அதிசய தேடல்கள்

       எங்களிடம் எழுதும் பழக்கம் முன்பு இருந்து இருந்தாலும் நாளடைவில் மறந்து                                                                   இருந்தோம். எல்லாமே நவீனமாகி                             எழுத்துக்கே தேவையற்று                                 போய் இருந்தது.                                                                  இப்போது நான் எழுதுவதும்  பழமையான                                                         முறையான கையால் அல்ல.  நான் விமானத்தை செலுத்திகொண்டே எனது எழுதும்                                   இயந்திரத்தை  எழுத                                                                  வைத்துக்கொண்டு இருக்கிறேன்.                                    எழுதும் இயந்திரம் எங்களின் எண்ணங்களை கோரவையாக்கி அப்படியே எழுத்தாக்கும் ஒன்று. அதுக்கு நாங்கள் என்ன நினைக்கிறோம்என்பதை  பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அதான் நான் விமானத்தை கட்டுபடுத்தி தானே இயங்கும் முறையில் செலுத்தியதை கூட இங்கே எழுதிவிட்டது. அது இந்த கடிதத்துக்கு தேவையில்லை என்பதால் அதை மறைத்து இருக்கிறேன். அதான் சில இடைவெளிகள்.

      விமானத்தை எப்படி செலுத்துகிறேன் என்பதுதான் தேவையில்லையே தவிர அதை எங்கு எதற்கு செலுத்துகிறேன் என்பதை தெரிவிக்கத்தான் இந்த கடிதம். இந்த கடிதம் மூலம் மட்டும் இல்லை ஏற்க்கனவே பலவிதமான முயற்சியில் நாங்கள் பயணிக்கக்கூடிய நோக்கத்தை அறிவிக்கும் வேலையை செய்து இருக்கிறோம். எல்லாம் எதாவது ஒன்றிலாவது எங்களுக்கு பயன் கிடக்கும் என்ற நம்பிக்கைதான்.

        பயன் என்பதைவிட எங்களின் முக்கியமான கடமை. ஒருதவறான தகவலால் பல வருடங்ககளுக்கு முன் எங்களில் இருபது பேர் கொண்ட குழுவை வெளியில் அனுப்பிவைத்தோம். என்னதான் முன்னேற்றம் இருந்தும் முன்னெச்சரிக்கை அல்லது பயம் சில நேரங்களில் முட்டாள்தனமான வேலைகளை செய்யவைத்துவிடுகின்றது.

       சொந்த கிரகம். ஒரேகிரகம் ஆனால் அதை இயக்க இரண்டு நட்சத்திரங்கள். எங்கள் அறிவினால் வெளியில் தேடிப்பார்த்ததில் எங்கேயும் இந்த அமைப்பு இல்லை. நாங்கள் இந்த பிரபஞ்சத்தை ஆழ பிறந்தவர்கள் எல்லாமே எங்களுக்கு மட்டுமே என்ற எண்ணம தலைதூக்கி பெருமைப்பட்டுக்கொள்ள இது ஒன்றே  போதுமானதாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் செய்த பெரிய தவறுக்கும் இதுவே காரணம்.


       ஒன்றையொன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றிக்கொள்ளும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெரியது மற்றொன்று அதோடு ஒப்போடும்போது மிக சிறியது. இந்த இரண்டையும் மையமாக கொண்டு மிக தொலைவில் எங்களை சுமந்தபடி மெதுவாக நகர்வதுதன் எங்களது ஒற்றை கிரகம்.

        எங்களின் நட்சத்திர சுற்றும் முறையே காலநிலையையும் வாழ்கை முறையையும் தீர்மானித்தது. ஒரு மைய அச்சை பற்றி சுழலும் இரண்டு நட்சத்திரங்களில் பெரிய நட்சத்திரத்துக்கு அருகில் வரும்போது கடும் வெயில் காலமாகவும், சிறியதுக்கு அருகில் வரும்போது இனிமையான வசந்தகாலமாகவும் மாறும். இதனாலேயே அந்த சிறியதுக்கு பெண் கிரகம் என பெயர் வைத்து இருந்தார்கள் முன்னோர்கள்.


        பெண் ...     நாங்கள் அல்லாதவராக இருந்தால் புரிவது கடினம். எங்களது படைப்பில் எல்லாமே இரண்டு. அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து கிரகத்தில் இருக்கும் எல்லாமே. ஆண்,பெண் முற்றிலும் மாறான படைப்பாக இருந்ததால் மிக எளிதாக இரண்டுமே ஒன்றையொன்று கவர்ந்துகொண்டு ஈர்த்து கொள்ளும்படி இருந்தது. அதனால் எங்களின் வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களை செய்வதில் பெண்கள் மிக முக்கிய பங்கை வகித்தார்கள்


      இது ஒரு முன்னறிவிப்பு கடிதம் என்பதால் எதையுமே விளக்கமாக சொல்ல எனக்கு உரிமை இல்லை. நாங்கள் கிரகத்தில்  இந்த வளர்ச்சியை அடைய காலங்கள் நிறையவே கடக்கவேண்டியது இருந்தது. இப்போது நாங்கள் இருக்கும் நிலைமையை எங்கள முன்னோர்கள் சிந்தித்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் அவ்வளவு  வளர்ச்சி.

      அதிக அறிவு வளர்ச்சியில் கற்பனைகளும்,கண்டுபிடிப்புகளும் அளவின்றி போக சொந்த இடம் தவிர்த்து வேறு இடங்ககளுக்கும் எங்களின் பார்வை நீண்டது. எங்களின் தொடக்கம் அந்த கிரகத்தில் எப்படி என்பதை முழுமையாக அறிந்தது நாங்கள் செய்த பெரிய விசயம். அதுவரை இருந்த பழமையான விசயங்களை இனத்தவர்களிடம் இருந்து தூரமாக விலக்கிவிட்டு இப்படித்தான் நாம் தோன்றினோம் என்பதை நிலைநிறுத்தினோம். 


         என்னதான் பழைய நம்பகம் இல்லாத விசயங்களை நீக்கி இருந்தாலும் சில அறிவையே மழுங்க செய்து தவறுகள் செய்ய வைக்கும் என்பதுக்கு ஆதாரம்தான் இந்த கடிதமும் பயணமும். எங்களின் பிறப்பு பற்றி எப்போதுமே நிலவிவரும் ஒன்று எங்கள் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்துதான் எங்களை உருவாக்கின எனபதுதான். அதில் இருக்கும் சிறிய நட்சத்திரம் பெண் என்பதால் வெப்பம் குறைவானது மென்மையானது, பெரிய நட்சத்திரம்தான் ஆண் இரண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்றோடொன்று சேரும் அப்போது எங்கள் கிரகம் அழிந்து வேறொரு புதியதாக பிறக்கும். அபப்டி ஒருமுறை பிறந்ததுதான் இப்போதைய எங்களுடைய இருப்பிடம் என்பதுதான் அது.

       இதை எங்கள் அறிவால் மறுத்தாலும் சரியென நிரூபிக்க ஆதாரங்களாய் இனத்தவர் அறிய நிறையவே இருந்தன. முக்கியமாக எங்களின் படைப்பும், எங்களுக்கு கீழ் இருந்த உயிரின படைப்பும் இரண்டாக அதுவும் அவைகள் சேர்ந்து புதியதாக ஒன்றை உருவாக்கும் விதமே. இப்படி சொன்னவர்கள் குறிப்பிட்ட தந்திரத்தை கையாண்டார்கள் சில கணக்குகளை வைத்து எங்கள் அறிவையே மிரட்டினார்கள். அது எங்கள் கிரகம் ஒரு குறிப்பிட்ட சுற்றுக்களுக்கு பின் அதன்  நட்சதிரங்கள் மீண்டும் ஒன்றோடொன்று கண்டிப்பாக சேர்ந்தே ஆகும் என்பதுதான் அவர்களின் கணக்கு.

        அவர்களின் கருத்துக்கு ஆதரவாக எங்களின் அறிவின்பலனும் இருந்தது. அதாவது எங்கள் நட்சத்திரங்கள் எரிந்து வயதாகி பெரியாதாக மாறுவதால் அதன் மையத்தில் இருக்கும் ஈர்ப்பு விசையை விட நட்சதிரங்களுக்கிடையிலான ஈர்ப்பு விசைஅதிகமாகி   அதன் இருப்பிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி நகர்ந்து கொண்டு இருப்பதை கண்டு பிடித்தோம். அதுவும் மிக சிறிய அளவில்தான் இருந்தது. இதையே அவர்களும் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்து கொண்டார்கள்.

      அவர்களின் கணக்குப்படி இரண்டு நட்சத்திரங்களும் சேரும்ம்காலம் வந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால் இப்போது எங்களின் அறிவுக்கு புதியதான கண்டுபிடிப்பு ஒன்றுகிடைத்து இருந்தது. அதன்படி ஒருபோதும் அந்த இரண்டு நடச்திரங்கள் சேர வாய்ப்பே இல்லை. அது அளவில் பெரியதாகி மத்திய ஈர்ப்பு விசையை மிஞ்சுவதாக வைத்துகொண்டாலும் அது மெல்ல நகர்ந்து போவதக்குள் ஒரு நட்சத்திரத்தின் ஆயுள்காலம் முடிந்து இருக்கும்.

        அந்த முடியும்காலம் பழமைவாதிகள் கணித்த அளவில் இருந்து பல ஆண்டு தொலைவில் இருந்தது. அது அவர்களின் கருத்துகள் மேலோங்கி இருந்த நேரம் என்னதான் ஆதாரங்கள் எடுத்து காட்டினாலும் இனத்தவர்களிடம் நம்பிக்கை வரமறுத்தது. விளைவு இறுதியான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ள பட்டோம். அந்த முடிவையும் அவர்களே முன்வைத்தனர்.


       அதன்படி எங்களின் பிறப்பு ரகசியங்களை கண்டுபிடித்தவர்கள், விண்ணியலில் சாதனை படைத்தவர்கள் என சிலரை கிரகத்தை விட்டு வெளியேற்றுவது. ஒருவேளை நட்சத்திரங்கள் சேர்ந்து ஒரு புதிய கிரகம் உருவாகி இருந்தால் அவர்கள் திரும்பி வந்து ஏற்க்கனவே இருந்ததைப்போல ஓர் உயிரன அமைப்பை ஏற்படுத்தவேண்டும். காரணம் புதியதாக உருவாகபோகும் கிரகத்தில் உயிரினம் உருவாக தடைகள் இருந்தால் அவர்கள் செயற்கையாக உருவாக்கலாம் என்பதே பழமைவாதிகளின் கருத்து.

         ஆனால் அதுக்கு தகுந்த சூழ்நிலை இருக்கவேண்டும் என்பதை நாங்கள் எடுத்து விளக்கியும் ஏற்றுகொள்ளாமல் அவர்களின் யோசனைக்கே இனத்தவர்களை தூண்டினார்கள். அப்படியொரு நட்சத்திர மோதலில் அழிவதற்கு முன் இன மோதலில் அழிந்துவிடுவோம் என்ற பயம் கொள்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததால் மொத்தம் இருபது பேரை கிரகத்தை விட்டு நெடும்பயணத்திறக்கு தயாரக்கினோம்.

         அதற்கென்று தனிவிமானம் ஒன்றை வடிவமைத்து தேவையான எல்லாவற்றையும் அதில் அமைத்து பலமுறை வெள்ளோட்டம் பார்த்து அவர்களை அனுப்ப இருந்தோம். அவர்கள் செல்லும் வழி அவசர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் பயிற்சி முறையில் கொடுத்து இருந்தோம்.

       அவர்களோடு எங்களின் பிறப்புக்கு காரணமாக இருக்கும் முதல் ஒரு செல்லையும், அது தொடக்க வளர்ச்சிக்கு தேவையான சில பொருள்களையும் சேர்த்தோம். அப்படி ஒருவேளை பயனகாலத்தில் ஏதாவது கிரகம் எங்களுடைதைய போல தென்பட்டால் அதில் எப்படி இறங்குவது எப்படி உயிர்களை தோற்றுவிப்பது அல்லது அதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்ப்படுத்துவது என எல்லாமே கொடுத்து இருந்தோம். எதுவுமே இதுதான் நடக்குமென்று கொடுக்கபட்டவை அல்ல. நடந்தால் இப்படி செய்ய வேண்டும் என்பதே எங்களின் அறிவுரை.           

        பழமைவாதிகள் கருத்துப்படி ஆண்,பெண் இருவரையும் அனுப்பி  புதியதாக ஒரு செல் உயிரினத்தில் இருந்து தொடங்காமல் நேராகவே எங்களது இனத்தை உருவாக்கும் எண்ணம ஏற்றுகொள்ளபடவில்லை. புதிய கிரகமோ அல்லது வேறொரு இடத்தில் கண்டிப்பாக எங்கள் இனம் பெருக சார்ந்த சூழல் அமைந்து விடாது. ஆனால் ஒரு செல் வளவதர்க்கான சுழலை ஏற்படுத்தி பின் அதைக்கொண்டு எங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளமுடியும் எப்படி இப்போதைய கிரக அமைப்பு இருக்கிறதோ அது மாதிரி.

       அவர்கள் வெளியேறும் காலம் வந்தது. விமானம் ஏறி மனமில்லாமல் பிரிந்தார்கள். இப்போது நான் பயணிக்கும் அதேரக விமானம். போகும் வேகத்துக்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்ளும். அதிகவேகத்தில் relative mass அதிகமாமல் இருக்க அதன் உருவம் மிக சிறியதாக அமைத்துவிடும். இதனால் அதன் mass அதிகமானாலும் பெரிய பாதிப்பு அதிகம் இருக்காது. அதிக காலத்துக்கு தானாக இயங்கும் முறையை பயன்படுத்தி பயணிக்கலாம். உராய்வு வெப்பம் இல்லாமல் பயணிக்க வெளியில் உள்ள காற்றை பணிக்கட்டிகளாக மாற்றிக்கொள்ளும் அமைப்பு அதன் வெளிப்புற சுவரில் இருந்தது,


            எங்கள்  கிரகத்தில் எல்லோரும் அனுப்பியவ்ர்களை மறந்து அழியப்போகும் தினத்துக்கு காத்து இருந்தோம். ஆனால் அது கடைசிவரை வரவே இல்லை. அதே பழமைவாதிகள் தனது கணக்கில் ஏதோ சிறுபிழை நேர்ந்துவிட்டதகவும் ஆனால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பதை நம்பிக்கையோடு சொல்லி கொண்டார்கள். ஆனால் இனம் நம்ப தயாராக இல்லை. மாறாக அனுப்பியவர்களின் மீது கவனம் திரும்ப அவர்களை தேடும் பணியை தொடங்கும்படி வேண்டினார்கள்.

      அதன் விளைவே இந்த பயணம். இது எங்களின் முதல் பயணம் இல்லை. ஏற்க்கனவே பல காலமாக எங்களின் முன்னோர்கள் தேடுதல் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பயன்தான் கிடைத்தபாடில்லை.

      எங்களின் கணிப்புப்படி பிரிந்து சென்றவர்கள் ஏதாவது கிரகத்தில் இருக்க வேண்டும். அல்லது விமானமாவது கிடைக்க வேண்டும். அதனாலேயே பலவிதங்களில் தகவல்கள் பரப்பும் வேளையில் இறங்கி இருக்கிறோம். இந்த கடிதம் கூட பெரியஅளவில் விண்வெளியில் எங்காவது நிறுத்தப்படும்.  கொஞ்சம் விளக்கம் அளித்து இருப்பது தேடுவது  நாங்கள் தான் என்று அறிந்துகொள்ளத்தான்.

     ஒருவேளை  வேறொரு கிரகத்தில் இறங்கி புதிய உயிர்களை தோற்றுவிக்கும் பணிகளை தொடங்கி இருந்தாலும் அது இன்னும் பாதியில்தான் இருக்கும். ஏனென்றால் வளர்ச்சியின்படி கடைசியாக வருவது நாங்கள். ஆனால் இப்போது இருக்கும் எங்கள் சொந்த கிரகத்தில் ஒருவேளை எதிர்காலத்தில் எங்களின் அடுத்த பரிணாம வளர்ச்சி வரலாம். ஆனால் நாங்கள் அனுப்பிய ஒரு செல்ல்லில் அதை எங்களின் பரிமாணத்தோடு நிறுத்தும் படி அமைத்து இருந்தோம். ஏனென்றால் அப்போதே அறிந்து இருந்தோம் கிரகம் அழியபோவதில்லை.  ஒருவேளை தேடுதல் ஆரம்பித்தால் வேலை எளிதாக இருக்கும் என்பதற்காக.


         அனுமானம் படி ஒரு இடத்தில் அந்த ஒருசெல்லை வளர்த்து இருப்பார்கள். அதற்கு தேவையான எல்லா சூழ்நிலையையும் உருவாக்கி இருப்பார்கள்.அதை கண்டுபிடித்தாலும் அங்கு ஒருவேளை எங்கள் இனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுக்கான பரிணாம வளர்ச்சி தொடங்கி இருக்கும். அதை கண்டாலே எங்களுக்கு புரிந்து விடும்.  அல்லது அவர்கள் பெருகி விண்வெளியில் பழைய கிரகத்தை தேடிக்கொண்டு இருந்தால் நாங்கள் விட்டு செல்லும் கடிதம்,தகவல்கள் உதவலாம்.

    மேலே சொன்னவை உங்களோடு அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலையோடு ஒத்துப்போனால் நீங்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் அல்லது இனத்தால் தோற்றுவிக்கப்பட்டு பரிணாம வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கும் ஒரு பிரிவு. முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் பயணம் இந்த கடிதம் அமைத்த வழியில் இருந்தால் இங்கேயே இருக்கவும் எங்களின் பின்வருகை இந்த வழியில்தான் இருக்கும்.

சில விசயங்கள் - 12

       இதில் என் சுயபுராணம் மட்டும்...இந்தமுறை ஊர்பயணம் மற்றதைவிட நன்றாகவே இருந்தது. ஒருவேளை பொங்கல் பண்டிகை காலமாக இருந்திருக்கலாம். பண்டிகைகளை வெகு விமர்சியாக கொண்டாடுவதில் சுத்தமாக ஆரவம் இல்லைதான். இந்த நேரத்தில் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடி இருக்க கிடைக்கும் ஒரு அறிய வாய்ப்பு அதுதான் என்னை பொருத்தவரைக்கும் பெரிய சந்தோசம்.இந்த காரணத்துக்காகவே இந்த மாதிரியான பண்டிகைகள் தொடங்கப்பட்டு இப்போது திசைமாறி போய் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

     அனேகமாக நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு நான் ஊரில் இருந்தேன். அதுவும் புதிய வீட்டில் பொங்கல் கொஞ்சம் இனிப்பாகவே இருந்தது. ஏற்க்கனவே நினைத்தது போலவே காலை நான்கு மணிக்கே அடித்து எழுப்பி விட்டார்கள். இருந்தாலும் அசையவில்லை இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்கும் வேலையை தொடர்ந்தேன். கடைசியாக கையில் தண்ணி கொண்டுவந்து முகத்தில் தெளித்த பின்னர்தான் குளிர் தாங்காமல் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

     முன்பெல்லாம் காலையில் சீக்கிரம் எழுந்துதான் வாசலில் கோலம போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரவே வெகுநேரம் முழித்து இருந்து புத்தகத்தை பார்த்து போட்டுவிட்டு காலையில் சௌகரியாமாக எழுந்திருக்கும் வித்தையை எனதூரில் காண முடிந்தது.ஆனால் எங்கள் வீட்டில் காலையில் என்னை எழுப்பியது கோலத்துக்கு வண்ணம் கொடுக்குவாம்.

    முந்தைய நாள் இரவில் முழித்து இருந்து கோலம போட்டவர்கள் எல்லோரும் யாருக்கும் தெரிந்து இருக்காது என்ற நினைப்பில் ஏதோ இப்போதுதான் போட்டது போல பொங்கல் வேலையில் இருந்தார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் இரவு போட்ட கோலத்துக்கு பாதுகாப்பாக பெரிய பெரிய கற்களை அதை சுற்றி வைத்து இருந்ததுதான்.யாரும் வாகனத்தை மேலே ஏற்றிவிட்டால்?. அதுவும் சாலையில் என்பதால் எத்தனை பேர் விழுந்தார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

     நான் வெளியே வந்து பார்க்கும்போது போர்டிகோவில் மண்போட்டு பானைவைத்து எல்லாம் தயாராகி இருந்தது.எல்லோரும் அவர்களின் வேலையில் மும்மரமாக இருந்தார்கள். இப்போது போய் காபி கேட்டால் அடிவிழும் என்பதால் பொங்கல் பொங்கும்வரை வரை காத்திருந்து அப்புறம் சாமிகும்பிட்டு மாடியில் காக்கைக்கு முதலில் வைத்துவிட்டு பின் காத்திருந்த வேலையை முடித்தேன்.

      அதேநாள் காலையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனையை கண்கூடாக காணமுடிந்தது.சில வீடுகளில் காஸ் அடுப்பை வீட்டின் வாசலில் வைத்து பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்கள். என்னதான் இது முன்னரே பல இடங்களில் நடந்து இருந்தாலும் நான் நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அடுத்த தடவை மின்அடுப்பு (induction) வைத்து பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படமாட்டேன்.



     அடுத்து யோசிக்க வைத்த விசயம் கோலங்கள். முதலில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்றுதான் நினைத்து இருந்தேன். என்னதான் கொஞ்சம் ENG. DWG ல் தேறியிருந்தாலும் சிலவற்றை நான் முயற்சித்தபோதுதான் உண்மை தெரிந்தது. முடிக்க முடியும்தான் ஆனால் அதற்கென்று போடுகிற முறையில் இருக்கும் ஒரு தரம் அழகு வராது. தனி தனியாக போட்டு எல்லாத்தையும் இணைக்க்முடியும் ஆனால் முறைப்படி போடுபவர்கள் ஒரே தொடர்ச்சியாக போடுவதால் இடையில் வெட்டு குத்துக்கள் நடந்த சுவடுகள் தெரியாமல் இருக்கும். கோலம எல்லோராலும்  அழகாக போடமுடியாது அது பெண்களாக இருந்தாலும் சரி.

                                     *********

        டெல்லி திரும்புவதுக்கு இரண்டு நாள் முன் இரவில் நடந்து வரும்போது கால் ஒரு இடத்தில் சருக்கென்று வழுக்கியது பின்திரும்பி மொபைல் வெளிச்சத்தில் என்னவென்று பார்த்தால் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதயம் சில வினாடிகள் துடிதததா தெரியவில்லை. நல்லவேளை பாம்பின் ஏதாவது ஒரு பகுதியை மிதிக்கவில்லை.

    அதாவது அதன் வால் பகுதியை மிதித்து இருந்தால் நிலமை வேறாக இருந்து இருக்கும். நடந்து வரும் அதிர்வுக்கு முதலிலேயே அது சுருண்டு இருந்திருக்கிறது. அதன் உடல் பகுதியினை மொத்தமாக சேர்த்து மிதித்து இருக்கிறேன். அதனால் உடனே ஒன்றும் செய்ய இயலாமல் நான் காலை எடுத்தபிறகு தலையை தூக்கி வலியால் ஓடி ஒரு ஓரத்தில் போய் மீண்டும் சுருண்டு நகர முடியாமல் கிடந்தது. அதற்கு என் எடை காரணமாக இருக்கலாம். கொஞ்ச நேரம் பார்த்துகொண்டு இருந்தேன் நகர்கிறதா என்று இல்லை அது இருந்த இடத்திலியே நெளிந்தது.பாவமாக இருந்தது. பெரிய பாம்பும் இல்லை. ஒரு இரண்டடி இருக்கும்.

     வீட்டில் போய் சொன்னால் அலறியடித்து காலை கழுவ சொல்லி ரத்தம் எங்கும் வருகிறதா என ஆள் ஆளுக்கு பார்த்தார்கள். எல்லா சோதனையும் முடிந்த பிறகு நான் எந்த காலால் பாம்பை மிதித்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்ல எதிலும் விளையாட்டுத்தான் என செம கோபமாகி......... சரி அவை வேண்டாம். அப்புறம் அது என்ன பாம்பு என்று பார்த்து வரச்சொல்ல கிளம்பி போய் அந்த இடத்தில் லைட் அடித்து பார்க்க சில வினாடிகள் நின்ற இதயம இப்போது நிமிட கணக்கில் நின்றது. காரணம் அங்கு இரண்டு பெரிய பாம்புகள் அதனை சுற்றி இருந்ததுதான்.

     நான் லைட் அடித்ததும் அந்த வெளிச்சத்தில் வேகமாக நகர்ந்தது. நான் மிதித்த பாம்பு அந்த இடத்தை விட்டு நகராமல் அங்குதான் நெளித்து கொண்டு இருந்தது. அவ்வளவுதான் ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்து நடந்ததை சொன்னால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானாலும் பின்னர் நான் கதைவிடுகிறேன் என நம்ப மறுத்தார்கள்.  வாருங்கள் போய் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டாம் நம்பிட்டோம் என்று முடித்தார்கள்.

     கொஞ்ச நேரம் கழித்து அங்கு என்ன நடந்தது என்பதை ஒருவழியாக அனுமானிக்க முடிந்து. அக்கம் பக்கம் எங்காவது வீடு கட்ட சுத்தம் செய்து இருப்பார்கள். அங்கு இருந்த ஒரு பாம்பு குடும்பம் இடத்தை காலி செய்துவிட்டு போகும்போதுதான் நான் அதனை மிதித்து இருக்கிறேன். மறுநாள் காலையில் போய் பார்த்தால் ஒன்றுமே அங்கு இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அது போய் இருக்கலாம். இல்லை காலையில் பூனைகள், பறவைகள் இவற்றிக்கு இரையாகி இருக்கலாம். என்னை பார்த்த  பாம்பு நாற்பது நாள் விரதம் இருந்து என்னை தேடி வருமா? அப்படி வரும்னு சொல்வாங்களேன்னு வீட்டில் கேட்க அப்படி வந்தால் உன்னுடைய முகவரி கொடுத்து பிளைட் ஏத்தி அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். 

                                           *******

      ஊருக்கு போனால் கண்டிப்பாக நான் போகும் இடம் பழைய புத்தக்கடை.  சிலவருடங்கள் முன்பே அதன் இருப்பிடம் அறிமுகமாகி இருந்தது. பிரபல VVR கடலை மிட்டாய்கடைக்கு இடது பக்கம் கொஞ்சமாக ஒரு இடத்தில  அலமாரிகள் நிறையா அடிக்கிய புத்தகங்களை கொண்டிருக்கும். ஒரு முதியவர்தான் இருப்பார். பழைய புத்த்கங்கள் மட்டுமே அங்கு இருக்கும் மற்றபடி பேப்பர்கள் அவர் சேகரித்து வைப்பது இல்லியாம்.அன்றைய தினத்துக்கு அரைப்புக்கு போட்டுவிடுவாரம். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

     ஒருவனின் சில ரகசியங்களை தெரிந்துகொள்ள அவனது குப்பை தொட்டியை பார்கவேண்டும் என்பார்கள். அதே போல ஒரு ஊரில் என்னமாதிரியான புத்த்கங்கள் படிக்கிறார்கள் என்பதை பழைய புத்தககடையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி பார்த்தால் கோவில்பட்டியில் பெரும்பாலும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள்தான் அதிகம். காரணம் கல்லூரிகள் பள்ளிகள் அதிகம்.

     பெரியவரிடம் பாடப்புத்தகம் தவிர வேறுவகை கேட்க அலமாரியின் ஒரு வரிசையில்  அடுக்கில் இருந்த புத்தகத்தை மட்டும் காண்பித்து அதை எல்லாம் எடுத்து வெளியில் போட்டார். தேடியதில் பெரும்பாலும் பக்தி ததும்பும் புத்தகம்தான். இரண்டாவதாக யோகா செய்வது எப்படி என்ற மாதிரியானவை. நிறையா பேர் சும்மா இருக்கிறார்கள் போல. இறுதியாக சில நாஞ்சில் நாடன் சிறுகதைகள் உட்பட தமிழ் இலக்கண விளக்கங்கள் நிறைந்த புத்தகங்களோடு ஒரு எட்டு தேறியது. 

     அதில் திருவள்ளுவரும் சிவப்பிரகாசரும் என்ற புத்தகத்தை படிக்கும் முன்னரே சில விசயங்கள் தெரியவந்தது.  கோவில்பட்டி என்பது கோயிற்பட்டி என்றுதான் சொல்லி வரப்பட்டு இப்போது மாறியிருக்கிறது. பெரியமாற்றம் இல்லையென்றாலும் எனக்கு தெரியாத விசயம். அதுவும் இல்லாமல் திருவள்ளுவர் மன்றம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது நிறைய இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் இந்த மன்றத்தில் புலங்கபட்டு இருகின்றன என்பதை அதன் முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த அந்த மன்றத்தின் குறிப்பு சீட்டில் இருந்து தெரிந்து கொண்டேன்.      இப்போதும்  இருக்கிறதா தெரியவில்லை.


      கடைசியாக  எடுத்த புத்தகங்களை அங்கு வைத்தே புரட்டி கொண்டு இருக்க தம்பி கடையை மூடனும் என்று தயார் செய்தார் அந்த பெரியவர்.  துட்டை கொடுக்கும்போது இந்த மாதிரி புத்தகங்கள் வந்தால் எடுத்து வைங்கள் என்று சொல்ல போனமுறை வந்து இதைத்தான் சொல்லிட்டு போனே பார்த்தில்லே இவ்வளவுதான் வந்தது அப்படி வந்தால் நான் எடுத்துவைக்கிறேன் என்றார்.

      அவர் இந்த மாதிரியான புத்தகங்களையும், பள்ளி சம்பந்தமானவைகளையும் அரைப்புக்கு அனுப்பாமல் வைத்து இருப்பது யாராவது ஏழை மாணவர்கள் வந்து கேட்பார்களாம். கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு அல்லது இலவசமாக கொடுத்துவிடுவார். ஆச்சர்யம் இன்னொன்று அவர் கடைக்கு பூட்டு போடுவதில்லை. காரணம் கேட்டேன் என்ன தம்பி கேள்வி இது இங்கு வந்து திருட என்ன இருக்கு என்றார்.என்னை பற்றி சரியாக தெரியவில்லை போலும்.  





  

இப்படியும் எழுதலாம்

         இதுவரை ஐம்பதுக்கும் மேலான சிறுகதைகள் எழுதி இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எல்லாமே ஒவ்வொரு மனநிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதியவை. அதனால் எனக்கு எல்லாமே தேறும் வகைதான். ஆனால் வாசிப்பவர்களுக்கு எப்படி என்று இதுவரை யாரும் சொன்னதாக நினைவில்லை. அதற்காக எனது கதைகள் எல்லாம்  தமிழ் எழுத்தில் சிறந்தது என்றெல்லாம் சொல்ல வரவில்லை அடிக்க வருவார்கள். நான் என்ன மாதிரியான கதைகளை படிக்க நினைக்கிறன்றேனோ அதையே எழுதுகிறேன். அதிலே ஆர்வமும்கூட.

      படிப்பதைவிட தனது முயற்சியில் ஒன்றை எழுதிவிட்டு அது ஓரளவுக்கு தேறுகிற மாதிரி இருந்தால் அதில் இருக்கிற இன்பமே தனிதான். சில நேரங்களில் அனுபவித்தது உண்டு. இதில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விசயம் எழுதுபவர் என்னதான் எதையுமே எதிர்பாராமல் எழுதுகிறார் என்றாலும் மற்றவர்களின் அங்கீகாரமும் பர்ரட்டுகளும் அவரின் வாருங்கால எழுத்துக்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இருக்கும் .ஆனால் மற்றவர்கள் தன் எழுத்தை அங்கிகரிக்க வேண்டும் என்பதற்காக எழுதினால் தொடர முடியாதுதான்.


      சரி விசயத்துக்கு வருகிறேன் இதுவரை நான் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அறிவியல் புனைவுகளே. ஒரு அடிப்படையான அறிவியல் விசயம் அதனை விவரிக்க சில கற்பனை கதாப்பாத்திரங்கள் இப்படித்தான் என் கதைகள் நீளும். இந்த கற்பனைக்கு நான் எடுத்துக்கொள்ளும் இடங்கள் எல்லாமே உணமையானவை.அவை பெரும்பாலும் நான் வாழ்ந்து ரசித்த இடமாகவே இருக்கும்.சிலகதைகளில் வந்த பின்னுட்டங்கள் இது உண்மையா? கதையா? என்ற சந்தேகமே இந்த எனது முயற்சிக்கு வெற்றியும்கூட.

      இல்லாத ஒன்றை அப்படியே கற்பனையில் மனதில் விரிக்க நிறைய மெனக்கெட வேண்டும். ஆனால் ஏற்க்கனவே மனதில் ஆழமாக பதிந்த விசயங்களை அப்படியே எழுதும்போது கற்பனையில்  எழுதியதை விட கொஞ்சம் சிறப்பாகக்காட்டமுடியும் என்பது என் கருத்து. எல்லா கதைகளிலும் இந்த மாதிரி உண்மையானவைகளை சேர்த்து எழுதிவிட முடியாது. கதைக்கரு ஒத்துபோகவேண்டும்.

    நானும் சில கதைகளை இந்த வகையில் எழுதி இருக்கிறேன். இதுவரை படித்தவர்களுக்கு அது வெறும் என் கற்பனைதான்,ஆனால் இப்போது அதன் உண்மை உருவமும் உங்களுக்கு. இந்த விசயங்களை நான் எப்படி என் கதைகளோடு சேர்த்து இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாய் சில...

ஒரு ரகசியம்     என்ற கதையில் வரும் கோயில் ..

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி.
 
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
கோயிலுக்கு முன்னால் கிடக்கும் கல் தூண்கள்
                                                                பெருமாள் கோயில்

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும்



தூண்கள்    கதையில்

     ஊரின் தொடக்கமே அந்த பெருமாள் கோயில்தான். அடுத்து வீடு ஆரம்பம் என்றால் கொஞ்ச தூரம் தள்ளிதான்.  அந்த கோயிலை சுற்றியும் பெரிய கல் தூண்கள் ஒழுங்கற்று கிடக்கும்.பழமை வாய்ந்த அந்த கோயிலில் இருந்து பிடுங்கி வெளியில் போடபட்டவை அவை..........
                                                           
                                                          கல் தூண்கள்

    .........தன்னிலை மறந்து மெல்ல தூணின் மீது சரிய அவள் சேலையில் கண்ணாடியில் பார்த்த அழகிய முகம், அதை கட்டி நடந்தவிதம் எல்லாம் ஒருமுறை வந்தபோனது. மெல்ல சிரிப்பது போன்ற உணர்வு கண்டிப்பாக சந்தோசத்தில் இல்லை. அதுதான் கடைசி. அவளது தலை சரிந்து கன்னம் அந்த கல்லில் ஒட்டியது.


தெரியலை..கதையில்

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

                                                                            ஆறு 

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம்

நிஜம்கும் நிழல்கள்
  கதையில்

    ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.............
                                              ஆற்றங்கரையில் சிவன் கோயில்


                                                           கிணற்று உறை
                                              
 .........வழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது


      இதோடு இன்னும் பல கதைகளில் சில இடங்களில் இந்த மாதிரியானவற்றை  வர்ணித்து கதையோடு சேர்த்து இருப்பேன். இவை இல்லாமல் நான் பார்த்து ஏன் இப்படி? என்று யோசித்ததையும் எழுத மறக்கவில்லை.

     இதில் என்ன இருக்கிறது பெரும்பாலும் எல்லோரும் இந்த மாதிரிதான் எழுதுவார்கள் என்றால் பதில் இல்லை. நான் எப்படி எழுதுகிறேன் என்பதைதான் சொல்லி இருக்கிறேன்.  அறிவியல் புனைவுகளுக்காக வெறுமனே கற்பனை செய்து எழுதியதும் உண்டு.

      எழுதுவதில் இன்பமும் ஆர்வமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில விசயங்களை பார்க்கும்போது ஏன் எழுதுகிறோம் என்றும் யோசிப்பதோடு அதே யோசனை எழுதும் ஆர்வத்தையும் குறைத்து வெறுமனே படிக்கும் ஆர்வமே மிஞ்சுகிறது. எது எப்படியோ இன்னும் நிறைய எழுத வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.