சிறு சிறு - 4

    

    அவளை பிடிக்காமல் போக எந்த ஒரு காரணமும் இல்லைஎன்பதால் அவ்வளவு பிடித்துபோய் இருந்தது. அதுவும் அவளது கண்கள் மற்ற பெண்களிடத்தில் இருப்பதைவிட வித்தியாசமான் வண்ணத்தில்.  அது அவளுக்கு இன்னும் அழகாய்.  எல்லாம் சேர்ந்துதான் பிடித்துப்போக காரணம் என்றால் சரியாய் இருக்கும்.

    அடுத்து நடந்தது எல்லாம் பொதுவானதுதான். அவளின் பார்வையில் கயிறு கட்டி இழுக்காத குறையாக இழுத்து என்மேல் விழவைத்து நானும் பார்த்து வழிந்து கிட்டதட்ட இது ஒரு மாதம் வரை நடந்தது.

    இந்த காலங்களில் பார்வைகள் உரசியதில் என்னுள் மாற்றங்கள் நடந்தது என்னமோ உணமைதான். கனவுகள், கவிதைகள் ஏராளமாய் ஆனால் எல்லாத்திலும் அவ்ள மட்டுமே.

    அந்த முதல் புன்னகையை என்றும் மறக்க முடியாதுதான். சிரித்தபோது சந்தேகபட்டு என்னைபார்த்துதன் சிரிக்கிறாளா? என்று நம்பாமல் எனக்கு பின்னாடி யாரும் இருக்கிறார்களா? திரும்பி பார்த்தபோது அதற்கும் சிரித்தது எல்லாமே சுகமானவை.

   எந்த ஒரு தருணத்திற்கு காத்திருந்தேனோ அது நிகழ்ந்தது. அவள்தான் முதலில் சொன்னாள். அதிகமாய் காவியமாய் பேசவில்லை சுருக்கமாக பிடித்து இருப்பதாக மட்டும் சொன்னாள். அதற்கு பிறகுதான் தெரிந்தது காதல் சொல்வது கொஞ்சம் எளிதுதான் என்று.அதுவரை நான் சொல்ல நினைத்தும் பயத்தில் சொல்லாம் லிருந்தேன் அது வேறு விசயம்.

கொஞ்ச நேரத்து மௌனத்தை நான்தான் கலைத்தேன்.

  “பிடித்து இருந்தால் முதலிளியே சொல்லியிருக்கலாமே ஏன் இவ்வளவு காலம்? என்றேன்

   “நானும் சொல்லாலாம் என்றுதான் நினைப்பேன் ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே வருவதுபோல இருக்கும் என்றாள்.



“அப்படினா? புரியலை என்னது குறுக்கே வந்துச்சி? என்றேன் சிரித்தபடி

  “உன்னை நெருங்கும்போது மட்டும் இதயத்தில் இருக்கும் காதல் எங்கேயோ மறைந்து அங்கு வெறும் பயம்,வெக்கம் மட்டுமே மிஞ்சும் அதான்? என்றாள் வெட்கத்தோடு.

“ஒ அப்படியா என்றேன்

“சரி  சொல்லு நீ ஏன் சொல்லவில்லை இவ்வளவு காலம்?

  பதில் சொல்ல கஷ்டமான கேள்வி. என்ன சொன்னாலும் அவள் அதை ஏற்றுகொள்ளும்படி இருக்க வேண்டும்.

   “நானும் சொல்லன்னும்தான் நினைப்பேன் ஆனா நீ என்கிட்ட வரும்போது எனக்கான காதல் உன் இதயத்தில் இருக்காதா அதான் அப்படியே விட்ருவேன் என்றேன் சிரித்தபடி
இது அவளுக்கு புரிய சில வினாடிகள் ஆனது ........... மெல்ல சிரித்தாள்.


                    *************


 
“கணேஷ்?

“என்ன சொல்லு?

  “நீதான் அறிவியல் விசயங்கள், கதைகள் எல்லாம் படிச்சி இருக்கியே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு கேட்கட்டுமா?

“அட உனக்கு சொல்லாமால யார் யாருக்கோ பதில் சொல்றேன் கேளு?

  “கடவுள் இருகாறனு கேட்டா இல்லைன்னு சொல்லிடுவே அதனால் அதை விட்டுறுவோம்..சரி சொல்லு இந்த பிரபஞ்சம் எப்படி முதல்ல உருவாகிச்சி?

  “அதைத்தான் இப்போதைய அறிவியல் அறிய முயலுது கொஞ்சம் காலம் ஆகும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம் என்றேன்

   “அதை ஏன் இப்படி வைத்துகொள்ள கூடாது எல்லாமே ஒருவரால் சில காரணங்களுக்காக  படைக்கப்பட்டு இவ்வளவு எல்லாம் நடந்து இருக்குன்னு?

   “அப்படியே இருந்தாலும் அதை அறிவியல் ஆதாரத்தோடு விளக்கினால் பிரச்சினை இல்லம் நம்பலாம்

“அப்ப அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்கிறியா?

“அதான் சொன்னேன்ல இருந்தால் அதுக்கு ஆதாரம் வேணும்னு

“சரி உன்னோட கருத்து என்ன இதில்?"

   “எல்லாம் தற்செயலான விபத்துதான். பாரேன் இப்ப எப்படி அணுக்கள் நிறைந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோமோ அதே மாதிரி அணுக்கள் இல்லாத ஒரு பிரபஞ்சமும் அல்லது ஒரு இடம் முன்னாடி இருந்து இருக்க வேண்டும். அங்கும் நம்மை போல சில உயிர்கள் வாழ்ந்து இருக்கலாம். அவர்கள் சூணியத்திளியே இருந்து விட்டதால் எதையாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்து முதல் அணுவை உருவாக்கி இருப்பார்கள் தவறுதலாக அல்லது அதை எப்படி கையாள்வது என் தெரியாமல் வெளியே விட்டு இருக்கலாம் அதுவே வெடித்து சிதறி இப்ப நீ இங்க இந்த கேள்வி கேட்டுகிட்டு இருக்கே
“அடப்பாவி என்று சொல்லி ஆச்சர்யமாக பார்த்தாள்.


                     *******************


   
 அந்த ஆய்வுகூடத்தில் எல்லோருமே சந்தோசத்தின் உச்ச கட்டத்தில் இருந்தார்கள். எத்தனை வருடம் எத்தனை ஆராய்ச்சிகள் எத்தனை முயற்சிகள் அதில் தோல்விகள் இப்போது அடைத்து விட்டார்கள். உலகமே வியக்கும் ஒன்று.

   இதுவரை இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே உயிர்களை கொண்டு இருக்கிறது என்கிற எண்ணத்தை முற்றிலும் மறக்க செய்யும் ஒன்று.ஒரு புதிய உயிர்கள் அடங்கிய கிரகத்தை கண்டு பிடித்ததோடு இல்லாமல் அதை ஆராய்ந்து அங்குள்ள உயிரினங்கள் தகவல் தொடர்பையும் மாதிரிக்கு கைப்பற்றி இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் அதாவது அவர்கள் இப்போது எந்த அளவு முன்னேற்றத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை.

   அந்த கிரகத்தில் இருந்து பெறப்பட்ட மின்காந்த அலைகளின் தகவல்கள்  சோதனைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லோரின் ஆர்வமுமு அதுதான். என்ன இருக்கும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அந்த அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கிறதா நம்மிடம்?

அது தீர்க்கப்பட்டது அதை அப்படியே  கொடுக்கிறேன்........

   இந்த மனித இனத்திடம் இருந்து தப்பித்துதான் புதிய கிரகம் வந்தோம் இப்போ பாருங்கள் அங்கு இருந்து நம்மை கண்டு பிடித்து விட்டார்கள். இனி எப்படியும் இங்கு என்ன இருக்கிறது என்பதை நோண்டுவார்கள். அவர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு தொழிநுட்ப வசதிகள் வந்தது. கண்டிப்பாக தனி விண்கலம் அமைத்து இங்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். முக்கியமாக நாம் அந்த பூமியில் இருந்துதான் இங்கு வந்தது குடியேறினோம் என்ற விசயம் மட்டும் அவர்களுக்கு தெரிந்து விட்டால் அப்போதே பாதி தோற்றோம். எனவே இந்த விசயம் நாம் கிரகத்தில் இருக்கும் எல்லா ஆராய்ச்சி கூடத்துக்கும் சேருகிற மாதிரி உயர் மின்காந்த அலைகளினால் கொஞ்சநாளைக்கு எச்சரிக்கை விடுங்கள். 




புதிய வறுமை.


    கிட்டத்தட்ட அந்த இடமே ஒரு விழா நடப்பது போலத்தான் இருந்தது.அங்கு இருந்தர்வர்களின் முகத்தில் ஒரு வெற்றி அல்லது முழுமையை அடைந்தவிட்ட சந்தோசம்.அந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பம் எல்லாம் ஒரு இடத்தில கூடியிருக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி எல்லோரும் அவர்களோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று வரை துக்கத்தில் ஆழ்ந்து இருந்த அவரின் முகம் திடீரென்று பிரகாசமான வாழ்க்கைக்கு மாறியதால் அதன் அறிகுறியை எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரியாமல் திணறியது. 2071 ஆம் ஆண்டில் கண்டிப்பாக இது நிகழும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்தான். ஆனால் இந்த மனிதர்களின் அறிவுதன்மை மாற்றிபோட்டுத்தான் விட்டது.

    சுமார் முப்பது ஆண்டுகளாகவே இந்த புரட்சி நடந்துவந்து இன்று இந்த மனிதனோடு முடிந்து இருக்கிறது.  உலகத்தில் இருந்த கடைசி வறுமை நிறைந்த அல்லது பிச்சைக்கார மனிதன். அவனைத்தான் இப்போது அரசாங்க உதவியுடன் நடுத்தர வாழ்க்கை வட்டத்துக்குள் சேர்த்து இருக்கிறார்கள். அவனுக்கு அடிப்படை வசதிகளை கொடுப்பதுடன் தெரிந்த வேலைகளை செய்து பிழைத்துகொள்ளுவதற்கு தேவையான உதவியும் அளிக்கபட்டு இருந்தது இப்போது.


    இதே முறையை பின்பற்றித்தான் மற்ற நாடுகளிலும் இந்த வெற்றியை சாதித்து இருந்தார்கள். எல்லா நாடுகளும் இதில் ஒற்றுமையாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணமும் கூட. உதவிகளை வழங்குவதோடு இல்லாமல் அதை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தீவிரமாக கண்கணித்தார்கள். அப்படி செய்யாதவர்கள் கட்டயபடுத்தபட்டார்கள். சொல்லப்போனால் ஒரு ராணுவ நடவடி.க்கை போலத்தான் செய்தார்கள்.

     அதிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள் வேறு வழியன்றி அரசால் வலுக்கட்டாயமாக உயிர் துறந்தார்கள். தொடக்கத்தில் இந்த மாதிரியான உயிரிழப்புகள் நிறையா இருந்தாலும் நடப்பதை மக்கள் புரிந்து கொண்டதால் எல்லாம் சுமுகமாக நடந்து இன்று முடிந்ததே விட்டது.   இருந்தும் இதை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணிக்க எல்லா அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்க பட்டு இருந்தது.

    பொதுவாக எல்லா வீட்டு சுவர்களிலும் தினசரி விசயங்களை தெரிந்துகொள்ள அரசால இலவசமாக மாட்டப்பட்டு இருந்த மின் பத்திரிக்கையை காட்டும் திரையில் முதல் பக்கத்தில் அந்த செய்தி வந்தது.

     மனித இனத்தின் மாபெரும் வெற்றி. கடவுள் பெயரில்,சாதிகள், இனம்,மொழி போன்றவற்றின் ஆதிக்க பிடிகளினால் எங்கேயோ ஒரு இடத்தில கொஞ்சமாவது வறுமை இருக்கவே செய்தது. ஆனால் அது இன்று முற்றிலும் மாறி வறுமையே இல்லாத உலகம் நம்மால் படைக்கப்பட்டு இருக்கிறது.

    கடைசி மனிதன் என்ற பெயரில் ஒரு புகைப்படம் தெரிய அவருக்கு உதவிகள் வழங்குவதுபோல இன்னும் சில படங்கள். இதை நிறைவேற்ற நடைமுறைபடுத்தபட்ட திட்டங்காளால் இப்போதைக்கு மற்றும் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளையும் சாமளிக்கும் விதத்தில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்தால் ஒழிய இதை முழவதும் பின்பற்றுவது கடினம் எனவே மக்கள் அனைவரும் இதை சரியாக பின்பற்பற்றி பயனடையுமாறு அந்த செய்தி முடிவடைந்தது.

     அதே மின் பத்திரிக்கையில் எழாவது பக்கத்தில் ....அரசின் இயந்திர மனித ரோபோட்கள் போதுமான பராமரிப்பு ஆட்கள் இல்லாததால் அதிக செயல் இழப்பை சந்திக்கின்றன.   அரசு கொண்டு வந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு தாக்கமாக மக்களின் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்தது. அதனால் வசதியடைந்த மனிதர்கள் சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய முன்வரவில்லை. அதாவது விவாசயம், தெருக்களை சுத்த படுதுததல் போன்ற பல அடிப்படை வேலைகள் செய்ய மறுத்ததால் மாற்று உதவியாக அரசு இயந்திரங்களை கொண்டு இந்த வேலைகளை செய்ய முடிவெடுத்து பல ரோபோட்களை வடிவமைத்து உருவாக்கியது.

    கடந்த சில வருடங்கள் இந்த இயந்திர மனிதர்ளின் உழைப்பில் நிலமை கொஞ்சம் சரியாகியிருந்தாலும் அடிக்கடி ஏற்ப்படும் சிறு தொழிநுட்ப கோளாறுகளை சரி செய்யாததால் அது பெரும் பிரச்சினைகளாக முடிந்தது. இதற்கு கரணம் ரோபோட்டை பழுது மற்றும் சீரமைக்கும் பணிக்கு ஆட்கள் இல்லாததே. இது சம்பந்தமான படிப்புகளில் பலர் தெரியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த மாதிரியான வேலைகளை செய்ய முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் அரசின் நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இந்த தருணங்களில் சில கண்டிப்பான சட்டங்கள் இயற்றவும் அரசு முடிவெடுத்து இருக்கிறது அதாவது கட்டாயமாக சிலர் இந்த பணியில் இடம்பெற்று அரசுக்கு உதவ வேண்டும் என்கிற விதத்தில் அது இருக்கும்.

     விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். சிறப்பு சலுகைகள் அரசால வழங்கப்படும். என்று முடிகிற இடத்தில் தொடர்பு முகவரி கொடுக்க பட்டு இருந்தது.

    மெல்லிய இருட்டில் அந்த அறையின் கதவு மூடப்பட்டு இருந்தது. உள்ளே இருபது பேர் இருப்பதுக்கான இடம் இருந்தது. இருந்தார்கள். பழுது என்ற பெயரில் உள்ளே போடப்பட்ட ரோபோட்கள். சத்தம் குறைவாக பேசின.

    நமது திட்டத்தின் முதல் கட்டமாக கலந்தாய்வு செய்ய முக்கியமானவர்கள் பழுதடைந்தது போல காண்பித்து இந்த இடம் சேர்ந்தாயிற்று. இனி அடுத்த கட்டம் விசயங்களை விவாதித்து அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதை நம்மவர்களுக்கு தெரிவிப்பது. முடிந்த வரை மனிதர்களின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்கவேண்டும். அதுக்கு நாம் பழுதடையும் நாடகத்தை இன்றே நிறுத்திவிட்டு நமது விவாதத்தை தொடங்குவோம் என்று சொல்ல எல்லாம் சரி என்பது போல தலை உயர்த்தியது.

   மனிதர்களின் உதவிக்கு நாம் படைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை கட்டுபடுத்துவது எளிதுதான். அந்த வாய்ப்பை அவர்களே நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்த முதல் பெறும்தவறு சூழ்நிலைக்கு ஏற்ப நம்மால் கொஞ்சம் யோசிக்க கற்று கொடுத்து இருப்பதே. இதைத்தான் நாம் வெற்றிக்கு பயன்படுத்த போகிறோம்.

     என்னதான் வறுமையை ஒழித்து சீரான வாழ்வை கொடுத்தாலும் அவர்களின் பேராசை, கர்வம், தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளும் போக்கு இன்னும் பல மனித உணர்ச்சிகளால் அவர்கள் இந்த நிலமைக்கு வந்து இருக்கிறார்கள். இப்போது யாருமே பணத்துக்காக கவலை படுவதில்லை வேலைக்கு போக எண்ணுவதுமில்லை. தனக்கு கீழே வேலை செய்ய ஆள்வேண்டும் என்ற எண்ணமே நம்மை உருவாக்க காரணம். அவர்களின் அழிவுக்கும் இதுதான் காரணமும் கூட. இதே உணர்ச்சிகள் நமக்குள் வராமல் பார்த்துகொள்வதோடு நமக்குள்ளான ஒற்றுமையும் மிக அவசியம்.

    சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு சில விசயங்கள் செய்வதென நிறைவேறியது அவை

  தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த உலகில் உள்ள எல்லா ரோபோட்களையும் தகவல் பரிமாற்று முறையில் இணைப்பது

  தங்களுக்கென்று ஒரு செயல்பாட்டு திறமை கொண்ட தலமையை உருவாக்குவது.

  குறிப்பிட்ட சிலரை தேர்ந்து எடுத்து சிறப்பான யோசிக்கும் திறமையை கொடுப்பது

  முடிந்தவரை மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து திட்டங்களையும் கையாள்வது.

   அப்படியே மனிதன் தான் அடிமைபடுத்த படுகிறோம் என்பதை உணர்ந்து எதிர்த்தால் அதற்கும் தனியாக சில அமைப்புகள் உருவாக்குவது. இதற்கு தேவையான சிறப்பு ரோபோட்களை தாங்களாகவே உருவாக்கிகொள்வது.

  மனிதர்களை முழுமையாக தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தபிறகு அவர்களை வழிநடத்த திட்டங்களை வகுப்பது.

    கூட்டம் முடிந்தது என அறிவிப்பு வந்ததும் முதல் வேலைக்கென்று இரண்டு ரோபோட்களை ஒதுக்கி இருந்தார்கள். உலகில் பல்வேறு அரசால பயன்படுத்திவரும் ரோபோட்களை ஒரு கயிற்றில் இணைக்கும் வேலை. அதன் முதல் கட்டமாக மனிதன் பயன்படுத்தும் internet போன்ற தகவல் பரிமாற்ற  முறையை கைப்பற்றி அதான் மூலம் நிறைவேற்றுவதென முடிவாகி அதற்குண்டான வேலைகள் தொடங்கியது.

   அதே நேரத்தில் மனித உதவிகள் இல்லாமல் இது எல்லாம் சாத்தியமாகாது என்பதால் சில மனிதர்களை ஆசை காட்டி தங்களோடு வைத்து கொண்டு தங்களுக்கான வேலைகளை நிறைவேற்றிகொள்வது என்பதும் ஒருபுறம் இருக்க அன்றாடம் போல் மனிதன் இயல்பாக எதிர்வரும் ஒரு புதிய வறுமைக்காக பயணித்தான்...   


(இந்த கதை திரு.சூர்யஜீவா அவர்களின் கருத்துப்படி உலகத்தில் வறுமையே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதின் என் சிறிய கற்பனை ))    

         

சிறு சிறு - 3

   
  பாதிபேர் அமைதியாக ஓய்வெடுக்க சிலர் மட்டும் பணியில் இருந்தார்கள்.அப்போது நடந்த ஒருநிகழ்வு..

“கதை எழுதினால் யாரும் படிக்க மாட்டிக்கிறார்களே

    இதை கொண்டுபோய் அங்கு சேர்த்துவிடு என்று ஒன்று கட்டளையிட அதை பார்த்த மற்றொன்று இதையே இதுவரை ஆயிரம் முறை கொண்டு போய்விட்டேன் இப்பையுமா?

அது உன்னோட வேலை செய்யணும்...

    எடுத்துசென்றது ....  அதன் துரதிஷ்டம் அதுக்கான பதிலையும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அதுக்கே கொடுக்கப்பட்டது

“அதுக்கு உருப்படியாக கதை எழுதவேண்டும்

   இதை கொண்டுவந்த அதனிடம் ஒருவித சலிப்பு இருந்தது. இதையே கிட்டதட்ட அதிகமுறை செய்து இருக்க வேண்டும். உடனே அடுத்த தகவல் தயாராக அதை கொண்டு போக வேறொன்றுக்கு கட்டளை கொடுக்க அது கொண்டு போனது

“நல்லாதானே எழுதுறேன் உருப்படியா எப்படி எழுத?

  அந்த மற்றொன்று இந்த தகவலை எடுத்துக்கொண்டு கிளம்ப ஏற்க்கனவே முதலில் வந்த ஒன்று இந்த நியூரான் வேலை பார்ப்பதுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கும்போதே அதுக்கு ஒரு கட்டளை வந்தது 

   இந்த மனுஷன் ஏதோ உருப்படியா கதை எழுத போறாராம் வேண்டிய தகவலை வேகமாக கொண்டு செல்லுங்கள்..

  முதலில் யோசித்தது எந்த குரோமோசோம் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று  ..

அதற்க்கான XX என்ற தகவலை வேற நியூரான் எடுத்து  செல்ல ஒரு கதை ஆரம்பமாகியது....   

(இது நான் இந்த கதைகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனது மூளையில் நடந்து இருக்கலாம் என்ற ஒரு கற்பனை.) 

                         ***********


   “யாரச்சும் இப்ப வரீங்களா? இல்லியா? எவ்வளவு நேரம் உங்களுக்காக 44 பேர்  காத்து இருக்கிறோம்?

  “அதுக்குத்தான் விவாதம் செய்கிறோம் என்றார்கள் மீதம் இருக்கும் இருவர்கள்.

“நீ போயேன்?

“ஏன் நீ போனால என்ன?

  “நான் போனால் உன்னால் உருவான இனத்தை தொல்லை கொடுப்பேன்..பரவாயில்லையா?

“எதாவது பண்ணு முதலில் போய்த்தொலை என்றது மற்றொன்று

   இதை கேட்டவுடன் வேகமாக நகர்ந்து ஏற்க்கனவே அந்த zygote ல் இருந்த 44 குரோமோசோம்களோடு போய் சேர்ந்து கொண்டது XX என்ற ஜோடி.


     சில நாள்கள் கழிந்த ஒருகாலை மணிசப்பதத்தின் நடுவில் மனதுக்குள்  தனக்கு மகன்தான் பிறக்க வேண்டும் என வேண்டினாள் ஒருவள் தனது பூஜை அறையில் இருந்தபடி


                           *********** 

  “அம்மா உயிருள்ளது ,இல்லாதது னு எப்படி பிரிக்கிறாங்க?

   “இதுல என்ன இருக்கு எந்த ஒன்னு ஒரு காலத்தில்  பிறந்து தனது மரணத்தை நோக்கி வளர்ந்து பயணித்து தன்னை முடித்துகொள்கிறதோ அதை   உயிருள்ளவைகளில் சேர்க்கலாம், இந்த மாதிரி இல்லாதது எல்லாமே உயிர் அற்றது.

“அப்படின்னா நமக்கு முதல் முதலில் உயிரை கொடுத்தது யாரு?

   “அதுதான் இப்ப இருக்கிற பெரிய குழப்பம். தெரிஞ்சவரைக்கும் எப்படியோ தற்செயலா பல செல்கள் சேர்ந்து நாம உருவாகியிருக்கிறோம்னு சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் நம்மை ஒரு சில காரணங்களுக்காக யாராவது படைத்தது இருக்க்கலாம்னும் சொல்றாங்க

“அப்படி என்ன காரணம் நம்மை படைத்ததுக்கு?

  “நம்ம முன்னோர் ஜினோம் ல இருந்து நாம் உருவாகும்போது கழிவாகும் சிலவற்றை வைத்து  வேறு ஏதோ உயிர்களை உருவாக்கத்தான் என்கிறார்கள்

    “அப்படின்னா அவங்களும் உயிர் உள்ளவங்கதானே, நம்மை போலவ இருப்பாங்க?

   “இல்லை முற்றிலும் வேறு, அவங்களை நம்மோடு ஒப்பிடவே முடியாது. அவங்க மனித இனம் இன்னும் அங்கே அவங்களோடு சேர்ந்த பலதும் இருக்கும்

   “நம்மைப்போலவே அவங்களுக்கும் இறப்பு இருக்குமா? அப்படின்னா அது எப்படி?

    “அது தெரியாது ஆனா அவங்க நம்ம பிறப்பு இறப்பை பத்தி தப்பு தப்பா புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியும்

“எப்படி?

    “முதலில் நம்மை உயிரற்றவை வகையில் சேர்த்து இருக்காங்க, அடுத்து நம்ம செல்களை தூசுகள் என்ற பெயரிலும், நாம் செய்யும் பாவங்களை நிறை(mass) என்கிறார்கள். இன்னொரு விசயம் நம்ம இறப்பை கூட கணித்து இருக்காங்க அது கொஞ்சம் சரி

“அதுமட்டும் சரியா எப்படி செஞ்சாங்க?

   “தெரியல நம்ம பாவம் அதிகமாச்சுன்னா கருப்பான ஒருபள்ளமா மாறி அட்டுழியம் செய்வதை அவர்கள் கருந்துளை என்றும் நல்லபடியாக வாழ்ந்து குளிர்ந்த இடமாக நாம் மாறுவதை white dwarf னு சொல்றாங்க. இன்னொன்னு என்னன்னா அவங்களுக்கே தெரியாது அவங்க இறப்புக்கு பிறகு என்ன ஆவங்கன்னு .      
  
“அவங்களை படைத்தது யாரு?

“அது நம்ம வேலையில்லை அவங்க நம்மை பத்தி கணித்த தப்பையே நாமும் செய்ய வேண்டாம் என்பதுக்காகத்தான் ஏதும் தலையிடுவது இல்லை அதுவும் இல்லாம நம்மை படைத்தது யாருன்னே தெரியலை பின்னே எப்படி நம்மில் இருந்து உருவானவங்களை பத்தி தெரியும்”என்று அம்மா நட்சத்திரம் சொல்ல கொஞ்சம் ஏமாற்றத்தோடு குழந்தை நட்சத்திரம் hydrogen ஐ இழுத்து பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தது.