கதைசொல்லிகள்

   
    புத்தகக் கதைகள் வாசித்து அறியாத காலமது. படிக்கின்ற புத்தகங்கள் தவிரப் பக்கத்தில் உள்ள கடையில் சாமான் மடித்துக் கொடுக்கும் ஏதாவது ஒரு தாளில் உள்ளதை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஒழிய வேறேதும் அப்போதைக்கு வாசிக்க இருக்காது. அப்போதெல்லாம் வாசிக்கும் ஒருவித ஆசை இருந்தாதகக் கூட நினைவில்லை.

    அந்த நிலையில் வரமெனக் கிடைத்த ஒன்றுதான் எனது தெருவில் இருந்த வாயதன பாட்டிகள் சொல்லும் கதைகள். அவர்களாகச் சொல்வதில்லை நாம்தான் சொல்ல வைக்க வேண்டும். அதற்கும் நிறையா வழிமுறைகள் இருக்கவே செய்தன.

    அவர்கள் சொல்லும் கதைகளில் பெரும்பாலும் ராஜா,ராணி, அவர்களில் யாருக்காவது ஒருவருக்குப் பிடிக்காத சில எதிரிகள், அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் அல்லது என்ன செய்து தனது வாழ்வை வாழ்கிறார்கள் என்பதுதான் அதிகமாக இருக்கும். கொஞ்சம் அடர்ந்த காடு ஏதாவது மிருகம் எங்களைப் பயம் காட்ட அல்லது கதையில் விறுவிறுப்புக் கூட்ட அடிக்கடி வந்துபோகும்.

    கதையின் இறுதியில் ஏதாவது அறிவுரை இருக்கும். அம்மா சொல்வதைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்/ ஒழுங்கா படிக்க வேண்டும் . இல்லையென்றால் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் மாதிரியாக நேரிடும் என்ற எடுத்துக்காட்டுப்பாடம் கிடைக்கும்.

    ஆச்சர்யமான ஒன்றென்றால் சில தொடர்கதைகளும் உண்டு. சில மணிநேரங்களாகச் சொல்லி நான்கு நாட்கள் வரையிலும் நீளும். ஒவ்வொருநாளின் கதைத் தொடக்கத்தின் போதும் ம்ம்ம் நேத்து எதுல விட்டேன் என்று கேட்டுவிட்டு நாங்கள் சொல்லும் இடத்தில் இருந்து அதே கதை மீண்டும் தொடங்கும் விதம் என எல்லாமே இப்போதும் ஒரு அருமையான நினைவாக இருக்கவே செய்கிறது. ஒருவேளை அந்த நினைவுக்காகத்தான் இதை எழுதுகிறேனா??

    அல்லது அந்த வயதில் என்னில் பல கேள்விகளையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாட்டிமார்களை நினைவு கூறவா? இந்த இரண்டையும் செய்யவே விளைகிறேன்.

    முதலில் எனது கதை சொல்லி பாட்டிகளை ஒரு சிறு அறிமுகம் செய்து எனது மனதையும் கொஞ்சம் கிளறி விட்டுக்கொள்கிறேன். மழைக்கு ஏங்கி நின்ற பயிர்களுக்கு மழை பொழிந்த பிறகு பயிரடிப்புச் செய்து மண்ணைக் கிளறதுவது போலதத்தானே இதுவும் அவ்வளவு சுகமானது இல்லியா?

     நான் அதிகம் கதைகேட்ட ஒரு பாட்டி என்றால் அது கோட்டூர் பாட்டி தான். அவர்களுடைய உண்மையான பெயர் இதுவரையிலும் எனக்குத்தெரியாது. எனக்கு மட்டுமில்லை ஊரில் அப்போது இருந்த பலருக்கும் அவருடைய பெயர் தெரிந்திருக்க வாய்பில்லை. காரணம் அப்போது அனைவரையும் அடைமொழி அல்லது பட்டப்பெயர் வைத்தே கூப்பிடுவது அல்லது அடையாளப்படுத்துவதுதான் வழக்கம். பட்டப்பெயர் என்றால் பெயருக்கேற்றபடி அது அவர்களுக்குக் கிடைத்த பட்டம் மாதிரியேதான் அவர்களும் அதைப் பாவித்து என்னைப் போன்ற சிறுவர்கள் உபோயோகித்தாலும் அவர்களிடத்தில் எந்தச் சலனமும் இருக்காது.

    அவர்களுக்கு அந்தப் பெயர் வந்த காரணம், அவர்கள் பக்கத்து ஊரான கோட்டூரில் இருந்து வந்து அந்த ஊரில் குடியேறியவர்கள். இந்த மாதிரி ஊரில் பலபேருக்குப் பெயரில்லாமல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அமைந்துவிடுவதுண்டு.

      இந்தப் பாட்டி எனது தெருவில் எனது வீட்டுக்கு அருகிலேயே முதல் வீட்டில் இருந்தார்கள். எனது வீடு தெருவைப் பார்த்தபடியிருக்கும். அந்தத் தெருவே எனது வீட்டின் வாசலில் இருந்து தொடங்கி ஒரு பிரதான தெருவோடு இணைவாதாக இருக்கும். தெருவின் இருபுறமும் வீடுகள் இருக்கும். அதில் முதல் வீடுதான் இவர்களுடையது.

        ஏதோ சில காரணங்களுக்காகத் தனியாகத்தான் ஒரு மண்வீட்டில் இருந்தார்கள். ஏனென்று புரிந்துகொள்ளும் வயதும் ஆர்வமும் அப்போதைக்கு இருக்கவில்லை. அதிக வயதானவர்கள். எத்தனை வயதென்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத்தெரியாது. ஆனால் அவர்கள் வயதொத்தவர்களோடு இணைத்து நான் அவளை விட இத்தனை வருடம் சிறியவள்,பெரியவள் என்று தனது காலத்தை அறிந்து கொள்வார்கள். இல்லையென்றால் குத்துமாதிப்பாக ஒரு தோராய வயதைச் சொல்லுவார்கள். அதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

        இந்தப் பாட்டியும் இதே வகைதான். வயது தெரியாது. யாராவது காட்டுவேலைக்குக் கூப்பிட்டால் முடிந்தால் போவர்கள். முடியவில்லையென்றால் வழக்கம் போலக் கம்மங்கஞ்சி குடித்துவிட்டுத் திண்ணையில் படுக்கைதான். காதில் பெரிய பாமடம் போட்டிருப்பார்கள். கொஞ்ச காலம்வரை அது முழுதும் கட்டித்தங்கம் என்றே நினைத்திருந்தேன்.ஆனால் உண்மையில் அது அப்படியில்லை. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது, அந்த அளவுக்குப் பாட்டியின் காது இழுத்து தோள்பட்டைவரைத் தொங்கும்

      இந்தப் பாமடம் எனும் அணிகலன் பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை. பெரும்பாலும் பாட்டிகள் அணியும் ஒரு அணிகலன். பெரிய அளவில் இருக்கும். பெரிய அளவென்றால கையை மடித்தால் உள்ளங்கை அளவுக்கு. மத்தியில் சதுரமாகவும் அதனைச்சுற்றி உருண்டை உருண்டையான கோலிக்குண்டுகள் போன்று ஒரு அமைப்பு. அப்போது பெரும்பாலான கொஞ்சம் வசதியுள்ள எல்லாப் பாட்டிகளும் இந்தப் பாமட பாக்கியத்தைப் பெற்றிருக்கவே செய்தார்கள்.

      எங்கள் வீட்டு வாசலுக்கு முன்னிருந்த இடத்தில்தான் நாங்கள் விளையாடுவோம். வேகின்ற வெயிலென்று சொல்லுவார்கள் அதென்னதென்று அறிய வயதென்பதால் எப்போதுமே ஒரே கூச்சலும் கும்மாளமாய் இருக்கும் அந்த இடத்தில். இது கோட்டூர் பாட்டியின் தூக்கத்துக்குப் பெரும் இடைஞ்சல்.

       அவர்கள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் “பள்ளிக்கூடம் விட்டாசுன்னா இந்தப் புள்ளக்காடு அநியாயம் தாங்க முடில தாயே” என்று எதிர்படும் யாராக இருந்தாலும் சொல்வார்கள். ஒருமுறை அப்படிப் பேயாக ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் இங்க வந்து உட்காருங்க நான் கதை சொல்கிறேன் என்ற குரல் கேட்டது.

     கொஞ்சப்பேர் பாட்டியை சுத்தி உட்கார்ந்தோம். சுவத்துல சஞ்சபடி காலை நீட்டிக்கொண்டு என்ன கதை சொல்லனும்னு சொல்லுங்க சொல்றேன் என்றார்கள்.

     எதாச்சும் ஒன்னு சொல்லுங்க என்று சொல்லியவர்களில் மொத்தம் மூன்று நான்கு பேர் மட்டுமே இருந்திருப்போம். மீதி அனைவரும் பாட்டியின் பேச்சுக்கு ஏமாறாதவர்கள் அப்போதைக்கு.

      பாட்டிக்கு கடாப்பல்லைத் தவிர வேறு பற்கள் இல்லாத பொக்கையான வாய். இதில் பொடிப்பழக்கம் வேறு. அவர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னாடி செய்கின்றன செய்கைகளையே ஒரு கதையாக எழுதாலம்.

     சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சொன்ன கதை, குழந்தையாகப் பிறந்த ராணியைக் காட்டில் கொண்டுபோய்க் கொன்றுவரச் சொல்ல, செல்பவன் அங்குக் காட்டில் இருக்கும் முனிவரிடம் கொடுத்துட்டு ஒரு கிளியை கொன்று அந்த ரத்தத்தை அரண்மனையில் வந்து காட்டிவிடுவான். அப்புறம் அந்த ராணி வளர்ந்து பெரியவளாகும் வேளையில் அந்த நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்பட்டு அனைவரும் அந்த முனிவரை நாடி காரணம் கேட்க, அவர் அந்தப் பெண்ணைக்காட்டி இவள் இந்த நாட்டுக்கு ராணியானால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்ல்வதைகேட்ட அந்த மன்னர் அப்படியே செய்யவதாக ஒப்புக்கொள்கிறார். உடனே நாடு செழிக்கிறது. கொஞ்ச நாள் கழித்து அந்த முனிவர் மன்னரிடம் சென்று அவள்தான் உங்களுடைய மகள், நீங்கள் கொல்லச் சொன்னவன் என்னிடம் கொடுத்தான். அவள் பாவம் பிடித்தவள் இல்லையென்பதை நீருபிக்கவே நான் இப்படிச் செய்தேன் என்று சொல்ல மன்னரும் வணங்கி தனது தவறுக்கு வருந்த, அதுக்குப்பிறகு நாடே சுபிட்சமாக இருந்ததாகக் கதை முடியும்.

       இங்கு நான் ஒரு பத்தியில் சொன்ன கதை பாட்டியினால் குறைந்தது சில மணி நேரங்கள் வரை சொல்லப்பட்டது எனக்கு. நிறைய வர்ணனைகள் அவர்களுடைய கதையில் இருக்கும். இடையிடையே எங்களை ஏமாற்ற அவ்வளவுதான் கதை முடிஞ்சது இத்தோட என்று சொல்லி விரட்ட முற்படுவார்கள். ஆர்வமாகக் கதை கேட்கும் நான் இது என்னாச்சு? அது என்னாச்சு என்று கேட்க கதை தொடரும். அதற்கு அவர்கள் சொல்லும் வசனம்” அய்யயோ இந்தப் புள்ளைங்ககிட்ட கதை ஆரம்பிச்சது தப்பால்ல போச்சி” இதுதான். ஆனாலும் ஒரு கதையையும் முடிக்காமல் விட்டதில்லை.

      தொடக்கத்தில் விடுமுறை நாட்களில் கேட்கத் தொடங்கிய பழக்கம் தினமும் அவர்களைத் தொந்தரவு செய்யும் அளவுக்குப் போனது. கொஞ்ச நாட்கள் சலிக்கலாமல் சொன்னார்கள் அதற்குபிறகு கதை தீர்ந்து போனதாகச் சொல்லி மறுத்தார்கள் அல்லது எனக்குத்தெரிந்த கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டதாக விரட்டுவார்கள். கொஞ்சம் பாசமாகக் கெஞ்சினால் கண்டிப்பாகக் கதை கிடைக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை உபோயோகித்துக் காரியம் சாதித்திருக்கிறேன்.

      எனது பாட்டியும் அவர்களும் கிட்ட தட்ட ஒரே வயதுடையவர்கள். நான் தொந்தரவு செய்வதை “அய்யயே என்னமா இந்தப் புள்ள இப்படிக் கத கதைன்னு பாட படுத்துது” என்று சொல்லும்போதேல்லாம், “நீயென்ன வெட்டியா முறிக்கிற கத சொல்ல வேண்டியதுதானே” என்ற பதில்தான் என் பாட்டியிடமிருந்து வரும்.

   அதற்கு  ”ஏன் உங்க பேரனுக்கு நீங்க சொன்னா என்ன?” என்ற கேள்விக்கு விடையிருக்காது. இருந்தாலும் எனது சொந்த பாட்டிகளிடம் இருந்து எந்தவொரு கதையும் இதுவரையில் கேட்டதில்லை. ஆனால் தாலாட்டு பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை எங்கு இதைப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு “ ஆமா படிக்கிறோம், காதுவழி கேட்டதுதான்” என்ற பதில் வரும்.

       தாலாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் அன்றாடம் நடப்பதைத்தான் கொஞ்சம் இழுத்து ராகமாகப் படிப்பார்கள். மாமா அதுகொண்டு வாரான், இது கொண்டு வாரான்,அழுகாம தூங்கு, யாரடிச்சா? மாமாட்ட சொல்லலாம் இந்த மாதிரி. ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தொடர்ச்சியாக வருவதுதான் இதன் சிறப்பு. சின்னக் குழந்தைக்கு எங்கே புரியப்போகிறது என்ற எண்ணத்தில் எந்தப் பாட்டியும் தாலாட்டில் பிசகு செய்வதில்லை. அதுவும் ஒரு கலை அவர்களுக்கு.

      இதே மாதிரிதான் கோட்டூர் பாட்டிக்கும். கதை சொல்லும்போது நாங்கள் எங்காவது பெராக்கு பார்த்தால் அவ்வளவுதான் கதை சொல்வதை நிறுத்திவிடுவார்கள். மீண்டும் நிலமைக்குக் கொண்டுவருவது மிகக் கடினமான விஷயம். சில நேரங்களில் எங்களிடமிருந்து தப்பிக்க இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டதும் உண்டு.

     இப்படித் தொடங்கியதுதான் எனது கதைகளுக்குள்ளான பயணம். அப்போது எனக்கிருந்த கதைகேட்கும் ஆர்வம் இப்போது வாசிப்பதில் இருப்பதாக உணர்கிறேன். காரணம் பத்திலிருந்து பதினைந்து வயது வரைக்கும் இருக்கும் சிறுமைப் பருவமே ஒருவனுடைய பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை எங்கோ வாசித்திருக்கிறேன்.( நிகிதாவின் இளம்பருவம் என்ற நாவலில் என்ற நினைவு சரியாகத் தெரியவில்லை)

    பாட்டியின் ஒவ்வொரு முற்றுப்புள்ளிகளுக்கும் “ம்ம்ம்” கொட்டவேண்டும். கதையின் ஆர்வத்தில் அது தானாகவே வந்துவிழும். வந்த காலத்தில் அந்தப் பாட்டியைக் கதை கேட்டுத் தொந்தரவு செய்ததில் நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். ஒருவனுக்காக அவர்கள் கதை சொல்லத் தயங்கியதில்லை. அனேகமாக அன்று தொடங்கிய தனிமையின் மீதான ஆசை இன்றும் தொடர்கிறது.

     தனிமைக்கே தனிமையேற்ப்பட்டால் தயங்காமல் என்னிடம் வரலாம் என்ற நிலமையில்தான் நான் இருந்திருக்கிறேன் புத்தகங்களோடும் கதைகளோடும். இந்தப் பழக்கம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது என்று சொன்னால் அது தகும். போட்டபாதை மிக நல்ல பாதை. காரணம் நான் இன்னும் தனிமையை அதிகமாக விரும்புகிறேன். துளியும் வெறுக்கவில்லை. தனிமைக்கு நான், எனக்கு என்னுடைய புத்தகங்கள்.

      இப்போதைக்கு இந்த ஒரு கதை சொல்லியை மட்டும் சொல்லி முடிக்கிறேன். முடிந்தால் மீண்டுமொரு பதிவில் மற்றவர்களைப் பார்க்கலாம்.

     எனக்குள் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கவலை, இந்த மாதிரியான பாட்டிகளிடம் இருக்கும் அர்த்தம் மிகுந்த கதைகள் அப்படியே செவி வழியாக மட்டும் கேட்டுணர்ந்து காலத்தின் பயணத்தில் யாரும் கேட்காமல் அல்லது சொல்ல வாய்ப்புக் கொடுக்காமல் காற்றில் கரைந்து விடுவதுதான். இது சாதாரண இழப்பில்லை என்பதை நீங்களும் பாட்டிகளிடம் கதை கேட்டிருந்தால் உணரமுடியும்.

      எப்படியோ, குறைந்த பட்சம் பாட்டியளவு கதை சொல்லாவிட்டாலும் உங்களின் குழந்தைகளுக்குக் கொஞ்சமமாவது கற்பனை எனும் உலகத்தை விரிக்க உதவுங்கள். அதன் முதல் சாவியே இந்த மாதிரியான சிறுவயது கதைகளில்தான் இருக்கிறது என்பது எனது அனுபவ அறிவு. அடுத்தச் சாவி புத்தக வாசிப்பு. முடிந்தவரை இந்த இரண்டில் ஒன்றாவது செய்ய முயற்சிக்கலாம்.

சில விசயங்கள் - 14

      எதிர்பாராமல் கிடைக்கின்ற அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்புகளின் சுகமே அலாதியானதுதான். அந்த வகையில் அண்மையில் எனக்குக் கிடைத்த ஒன்று உடையார். இதைப் பாதி அதிர்ஷ்டம், மீதி நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். காரணம் இதுவரை நான் பாலகுமாரன் அவர்களின் எழுத்தை வாசித்தது கிடையாது. அதிகமாக அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். இருந்தாலும் அவரது படைப்பை இதுவரை வாசித்திருக்கவில்லை.

      லா.ச.ரா வின் எழுத்தைச் சில மாதங்களுக்கு முன் வாசிக்க ஆரம்பித்தபோது இருந்த மன நிலையை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியவர் பாலகுமாரன் அவர்கள். நான் முதன்முதலில் லா.ச.ரா வை படிக்கும்போது இதுவரையில் தமிழில் வாசித்தும், வாசிக்கும் பழக்கம் இருந்தும் இவரது படைப்பை எப்படித் தவறவிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே எனது வருத்தம். அந்த வருத்தம் அடுத்து வந்த காலத்தில் லா.ச.ரா வையே சுவாசித்ததில் போய்விட்டது. இப்போது பாலகுமாரன்.

      இந்த இருவருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கவே செய்கிறது. காரணம் லா.ச.ரா வை மனதில் வாங்கி வாசித்தவன். கிட்டதட்ட மனதை அவரின் எழுத்தில் அடகு வைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அதே ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்தியது பாலகுமாரன் அவர்களின் எழுத்து. இந்தவகையான உணர்வு வாசிப்பவர்களின் மன நிலையைப் பொறுத்து மாறும் ஒன்றாக இருப்பினும், நான் உணர்ந்ததைத் தான் இங்கு எழுத முடியும்.

லா.ச.ரா.

    இவரது  எழுத்தென்றால், அதில் வரும் சூழ்நிலை அல்லது அதில் வாழும் கதாபாத்திரமாகவே மாறி, கதையோடு செல்வதுதான் எனது வாசிப்பு. சில சமயங்களில் இவரது எழுத்து புரியவில்லை என்பதை வாசிக்க நேர்ந்ததுண்டு. சற்று ஆச்சர்யமான விசயம் இந்த விளக்கமான, ஆத்மாத்தமான எழுத்தே மனதுக்குள் கிரகிக்கவில்லையெனில் வேறெது? என்ற கேள்வியே எனக்குள் மீதமிருந்தது.

      அத்தோடு நிற்காமல் ஏன் புரியாமல் போனது என்ற காரணத்தையும் அறிய முயன்றபோது என்னுள் எனக்கே பதிலளித்து என்னையே நான் தேற்றிக்கொண்ட பதில்: “வாசிப்பவர்கள் படைப்பை எழுதியவர் ஒருத்தர்(லா.ச.ரா), அதில் வாழ்பவர்கள் சிலர், அதைப் படிப்பவன் நான்” என்று இருப்பதே காரணம். ஆனால் யாரொருவர் இதில் இரண்டைத் தவிர்த்து “நான் வாசிக்கிறேன் அதனால் அந்தப் படைப்போடு ஒத்துப்போய் மனதளவில் சிலமணிநேரங்கள் அதாகவே வாழ்கின்ற நிலையில் அவருக்குப் புரியாததென்று ஏதும் மிஞ்சியிருக்க வாய்ப்பேயில்லை.

இலக்கியமென்பதும் இதுதானே(இந்த உணர்வு) இல்லியா?

     இப்போதெல்லாம் இதுதான் இலக்கியம், இது இலக்கியத்தில் சேராது என்ற செய்தியை படிக்கும்போதே ஏதோவொரு சகிக்காத உணர்வுதான் எழுகிறது. எப்படி இவர்களால் இலக்கியமென்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடிகிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் இருக்கிறது.

         இதே வகையில் சில கேள்விகளும் பல வருடங்ககளாகத் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சிலவற்றை நான் இங்குச் சொல்வதின் மூலம் என்னுள் இலக்கியமென்பது எந்த வகையில் புரிந்ததாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
1.    கடவுள் இருக்கிறாரா? இருந்தால் எப்படித் தெரியும் அல்லது எப்படி உணரமுடிகிறது அந்த உணர்வை எனக்கும் விளக்க முடியுமா?
2.    மற்ற உணவுகளையாவது ஓரளவு விளக்கிவிட முடியும், இந்தக் காதல் என்றால் எப்படி இருக்கும்? மனதில் அதன் பிம்பம் என்ன என்பதைக் கொஞ்சம் சொன்னால் என்னுடைய பல கேள்விகளுக்கான விடை இதிலேயே அடங்கிக் கிடக்கின்றன.

        இந்தக் கேள்விகளுக்கு என்னைத் திருப்திபடுத்தும் வகையில் பதிலளித்துவிட்டால் அவர்கள் இலக்கியமென்று எனது எழுத்தைச் சொன்னால் கூட நான் நம்பத்தாயர்
.
      இலக்கியமென்பது வாழும் வாழ்க்கையின் சூழ்நிலை சார்ந்த தன்மையின் வெளிப்பாடோ அல்லது மொழி சார்ந்த அல்லது அதன் கலாச்சர தாக்கத்தின் வெளிப்பாடக இருக்கலாம் என்ற கருத்து இலக்கியமென்ற முடிவில்லா புத்தகத்துக்கு ஒரு பத்தியாகக் கொள்ளலாம்.

சரி விடுங்கள் கொஞ்சம் தடம் மாறிவிட்டது இல்லையா...? இதை மற்றோர் தனிப்பிரிவாகப் பார்க்கலாம். இப்போது பழைய தடத்திற்கு வருகிறேன்.

          கடைசியாக மனம் முழுதும் லா.ச.ரா வும் தமிழில் வாசிக்க வேண்டிய சில படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக்கொண்டும் இருந்த ஒரு தருணத்தில், தாம்பரத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் “உடையார் பாகம்-1” என்று கையினால் எழுதப்பட்ட பதிகப்பகத்தார் வெளியீடு இல்லாத ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். எப்போது அந்தப் பக்கம் போனாலும் எதவாது உபோயோகமான ஆங்கிலப் புத்தகங்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதற்காகவே அந்தக் கடையில் சிறிது நேரம் செலவிடுவது எனது வழக்கம்.

      கையில் எடுத்தபிறகுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்துக்குப் பின்னால் அதனுடைய மற்ற பாகங்கள் இருந்தன. அதாவது உடையார் பாகம்-2, & 3 & 5 ஏனோ நான்காம் பாகம் இல்லை. கொஞ்சம் முன்னுரையில் வாசித்ததில், தஞ்சை பெரியகோவில் மற்றும் இதை இன்னும் பெரிய அளவில் எழுதப் போவதாகப் பாலகுமாரன் அவர்கள் சொன்னது அதற்குச் சான்றாக அங்கு அதே படைப்பின் பல தொகுதிகளைப் பார்த்தது போன்றவைகளே அந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசிக்கத் தூண்டியது.

        ஒரே மூச்சில் வாசித்தேன். என்னுடைய பழக்கமா? அல்லது அந்ததந்த படைப்பின் தாக்கமா? என்றெல்லாம் எனக்குத்தெரியாது. சில படைப்புகளையே இந்த மாதிரி வாசித்ததுண்டு. லா.ச.ரா. வின் அபிதா, சிந்தாநதி, பாற்கடல் மற்றும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் போன்றவைகள்.

       சிலமணி நேரம் பண்டையத் தமிழ்ச்  சமூகத்தில் வாழ்ந்தேன் என்ற உணர்வை என்னுள் விட்டுச் சென்ற ஒரு படைப்பு. கனமான புத்தகம் வாசிக்க வாசிக்க அந்தக் கனம் மனதில் ஏறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

      முடித்தபிறகு நான் அறிந்து கொண்டதெல்லாம் ராஜராஜ மன்னர் தஞ்சை பெரியகோவிலை கட்டினான் என்பது மிகத்தவறு கட்டினார் என்பதே சரியான ஒன்று. இதன் அர்த்தம் முழுதும் புரிய நீங்களும் என்னைப்போலப் பாலகுமாரனின் எழுத்தின் மூலம் அந்த மன்னரின் ஆட்சியில் சிலமணி நேரமாவது ஒரு சாதாரணமான குடிமகனாக வாழ்ந்து பார்க்க வேண்டும். அல்லது என்ன நடக்கிறதென்பதைத் தூரத்தில் நின்றுகொண்டு வேடிக்கையாவது பார்த்திருக்க வேண்டும்.

         மீண்டும் அதே பழைய கடைக்குச் சென்று மற்ற தொகுதிகளைக் குறைந்த விலைக்கு வாங்கும் எண்ணம் மனதில் துளியும் இல்லாமல் போக, அதன் முழுத்தொகுதியும் கிடைக்கிறது என்பதை அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இதுவும் இருக்கிறது.

இப்போது பாலகுமாரனின் பிற எழுத்துக்களையும் வாசிக்கிறேன்.

      என்னுள், வாசிப்பென்றால் வெறுமனே பக்கங்களை வேகமாகப் பொழுதுபோக்கிற்காகப் புரட்டுவது இல்லையென்பதை உணர்த்தியவர் லா.ச.ரா. எழுத்தின் தாக்கம் மனதில் வின் வின்னென்று இருக்கவேண்டுமேன்பார். நெருப்பு என்றால் வாய் சுட வேண்டுமென்பார். ஆம் எனக்கும் சுட்டது. அந்தவொரு மன நிலையைத் தனது எழுத்தின் மூலம் உருவாக்கிய பின்னர், மற்ற படைப்புகளை உள்வாங்கிக் கிரகித்துச் சந்தோசிப்பதில் எந்தவொரு தேக்கமும் இருக்கப் போவதில்லை.

எனக்குமில்லைதான். சந்தோசத்தைப் பகிரும் ஒரு  நிகழ்வுதான் நீங்கள் மேலே வாசித்தது. வேறொன்றுமில்லை.

சருகுகள்

    இந்த வரியை நீங்கள் வாசித்ததில் இருந்து என் கதைக்குள் நுழைந்து விட்டீர்கள். ஆமாம் இது என் கதை. இப்படி சொன்னவுடன் நான் யார்? ஏன் என்னுடைய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும்? அப்படி என்ன என் கதையில் இருக்கிறது? போன்ற எண்ணங்கள் வந்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த வாசிப்பைத் தொடர்வீர்கள். தொடருங்கள்.
            நான் ஒரு டெல்லிவாசி. பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குச் சேர்ந்து, ஏன் இந்த கதையை உங்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கையில் கூட நான் இங்குதான் இருக்கிறேன். நான் எங்கு இருக்கிறேன், எந்தத் தெருவில் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறேன், நான் இருக்கும் தெரு எப்படிப்பட்டது, எத்தனை மரங்கள், வளைவுகள் என்று வர்ணித்து உங்களைச் சலிப்படைய செய்ய மாட்டேன். என் கதைக்கும் இவைகளுக்கும் துளிகூட சம்பந்தமில்லை
.
            அதேபோல் சிறுவயதில் நான் இப்படி இருந்தேன், என் படிப்பு இப்படி இருந்தது, என்னுடைய சிறுவயதில் இதெல்லாம் நடந்தது, இவையெல்லாம் நான் ரசித்தவை போன்ற இத்தியாதிகளையும் சொல்ல போவதில்லை.
            சரி நீ என்னதான் சொல்ல வருகிறாய் உன்கதை என்ற பெயரில் என்று நீங்கள் கேட்டாலோ/ யோசித்தலோ கண்டிப்பாக நீங்கள் இன்னும் என் கதையின் வாசிப்பைத் தொடர்வீர்கள்.
            நான் தேவையில்லாதவற்றைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் சொல்ல வருகிறேன் என்பதை நான் மேலே சொல்லாமல் விட்ட பல விசயங்களில் இருந்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அதற்கு ஏற்றவாறு நானும் தொடர்கிறேன்.
            படித்து முடித்த எனக்கு அது முதல் வேலை. கொஞ்சம் பயம் நிறைய ஆர்வம். எனக்கு எப்போதுமே புதிய விசயங்களில் அதிக ஆர்வம் உண்டு. சேர்ந்த மூன்று மாதங்கள் பயிற்சி என்ற பெயரில் சந்தோசமாகப் போய்விட்டது. அதில் தெரிந்துகொண்டது படித்ததுக்கும் வேலை செய்யப்போவதுக்கும் சுத்தமாக சம்பந்தமே இருக்காது என்பதே. நான் படித்ததில் இருந்து ஒரு கணக்கோ சமன்பாடோ எங்கேயும் பொருந்தவில்லை. எல்லாமே மனிதர்களைக் கையாள்வதில்தான் இருக்கிறது என்பதை சீக்கிரமே உணரவைத்தது எனது முதல் வேலைதான்.
            அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்கள் எப்படியோ மாறி இந்தக் கதை எழுதக் காரணமாக இருக்கும் இடத்திற்கு நேராக வந்து இருந்தேன்..
            வழக்கம்போலவே எந்தவித பெரிய எதிர்பார்ப்போ ஆர்வமோ இல்லாமல்தான் அந்த நிறுவனத்திலும் சேர்ந்தேன். ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் யார் யாரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு இருந்த சிக்கல் இப்போது இல்லை.
            எல்லா இடங்களிலும் இருப்பது போல புதியதாகச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும் சலுகைகள் எனக்கும் கிடைத்தது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடும். ஆணாக இருந்தால் உங்களை யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். உங்களுக்கு ஒரு உதவி தேவை என்றால் உரிய நபரிடம் சென்று கேட்டால் கூட அவர் அப்புறம் வரும்படி திருப்பியே அனுப்புவார். இதே இடத்தில் ஒரு புதியதாக சேர்ந்த பெண் என்றால் அலுவலக பையனில் இருந்து மேனேஜெர் வரை உதவிக்கரம் நீட்டுவார்கள். எல்லா வேலைகளுக்கும் முட்டி மோத வேண்டும். ஆனால் பெண் சென்று ஒருவரிடம் கேட்டால் அவரே அந்த வேலையை முடித்தே கொடுத்துவிடுகிறார் அவருக்கு ஏற்கனவே ஆயிரம் வேலைகள் இருக்கிற நிலையிலும்.
            ஆனால் இந்தப் பிரச்சினை இந்த நிறுவனத்தில் இல்லாமல் போனதுக்குக் காரணம் அவள். ஆமாம் அவள். இனிமேல் இந்தக் கதையை ஆக்கிரமிப்பு செய்யப்போவதும் அவள்தான். நான், அவள், இன்னும் இரண்டு பேர்தான் இந்தக் கதை முழுதும் வருவோம். வேறு யாரும் இல்லை. இப்போது புரிந்திருக்கும் என் கதை என்று நான் சொன்னது எனக்கும் அவளுக்கும் நடந்த எதோ ஒரு விசயத்தைப் பற்றித்தான் என்று.
            நான் இன்னும் அவளைப் பற்றி சொல்லவில்லை என்றால் நீங்களே அவளைப் பற்றி ஏதாவது கற்பனை செய்துகொள்ளகூடும். அது எனக்கு பிடிக்காது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். 
            சொந்த ஊர் கேரளா என்றாலும் படித்தது கோயம்பத்தூர் என்பதால் அவளுக்கு நன்றாகவே தமிழ் தெரிந்து இருந்தது. படித்து முடித்தவுடன் வேலைகிடைத்து டெல்லி பக்கம் வந்தவளுக்கு இது இரண்டாவது நிறுவனம். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் நிறைய செல்லத்தில் வளர்ந்து வேலை கிடைத்தும் போகவிடாமல் அவள் பெற்றோர்கள் தடுக்க எப்படியோ கிளம்பி வந்து இருக்கிறாள்.
            அவளைப் பற்றிய இந்தத் தகவல் உங்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பது எனக்கு தெரியும் என்பதால்..... அவளை முதன்முறை பார்த்தவுடன் கண்டிப்பாக தமிழ்நாடு அல்லது கேரளாவாக இருக்கமுடியும் என்பதை என்னால் கணிக்கமுடிந்து இருந்தது. மாநிறம், உயரமான உருவம், டெல்லி வந்தும் நேர்த்தியாக பின்னப்பட்ட ஜடை புதிய இடத்தில் வெட்கத்தோடு மிரளும் கண்கள். எதையும் எச்சரிக்கை உணர்வோடு பார்க்கும் துறுதுறு பார்வை, ஆங்கில உச்சரிப்பு இன்னும் சில விசயங்கள் போதுமானதாக இருந்தது அவளை எங்கு இருந்து வந்திருப்பாள் என்பதை யூகிக்க.
            எங்களின் சந்திப்பு நானும் அவளும் ஒரே தேதியில் பணிக்கு சேர்ந்ததில் இருந்தே தொடங்கியது. உடனே பழக்கம் கொள்ள மொழியும் ஒரு காரணமாக இருந்தது. அங்கு எல்லோரும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசுபவர்கள் நாங்கள் தமிழ் பேசினோம். முதல் நான்கு நாட்கள் சேர்ந்ததுக்கான அடிப்படை அலுவலக வேளைகளில் இருவரும் சேர்ந்தே இருந்தோம். அப்போதுதான் நெல்லுக்கு நீர் பாயும் பொது புல்லுக்கும் பயனளிக்கும் என்பதை என்னால் உணரமுடிந்தது. அவளோடு இருந்ததால் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று வழிந்தவர்கள் அல்லது வந்தவர்கள் என்னைத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் அவளே என் வேலைகளை அவர்களிடம் கொடுத்துவிடுவாள். எனவே எந்தவித சிரமமும் இல்லாமல் இனிதே என் வேலைகள் முடிந்திருந்தன.
            காலியாக இருந்த நேரத்தில் புதிய இடத்தில் எங்கு தங்குவது, எந்தப் பொருள் எங்கு கிடைக்கிறது இந்த ஊர் எப்படி போன்ற பேச்சுக்கள் தான் எங்களுக்குள் இருந்தன. எனக்கு ஏற்கனவே அங்கு நண்பர்கள் இருந்ததால் அவர்களே எனக்கு வாடகைக்கு அறை பார்த்துக் கொடுத்து இருந்தார்கள். அவள் நிறவனத்தின் தற்காலிக விடுதியில் தங்கி இருந்தாள். அறைகிடைக்கும் வரையில் அங்கு தங்கிக்கொள்ளும் வசதியை நிறுவனம் கொடுத்து இருந்தது. சீக்கிரமே அவர்கள் ஊரைச் சேர்ந்த நர்ஸ் வேலை செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் அறையில் அவளுக்கும் இடம் கிடைத்தது.
            இதெல்லாம் நடந்து முடியும்போது சரியாக இரண்டு வாரம் சென்று இருந்தது. இந்த இரண்டு வாரமும் நாங்கள் சேர்ந்தே சுற்றினோம். அதற்குக் காரணம் நிறுவனத்தின் தொடக்கக்கால அறிமுகப்பயிற்சிகள் என்று ஒருவாரம் எங்களைச் சேர்த்தே வைத்து இருந்தார்கள். தங்களின் பணியிடத்துக்கு வரும்போது பிரிந்தோம். ஒரு இடம் என்றாலும் அவளுக்கு வேறு வேலை எனக்கு வேறு. மதிய உணவு இடைவேளையில் சந்திக்கும்போது புதிய வேலையைப் பற்றி பரிமாறிக்கொண்டோம். நாங்கள் சேர்ந்தே இருந்ததைப் பல கண்கள் எந்தக் கண்கள் எப்படி நோக்கியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளும் உரிமைக்கு அனுமதி அளிக்கிறேன்.
            எச்சரிக்கை உணர்வோ என்னமோ தெரியாது அவள் யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. வேலை விசயங்கள் தவிர எதைப் பற்றியும் பேச்சை எடுக்கும்போது அதை லாவகமாகத் துண்டித்து விடுவாள். இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் அவளிடம் சென்று கேட்டு எதையும் அறியமுடியாமல் என்னிடம் வந்து அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று கேட்டவர்கள் அதிகம்பேர். அவளைப்பற்றி உனக்கு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அவள் என்னிடம் நன்றாகப் பேசுகிறாள் என்பதற்காக. இதை அவளிடம் அன்று உணவு இடைவேளையில் சொன்னபோது சிரித்துகொண்டே.
            “சரி உனக்கு என்னைப் பற்றி அப்படி என்ன தெரியும்” என்றாள் என்னிடம்.
            அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது அவளைப்பற்றி எனக்கே எதுவும் தெரியாது என்பது. அவளின் படிப்பு, ஊர் சம்பந்தமான விசயங்கள் தவிர அவள் என்னிடமே எதுவும் சொன்னதில்லை.
            “உண்மைதான் எனக்கே உன்னைப் பற்றி எதுவும் தெரியாது” என்றேன்.
            “சரி என்னைப்பற்றி என்ன தெரியவேண்டும் உனக்கு சொல்”
            கொஞ்சம் சங்கடமான நிலைமை அது. அவள் அப்படிக் கேட்டதும் எனக்கு முதல் கேள்வி எதைப்பற்றி கேட்பது எனபதில் தயக்கம் இருந்ததால்,
            “இப்போதைக்கு எதுவும் தெரியவேண்டாம் தேவைப்படும்போது நானே கேட்கிறேன்” என்று சொல்லிச் சிரித்துவைத்தேன். 
            எனக்கும் சரி உங்களுக்கும் சரி உண்மை என்னவென்று தெரியும். அது உணமைக்கே அவளைப்பற்றி நிறைய விசயங்கள் அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கும் இருந்தது. மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மட்டும் இல்லை, எனக்கும் அவள் மீது ஒரு ஆர்வம் அல்லது ஏதோ ஓர் அறியும் ஆசை என்று இப்போது வைத்துக்கொள்ளுங்கள்.
            ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம், ஏதாவது நான் கேட்கப்போய் அவள் என்னைத் தப்பாக நினைத்துவிட்டால்? அதனால் எப்போதுமே அவளின் மீது எந்தவொரு ஆர்வமும் இல்லாதது போலக் காட்டிக்கொண்டேன். உண்மையில் அவளின் பிரிவையோ அல்லது ஒரு சண்டையையோ விரும்பவில்லை. முதல் பெண், ஆமாம் என்னோடு நெருங்கி பழகும் முதல்பெண், நீங்கள் நினைக்கலாம் நான் மேலே சொன்னதை வைத்து இதுக்கே உனக்கு அவள் நெருங்கிப் பழகிய பெண்ணா என்று, ஆமாம் இந்த அளவுக்குக் கூட என்னிடம் எந்தவொரு பெண்ணும் பழகியதில்லை அல்லது நான் பழகியதில்லை.
            படித்ததில் இருந்து வேலைக்குச் சேர்ந்தவரை எல்லாமே தனிமை ஆம் தனித்துவிடப்பட்ட ஒரு தனிமை. கொஞ்சம் மற்றவர்கள் எனக்கு அளித்தது. நிறைய நானே எனக்கு ஏற்படுத்திக்கொண்டது.
            அலுவலக வேலைப்பழுவில் நாங்கள் பேசுவது குறைந்தாலும் வீட்டுக்குச் சென்ற பிறகு பேசினோம் அலைபேசியில். நிறைய சொல்லுவாள் அவளுக்கு அன்றைய தினம் நடந்த விசயங்களைப்பற்றி. எனக்கு இது ஒரு புதுமையான அனுபவம். நான் யாரிடமும் எனது வருத்தங்கள், சந்தோசங்கள் என எதையும் முன்சென்று பகிர்ந்தது இல்லை.
            முதலில் அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இதை இப்படிச் செய்து இருக்கலாம், நீ இப்படிப் பேசி இருக்கக்கூடாது என்று சொல்லுவேன். பெரும்பாலும் நான் சொல்லுவது கண்டிப்பாக அவளுக்கு நான் முழுவதும் துணைபோவது போலவும், அவள் மீது எந்தத் தவறும் இல்லை என்பது போலதான் இருக்கும். எனக்கே முதலில் ஒரு மாதிரியாகதான் இருந்தது. ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தான் அவள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதையே தொடர முயன்றேன். தொடர்ந்தேன்.
            கேட்டுக்கொண்டு இருந்தவன் என்பங்கையும் பகிர ஆரம்பித்தேன். இது ஒருவிதமான புதிய உணர்வு. முதன்முதலாக மற்றவரின் கண்களின் வழியாக நான் எதிர்கொண்ட விசயத்தைப் பார்க்கிறேன். ஆம் அவளும் நான் செய்த தவறையோ, சரியாகச் செய்த விசயத்தையோ வெளிப்படையாகச் சொல்லிக்காட்டினாள்.
            நான் ஆச்சர்யபட்ட விஷயம் அவள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது கவனத்தில் கொள்ளும் விசயங்கள். எந்த ஒரு சமயத்திலும் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்கா முடிவுகளையே எடுப்பாள். அதனால் யார் எப்படிப் பாதிக்கிறார்கள் என்பது பற்றி அவளுக்கு எந்தவொரு யோசனையும் இருந்ததில்லை. ஆனால் என்னால் அப்படி ஒருபோதும் செய்யமுடிந்தது இல்லை. இப்படிச் செய்வதால் மற்றவருக்கு ஏதோவொரு வகையில் துன்பமோ ஒரு பிரச்சினையோ வருவதாக இருந்தால் கொஞ்சம் யோசிப்பேன். அந்த இடத்தில் எனது தனித்தன்மையும் விட்டுக்கொடுப்பேன்.  
            இங்கு தனித்தன்மை என்று சொல்வது அந்தச் சூழ்நிலையில் மட்டும். மற்றபடி எல்லோரும் வாழ்க்கையில் ஒருவகையில் நமது தனித்தன்மை இழந்தே வாழ்ந்து வருகிறோம் என்பது உங்களுக்கே தெரியும்.
            இந்தச் சூழ்நிலையில் அவளும் நானும் பழகுவதைச் சிலர் வெளிப்படையாகவே கேட்டு இருந்தனர். சிலர் கேட்காமலேயே மனதுக்குள் என்னவேண்டுமானாலும் நினைத்திருக்கலாம். ஆனால் என்னிடம் கேட்டவர்களின் பெரும்பாலான கேள்விகள்.
            “உங்கள் இருவருக்கும் அப்படி என்ன இருக்கிறது அவள் உன்னுடன் மட்டுமே நெருங்கிப் பழகுகிறாள். ஏன் மற்றவர்களிடம் பழகுவதில்லை?”
            “எனக்கு தெரியாது எங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான். அவள் ஏன் மற்றவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்களே அவளிடம் கேட்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி நழுவுவேன்.
            இதைப்பற்றி அவளிடம் சொன்னபோது பெரியதாக எடுத்துகொள்ளவில்லை. “இதெல்லாம் சகஜம்தான் அவர்களுக்கு ஒருவேளை பொறமையாக இருக்கலாம் என்றாள் சிரித்துக்கொண்டே.
            “ஏன் பொறமை?”
            “நான் உன்னுடன் நெருங்கிப் பழகுகிறேன் அதான், கண்டுக்காதே யாரும் அப்படி என்னிடம் கேட்கவில்லை அப்படியே கேட்டால் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும் எல்லா இடத்திலேயும் இப்படித்தான் இருப்பார்கள்.” என்றாள்
            இந்தக் கேள்வி எனக்கும் இருந்தது, அவள் ஏன் என்னிடம் மட்டும் நெருங்கிப் பழகுகிறாள்? மற்றவர்களிடம் ஏன் சில எல்லைகளை வைத்துகொள்கிறாள்? இத்தனைக்கும் எந்த விதத்திலும் என்னால் ஆகவேண்டிய வேலைகள் அவளுக்கு இல்லை. அடிப்படையில் பார்த்தல் நானும் அவளும் பணிக்குச் சேரும்போது ஒன்றாக இருந்தவர்கள் இந்த ஒரு காரணமே என் கண்முன் நின்றது.
    மற்றபடி நல்ல நண்பர்கள். என்ன பிரச்சினை என்றாலும் என்னிடம் சொல்லிவிடுவாள். இப்போது வரை வெறும் அலுவலகம் சார்ந்த விசயங்கள் மட்டும்தான் பேசி இருக்கிறோம். நண்பர்கள் என்றிருந்து இதுவரை அவள் சொந்த விருப்பு வெறுப்புகளை என்னிடம் பகிர்ந்தது இல்லை. இதைப் பார்க்கும்போது இவள் சில விசயத்தில் என்னிடமும் கொஞ்சம் தள்ளியே நிற்கிறாள் என்று தோன்றியது.
            ஒருவேளை அவளுக்கு அலுவலகப் பிரச்சினைகளை விவாதித்துக்கொள்ள ஒரு வடிகால் தேவையாக இருக்கலாம் என்று யோசித்து இருக்கிறேன். எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது உண்டு. நமக்கு ஏற்படும் துக்கங்களை யாராவது கேட்க மாட்டார்களா அல்லது யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல இருக்கும். இதுவரை அது நினைப்போடு போனதே தவிர நான் யாரிடம் அப்படிச் செய்தது இல்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை.  
            இதை அவளிடமே கேட்டுவிடலாம் தான் என்று யோசித்து இருந்தேன். அவளின் பதில் என்னவாயிருக்கும் என்பதை ஒருகணம் யோசித்துப் பார்த்தேன். எதையும் முடிவாக யூகிக்க முடியவில்லை. ஒரு பெண்ணிடம் சென்று எதற்காக என்னிடம் மட்டும் நெருங்கி பழகுகிறாய் என்று கேட்பது எனக்கும் முற்றிலும் புதிய விஷயம். ஏன் ஒரு பெண்ணிடம் பழகுவதே இது முதல்முறை. இதுவே காரணமா இந்த மாதிரி கேள்விகள் தோன்ற?
            ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டுவிட்டேன். “ஏன் என்னிடம் கூட நீ ஒரு எல்லையை வைத்துக்கொண்டு பழகுகிறாய்” என்று.
            “பொதுவாகவே பெண்களே அப்படித்தான் முதலில் எப்போதும் ஒரு எல்லையை வகுத்துத்தான் பழகுவார்கள். இதை எச்சரிக்கை உணர்வு என்று வைத்துகொள்ளேன்”
            “என்னிடம் என்ன எச்சரிக்கை உணர்வு உனக்கு? நான் என்ன செய்துவிட போகிறேன் உன்னை?”
            “அதான் சொன்னேனே உன்னிடம் மட்டும் இல்லை பொதுவாக என்று.”
            “ம்ம் சரி என்னமோ இதெல்லாம் எனக்குப் புதிது தெரியாது” என்றேன்.
            “ஏன் திடீர்னு இந்தக் கேள்வி கேட்டாய்? இத்தனைக்கும் நான் உன்னிடம் அப்படி ஒன்றும் பழகவில்லையே?” என்றாள்.
            “இல்லை இவ்வளவு நாள் ஆகியும் இதுவரை அலுவலக விசயங்களைத் தவிர எதுமே பகிர்ந்துகொள்ளவில்லை. அதான் கேட்டேன்.”
            “நீயும் கேட்கவவில்லை நானும் சொல்லவில்லை” என்றாள் சிரித்துகொண்டே  
            “இல்லை அதை நானாகக் கேட்டால் ஏதாவது நினைத்துகொள்வாய் என்றுதான் கேட்கவில்லை” என்றேன்.
            “நானாகச் சொன்னால் நல்லா இருக்காதுன்னுதான் நான் சொல்லவில்லை” என்றாள் சிரித்துகொண்டே.
            “சரி கேட்கிறேன் இப்போது சொல் என்றேன்” கொஞ்சம் சமாளித்துக்கொண்டு சொன்னாள். அவளின் குடும்பம் பற்றி அவள் கடந்து வந்த பாதையைப் பற்றி. அதைச் சுருக்குகிறேன். அப்பா கேரளவில் ஒரு அரசு ஊழியர். அம்மா வீட்டில் இருக்கிறார். ஒரு தம்பி படிக்கிறான். இவள் படித்துமுடித்து வடஇந்தியாவுக்கு வேலைக்குப் போகிறேன் என்றவுடன் கொஞ்சம் தயங்கித்தான் அனுமதித்து இருக்கிறார்கள். வீட்டுக்கு ரெம்ப செல்லப் பிள்ளை, நன்றாகப் படிப்பவள்.
            கல்லூரியில் படிக்கும்போது ஒருவனால் முதலில் காதலிக்கப்பட்டு இப்போது இவளும் அவனைக் காதலிக்கிறாள். வீட்டுக்குத் தெரியாது. அவன் கேரளாவில்தான் உயர்படிப்பு படிக்கிறான். வெறும் தொலைபேசி உரையாடல்தான் இவர்களுக்கு ஒரே  சந்தோசம்.
            “நீ காதலிக்கிறாய் அதனால்தான் யாருடனும் நெருங்கிப் பழகவில்லையா? என்று கேட்டேன்.
            “இதுக்கும் நான் பழகுவதுக்கும் சம்பந்தம் இல்லையே, முதலில் இந்தச் சந்தேகம் எல்லாம் எப்படி உனக்கு வருகிறது என்றே எனக்குத் தெரியவில்லை என்றாள். அதுக்குப்பிறகு வேறெதுவும் பேசவில்லை.
            வந்த நாட்களில் சொந்த விசயங்களைப் பற்றியும் பகிர்ந்தோம். இன்னும் நெருக்கமாக இதுவும் ஒரு காரணமாக இருந்தது. முதலில் சொன்னபடி எனக்கு இது முதல் முறை ஒரு பெண்ணுடன் பழகுவது என்பதானால? ஒருவேளை எதிர்பாலினம் என்ற முறையில் அவளிடம் அதிகம் ஈர்க்கபட்டேனா? அல்லது இதுவரை இல்லாமல் இப்போது கிடைத்திருக்கும் ஒரு பெண்ணின் பழக்கமா தெரியவில்லை.
            எது நடந்தாலும் அவளிடம் நான் சொல்லவேண்டும் அல்லது அவள் என்னவென்று என்னிடம் கேட்கவேண்டும் அதேபோல் அவளும் எல்லா விசயத்தையும் என்னிடம் பகிரவேண்டும் என்று ஒருவித உள்ளுணர்வு. இதை ஒருவித கண்டிப்பான ஆசை என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். அப்படித் தவறிய நேரத்தில் எதோ போல இருந்தது. கோபம் வந்தது.
            முடிந்தவரையில் அவள் இதைப் புரிந்துகொண்டவளாக என்னிடம் பழகினாள். சில நேரங்களில் அவளுக்கு இஷ்டம் இல்லை என்றாலும் நான் வருத்தப்படுவேன் என்பதற்காக எனக்கு என்ன ஆனது அல்லது அவளுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லுவாள். அவள் எந்த மனநிலையில் சொல்லுகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனக்காகவே இதை அவள் செய்ததாலோ என்னவோ அவளின் நெருக்கம் இன்னும் வேண்டும் எனத் தோன்றியது. இதுவரை எந்தப் பெண்ணும் எனக்காகச் செய்யாதது.
            மற்றவர்களிடம் அதிசீக்கிரம் அவள் பேசாதது, எதையும் வெளிப்படையாகச் சொல்லாத நிலைமையை வைத்து அவளை அதிகம் திமிர்பிடித்தவள் என்றே அறிந்து இருந்தனர். உண்மையில் அது திமிர் இல்லை ஒருவித அமைதி அல்லது பிரச்சினைகளில் இருந்து தனித்து இருத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கள். தவிர அவள் மன அளவில் மென்மையானவள். நிறைய அழுவாள். ஏன் படம் பார்க்கும்போது, காதலர்கள் பிரியும்போது அல்லது சேரும்போது கண்டிப்பாக இவள் கண்களில் கண்ணீர் இருக்கவே செய்யும்..
            யாரிடமும் உங்களால் அவ்வளவு சீக்கிரம் அழமுடியாது நெருங்கிய உறவுகளிடம் மட்டுமே இது சாத்தியமாகும். யார் நம்மைப் புரிந்தவர்கள் முக்கியமாகக் கண்ணீரின் வலியை உணர முடிந்தவர்கள் இவர்களிடம் அழாமல் இருந்தால்தான் தவறு. அவள் என்னிடம் அழுது இருக்கிறாள். பல விசயங்களுக்காக. இதற்கு அர்த்தம் அவள் பிரச்சினைகளை எல்லாம் என்னால் தீர்த்து வைக்கமுடியும் என்பதற்காக இல்லை. நான் அவளின் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு, பாசத்திற்காக.
            எவ்வளவு அன்பு, பாசம் என்று உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால் ஒரு சம்பவத்தில் விளக்கமுடியும். ஒருகட்டத்தில் நான் அவளின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை எப்படிப் புரிந்தாளோ தெரியவில்லை,
            “உன் நடவடிக்கையில் மாற்றம் இருக்கிறது அதைப்பற்றி பேசிப் புரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்” என்றாள்.
            “அப்படி என்ன வித்தியாசம்?” என்றேன் கொஞ்சம் பயத்தோடு காரணம் இதுவரை அவள் இந்த மாதிரி பேசியதில்லை.
            “நான் ஏற்கனவே ஒருவனைக் காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரிந்த விஷயம், அப்படி இருந்தும் நீ இப்படி நடந்து கொள்வது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது” என்றாள்.
            “நான் எப்படி நடந்து கொண்டேன்?” என்றேன் புரியாத ஒருவித தயக்கத்தோடு.
            “நான் நினைக்கிறன் உனக்கு என்மேல் காதல் வந்துவிட்டது என்று”
எனக்கு பயம் மற்றும் சங்கடத்தில் முகம் வேர்த்துப் போனது. உண்மையில் அந்தவித எண்ணம் என்மனதில் எப்போதுமே தோன்றியது இல்லை. அவளும் என்மீது அளவுகடந்த பாசம் வைத்து இருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அதனால் எனக்கிருக்கும் ஒரே பெண்தோழி மேல் நானும் அதிக அக்கறை செலுத்தியவிதம் அவளை இப்படி யோசிக்க வைத்து இருக்கிறது.
            “எதைவைத்து இப்படிச் சொல்லுகிறாய்?” என்றேன் சமாளித்துக்கொண்டு.
            “இல்லை எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இது வளராமல் இருக்க ஒருமுறை மனம்விட்டுப் பேசிப் புரிந்து கொள்வது நல்லது அதுக்குத்தான் கேட்டேன்” என்றாள்.
            “நான் உனக்கு எப்படிப் புரியவைப்பேன், உண்மைக்கே அந்த விதத்தில் உன்னோடு பழகவில்லை என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டேன்.
            வந்த நாட்களில் என்னுடன் சேர்ந்து இருந்தாலும் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இப்படியே மூன்று அலுவலக நாட்கள் கழிந்த பின்னர் அவளைத் தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
            நான்தான் கேட்டேன் முதலில் “ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?” என்று.
            “நீதான் பேசாமல் இருந்து நான் சொன்னதை உண்மை என நிருபித்துவிட்டாயே” என்றாள்.
            “அய்யோ உண்மைக்கே அந்தக் காரணத்திற்காக நான் பேசாமல் இல்லை, நீ என்னைப்பற்றி அப்படி நினைத்த பிறகு நான் எப்படி உன்னோடு பேசமுடியும் சொல்லு?”
            “இதிலென்ன இருக்கு நீதானே சொல்லுவே எப்போதும் எதுவாக இருந்தாலும் மனதிற்குள் வைத்து சண்டை போடாமல் வெளிப்படையாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அதான் கேட்டேன்” என்றாள்.
            ஆம் இந்த விசயத்தை அவளுக்கு நான்தான் கற்றுக்கொடுத்தேன் எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக என்னிடம் பேசவேண்டும் என்று. நானும் அப்படியே இருப்பேன் என்பதால். அவள் முதலில் தயங்கினாலும் நான் பேசினதால் அவளும் தொடர்ந்தாள். இதனால் எங்களிடம் எப்போதுமே சண்டை இருந்ததில்லை. எந்த விஷயம் பிரச்சினையாக இருக்கிறதோ அதை அப்படியே பேசி விவாதித்து நீ இனிமேல் இப்படிச் செய்யாதே நானும் அப்படி செய்யமாட்டேன் என்று ஒரு முடிவுக்கு வந்து அதை அத்தோடு முற்றுபுள்ளி வைப்போம்.
            “நல்லவேளை கேட்டாய் கேட்காமல் மனதிற்குள்ளேயே வைத்து என்னை வெறுக்காமல் போனாயே” என்றேன்.
            மௌனமாயிருந்தாள். எனக்கும் அந்த நிலைமை என்னவோ போல் இருந்தது. எப்படி என் நிலைமையை அவளுக்கு விளக்கப் போகிறேன்? அவளின் நட்பையும் அன்பையும் பிரிய எந்த ஒரு காரணமும் இடையில் இருக்கக்கூடாது என்று எண்ணியவன் இப்போது இந்த சமாளிக்கமுடியாத ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்குக் காதல் அனுபவம் இல்லை. ஆனால் காதலித்த நண்பர்களின் பழக்கம் இருந்ததால் டெல்லி காதல் என்னவென்று எனக்குக் கொஞ்சம் பரிச்சியம். காதலைச் சொன்ன ஒரு வாரத்தில் அந்தப் பெண்ணைக் கட்டிலுக்குக் கொண்டு போகத் துடிக்கும் நண்பர்கள். அதையும் வெற்றிகரமாக நடத்திவிட்டு மார்தட்டிக்கொள்ளுவார்கள். இந்தவிதத்தில் அவளை ஒருபோதும் சிந்தித்ததுகூட கிடையாது. ஒருவேளை இந்த அளவு கடந்த அன்பை அவள் காதலின் தொடக்கமாக எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் இது அவளின் பிரதிபலிப்பு என்று அவளுக்கு ஏன் புரியமறுக்கிறது என்பதுதான் என் கேள்வி. 
            ஏற்கனவே அவளிடம் சொல்லி இருக்கிறேன். முதன்முறை என்வீட்டைத் தவிர்த்து ஒரு உறவில் இந்த அன்பையும் பாசத்தையும் உன்னிடம் காண்கிறேன், உண்மையில் இந்த உறவு கிடைக்க நான் எதோ செய்து இருக்க வேண்டும். இப்படி இருக்கும் ஒரு உறவிடம் நான் எப்படி அன்பை காட்டாமல் இருக்கமுடியும்? 
            இதுவரை எங்களின் உறவைப்பற்றி என்னிடம் கேட்டவர்கள் அல்லது பேசிக்கொண்டவர்களின் பேச்சுக்கும் இவள் கேட்ட கேள்விக்கும் நிறைய வித்தியசம் இல்லை என்றே தோன்றியது. மனதிற்குப் பிடித்த ஒரு பெண்ணின் மீது அளவுகடந்து அன்பு வைப்பவன் கண்டிப்பாக அவனுடைய காதலனாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைத்து இருப்பாளா? அல்லது ஒரு ஆண் இவ்வளவு நெருக்கமாகப் பழகும்போது அடுத்து அவன் எதுக்கு முயற்சிப்பான் என்று எண்ணிப் பெண்மைக்குரிய எச்சரிக்கை உணர்வின் பிரதிபலிப்பா?
            அவள் எந்தக் காரணத்திற்காக அந்தக் கேள்வியை அல்லது சந்தேகத்தைக் கேட்டாள் என்பது தெரிந்தால் ஒழிய என்னால் அவளுக்கு மனநிறைவான பதிலை அளிக்கமுடியாது. எனக்கிருக்கும் ஒரே கவலை எந்த ஒரு காரணத்திற்கும் அவள் என்னைவிட்டுப் பிரிந்து போகாமல் இருக்கவேண்டும். என்மீது தவறு இருப்பதாக அவள் நினைத்துக்கொண்டால் கூட மன்னிப்பு கேட்டு அவளை சமாதனபடுத்த தயராக இருந்தேன்.  
            ஒருவழியாக அவளிடம் முடிந்தவரை அமைதியாக எடுத்துச் சொன்னேன். இருவருமே கண்களைப் பார்த்துகொள்ளவே இல்லை. சொல்லி முடித்தபிறகு,
            “அந்த மாதிரி இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை, அப்படி இருந்தால் இவ்வளவு நாளாக நீ என்மீது காட்டிய அக்கறைக்கு இதுதான் அர்த்தம் என்று எண்ணி என்னால் அழமட்டும்தான் முடியும் வேறொன்றுமில்லை” என்றாள்.
            பதிலுக்கு நான் ஏதும் சொல்லவில்லை. அவளும் ஒன்றும் சொல்லாமல் எழுந்து போய்விட்டாள். அடுத்துவந்த நாட்களில் அதிகம் பேசவில்லை. இருவருக்குமே கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உண்மையில் காரணம் இல்லை. 
            ஒருமுறை தொலைபேசியில் அழைத்திருந்தவள் அவளின் காதலை வீட்டுக்கு சொல்லபோய் அம்மா முடியாது வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்னும் அப்பாவிடம் சொல்லவில்லையாம். அவன் இல்லாமல் வாழமுடியாது அவன் வீட்டில் ஒரு பெரிய சண்டைக்கு பிறகு சம்மதம் வாங்கி இருக்கிறான். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இன்னொருமுறை பேசிப்பார்க்கச் சொன்னேன். அம்மாவிடம் சம்மதம் வாங்கி அவர்களின் மூலம் அப்பாவிடம் அணுக முடிவெடுத்து இருந்தாள்.
            அம்மாவிடம் பேசியபோது அவளை ஊருக்குவரும்படி அழைத்து இருக்கிறார்கள். வந்து நேரடியாக அப்பாவிடம் பேசலாம் என்பது அம்மாவின் அனுமானம். ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குப்போய் வந்தாள். என்னவென்று கேட்டேன்..
            “ஒரு பெரிய பிரச்சினைக்கு பின் சம்மதித்தார்கள், ஆனால் இருக்கும் சொந்தங்கள் தான் பெரிய பிரச்சினை செய்தார்கள் என்றாள். ஒருவருடத்திற்குள் திருமணம் செய்ய உத்தேசித்து இருக்கிறார்கள்.” என்றாள்
 .
            “ரெம்ப சந்தோசம் எப்படியோ நீ நினைத்ததைச் சாதித்துவிட்டாய்?” என்றேன்.
            “அப்படி இல்லை எப்படியாவது அவனோடு சேர்ந்து வாழவேண்டும்” என்றாள்.
            அதுக்குபிறகு மீண்டும் பழையபடி நாங்கள் பழகினோம். அந்தத் தருத்தில் அவளே சொன்னாள், அவள் காதலன் கூட இவ்வளவு பாசமாகப் பழகுவதில்லை அதனால்தான் அப்போது அப்படி அந்தக் கேள்வியைக் கேட்கவேண்டியதாகப் போய்விட்டது என்றாள் இப்போது எப்படி இதைச் சொல்கிறாய் என்று கேட்டதற்கு “நான் என் திருமணம் என்று சொல்லியும் இன்னும் நீ அதே நிலையில் இருப்பதைப் பார்த்தவுடன்தான் நீ அப்போது சொன்னதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள். மனதுக்குள் சந்தோசம் இப்போது புரிந்தாளே என்று.
            காற்றில் வேகமாக அடித்துச்செல்லும் காகிதம்போல வாழ்க்கை போனதில் அவளுக்குத் திருமணம் முடிந்து, அவள் ஊரிலேயே ஒரு அரசாங்க வேலை கிடைத்து அங்கு போய் இருந்தாள். முதல் தோழிக்குப் பிறகு இரண்டாவது பெண்ணாக என் வாழ்க்கையில் வந்தது மனைவிதான். திருமணத்திற்கு அவளால் வரமுடியவில்லை. மேலே நடந்தவற்றை எல்லாம் என் மனைவியிடம் சொல்லி இருந்தேன். 
            அவளுக்கு ஒரு சந்தோசம் நான் மிக அன்பானவன். அவள் அதிகப் பொறுமையானவள். அதிகபட்சமாக அழுது மட்டுமே என்னைக் காயபடுத்துவாள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நிறைய மாறும் என்று நான் நினைத்ததை அவள் பொய்யாக்கினாள். என்னை அவளுக்காக எந்த விசயத்திலும் மாறுவதை அவள் விரும்பவில்லை. அருமையான காலங்கள் அவை.
            இப்போது எனக்கு வயது 53. இன்னும் என் தோழி தொடர்பில் இருக்கிறாள். அதே கேரளாவில். என்னுடனும் மனைவியுடனும் பேசுவாள் அலைபேசியில். தமிழ்நாடு வந்தால் வரும்படிச் சொல்லுவாள். மனைவியுடன் பேசும்போது நீங்கள் ரொம்பக் கொடுத்துவைத்தவர் என்று சொல்லி என்னைப் பற்றி அதிகமாகச் சொல்லி இருக்கிறாள் போல. உலகில் அவள் அதிகம் மதிக்கும் ஆண் நானாம். மனைவி இப்போதும் சொல்லிச் சிரிப்பதுண்டு.
            டெல்லி அருகே இருக்கும் பரிதாபாத் என்னுமிடத்தில் கடைசிக் காலங்களைக் கழித்துக்கொண்டு இருக்கிறோம். அதிகபட்சமாக நாங்கள் செய்யும் வேலை என்றால் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று நடைபயிற்சி செய்வதே. அங்கு செக்டார்களாகப் பிரித்து வீடு கட்டியிருப்பார்கள். வ்வொரு செக்டார்க்கும் ஒரு பூங்கா, ஒரு பெரிய மார்க்கெட் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் இறுதிகாலத்துக்கு இந்தமாதிரியான இடம் மிகப் பொருத்தமானது.
            இவ்வளவு நினைவுகளையும் நினைக்கவைத்த அந்தச் சருகு இன்னும் காற்றில் உருண்டுகொண்டே இருந்தது. பக்கத்துவீட்டிற்குப் பேச சென்ற மனைவி வரும்வரை நான் பூங்காவில் உட்கார்ந்து இருக்கும்போதுதான் கிழே கிடந்த சருகைக் காற்று தனது போக்கில் அடித்து உருட்டியது. அந்தச் சருகால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதுக்குள் ஈரம் இல்லை. ஆம் ஈரம் இருந்திருந்தால் அது மரத்தில் இருந்து இருக்கலாம். ஒருவிதத்தில் நாமும் இப்படித்தான். மனதில் அன்போ பசாமோ இல்லையென்றால் என்னதான் வசதி வாய்ப்பு இருந்தும் காலத்தில் அடித்து செல்லப்படும் ஒரு சருகுபோலதான். அதுபோகிற போக்கில்தான் போகவேண்டும். வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இல்லை. நானும் சருகு இல்லை என்பதை என் பெற்றோர் தவிர எனக்கு உணர்த்தியவர்கள் என் மனைவியும், தோழியும்தான். அதே இடத்தில் இன்னொருமுறை உட்கார்ந்து இருக்கும்போது வேறு எதாவது எனக்குப்ழைவற்றை உணர்த்தினால் இதைப்போலவே சொல்லுவேன். இந்த வயதில் வேற என்ன வேலை இருக்கிறது எனக்கு இதைவிட. எப்போதும் காற்றில் அடித்துச்செல்லபடும் ஒரு சருகாக நான் விரும்பவில்லை.