யாரோ...

    சொத்து என்றால் அவனது உடலை தவிர வேறொன்றும் இல்லை..அவனது இருப்பிடம் ஊருக்கு வெளியில்.. அவன் தங்கியிருந்த இருந்த இடத்திற்கு வலது புறம பழைய புத்தக கடையும்,எதிரில் ஒரு டீ கடையும் இருந்தது...

    கொஞ்சம் தள்ளி பேருந்து நிறுத்தம்...வீடுகள் ஏதும் அருகில் இல்லை..இவனது கூடாரம் ஒரு கனமான சாக்கு போன்ற ஒன்றை மூன்று கம்புகளால் தூக்கி நிறுத்தி அதன் பக்கவாட்டில் காற்று தூக்காமல் இருக்க கல்களை வைத்து இருந்தான்...

    அவன் அந்த ஊருக்கு எப்படி வந்தான் என்று யாருக்கும் தெரியாது..வந்த போது அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை...தொடக்கத்தில் சுற்றி திரிந்தவன் இப்போது கூடாரம் அமைத்து இருக்கிறான் என்பது மட்டும் தெரியும்....

    அமைதியானவன்..யாருடனும் பேசுவது இல்லை...தொடக்கத்தில் எதிரில் இருந்த டீகடையில் கொடுத்ததை சாப்பிட்டவன்..இப்பொது அந்த பழைய புத்தக கடையில் சிறு வேலைகள் செய்வதால் அந்த கடைக்காரர் அவனுக்கு உணவு கொடுத்தார்...கடின வேலை ஒன்றும் செய்ய மாட்டான்..புத்தகங்களை அடுக்குவது..எடை போடுவது..போன்ற வேலைகள்...

    நிறைய படிப்பான்...அவனுக்கு பிடித்த புத்தகங்கள் ஏதும் கிடைத்தால் கூடாரத்துக்கு எடுத்துவந்துவிடுவான்....சில நேரங்களில் அவன் கூடாரத்தில் இருந்து பார்த்தாலே டீ கடையில் ஒட்டி இருக்கும் நாளிதழ் விளம்பரத்துக்கான சுவரொட்டி தெரியும்..அதில் ஏதும் முக்கியமான விசயம் இருந்தால் போய் படித்துவிட்டு வருவான்...

    சில நேரங்களில் சத்தமாக கத்துவான்...காரணம் வயிற்றுவலி..அவனது இரண்டு சிறுநீரகத்திலும் பிரச்சினை....முதல்முறை சோதனை செய்தபோது இரண்டு சிறுநீரகங்களும் படிப்படியாக செயல் இழந்து வருவதாக சொன்னார்கள்.....வலி தொடராமல் இருக்க மாத்திரை சாப்பிட சொன்னார்கள்..மற்றபடி அதை குணப்படுத்த சிறுநீரகத்தை மாற்றவேண்டும்...அது இவனால் முடியாது...வலிக்கு மாத்திரை வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்லாமல் வந்தவன் இப்போது இந்த கூடாரத்தில்.... 


    இறப்பின் வருகையை பற்றி கவலை பட்டதில்லை...தொடக்கத்தில் தான் இறக்கபோகிறோம் என்பதை தனிமையில் யோசித்து அழுது இருக்கிறான்...இப்போது இல்லை...

   அவனை பொறுத்தவரை கடவுள் வேண்டபடாதவர்..இல்லாதவர்...நம்பிக்கை இல்லை..ஒரு நேரத்தில் கடவுள் அவனிடத்தில் நேராக வந்தாலும் சந்திக்க நினைக்கமாட்டான்..உலகத்தில் நடக்கும் எதையும் கடவுளால் நடக்கின்றது என்பதை அவனால் நினைக்க கூட முடியாது...கடவுள் வெறும் வார்த்தைகளில்,நம்பிக்கைகளில் சில நேரங்களில் பணத்தில் வாழ்பவர் அவ்வளவே...

   வாழ்க்கையின் எந்த வலிகளையும் கடவுளிடம் சொன்னதில்லை.... எதிரில் இருக்கும் மனிதர்களே ஒன்றும் செய்ய முடியாதபோது எங்கோ இருக்கும் கண்ணில் காணாத கடவுள் அவனுக்காக ஒன்றும் செய்யமுடியாது என்பதை நன்றாக உணர்ந்து இருந்தான்...

    அவன் வலியால் கத்தும்போது சத்தம் கேட்டு இரண்டு பேர் வீடுகளில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அவர்களது கடமையை அத்தோடு முடித்து கொள்வார்கள்...டீ கடையில் இருக்கும் ஒரு வெள்ளை நாய்  கூடாரம் வந்து எட்டி பார்க்கும...இவன் வயிற்றை பிடித்துக்கொண்டு உருளும்போது அது வெளியில்  இருக்கும் ..சிறிது நேரம் நின்று விட்டு செல்லும்...

    மறுநாள் அந்த நாயை அன்பாக பார்ப்பான்..அடுத்த வந்த நாள்களில் அவனுக்கு கொடுக்கும் உணவில் கொஞ்சம் அதுக்கு போய் இருந்தது...சாப்பிடும் போது அது வராவிட்டாலும்...அதுக்கு தனியாக எடுத்து வைத்து இருப்பான்..கொஞ்ச நாளில் அந்த நாய் தனது இருப்பிடத்தை அவனது கூடாரத்துக்கு மாற்றியிருந்தது...

    அவனிடம் பேசும்போது மற்ற எல்லாவற்றிக்கும் பதில் அளிப்பான்...அவனைபற்றி கேட்க ஆரம்பித்தால் பதில் கிடைக்காது..வெறும் மௌனம்தான்...இப்பொது எல்லாம் வெளியில் சுற்றுவதில்லை...வேலை இல்லாத நேரத்தில் கூடாரத்தில் புத்தகம் படிப்பான்...சில நேரங்களில் வழியால் துடிப்பான்.....

   அதிகாலை..அந்த நாய் வெளியில் இல்லை..வலியால் துடித்தான்..இந்த முறை அதிகமாக இருந்தது...முதலிலேயே மாத்திரை சாப்ப்பிட்டு இருந்தான்...கேட்கவில்லை...வலியதிகம்...கொஞ்சம் வெளிச்சம் வந்து இருந்தது..எழுந்திரிக்க முடியவில்லை..மூச்சு இறைத்தது..அப்படியே கொஞ்சநேரம் துடித்தான்...

    வலி குறைந்து இருந்தும் அவனால் எழுந்து நடக்க முடியவில்லை....கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தான்....இறக்க போகிறோம் என்று தெரிந்து இருந்தது...நாயை தேடினான் கிடைக்கவில்லை...அப்படியே சரிந்து படித்தபடி ரோட்டை வெறித்தான்... அந்த பார்வையில் அன்றைய தினசரியின் முக்கிய செய்தி சுவரொட்டியில் ஒட்டபட்டிருப்பது தெரிந்தது.....

   அதில் எதோ கோயிலில் ஒருவர் கடவுளுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்து இருப்பதும்,அதன் மதிப்பு பல கோடிகள் என்றும் இருந்தது....படித்துவிட்டு திரும்பினான்..சிரிப்பு வந்தது...மெல்ல சிரித்தான்...கடவுள் தனது வாழ்வில் மரணத்திற்கு முன்னான இந்த சிரிப்பைதவிர வேறொன்றும் செய்யவில்லை....மூச்சின் வேகம் குறைந்தது..ஒரு கவலை..... நாயை காணவில்லை ..அதை பார்க்கவேண்டும்...இன்னும் அவனது சிரிப்பு இருந்தது..இது கடைசி சிரிப்பு அதுவும் கடவுளை நினைத்து...சிரித்தான்....இப்போது அவனுக்கு வலி சுத்தமாக  இல்லை.... 

6 comments:

ஆனந்தி.. said...

அன்பு தம்பி பிடிச்சுக்கோ என் பூங்கொத்தை...பொற்கொடி க்கு பிறகு...ரொம்ப ரொம்ப emotional டச் சில் நீ எழுதிய அழகான பதிவு இது...அறிவியல் இல்லை..ஆனால் நாத்திகம்:))...ஓகே..ஓகே...அது பிரச்சனை இல்லை...:))) ஆனால் நீ சொல்ல வந்த கருத்து சுர்ரீர் னு தான் இருக்கு மனசுக்குள்...செமத்தியான படைப்பு...:)))) அந்த நாய்குட்டி..தனிமை எல்லாமே அந்த அட்மாஸ்பியர் i could be feel...!!! superb and class...!!!:)))

கணேஷ் said...

மனதை பாதித்த ஒரு உண்மை சம்பவம்..

உங்களின் கருத்துக்கு நன்றி சிஸ்..

Unknown said...

//மனதை பாதித்த ஒரு உண்மை சம்பவம்//

எல்லோரும் நிச்சயம் இப்படி ஒருவரை சந்தித்திருப்பார்கள்! நாங்கள் கதையில் வரும் மாந்தர் போல் வெறுமனே கடந்து செல்ல, நீங்கள் அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! :-)

எஸ்.கே said...

அற்புதம்! அற்புதம்!
மனதில் உணர்வை கிளறி பாதிக்கின்றது!

Kousalya Raj said...

கணேஷ் இந்த விஷயம் உன் மனதை இந்த அளவு பாதித்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை...வரிகள் மனதை என்னவோ செய்கிறது....மிக நேர்த்தியான எழுத்து நடை....இடம், அந்த சூழ் நிலை எல்லாம் என் கண் முன்னாலும் விரிகிறது. இதை எழுத்தில் கொண்டுவந்த உனக்கு என் பாராட்டுகள்.

//கடவுள் வெறும் வார்த்தைகளில்,நம்பிக்கைகளில் சில நேரங்களில் பணத்தில் வாழ்பவர் அவ்வளவே...//

ஒவ்வொருத்தருக்கும் அவர்களுக்கு பிடித்த விதத்தில் கடவுள்.....! உன் ஆதங்கம், சொல்லவந்த விதம் அருமை.

குறையொன்றுமில்லை. said...

ஒருவனின் இறப்பின் வலியை உணர்த்திய கதை.