ஆதலால்...


    படித்தும் நண்பர்கள் சொல்லி மட்டும்  கேட்டு இருக்கிறேன் காதல் என்ற பெயரில் பெண்கள் வாழ்க்கையில் வந்தால் அதை அழகாக்குவார்கள் என்று ஆனால் உணர்ந்ததில்லை. காரணம் காதலிக்க கிடைத்த தருணங்களை சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்தேன் அல்லது தவிர்க்கப்பட்டு இருந்தேன் என்பதே உண்மை.

   அழகிய பெண்களை ஏதோ வேற்றுகிரக தேவதைகள் போல பார்ப்பது, அவர்களின் கவனம் என்பக்கம் திரும்ப எதாவது செய்வது,அணிந்திருக்கும் “T shirt வாசகங்களை மெதுவாக எழுத்துக்கூட்டி படிப்பது போன்ற பொதுவான ஹோர்மொன்கள் வேலையை செய்து இருந்தாலும் ஏனோ காதல் மட்டும் செய்யவில்லை.

  அதற்காக காதலின் மீது வெறுப்பு என்றில்லை அதே நேரத்தில் அதில் பெரிய மதிப்பும் இல்லாமல் இருந்தது. காரணம் நான் விரும்பி படித்த சுஜாதா காதலை பற்றி சுவாராசியம் இல்லாமல் சப்பென சொல்லியிருந்த விசயங்களாக இருக்கலாம்.  

   வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யும்போதுகூட யாரையும் காதல் செய்கிறாயா? என்று கிண்டலுக்கு கூட கேட்காத ஒரு பெரிய வருத்தத்தோடே திருமணமும் நடந்தது முடிந்தது. வாழ்க்கை எப்படி இன்னும் அழகாக ஆகப்போகின்றது அல்லது எப்படி ஆக்கப்போகிறாள் என்பதில் அதிக ஆர்வாமாய் இருந்தேன்

    திருமணத்துக்கு முன்னாடியே பேசி இருக்கிறோம். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். எதைப்பற்றி பேசினாலும் சலிக்காமல் “உம்கொட்டுவாள். ஏதாவது அவளுக்கு பிடிக்காதது வந்தால் முதலில் எடுத்து சொல்லி நான் கேட்கவில்லை என்றாள் சண்டைபிடிப்பாள். வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அழகிய தருணங்களில் அதுவும் ஒன்று. உங்களிடம் மேலே சொன்னா விசயங்களை அவளிடம் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு “ரெம்ப பாவம்தான் நீங்க என்று கிண்டல் அடித்தாள்.

   ஒருமாதம் கழிந்த நிலையில் அதை அவளிடம் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். திருமணத்திற்க்கு முன்னாடியே சொல்லியிருக்க்கலாம்தான் அவள் ஏதாவது தவறாக நினைந்துகொள்வாள் என்ற தயக்கம்தான். இப்போது நான் சொன்னதும்

“கண்டிப்பா இப்படி செஞ்சுதான் ஆகணுமா என்ன? என்றாள்

   “எனக்காக சம்மதியேன் ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட பெருசா ஆர்வம் இல்லனாலும் செஞ்சுதான் பார்ப்போமேனு தோணுது

“ஏன் அதை இப்போதே செய்யலாமே?

   “இப்போது நீ என் மனைவி அதனால அவ்வளவு சுவாரசியம் இருக்காது. யாருன்னு தெரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி பழகி காதலை சொல்லுவதில்தான் அந்த சுவாரசியம் இருக்கும் என்றேன்

“சரி நீங்க சொல்லுகிற முறையில் ஏதாவது தவறு நேர்ந்தால்?

   “அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் ஏற்க்கனவே பலமுறை சோதனை செய்ததோடு பயணித்தும் இருக்கிறேன்

“இது தேறும்னு தோணலை எனக்குஎன்றாள்

“நீ மட்டும் சரி என்று சொல் மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்றேன்.

   “சரி செய்யலாம் ஆனால் எல்லாம் குறைந்த காலத்தில் முடியுமாறு செய்யுங்கள் என்றாள்

   “நீ சம்மதித்ததே போதும் மற்றதை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் ஆய்வுக்கூடம் நோக்கி ஓடினேன். அங்கு போர்த்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு கால இயந்திரங்களை தயார் செய்யும் வேலையில் இறங்கினேன்.

   சரியாக ஐந்து வருடம் முன்பு அவளும் சென்னையில் வேறொரு இடத்தில வேலை செய்துகொண்டு இருந்தது இன்னும் எனது வேலையை எளிதாக்கியது. வெறும் ஐந்து வருடம் மட்டும் பின்னாடி பயணிப்பது என்பது அவ்வளவு சிக்கலான விசயமாக இருக்கவில்லை. இயந்திரம் தயராகி இருந்தது.

    அவளிடம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி கொண்டு இருந்தேன். அதாவது ஐந்து வருடம் அவளும் நானும் பின்னோக்கி பயணிப்பது. என்னிடம் நான் அவளை காதலிக்க வேண்டும் என்ற நிகழ்கால குறிப்பு மட்டும் இருக்கும். அவளிடம் நான் அப்போது தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த தாம்பரம் கிளை நூலகத்திற்கு வரவேண்டும் என்று இருக்கும். அதாவது காலத்தை குறைக்க அவளை சென்னை முழுவதும் திரிந்து தேடுவதுக்கு பதில் இருவரும் சந்திக்க பொதுவான இடமாய் அந்த நூலகத்தை தேர்ந்து எடுத்து இருந்தேன்.

   காதலை சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பிவிட முடிவெடுத்து இருந்தோம். திரும்பிவரும் பொறுப்பு என்னுடையது அவளால் முடியாது. நான் வந்தவுடன் என் விருப்பப்படி அவளை திரும்ப அழைத்துக்கொள்ளலாம். ஒருவழியாக வீட்டில் ஒரு சோதனைக்காக என்று  பொய் சொல்லி சமாளித்து கிளம்பினோம்.


   ஐந்து வருடம் முன் பார்த்த அதே சென்னை கண்முன் விரிந்து இருந்தாலும் அந்த நினைவுகள் ஏதும் இல்லாததால் இது அன்றைய ஒன்றாகவே இருந்தது. பிள்ளையார் கோயிலுக்கு எதிர் தெருவில் இருக்கும் அந்த கிளை நூலகத்திற்கு எனது பணி முடித்து தினமும் செல்வேன். இன்றும் அங்குதான் இருந்தேன். ஆனால் இன்று மற்றொரு எதிர்பார்ப்பு ஒரு குறிப்பிட்ட பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற குறிப்பு என் கையில் எனக்கு தெரியாமலே இருந்தது. உண்மையா என்று தெரியவில்லை ஆனாலும் காத்து இருந்தேன்.

   பழக்கமான அந்த நூலகப்பெண் “ஏன் இவ்வளவு நேரம் காத்து இருக்கீங்க அதான் ஏதாவது சுஜாதா புத்தகம் திரும்பி வந்தால் தனியாக எடுத்துவைத்து உங்களிடம் கொடுக்கிறேனே என்றாள். அவளிடம் இதை பற்றி சொல்லலாம் என்று இருந்தாலும் எனக்கே ஏனென்று தெரியாததால் அவளிடம் சொல்லுவது சரியில்லை எனக்கருதி வெறுமனே சிரித்து வைத்தேன்.

   சிறிது நேரத்தில் அந்த பெண் வந்தாள். அமர்ந்தவள் படிக்காமல் சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள். எல்லோரும் அவளை பார்க்க அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல வைத்து கொண்டு மீண்டும் பார்வையில் சுற்றினாள். என் குறிப்பின்படி இவள்தான் என்னை காதலிக்க அல்லது நான் காதலிக்க போகிறவள். அழகியிருந்தாள் அப்போது இருந்த அவளின் நிலை செயற்கையாக இருந்தது. ஏதோ ஒரு கட்டளையின் பேரில் செய்வதுபோல்.

   அன்றைய இரவில் அவளது நினைவுகளோடே தூங்கபோய் இருந்தேன். இது எல்லாம் உணமையா என்று தெரியாமலே. மறுநாள் கொஞ்சம் சீக்கிரமே வந்து இருந்தாள். அன்று நூலகத்தில் இணைவதற்கு வேண்டிய வேலைளில் மூழ்கியிருந்தாள். அதில் ஏற்க்கனவே உறுப்பினராக இருப்பவர் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். அந்த விண்ணப படிவத்தை பிடித்தபடி வெளியில் நின்று இருக்க அருகில் சென்று கவுன்சிலர் வீடு இதே தெருவில் கடைசியில் இருக்கு கொடுங்க இன்னொரு கையெழுத்து நான் போடுகிறேன் என்று சொல்லி என் பெயரோடு போட்டு கொடுத்தேன். அன்று அவள் உறுப்பினர் சேர்க்கை முடிந்து இருந்தது  வேறெதுவும் பேசவில்லை.

    தொடர்ந்து இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் வருவாள்.நூலகம் மிக சிறியது என்பதால் அருகருகே அமர வேண்டிய சூழ்நிலை எங்களை விரைவாக நண்பர்களாக்கி இருந்தது. அவளும் சுஜாதாவை விரும்ப நானும் சுஜாதா பிரியன் என்பதை உணர்த்த அவளிடம் அவர் எழுதிய விரும்பி சொன்ன பொய்கள என்ற கதையின் முடிவில் வரும் “ஆம் “இல்லைஎன்ற இரு பொய்களில் ஒன்றை சொல்ல சொன்னால் எதை சொல்லுவாய் என்று கேட்க அவளோ அதில் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிவிட்டால் அதுவரை படித்த அந்த கதை வீணாகி போவதுமாதிரி அத்தோடு நிறுத்துவதே சரி என்றுதான் சுஜாதாவும் அப்படி செய்து இருக்கிறார் என்று சொல்லி சிரித்தாள்.

   என்னுடைய கெட்ட பழக்கமோ என்னமோ அவளிடம் வெறுமனே படித்த புத்தகங்கள் அது சம்பந்தமான விசயங்களையே பேசிக்கொண்டு இருக்க அவளே ஒருநாள் அதை சொல்லியிருந்தாள். இயல்பாய் பேசலாமே இந்த விசயங்களை தவிர அததான் இதை நானும் படிக்கிறேனே என்று சொல்ல அடுத்துவந்த நாள்களில் எங்களின் உரையாடல் பொதுவாக எல்லா விசயங்களிலும் இருந்தது.

    இந்நிலையில் அவளிடம் ஒரு தருணத்தில் காதலை சொல்லும் தைரியமும் வந்து   தயங்கியபடி சொன்னேன். நீங்கள் நினைப்பது போல ஒரு பெண் சிரித்து பேசிய சில மாதங்களில் அவளிடம் காதலை சொல்லும் ராகம் இது இல்லை ஏற்க்கனவே முடிவெடுத்து நிகழ்கால குறிப்பெடுத்து வந்ததால் செய்ய நினைத்த ஒன்று. ஆனால் இது அவளுக்கு தெரியாது. என்ன நினைத்தாளோ தெரியாது சட்டென்று கன்னத்தில் அறைந்திவிட்டு வேகமாக அவளது பாதையில் நடந்தாள். அங்கு சாலையில் நின்று இருந்தவர்கள் எல்லாம் உடனே திரும்பி பார்க்க நானும் அங்கிருந்து வேகமாக திரும்பினேன்.

   சென்று முதல் காரியமாக அங்கிருந்து  அவளது இயந்திரத்தையும் திரும்பி அழைக்க வந்து இறங்கியவள் என் கன்னத்தில் பதிந்து இருந்த விரல் தடத்தை கைவைத்து தொட்டுபார்த்து பதறியபடி..

“யாருங்க இப்படி அடிச்சா உங்களை?என்றாள்   

    
           

சில விசயங்கள் - 11


   ஒருவழியாக நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்துவிட்டார்கள். பொதுவாக விண்வெளியில் இருந்து வெளிப்படும் Unidentified Infrared Emission features சொல்லப்படும் ஒருவித அலைகளுக்கு காரணம் polycyclic aromatic hydrocarbon (PAH) molecules தான் காரணம் என்று தெரிந்து இருந்தாலும் அது எப்படி உருவாக்கபடுகிறது அல்லது உருவாகிறது  என்பது தெரியாமலே இருந்தது.

   அதுவும் சில தனிமங்களான  carbon, hydrogen இவைகளே இந்த மாதிரியான தகவலை உருவாக்கலாம் என நம்பப்பட்டது. இப்போது University of Hong Kong சேர்ந்தவர்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த அடிப்படை துகள்கலான பொருள்கள் மட்டுமில்லாமல் மிகவும் சிக்கலான கூட்டமைப்பு கொண்ட organic பொருள்களும் உருவாவதாகவும், அது எங்கு எப்படி உருவாகிறது என்கிறதையும் கண்டுபிடித்து உள்ளனர்.


   அவர்களின் கண்டுபிடிப்பின்படி இந்த organic பொருள்கள் நட்சத்திரங்கள் உருவாகும் நிலைக்கு முந்தைய நிலையான nebula வில் உருவாக்கபடுவதாக சொல்கிறார்கள். அதுவும் இதுக்கு முந்தைய நிலையில் இருக்கும் தூசு படலத்தில் இந்த மூலக்கூறுகள் இல்லாமல் அங்கு அழுத்தம் அதிகருக்கும்போது நடக்கப்படும் வேதிவினையில் இந்த பொருள்கள் உருவாவதாக கணக்கிட்டுள்ளனர்.

    அதோடு இது உருவாகும் நட்சத்திரத்தின் அளவைபொறுத்து அமைவாதாகவும், நிறை அதிகமுள்ள நட்சத்திரமே இந்த மூலக்கூறுகளை உருவாக்குவதாகவும் சிறிய அளவிலானவை அவ்வாறு செய்வதில்லை என்பது இவர்களின் ஆராய்ச்சி முடிவு.

    இதுவரைக்கும் நட்சத்திரங்கள் வெடிப்பில் பல organic பொருள்கள் தூக்கி எறியப்படும் என இருந்தது. இப்போது கூடவே அதன் பிறப்பும் இதை உருவாக்கிறது என்பதும் உறுதியாகிவிட்டது. எப்படியோ இதன்மூலம் ஒன்று உறுதியாக நம்ப தோன்றுகிறது அது விண்வெளியில் சுற்றி திரியும் தூசுகளில் இருந்துதான் பூமிக்கு முதல் செல் உருவாகியிருக்ககூடும என்ற கருத்து. மேலே சொன்ன கண்டுபிடிப்பின் படி பார்த்தால் அந்தமாதிரியான organic தூசுகள் பூமியில் விழுந்து சூழ்நிலை சரியாக அமைந்துவிட ஒரு செல்லாக மாறி இப்போது இதை எழுதிகொண்டு இருக்கலாம் போல.

                                                *****************
   அடுத்த விசயம்  2005 YU55 னும் asteroid பூமியை மிகவும் குறைந்த தூரமான 325,000  கிமீ தொலைவில் நவம்பர் 8 ஆம் தேதி கடக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தைவிட குறைவு. இது 2005 ஆம் ஆண்டு Robert McMillan என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு சொன்னது. நீண்ட பயணத்திற்கு பிறகு அது நம்மை கடக்கிறது. படத்தை பெரிதாக்கி பாருங்கள் அதன் மீது கிளிக்குங்கள்.
.


    இது பூமியோடு மோதுவதுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிம்மதி இப்போதைக்கு. ஏனென்றால் இது அளவில் கொஞ்சம் பெரிது என்கிறார்கள். இதுக்கு அடுத்து இன்னொரு asteroid   2001 WN5 என்ற ஒன்று 2028 ஆம் ஆண்டு நம்மை கடக்கபோகிறது. இதைவிட இப்போது கடப்பது அளவில் மிகப்பெரியது. 

                       ****************


    அதிகபட்சமாக இருபதுநிமிட நண்பர்களுடான அறிவியல் விவாதத்தின் முடிவில் கண்டிப்பாக அங்கு கடவுள் வந்து இருப்பார். நான் எவ்வளவுதான் அந்த பக்கம் என்பேச்சை கொண்டுபோகதவாறு பார்த்து கொண்டாலும் அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கேட்கும் கேள்வி “இப்ப என்ன சொல்ல வர்ற கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதுதான்.  தொடக்கத்தில் பல விளக்கங்ககள் எடுத்து சொல்லி அவர்கள் மறுத்து கடைசியில் என்ன விசயம் பேச ஆரம்பித்தோம் என்பதே மறந்து அரட்டை போய்க்கொண்டு இருக்கும்.

    இப்போதெல்லாம் இந்த கேள்விக்கு எளிய பதில் ஒன்று வைத்து இருக்கிறேன் . “அது உனக்குத்தான் தெரியும் அவர் இருக்கிறாரா இல்லையான்னு அவர்களால் இதன் மீது கேள்விகள் கண்டிப்பாக கேட்கமுடியாது. அதிக பேச்சுகள் தவிர்த்து பேசவந்த விசயத்தை பேசமுடிகிறது.

    தொடக்கத்தில் விவாதங்கள் செய்தாலும் நான் புரிந்துகொண்ட ஒன்று ஒருவரின் மனதை அவரால் அன்றி கடவுளால் நினைத்தால் கூட மாற்ற முடியாது என்பதே. அதாவது என்னதான் அவரது மனது மாறினாலும் அதில் மற்றவர்களின் பங்கு என்பது ஒரு சிறிய அளவே பெரும்பகுதி அவர் தனது மனதை மாற்றியதே.

   மனதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதை மாற்றுவதுக்கு பல வழிகள் உள்ளன. அன்பு,பாசம்,காசு, என நீளும். இது எல்லாம் வெறும் காரணிகளே முக்கியம் நான் மேல் சொன்னது போல அவர்தான் முக்கியம்.   அண்மையில் பார்த்த ஏழாம் அறிவு படத்தில் வில்லன் நோக்குவர்மம்(hypnotism) என்ற பெயரில் செய்வதை பார்த்தால் sci fic படம் என்றாலும் இப்படியுமா என்று யோசிக்க வைத்தது. அதில் அந்த வில்லன் பார்த்த இரண்டு நொடிகளில் மற்றொருவரின் மனதை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்து தனது காரியத்தை சாதித்துகொள்வார்.

    இந்த நோக்கு வர்மம் முறையிலும் எவர்மீது செய்கிறோமோ அவர் துணை இல்லாமல் எதுவுமே வேலைக்கு ஆகாது என்பதுதான உண்மை. வெறுமனே அவரது கண்களை முறைத்து பார்த்துகொண்டோ இல்லை அவரை அரைநிலை தூக்கத்தில் படுக்கவைத்து நாம்மட்டும் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவர் எங்காவது கனவில் டுயட் பாடிக்கொண்டு இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.   

    இன்னொரு உண்மை என்னவென்றால் மனது உங்களுக்கே கட்டுப்படுகிறது என்பதே பெரிய விசயம் இதில் எங்கு மற்றவர்களுக்கு. இந்த மனதை கட்டுபடுத்ததான் உதவி செய்வதாக  நிறையா ஆனந்தாக்கள் கிளம்பி ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் கதவை திறக்க சொல்வதும், ஜன்னலை திறக்க சொல்வதின் மையக்கருத்து இந்த மனதை அடக்குவதுதான். நமக்கு எல்லாம் சொல்லிகொடுத்துவிட்டு அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது அடிக்கடி எல்லோர்க்கும் தெரிந்து விடுவதுதான் ஒரு பெரிய சோகம்.

   நான் எப்போதும் ஒரு சில விசயங்களுக்கு self hypnotism பயன்படுத்துவேன். நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது. சிரமம் இல்லாத ஒன்றும்கூட இதுக்கு ஆனந்தாக்களின் அறிவுரைகள் ஏதும் தேவை இல்லை. உங்களின் முய்றசிமட்டும் போதும்.எனது பல சிக்கலான விசயங்களுக்கு எனது மனதை எளிமையாக கையாள இதை பயன்படுத்தி வருகிறேன்.

    சொல்லவருவது என்னவென்றால் உங்களின் மனது உங்களதுமுடிவில். அது மற்றவர்களால் சந்தோசபடுகிறது அல்லது துக்கபடுகிறது, ஆறுதல் அடைகிறது இது எல்லாமே நீங்கள் மனதுக்கு கொடுக்கும் ஒருவித கட்டளை அல்லது புரிதல் அவ்வளவுதான். இதை புரிந்துகொண்டால் கண்டிப்பாக எந்த ஒரு ஆனந்தாக்களும் உங்களுக்கு குருவாக தேவை இல்லை. இந்த குரு மற்றும் தீட்சை விசயத்தில் எனக்கு பிடிக்காத பல விசயங்கள் நடக்கிறது. என் நண்பர்களோடு மற்றும் அவர்களின் உறவினர்களோடு ஏற்ப்பட்ட அனுபவங்கள் நிறையா. அதையும் அவர்கள் சிலாகித்து சொல்வது எரிச்சலாக இருக்கும். அதை மற்றொன்றில் எழுதுகிறேன்.

    சரி விசயத்துக்கு வருகிறேன் முதல் பத்தியில் சொன்னது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு எனது பதிலான “உங்களுக்குத்தான் தெரியும் என்ற பதிலுக்கு நீங்களே விடை காணலாம். தனிமையில் இருங்கள் ஒரு நேரத்தில் நமது இவ்வளவு நாள் வாழ்க்கையில் கடவுள் என்பவர் எந்த விதத்தில் நமக்கு உதவி இருக்கிறார்? எந்தவிதத்தில் நமக்குள் வருகிறார்? அவரால் நம்மிடமும் சமூகத்திலும்   என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது? அவர் இல்லாமல் நம்மளால் வாழமுடியாதா? இந்தமாதிரி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுபாருங்கள். கடைசியாக வருகிற விடைதான் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குமான விடையும்.