மனதுடன் ஒரு நாள்

 நேற்று சரியாக 11 மணியளவில் பெருங்களத்தூர் அடுத்து GST  சாலையில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நடந்த சம்பவம். எப்போதுமே பரபரப்பாக இருக்கும், அதுவும் முக்கியமாக அதிக எண்ணிக்கையில் லாரிகள் செல்லும் வழித்தடம். நான் நின்றிருக்கும் இடத்துக்கு சற்றே எதிரில் ஒரு இடைவெளி U turn போடுவதற்காக இருக்க, அந்த இடத்துக்கு   மெதுவாக பைக்கில் வந்து நின்றார்ஒருவர். சில நிமிடங்கள் இடம், வலம் வண்டிகள் வருகிறதா எனப் பார்த்தபிறகு திரும்ப முயல அப்படியே நின்ற இடத்தில் சாய்ந்தார். நான் நின்றிருந்த சாலையில் அதிகமாக வண்டிகள் சென்றதால் அவர் இருக்கும் இடத்திற்கு கடந்து செல்ல இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும். அதுவரை அவர் விழுந்த இடத்தில் அப்படியே அசையாமல் கிடந்தார். நானும் மற்றவரும் சேர்ந்து வண்டியைத்  தூக்கும்போதுதான் தெரிந்தது அதிகமான போதையில் இருக்கிறார் என்பது. என்கூட உதவிக்கு வந்தவர் இவ்வளவு குடித்துவிட்டு வண்டி ஓட்டி இவங்களும் சாவாங்க, மத்தவங்களையும் சாகடிப்பாங்க என்ற விரக்தியோடு தூக்கி விட்டவுடன் போய் விட்டார். எழுந்து நின்றவரால் நிலையாக வண்டியைப் பிடித்துக்கொண்டு நிற்க முடியவில்லை. ஒருவழியாக வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் ஒரு பார்வையைப்  பார்த்தபடி வண்டியை மீண்டும் எடுக்கப் போகும்போதுதான் வண்டி off ஆகியிருந்ததே தெரிந்தது. 


Start செய்யமால் வண்டியை ஓட்டுவதற்கு  முயன்று கொண்டிருக்க, வண்டி off ஆகியிருக்கிறது என்பதை நான் தான் தோளில் கைவைத்து அவரிடம் சொன்னேன். அதனை start செய்ய கீழே இறங்கும்போதும் மீண்டும் ஒருமுறை விழும் நிலைக்குப் போனார். ஒருவழியாக stand போட்டு ஆட்டோ ஸ்டார்ட் செய்ய வண்டியில் உயிரில்லை. பின்பு மிதித்துப்  பார்க்க வண்டி “எனக்கென்ன” என்றது. இத்தனையும் அந்த சாலையின் ஓரத்தில்தான் நடந்து கொண்டிருந்தது. போகிறவர்கள் எல்லாம் கொஞ்சம் விலகி எதோ ஒன்றை பார்ப்பதைப் போல பார்த்துவிட்டுப்  போனார்கள்.


எதிரே மூடியிருந்த கடையின் திண்ணையைக்  காட்டி சிறிது நேரம் அமர்ந்து விட்டுத்  தெளிந்தவுடன் போங்கள் என்று சொன்னதுக்கு, “ரெம்பத்  தெளிவா இருக்கேன் சார் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை வண்டிதான் மக்கர் பண்ணுது சரியாகிடுச்சுனா நான் போய்டுவேன் ஒன்னும் பிரச்சினையில்லை” என்றார் தள்ளாடியபடி. குறைந்தது இருபது தடவைக்கு மேலாவது   மிதித்திருப்பார். ஆனாலும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.நானும் முயற்சித்துப்  பார்த்தேன் ஆகவில்லை. அப்படியே சில நிமிடங்கள் மௌனமாகக்  கழிய, மீண்டும் முயற்சித்தார் இப்போதும் ஆகவில்லை.


“எங்க போனும்?” நான் கேட்டேன்.

“ஆவடி சார் “ என்றார் போதையில் சிரித்தபடி.

“அவ்வளவு தூரம் எப்படி இந்த நிலைமையில் போவீங்க? பக்கத்துல உங்க நண்பர்கள் இருந்தால் சொல்லுங்க வர சொல்றேன்?”

“சார் நீங்க பயப்படாதீங்க நான் தெளிவா இருக்கேன் நான் போய்டுவேன்” என்றார்.

“சரி அரைமணிநேரம் அங்க உட்கார்ந்துட்டு போங்க ரெம்ப தடுமாறுது”

“சார் கவலையே படாதீங்க நான் போய்டுவேன், என்ன இந்த வண்டிதான் பிரச்சினை பண்ணுது” என்று சொல்லியபடியே மீண்டும் மிதிக்க ஆரம்பித்திருந்தார்.


கொஞ்ச நேரத்தில் ஸ்டார்ட் ஆகி உடனே நின்றுபோனது. அது அவருக்கு ஒரு உத்வேகமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் பலம்கொண்டு முயற்சித்து ஒருவழியாக ஸ்டார்ட் செய்துவிட்டார். வண்டிமீது தள்ளாடியபடி ஏறி அமரும் போதே ஒருபக்கமாக சரிந்து விழுவது போல போக கால்களை வைத்து சமாளித்தார். இன்னும் stand எடுக்கவில்லை. வண்டியில் அமர்ந்த நிலையில் பின் பக்கம் நின்றிருந்த என்னை நோக்கி “சார் கவலைப் பாடாதீங்க நான் போய்டுவேன், நீங்க போங்க நான் போய்டுவேன் ஒன்னும் பிரச்சினையில்லை” என்பதைத்  திருப்பத்  திரும்ப சொன்னார்.


நானிருக்கும் பக்கம் கொஞ்சம் சாய்ந்து எனக்கு கைகொடுக்க வர மீண்டும் வண்டி அங்கிருந்த divider மீது சாய்ந்து நின்றது.மீண்டும் தன் காலால் நேராக கொண்டுவந்து, கீழே இறங்கி stand ஐ  எடுத்து மேலே தள்ளாடியபடி அமர்ந்து கடைசியாக என்னிடம் வரேன் சார் நான் போய்டுவேன் நீங்க கவலைப் பாடாதீங்க நீங்க போங்க என்றார்.


கிளம்பியதும் கொஞ்ச நேரம் அவரின் முதுகையும் வண்டி ஓட்டுவதையும் பார்த்துக்கொண்டிருந்தேன். வண்டி நிலையாக செல்லவில்லை. அதுவும் வண்டலூரில் இருந்து ஆவடி வரை எப்படி இதே நிலையில் பயணிக்கப்போகிறார் என்ற சிந்தனையில் நான் மூழ்கத் தொடங்கியிருந்தேன். அவர் அந்த நிலைமையில் அங்கிருந்து சென்றதை இன்னும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எதாவது செய்து அவரை நிறுத்தி வைத்திருக்கலாம். அதிக பட்சமாக வண்டியின் சாவியைப் பிடிங்கியாவது நிறுத்தியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல்  விட்டது மனதில் ஏதோ செய்தது. 


என்னதான் தெரியாத மூன்றாவது மனிதனாக இருந்தாலும் அங்கு வந்து விழுந்தது , அதன்பின் அவர் நடந்த கொண்ட விதம்  என்னை கொஞ்சம் பாதித்திருந்தது. எத்தனையோ பேர்கள் இதே சென்னையில்  இந்த நிலையில் அல்லது இதைவிட மோசமான நிலைமையில்  சாலைகளில் பயணித்துக் கொண்டிருப்பார்கள்தான், ஏன் சிலர் விபத்துக்களிலும் சிக்கலாம், மரணிக்கலாம். தினந்தோறும் செய்திகளிலும், நேரடியாகவும் சந்தித்த நிகழ்வுகள்தான்  என்றாலும் இந்த விசயம் கொஞ்சம் வித்தியாசமாக என்னுள் மாறியிருந்தது. 


பத்துநிமிடம் அவருடன் பேசியிருந்தாலும், அவருடைய போதைகலந்த கண்கள், பதற்றத்தில் வேர்த்திருந்த முகம், கீழே விழுந்ததில்  ஆடையில் ஒட்டியிருந்த மண் என எல்லாமே என் மனதில் ஆழாமாகப்  பதிந்திருந்தது. எனக்குத்தான் இவ்வளவு பதட்டமும், கவலையும் இருந்திருக்குமா? ஒருவேளை அவருக்கு இது தினம் நடக்கும் ஒரு சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம். தினமும் வேலை முடிந்தவுடன் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ கவலைகளை மறக்க அல்லது பணியில் இருக்கும் மன அழுத்தத்தைப்  போக்க இவ்வாறு  செய்பவராகவும் இருக்கலாம்.வேலை செய்யும் நிறுவனத்தின் ஆடையில்தான் இருந்தார். வேலை முடித்துவிட்டு சென்று குடித்துவிட்டு வந்திருக்கிறார். துணைக்கு யாரும் இல்லாமல் தனியாக வந்துவிட்டார்.


என்னுடைய பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்தேன்.இரவு வேலையென்பதால் பேருந்தில் சிறிது நேரம் தூங்குவது வழக்கம். ஆனால் இன்று என்னால் முடியாது. மனது முழுதும் அந்த நிகழ்வுதான் இருந்தது. அனேகமாக வண்டலூர்  பாலம் ஏறி இறங்கியதும் விழுந்திருப்பாரோ? பெருங்களத்தூரில் சரியில்லாத குண்டும் குழியுமான  சாலைகளில் தடிமாறி விழுந்திருந்தால்  அங்கு எப்போதும் இருக்கும் வாகன கூட்ட நெரிசலில் என்னவாகியிருப்பார்? அப்படியே விழுந்திருந்தாலும் யாரவது தூக்கிவிட்டிருப்பார்களா? எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வீடு போய்ச் சேர்ந்துவிடுவரா? என்ற எண்ணங்கள் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டே இருந்தன. குறைந்தபட்சம் இவ்வளவு அக்கறை கொள்பவன் அவரிடம் அலைபேசி எண்ணாவது வாங்கியிருக்கலாம். வீடு போய் பத்திரமாக சேர்ந்தார இல்லையா என்பதைத் தெரிந்துவிட்டிருந்தால் இந்த மன உளைச்சல் எனக்குள் இருந்திருக்காது.


இந்நேரம் எங்கு சென்று கொண்டிருப்பார்? ஏதாவதொரு இடத்தில காவல் துறையிடம் மாட்டியிருந்தால் சந்தோசம்தான். அவர்கள் விசாரணை என்கிற பெயரில் நிறுத்திவைத்து காலம் தாழ்த்தி அனுப்புவார்கள். கொஞ்சம் போதை இறங்கியிருக்க வாய்ப்பு இருக்கலாம். கைது செய்து அல்லது அவரது நிலையைப் பார்த்தபிறகு இருந்துவிட்டு காலையில் செல்லுமாறு சொல்லியிருந்தாலும் நிம்மதிதான். அதிகபட்ச வாய்ப்பாகத்  தண்டனை என்ற பெயரில் பணம் மட்டும் வாங்கிவிட்டு அவரை விட்டிருந்தால் எனது மன ஓட்டம் இன்னும் அவரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


வீட்டுக்குத்  தெரியுமா? அவர் இந்த நிலையில் வந்துகொண்டிருக்கிறார் என்று. அந்த முனையில் இருக்கும் மனைவியோ,அம்மாவோ, பிள்ளைகளோ எவ்வளவு பயத்திலும் துன்பத்திலும் இருப்பார்கள். யாரென்று தெரியாத நான்  இவ்வளவு யோசனைகளில் சிக்கித்தவிக்கும் போது அவரின் குடும்பத்தினரின் மனநிலை இன்னும் என்னை கவலைகொள்ளச் செய்தது. பேசாமல் வீட்டில் போய் குடித்திருக்கலாம் அல்லது குடிக்காத நண்பன் ஒருவனைத்  துணைக்கு அழைத்து வந்திருக்கலாம்.


பேருந்து பயணம் முழுதும் அவரின் பயண முடிவுதான் என்னை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. சரியாக நாற்பது நிமிடங்கள் கடந்திருக்கும். இந்நேரம் அவர் சரியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லமல் சென்றிருந்தால் அவர் வீட்டுக்கு அருகில் சென்றிருக்கலாம். அல்லது நான் முதலில் நினைத்தது போல வண்டலூர் பாலத்துக்கு அடியிலேயே விழுந்து கிடக்கலாம். எதுவுமே இதுதானென்று என்னால் முழுமையாக யூகிக்க முடியவில்லை. நல்லவிதமாக நேர்மறையான எண்ணமாக இருக்கட்டுமே என்று கண்டிப்பாக வீடுபோய் சேர்ந்துவிடுவார் என்று மனதை சமாதானம் செய்ய முயன்றாலும், அப்படியில்லாமல் இப்படி ஆகியிருக்கலாமே என்று மனது பல்வேறு கற்பனை நிகழ்வுகளைக்  கட்டவிழ்த்து விடுகிறது. அதில் அவரின் மரணமும் அடங்கும். இறந்துபோனால் நாளைக்கு செய்த்தித்தாள், தொலைக்காட்சி செய்திகள் என ஏதாவதொரு இடத்தில் அவரின் விவரம் வரும் என்ற எல்லை வரை சிந்தனைகள்  போய்க்  கொண்டிருந்தது. நான் ஏன் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன்? ஒருவேளை அவரின் மேல் உள்ள அக்கறை என்ற  பெயரில் மனது வக்கிர எண்ணங்களால் சந்தோசம் அடைகின்றதோ?  அல்லது உண்மையில் அவரின் நிலைமையைப் பார்த்ததில் எனக்குள் வந்த இரக்கமா? எதையும் சரியாக முடிவெடுக்க முடியவில்லை. 

பேருந்து பயணம் முடிந்து நிறுவனத்தின் வேலையில் எட்டு மணிநேரம் மூழ்கிப்போனேன். வேலையில் இருந்த பிரச்சினையில் அந்த மனிதரின் நினைவுகள் சுத்தமாக மனதில் இல்லாமல் இருந்தது. மனதுக்கு தேவையானது ஏதாவதொரு விசயம். மனமானது வெறுமனே இருக்க விரும்பாது. எதையாவது ஒன்றை சிந்தித்தோ, எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் எண்ணங்களும், சிந்தனைகளும் மாறலாம், ஆனால் ஒருபோதும் வெறுமனே அமைதி கொள்ளாது. என்னதான் தியானம் செய்து மனதை ஒருமுகபடுத்தினாலும் அதுவும் ஒருவிதமான கட்டுபடுத்தும் முறைதான். தியானம் முடிந்ததும் மெல்ல மெல்ல மீண்டெழும் அதே எண்ணங்களை தடுக்க முடியாது. நீண்ட பயிற்சியில் நீங்கள் சொல்வதை மனது கேக்கும் நேரம் குறையுமே தவிர உங்களால் ஒரு வெறுமையான மனதை உருவாக்கிக்கொள்ள முடியாது. 


வேலை முடிந்து திரும்பி பேருந்தில் வரும்போதுகூட வேறு எண்ணங்கள் இருந்ததே தவிர அவரைப்பற்றிய விஷயங்கள் எதுவுமில்லை. பேருந்தில் இறங்கியதும் அந்த இடம் கண்ணில் பட்டது. அங்கிருந்த மண்ணில் கால்தடம், வண்டி விழுந்திருந்த கோடுகள் என சட்டென எல்லாமே நினைவுக்குள் புகுந்து கொண்டது. மீண்டும் அதே கேள்விகள், அவருக்கு என்னவாகியிருக்கும்? இப்போது உயிரோடு இருப்பாரா? வீடுபோய் சேர்ந்திருப்பாரா? என்ற எண்ணங்கள். ஆனால் இரவில் இருந்த வீரியம் இப்போதில்லை. ஒரு ஓரத்தில் லேசாக வந்து போவதுபோல உணர்வு. உண்மையில் அவருக்கு என்ன ஆகியிருக்கும் என்ற ஆர்வம் கொஞ்சம் குறைந்தேதான் இருந்தது. ஒருகட்டத்தில் நேற்று ஏன் அவரைப்பற்றி அவ்வளவு கவலைப்பட்டோம்? அவர் செய்தது தவறுதானே? குடித்துவிட்டு ஏன் வண்டி ஓட்டுகிறார்? அதற்கான தண்டனையை அவர்தானே  அனுபவிக்க வேண்டும். அதற்குபோய் ஏன் நான் அவ்வளவு யோசித்தேன். இந்நேரம் அவர் எப்படியிருந்தாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விகளெல்லாம் ஏன் நேற்றே வரவில்லை? வந்திருந்தால் மன நிம்மதி இருந்திருக்குமே?.


நடந்து வந்ததில் மளிகைக்கடை வந்திருந்தது. மனைவி குறுஞ்செய்தியில்  அனுப்பியிருந்த பொருள்களை வாங்கவேண்டும். பணம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்கத் தொடங்கினேன். இப்போது மனதில் வேறு எண்ணங்கள் குடியேறின. அந்த மனிதர் உலகில் வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் என் மனதில் இருந்து முழுவதும் விலகத்தொடங்கியிருந்தார். கொஞ்ச நாள்களில் அப்படியொரு சம்பவம் நடந்ததே நினைவில் இல்லாமல் போகலாம். என்றாவது ஒருநாள் அதே மனிதர் மீண்டும் அதே இடத்தில் வந்து விழுந்து மீண்டும் எண்ணங்களை கிளரிவிடலாம். அதுவரை அவர் என்னுள் இறந்துபோய்விடுகிறார்.


இன்றைய நாளைக்கான எண்ணங்களும்,சிந்தனைகளும் மனதுக்குள் சூழ்ந்தன. மனது விசித்திரமானதுதான். மறதி என்ற மருந்தால் மனது  ஒவ்வொரு வினாடியும் தன்னை புத்தம் புதியதாகப்  புதுப்பித்துக்கொண்டு இருப்பதை இப்போதைக்கு என் மனதில் நினைத்து வியந்து கொண்டிருக்கிறேன்.