும் சேர்ந்தாள். அழகான முகம் துறுதுறுவென்று கண்கள் பார்த்தவுடனே யாருக்கும் பிடித்துபோகும் அளவில்தான் புனி இருந்தாள்.அவள் வந்த வேலை வரும்வரை காத்து இருந்தாள். பேச்சுவாக்கில் அவர்கள் இவளின் படிப்பை பற்றி கேட்கும்போது அவள் கேட்க வந்ததை எல்லாம் கேட்டுவைத்தாள். அவளின் ஆசை எல்லாம் எப்படியாவது மருத்துவ வேலைக்கு போக வேண்டும் என்பதே. பேச்சின முடிவில் அவளுக்கு தெளிவு இருந்தது அவர்கள் வெறும் செவிளியர்களதான் நன்றாக படித்தால் மருத்துவராகக்கூட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

       ஒரு மாலையில் தன அப்பாவிடம் சொல்லிவைத்தாள்  மருத்துவ படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதுவும் முடித்துவிட்டு நம்ம ஊருலயே பணி செய்ய போவதாகவும். அதுக்கு அவர் முதலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் வரட்டும் அதுக்கு பிறகு பார்க்கலாம் என்றார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வர அடுத்து மருத்துவத்துக்கு வசதியான பிரிவையே மேல்நிலைப்பள்ளியிலும் படித்தாள். அதே நேரத்தில் ஊரில் விஷயம் கொஞ்சம் கிண்டலாக பரவி இருந்தது. புனி நமது ஊருக்கு மருத்துவராக வரத்தான் படிப்பதாக.


   
     இதுவரை சுகாதார மையத்தோடு புணியை இணைத்து பேசிவந்தவர்களுக்கு புதியதாக ஒன்று கிடைத்து இருந்தது. அது புனியின் காதல்
புனியை பற்றி பேசிவிட்டு கணேசை பற்றி சொல்லாமல் போவது சரியில்லைதான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் அது நடந்தது. ஒரே ஊரோக இருந்தாலும் அவன் எதிரில் வருகையில் ஒருபார்வை பார்த்துவிட்டு தலைகுனிவதும், அவள் பார்வையில் படும்படியாகவே அவன் எங்கேயும் செல்வதும்  இருவருக்குளும் மறைமுகமான சில விசயங்களை உறுதிபடுத்தி இருந்தன. அதுவரை சந்தித்தால் கொஞ்சமாக பேசிக்கொள்ளும் அவர்கள் ஒருகாலகட்டத்தில் வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்தது, ஒருகட்டத்தில் கணேஷ் காதலை சொன்னபோது வெறும் சிரிப்பை மட்டும் தந்துவிட்டு ஓடியவள் மறுநாள் வந்து நானும் என்று மட்டும் சொல்லி காதலை சம்மதித்து அவர்களின் ஒரு வருட காதலின் வளர்ச்சி அருமையான ஆற்றங்க கரையிலயே நடந்தது.

     அப்படி ஒரு சமயத்தில்தான் சில பார்த்துவிட அவர்களின் வீடு உட்பட எல்லோர்க்கும் தெரிய வந்தது. இரு வீட்டாரும் உறவினர்கள் என்பதால் கொஞ்சம் கண்டித்ததோடு இப்போது காதல் முக்கியமில்லை முதலில் இருவரும் ஒழுங்க படியுங்கள் என்று காதலுக்கு சொல்லாமல் சொல்லி சம்மதம் தெரிவித்ததில் கணேஷ் மற்றும் புனிக்கும் அளவில்லா சந்தோசம்.

      நான்கு வருடம கடந்த நிலையில் கணேஷ் தான் படித்த படிப்புக்க்கு வேலை கிடைக்க சென்றான். புனி தனது மருத்துவ படிப்பை முடித்து இருந்தாலும் அவளுக்கு இருந்த ஆர்வம காரணமாக உயிரியல் துறையில் சிறப்புபிரிவை தேர்ந்து எடுத்து படிப்பை தொடர்ந்தாள். நான் தொடக்கத்தில் சொன்ன கிராமியத்தை வெளியேற்றி நகரத்தை புகுத்தும் வேலை இந்த நான்கு வருடத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு இருந்தது.

                                                                   *****----*****


     தே நேரத்தில் அந்த ஊர் மற்றொரு விசயத்திற்கு பெருமை வாய்ந்ததாக மாறியிருந்தது. காரணம் சிவன் கோயிலுக்கு அருகில் அமைக்கபட்ட ஒரு சாமியாரின் ஆசிரமம்.சரியாக ஒருவருடம் இருக்கும் அந்த கோயிலுக்கு ஒரு சாமியாரும் மற்ற சிலரும் வந்து தனக்கு கனவில் கடவுள் வந்து இந்த ஊரில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய சொன்னதாக சொல்லி ஒரு ஆசிரமத்தை கட்டினார்கள். அது கோயில் இடம் என்பதாலும் தெய்வ காரியம் என்பதாலும் யாரும் ஒன்றும் சொல்லாமல்விட ஒரு கட்டிடம் ஆசிரமம் என்ற பெயரில் எழும்பியது.

     அது பிரபலம் ஆனதுக்கு காரணம் அங்கு இருந்த சாமியார். பிரச்சினை என்று செல்பவர்களுக்கு தியானத்தின் மூலம் தீர்வுகளை அவர்களின் மனக்கண்ணில் தோன்றவைப்பதுதான். முதலில் உள்ளூர் மக்களுக்கே ஆச்சர்யமாக இருந்தாலும் அனுபவித்தவர்கள் சொல்லும்போது எல்லோரும் நம்பித்தான் போனார்கள். அப்படியே மெல்ல பரவி சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெரிய வந்து போனார்கள்.

      அங்கு சில விதிகள் இருந்தன. தீர்த்தமோ, பிரசாதாமோ வழங்கப்பட மாட்டாது. அந்த சாமியாரை ஒரு குளிர்சாதன முறையில் குளிர்விக்கப்ட்டு இருக்கும் அறையில் சென்றுதான் பார்த்து பேசவேண்டும். அங்கு இருந்து எதையும் எடுக்கவோ ஏன் தொடக்கூட அனுமதியில்லை. உள்ளே வரும்போதும் சரி வெளியே போகும்போதும் அழுத்தம் நிறைந்த காற்றால் சுத்தபடுத்தபட்டே அனுப்பினார்கள். இது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிய சிலர் கேட்டு வைக்க அதுக்கு ஆசிரமாத்தாரின் பதில் எல்லாம் சாமியின் சுகாதாரம் மற்றும் மன அமைதி கருதியே என்றார்கள்.` 


      அந்த சாமியார் அங்கு பிரச்சினை என்று வருபவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்தான் அவர்களை எல்லாம் தெய்வச் செயல் என நம்பவைத்தது. அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர வேண்டும். மெதுவாக நமது பிரச்சினைகளை கேட்டுக்கொள்வார் முதலில். அதுக்குப்பிறகு சில நிமிட அமைதி இந்த நேரத்தில்தான் அவர் கடவுளிடம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்வார் என நம்பினார்கள். அந்த சில நிமிடங்கள் முடிந்த பிறகு எதிரில் அமர்ந்து இருப்பவர் கண்களை மூடி இருக்க அவரின் மனதில் என்ன செய்யவேண்டும் என்ற காட்சி அழகாக விரியும்.அப்படியே நிகழ்கால தோற்றம் எல்லாமே அதிலிருக்கும். இறுதியாக ஏதாவது ஒரு கடவுளிடம் உருவம் தோன்றி மறையும். சாமியார் அந்த சாமியிடம்தன் உதவியை நாடினார் என்றார்கள்.


      அவரின் புகழ் வெகுவாக அக்க்கம்பக்கம் எல்லாம் பரவி அதிகம்பேர் ஆசிரமம் வந்து சென்றார்கள்.அதோடு வாரம் ஒருமுறை வித்தியாசமான சிலிண்டர்களை சுமந்தபடி ஒரு வாகனம் வந்து போனது. அது சாமியின் மகிமையில் மக்கள் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.


                                                      

                                                          ******--------******

    புனி விடுமுறைக்கு வந்து இருந்தாள். அவள் மட்டும் வந்திருக்கிறாள் என்றால் நம்புவது கஷ்டம. ஏற்க்கனவே பேசி முடிவெடுத்து கணேஷ் ம் அதே நாட்களில் விடுமுறை என்று வந்து இருப்பான்.  அதே ஆற்றுப்பக்கம் அவர்களை நடந்தபடி சில நாள்கள் பார்க்கமுடியும். அவள் வந்த மறுநாளே ஆச்சர்யம் அதிக மக்கள் ஊருக்கு வந்துபோவத்தின் காரணம். அந்த சாமியாரின் சக்திகள் அறிந்த போது எல்லாம் பித்தலாட்டம்  என்று பெரியாதாக எடுத்துக்கொள்ளமல் இருந்தாள். நெருங்கிய தோழிகள் உட்பட எல்லோரும் பய பக்தியுடன் சொன்னதால் குழப்பம் அவளுக்கு.

     அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்  வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  









                                                                         இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......

மின்புத்தகம்


   அந்த நீளமான சாலை வளையும் இடத்தில புத்தககடை இருந்ததால்  அந்த உருவம் எப்படி சாலையில் இறங்கியது என்பதை கடையில் இருந்த  அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. எல்லாமே சில வினாடிகளில் முடிந்து இருக்க அது அவனது கடையை நோக்கி நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு கடையை மூடும் வேலையில் இருந்தவன் அதை நிறுத்திவிட்டு அந்த உருவத்தின் மீது கவனம் செலுத்தினான்.

   அது வானத்தில் இருந்து இறங்கிய விதத்திலியே அவனுக்கு புரிந்து பயந்து இருக்க இப்போது கடையை நெருங்க என்னசெய்வதென்று புரியாதநிலை. அதன் உருவம் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. உடைஏதும் இல்லை மேலே ஒரு மெல்லிய இலைபோல முழவதும் பரவி இருக்க உடல் அங்கங்கள் அதில் எம்பி ஒரு உருவத்தை காட்டியது. கிட்டதட்ட மனித உருவத்தை ஒத்துபோகும் ஒன்று. ஆனால் அதன் முக அமைப்பு இறங்கிய விதம கண்டிப்பாக அது மனித இனம் இல்லை என்பதை தெளிவாக்கியது.

  அவன் எதிர்பார்க்காதது அங்கு நிகழ தொடங்கியிருந்தது. அந்த உருவம் கடைக்கு எதிரில் வந்து நின்று புத்தக கடைக்குள் தனது பார்வையை விரித்து எதையோ தேட ஆரம்பித்து இருக்க அதன் பார்வை படும் இடத்தில எல்லாம் அவனும் பார்த்தான்

   சிலவினாடிகள் நகர்ந்த நிலையில் அதன் பார்வை அவனும் மீது விழ பயந்து பின்வாங்கினான். மெல்லிய கீச்சு குரலில் பேசியது. வாய் பெரியதாக பேசுவதற்கு சம்பந்தமாக அசையாமல் வெறும் சப்தம் மட்டும் வெளியில் வந்தது.

“எனக்கு ஒரு புத்தகம் வேண்டும்என்றது

“அப்பாடா அதுக்கு எதுக்கு இந்த வேசத்தில் வரணும் நான் கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன் ஏதோ வேற்றுகிரக வாசிதான்னு நினைச்சிஎன்றான்

“வேற்றுகிரகவாசிதான் நான் கேட்கிற புத்தகம் கிடைத்தால் கிளம்புவேன்

  மீண்டும் பயத்தில் பின்வாங்க “கணேஷ் சிறுகதைகள் அடங்கிய நான் இல்லாத நான் புத்தகம் கொடு கிளம்பனும் என்றது

   அவன் மெல்ல பின்னாடி திரும்பி பார்த்துகொண்டே அந்த
 புத்தகத்தை எடுத்து தூரத்தில் இருந்தபடியே தூக்கி எறிந்தான்

“இந்த புத்தகத்தை வேறு எங்காவது படிக்க வழி இருக்கா?

“இருக்கு இந்த இணைப்பில் படிக்கலாம் என்று சொல்லியபடி ஒரு காகிதத்தில் 


    எழுதி கொடுக்க அது எதுவும் சொல்லாமல் திரும்பி சாலையில் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் செல்லும் போது புத்தகத்தில் அந்த காகிதத்தை வைத்து தனது உடைக்குள் பொதித்து வைத்த சில வினாடிகளில் வேகமாக மேலே எலும்ப அவன் எடுத்த இரண்டு புத்தகங்களில் நான் இல்லாத நான் புத்தகம் ஒன்று அவன் கையில் இருக்க அதை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தான் 



  "நான் இல்லாத நான்"  எனது முதல் சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் இருபது கதைகளோடு ஒரு குறுநாவலும் இருக்கிறது.எல்லாமே கொஞ்சம் அறிவியல் கலந்த கற்பனைகள். சிலவை அன்றாடம் நிகழும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதியது.

   அறிவியல் வளர்ச்சியில் இப்படியும் நிகழ்ந்தால் என்பதை ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களோடு சொல்லியிருக்கிறேன் ரசிக்குபடி இருக்கும் என நினைக்கிறேன்.

    வலைப்பூவில் தேங்கி கிடந்த இந்த கதைகளை தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட முழு உதவிகளை செய்த எஸ்.கே அவர்களுக்கு எனது நன்றிகள்.

   தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்துக்களை சொல்லும் வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றிகள்.தொடர்ந்து எழுதுகிறேன் அடுத்த பாகம் மற்ற இருபது கதைகளோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.






      

ஆதலால்...


    படித்தும் நண்பர்கள் சொல்லி மட்டும்  கேட்டு இருக்கிறேன் காதல் என்ற பெயரில் பெண்கள் வாழ்க்கையில் வந்தால் அதை அழகாக்குவார்கள் என்று ஆனால் உணர்ந்ததில்லை. காரணம் காதலிக்க கிடைத்த தருணங்களை சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்தேன் அல்லது தவிர்க்கப்பட்டு இருந்தேன் என்பதே உண்மை.

   அழகிய பெண்களை ஏதோ வேற்றுகிரக தேவதைகள் போல பார்ப்பது, அவர்களின் கவனம் என்பக்கம் திரும்ப எதாவது செய்வது,அணிந்திருக்கும் “T shirt வாசகங்களை மெதுவாக எழுத்துக்கூட்டி படிப்பது போன்ற பொதுவான ஹோர்மொன்கள் வேலையை செய்து இருந்தாலும் ஏனோ காதல் மட்டும் செய்யவில்லை.

  அதற்காக காதலின் மீது வெறுப்பு என்றில்லை அதே நேரத்தில் அதில் பெரிய மதிப்பும் இல்லாமல் இருந்தது. காரணம் நான் விரும்பி படித்த சுஜாதா காதலை பற்றி சுவாராசியம் இல்லாமல் சப்பென சொல்லியிருந்த விசயங்களாக இருக்கலாம்.  

   வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யும்போதுகூட யாரையும் காதல் செய்கிறாயா? என்று கிண்டலுக்கு கூட கேட்காத ஒரு பெரிய வருத்தத்தோடே திருமணமும் நடந்தது முடிந்தது. வாழ்க்கை எப்படி இன்னும் அழகாக ஆகப்போகின்றது அல்லது எப்படி ஆக்கப்போகிறாள் என்பதில் அதிக ஆர்வாமாய் இருந்தேன்

    திருமணத்துக்கு முன்னாடியே பேசி இருக்கிறோம். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். எதைப்பற்றி பேசினாலும் சலிக்காமல் “உம்கொட்டுவாள். ஏதாவது அவளுக்கு பிடிக்காதது வந்தால் முதலில் எடுத்து சொல்லி நான் கேட்கவில்லை என்றாள் சண்டைபிடிப்பாள். வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அழகிய தருணங்களில் அதுவும் ஒன்று. உங்களிடம் மேலே சொன்னா விசயங்களை அவளிடம் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு “ரெம்ப பாவம்தான் நீங்க என்று கிண்டல் அடித்தாள்.

   ஒருமாதம் கழிந்த நிலையில் அதை அவளிடம் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். திருமணத்திற்க்கு முன்னாடியே சொல்லியிருக்க்கலாம்தான் அவள் ஏதாவது தவறாக நினைந்துகொள்வாள் என்ற தயக்கம்தான். இப்போது நான் சொன்னதும்

“கண்டிப்பா இப்படி செஞ்சுதான் ஆகணுமா என்ன? என்றாள்

   “எனக்காக சம்மதியேன் ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட பெருசா ஆர்வம் இல்லனாலும் செஞ்சுதான் பார்ப்போமேனு தோணுது

“ஏன் அதை இப்போதே செய்யலாமே?

   “இப்போது நீ என் மனைவி அதனால அவ்வளவு சுவாரசியம் இருக்காது. யாருன்னு தெரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி பழகி காதலை சொல்லுவதில்தான் அந்த சுவாரசியம் இருக்கும் என்றேன்

“சரி நீங்க சொல்லுகிற முறையில் ஏதாவது தவறு நேர்ந்தால்?

   “அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் ஏற்க்கனவே பலமுறை சோதனை செய்ததோடு பயணித்தும் இருக்கிறேன்

“இது தேறும்னு தோணலை எனக்குஎன்றாள்

“நீ மட்டும் சரி என்று சொல் மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்றேன்.

   “சரி செய்யலாம் ஆனால் எல்லாம் குறைந்த காலத்தில் முடியுமாறு செய்யுங்கள் என்றாள்

   “நீ சம்மதித்ததே போதும் மற்றதை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் ஆய்வுக்கூடம் நோக்கி ஓடினேன். அங்கு போர்த்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு கால இயந்திரங்களை தயார் செய்யும் வேலையில் இறங்கினேன்.

   சரியாக ஐந்து வருடம் முன்பு அவளும் சென்னையில் வேறொரு இடத்தில வேலை செய்துகொண்டு இருந்தது இன்னும் எனது வேலையை எளிதாக்கியது. வெறும் ஐந்து வருடம் மட்டும் பின்னாடி பயணிப்பது என்பது அவ்வளவு சிக்கலான விசயமாக இருக்கவில்லை. இயந்திரம் தயராகி இருந்தது.

    அவளிடம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி கொண்டு இருந்தேன். அதாவது ஐந்து வருடம் அவளும் நானும் பின்னோக்கி பயணிப்பது. என்னிடம் நான் அவளை காதலிக்க வேண்டும் என்ற நிகழ்கால குறிப்பு மட்டும் இருக்கும். அவளிடம் நான் அப்போது தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த தாம்பரம் கிளை நூலகத்திற்கு வரவேண்டும் என்று இருக்கும். அதாவது காலத்தை குறைக்க அவளை சென்னை முழுவதும் திரிந்து தேடுவதுக்கு பதில் இருவரும் சந்திக்க பொதுவான இடமாய் அந்த நூலகத்தை தேர்ந்து எடுத்து இருந்தேன்.

   காதலை சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பிவிட முடிவெடுத்து இருந்தோம். திரும்பிவரும் பொறுப்பு என்னுடையது அவளால் முடியாது. நான் வந்தவுடன் என் விருப்பப்படி அவளை திரும்ப அழைத்துக்கொள்ளலாம். ஒருவழியாக வீட்டில் ஒரு சோதனைக்காக என்று  பொய் சொல்லி சமாளித்து கிளம்பினோம்.


   ஐந்து வருடம் முன் பார்த்த அதே சென்னை கண்முன் விரிந்து இருந்தாலும் அந்த நினைவுகள் ஏதும் இல்லாததால் இது அன்றைய ஒன்றாகவே இருந்தது. பிள்ளையார் கோயிலுக்கு எதிர் தெருவில் இருக்கும் அந்த கிளை நூலகத்திற்கு எனது பணி முடித்து தினமும் செல்வேன். இன்றும் அங்குதான் இருந்தேன். ஆனால் இன்று மற்றொரு எதிர்பார்ப்பு ஒரு குறிப்பிட்ட பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற குறிப்பு என் கையில் எனக்கு தெரியாமலே இருந்தது. உண்மையா என்று தெரியவில்லை ஆனாலும் காத்து இருந்தேன்.

   பழக்கமான அந்த நூலகப்பெண் “ஏன் இவ்வளவு நேரம் காத்து இருக்கீங்க அதான் ஏதாவது சுஜாதா புத்தகம் திரும்பி வந்தால் தனியாக எடுத்துவைத்து உங்களிடம் கொடுக்கிறேனே என்றாள். அவளிடம் இதை பற்றி சொல்லலாம் என்று இருந்தாலும் எனக்கே ஏனென்று தெரியாததால் அவளிடம் சொல்லுவது சரியில்லை எனக்கருதி வெறுமனே சிரித்து வைத்தேன்.

   சிறிது நேரத்தில் அந்த பெண் வந்தாள். அமர்ந்தவள் படிக்காமல் சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள். எல்லோரும் அவளை பார்க்க அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல வைத்து கொண்டு மீண்டும் பார்வையில் சுற்றினாள். என் குறிப்பின்படி இவள்தான் என்னை காதலிக்க அல்லது நான் காதலிக்க போகிறவள். அழகியிருந்தாள் அப்போது இருந்த அவளின் நிலை செயற்கையாக இருந்தது. ஏதோ ஒரு கட்டளையின் பேரில் செய்வதுபோல்.

   அன்றைய இரவில் அவளது நினைவுகளோடே தூங்கபோய் இருந்தேன். இது எல்லாம் உணமையா என்று தெரியாமலே. மறுநாள் கொஞ்சம் சீக்கிரமே வந்து இருந்தாள். அன்று நூலகத்தில் இணைவதற்கு வேண்டிய வேலைளில் மூழ்கியிருந்தாள். அதில் ஏற்க்கனவே உறுப்பினராக இருப்பவர் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். அந்த விண்ணப படிவத்தை பிடித்தபடி வெளியில் நின்று இருக்க அருகில் சென்று கவுன்சிலர் வீடு இதே தெருவில் கடைசியில் இருக்கு கொடுங்க இன்னொரு கையெழுத்து நான் போடுகிறேன் என்று சொல்லி என் பெயரோடு போட்டு கொடுத்தேன். அன்று அவள் உறுப்பினர் சேர்க்கை முடிந்து இருந்தது  வேறெதுவும் பேசவில்லை.

    தொடர்ந்து இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் வருவாள்.நூலகம் மிக சிறியது என்பதால் அருகருகே அமர வேண்டிய சூழ்நிலை எங்களை விரைவாக நண்பர்களாக்கி இருந்தது. அவளும் சுஜாதாவை விரும்ப நானும் சுஜாதா பிரியன் என்பதை உணர்த்த அவளிடம் அவர் எழுதிய விரும்பி சொன்ன பொய்கள என்ற கதையின் முடிவில் வரும் “ஆம் “இல்லைஎன்ற இரு பொய்களில் ஒன்றை சொல்ல சொன்னால் எதை சொல்லுவாய் என்று கேட்க அவளோ அதில் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிவிட்டால் அதுவரை படித்த அந்த கதை வீணாகி போவதுமாதிரி அத்தோடு நிறுத்துவதே சரி என்றுதான் சுஜாதாவும் அப்படி செய்து இருக்கிறார் என்று சொல்லி சிரித்தாள்.

   என்னுடைய கெட்ட பழக்கமோ என்னமோ அவளிடம் வெறுமனே படித்த புத்தகங்கள் அது சம்பந்தமான விசயங்களையே பேசிக்கொண்டு இருக்க அவளே ஒருநாள் அதை சொல்லியிருந்தாள். இயல்பாய் பேசலாமே இந்த விசயங்களை தவிர அததான் இதை நானும் படிக்கிறேனே என்று சொல்ல அடுத்துவந்த நாள்களில் எங்களின் உரையாடல் பொதுவாக எல்லா விசயங்களிலும் இருந்தது.

    இந்நிலையில் அவளிடம் ஒரு தருணத்தில் காதலை சொல்லும் தைரியமும் வந்து   தயங்கியபடி சொன்னேன். நீங்கள் நினைப்பது போல ஒரு பெண் சிரித்து பேசிய சில மாதங்களில் அவளிடம் காதலை சொல்லும் ராகம் இது இல்லை ஏற்க்கனவே முடிவெடுத்து நிகழ்கால குறிப்பெடுத்து வந்ததால் செய்ய நினைத்த ஒன்று. ஆனால் இது அவளுக்கு தெரியாது. என்ன நினைத்தாளோ தெரியாது சட்டென்று கன்னத்தில் அறைந்திவிட்டு வேகமாக அவளது பாதையில் நடந்தாள். அங்கு சாலையில் நின்று இருந்தவர்கள் எல்லாம் உடனே திரும்பி பார்க்க நானும் அங்கிருந்து வேகமாக திரும்பினேன்.

   சென்று முதல் காரியமாக அங்கிருந்து  அவளது இயந்திரத்தையும் திரும்பி அழைக்க வந்து இறங்கியவள் என் கன்னத்தில் பதிந்து இருந்த விரல் தடத்தை கைவைத்து தொட்டுபார்த்து பதறியபடி..

“யாருங்க இப்படி அடிச்சா உங்களை?என்றாள்   





    
           

சில விசயங்கள் - 11


   ஒருவழியாக நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்துவிட்டார்கள். பொதுவாக விண்வெளியில் இருந்து வெளிப்படும் Unidentified Infrared Emission features சொல்லப்படும் ஒருவித அலைகளுக்கு காரணம் polycyclic aromatic hydrocarbon (PAH) molecules தான் காரணம் என்று தெரிந்து இருந்தாலும் அது எப்படி உருவாக்கபடுகிறது அல்லது உருவாகிறது  என்பது தெரியாமலே இருந்தது.

   அதுவும் சில தனிமங்களான  carbon, hydrogen இவைகளே இந்த மாதிரியான தகவலை உருவாக்கலாம் என நம்பப்பட்டது. இப்போது University of Hong Kong சேர்ந்தவர்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த அடிப்படை துகள்கலான பொருள்கள் மட்டுமில்லாமல் மிகவும் சிக்கலான கூட்டமைப்பு கொண்ட organic பொருள்களும் உருவாவதாகவும், அது எங்கு எப்படி உருவாகிறது என்கிறதையும் கண்டுபிடித்து உள்ளனர்.


   அவர்களின் கண்டுபிடிப்பின்படி இந்த organic பொருள்கள் நட்சத்திரங்கள் உருவாகும் நிலைக்கு முந்தைய நிலையான nebula வில் உருவாக்கபடுவதாக சொல்கிறார்கள். அதுவும் இதுக்கு முந்தைய நிலையில் இருக்கும் தூசு படலத்தில் இந்த மூலக்கூறுகள் இல்லாமல் அங்கு அழுத்தம் அதிகருக்கும்போது நடக்கப்படும் வேதிவினையில் இந்த பொருள்கள் உருவாவதாக கணக்கிட்டுள்ளனர்.

    அதோடு இது உருவாகும் நட்சத்திரத்தின் அளவைபொறுத்து அமைவாதாகவும், நிறை அதிகமுள்ள நட்சத்திரமே இந்த மூலக்கூறுகளை உருவாக்குவதாகவும் சிறிய அளவிலானவை அவ்வாறு செய்வதில்லை என்பது இவர்களின் ஆராய்ச்சி முடிவு.

    இதுவரைக்கும் நட்சத்திரங்கள் வெடிப்பில் பல organic பொருள்கள் தூக்கி எறியப்படும் என இருந்தது. இப்போது கூடவே அதன் பிறப்பும் இதை உருவாக்கிறது என்பதும் உறுதியாகிவிட்டது. எப்படியோ இதன்மூலம் ஒன்று உறுதியாக நம்ப தோன்றுகிறது அது விண்வெளியில் சுற்றி திரியும் தூசுகளில் இருந்துதான் பூமிக்கு முதல் செல் உருவாகியிருக்ககூடும என்ற கருத்து. மேலே சொன்ன கண்டுபிடிப்பின் படி பார்த்தால் அந்தமாதிரியான organic தூசுகள் பூமியில் விழுந்து சூழ்நிலை சரியாக அமைந்துவிட ஒரு செல்லாக மாறி இப்போது இதை எழுதிகொண்டு இருக்கலாம் போல.

                                                *****************
   அடுத்த விசயம்  2005 YU55 னும் asteroid பூமியை மிகவும் குறைந்த தூரமான 325,000  கிமீ தொலைவில் நவம்பர் 8 ஆம் தேதி கடக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தைவிட குறைவு. இது 2005 ஆம் ஆண்டு Robert McMillan என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு சொன்னது. நீண்ட பயணத்திற்கு பிறகு அது நம்மை கடக்கிறது. படத்தை பெரிதாக்கி பாருங்கள் அதன் மீது கிளிக்குங்கள்.
.


    இது பூமியோடு மோதுவதுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிம்மதி இப்போதைக்கு. ஏனென்றால் இது அளவில் கொஞ்சம் பெரிது என்கிறார்கள். இதுக்கு அடுத்து இன்னொரு asteroid   2001 WN5 என்ற ஒன்று 2028 ஆம் ஆண்டு நம்மை கடக்கபோகிறது. இதைவிட இப்போது கடப்பது அளவில் மிகப்பெரியது. 

                       ****************


    அதிகபட்சமாக இருபதுநிமிட நண்பர்களுடான அறிவியல் விவாதத்தின் முடிவில் கண்டிப்பாக அங்கு கடவுள் வந்து இருப்பார். நான் எவ்வளவுதான் அந்த பக்கம் என்பேச்சை கொண்டுபோகதவாறு பார்த்து கொண்டாலும் அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கேட்கும் கேள்வி “இப்ப என்ன சொல்ல வர்ற கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதுதான்.  தொடக்கத்தில் பல விளக்கங்ககள் எடுத்து சொல்லி அவர்கள் மறுத்து கடைசியில் என்ன விசயம் பேச ஆரம்பித்தோம் என்பதே மறந்து அரட்டை போய்க்கொண்டு இருக்கும்.

    இப்போதெல்லாம் இந்த கேள்விக்கு எளிய பதில் ஒன்று வைத்து இருக்கிறேன் . “அது உனக்குத்தான் தெரியும் அவர் இருக்கிறாரா இல்லையான்னு அவர்களால் இதன் மீது கேள்விகள் கண்டிப்பாக கேட்கமுடியாது. அதிக பேச்சுகள் தவிர்த்து பேசவந்த விசயத்தை பேசமுடிகிறது.

    தொடக்கத்தில் விவாதங்கள் செய்தாலும் நான் புரிந்துகொண்ட ஒன்று ஒருவரின் மனதை அவரால் அன்றி கடவுளால் நினைத்தால் கூட மாற்ற முடியாது என்பதே. அதாவது என்னதான் அவரது மனது மாறினாலும் அதில் மற்றவர்களின் பங்கு என்பது ஒரு சிறிய அளவே பெரும்பகுதி அவர் தனது மனதை மாற்றியதே.

   மனதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதை மாற்றுவதுக்கு பல வழிகள் உள்ளன. அன்பு,பாசம்,காசு, என நீளும். இது எல்லாம் வெறும் காரணிகளே முக்கியம் நான் மேல் சொன்னது போல அவர்தான் முக்கியம்.   அண்மையில் பார்த்த ஏழாம் அறிவு படத்தில் வில்லன் நோக்குவர்மம்(hypnotism) என்ற பெயரில் செய்வதை பார்த்தால் sci fic படம் என்றாலும் இப்படியுமா என்று யோசிக்க வைத்தது. அதில் அந்த வில்லன் பார்த்த இரண்டு நொடிகளில் மற்றொருவரின் மனதை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்து தனது காரியத்தை சாதித்துகொள்வார்.

    இந்த நோக்கு வர்மம் முறையிலும் எவர்மீது செய்கிறோமோ அவர் துணை இல்லாமல் எதுவுமே வேலைக்கு ஆகாது என்பதுதான உண்மை. வெறுமனே அவரது கண்களை முறைத்து பார்த்துகொண்டோ இல்லை அவரை அரைநிலை தூக்கத்தில் படுக்கவைத்து நாம்மட்டும் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவர் எங்காவது கனவில் டுயட் பாடிக்கொண்டு இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.   

    இன்னொரு உண்மை என்னவென்றால் மனது உங்களுக்கே கட்டுப்படுகிறது என்பதே பெரிய விசயம் இதில் எங்கு மற்றவர்களுக்கு. இந்த மனதை கட்டுபடுத்ததான் உதவி செய்வதாக  நிறையா ஆனந்தாக்கள் கிளம்பி ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் கதவை திறக்க சொல்வதும், ஜன்னலை திறக்க சொல்வதின் மையக்கருத்து இந்த மனதை அடக்குவதுதான். நமக்கு எல்லாம் சொல்லிகொடுத்துவிட்டு அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது அடிக்கடி எல்லோர்க்கும் தெரிந்து விடுவதுதான் ஒரு பெரிய சோகம்.

   நான் எப்போதும் ஒரு சில விசயங்களுக்கு self hypnotism பயன்படுத்துவேன். நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது. சிரமம் இல்லாத ஒன்றும்கூட இதுக்கு ஆனந்தாக்களின் அறிவுரைகள் ஏதும் தேவை இல்லை. உங்களின் முய்றசிமட்டும் போதும்.எனது பல சிக்கலான விசயங்களுக்கு எனது மனதை எளிமையாக கையாள இதை பயன்படுத்தி வருகிறேன்.

    சொல்லவருவது என்னவென்றால் உங்களின் மனது உங்களதுமுடிவில். அது மற்றவர்களால் சந்தோசபடுகிறது அல்லது துக்கபடுகிறது, ஆறுதல் அடைகிறது இது எல்லாமே நீங்கள் மனதுக்கு கொடுக்கும் ஒருவித கட்டளை அல்லது புரிதல் அவ்வளவுதான். இதை புரிந்துகொண்டால் கண்டிப்பாக எந்த ஒரு ஆனந்தாக்களும் உங்களுக்கு குருவாக தேவை இல்லை. இந்த குரு மற்றும் தீட்சை விசயத்தில் எனக்கு பிடிக்காத பல விசயங்கள் நடக்கிறது. என் நண்பர்களோடு மற்றும் அவர்களின் உறவினர்களோடு ஏற்ப்பட்ட அனுபவங்கள் நிறையா. அதையும் அவர்கள் சிலாகித்து சொல்வது எரிச்சலாக இருக்கும். அதை மற்றொன்றில் எழுதுகிறேன்.

    சரி விசயத்துக்கு வருகிறேன் முதல் பத்தியில் சொன்னது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு எனது பதிலான “உங்களுக்குத்தான் தெரியும் என்ற பதிலுக்கு நீங்களே விடை காணலாம். தனிமையில் இருங்கள் ஒரு நேரத்தில் நமது இவ்வளவு நாள் வாழ்க்கையில் கடவுள் என்பவர் எந்த விதத்தில் நமக்கு உதவி இருக்கிறார்? எந்தவிதத்தில் நமக்குள் வருகிறார்? அவரால் நம்மிடமும் சமூகத்திலும்   என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது? அவர் இல்லாமல் நம்மளால் வாழமுடியாதா? இந்தமாதிரி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுபாருங்கள். கடைசியாக வருகிற விடைதான் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குமான விடையும்.