விடையறியா மனது.

ஐந்து மணிக்கெல்லாம் பால் ஊற்றுபவர் வந்துவிட்டுப்  போய்விடுவார். அவர் கண்ணில் படவில்லையென்றால் அதற்குப்பிறகுதான் நடந்திருக்க வேண்டும். உணவகத்தோடு டீ கடையும் சேர்ந்து இருக்கும், அங்கு  காலை உணவு மட்டுமே கிடைக்கும்.  மற்ற நேரங்களில் டீயும், வடையும்தான். காலையில் வேலை விசயமாக  வேறு ஊர்களுக்குச்  செல்பவர்கள் வந்து சாப்பிடுவார்கள் என்பதால்  சீக்கிரமே எழுந்து வேலைகளைப்  பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவருக்குத்  தோதுவாக  பால்காரரும் அந்தக்  கடைக்கு முதலில்  வந்து பாலை ஊற்றிவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்வார். அந்த வழியாகச் சென்ற மற்றொருவர்தான் முதலில் பார்த்துவிட்டு நகந்தவர், பின் சந்தேகத்தில் உற்றுப்பார்க்க விசயம் தெரிய ஆரம்பித்தது. முதலில் வீட்டுக்குப் போகாமல் ஏன் இங்கே இப்படி படுத்திருக்கிறாள்? என்று நினைத்தவர், படுத்திருந்த நிலையைப் பார்த்ததும்தான் அருகில் சென்று திரும்பவும் சோதித்திருக்கிறார். கடைக்காரரும் வீட்டுக்குள் வேலையாக இருந்தேன்  எந்தவொரு சத்தமும் கேட்கவில்லையே என்ற கருத்தை அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

மணி சரியாக ஆறு இருக்கும், சிறிய கூட்டம் கூடியிருந்தது. எல்லோரும் வேண்டுமென்றே பார்க்கவந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒருவித வேலை இருந்தது. அங்கிருந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அந்தச் சாலைக்கு வந்துதான் செல்ல வேண்டும்.தூத்துக்குடியில் இருந்து மதுரைக்குச் செல்லும் புறவழிச்சாலையில் ஓரிடம். உள்ளூர் பேருந்தாகிலும், வெளியூர்களுக்கு நீண்டதூரம் செல்லும் பேருந்துக்கும் எல்லோரும் வரவேண்டிய இடம் அந்தச் சாலையின் சந்திப்பே. போவதற்கு ஒன்று,வருவதற்கு ஒன்றென மொத்தமாக இரண்டுவழி சாலையில் இருபக்கமும் சொல்லிவைத்தாற்போல்  சரிசமமாகக் கடைகள் இருக்க, சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த புளிய மரங்கள் ஒரு இடத்தில் கூட வெயிலை விடமாட்டேன் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தன. எப்போதும் நிழல் சூழ்ந்து குளிர்ச்சியாக இருக்கும் அங்கு மக்கள் கூட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்து மாலை ஏழு மணிக்கெல்லாம் வெறிச்சோடி விடும். ஒரு கிராமாத்தானுக்கு ஆறுமணிக்கு மேல் வெளியில் அதிகமாக வேலை இருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் விசயமது. அவசர வேலையின்றி அந்த இடத்தில் இரவில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இருக்காது. கடை வைத்திருப்பவர்களும் உள்ளே அடங்கியிருப்பார்கள். புளிய மரங்கள் மட்டுமே காற்றுடன் பேசி கொண்டிருக்கும் இரவின் தனிமையைப் போக்க அதற்கும் வேறு வழியில்லை.

கூட்டத்தின் நடுவே கிடந்தாள். விலகியிருந்த ஆடையை எடுத்து உடல் முழுதும் நன்றாக மூடியிருந்தார்கள். இடதுபக்கம் சரிந்து குப்புறப் படுத்துக் கிடந்தாள். உடலில் வேறெந்த அசைவும் இல்லை. வாயிலிருந்து ரத்தம் வடிந்து நின்றதில், உறைந்த ரத்தம் வாய்க்கும் மண்ணுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருந்தது. கால்கள் இழுத்து மண்ணில் கோடுகள் தெரிந்ததால் இறக்கும் முன் துடித்திருக்க வேண்டும். அவளது தோள்பட்டையில் மாட்டியிருக்கும் மூட்டை அவளின் முதுகுக்குப் பின்புறம் கையில் இருந்து கழன்று விழாமல் சரிந்து இருந்தது. அவளுடைய மற்றொரு முக்கியமான சொத்தாகப் பிளாஸ்டிக் பொம்மையொன்றை ஒரு மொழ நீளத்திற்கு எப்போதுமே வைத்திருப்பாள். அப்போதைய பிரச்சினையில் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.  கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் அங்கிருந்த  ஒருவனை நோக்கி முகம் தெரிகிற மாதிரி பிரட்டி போட்டு உயிர் இருக்கிறதா பார் என்றார். பார்த்தான். இல்லை.  உடலில் வேறெங்கும் பெரிய அளவில் அடியில்லை. மண்டையில் அடித்து வாயில் ரத்தம் வந்திருந்தது. தரைக்கும் அவளது உடலுக்கும் சிக்கலான இடைவெளியில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்கள் இப்போது மிகச் சுதந்திரமாக அவளின் முகத்தில்  சுற்றி வந்தன.

எப்போது நடந்திருக்கும்? யார் அடித்துப் போட்டுவிட்டுப்போனார்கள்? எப்படி இறந்தாள்? என்ற கேள்விகளுக்கு யாரிடத்திலும் பதில் இல்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இருந்தது. காரணம் அவள் யாரென்று அங்குள்ளவர்கள் அனைவருக்குமே  தெரியும். போலீசுக்குச் சொன்னால் தூக்கிக் கொண்டுபோய் என்ன செய்வார்கள் என்பதையும் நன்கறிவார்கள்.  அடித்துபோட்டவன் வண்டியை நிறுத்தாமல் போய்விட்டான், யாரும் அதைப் பார்க்கவும் இல்லை. அது தெரிந்திருந்தாலாவது காவல்துறை உதவி தேவைப்படும்.  குறைந்தது விபத்துக்குத் தண்டனை கிடைத்த நிம்மதியாவது கிட்டும்.  யாருக்கு?

ஆம் யாருக்கு? அவளுக்குச் சொந்தமென்று யாருமில்லை பல வருடங்களாகத் தன் குழந்தையென்று கையில் சுமந்து கொண்டிருந்த பொம்மையைத் தவிர.  இலங்கையிலிருந்து வந்திருந்த அகதிகளில் அவளும் ஒருத்தி. முகாமில் தங்கியிருந்த அகதிகள் தன் உழைப்பால் அந்த இடத்தையும் தங்களது வாழ்வையும் மேன்படுத்தியிருந்த அதே வேளையில் முடியாத இவள், சாலை சந்திப்பில் ஒருவேளை உணவுக்காகச் சுற்றிக்கொண்டிருந்தாள்.  அந்த இடத்திற்கும் அகதிகள் முகாமிற்கும் இரண்டு கி.மீ. தொலைவு இருக்கும்.  தினமும் நடந்துதான் வருவாள் போவாள் அதுவும் அந்தப் பொம்மையை ஒரு கையால் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டே.  ஆச்சர்யமான விஷயம் அவள் சாலை விதிகளை ஒரு போதும் மீறியதில்லை.  வரும்போது இடப்பக்கமும்,போகும்போது வலது பக்கமாகவே போவாள்.  அப்படி இடதுபக்கத்திலிருந்து  வலது பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு வரும்போதுதான் வாகனத்தால் அடித்துத் தூக்கி எறியப்பட்டு இறந்திருந்தாள்.

அங்கிருந்த கிராமங்களில் உள்ள குழந்தைகள் சரியாய் சாப்பிட மறுக்கும் வேளைகளில், தாய்மார்கள் பயம்காட்ட உபோயோகிப்பது இவளைத்தான். காரணம் இவளது உருவமும்,உடையும்.  அவள் அணிந்திருப்பது இந்த உடைதான் என்பதை யாராலும் சரியாகச் சொல்லிவிட முடியாது. ஆனால் கண்டிப்பாக மூன்றுக்கும் மேலான உடையைச் சம்பந்தமில்லாமல் தனது உடலில் உடுத்தியிருப்பாள் அழுக்கு படிந்த நிலையில்.  சீவாத தலையும் அவளது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மூட்டையும் எந்தவொரு சிறு குழந்தைக்கும் எளிதில் பயத்தை வரவைக்கத்தான் செய்யும்.  அவளாக எந்தக் குழந்தையையும் நேரில் பார்த்துப் பயம் காட்டியதில்லை.  அவளுக்குக் குழந்தையென்றால் அவ்வளவு உயிர்.  ஆசையில் அழகான குழந்தைகளைப் பார்த்தால்  சிரித்துவிட்டுப் போவாளே தவிரப் பயம்காட்டி மிரள வைத்ததில்லை.

தனது குழந்தையின் மரணமே அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தது. எந்த நிலைக்கு? மற்றவர்கள் கிறுக்கி,பைத்தியம் என்று சொல்லும் நிலைக்கு.  அவளுக்கு அதெல்லாம் தெரியுமா? புரியுமா? மனநிலை பாதித்தவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வதென்பது அவ்வளவு சாதாரணக் காரியமொன்றுமில்லை.  சரி மனநிலை சரியாக இருக்கும் ஒருவரின் எண்ணங்களை மட்டும் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமா? இல்லை முடியாது. அவளின் செய்கையை வைத்து அவளைப் பைத்தியம் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அவள் செய்யும் அன்றாட வேலைகள்தான் அவைகள்.  அதற்கு  மனிதர்கள் பைத்தியம் என்று பெயர்வைத்தால் அவளுக்கென்ன கவலை? அவளுக்கு ஒருபோதும் கவலையென்று ஒன்று இருந்ததேதில்லை. வேகமாக வேலைக்குப் போகவேண்டும்? அவசரமாகக் கடைக்குப் போகவேண்டும் இல்லையென்றால் கடையை மூடிவிடுவார்கள், ஆஸ்பத்திரி மூடிவிடுவார்கள் அதற்குள் போகவேண்டும், இத்தனை மணிக்கு இந்தப் பேருந்து வரும் நேரத்திற்குப் போகவேண்டும்.  இவ்வளவு மொய் செய்ய வேண்டும், இதை இவ்வளவு விலைக்கு விற்க வேண்டும், வாங்க வேண்டும்,மதியம் ஆகிவிட்டது சாப்பிட வேண்டும். காலையில் குளிக்க வேண்டும் என்ற எதைப் பற்றியும் அவள் கவலைப்பட்டதேயில்லை.

கவலைப்படுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்ற உன்னத மனநிலைக்கு எப்போதோ வந்திருந்தாள். இந்த மனநிலையானது நன்றாக இருக்கும் மனிதர்களுக்குக் கூட இன்னும் வந்திருக்கவில்லை. அவளின் குழந்தை உடல் சிதறி தனது கணவனோடு சேர்ந்து இறந்தபோது அவள் படாத கவலையா வேறு யாரும் பட்டிருக்கப் போகிறார்கள்? என்ன கவலைப் பட்டும் குண்டுவெடிப்பில் சிதறிக்கிடந்த உடல்களை அவளால் ஒன்றிணைத்து உயிர் தர முடிந்ததா? எவ்வளவு அழுது தீர்த்திருப்பாள்? கவலைக்கு ஒரு முடிவென்றிருந்தால் அதையெல்லாம் அவள் தாண்டியல்லவா போயிருக்க வேண்டும்.  அப்படியிருந்தும் எந்தவொரு பயனுமில்லை என்பதைத் தெரிந்துதான் கவலையென்ற உணர்வே அவளிடத்திலிருந்து விலகியிருந்தது அல்லது விலக்கியிருந்தாள்.

அங்கும் இங்கும் வெடித்துச் சிதறிக்கிடந்த உறுப்புக்குவியல்களில் தனக்கான ஒன்றைத் தேடி எடுப்பதென்பது எவ்வளவு அசாதாரணமான விசயம்.  அதையும் செய்தாள். ஒருகட்டத்தில் கண்ணீர் நின்றுபோனது.  கீழே கிடந்த சிதறல்கள் ஒவ்வொன்றும் சம்மட்டியால் அவளது மனதின் எண்ணங்களை அடித்து அப்போதிருந்த அவளின் நிலையை மாற்றின.  அவளுடைய  உலகின் பார்வை அப்படியே தலைகீழாய் மாறிப்போனது.  இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை.  மனதும்கூட முற்றிலுமாக மாறியிருந்தது.  முன்பிருந்த அவளில்லை என்பதை  மனதில் தோன்றும் புதிய எண்ணங்களே அவளுக்கு உணர்த்தின.  ஒரு சூனியப்  பிரதேசமாய் மாறியிருந்தது.  அதில் சுகம்,துக்கம் என எல்லாமே சமமாக நின்றன.  எல்லாம் முடிந்த பிறகு யாருடனும் பேசவில்லை.  குழந்தையின் நினைப்பு இன்னும் மனதில் ரணமாய் அமிழ்ந்திருந்தது. என்ன அடி அடித்தும் அதுமட்டும் மனதை விட்டு விலகவில்லை.  அவள் ஒரு தாய். கருவில் சுமந்ததிலிருந்து மனதிலும் பாசம்வைத்து  சுமந்தவள். அங்கு ஓரமாய்க் கிடந்த உயிரான மகள் விளையாடி மகிழ்ந்த பொம்மையை எடுத்துக் கொஞ்சி  தனது மனதின் வேதனைகளைத்  தீத்துக்கொண்டவள் பின்பு அதையே தனது மகளாகப் பாவிக்க ஆரம்பித்திருந்தாள்.  பாப்பாவுக்குப் பசிக்கும் உணவு கொடென்று பக்கத்து வீட்டில் கேட்டபோதுதான் அவளிடமிருந்த மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியவந்தது.  அவளுக்கென்று ஒரு தனியுலகம். அங்கு அவளும் அவளுடைய குழந்தையும் மட்டும்தான்.  வேறுயாருக்கும் இடமில்லையென்பதில் உறுதியாக இருந்தாள்.

தனது கணவனையும்,மகளையும் கொன்ற அந்த நிலத்தில் வாழ்வதில்லை என்ற முடிவோடு கிளம்பியவள், அலைந்து திரிந்து வந்து சேர்ந்த கடைசி இடம்தான் அகதிகள் முகாம். இந்நாள்வரையில்  அவளின் இரண்டாவது குழந்தையைக் கைவிடவில்லை. ஏற்கனவே ஒரு குழந்தையை எப்படி இழந்தாளென்பது அவளுக்குத் தெரியும். அதனால் ஒருபோதும் அந்தக் குழந்தையைக் கீழே இறக்கி வைப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தாள். மற்ற மனிதர்களைப் பொறுத்தவரை அவள் மனநிலை பாதித்தவள். ஆனால் அவளைப் பொறுத்தவரையில்  கொலைகாரத்  தேசத்தை வெறுத்து ஒதுக்கி வேண்டாமென்று மற்றொரு இடத்திற்கு வந்திருக்கிறாள்.  பாவிகளான  மனிதர்களின்மீதும் வெறுப்புதான், இருந்தாலும் அந்த வெறுப்பை அவளால் எவ்வளவு காட்டமுடியுமோ அவ்வளவு காட்டியே வந்தாள். யாருடனும் பேசமாட்டாள். பார்வையும் ஒருவித வெறுப்பின் தன்மையிலியே இருக்கும்.

தன்னைத்தானே அளித்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லாமல், உயிர்வாழ இந்தவொரு வாழ்க்கை நிலையைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.  தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதென்பது அவள் மனதைப்பொறுத்தவரை இயலாத ஒன்று. அப்படிச் செய்தால் அவளுக்கும், அவளின் குடும்பத்தைக் கொன்றவர்களுக்கும்  என்ன வித்தியாசம் இருக்கப்போகிறதென்பது அவளுடைய எண்ணம். அவர்களைப்போல கொலைகாரியாக மாற ஒருபோதும் இதுவரை முயற்சித்தது இல்லை. வயிற்றில் எரியும் அடுப்புமட்டும் இல்லையென்றால், எங்கோ  மூலையில் ஒரு உயிராக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போயிருப்பாள். எரிகின்ற அடுப்புக்கு விறகுக்காக இத்தனை பாடு படவேண்டியதிருந்தது.  தினமும் காலையில் எழுந்து மெதுவாக நடந்து வந்து சேர்பவள், முதலாவதாகத் திறந்திருக்கும் டீ கடையில் டீ குடித்துவிட்டுதான் மற்றவேலை.  ஒருநாளும் காசு கொடுக்காமல் எந்தவொரு பொருளையும் கடைகளிலிருந்து வாங்கியதில்லை.  ஐந்து ரூபாய்க்கு ஒரு ரூபாய் கொடுப்பாளே தவிர இலவசமாக வாங்கியதில்லை.  அந்தக் காசு அங்கு தினந்தோறும் வந்துசெல்பவர்கள், கூடியிருப்பவர்களிடம் பாப்பாவுக்குப் பசிக்கிறது என்ற இருவார்த்தையில் கிடைத்தது. அதோடு மட்டுமில்லாமல் சாலையில் தாறுமாறாக ஏறி நிற்கும் மனிதர்களை விலகு விலகு என்று ஒரு கையை ஆட்டி அப்புறப்படுத்துவாள்.  யாரும் சாலையில் அடிபட்டு விபத்துக்குள்ளாகக் கூடாது என்றவொரு எண்ணம். அவளைப்பொறுத்தவரையில் அது அவள் செய்யும் வேலையும் கூட. இதற்காகவாவது இந்த மனிதர்கள் எனக்குக் கேட்கும்போது காசு தரவேண்டும் என்றெண்ணியிருந்தாள். மகளைப் பிரித்த இவர்களிடமிருந்து காசை வாங்குவதில் அவளுக்கென்று எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இருக்கவில்லை. இது அவர்களின் கடமை.  காசு கேட்கும்போது கூட ஒருவித தைரியம் கலந்த திமிர் அவளிடத்தில் இருக்கும். ஒரு சில நேரத்தில் அண்ணா காசு என்றும் கேட்பாள்.  இதைத்தவிர அவள் வேறேதும் யாரிடமும் பேசியதில்லை.

அவளது மனதின் எண்ணங்களில் , அவளும் குழந்தையும் இந்த உலகிலிருந்து மாறுபட்டவர்கள். இதுவொரு பைத்தியக்கார உலகம்.  ஏதாவதொரு கரணம் சொல்லி ஒரு குடும்பத்தைக்கூடச் சிதறடித்துக் கொல்லக்கூடியது.  இதனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்பதின் வெளிப்பாடே  இத்தகைய நடவடிக்கைகள். அதனை இந்த மனிதர்கள் பைத்தியம் என்று சொன்னால் அதனால் அவளுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை. அவளுக்குத் துணையாக அந்தப் பொம்மை குழந்தை எப்போதுமே இருந்தது.  தனியாகப் புளியமரத்தின் நிழலில் உட்கார்ந்து அதனைக் கொஞ்சுவாள் ஆனால் சத்தம் வெளியில் கேட்காது. டீ கொடுப்பாள்.  பிஸ்கேட் துண்டுகள்,சேவு,மிச்சர்  உட்பட  பொம்மையைப் பொத்திவைத்திருந்த துணிக்குள் சிதறிக்கிடக்கும். யாரவது பாப்பாவைக் காட்டச் சொன்னால் கொஞ்சமாகத் துணியை விலக்கி அந்தப் பிளாஸ்டிக் பொம்மையின் முகத்தை மட்டும் காட்டுவாள். பார்ப்பவர்கள் இவளைப் பார்த்துச் சரியான பைத்தியக்காரி என்றெண்ணத்தில் சிரிக்க அவளும் பதிலுக்குச் சிரித்து வைப்பாள்.  ஆனால் அவள் சிரிப்பின் அர்த்தம் அங்குள்ளவர்களுக்கு மர்மமாக விளங்காமலே இருந்தது.

பக்கத்து ஊரில் உள்ள வெட்டியானுக்குச் சொல்லியனுப்பினார்கள்.  எல்லாம் தயாரானதும் தூக்கிக் கொண்டுபோய் எரித்துவிடுவதாக முடிவு. அதற்குள் அங்கு வந்துசெல்பவர்கள் பாதிப்பேர் அவளைக் கண்டு சென்றிருந்தனர்.  பைத்தியம் செத்துப்போச்சு என்பதே அவர்களின் மனதின் வெளிப்பாடு. அவர்களைப்பொறுத்தவரை அவள் செத்தது ஒரு நிகழ்வு.  ஒரு சிலர் உண்மையாகவே வருத்தப்பட்டார்கள்.  எங்கிருந்தோ தப்பித்து இங்குவந்து விபத்தில் செத்துவிட்டாளே என்றவொரு வருத்தம். ஆனால் ஒருவரும் தூக்கியெறியப்பட்ட அந்தப் பொம்மை குழந்தையைக் கண்டுகொள்ளவேயில்லை.  அவளின் இறுதி மூச்சுவரை தன்னருகில் அந்தக் குழந்தை இல்லாததைக் கண்டு  அதை  அவள் தேடியிருக்கக் கூடும்.  ஒருவேளை அந்தப் பொம்மை விழுந்த இடம் அவள் கண்ணில் பட்டு அதனை நோக்கி நகர முற்பட்டு தோல்வியோடு இறந்திருக்காலம்.  உண்மையான மகளை தன் கண்முன் இழந்தவளுக்கு  பொம்மையொன்றும்  அந்தளவுக்கு மீண்டுமொரு துக்கத்தை ஏற்படுத்தியிருக்காதுதான். இருந்தாலும் இறக்கும்போது பொம்மை அவளுடன் இருந்திருந்தால் நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு வேறொரு உலகத்தில் நுழைந்திருப்பாள்.

அவளுக்கான ஒருவிடுதலை.  மக்கள் அவளின் மீது வைத்திருந்த ஒரு பிம்பத்துக்கும், இவள் உலகத்தின்மீது வைத்திருந்த ஒரு அனுமானத்திற்கும் சேர்ந்ததான விடுதலை.  இரண்டுமே சரியானதில்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாளா? என்பது பற்றி  தெரியாது.  தூக்கிச் செல்ல வண்டி வந்தது.  வேட்டியை விரித்து அதில் புரட்டிப் போட்டுத் தூக்கி வைத்தார்கள்.  இரண்டு மாலைகள் அவளது உடலில் விழுந்திருந்தது.  யார் போட்டதென்பது அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  இது அவளுக்கான மரியாதையா? இல்லை சாத்திர சம்பிரதாயமா?.  வண்டி நகர்ந்து சுடுகாட்டை அடைந்ததும் இறக்கி வைத்தார்கள்.  மொத்தமாகப் பத்துபேர்களுக்குள்தான் இருப்பார்கள். விசயம் தெரிந்து முகாமில் இருந்து வந்தவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.  தூக்கி வைத்து மற்ற ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்தார்கள்.

அவளிடமிருந்து பிரிக்கப்பட்டவைகளில்  மூட்டை மட்டும் தனியாக இருந்தது.  அதைத் திறந்து பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.  அங்கிருந்த பெரியவர்களில் சிலர் வெட்டியானுக்குச் சில ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார்கள்.  எரிய ஆரம்பித்திருந்தது. அழுக்குச் சட்டைகள் முதலிலும், குளிர்ந்த உடல்,அப்புறம் எலும்பு என எல்லாமே எரியத் தொடங்கியிருந்தது.  அந்த மனம் எரியுமா? அதுதான் எப்போதே மரத்து உணர்ச்சிகளற்ற ஒன்றாக மாறிப்போனதே.  அதனால் எரிந்தாலும்,கனலில் வெந்தாலும் வேதனையை அனுபவிக்கப்போவதில்லை.  ஒருவேளை எங்காவது காற்றில் கலந்திருக்கும் அவளுடைய ஆத்மாவோ மனமோ அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவள் விட்டுச் சென்ற அந்தப் பொம்மை சாலையோரத்தில் துணி போர்த்தியபடி இன்னும் அப்படியே கிடந்தது.  இனி யாரும் அதற்கு ரொட்டியும், பாலும் தரப்போவதில்லை.  வெயிலிலும்,மழையிலும் காய்ந்து மக்கிப்போகலாம். ஏதவதொரு ஏழைக்  குழந்தை,  நாட்கள் கழிந்தபின் காற்றில் உருண்டு வரும் அந்தப் பொம்மையை எடுத்து விளையாடி உயிர் கொடுக்கலாம்.

இப்போது அவள் பிரவேசித்திருப்பது வேறொரு உலகம்.  அந்த உலகத்தில் அவள் இழந்த  குழந்தையும்,கணவனும் இவளின் வருகைக்கு எதிர்பார்த்திருந்திருப்பார்கள்.  சிதறிக்கிடந்த குழந்தையை வாரி அணைக்கமுடியாத அவளின் ஏக்கம் இப்போது தீர்ந்திருக்கும். இவ்வளவு நாள் எங்கம்மா போனே? என்ற குழந்தையின் கேள்விக்கான பதிலில்தான் உலக மக்களின் யோக்கியதை இருக்கிறது.  அதற்கான விடை அவளிடமிருந்து வந்தாலும் இந்த உலகம் திருந்தவா போகிறது.  எல்லாவற்றிக்கும் விடையை தன்னுள் வைத்துக்கொண்டுதானே  தனது பயணத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

கவலையில்லாத அந்த மனம் சாந்தி  அடையும் அதே வேளையில், இனி இந்தச் சாலையை விலகு விலகு என்று சொல்லி ஒழுங்குபடுத்துவது யாரென்ற எண்ணத்திலிருந்து விடுபற்றிருக்குமா? தெரியவில்லை. இனியொரு பைத்தியக்காரியை யாரும் உருவாக்காமல் இருக்கவேண்டும்.  அதுதான் மனநிலையில் சரியாக இருப்பதுபோல் இருக்கும் மனிதர்களுக்கும் நல்லது.  இவளாவது தனது செய்கையின் மூலம் யார் மனநிலை பாதித்தவர்கள் என்பதை உணர்த்தினாள், இன்னொருமுறை மனிதர்கள் தங்களின் சூழ்நிலையினால் உருவாக்குபவள் நேரடியாகவே உங்களின் மனதிற்கு எதிராகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தால் கண்டிப்பாக விடையிருக்காது.  அந்த விடையை நீங்கள் தேட ஆரம்பித்தீர்கள் என்றால் இந்த உலகைப் பொறுத்தவரையில் நீங்களும் மனநிலை பாதித்தவர்கள்தான்.

அந்த இரண்டு மாலைகளை  போட்டவர்களும், இறுதிச் சடங்கைச் செய்யப் பணம் கொடுத்தவர்களும் இதனை உணர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்.

கடைசி வரை அந்தப் பைத்தியக்காரியின் மனதில் என்னதான் இருந்தது? என்ற கேள்வி, சுடுகாட்டில் இறுதியாகத் தூக்கி எறியப்பட்டு அருகிலிருந்த கருவேல மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவளது அழுக்கு மூட்டையைப் போலவே ஒவ்வொருவரின் மனதிலும் தொங்கி நிற்கும்.  அதே மூட்டைதான் பைத்தியக்காரி இந்த உலகத்துக்கு விட்டுச்சென்ற ஒரே சொத்தும், விடையும் கூட.

விருந்தாளி - ஆல்பெர் காம்யு

தனிமை விரும்பி ஒருவனுக்கு தனது அறையில் மற்றொருவன் இருந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் நன்கறிவேன். ஒரு மகத்தான ஆசிரியர் எதிர்பாராத விதமாக ஏற்றுக்கொள்ளும் வேலையாக வருகிறான் ஒரு கொலைக் குற்றவாளி. முதலில் அந்த ஆசிரியர் அவனை  குற்றவாளியாக பார்க்கும் முன்பே அவனிடத்தில் இருக்கும் நல்லெண்ணங்களை மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை அவனொரு சாதாரண மனிதன் அவ்வளவே.

உத்தரவின் படி அவனை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பொறுப்பு அவருடையது. ஆனால் அவனுக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வரும் நண்பனான காவலாளியிடம் நான் ஒப்படைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்னர் தன் மனதால் வருத்தம் கொள்ளும்போது அவரின் நேர்மை வெளிப்படுகிறது. இரவில் அவரோடு தங்கும் அந்த கைதிக்கு எல்லா உதவிகளையும் சாதாரண மனிதனாக நினைத்துச் செய்கிறார். மறுநாள் காலையில் அதே மனிதாபிமானத்தோடு ஒரு முடிவையும் எடுக்கிறார். அவனுக்குத் தேவையான உணவோடு புறப்படும் அவர்கள் இருப்பிடம் தாண்டி வெகு தூரம் சென்ற பிறகு அவனை நிறுத்தி இரண்டு விருப்பங்களை அவனுக்குத் தருகிறார். ஒன்றாவது அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவின் படி காவல் நிலையம் இருக்கும் ஊருக்குப் போகலாம். மற்றொன்று தூரத்தில் இருக்கும் அரேபியர்கள் வசிக்கும் ஒரு ஊருக்குப் போகலாம். இவர் அவனிடத்தில் கண்டிப்பாக இங்குதான் போகவேண்டுமென்பதை ஒரு வார்த்தையிலும் வெளிப்படுத்தவில்லை.

அவரது இந்தச் செயலுக்கு அவர் மனது படும்பாட்டை சொல்வதில்தான் இந்தக் கதை வெற்றிபெறுகிறது. அவனை விட்டுப் பிரிய மனதில்லாமல் கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்க்கும்போது அந்த அரேபியன் அதே இடத்தில் அப்படியே அசையாமல் நிற்கிறான். இன்னும் கொஞ்ச தூரம் சென்று திரும்பி பார்க்கும்போது அவன் காவல்நிலையம் இருக்கும் ஊருக்கு நடப்பது அவரது கண்ணில் படும்.

அவர் நடத்திய விதம்,பேசிய வார்த்தைகள் அந்த கொலைகாரனை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்பதை காம்யு அவரது பாணியில் சொல்லியிருப்பது அருமை. எப்போதுமே காம்யுவின் எழுத்தில் இந்த விசயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான எழுத்தும், கதையும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

(இந்தக் கதையில் நான் சொல்லாத கடைசி பத்தி ஒன்று இருக்கிறது. அதைத்  தவிர்த்த கதையை   மட்டுமே நான் இங்கு சொல்லியிருக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அதனையும் சேர்த்து வாசித்துக்கொள்ளுங்கள்)

தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் - தமிழில் க.நா.சு.

மீண்டுமொரு மொழிபெயர்ப்பு. இதை நாவல் என்பதா? இல்லை சிறுகதையா? என்பதை அவரவரின் மனதின் ரசனைக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. மயிலிறகால் வருடுவது போன்றொரு எழுத்து. மிக எளிமையான எழுத்துநடை.

சிறு வயதில் ஊருக்குள் கிறிஸ்துவ மதத்தினர் பிரசங்கம் செய்ய வருவார்கள்.அப்போதைக்கு அரைகிளாஸ் எனப்படும் பால்வாடி பள்ளியை அவர்கள் வைத்து நடத்திக்கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் படித்தேன். படித்தேன் என்பதைவிட உணவு உண்டுவிட்டு விளையாட்டு முடிந்தவுடன் தூக்கம் பின்பு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு சொல்லிக் கொடுப்பவர்களை அக்கா என்றுதான் அழைப்போம். அவர்கள் கன்னியாஸ்திரிகள்.அன்பை அப்படியே போதிப்பவர்கள். இப்போது இருப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வயதில் நடந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளையும் சமாளித்து கவனித்துக்கொண்டது அப்போது அவரது முகத்தில் ஒரு சலிப்போ கோபமோ நான் கண்டதே இல்லை.

இடையே கதை சொல்லுவார்கள். பெரும்பாலும் கிறிஸ்துவ நீதிக்கதைகள்தான். அதிலும் அன்புதான் இருக்கும். மிகச் சாதாரணமாக நீ அவனை அடித்தால் கடவுள் உன்னை தண்டிப்பார், அப்படி செய்யக்கூடாது. நல்ல பிள்ளையாக இருந்தால் கடவுளின் அன்பு உனக்கு எப்போதும் இருக்கும். இந்த மாதிரியான கதைகள் அந்த வயதுக்கு போதுமானதாக இருந்தது. சில நேரங்களில் பெரிய கதைகளாகவும் இருக்கும். அவர்கள் சொல்லும்விதைத்தான் நானிங்கு சொல்ல வருகிறேன். அந்த வயது மழலைக்கு எப்படி சொன்னால் புரியுமென்பதை நன்றாக உணர்ந்து அந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

மயிலிறகால் வருடுவதுபோல இருந்ததால் சில பிள்ளைகள் தூங்கிவிடுவார்கள். அதற்கும் சளைக்காமல் அவர்களை எழுப்பி தனது கதையைத் தொடர்வார்கள். இறுதியில் சத்தமாக ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ஒரு சில பிள்ளைகள் வாய்க்கு வந்ததை கத்தும். அதிலும் சந்தோசமடைவார்கள்.

அந்த கனமில்லாத மென்மையான கதை சொல்லும் பாணி இந்த எழுத்தில் என்னால் உணரமுடிந்தது. இதுவும் நீதிக்கதைதான். ஆனால் மிக அழகாக எழுதப்பட்ட ஒன்று. அவ்வளவு எளிய நடை, எழுத்தின் மேன்மை என எல்லாமே இந்த எளிய கதையில் இருக்கிறது.

குறைந்த நேரத்தில் வாசித்து மனதுக்கு நிம்மதியும்,இன்பமும் தரக்கூடிய ஒரு எழுத்து.

இறைவன் என்பவன் மிகச் சாதாரணமாவான். அவனிடத்தில் எந்தவொரு பேதமுமில்லை. அவனுக்கு முன்னால் மதபோதகரும்,திருடனும் ஒன்றுதான். சொல்லப்போனால் மதபோதகருக்கு கிட்டாத ஒரு பாக்கியம் திருடனுக்கு இருந்திருக்கிறது. அதைக் காண செல்லும் மதபோதகர் அதிசயித்து இதல்லவா எனக்கு கிடைத்த பாக்கியம் என்றென்னி மண்டியிட்டு சரணடையும் வேளையில் அவருடன் வந்த சீடனின் நம்பிக்கையின்மை தேவனை சாத்தனாக மனதில் என்ன வைத்து அங்கு நடந்துகொண்டிருந்த அதிசயங்களை கன நேரத்தில் மறைந்துபோகச் செய்துவிடுகிறான். தேவனின் மீதுகொண்ட நம்பிக்கை யாருக்கு இருக்குமோ அவர்களுக்கு அந்த தேவவனம் மீண்டும் பூத்து குலுங்கும்.

தேவமலரை பறித்துக் கொண்டுபோய்க் கொடுத்தால் தேவவனத்தில் வாழும் ஒரு திருடனை மக்களோடு சேர்ந்து வாழ சம்மதிக்கும் ஒருவருக்காக,தனது சீடனின் தவற்றால் அழிந்துவரும் தேவ வனத்தின் ஓர் கடைசி பூவை பறிக்க கீழே விழும் அந்த போதகர் அந்த இடத்திலியே மரணத்தை தழுவுகிறார். ஆனால் அவரது கையில் கிழங்குகள் இருக்கின்றன அதனை அவரது தோட்டத்தில் நட்டுவைக்க, அவரால் உயிருக்கு உயிராக வளர்க்கப்பட்ட தோட்டத்தில் எல்லா செடிகளும் அழிந்து விட அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் முந்தைய நாளில் இந்த செடி மட்டும் அமோகமான மலர்களோடு பூத்துக்குழுங்குகிறது. ஆம் அதுதான் தேவமலர். அதனை வைத்து போதகர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி அந்த திருடனை ஊருக்குள் கொண்டுவர சம்மதிக்கிறார்கள். தான் செய்த தவறுக்கு சீடன் அந்த திருடனின் குகையில் போய் வாழ்கிறான் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தவம் செய்து மன்றாடுகிறான்.

எளிய கதையை எளிய நடையில் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். க.நா.சு வின் மொழிபெயர்ப்பில் இந்த மாதிரியான எத்தனை படைப்புகளையும் வாசிக்கலாம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய மிகச்சிறிய நூல்.






உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா

உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா (மொழிபெயர்ப்பு - வின்சென்ட்)
அன்றாட வாழ்வில் இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் வேலைக்குச் சென்று நமது குடும்பத்தையோ அல்லது நமது கனவையோ துரத்திக்கொண்டிருக்கும் நாம் திடீரென்று, சுருண்டு விழுந்து ஏதாவதுவொரு நோயால் படுத்துவிட்டால் அதற்கு அடுத்துவரும் நாட்கள் நமக்கு எப்படியிருக்கும் என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? அப்படி யோசித்தால் அந்த நாட்கள் நீங்கள் நினைத்ததைவிட மிகக் கொடூரமாகவே இருக்குமென்பது என் கருத்து. 

என்னதான் ரத்த உறவுகள் தொடக்கத்தில் உதவிகள் செய்தாலும், ஒருகட்டத்தில் அவர்களின் மனதில் நாம் எங்கோ ஒரு மூலையில் பாரமாக அமைந்துவிட்டால் அங்கேயே தோற்றுப் போய்விடுகிறோம். அதுவும் இந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம். என்னதான் நீங்கள் குடும்பத்துக்கு மாடாய் உழைத்து முன்னேற்றியிருந்தாலும், முடியாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் மனதுக்குள் சிந்தனை மட்டுமே. அதுவும் உங்களைச்சுற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள் என்பதையே மனது அசைபோடும். அது திருப்தி ஏற்படுத்தாத பட்சத்தில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமே.இந்த ஏமாற்றமே உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். துன்பத்தை விடத் துன்பம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்ற பயமே மிகக் கொடுமையானது. 

உலகத்தை எதிர்த்துப் போராட வலுவில்லாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல் மன நிம்மதி. அது கிடைப்பது உங்களின் சுற்றுப்புறத்திலிருந்து. அதுவே கொஞ்சம் சிக்கலாக இருந்துவிட்ட நிலையில் மரணத்தின் வேகம் வேகமாக உங்களை நெருங்காதா என்றே மனம் எண்ணத்தோன்றும். என்னதான் விழுந்து விழுந்து கவனித்தாலும் கதவை மூடின பிறகு அவர்கள் உங்களுக்குக் கேட்காது என நினைத்துப் பேசும் பேச்சில்தான் இருக்கிறது உண்மை நிலை.
சரி என்னதான் செய்யலாம் என்று யோசித்தால், ஒன்றும் செய்ய முடியாது. வருவது வந்தே தீரும். நன்றாக வாழும்வரை ஒரு நிறைவான வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அதுவே நம்மால் முடியும். காலமொரு எதிர்வரும் ட்ரெயின் போல, நீங்களே தடுத்தாலும் அது ஒரே சீராகப் போகுமிடம் போய்த்தான் தீரும். 

சரி இப்போது இந்தக் கதைக்கு வருவோம். ஒரு விற்பனைப் பிரநிதியான ஒருவன் காலையில் எழும்போது யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அது பூச்சியா? ஏதும் வேறொன்றா என அந்தக் கதையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவன் கண்விழிக்கும்போதுதான் அந்த நிலையை அவன் உணர்கிறான். இருந்தும் அவனுக்கு இருக்கும் ஒரே பயம் மேலதிகாரியிடம் எப்படி இன்றைக்கு ஒரு நாள் விடுப்பு கேட்பது ? நம்புவாரா? என்ற மனா உளைச்சல் தான் இருக்குமே தவிரத் தன்னிலைக் குறித்தவொரு எந்த எண்ணமும் இருக்காது.
ஒன்றுமே முடியாத பட்சத்தில்தான் நேர்த்திருப்பது அவனுக்குத் தெரியவரும். பெரும் போராட்டத்திற்குப் பின் தனது நிலையைக் குடும்பத்துக்குத் தெரிவித்தவுடன் முதலில் துக்கமடையும் அவர்கள் சிறிது காலத்தில் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் இவன் ஈட்டும் வருமானத்தில்தான் குடும்பம் நடந்துவந்திருக்கிறது. இப்போது இவனுக்குத் திடீரென்று இப்பெடியொரு வித்தியாசமான நிலை. முதலில் நன்றாகப் பார்த்துத் தவறாமல் உணவளிக்கும் தங்கையும் ஒருகட்டத்தில் மாறுகிறாள்.
குடும்பமே சேர்ந்து அவன் ஏன் இங்கிருந்து நமக்குக் கஷ்டம் கொடுக்கிறான் என்று எண்ணத்தொடங்க செத்துமடிகிறான் அந்தப் பூச்சி மனிதன். அந்தக் குடும்பமும் பெருமூச்சியடைகிறது.
பல்வேறு மன எண்ணங்களைக் கிளறிவிடும் இந்த மாதிரியான படைப்புகள் வாசிக்கக் கிடைப்பது அரிது. அருமையான நூல். வாசிப்போடு நிறுத்தாமல் முடிந்த பிறகு கொஞ்சம் நம்மையும் அந்தக் கதாநாயகனோடு பொருத்தி யோசித்துப் பார்த்தால் ஆசிரியரின் எழுத்தின் வெற்றி முழுமையடையும்.


மீண்டும் சொல்கிறேன் கண்டிப்பாக வாசித்தே ஆகவேண்டிய நூல் இல்லை இல்லை இலக்கியம்.

சில விசயங்கள் -17

புத்தகங்களும் திரைப்படங்களும்.

The Alchemist வாசித்தேன். மிகையாகச் சொல்லியிருந்ததால் அதிக எதிர்பார்ப்பினுடே ஆரம்பித்தேன். எப்போதுமே ஒரு புதிய வாசிப்பை ஆரம்பிக்கும்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பிக்கவேண்டுமென்பதே எனது விருப்பமும் பழக்கமும். ஆனால் ஒரு சில இடங்களில் விதிவிலக்காக முன்னரே தேடிப்படிக்க மனசு அலைபாயும். அந்த வகையில் இதன் விமர்சனங்களை வாசித்ததால் வந்த விளைவே மேலே சொன்ன என்னுடைய எதிர்பார்ப்பு.

மிக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கனவை நனவாக்கும் பயணம் சார்ந்த கதை.

ஸ்பெயினில் தொடங்கும் அவனது பயணம் எகிப்துவரை சென்று அவனது கனவில் வரும் ஒரு புதையலை அடையவேண்டும். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் இன்னல்கள்,வாழ்க்கைப் பாடங்கள், அவனால் சிலர்க்கு ஏற்படும் அதிர்ஷ்டங்கள்/உதவிகள் என அவனது பயணம் அப்படியே நமது கண்முன்னால் விரிகின்றது. போகிறபோக்கில் அந்தப் புதையலை அடைகிற வெறி அவனைவிட நமக்கு அதிகமாகத் தொற்றிக்கொள்வதுதான் கதையின் வெற்றி.

ஸ்பெயினில் இருந்து tangier எனும் ஊருக்குச் செல்கிறான். அது மொரோக்கோவில் இருக்கிறது. அங்கு ஆடுவிற்ற பணத்தை உதவி செய்வதுபோல் வந்து ஒருவன் பிடிங்கிவிட வேறுவழியில்லாமல் அங்குள்ள கண்ணாடிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, இவனால் அந்த முதலாளிக்கு அதிக லாபம் கிடைக்க அவர் இவனுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கிறார். அந்தப் பணத்தை வைத்து அவன் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அவன் இழந்த ஆடுகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊரில் பழையபடி தனது இடையன் வாழ்க்கையைத் தொடர்வது. மற்றொன்று அவனது கனவுப் பாயணத்தைத் தொடர்வது. அவன் இரண்டாவதையே தெரிந்தெடுத்துப் பயணத்தைத் தொடர்கிறான்.

இங்கு அவன் tangier ல் பணத்தை இழந்த தருணத்தை யோசிக்கும்போது, எனக்கும் அங்குச் சென்றிருந்தபோது நடந்தது நினைவில் வருகின்றது. தங்கியிருந்த ஓட்டலிருந்து வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இரண்டுபேர் வந்து வழிமறித்து அங்கு இப்படியிருக்கும்,அப்படியிருக்கும், பெண்கள் இருக்கிறார்கள் என்கிற தோணியில் ஆரம்பித்தவர்கள் நாங்கள் ஒத்துவராததால் ஒரு கட்டத்தில் கைகளைப் பிடித்துக் கட்டயாமாகப் பணம் கேட்கத் தொடங்கினர். அந்தச் சாலையில் யாரும் நடமாட்டமில்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நாங்கள் இருவரும் நின்றிருக்க எங்களைச் சுற்றி மூன்று பேர் வட்டமாக நின்றிருந்தனர்.

ஒருவன் சட்டைப்பையில் கையைவிட்டு ஏமாந்த நிலையில் அடுத்துப் பணத்தை எங்கு வைத்திருப்பான் என்ற யோசனையில் இறங்கினான். ஏற்கனவே எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள், வெளியே செல்லும்போது அதிக உள்ளூர் பணமும், பாஸ்போர்ட்ம் எடுத்துச் செல்ல வேண்டாமென்று. ஏதாவது பிரச்சினையென்றால் ஓட்டல் பெயரைச் சொல்லி இங்கு வந்துவிடுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று. எனவே சாப்பாட்டுக்குத் தேவையான திராம்ஸ் மட்டுமே எடுத்துச் சென்ற நாங்கள் வைத்திருந்தது என்னவோ கொஞ்சம் சில்லறைகளைத்தான்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கடந்த நிலையில் நாங்கள் சாப்பிட்ட உணவகத்திலிருந்து இரண்டுபேர் வெளியில் வந்து எங்களை மடக்கிப் பிடித்ததைப் பார்த்த நிலையில் ஏதோ அவர்கள் பாஷையில் கத்திக் கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்ததைக்கண்ட இந்த மூன்று பேர் நழுவ ஆரம்பித்தனர்.வந்தவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள். தற்செயலாக வெளியில் வந்தவர்கள் நாங்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு வந்ததைச் சொன்னார்கள். இறுதியாக இந்த வழியை இனிமேல் உபோயோகிக்க வேண்டாமென்றும், கொஞ்சம் தொலைவாக இருந்தாலும் வேறொரு வழியைக் காட்டினார்கள். அந்த வழியில் சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருந்தது.

இந்த ஒரு சம்பவம் தவிர்த்தால் tangier ஒரு அழகான நகரம். அங்குதான் ஹெர்குலஸ் குகை இருக்கிறது. Mediterranean கடலும் Atlantic கடலும் ஒன்றையொன்று சந்தித்தாலும் இரண்டும் கலக்காது. இரன்டும் வெவ்வேறு நிறத்திலிருக்கும்.அந்நாட்டு ராஜாவின் அரண்மனையும் அங்குதான் இருக்கிறது. இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது பார்ப்பதற்கு ஆனால் மேலே சொன்னவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும். கதையில் வரும் அந்தப் பையன் கவனமில்லாமல் தான் கொண்டுவந்த துட்டை இழந்துவிட்டான்.

சரி கதைக்கு வருவோம், எகிப்து நோக்கி பயணிக்கும்போது இடையில் பல இன்னல்களைச் சந்திக்கிறான். சகாரா பாலைவனத்தில் தொடரும் அவர்களது பயணத்தில் சில அமானுஷ்யங்களும் நடக்கின்றன. ஒரு இடத்தில இயற்கையைக் கட்டுப்படுத்துவது போல வரும். இது நமது சித்தர்களை நினைவில் கொண்டுவந்தது. மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் இயற்கையோடு பேசி புயலை வருவிப்பது கதையில் நடக்கும். இவனோடு சேர்ந்து பயணிக்கும் ஆங்கிலேயர்கள் உலோகத்தைத் தங்கமாக்கும் ரஸவாதியை காணச் செல்வதாகச் சொல்லி, அந்தக் கலையைப் பற்றி இவனுக்கு விளக்குவார்கள். அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள அவர்கள் சந்திக்க நினைக்கும் ரஸவாதியை இவன் சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகி, அவர்களே இவனுக்கு உதவிகளும் செய்து சகுன அடிப்படையில் எப்படியோ எகிப்து சென்றடைந்து புதையலை அடைந்தானா? இல்லியா? என்பதுதான் மீதிக் கதை.

என்னைப் பொறுத்தவரை இதுவொரு pulb fiction. வாசித்துப்பாருங்கள். அருமையான ஒன்று.

அடுத்து டால்ஸ்டாய் எழுதிய மனத்தத்துவ / உளவியல் சார்ந்த எழுத்துக்கள் மிகவும் பிடித்தவொன்று. பைத்தியத்தின் நாட்குறிப்புகள், சூரத்தின் காஃபி கவுஸ், ரெண்டு கிழவர்க்ள, மூன்று கேள்விகள் போன்ற சிறிய படைப்புகளையே வாசித்தேன். மனதின் ஓட்டங்களை அப்படியே எழுத்தில் வார்ப்பது டால்ஸ்டாய் க்கு கைவந்த கலை. நிகழ்வினை எந்த வகையிலெல்லாம் மனது யோசிக்குமென்பதை அப்படியே எழுதுவது சாதாரணமான விசயமில்லை. முக்கியமாகப் பைத்தியக்காரனின் நாட்குறிப்பில் வரும் மரணம் பற்றிய சிந்தனைகள். சூரத்தின் காபி கவுஸ் நம்மூர் நீதிக்கதை போல இருந்தாலும் வாசிக்க நன்றாக இருக்கும். மூன்று கேள்விகளும் அப்படித்தான். விருப்பமிருந்தால் இவருடைய உளவியல் சார்ந்த படைப்புகளை வாசியுங்கள் அருமையாக இருக்கும்.

அடுத்து பார்த்த படங்களில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகிறேன். ஒன்று Twelve Monkeys. ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு science fiction படம் பார்க்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இதனைப் பார்க்கலாம். அருமையான படம். இப்போது இருக்கும் கொரோன தொற்றுதல் இப்படியும் முடியுமோ என்ற சிந்தனையைத் தூண்டும் படம்.எடுத்துக்காட்டாக இப்போது கொரோன வந்து உலகமே அழியும் தருவாயில் தப்பிப் பிழைத்த கொஞ்ச மக்கள் பூமிக்கடியில் வாழுகின்ற நிலையில், சுமார் 30 வருடம் கழிந்த பிறகு அப்போது இருக்கும் மருத்துவ விஞ்சானிகள் மருந்து கண்டுபிடித்துப் பூமியின் மேற்பரப்பில் வழக்கம்போல வாழ்வை வாழலாம் என்றெண்ணும்போது கோரோனோ வைப் பற்றிய முழுத்தகவலும் அவர்களுக்கு வேண்டும் பட்சத்தில், ஒருவனை வைரஸ் பாதித்த 2020 வருடத்திற்குக் காலப்பயணம் மூலம் அனுப்பி வைரஸைப் பற்றிய முழுத்தகவலையும் சேகரித்துக் கொண்டுவரும்படி செய்து பின் அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

படத்தின் முடிவு வரும்வரை எனது மனதில் ஓடியது என்னவென்றால், 2035 வருடத்தில் இருப்பவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகத் தொல்லையடைந்து எப்டியாவது ஒரு விதத்தில் மக்கள் தொகையைக் குறைக்க எண்ணி, ஒரு மனிதனை முன்னெய் அனுப்பி ஆட்கொல்லி வைரஸ்களைப் பரப்பி மக்கள் தொகையை அழிப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது என்ற விதி இருக்கிறது. ஒரு காட்சியில் தனது இறப்பை சிறுவயதாக இருக்கும் தானே சோகமான முகத்துடன் பார்த்து பரிதாபப்படும்படி இருப்பது அருமையான காட்சி.படம் சுமுகமான முடிவுதான்.கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

அடுத்து The prestige. நோலன் படம். ஏன்?ஏன்? என்ற கேள்விகளுக்குக் கடைசியில் வரிசையாகப் பதில்களை அடுக்கும் ஒரு கதையமைப்பு. உண்மையில் மேஜிக் செய்வதற்கு இவ்வளவு மெனக்கெடணுமா என்பதே இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவரின் மேஜிக் நுணுக்கத்தைத் திருடுவது அல்லது எப்படியென அறிந்துகொள்வதில் ஏற்படும் போட்டிதான் கதை.

ஒரு மேடையில் தூரமாய் இருக்கும் இரண்டு தனித்தனி கதவுகளில், ஒரு வழியாகச் செல்லும் ஒருவன் அடுத்த நொடியில் மற்றொரு கதவின் வழியாக வெளியில் வருவது எல்லோராலும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.இதனை அறிந்துகொள்ள மற்றொருவர் அலைந்து திரிந்து இறுதியில் டெஸ்லாவிடம் செல்கிறார். ஆம் அதே விஞ்சானிதான். அவரும் போராடி மனிதனை அப்படியே காப்பிச் செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுக்கிறார். அதில் செல்லும் ஒன்றின்மீது மின்சாரம் பாய்ந்து அடுத்த நொடியில் அதே போல மற்றொன்று வந்துவிடும். முதலில் தொப்பி,பூனை எனச் சோதித்துப் பார்க்க வெற்றியடையும் அதைவைத்து மேடைகளில் நிகழ்ச்சிகளைச் செய்கிறார்.


ஆனால் முதலில் செய்பவர் இந்தளவுக்கு மெனக்கெடவில்லை. அவர்களை ரெட்டையர்கள். இந்த இயந்திரத்தின் மூலம் வெளிவரும் மற்றொருவர் என்ன ஆகிறார்? அந்த இன்னொரு மனிதனை வெளிவந்தவுடன் தண்ணித்தொட்டியில் இறக்கி கொல்கிறான் மற்றொருவன். இதையெல்லாம் non linear ல் சொல்லி கடைசியில் முடிவை விளக்குவதில் அப்பாடா என்று தெளிகிறது. பாருங்கள் அருமையான படம்.

கில்காமெஷ்

கில்காமெஷ் - க.நா.சு மொழிபெயர்ப்பு

உலகத்தின் ஆதிகாவியம் என்பதால் என்னதான் இருக்குமென்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி வாசித்த புத்தகம்.

ஊருகி நகரத்தின் மாபெரும் பலம் பொருந்திய மன்னனாக கில்காமெஷ் இருக்கிறான்.பல தேவர்கள்,தேவிகள் அவனுக்குப்  பல்வேறு சக்திகளையும் வரங்களையும் கொடுத்து சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகுந்த பலவானாகவும்,  ஆள்பவனாகவும் படைக்கிறார்கள்.

அவனும் அதற்கேற்றாற்போல் எல்லா வேலைகளையும் செய்கிறான் கோட்டைகள் எழுப்பி மக்களைக் காப்பாற்றுவதிலிருந்து  நீதிவழங்கும் சிறந்த அரசனாகவும் திகழ்கிறான்.

வழக்கம்போல  எதிரி இருக்கவேண்டுமே?  இவனை அழிக்க மற்றோரு பலம் பொருந்திய வீரனைப்படைத்து காட்டில் இருக்கும்படி செய்கிறார்கள். அவனும் காட்டில் மிகுந்த வீரமுடன், மனித வாசனையற்று மிருகக் குணத்தோடு வாழ்ந்துவருகிறான். அவனுக்கு மனித வாடை இல்லையென்பதால்  நாட்டுக்குள் கூப்பிட்டு வந்து கில்காமெஷை சாகடிக்க ஒரு அழகான பெண்ணை அவன் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அவனும் பெண்ணழகில் மயங்கி அவள் சொல்வதைக்கேட்டு நாட்டுக்குள் சென்று கில்காமெஷை எதிர்க்க, தோல்வியுற்று அவனுக்கு உயிர் நண்பனாகிறான். அவன் பெயர் எங்கிடு. தனியாக இருந்த கில்காமெஷுக்கு இப்போது துணையாக இன்னொரு பலசாலி நண்பன். கேட்கவா வேண்டும்,இரண்டு பெரும் சேர்ந்து பல சாகசங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாகப்போகும் கதையில்,காட்டிலிருக்கும் மற்றொரு பெரிய அரக்கனை கொல்லப்போகிறார்கள் இருவரும். அதற்கு எங்கிடு மிகுந்த உதவி செய்கிறான். இந்த வீர தீர செயலால் இருவரின் புகழ் உலகெங்கும் பரவிக்கிடக்கின்ற வேளையில் எங்கிடு நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறான். நண்பனின் இறப்பு கில்காமேஷை மிகவும் பாதிக்கிறது. அழுது புரண்டபிறகு ஒரு  முடிவுக்கு வருகிறான். அதுதான் மரணமில்லாத நிலையை அடைவது.

உயிர்நண்பனின் மரணம் கண்முன் நிகழ்ந்ததால் தானும் அதுபோல இறந்து புழுக்களுக்கு இரையாவதை எண்ணி அவனுக்குள் மரண பயம் இத்தகைய தேடலை அவனுக்குள் வரவழைக்கின்றது. பல ஆண்டுகள் காடுமலை என்று பாராமல் பயணித்து, பல தேவர்களை சந்தித்து அவர்களின்   வழிகாட்டுதலின் பெயரில் ஏற்கனவே சாக வரம்பெற்ற ஒருவரை கடல்கடந்து சந்திக்கிறான். அவன் பெயர் உத்னபிஷ்டிம்.

அவன் முதலில் கில்காமேசுக்கு மரணம் சம்பந்தமான எல்லா அறிவுரைகளையும் ( மனிதாகப் பிறந்தால் கண்டிப்பாக இறந்தே ஆகவேண்டும், பிறக்கும்போதே தேவர்கள் நமது இறப்பை தீர்மானித்திருப்பார்கள் இன்னும் சில) வழங்குகிறான் அதில் திருப்தி அடையாத கில்காமெஷுக்கு தான் எப்படி இந்த நிலையை அடைந்தேன் என்பதைச்   சொல்கிறான் உத்னபிஷ்டிம். மனிதர்களின் தொல்லை,பாவங்களைத்   தாங்காத தேவர்கள் அவர்களை அழிக்கப்  பிரளயத்தைத்  தோற்றுவிக்க முடிவு செய்கிறார்கள். இதனை பூமியில் வாழும் உத்னபிஷ்டிம்க்கு தேவர்களில் ஒருவர் ரகசியமாக    சொல்லிவிடுகிறார்,அதோடு எப்படி தப்பிப்பது என்பதையும் சொல்கிறார். அதன்படி அவன் பெரிய மரப்பேழை செய்து அதனுள் உயிரினங்களை ஆண்,பெண் என இரண்டு ஜோடிகளாகப்   பிடித்து அடைத்துவைத்து அந்த நீர்பிரளயத்திலிருந்து தப்பிக்கிறான். (இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? வேறெங்குமில்லை நமது நோவா செய்ததாக பைபிளில் சொன்னது  அப்படியே இங்கு நடக்கிறது)
கடைசியில் சாகாவரம் இல்லையென்பதை உணர்ந்த கில்கமெஷ் மிகுந்த வருத்தத்தோடு நாடு திரும்ப எத்தனிக்கையில் பாவம்பார்த்த உத்னபிஷ்டித்தின் மனைவி அவனுக்கு அதிகமான அன்பளிப்புகளை வாரிவழங்க கணவனுக்கு அறிவுறுத்துகிறாள். ஏனென்றால் கில்காமெஷ் அவ்வளவு சிரமப்பட்டு அங்கு வந்தடைந்திருக்கிறான். அவன் அன்பளிப்புக்கு பதிலாக, கடலுக்கடியில் இருக்கும் ஒரு பூவைப்  பற்றிச்   சொல்கிறான். அந்தப் பூவை தின்றால் கிழவனும் குமரனாகலாம் என்பதே. கில்காமெஷும் வேறுவழியில்லாமல் வந்ததுக்கு அந்தப் பூவைப் பறித்துச்சென்று நாட்டிலுள்ள வயதானவர்களுக்கு கொடுக்க எண்ணி சிரமத்ததோடு அந்தப் பூவை பறிக்கிறான்.

அந்தப் பூவோடு நாடு திரும்பும் வேளையில் தாகத்துக்கு நீர் குடிக்க ஒரு நல்ல நீர் கிணற்றில் இறங்கி பூவை ஓரமாக வைத்துவிட்டு நீர் அருந்தும் வேளையில் ஒரு பாம்பு அந்தப்   பூக்களைத்  தின்றுவிட்டு நீருக்குள் மறைந்து விடுகிறது.(பைபிளில் வந்து வஞ்சிக்கும் அதே பாம்பும்தான் போல)

விரக்தியின் உச்சிக்கு செல்லும் கில்காமெஷ் வெறும் கையோடு நாடு திரும்பி கொஞ்ச நாளில் உயிர்விடுகிறான். அவன் கட்டிய கோட்டைகளில் எழுத்துக்காளால் அவனது சரித்திரம்            பொறிக்கப்பட்டு பின்னாளில் கண்டெடுக்கப்பட்டு ஒரு நூலகத்  தொகுக்கப்பட்டதுதான் இந்த ஆதிகாவியம்.

சரி கதை முடிந்தது, ஆனால் இந்த ஆதிகாவியத்தில் வரும் விசயங்கள்தான் நம்மிடமிருக்கும் எல்லா புராண கால கதைகளுக்கும் அடிப்படை.

ஒரு பலசாலி மனிதன்/அரசன்/கடவுள் - தனது பெருமைகளை பறைசாற்ற நினைத்தல், அவைகளை அடுத்த சந்ததிக்கு பதியவைத்தல்  - ஒரு / பல எதிரிகள் - பெண்ணால் வஞ்சிக்கப்படுதல்  - மரண பயம் - மரணத்தைத்  தவிர்க்க தவம் / மெனக்கெடல் - சாகாவரம் பெற்று நிலைத்திருத்தல். இதுதான் புராண கதைளுக்கு அடித்தளம். இதோடு கொஞ்சம் கற்பனை வளம்சேர்த்தால் நல்ல வேதமோ, இதிகாசமோ தயார்.

சரி இந்தக் கதையிலிருந்து எனக்குத் தெரிந்த சில புராண நபர்களைச்  சொல்கிறேன்.  முதலில் சட்டென நியாபகம் வரும் நோவா. எனக்கு நன்கு தெரிந்த கதை. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அதே மரப்பேழை, இரண்டு ஜோடி உயிர்கள், புறாவை பறக்க விடுதல் என அப்படியே இருக்கிறது. வருடங்களோடு கணக்கிட்டால் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் வருகிறான் இந்த கில்காமெஷ். அவனுக்கே இந்தப் பேழை விசயம் மிக முன் நடந்ததாக சாகாவரம் பெற்ற உத்னபிஷ்டி சொல்லுகிறான். அபப்டியென்றால் பேழை விசயம் நடந்தது கில்காமேஷியின் காலத்துக்கும் வெகு முந்தையது.

    இங்கு ஆண்டுகளையும், நகரத்தின் பெயர்களையும்  பற்றி எழுதினால் ஒரு புராண ஆராய்ச்சி கட்டுரை போல இருக்குமென்பதால் தொடக்கத்திலிருந்தே அதை தவிர்த்து வந்திருக்கிறேன்.  உங்களுக்கு   ஆர்வமிருந்தால் புத்தகம் வாங்கி வாசிக்கலாம், இல்லையென்றால் இணையத்திலும் ஆங்கிலப்  பதிப்பு இலவசமாகக்  கிடைக்கின்றது.(காமிக்ஸ் வடிவிலும் ஒரு புத்தகம் பார்த்தேன்)

அடுத்து எங்கிடு = ரிஷ்யசிருங்கர், இதில் ரிஷ்யசிருங்கர் மானுக்குப் பிறந்தவர். எங்கிடு ஒரு தேவதையினால் படைக்கப்பெற்று மனோடு மானாக புல்லைத்தின்று வாழ்கிறான். இருவருக்குமே பூமியென்றால் காடுதான். பெண் வாசமே தெரியாது. உணவுகூட விலங்குகள் உண்பதுதான்.  இப்படியிருக்கும் இருவரையும் ஒரு காரணத்திற்காக நாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எங்கிடுவை கில்காமெஷொடு மோதவிடவேண்டும். ரிஷ்யசிருங்கர் வந்தால் நாட்டில் மழைபெய்து சுபிட்சம் வரும். இருவரையும் அழைத்துவர செய்யும் செயல்களும் ஒன்றுதான். இருவருமே பெண்கள் வாடையில்லாதவர்கள் ஆகையால் பெண்களால் அவர்களை மயக்கி அழைத்துவர வேண்டும். இருவர்களையுமே பெண்களே மயக்கி நாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்.  நமது கதையில் வேதம் படித்து மிகுந்த கற்றுத்  தேர்ந்தவராக இருக்கிறார் ரிஷ்யசிருங்கர். வாய்வழியாக வந்த கதைகள் கொஞ்சம் திரிந்து இந்த மாதிரியாக மாறியிருக்கலாம் மேலும் இடையில் கொஞ்சம் வேதங்களும்,ரிஷிகளும்,பிராமணாளும் கதையில் புகுந்திருக்கிறன்றனர்.(  நாட்டில் மழைபெய்ய மன்னன் பிராமணாளிடம் உதவி கேட்க அவர்கள் பெண்ணை வைத்து அவரை அழைத்து வரும் இந்த தலைசிறந்த அறிவுரையை வழங்குகிறார்கள்)

கில்காமெஷ் சாகாவரம் வேண்டி உத்னபிஷ்டிடம் நிற்கும்போது நடந்தவை நம்மூர் நசிகேந்தனுக்கு நடந்திருக்கிறது. உத்னபிஷ்டி சாகாவரம் வேண்டிவந்த கில்காமெஷுக்கு சோதனைகளை செய்ய முனைகிறார். அதில் முதல் சோதனையான குறிப்பிட்ட நாட்கள் தூங்காமலிருக்கும் சோதனையில் தோற்றுவிடுகிறார் கில்காமெஷ். அவன் சிரமப்பட்டு பயணம் செய்வதால் அயர்ந்து தூங்கி பலநாள் கழித்து எழுந்திருக்கிறான். இங்கும் எமன் நசிகேதனுக்கு பல சோதனைகள் வைக்கிறார் பின்புதான் ஆத்ம தத்துவத்தை அடைகிறான்.

கில்கமெஷ் செய்த குற்றங்களாக சொல்லப்பட்டவைகளில் ஒன்று பெண் போகம். அவன் நினைத்தால் எந்தப் பெண்ணையும் அடையலாம். பணக்காரன்,ஏழை எனப்   பாகுபாடின்றி அவனின் கைகல் அவர்கள் வீட்டிலுள்ள பெண்களின் மீது இருந்தது. அரசன்தான் எல்லாப் பெண்களுக்கும் முதல் புருஷன், நிஜ புருஷன் இரண்டாவதுதான் என்ற நோக்கில் அவன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இது கேரளாவில் நம்பூதிரிகள் செய்ததாக நான் வாசித்திருக்கிறேன். அவர்கள் நினைத்தால் எந்தப் பெண்ணையும் தடையின்றி அடையலாம், அப்படி இனங்காதவர்கள்  வேசி பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கப் பட்டார்கள், அல்லது தண்டிக்கப் பட்டார்கள். திருமணம் நடந்தால் முதலில் அந்தப் பெண் நம்பூதிரியின் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். இதே மாதிரியான விசயம் தமிழ் படமொன்றிலும் இடம்பெற்றிருக்கும்.

இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்தால் அதிகமாகக் காணகிடைக்கலாம், இங்கு இருப்பதைப் போலவே காற்றுக்கு,மழைக்கு,சூரியனுக்கு என தனித்தனியாக தேவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மக்கள் பூஜைகள் செய்தும்,பலிகொடுத்தும் தனக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொண்டார்கள்.

பண்டைய காலத்தில் கதைகள் சொல்லும் பாணியும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும் ஒன்றாக இருந்ததா? இல்லை இந்த ஆதிகாவியம்தான் செவி வழி கதைகளாகத்  திரிந்து பறந்து ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றாற்போல் வேதங்களாகவும், இதிகாசங்களாகவும் மாறியதா? யாருக்குத்தெரியும்.

இருந்துவிட்டுப்  போகட்டும் இந்தக்கதைகளை வெறும்கதைகளாகப்  படித்துவிட்டுக் கடந்துபோனால் எந்தவொரு பிரச்சினையுமில்லை, இதையே வாழ்க்கைமுறையாக, சட்டமாக மாற்றி வாழ நினைத்தால் பூமி தாங்காது.

இன்னொன்றைக்  கவனித்தால் தமிழ் இலக்கியங்களில் இதன் சுவடுகள் கொஞ்சம்கூட இல்லை. மாறாக இதற்கு எதிராகத்தான் இருக்கிறது.இது சம்பந்தமாகவும்  வாசிக்க வேண்டும்.