சில விசயங்கள் - 13

  பயணங்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. எதோ ஒரு காரணத்திற்காக நாம் செய்யும் பயணத்தில் இருக்கும் சில நல்ல விசயங்களை கண்டிப்பாக எல்லோருமே அனுபவித்தே ஆகியிருக்கவேண்டும். அனுபவங்கள் செய்யும் பயணத்தின் நோக்கத்தை பொறுத்து மாறுபடும். சிலர் பொழுதுபோக்குவதற்கு என்றே செய்யும் உல்லாச பயணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால்  அன்றாட சுய தேவைகளுக்கான பயணங்களே அதிகம்.
  
  அதிலும் முக்கியமாக பேருந்து பயணம். அதிக தொலைவில்லாத பேருந்து பயணம் எனக்கு பிடித்தமான ஒன்று.குறைந்தது 6~8 மணி நேரமாக இருந்தால் சலிக்காமல் இருக்கமுடியும். அதுக்கு மேல் போனால் எப்போது இறங்குவோம் என்று இருக்கும்.பயணிக்கும்போது இருக்கும் மனநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எங்கு செல்கிறோம் எதற்கு செல்கிறோம் போன்ற விசயங்களே. ஒரு சந்தோஷமான நிகழ்வை எதிர்கொள்ள பயணிக்கிறோம் என்றால் கண்டிப்பாக பயணம் முழுதும் அந்த எண்ணங்களே நிறைந்து  இருக்கும் மனதில். இக்கட்டான அல்லது கவலையான நினைவுகளோடு செய்யும் பயணங்களும்  இருக்கவே செய்கின்றன. என்னவென்றால் அந்த எண்ணங்கள் பயணிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிளியே மறக்கடிக்கப்பட்டு மனதிற்கு கொஞ்சம் இதமாக்கும் சக்தி பயணங்களுக்கு உண்டு.

  தனிமையான பயணங்கள் இன்னும் இனிமையானவை. நம்மை பற்றிய எண்ணங்களை அசை போட்டுக்கொள்ள இதைவிட சிறந்த தருணம் வேறெதுவும் இருக்க முடியாதுதான்.துக்கமோ சோகமோ முன்னர் நடந்த விசயங்ககளை பற்றி யோசித்து அதில் முடிவுகளை எடுக்கும் தருணமாகவும் அது இருக்கும்.இதுவரை நான் சொன்னது ஒருவரின் தனிப்பட்ட மனதின் எண்ணங்களை பயணங்கள் எப்படி மாற்றுகின்றன என்பதுதான்.

   இது தவிர்ந்து யாராக இருந்தாலும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டிய சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன இந்த பேருந்து பயணத்தில் அதுவும் நமது தமிழ்நாட்டில்.ஏறி அமர்ந்ததில் இருந்து இறங்கும் வரை நடக்கும் விசயங்கள் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே.

   ஏறும்போதே நடத்துனர் கத்துவார் இடையில் எங்கும் நிக்காது என்று. அதாவது நீங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் அடுத்து மதுரை தான் நிக்கும் அதுக்கு அடுத்து நேரா நெல்லை என்றுதான் கூவிக்கொண்டு இருப்பார். ஆனால் நேராக திருநெல்வேலியோ அல்லது மதுரையோ போகிறவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இடையில் இறங்குபவர்களே அதிகமாக வாசலில் அடைத்து இருப்பார்கள். இப்படியே கொஞ்ச நேரம் கடந்துபோனவுடன் நடத்துனர் உள்ளே எட்டிப்பார்ப்பார் உள்ளே ஈ ஆடிக்கொண்டு இருக்கும். அடுத்து அவர் கூவுவது திருச்சி ஏறிக்கோங்க என்று. இப்போது கொஞ்சம் கூட்டம் நிறைந்து இருக்கும். இப்படியே நேரம் செல்ல கடைசியில் அந்த பேருந்து பயணிக்கும் வழியில் உள்ள அணைத்து ஊருகளில் நின்று செல்லும்.

    நான் மேலே சொன்னது அரசுபேருந்துகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. தனியார் பேருந்துகளில் கொஞ்சம் தேவலை பயணசீட்டு முன்பதிவு செய்யும்போதே அறிவிப்பு இருக்கும் இது எங்குமே இடையில் நிக்காது என்று. சொன்ன மாதிரியே இடையில் எங்குமே ஊர்களில் நிறுத்துவதில்லை. காரணம் அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு பயணசீட்டு முன்பதிவு ஆகிவிடுவதே . இதனால்தான் அவர்களால் இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க முடிகின்றது. ஆனால் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஆகி, இடம் இல்லாமல் இருந்தாலும் கடமைக்கு எல்லா ஊருகளுக்குள் சென்று திரும்புவது என்ன நேர்த்திகடனோ தெரியவில்லை.

   சரி பேருந்தில் ஏறி உள்ளே பார்த்தால் முதல் சீட்டில் இருந்து கடைசி வரையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கைகள் எல்லாமே நிறைந்து எல்லாமே ஒற்றை இருககைகளாக காலியாக இருக்கும். ஏதோ இரவில் வெளியில் இருக்கும் இயற்கை அழகை ரசித்து விடிந்ததும் அதை கவிதையாக வடிப்பவர்கள் போலத்தான் அவர்கள் அந்த இருக்கைகளை பிடித்து அமர்ந்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் பேருந்து கிளம்பிய அரைமணிநேரத்தில் பேருந்து சத்தத்தை மிஞ்சும் குறட்டை சத்தம் வெளிவரும்.

   நமக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் பெரியவிசயமாக இருந்தாலும் நாம் கொண்டு போகும் பைகளை வைக்க இடம்கிடைப்பது அதைவிட கொஞ்சம் சிக்கலான விஷயம். எப்படித்தான் சுமந்து வருவார்களோ என்று ஆச்சரியப்படும் வகையில் கொண்டுவந்து திணித்து இருப்பார்கள். அதுவும் அவர்கள் இருக்கை வேறு எங்கோ இருக்க அவர்கள் பைகள் இங்கு வந்து வைத்துவிட்டு எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது போல உட்கார்ந்துவிடுவதுதான் அவர்களின் வெற்றி.

  எப்படியோ அதுக்கும் ஒரு சிறிய இடம்கிடைத்து உட்கார்ந்தால் பக்க்கத்தில் உள்ளவரை கவனித்து நமது பணம் அல்லது முக்கியமான பொருள்களை எங்கெங்கே எப்படி வைக்கவேண்டும் என்பதை பற்றி யோசிப்போம். அதற்குள் பேருந்து ஓரளவு நிறைந்து இருக்கும். பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கும். யாரவது பெண்கள் ஏறினால் அவர்கள் அமர இடம் இருக்காது அதான் இயற்கை  பிரியர்கள் எல்லோரும் ஜன்னலோர இருக்கைகளை பட்டாபோட்டு விட்டதால் பெண்கள்  ஏறி அங்கு இங்கும் தேடி தயங்கி நிற்கும்போது நடந்துனர் உள்ளே வருவார். அதற்கு முன் அவர்களே இந்த இயற்கை பிரியர்களிடம் விண்ணப்பம் வைப்பார்கள் கொஞ்சம் மாறி உட்காருங்கள் என்று. அவர் எதோ 1000 ரூபாய் கடன் கேட்கிறார் போல என்று நினைத்து எங்கோ வெளியில் பார்ப்பார். அப்போது அந்த பெண் மனதில் என்ன திட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ரெம்ப நாள் ஆசை. யாராவது சொல்லுங்கள்.

    நடந்துனர் வந்து ஒரு சிறிய கட்டபஞ்சாயத்து வைத்து அந்த பொண்ணுக்கு இடம்பிடித்து கொடுப்பார். பெரும்பாலும் யாருமே இடம்மாறி உட்காருவதில்லை. சிலர் அவர்கள் வருவதை பார்த்தவுடனே எழுந்து மாறி உட்கார்ந்துவிடுகிறார்கள். மாறி உட்காறாதவர்கள் இனிமேலாவது திருந்த முயற்ச்சியுங்கள்.

  பேருந்து கிளம்பி கொஞ்சநேரத்தில் நடத்துனர் பயணசீட்டு கொடுக்க வாருவார். அப்போதுதான் நாம் நமது செல்வசெழிப்பை காட்டுவோம். சொல்லிவைத்தற்போல் 500 ரூபாய் காட்டி அவரை கோபபடுத்தி அவர் யாருக்கு எவ்வளவு சில்லறை கொடுக்கவேண்டும் என்பதை மறந்து குழம்பி ஒரு வழியாக அவர் எல்லாம் முடித்து ஆட்களை என்னும்போது நீங்க கொடுத்த இந்த ரூபாய் கிழிஞ்சு இருக்கு பாருங்க இது செல்லாது என்று கத்துவார் ஒருவர். வேண்டா வெறுப்பாக வந்து வேறு ரூபாய் கொடுக்க அங்கு ஒரு கும்பல் தூங்க தயாராகி கொண்டு இருக்கும்.

   இப்போது இரண்டு இருக்கைக்கு இடையில் இருக்கும் கைவைக்கும் கட்டைக்கு ஒரு சின்ன பனிப்போரே நடக்கும். யாரு முதலில் அதிகமா கைவைத்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்களோ அவர்களே பாக்கியாவான்கள்.என்ன சிரிப்பு என்றால் அடுத்த ஒருமணிநேரம கழித்து அவர் கையை தனியாக வெட்டி எடுத்தாலும் தெரியாத அளவு தூங்கிகொண்டு இருப்பார். அதிலும் பாதி பாதி இடத்திற்கு வார்த்தையில்லா சண்டை நடக்கும். கையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துவது, கையை நகர்த்தி கொண்டே இருமுவது, வேண்டுமென்றே தூங்குவதுபோல் நடித்துகொண்டு நமது கையை தள்ளிவைப்பது இதெல்லாம் அந்த நேரத்தில் நடக்கும் ராஜதந்திர வேலைகள். நான் பொதுவாக முதலில் அவருக்கு எல்லா இடமும் கொடுத்துவிட்டு தூங்கியவுடன் தேவையான இடம் பிடிப்பேன்
.
    அடுத்து பின்சாயும் இருக்கையை பயன்படுத்துவதில். பின்னாடி உட்கார்ந்து இருப்பவரை எந்தவித சட்டையும் செய்யாமல் டபக்கென்று பின்பக்கம் சாய்த்து அவரை கோபபடுத்துவதில் என்ன இன்பமோ.அதிலும் பின்பக்கம் உள்ளவர் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்று கேள்வி கேட்பார். அதுக்கு எந்த விதபதிலும் இருக்காது. ஒருமுறை பின்பக்கம் பெண் உட்கார்ந்து இருக்க முன்பக்கம் என் அருகில் உட்கார்ந்து இருந்தவர் முழுதும் சாய்த்து படுத்து தூங்க நினைக்க அந்த பெண் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்னால உட்கார முடில என்று சத்தம் போட அப்புறம் நடந்துனர் வந்தும் பஞ்சாயத்து செய்தும் பலனில்லை. அவர் அவரின் உரிமையை முழுதும் பயன்படுத்தி கொண்டார். அப்போது நடந்துனரிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது இவ்வளவு அதிகமாக சாய்க்க வேண்டாம் என்றால் பின் ஏன் இருக்கையை இப்படி அமைக்கிறிர்கள் என்றார்.

   அந்தப்பக்கம் பெண் விடுவதாக இல்லை. ஏன் என் மடியில் பாடுத்துக்க வேண்டியது தானே இப்படி பண்ணுவதுக்கு என்று சொல்ல இவர் அது என்ன என் தல எழுத்தா உங்க மடியில் படுக்கனும்னு என்று பதில் அளித்தார்.அந்த எண்ணம் வேற இருக்கா என்று அந்தப்பெண் கேட்க இவர் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டார். அந்த பெண் எதோ புலம்பிகொண்டே தூங்கிபோனார். விஷயம் என்னவென்றால் என் அருகில் அமர்ந்தவர் இடையில் இறங்கிய பின்னும் அவர் இருக்கை பின் சாய்க்கபட்ட நிலையில் இருந்தும் அந்த பெண் சந்தோசமாக தூங்கி கொண்டுதான் இருந்தார்.

    இடையில் உணவுவிடுதியில் நிற்காத பேருந்துகள் இருந்தால் சொல்லுங்கள் புண்ணியமாக போகும். முக்கியமான அழிம்புகள் அங்குதான் நடக்கிறது. இறங்கி சிறுநீர் கழிக்கும் இடத்தை தவிர எல்லா இடத்திலேயும் கழிக்கிறார்கள். அதை தடுக்க  தனியாக காவல்காரன் வேறு. கையில் லைட் வைத்துகொண்டு யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை பின்னால் இருந்து வெளிச்சம் மற்றும் சத்தம் போட்டு காட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. சரி காசு கொடுத்து போலாம் என்றால் வெளியில் இருப்பதுக்கும் அங்குபோவதுக்கும் ஒரே வித்தியாசம் ஒரு குட்டச்சுவர் மட்டுமே.சுத்தம் வேறு இல்லை. என்ன நேர்த்திகடனோ தெரியவவில்லை அங்கு வரும் பயணிகளை அந்த சுவரின் மீது கழிக்கவைப்பதில்
.
    நள்ளிரவில் மசாலா நிறைந்த பொருள்களை வாங்கி ஆனந்தமாக தின்பவரை அங்குதான் பார்க்கமுடியும்.அதுவும் கடந்த சில நிமிடங்கள் வரை நன்றாக உறங்கி கொண்டிருந்தவரா இவர் என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரின் வேகம் இருக்கும். எல்லாம் முடிந்து பேருந்து கிளம்பும்போதுதான் யாரவது ஓட்டுனரின் அருகில் சென்று இருங்கள் இன்னும் ஒரு ஆள் வர வேண்டியது இருக்கு என்று சொல்லி இன்னும் 10 நிமிடம் தாமதம் செய்வார். வரும் மனிதர் தனக்கும் இங்கு நிற்கும் பேருந்துக்கும் எந்தவித சம்பந்தமே இல்லை என்பது போல நடந்து வருவார்.
   
   எப்படியோ ஒருவழியாக ஊர் வந்து இறங்கி பேருந்து கடந்து சென்ற பிறகு தன்னிலைக்கு வந்து யோசித்து பார்த்தால் ஏதோ வேற்றுகிரக பயணம் மேற்க்கொண்டு திரும்பியது போல ஓர் அனுபவம். அத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் கண்டிப்பாக இந்த மாதிரியான பயணங்களில் மட்டுமே கிடைக்கும்.

                                            
                                          ************

    இந்த வருடம் கோவில்பட்டி, எட்டையாபுரம் பக்கம் சுத்தமாக மழை இல்லை. சென்னையில் பெய்த மழையில் கொஞ்சமாவது பெய்ந்து இருந்தால் அந்த பக்க விவசாயிகள் சந்தோசப்பட்டு இருப்பார்கள். ஆனால் சுத்தமாக இல்லை.இன்னும் காத்து இருக்கிறார்கள் மழை பெய்யும் என்று.
எப்போதும் வற்றாத கிணறுகள் கூட சுத்தமாக வற்றிவிட்டது. ஆழ்துளை போட்டால் சுண்ணாம்புக்கல் பாறை வருகிறது. அப்படியே போட்டாலும் ஆழம் அதிகம் ஆகிவிடுவதால் மோட்டரை இன்னும் கிழே இறக்கி வைக்கவேண்டும் அப்போதுதான் தண்ணியை இழுக்கும்.தண்ணியின் ஆழம் அதிகம் என்பதால் வெளியேறும் அளவும் குறைவே. அதனால் பாய்ச்சல் நேரமும் அதிகமாக ஒரு பிஞ்சையில் ஒரு பக்கம் இருந்து பாய்ச்சிக்கொண்டு போய் முடிந்த பின்பு திரும்பி பார்த்தால் ஏற்க்கனவே பாய்ச்சி இருந்த எல்லாம் வெயிலுக்கு காஞ்சி கருவாடாக போய் இருக்கும். வேறென்னே செய்ய திரும்பியும் முதலில் இருந்து தொடர வேண்டும்.

   தண்ணி வசதி இல்லாதவர்கள் கடவுளிடம் மழை வேண்டி காத்து இருந்து காலம் போனதால் இப்போது மனம் மாறி விவசாயத்தையே விட்டு விட்டார்கள். இப்போது இருப்பவர்கள் கிணற்றில் கொஞ்சம் தண்ணி இருப்பவர்கள் மட்டுமே. ஏற்க்கனவே அரசாங்க வேலை காரணமாக வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த மழை இல்லாத பிரச்சினை ஒரு பெரிய இழப்பு. ஒருவேளை அந்த வேலை செய்யாமலே சம்பளம் கிடைக்கும் திட்டம் ஓய்ந்தால் கொஞ்சம் விவசாயம் செழிக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் வாய்ப்பு இல்லை. இதனால் கூலி ஆட்களின் சம்பளம் வேறு கூடி விட்டது. வேலைக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு அரசாங்கம்  கொடுக்கும் சம்பளம் எங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள். இவர்களை குறை சொல்ல முடியாது என்னை பொறுத்தவரை இவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் உழைத்துவிட்டு சம்பளம் கேட்கிறார்கள்.


   எப்படியோ ஒன்றும் மட்டும் உறுதி இந்த நிலை இன்னும் நீடித்தால் அடுத்தவருசத்தில் அந்த பக்கம் கண்டிப்பாக விவசாயம் இருக்காது என்பதே உண்மை. மழைக்கு, கடவுளுக்கு எல்லாம் காத்து இருந்த ஏமாந்த விவசாயிகள் ஒருநாள் நம்மையும் ஏமாற்றுவார்கள். உணவு இல்லாமல் வாழமுடியாது. புரிகிறதா? 
காலத்தின் காலம்    தொடரும் முன்  சில  விசயங்களை ஒருமனதாக நீங்கள் நம்பியாகவேண்டும்...

- ஒரு கதையில் நான் எழுதியது போல இறந்த காலத்தை நாம் கடந்து வந்துவிட்டாலும் இப்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்றால் இறந்த கால உலகம் என்பது நிகழ்காலமாக இருந்துகொண்டு இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட காலத்தில் இருந்த  இடம்,பொருள் என எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் நீங்கள் மட்டும் புதியவர். அதனால் அவர்களுக்கு நீங்கள் ஒரு வேற்றுகிரக வாசியைப்போல.

- இயற்பியல் விதிகள் என்பது எல்லா இடங்களுக்கும் பொதுவானது. அதுக்கு கால மாற்றங்கள் ஒரு பொருட்டல்ல. இறந்த காலத்திலும் நீங்கள் சென்று இப்போது உள்ள விதிகளை நிரூபிக்கலாம் அல்லது அதை வைத்து எதாவது செய்யலாம்
.
- விடை கிடைக்காத கேள்விகளில்தான் எப்போதும் ஒரு மர்மம மறைந்து இருக்க முடியும். எடுத்துக்காட்டாக கடவுள். உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டால் அதில் ஒரு கேள்விக்கான விடையை கண்டிப்பாக அந்த கடவுள் சொல்லி இருப்பார்.  இங்கும் உங்களுக்கு விடையில்லாத சில கேள்விகளை விட்டே செல்கிறேன். அதற்கு விடை இல்லை என்பதைவிட எனக்கு தெரியாது என்பதே சரி.

இனி தொடரலாம்....

       எப்போதுமே தேடல்களில் தோல்வி கிடைப்பதில்லை. அலுப்பு தோன்றுமே தவிர தீவிராமான தேடலில் கண்டிப்பாக ஒரு நேரத்தில் வெற்றியே கிடைக்கும். காலம் தள்ளி போகலாம்.  அப்படியான தேடலில் ஒன்றுதான் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிவதற்க்கான தேடல்.
மொத்தமாக பார்த்தால் இரண்டு வகை தேடலில் இருந்தார்கள். ஒன்று பூமியில் மட்டும் அதுவும் மனிதனின் மனதுக்குள் கடவுளை உணர்ந்தால் எல்லா ரகசியமும் தெரிந்து விட்டதாகவும் இனி அறிய ஒன்னும் இல்லை என்ற வகையில் ஒரு பிரிவினர் இருந்தனர்.

    இதில் முக்கிய பங்களிப்பு என்றால்  உங்களுக்கு பரிச்சயமான உண்மையான கடவுள், சாமியார்கள், போலியான சாமியார்கள்  எல்லாம் அடங்குவார்கள். கடவுளின் கிருபை, சாமியார்களின் திறமையான செயல்களை நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது மறைத்து வைக்கபட்டுள்ள கேமராக்கள் மூலம் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதைப்பற்றி தொடராமல் அடுத்த வகை தேடலுக்கு செல்கிறேன்.

     மற்றொன்றான  பூமியில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை ஆராயும் இலக்கில் வெளியில் தேடுவதில் எனக்கு இதில் நிறையா நம்பிக்கை உண்டு. முதலாம் ஒன்றில் சுத்தமாக இல்லை.

    அதாவது இந்த பிரபஞ்சத்தை சில விதிகளை கொண்டு விளக்குவது , இது இப்படி இருக்கலாம் என்று முதலில் அனுமானித்து சொல்லிவிட்டு பின்னர் அதனை கணித சமன்பாடுகள் கொண்டோ சில விதிகளை மையமாக வைத்தோ  இப்படித்தான் என்று நிரூபிப்பது  என்பது எப்போதுமே என்னை கவரும் ஒன்று.

     ஏனென்றால் இப்போது ஒரு விதியோ அல்லது சிறு கணித சமன்பாடோ இந்த பிரபஞ்சம் முதலில் இப்படித்தான் உருவாகியது என்று உங்களுக்கு நிருபித்துவிட்டால் அதுதான் கடவுள்  என நம்பியாக வேண்டும். இல்லாமல் இந்த விதியில்தான் உருவாக வேண்டும் என்று யாரோ ஒருவர் செய்து இருக்கிறார் என்றால் ஏற்க்கனவே நான் சொல்லி நீங்கள் ஒருமனதாக நம்பியபடி  எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க கண்டிப்பாக உங்களுக்கு கடவுள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். எனவே இந்த கேள்வியை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

   இந்த தேடல் முறையில் பல முயற்சிகள் நடந்து கொண்டு இருந்தாலும்  இங்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

     பிரபஞ்சத்தின் பிறப்பை அது உருவாகிய காலத்துக்கு பின்னோக்கி சென்று பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமமானது. ஆனால் அந்த இடத்துக்கு நமது கற்பனை நிறைந்த அறிவின் மூலம் பயணித்து இப்படி இருந்திருக்கலாம் என்று இப்போதைக்கு சொல்லிவிட்டு அதை யாரவது வந்து நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம்.

      அதோடு ஏன் பின்னோக்கி செல்கிறோம் முன்னோக்கி சென்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு விடையை காணத்தான் ஒரு பிரிவினர் சில  முயற்சிகளை  செய்துகொண்டு இருந்தனர்.

      அதன்படி காலத்தில் முன்னோக்கி சென்று அப்போது இருக்கும் பிரபஞ்ச மாற்றங்களை வைத்தும், ஏற்க்கனவே இருக்கும் பிரபஞ்ச விளக்க விதிகளை அதனோடு ஒப்பிட்டுப்பார்த்து தெளிவு பெறுவது. இதன்மூலம் சில முடிவுபெறாத விஷயங்கள் விளங்க வரலாம் அல்லது எதாவது புதியதாக நிகழ்ந்து நாம் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்கள் பொய்யென மாறி புதிய  ஒன்று கிடக்கலாம்.

     அந்த நம்பிக்கையில் இரண்டு பேர் அந்த இயந்திரத்தில் ஏறி பறக்க தயாராய் இருந்தார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் என்றால் அங்கு இருக்கும் நிலையை அப்படியே இங்கு இருப்பவர்களுக்கு விவரிப்பது அதன்பின் ஆய்வுகளுக்கு பின் இங்கு இருந்து அனுப்பப்படும் ஆணைகளுக்கு ஏற்ப்ப அங்கு செயல்படுவது.

      இந்த வேலைக்கு ஏன் ரோபோட்டை அனுப்ப கூடாது என்றால் எல்லா நிலைமையிலும் யோசித்து செயலப்டுவது என்பது அவைகளுக்கு இன்னும் கற்றுத்தரவில்லை. ஒருவேளை மனிதனின் பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்.

அவர்களுக்குள் நடந்த உரையாடலை இங்கே தருகிறேன்...

"எல்லாம் சரியாக இருக்கிறதா? பிரபஞ்சம்? நமது  பூமி?

     "பிரபஞ்சம் ரெம்பவே விரிவடைந்து இருக்கிறது...ஆனால்..நமது பூமி இருக்கிறது அங்கு மனிதர்கள் இல்லை?"

"அப்படின்னா எங்கே போனது மனித இனம்?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"புதியதாக கிரகம் இருக்கிறது அதுவும் சூரியனை சுற்றுகிறது அதில் இருக்கிறார்கள்"

"ஏற்கனவே இருந்த ஒன்றா?"

"இல்லை புதியது..அதோடு சூரியன் ரெம்ப பெருசா விம்மி இருக்கிறது"

"அதான் அவர்கள் கிரகம் மாற்ற காரணம். எப்படி மாற்றினார்கள் என்று அறிய முடிகிறதா?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"ஈர்ப்பு விசைக்கான  துகளை கண்டறியும் சாத்தியம் இருக்கிறது, அதை அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம் அதன் உதவியோடு இந்த கிரக மாற்றத்தை செய்து இருக்கலாம்"

"எப்படி?"

"இங்கு நிறைய அடிப்படை அணுத்துகள்கள் புதியதாக இருக்கின்றன, ஒருவேளை பிரபஞ்ச விரிதலிலும், கால மாற்றத்திலும் இவைகள் வந்து இருக்கலாம். அதை ஆராய்ந்து அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம்"

"சரி அது ஒருபுறம் இருக்கட்டும் பிரபஞ்சத்தின் தோற்றத்தினை அறியும் வேலையை ஆரம்பியுங்கள்"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"நமது விதிகளின்படி சரியான அளவில் விரிந்து இருக்கிறது, அதோடு பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை கிட்டத்தட்ட நமது விதிகளின் முடிவு சரியாக இருக்கும்"

"அப்படியென்றால்  big bang முறையை சரியானதாக எடுத்துக்கொண்டால் அந்த முதல் அணுவை யார் தோற்றுவித்தது என்பதுக்கு விடை கிடக்கிறதா? "

"ஆய்வில் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை நான் கொடுக்கும் தகவல்களை வைத்து  நீங்களே முயற்சி செய்து பாருங்கள்."

(பூமியில் இருந்து நீண்ட மணிநேர இடைவெளி)

"சரியாக வரவில்லை. சரி அப்படியே அந்த புதிய கிரக நமது வாசிகள் என்ன ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனித்தால் உதவியாக இருக்கும்"

"முயற்சிக்கிறோம்."

   அந்த  எதிர்காலத்தில் இருக்கும் கிரகத்துக்கு சென்றபோது சில மாற்றங்களை காண முடிந்தது. முதலில் இவர்களின் ஆவலான எப்படி புதிய கிரகத்தை சூரிய மண்டலத்தில் உருவாக்கினார்கள் என்பதற்கான விடையை தேடினார்கள், கிடைத்தது....

     ஈர்ப்பு விசைக்கான துகளை கண்டுபிடித்தபிறகு அவர்களால் விரும்பிய இடத்தில் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தவோ குறைக்கவோ முடிந்து இருக்கிறது. அப்படி  செய்து வேறு எங்கோ சுற்றிகொண்டிருந்த வாழத்தகுந்த கிரகம் ஒன்றை நகர்த்தி இங்கு வந்து சுத்த விட்டு இருக்கிறார்கள்.

    அதாவது  அந்த கிரகத்தின் முன்னால் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தி அதுக்கு ஒரு வழியை அமைத்து இழுத்துவந்து இருக்கிறார்கள். நாய்க்குட்டிக்கு பிஸ்கட் கொடுத்து அழைத்து வருவது போல.

     அடுத்து முதல் அணு எப்படி வந்து இருக்கும் என்பதுக்கும் அவர்களிடத்தில் விடை இருந்தது. கண்டுபிடித்தது என்னவென்றால் parallel universe இருக்கிறது.அதாவது நமக்கு இணையான ஒரு பிரபஞ்சம் நமக்கு பக்கத்திலேயே இருக்கிறது.

    அங்கும்  சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதற்கான விதியை கண்டுபிடித்து விட்டார்கள். அதனை சோதனை செய்யும் பொருட்டு முயற்சி செய்த்ததில் நமது பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது.

     அதன்படி அவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவாகியது அல்லது எப்படி உருவாக்குவது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் யார்? ஏன்? உருவாக்கினார்கள் என்பதற்கான விடை இன்னும் நமது இனத்துக்கோ ஏன் அவர்களுக்கோ தெரிந்து இருக்காது.

     அதுவரை நமது பிரபஞ்ச பிறப்பு என்பது  மற்றவர்களின் சோதனை முயற்சியில் உருவானது. சுருக்கமாக நமது கடவுள் இப்போதைக்கு பக்கத்து பிரபஞ்சத்தில்  அவர் எப்படி உருவானார் அல்லது உருவாக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஒருவேளை காலம் அனுமதித்தால் அவர்கள் நம்மிடம் வந்து சொல்லலாம் அலல்து நாம் முயற்சி செய்து அவர்களிடம்  சென்று அறிந்துவிட்டு வரலாம்.

எப்போதும்  எப்படியேனும் ஒரு கேள்வி விடை இல்லமே இருக்கிறது. அதற்க்கான சரியான விடை சொல்லுபவர் வந்து சொல்லாதவரையில்இன்னும் எழுதுவேன்.

          இன்னும் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நீண்ட இடைவெளிதான் நான் எழுதாமல் இருந்த காலம். குறிப்பிட்டு சொல்ல உருப்படியான காரணம் எதுவுமில்லை. சென்னை வந்தபிறகு எழுதுவது குறைந்தது. புதிய இடம் புதிய வேலை, நண்பர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் படிக்க நிறைய புத்தகங்கள் கிடைத்ததும் ஒரு காரணம்.

      சுஜாதாவின் தீவிர ரசிகன் என்பதால் அவரது பத்துகட்டளைகளில் ஒன்றான தினமும் ஒருபக்கமவாது படிக்கவேண்டும் என்பதை கடைபிடிப்பவன்.  இடைப்பட்ட காலத்தில் நிறையவே படித்தேன் புத்தகத்தையும், வாழ்க்கையும். இந்த இரண்டையும் நேராக உங்களோடு பகிர்ந்துகொண்டு குழப்பபோவதில்லை.

         என்ன எழுத போகிறோம் என்ற யோசனை வருவதுக்கு  சாத்தியமில்லை. வழக்கம் போல அறிவியல் புனைவுதான். இதை எழுதத்தான் எனக்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி காதல் கதையோ, சமுக சீர்திருத்த கட்டுரைகளோ, கதைகளோ எழுத என்னால் நிறைய மெனக்கெட  முடியாது. என்னால் அறிவியல் புனைவு எளிதாக எழுதப்பட்டுவிடுகிறது என்பதால் அதையே தொடர்கிறேன்.

          வழக்கம்போல யாரும் படிக்க மாட்டார்கள் என்ற புலம்பல் ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற நான்கு வாசகர்களுக்காவது எழுதுகிறோம் என்கிற  ஒரு சந்தோசம் இருக்கிறது. இதில் இப்போதைய பிரச்சினை நீண்ட இடைவெளியில் அந்த நான்கு பேர்களும் இருக்கிறார்களா? இல்லையா? என்பதே. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

        அதிகம் எழுதாவிட்டாலும் கதைக்கான சிறு குறிப்புகள் நிறையா எடுத்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றையும் கொஞ்சம் விரிவு படுத்தினால் கொஞ்சமாவது படிக்கின்ற வகையில் கதைகளாக  தேறும் என்ற நம்பிக்கை உள்ளது. உடனே இல்லாவிட்டாலும் வேலைநேரம் போக, மின்வெட்டுக்கு தப்பித்து எழுதியதை பகிர்கிறேன். முடிந்தால் படித்துவிட்டு சொல்லுங்கள். பார்க்கலாம் இந்த சுற்று கதைகள் எப்படி இருக்கின்றன என்று.
கரையாத வார்த்தைகள்

                               1

மறுபிறவி பற்றி கொஞ்சம் ஆர்வம் இருந்தால் போதும் இந்தக் கதையைப் படிக்கலாம். மறுபிறப்பு எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லது விளக்கப்படுகிறது என்பதை எனது பார்வையில் இருந்து சொல்லிவிடுகிறேன். ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் ஆத்மா என்ற ஒரு சமாச்சாரம் இருப்பது எல்லாரும் கேள்விபட்டதே. உங்களுக்கு நினைவூட்டும் விதமாக ஆத்மாவைப் பற்றி சிலவரிகள். உடலுக்கு எந்த விதமான முறையில் இழப்புகள் நேர்ந்தாலும் இந்த ஆத்மா மட்டும் அப்படியே இருக்கும். இதுக்கு எந்த பாதிப்பும் எதனாலும் ஏற்படாமல் நித்தியமாக இருக்கக் கூடியது


மனிதனின் இறப்புக்குப் பின்னரோ அல்லது மனித உடல் அழிந்த பின்னரோ வெளியேறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த பிறவியில் கர்மபலன்களுக்கு ஏற்றவாறு அது அடுத்த பிறவிக்கு என்னவாகத் தகுதியாகிறது என்பதைப் பற்றி எனக்குப் போதுமான புரிதல் இல்லை. ஆனால் என்னைப்போல எப்போதும் நல்லவராக இருந்தால் மறுபிறப்பில் சுழலாமல் நித்திய ஆத்மாவோடு அதாவது இறைவனோடு சேர்ந்து விடலாம் என்று பகவத்கீதையில் எப்போதோ படித்த ஞாபகம்


உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா  அடுத்த பிறவி வரைக்கும் எங்கு இருக்கும்? என்னவாகி இருக்கும்? அதுக்கு நீதி முறையில் அடுத்த பிறவியை தேர்ந்தெடுத்து அழிப்பது யார் என்றால் கடவுள் என்ற பதிலோடு முடித்து கொள்வதில் இஷ்டமில்லை. அப்படியே அது மறுபிறப்புக்குத் தேரி ஒரு மனிதானாக மாறவேண்டும் என்றால் எந்த நிலையில் அது அவனோடு சேர்கிறது? எப்படி சேர்கிறது? அதாவது அவன் கருவில் zygote நிலையிலா? அல்லது கரு வளர்ச்சி அடைந்த நிலையிலா?


ஆத்மாவுக்கு அழிவில்லை, அது எதனாலும் மாற்றம் அடையாது என்றால் மறுபிறவி ஜல்லியடிப்புகள் எப்படி நிறைவேறுகின்றன? அவர்கள் சொல்லவருவது ஒருபிறவியில் இருந்து வரும் ஆத்மா அந்தப் பிறவியில் இருந்து சில தகவலை அது சேரப்போகும் அடுத்த பிறவியின் காலக்கட்டத்துக்கு எடுத்துச்செல்கிறது என்பதே. ஆத்மாவுக்கு மாற்றம் இருக்காதென்றால் அது தகவலைக் கடத்துமா??? ஒவ்வோர் உயிர்க்கும் ஓர் ஆத்மா என்றால் மக்கள் தொகை எப்போதுமே ஒரே எண்ணிக்கையில்தானே  இருக்கவேண்டும். அதாவது ஆத்மா அழிவில்லாமல் சுழற்சியில் இருப்பதால் புதியதாகத் தோன்றும் நிறைய உயிர்களுக்கு ஆத்மா எங்கிருந்து வருகிறது அல்லது புதியதாக உருவாகிறது? இந்த மாதிரியான கேள்விகள் என்னைப் போலவே உங்களுக்கும் இருந்து விளக்கம் கிடைத்தும் யோசித்துப் பார்க்கும்போது அது போதுமானதாக இருக்காத பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?


 
மேலே கதையில் சொன்ன விசயங்கள் நான் படித்து எனக்குப் புரியாதவைஇதைப் படித்துவிட்டு நீ எப்படி சொல்லலாம்? இதுக்கு விளக்கம் இப்படி என்று யாரும் உதவ வேண்டாம் அல்லது விரட்டி மடக்கிப் பிடித்து இது பற்றி நீங்கள் எப்படி இப்படி சொல்ல போச்சி என்று கருத்து கேட்கவேண்டாம். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அடுத்தவரி உங்களுக்கே....

மேலே சொன்ன விஷயம்  கற்பனை அன்றி வேறொன்றுமில்லை.

                                                                   2

கண்டிப்பாக ஆத்துமா என்ற ஒன்று இருந்தேதான் ஆகவேண்டும். அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால்  ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அப்படி இல்லையென்றால் எப்படி ஒரு பிறவியில் நடந்த விசயங்கள் அப்படியே அவரது மறுபிறவியில் நினைவுக்கு வருகிறது? ஆத்மா அழிவில்லாதது, உருவமற்றது போன்ற என்ன விளக்கம் இருந்தாலும்  ஆதராம் இல்லாமல் இருப்பதால் அதை நம்புவது கடிமானாக இருக்கும் பட்சத்தில், போன பிறவியில் அல்லது  பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் தொடர்புபடுத்திச் சொல்லும்போது அப்போது வாழ்ந்ததுக்கும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதுக்கும் ஏதோ ஒன்று பொதுவாக  அல்லது மையமாக இருக்கத்தானே செய்கிறது.


அவ்வாறு இருக்காத பட்சத்தில் ஒரு காலத்தில் மண்ணோடு மக்கிப்போன அல்லது தீயில் எரிந்துபோன  ஒரு மனித உடலின் அடங்கிய  ஆசைகளும் எண்ணங்களும் கஷ்டங்களும் எப்படி பல காலம் கழித்து நினைவுக்கு கொண்டுவரப்படுகிறது? நான் ஒத்துக்கொள்கிறேன் ஆத்துமா இல்லையென்று, ஒரு பிறவியில் நடந்த பல விசயங்கள் எப்படி பலகாலம் கடந்த நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நினைவுக்கு ஏறுகிறது என்பதை நிரூபித்தால்...


                                                                                 3
 உண்மை:

       
முதன்முதலில் Caton என்பவர்  1875 ஆம் ஆண்டு விலங்குகளின் மூளையில்  மின்சார மாற்றங்கள் நடைபெறுவதைக் கண்டுபிடித்தார். அடுத்து 50 வருஷங்கள் கழித்துத்தான் அதே மாதிரியான மின்சார மாற்ற நிகழ்வுகள் மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பதை Hans Berger கண்டுபிடித்துச் சொன்னார். சரி ஏன்? எப்படி அந்தச் சிறிய அளவு மின்சார சக்தி உருவாகிறது மனிதனுக்கும் விலங்குகளுக்கும்? இங்கு மனிதனுக்கு எப்படி உருவாகிறது என்பது கதைக்கு நிறைய ஒத்துப்போவதால் அதையும் அதோடு சேர்ந்த சில விசயங்களையும் எழுதுகிறேன்.


பல பில்லியன் நியூரான் செல்கள் சேர்ந்து உருவானதுதான் நம்முடைய மூளை. உடலின் எல்லா வேலைகளுக்கும் செயற்பாட்டுக்கும் கட்டளைகளைக் கொடுப்பது மூளை என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்தக் கட்டளைகளை எப்படி கொடுக்கிறது அல்லது கடத்துகிறது? இந்தக் கட்டளைகளை உருவாக்க  நமது புலன்களில் இருந்து பெறப்படும்  தகவல்களை எவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று பரிமாறி இறுதியான முடிவு ஒன்றை எடுக்கிறது? மூளையில் எல்லாவிதமான தகவல் பரிமாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிப்பது இந்த நியூரான் செல்களே. ஒவ்வொரு நியூரான் செல்லில் இருந்தும் மற்ற செல்லுக்குத் தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் ஒரு விளைவே இந்த சிறிய அளவிலான மின் அலை.


இந்த மின்னலைகள் மூளையின் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு மாறுபடும். எனவே இந்த அலைகளை அளந்து பார்ப்பதின் மூலம் மூளையின் தன்மையைக் கணிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. அதுவும் மிகவும் துல்லிய முறையான EEG (ElectroEncephaloGram). அதாவது மூளையின் செயற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அப்போது வெளியேறும் மின் அலைகளை அளந்து அதைவைத்துக் கணித்துவிட முடியும். அதுக்குத் தலையை ஓட்டினால் போல ஒரு மருத்துவக்கருவியைப் பொருத்தி வெளியிடப்படும் மின் அளவுகளை அளந்து கொள்கிறார்கள்.


இதில் நான் சொல்ல வருவது மூளையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனியான அலைநீளம் கொண்ட மின்னலைகள் உருவாகும். அதையும் வகைபிரித்து alpha, beta, gamma வைத்து இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தேடிப் படிக்கவும்.


கற்பனை: 


மின்காந்த அலைகள் வெவ்வேறு அலைநீளங்களில் இருந்தால் அவை ஒன்றோடு இணைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரத்தில் ஒரே அலைநீளம் கொண்ட அலைகள் இணைந்து பயணிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட வானொலி  நிகழ்ச்சி ஒன்று  அதன் அலைநீளத்தில் வைத்துக் கேட்டால் மட்டுமே கேட்கும். அதே இடத்தில் இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை ஒரே அலைவரிசையில் அனுப்பினால் எப்படி இருக்கும்


இரண்டும் ஒன்று சேர்ந்து கேட்பது போல இருக்கும். இதற்கு மிகத்துல்லியமான அலைநீள ஒற்றுமை வேண்டும். இதைக் கொஞ்ச நேரத்துக்கு மனதில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். காதல் கதை என்றால் பிரச்சினை இல்லை, ஆர்வமாகப் படிக்க முடியும் எதுவும் மறக்காது. ஆனால் இது கொஞ்சம் அறிவியல் கதை என்பதால் மறக்க வாய்ப்பு உள்ளது. அபப்டி மறந்துவிட்டால் அடுத்து சொல்லப்போவது உங்களுக்குப் புரியாமல் போகலாம். வழக்கம் போலக் கதையின் கடைசி முடிவுக்கு நீங்கள் போகலாம்.


இப்போது நமது மூளையில் உருவாகும்  மின்விசைக்கு அலைநீளம் வைத்து அதைத் தரம் பிரித்து இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். அப்படி இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் சந்தோஷமான அல்லது துக்கமான  நிகழ்ச்சிகளைத் தன் வாழ்வில் எதிர்கொள்கிறார். அப்போது அவரின் மூளையில்  உருவாகும் மின் அலை ஒரு அலைநீளத்தில் இருக்கும். சில நேரங்களில் அவை மண்டை ஓட்டை தாண்டி வெளியில் இருக்கும் அணுக்களில் பயணிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு வடிவத்தில் அது தங்கி இருக்கலாம். அது அப்படியே காற்றிலேயே சுற்றித் திரிந்துகொண்டேதான் இருக்கும்


எப்போதுவரை? அதே அலைநீளம் கொண்ட மற்றொன்று அதோடு சேர்ந்து அதையும் தனது போக்கில் இழுத்துச் செல்லும் வரை. புரிகிறதா? ஒருவரின்  மூளையில் இருந்துவரும் மின்னலை வெளியில் இருக்கும் அணுக்களில் பயணித்தோ அல்லது  தங்கி இருந்தோ அதே அலைநீளம் கொண்ட மற்றொருவரின் மூளையில் உருவாகும் மின்னலையோடு சேர்கிறது. புதியதாகச் சேரும் அந்த அலை என்னவாக இருந்தாலும் சரி அதை மூளை கிரகித்து அதன்படி செயல்படத் தொடங்கும். அதுக்குத் தேவை செயல்பட தகவல் மட்டுமே. இப்பொது புரிகிறதா மற்றொரு பிறவியில் நடந்த விஷயங்களை எப்படி ஒருவர் இப்போது தெளிவாகக் கூறமுடிகிறது என்பது?


இன்னும் காற்றில் அணுக்களில் முன்னோரின் தகவல்கள் சுற்றிகொண்டுதான் இருக்கின்றன. எப்போது உங்களது மூளையின் மின்னலைகள் அவற்றோடு ஒத்துபோகின்றனவோ அப்போது அத்தகவல்களை நீங்களும் மொழிப்பெயர்ப்பு செய்யலாம்.