சில நினைவுகள்...

     பெரிய மழை பெய்ந்தால் குறைந்தது வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை அந்த ஆற்றில் தண்ணீர் வரும்...ஒருவகையில் காட்டாறு...அதுவும் என் வீட்டின் மிக அருகில்..

     அந்த ஆறோடு பல இனிய நினைவுகள் உண்டு...சிறிய வயதில் விளையாடியது,என் அம்மாவின் கண்டிப்புக்கு இணங்க காலை,மாலை உடற்பயிற்சிக்காக ஓடியது, ஒரு வயது வந்தவுடன் அங்கு சென்று தனியாக வானத்தை பார்த்து படுத்துக்கொண்டு ஏதாவது ஒன்றை கற்ப்பனை செய்வது...........இப்படி நிறையா உண்டு...

         தண்ணீர் வந்துவிட்டால் இன்னும் அதிக சுகம் ..தண்ணீர் வந்தவுடன் குளிக்கமுடியாது.....தண்ணீர் தெளியவேண்டும்.... குறைய வேண்டும் அப்புறம்தான் அனுமதி கிடைக்கும் வீட்டில்... அதுவும் கரையில் இருந்து குளித்துவிட்டு வந்துவிடவேண்டும்...

     தண்ணீர் ஓட்டம் நின்றபிறகும்...நீர்ச்சுழியால் ஏற்ப்பட்ட கேணி என்று சொல்லப்படும் பெரிய பள்ளங்களில் நீர் இருக்கும்...அங்கு போக அனுமதி இல்லை...

    தண்ணீர் தரையை ஒட்டித்தான் போய்கொண்டு இருந்தது...எங்கள் வீட்டில் வளர்த்த செல்ல நாய் எங்கோ சேற்றில் விழுந்து எழுந்துவர அதை ஆற்றில் போய் குளிப்பாட்ட எண்ணிய நான் அதை எப்படியோ அன்பாக அழைத்துக்கொண்டு ஆறுவரை போய்விட்டேன்...

   நாயை நான் குளிப்பாட்ட போகிறேன் என்பது அந்த நய்க்கோ,என் வீட்டுக்கோ தெரிந்தால் இரண்டுமே பிரச்சினை...நாய் என்கூட வராது,வீட்டில் திட்டு விழும்...

    தண்ணீர் பரப்பு வந்தவுடன் நாயை கண்டுகொள்ளாதாவாறு நான் கடந்து சென்றேன்..அப்படி போனால்தான் அது என்னை பின் தொடரும்...அந்த இடத்தில நான் அன்பாக வருமாறு அழைத்தால் அதுக்கு சந்தேகம் வரும்......என்னைவிட புத்திசாலியான நாய்...

     ஒரு வழியாக நீரைகடந்து நாயோடு நடு ஆற்றில் இருந்தேன்..தண்ணீர் கரையோராமாகத்தான் போனது...இப்போது எனக்குள் இருந்த குழப்பம் எப்படி நாயை தண்ணீரில் இறக்கி குளிப்பாட்டுவது...??


     அப்போதுதான் அருகில் இருந்த கேணி கண்ணில் பட்டது..கொஞ்சம் பெரியது..அது இருந்தது தண்ணி ஓடும பாதையில் ......அதாவது ஓடும நீர் அதில் நிரம்பி பின் வெளியேறி சென்றது......

      முதலில் நாயை அருகில் அழைத்து அதை அப்படியே தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு நானும் குதித்து அதை பிடித்துவைத்து குளிப்பாட்டுவதாக முடிவு செய்து நாயை அன்பாக அழைத்தேன்...


      நன்றியுள்ள நாய், எனக்கு வீட்டில் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் பாதியை அதுக்கு போட்டதற்கு பரிகாரமாக நான் கூப்பிட்டதும் அன்பாக என்னிடம் ஓடிவந்தது...நாய் கொஞ்சம் பெரிதும்,சிறியதும் இல்லாமல் இருந்ததால் அதன் நான்கு காலகளையும் பிடித்து அப்படியே தூக்கி அந்த கேணிக்கு அருகில் செல்லும்போது அது உணர்ந்துகொண்டது...என் கையில் இருந்து திமிரி ஓட முயன்று தோற்றது..

       அதை கேணிக்குள் தூக்கி போட்ட அதே வேகத்தில் நானும் குதித்தேன்...குதித்த வேகத்தில் உள்ளே சென்றேன் ..மேலே வர கையை காலை உதறுகிறேன்...அந்த உதறளுக்கு ஏற்ப சில நொடிகள் மட்டும் மேலே வருகிறேன்..மீண்டும் மூழ்குகிறேன்...

       அப்படி மேலே வரும்போது நான் பார்த்தது ...நாய் தனது தலையை மட்டும் வெளியில் வைத்தபடி அழகாக நீந்தி கரைக்கு செல்வதை...நிறையா தண்ணீர் குடித்து..சில நொடிகள் மேலே வருவதும் மீண்டும் உள்ளே செல்வதும்...ஒரு கட்டத்தில் நீரில் மூழ்கி மூக்கு வழியாக நீர் உள்ளே செல்ல ஆரம்பித்தது....


     வெளியே வரமுடியாமல் உள்ளே அப்படியே மூழ்கினேன்...தரையை தொட்டபோதுதான் தெரிந்தது....ஆற்றில் கேணிகள் எப்போதும் செங்குத்தாக இருக்காது..மணல மிகவும் உதிரியாக இருக்கும் என்பதால் குழிகள் சரிவாகத்தான் இருக்கும்....

      அப்படி ஒரு சரிவான இடத்தில்தான் நான் இருந்தேன்...வேகமாக கையை அந்த சரிவின் மீது வைத்து அந்த மணலசரிவில் தவழ்ந்து கரை மேலே வந்து அப்படியே விழுந்தேன்....

      மூச்சு விடமுடியாமல் திணற..மூக்கு வாயில் இருந்து தண்ணீர் மண்ணோடு வர ஆரம்பித்தது..நாய் சற்று தூராமாய் நின்று தனது ஈர உடலை உதறிய படி நின்று இருந்தது...மூச்சு இரைத்தபடி அதை பார்த்துக்கொண்டு இருக்க....அது வீட்டை பார்த்து நடந்தது....


      அப்படியே கொஞ்சம்  இயல்பாக மூச்சு விடும்வரை படுத்த இருந்த போது..நான் யோசித்தது....நாய் பிறந்ததில் இருந்து என்னுடன்தான் இருக்கின்றது பின்னே எப்படி அதுமட்டும் நீச்சல் பழகி இருக்க முடியும்?? என்று...


      அப்படியே ஈரமாக வீட்டிற்கு சென்றால் பிரச்சினை என்பதால்..வெயிலில் உலர்த்த சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு வீடுபோய் சேர்ந்தேன்...அன்றைய இரவில் சரியாக தூக்கம் வர மறுத்தது....தண்ணீருக்குள் இருந்தபோது என்னுடைய மன நிலை பலமுறை நினைவுக்கு வந்தது....

      எப்படியோ ஒருவழியாக தூங்கி மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ...நாய் வழக்கம்போல நின்று வாலை ஆட்டினாலும்...அதன் முகத்தை நான் பார்க்கும் போது ஏனோ என்னை பார்த்து  நக்கலாக சிரிப்பது போல இருந்தது....







(சிறுவயதில் ஏற்ப்பட்ட அந்த சந்தேகம்...சில வருடங்கள் கழித்து தீர்ந்தது ....சில விலங்குகள் இயல்பாகவே நீந்தும் திறனை பெற்று இருக்குமாம...அடுத்த படியாக டார்வின் தாத்தா சொன்ன படி பார்த்தால்...ஒவ்வொருஉயிரினமும் ஒரு சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை நிலைபடுத்திகொள்ள முயலுமாம்...அதாவது நாய் நீந்தியது...நான் நீந்த முயற்சித்தது....

   அதில் வெற்றி பெற்றால உயிர் வாழும் இல்லை என்றால் அதன் கதை முடிந்தது....கிட்டதடட் Neanderthals எப்படி தாக்குபிடிக்க முடியாமல் நம்மை விட்டுவிட்டு அழிந்தார்கள் அதுபோலவே......


      இதே போல ஐன்ஸ்டீன் தாத்தாவுக்கு ஒரு நிகழ்வு உண்டு அதாவது அவர் ஒருமுறை நண்பர்களோடு மலையேற்றம் செய்யும்போது அவரின் கால் இடறி  கிழே விழநேர்ந்தது...அப்படி அவர் விழுந்து இருந்தால் கண்டிப்பாக உயிர் பிழைத்து இருக்க மாட்டாராம்.... அவருடைய நண்பர் ஒருவர் அவரை இழுத்து பிடித்து காப்பாற்றினார்..அவரது பெயர் Adolf fisch என்று நினைக்கிறேன்)))

கவி - மதி - லேசர்

"அவனை ஏதாவது செய்ய வேண்டும்" என்றாள் கவி

"யாரை என்ன செய்யணும்?" அருகில் உட்கார்ந்து இருந்த மதி கேட்டாள்

     "அதான் அந்த கணேஷை......போனதடவையும் எனக்கு போட்டியாக அவன்தான் வந்து ஜெயித்தான்.. கண்டிப்பாக இந்த முறையும் அவன் வருவான்"..என்றாள் கவி

"அதுக்கு நீ அவனை என்ன செய்யபோறே?"

     "முதலில் அவன் எப்படி  என்னைவிட நல்லா கதை எழுதுறான் என்று  பர்ர்க்கவேண்டும்,போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு அவன் கண்டிப்பா அதுக்கு உண்டான கதையை எழுதி இருப்பான் அந்த கதையை தெரிந்துவிட்டால் அதைவிட நான் நன்றாக எழுத முடியும்.".என்றாள் கவி

     "முடிந்தால் அவனைவிட நன்றாக எழுத முயற்சிசெய் அதைவிட்டுவிட்டு அவனைபோய் ஏதாவது செய்யப்போகிறேன் என்கிறாய்" என்றாள் மதி

    "அவனை ஒன்றும் செய்யபோவதில்லை அவன் இல்லாத நேரத்தில் அவனது அறைக்குள் சென்று அந்த கதையை படித்துவிட்டு அல்லது அழித்துவிட்டு வரப்போகிறேன்" என்றாள் கவி

     "இதை விட என்னிடத்தில் ஒரு நல்ல விசயம் இருக்கின்றது ஆனால் அது இப்போ உனக்கு உதவாது" என்றாள் மதி

"அது என்ன விசயம் ?"

       "நீ அவனை முதலிலேயே காதலித்து இருக்க வேண்டும்... அப்படி காதலித்து இருந்தால்...  எப்படி அவன் கதை எழுதுவான் அதுவும் உனக்கு போட்டியாக..அவனுக்கு உன் பின்னால் சுற்றவே நேரம் இருந்து இருக்காது..உன்னை பற்றி கவிதைவேண்டுமானால் எழுதவாய்ப்பு இருக்கின்றது .".

     "அதையெல்லாம்  முயற்சி செய்து பார்த்துவிட்டேன் அவன் என்ன காதலிக்க ".................?" , நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை...மறுத்துவிட்டான்....அதான் இந்தமுடிவு" என்றாள் கவி

"சரி என்னாவது செய்" என்றாள் மதி

     "இதுக்கு உன்னுடைய உதவியும் வேண்டும் நான் எப்படி தனியாக செய்வது" என்றாள் கவி

     "நான் வரமாட்டேன் என்றால் நீ விடவா போறே சரி எப்போ அவன் அறைக்குள் போகனும்னு நீ முடிவு பண்ணி வச்சு இருப்பியே?"

     "ஆமாம் ... அவன் அலுவலகத்துக்கு போனபிறகுதான் நாம் போய் வேலையை முடிக்கவேண்டும்... நமக்கு தேவையான நேரம் கொஞ்சம்தான்..நீ என்னுடன் இருந்தால் மட்டும் போதும் மத்ததை நான் பார்த்துகொள்கிறேன்" என்றாள் கவி

      ஒருவழியாக யாருக்கும் சந்தேகம் வராமல் கணேஷின் அறைக்கு வந்து இருந்தார்கள்...கவி ஏற்க்கனவே தயாராக பல சாவிக்கள் அடங்கிய ஒரு கொத்தை தனது கைப்பைக்குள் மறைத்து எடுத்து வந்து இருந்தாள்...அதில் ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்க்க கதவு திறந்தது...

     உள்ளே நுழைந்த இருவரில் கவி கணேஷ் கதை எதில் எழுதி இருக்கிறான் என்று தேட..மதி அறையை நோட்டம விட்டாள்...

       "இவ்வளவு புத்தகமா...இவனுடைய அறைக்கு திருடன் வந்தால்கூட ஏதாவது பாவம் பார்த்து வைத்துவிட்டு போவானே தவிர எதையும் திருடமாட்டான்...அழுக்கு துணியையும்,புத்தகத்தையும் தவிர ஒண்ணுமே இல்லை" என்றாள் மதி

அதை காதில் வாங்காமல் எதையோ கவி படித்து கொண்டு இருந்தாள்..

"என்ன படிக்கிறே?" என்றாள் மதி

"என்னால் நம்பவே முடியல இது எப்படி சாத்தியம்?" என்றாள் கவி

"அப்படி என்ன எழுதி இருக்கான்?"

     "நாம் இருவரும் இங்கு வருவதை அவன் முன்கூட்டியே கதையாக எழுதி இருக்கிறான்..இதுதான் அந்த போட்டிக்கான கதையும் கூட" என்றாள் ஆச்சர்யத்துடன் கவி


"அப்படியா நமது பெயரையும் சரியாக சொல்லி இருக்கிறானா என்ன?"


    "இல்லை பெயரை தவிர்த்து எல்லாம் சரியாக சொல்லி இருக்கிறான்...இதோ நீயே பாரேன" என்று சொல்லி அவளிடம் காட்டினாள்..

    அந்த கதையில் கவி, மதியும் அறைக்குள் நுழைந்தவரை சரியாக இருந்தது......அதற்கு பிறகு ஒரு கடைசி பத்தி.... அதோடு கதையை முடித்து இருந்தான்...அதை இருவரும் மிக ஆர்வமாக படிக்க ஆரம்பித்தார்கள்..

     உள்ளே நுழைந்த இருவரும்  டைரியை எடுத்து அதில் உள்ள கதையை படித்து கொண்டு இருந்தார்கள்..அவர்களுக்கு தெரியாது..... அந்த டைரி இருந்த இடத்திற்கு கிழே ஒரு சென்சார் இருப்பதும்..அதை எடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த இடத்தில வேறு எதையாவாது வைக்கவில்லை என்றால் அங்கு பக்கவாட்டில் இருக்கும் லேசர் சாதனம் உயிர்பெற்று லேசர் ஒளிக்கதிரை பாய்ச்சும் என்று...

கவி கதையை படித்து முடிக்கும் போது சரியாக ஐந்து நிமிடம் ஆகியிருந்தது....

சில ஆறுதல்கள்...

      விடுமுறைக்கு ஊருக்கு சென்றால்.. அடுத்த நாளில் செய்யும் முக்கியமான வேலை என்றால்.. அவளை பார்த்து ஒரு புன்னகையை பரிசாய் பெறுவதுதான்....பேசமாட்டாள்.......அந்த வழியாக நான் போகும்போது பார்த்து சிரிப்பாள்....ஒரே ஊரில் இருந்துகொண்டு காதலிப்பதில் உள்ள பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது...

      பொதுவாக காலையில் எப்போதும் அதிக நேரம் தூங்கினால் அது பிடிக்கும்,இது பிடிக்கும் என்று தூங்க விடாமல் என் வீட்டில் எழுப்பி விடுவார்கள்..ஆனால் அன்று யாரும் எழுப்பவில்லை....ஆறுதலாக தூங்க நினைத்தபோது வழியில் சிலர் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது கேட்டது...

     காலையில் காட்டுக்கு வேலைக்கு செல்வார்கள் என்று நினைத்தேன்..ஆனால் தொடர்ந்து ஆண்கள்,பெண்கள். பேசிக்கொண்டே போகும் குரல் கேட்டது....

      எழுந்து பார்த்தால் என் வீட்டில் யாரையும் காணோம்...வெளியில் பார்த்தால் ஆட்கள் சென்று கொண்டு இருந்தார்கள்..என்னவென்று கேட்க அந்த பிரதான பாதைக்கு செல்ல.... அந்நேரம் என்னவள் அவள் தோழியுடன் வந்து கொண்டு இருந்தாள்..

      நான் பொதுவாக அவர்களை நோக்கி “எல்லாரும் எங்கே போகிறார்கள்?” என்று கேட்டு..
இப்போதாவது அவள் பேசுவாள் என்ற ஆவலில் இருக்க ....இப்போதும் பேசவில்லை...அவளுடைய தோழிதான் ஊரில் உள்ள ஒருவர் குழாய்பதிக்க பள்ளம தோண்டிய இடத்தில் இருந்து ஒரு புதையல் கிடைத்து இருக்கிறதாம் அதை பார்க்கத்தான் எல்லோரும் போய்கிட்டு இருக்கோம்..நீயும் வாயேன் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள்.....

    அந்த புதையல் கிடைத்து இருக்கும் இடத்திற்கு சென்றபோது, கிட்டதட்ட ஊரில் உள்ள பாதிபேர் அங்குதான் இருந்தார்கள்...அவர்களுக்கு மத்தியில் ஒருவர் செவ்வக வடிவ கல்லை தண்ணீர் ஊற்றி அதன் மேல் இருந்த மண்ணை கழுவி கொண்டு இருந்தார்..

     அது முழுவதும் ஒரே கல்லால் செய்யப்பட்டு இருந்தது.... எந்த பக்கம் திறக்க வழி இருக்கிறது என்று அவர் பார்க்க...அதன் ஒரு பக்கத்தில் நான்கு கல்லாலான வில்லைகள் இருந்தன...நான்கும் ஒரு சதுர வடிவ slot ல் நகரும் வண்ணம் இருந்தது...அதாவது அந்த நான்கு எழுத்துக்களை நமக்கு தேவையானபடி அந்த slot ல் மாற்றியமைக்கலாம்.....அதே நேரத்தில் அந்த பகுதியில் இருந்து வெளியில் எடுக்க முடியாது...

     அதில் இருந்த எழுத்துக்கள் சு,பு,செ,கு. அவர் இதை பார்த்துவிட்டு அந்த மேல் பகுதியை திறக்கின்றதா என்று இழுத்து பார்த்தார் அது வரவில்லை...மற்ற பக்கங்களை சோதித்து பார்த்தார்.....இந்த எழுத்துக்கள் இருந்த பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக சமமாக இருந்தது...

       கொஞ்சம் முயற்சியுடன் அதை தூக்கி ஒரு திண்டின் மீது வைத்தார்..அதற்குள் ஊர் பெரியவர்கள்...இது சில எழுத்துக்களால் பூட்டப்பட்டு இருக்கிறது..இதை சுத்தியல் கொண்டு உடைத்துதான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருந்தனர்....

      அந்த கல்பெட்டி அருகே சென்று பார்த்தேன்...அந்த எழுத்துக்கள் இருக்கும் பக்கதில்தான் அது திறப்பதற்கு உண்டான சாத்தியம் தெரிந்தது...அந்த எழுத்துக்களை கொஞ்சம் நகர்த்தி பார்த்தேன்..அதன் இடுக்குகளில் மண் நிரம்பி இருந்ததால் நகர மறுத்தன..தண்ணீர் வைத்து சுத்தபடுத்திய பின்னர் ஒரு சிறு சத்தத்துடன் நகர்ந்தது...

       அதற்குள் ஒருவர் ஒரு சுத்தியலையும் உளியையும் எடுத்து வந்து இருந்தார்..அதே நேரத்தில் கொஞ்ச தூரம்தள்ளி இருந்த பெரியவர்கள்..இதை கலெக்டரிடம் ஒப்படைக்கலமா? தாசில்தாரிடம் கொடுக்கலாமா? என்ற விவாதத்தில் இருந்தனர்...சுத்தியல் வைத்து இருந்த மனிதர் அந்த பெரியவர்களின் கட்டளைக்கு காத்து இருந்தார்...

      அதற்கு முன் நான் அந்த பெர்யவர்களிடம் சென்று "இதை நான் ஒரு முறை திறக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்க..."அது உன்னால் முடியாதுப்பா..இது பழைய காலத்து தந்திரமுறை...உடைப்பதுதான் எளிது" என்றார் அதில் ஒருவர்.

     "உடைப்பது இறுதி தீர்வாக இருக்கட்டுமே,அதற்கு முன் நான் கொஞ்சம் முயற்சித்து பார்க்கிறேனே"..என்று சொல்ல ஒருவழியாக சம்மதித்தார்கள்..... சுற்றி கூட்டம் கூடி இருக்க..அதில் என்னவளும் இருந்தாள்..ஒரு ஓரத்தில் என் பாட்டியும் இவன் என்ன செய்யபோகிறான் என்று பார்த்து கொண்டு இருந்தார்கள்...

        முதலில் அதில் இருந்த எழுத்துக்களை பார்த்தேன்..சு பு செ கு ...இந்த நான்கு எழுத்துக்களையும் எந்த வகையிலாவது மாற்றி அமைத்தால் ஒரு பொருள்படும் சொல்வருகின்றதா எனப்பார்த்தேன்...ஒரு அர்த்தம இருந்தது “புகு” ..இது தவிர மற்ற இரண்டு எழுத்துக்கள் ஒரு அர்த்தம இல்லாமல் போகின்றன.......அந்த “புகு” என்ற சொல் சரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதனை வரிசையாக அமைத்து அதை இழுத்து பார்த்தேன் திறக்கவில்லை..

       சற்று நிமிர்ந்து பார்க்க என்னவள் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்....பெரியவர்கள் வேறு அதை உடைக்கும் அவசரத்தில் பார்த்தார்கள்..

     மீண்டும் அந்த எழுத்துக்களில் முயற்சி செய்தேன்..இந்த ஒவ்வொறு எழுத்துக்களும் தனியாக எதையாவது குறிக்கின்றதா? என பார்த்தால்...அதற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது...

        இந்த எழுத்துக்களை ஒரு வரிசையில் அமைத்தால் மட்டுமே பெட்டி திறக்கும்...அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் கண்டிப்பாக ஒரு வரிசையில் இருக்கவேண்டும், அல்லது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்க வேண்டும்...

        இந்த எழுத்துக்கள் ஒரு வரிசையில் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை..அப்படியானால் இது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்கின்றது...அந்த ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்...

        முதலில் பொதுவாக வரிசையில் அமைக்கப்பட்டு இருக்கும் விசயங்களை வைத்து தீர்க்க முடிகின்றதா என்று பார்த்தேன் ..இல்லை..தமிழ் மாதங்கள்,ராசிகள்,கிழமைகள்,எண்கள்..இதில் ஏதும் அடங்கவில்லை...வேறெந்த வரிசையை அடிப்படையாக வைத்து இது அமைக்கப்பட்டு இருக்கும்??...அங்கு இருந்த பெரியவர்களிடம் கேட்டால்....இதுக்குத்தான் முதலிலேயே உடைக்கலாம் என்று சொன்னேன்....எனச்சொல்லி உடைக்க ஆரம்பித்து விடுவார்கள்...

        அதே வரிசையில் கோள்களை வைத்து பார்த்தேன்..எழுத்துக்கள் சரியாக பொருந்தின...அதாவது சூரியனில் இருந்து வரிசையில் பார்த்தால்..புதன்(mercury),சுக்கிரன்(venus),செவ்வாய்(mars),குரு(jupiter)..இதில் வரும் முதல் எழுத்துக்கள் சரியாக பொருந்த வேகமாக அதை அமைத்து இழுத்து பார்க்க..அது திறக்க மறுத்தது..என்ன காரணம்..எழுத்துக்கள் எல்லாம் சரியாக பொருந்தியும் ஏன் திறக்கவில்லை?? என்று யோசிததபோதுதன் தெரிந்தது...நமது முன்னோர்களின் நவகிரக அமைப்புபடி பார்த்தால் கோள்களின் வரிசை வேறு.... அதன்படி பார்த்தால் செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்...இதன் எழுத்துக்களை வரிசையில் அமைத்ததில் மேலே இருந்த மூடி கொஞ்சம் ஆடியது...

   அதை பிடித்து இழுக்க திறந்து கொண்டு தனியாக வந்தது..இதை பார்த்தவுடன் சுற்றி இருந்த பெரியவர்கள் உட்பட எல்லோரும் உள்ளே என்ன இருக்கின்றது என்று ஆர்வமாக பார்த்தார்கள்...எல்லோரும் பார்த்த வேகத்தில் பின்வாங்கினார்கள்..

        உள்ளே இருந்தது..பழங்காலத்து ஓட்டை நாணயங்கள்....ஒரு பெரியவர் வந்து அதை முழுவதும் கிளறி பார்த்துவிட்டு..எல்லாம் ஓட்டை நாணயங்கள்... .....கஷ்டப்பட்டு திறந்த கணேஷுக்கு இதை கோர்த்து ஒரு மாலை போடுங்கள் என்று சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்...

       இப்போது என்னவளை பார்த்தேன் அவள் சிரிக்கவில்லை....கண்களில் கோபம தெரிந்தது...இருவரும் சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருந்தோம்...

      சிலர் அந்த நாணயங்களை பார்த்துவிட்டு சென்றனர்..யாரும் இதை எப்படி திறந்தாய் என்று கேட்கவில்லை...ஒருவழியாக கூட்டம் குறைந்து இருந்தது..

       என்னருகில் வந்தாள்...சில நாணயங்களை கையில் எடுத்து பார்ப்பதுபோல பார்த்துகொண்டே "சொல் கணேஷ் இதை எப்படி நீ திறந்தாய் என்று? என்றாள்...

ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் - 2

   ஒரு  அறிவியல் சிரிப்புக்கு விளக்கம் சொல்லபோய் இப்போது ஐன்ஸ்டீன் குவாண்டம் தத்துவத்தை ஏன் மறுத்தார் என்பதில் இருக்கிறோம்..

   குவாண்டம் தத்துவத்தில் இருந்த சத்தியமின்மையை குறை சொல்லி கொண்டு இருந்த ஐன்ஸ்டீன் HEISENBERG உருவாக்கிய ஐயபாட்டு கொள்கையை இன்னும் அதிகமாக மறுக்க ஆரம்பித்தார்...

   ஐயபாட்டு கொள்கையின்படி துகளின் உந்தத்தை(momentum) துல்லியமாக அளக்க முயன்றால் அந்த இடத்தில் துகளின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்வதற்கு பதில் தோராயமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்..அதே போல் அதன் energy மற்றும் time இந்த இரண்டிலும் எதையாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் துல்லியமாக சொல்ல முடியும்..

   இங்கு ஐன்ஸ்டீன் அவர்களின் வாதம என்னவென்றால் இந்த மாதிரி தோராயமாக சொல்வது இல்லாமல் அந்த துகள்களின் அளவீடுகளை துல்லியமாக கொடுக்கும் ஒரு தத்துவம் இருக்கின்றது அதை கண்டுபிடிக்கவேண்டும் என்பதே...

  மேலே சொன்ன விசயங்கள் சிலருக்கு புரிவதற்கு சிரமமாக இருக்கலாம்..இனிவரும் பகுதிகளில் இந்த அணுக்கள்,அனுதுகள்கள்,எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போது என்ன நடக்கின்றது, போன்றவற்றை பார்க்கலாம்..

   புரிதல் பற்றி ஐன்ஸ்டீன் ஒரு அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.....ஒரு விசயத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அந்த விசயத்தை உங்களின் பாட்டியிடம் சொல்லி அதை அவருக்கு சரியாக புரிய வைக்க வேண்டும்..அப்படி நீங்கள் சொல்லும் விசயத்தை அவர் சரியாக புரிந்துவிட்டால்..அந்த விசயத்தை நீங்களும் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்பலாம்.....


   என்னை பொறுத்தவரை இது சாத்தியம் இல்லைதான்...என் பாட்டியிடம் சென்று இப்போது பாட்டி இந்த அனுவில் எலெக்ட்ரான் தனது இடத்தை மாற்றிகொள்வதால் ஏற்ப்படும் போட்டான் துகள் ஒளியுடன் வெளிப்படும்...அதை வைத்து அந்த துகளின் இருப்பிடத்தையும்,அதன் உந்தத்தையும் அளக்க முற்பட்டால் அந்த இரண்டையும் சரியாக அளக்க முடியாது,ஏனென்றால் துள்ளி ஓடும போட்டான் எங்கு எப்போ எப்படி போகும்னு தெரியாது என்றால், அவர் இவன் சின்ன வயதில்தான் என்னை கதை கேட்டு தொந்தரவு செய்தான்,இப்போதும் ஏதோ கதை சொல்லி தொந்தரவு செய்கிறான்..கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க விடமாட்டன் போல என்று புலம்புவார்கள்..


   இந்த குவாண்டம் தத்துவமும் கொஞ்சம் சிக்கலான விசயம்தான்..அதிக கணித சமன்பாடுகள்,பலரின் தத்துவங்கள் நிறைந்து குழப்புவது..கொஞ்சம் பெரியம்மா,சின்னம்மா போன்ற தொடர் நாடகங்கள் பார்க்காமல் முயற்சி செய்தால் குறைந்தது இந்த தத்துவம் என்ன? இது என்ன சொல்கிறது? என்பதையாவது புரிந்து கொள்ளலாம்..

   சரி கதைக்கு வருவோம், இந்த ஐயபாட்டு கொள்கைக்கு முன்னரே ஐன்ஸ்டீன் Bohr டம் பல சோதனைகள் இந்த தத்துவம் சம்பந்தமாக  செய்ய சொல்லி இருந்தார்....இந்த நிலையில் தான் Heisenberg ஐயபாட்டு கொள்கையை வெளியிட்டதால் மனிதருக்கு கோபம் அதிகமானது...

   இந்த நேரத்தில் சொன்னதுதான் god does not play dice with the universe இதன் அர்த்தம முழுவதும் இந்த ஐயபாட்டு கொள்கைக்கு சரியாக பொருந்தும்..அதாவது கடவுள் இந்த உலகத்தை படைத்தார் என்று நம்பினால் அவர் ஒரு முறையாகத்தான் படைத்து இருப்பார்..அந்த வரையறுக்க தக்க ஒரு முறையை நமது அறிவியல் விதிகள் சரியாக விளக்க வேண்டும்.

    அதைவிடுத்து அதை சாத்தியமாக கொண்டு விளக்குவது ஒரு முழுமை இல்லை என்பதே அவரின் வாதம்....மேலும் the moon is still there if we don't look at it இதுவும் ஐயபாட்டு கொள்கைக்கு ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னதுதான்..அதாவது நாம் அறிவியல் விதிகொண்டு எலெக்ட்ரான் சுழற்சியை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றாலும் அந்த எலெக்ட்ரான் வரையறுக்க தக்க ஒரு சுழற்சியை கொண்டு இருக்கின்றது என்பதே.....அதைவிளக்கும் அறிவியல் விதியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே..
   அவரும் அந்த தத்துவத்தை கண்டுபிடிக்க தனது வாழ்நாளின் பெறும் பகுதியை செலவிட்டார் ......அவர இறக்கும் முந்தைய நாள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தும்கூட தனது அறையில் இருந்த அவருடைய மூக்கு கண்ணாடி,எழுதிக்கொண்டு இருந்த சில தகவல்களை கொண்டு வரும்படி சொல்லி அதில் வேலைகள் செய்தார்.

   ஐன்ஸ்டீன் இந்த குவாண்டம் தத்துவத்தை முழுமையான தத்துவம் இல்லை என மறுத்ததுக்கு காரணம் Bohr க்கும் அவருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை...சொல்ல போனால் இந்த குவாண்டம் தத்துவம் உருவானதுக்கு Bohr தவிர்த்து பலபேர் காரணமாக இருக்கிறார்கள் அதில் ஐன்ஸ்டீனும் உண்டு...

ஆனால் general relativity theory க்கு தாத்தா ஒருவரே தலைவர்

   இறுதியில் யாருடனும் விவாதம் செய்து பலன் இல்லை என்பதை உணர்ந்தாரோ என்னமோ தெரியவில்லை, ஐன்ஸ்டீனும் அவரோடு சேர்ந்த இருவரும் சேர்ந்து குவாண்டம் தத்துவத்தை பற்றி EPR ( Einstein, . Podolsky . Rosen)  என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்..(மற்றொன்றில் விளக்கமாக பார்க்கலாம்)...


  ஐன்ஸ்டீன் சொல்வதில் ஒரு தவறும் இல்லை...சரியான தொழில்நுட்பம் அல்லது ஒரு தத்துவம்  நமக்கு கிடைத்துவிட்டால் அனுத்துகளின் எல்லா தன்மையையும் ஒரே நேரத்தில் துல்லியமாக அளக்கலாம்...எப்போது இந்த நவீன தொழில்நுட்பம்(தத்துவம்) வருகின்றதோ அப்போது Heisenberg ன் ஐயபாட்டு கொள்கை விழுந்துவிடும்...

   அதோடு, ஐன்ஸ்டீன் குவாண்டம் தத்துவத்தை பற்றி என்ன நினைத்து இருந்தார் என்றால்,if quantum theory is correct , it signifies the end of physics as a science ஒரு முழுமையான சரியான குவாண்டம் தத்துவம் கண்டுபிடித்தால் அதுவே இயற்பியல் விதிகளில் கடைசியாக அமையும்...ஆனால் இது இன்றுவரை சாத்தியமாகவில்லை...ஏனென்றால் ஒரு முழுமையான தத்துவம் என்றால் அதில் அறிவியலின் நான்கு ஆதார விசைகள் இணைந்து செயல்படவேண்டும்..

   இதுக்குத்தான்  நம்மவர்கள் இப்போது பெறும்முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.... 

  ஐன்ஸ்டீன் தவிர சில பெரியவர்கள் குவாண்டம் தத்துவத்தை பற்றிசொல்லி இருக்கிறார்கள்..
if you are not completely confused by quantum mechanics, you do not understand it" சொன்னது john wheeler
roger penrose க்கும் Bohr க்கும் என்ன சொத்து பிரச்சினையோ தெரியவில்லை..."quantum mechanics makes absolutely no sense.."

   யார் என்ன சொன்னாலும் சரி இப்போதைய நிலையில் இருக்கும் மிகபெரிய மற்றும் உபோயோகப்படும்  தத்துவங்கள் என்றால் ஒன்று general relativity theory மற்றொன்று குவாண்டம் தத்துவம் தான்...இந்த இரண்டையும் இணைத்துத்தான் ஒரு முழுமையான அறிவியல் தத்துவத்தை உருவாக்க நினைக்கிறார்கள்..ஆனால் இந்த இரண்டுமே இணைய மறுக்கின்றன... 


(தொடரலாம் இப்போதைக்கு இதுமட்டும்)


ஒரு ரகசியம்

    பயமா? பக்தியா? தெரியவில்லை...இதுவரை கோயிலில் உள்ள அந்த குகைக்குள் யாரும் போனதாக இல்லை.....குகை என்று சொல்வதைவிட....கோயிலுக்குள் கிழே இருக்கும் ஒரு வழிப்பாதை...

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி. 
  
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும், அந்த மர்ம குகையும்தான்...

   எல்லோரின் நம்பிக்கையும் அந்த குகைக்குள் சில ரகசியங்கள் இருகின்றன என்பதுதான், சிலர் புதையல் இருப்பதாக சொல்லுவார்கள்..ஆனால் இதுவரை யாரும் உள்ளே போனதில்லை..

   காரணம் அந்த குகையின் வாசலில் இருந்த ஒரு கல்வெட்டில் குறிப்பிட்ட சில விசயங்கள் ....நான் பலமுறை என் பாட்டியிடம் கேட்டு இருக்கிறேன்..அந்த குகைக்குள் என்ன இருக்கின்றது என்று?

    அது எதுக்கு உனக்கு? ஏதும் ஆராய்ச்சி செய்யப்போகிறேன் என்று உள்ளே போக முயற்ச்சிக்கதே என்று கண்டிக்க மட்டுமே செய்வார்கள்..இதுதான் அந்த குகைக்குள் என்ன இருக்கிறது? என்று பார்க்கும ஆர்வத்தை அதிகமாக்கியது...

    அதற்கு ஏற்ற நேரமும் வந்தது, ஊரில் ஒருவரின் திருமணத்திறக்கு வீட்டில் உள்ள அனைவரும் சென்றுவிட..தனிமையில் இருந்த எனக்கு அந்த குகைக்குள் செல்லும் எண்ணம வந்தது..இது என் வீட்டுக்கு தெரிந்தால் மட்டும் அல்ல ஊரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சினைதான்..அடுத்த நொடியே வீட்டில் தகவல் கொடுத்து விடுவார்கள்..

    அதனால் நான் செய்யும் எல்லா வேலைகளையும் மறைத்து செய்ய வேண்டியது இருந்தது, உள்ளே போவதற்கு தேவையான பொருள்கள் என்னவென்று யோசித்ததில்..இரண்டு டார்ச் லைட்டுகள்,ஒரு சிறிய கம்பு மட்டும் போதும் என நினைத்தேன்....

   யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் நுழைந்தேன், அந்த குகையின் வாசல் மண் மூடி மேடு ஏறியிருந்தது.. அந்த கல்வெட்டு செவ்வகவடிவ  கல்லில் செதுக்கி அதன் உள்நுழையும் இடத்தில் வைக்கபட்டு இருந்தது...

அதில் ஒரு சில வரிகள் அமைந்த பாடலும் அதற்கு கீழ் ஒரு அட்டவணையும் இருந்தது...அது...

உயிர்வளி காக்க உயிர்வழி சென்று
ஆயுதமெடுத்தால் மெய்வழி கிட்டும்

மெய்கீழ்வழி சென்றால் உயிரினும் மேலான
மெய்ரகசியம் வெளியாய் இருக்கும்

பலவழி இருக்குமிதில் மனவழி சென்றால்
உயிர்வளிதன் மெய்யின்வெளி நீங்கும்



   இதில் இப்படி எழுதி இருப்பதற்கு பயந்துதான் யாரும் உள்ளே செல்லவில்லை.....ஒருவேளை அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பதை புரிந்து உள்ளே போகவில்லையா, இல்லை அது என்னவென்று புரியாமல் போகவில்லையா என்பதை நான் தெரிந்துகொள்ள அந்த வார்த்தைகளை முதலில் நான் புரிந்துகொள்ள வேண்டும்..  


    இரண்டு முறை வாசித்து பார்த்ததில் அதன் முழு அர்த்தம் புரிந்தது..ஆனால்.எந்த உயிர் வழி சென்று எங்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதில் குழப்பம்...அதற்கு கிழே அட்டவணையில் வரிசை படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள்..அந்த எழுத்துக்களில் எங்காவது உயிர் என்ற பொருளில் சொல் வருகின்றதா என பார்த்தேன்...

    அந்த எழுத்துக்களில் ஒரு எழுதுக்கள கூட ஒரு முழு வார்த்தையை கொடுப்பதாக இல்லை..எந்த முறையில் இது அமைக்கப்பட்டு இருக்கின்றது என்ற அடிப்படை தெரிந்தால் மற்றவற்றை கண்டுபிடிப்பது எளிது..

  உயிர் வழி என்றால் என்ன அர்த்தம? உயிரின் வழி...அந்த எழுத்துக்களின் அமைப்பை பார்த்தேன்..ஏதவது உயிர் சம்பந்தபட்டதை உணர்த்துகிறதா என்று?.. அதன் நான்கு புறங்களில் இருந்து பார்க்கும்போது ஒரே ஒரு உயிர் எழுத்து அமைந்து இருந்தது..

   ஒருவேளை அந்த உயிர் என்ற வார்த்தை இந்த உயிர் எழுத்தை குறிக்கலாம் என நினைத்து...அடுத்த வரியை படித்தேன்..ஆயுதம் எடுத்தால்..அப்படி என்றால் ஆயுத எழுத்து ஆச்சர்யம் அதற்கு சற்று கிழே ஒரு ஆயுத எழுத்து இருந்தது..இப்பொது அந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்தால் ஒரு நேர்கோடு கிடைத்தது..

   அடுத்த வரி மெய்கீழ் வழி அந்த ஆயுத எழுத்தில் இருந்து அடுத்து ஒரு மெய் எழுத்தை குறிக்கின்றது பாடல்...அதே போல் அங்கு ஒரே ஒரு மெய் எழுத்து இருந்தது....இப்போது அந்த நேரான கோடு வளைந்து இருந்தது..அப்படி என்றால்..இது குகைக்குள் செல்ல வழிகாட்டும் பாதையாக இருக்க வேண்டும்...

  அடுத்த வரி மெய் ரகசியம் ஒரு வெளியாய்..இந்த வரிக்கு ஏற்றாற்போல் அந்த கட்டத்தின் முடிவில் ஒரு வெற்று இடம் இருந்ததது..அதுவரை கோடு வரைந்தால்.. வருவது..இந்த மாதிரி இருந்தது..


    ஒருவேளை இது குகைக்குள் செல்ல வழி காட்டுவதாக இருக்கலாம்...அடுத்து வரும் வரிகள் அதை உறுதி படுத்தின... பலவழி இருக்கும் இதில் மனவழி சென்றால் உயிர்வளி தன் மெய்யின் வெளி நீங்கும் இதன் படி குகைக்குள் பல வழிகள் இருக்கலாம்..அந்த வழிகளில் மனம் போன போக்கில் சென்றால்.உயிர்போகும் என்பதை முதலிலேயே உணர்த்தி இருக்கிறார்கள்..இந்த வரியை படிக்கும்போது கொஞ்சம் பயம்..

  இருந்தாலும் கல்வெட்டில் வழிகிடைத்தது கொஞ்சம் தைரியம்..உள்ளே நுழைந்தேன்..என் விளக்கின் வெளிச்சத்தில் வழியை மூடி இருந்த சிலந்தி வலைகளை கம்பினால் நீக்கி முன்னே நகர்ந்தேன்..சிறிது தூரம் சென்றவுடன் பாதை மூன்றாக பிரிந்தது.....கல்வெட்டு வரைபடம தெரிவித்தபடி பார்த்தால் நேராக செல்லும் பாதை முடியும் இடத்தில் வலது புறம மட்டுமே வளைவு இருக்க வேண்டும்..

   எனவே இந்த வல,மற்றும் இட செல்லும் பாதைகள் தவறானவை..ஒருவேளை அந்த பாட்டில் சொன்ன உயிர்வாங்கும் வழியாக இருக்கலாம்..எனவே அந்த வழியில் செல்ல முயற்சிக்க வில்லை...

   நேராக சென்றேன்..வௌவால்கள் வெளிச்சம் பட்டவுடன் வேகமாக அங்கும் இங்கும் பறந்தன...கொஞ்சம் பின் திரும்பி பார்த்தேன்..ஒன்றும் தெரியவில்லை..இருட்டு........திரும்பி செல்வது ஒன்றும் பிரச்சினை இல்லை..நான் வந்த வழியை தவிர மற்ற இடத்தில் எல்லாம் சிலந்தி வலை மூடி இருந்தது.... வந்த வழியில் மட்டுமே அந்த வலைகளை  விளக்கி ஒரு பாதை அமைத்து இருந்தேன்...

   அந்த கல்வெட்டு சொன்னபடி ஒரு இடத்தில் பாதை முடிந்து வலப்புறம் திரும்பியது...வழிகளில் சில சிலைகள் இருந்தன..அதன் பக்க சுவர்களில் சிற்பங்கள் செதுக்கி இருந்தார்கள்..எழுதி இருந்தார்கள்...தமிழ்தான்...எல்லா எழுத்துக்களையும் கொஞ்சம் நீட்டி நீட்டி எழுதி இருந்தார்கள்...ஒருவேளை அபோதைய தமிழ் எழுதும் முறையாக இருக்கலாம்...அதை படிக்கவில்லை..காரணம் பயம்..வேகமாக வெளியேறவேண்டும்...

   வலப்புற பாதையில் சென்றால் ஒரு இடத்தில் முடிந்து கீழ்நோக்கி படிக்கட்டுகள் அமைத்த வழியில் சென்றது..அந்த கல்வெட்டில் குறிபிட்டபடி இது சரிதான்...படிக்கட்டுகள் செல்ல செல்ல அளவில் குருகியபடி சென்றன..ஒரு இடத்தில் ஒருவரே செல்லும் அளவுக்கு பாதை இருந்தது..

  அந்த இடத்தை நெருங்கி விட்டோம் என்று நினைக்கும்போது..அங்கு என்ன இருக்கும் தங்கம்?,புதையல்?..இல்லை வேறு ஏதாவது?...இப்படி   என்வென்று யோசித்தாலும் அதில் ஆர்வம இல்லை..யாரும் போகத குகைக்குள் போய் என்னவென்று பார்க்க வேண்டும் என்பதே என் ஆர்வம

  அந்த படிக்கட்டுகள் ஒரு இடத்தில் முடிந்தன..சற்று பெரிய இடம்...காற்றின் அடர்த்தி அதிகமாக இருந்தது..மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம்..சமாளித்தேன்..அந்த ரகசியததை கொஞ்ச நேரத்தில் பார்க்க போகிறோம் என்ற ஆர்வம.

  அந்த சதுரவடிவ இடத்தை சுற்றி பார்த்தேன் ஒன்றும் இல்லை..சில சிலைகள் அங்கும் இங்கும் கிடந்தன...அதோடு பாதைகள் முடிந்து இருந்தன..இதில் எங்கு? என்ன? ரகசியம் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சுற்றி பார்த்தேன்..ஒன்றும் கிட்டவில்லை...

  அதன் நான்கு சுவர்களிலும் தேடினேன் வழிகள் இருக்கின்றதா என்று இல்லை...சுவர்களில் விளக்கு அடிக்கும் போது தற்செயலாக அதில் பெரிய வடிவில் செதுக்க பட்டிருந்த எழுத்துக்கள் கண்ணில் பட்டன.. 


   அதில் கோயிலுக்கு உண்டான நகைகள்,சிலைகள் மற்ற பொருள்களை ரகசியமாக வைத்து, மக்களை பயம்காட்டி இதன் உள்ளே வராதபடி செய்யத்தான் இந்த முறை என்று சொல்லப்பட்டு இருந்தது..அதன் கடைசியில்..ரகசியம் என்று சுட்டிக்காட்டி..



 அறியாதவரைதான் ஒன்று ரகசியம்    அறிந்துவிட்டால்?

   பதில்  என்னவென்று யோசித்தேன் கல்வெட்டில் இருந்த கடைசி கட்டத்தில் அதை சொல்லி இருந்தார்கள்.







(கதையில் சொல்லி இருக்கும் கோயில் எங்கள் ஊரில் சிறுவயதில் நான் மிக  ரசித்த ஒன்று..ஆனால் அதன் இப்போதைய  நிலை.... எல்லாம் சிதைந்துவிட்டது....சிற்பங்களைதவிர ஒன்றும் அழகாக இல்லை...

குகை , கல்வெட்டு மற்றும் எழுத்துக்கள்  எல்லாம் என் கற்பனை...)

எல்லாம் நேரம்....!!!

     மீண்டும் அவளது நினைவு......எப்போதெல்லாம் அவளது நினைவு வருகின்றதோ கொஞ்சம் மனது வலிக்கும்...

     குழந்தை வெளியில் விளையாட போய் இருந்தாள்...மனைவி நான் அமர்ந்து இருந்த இடத்தை நோக்கி வரும்போது அன்றைய நாள்காட்டியில் முந்தைய நாளை கிழித்தாள் இன்றைய தேதியாக 10.12.2028 என்று காட்டியது...அந்த காகிதத்தைக் கையில் வைத்து கொண்டு என்னருகில் வந்தவள்..

"என்ன சோகமாய் இருக்கிற மாதிரி இருக்கு?" என்றாள்

    திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் அடிக்கடி வந்து வலி தரும் அவளின் நினைவுகளை பற்றி மனைவியிடம் இதுவரை சொல்லவில்லை...

      அவளின் கேள்விக்கு இப்போதும் உண்மையான பதிலை சொல்ல மனம் இல்லை...இருந்தாலும் இவ்வளவு காலம் அவளை ஒருவிதத்தில் ஏமாற்றி இருக்கிறேன்..இனிமேலும் அது தொடர வேண்டுமா என்று நினைகும்போது..அந்த விசயத்தை சொல்லலாம் என நினைத்தேன்...

    “இங்கு வா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று அழைக்க அருகில் உட்கார்ந்தாள்

“என்ன சொல்லபோகின்றிர்கள்...”

 “திருமணத்திற்கு முன் நான் ஒரு பெண்ணை காதலித்தேன்”

     இதை நான் சொல்லி முடித்ததும் அவளின் மனநிலை  முற்றிலும் மாறியது...எல்லா பெண்களுக்கு இருக்கும் அதே உணர்வு....

    “அப்படியா அந்த காதல் என்ன ஆச்சு? எதுக்கு என்னை திருமணம் செய்தீர்கள்” என்றாள் இயல்பாய் ...உணர்வை மறைத்து..

   "காதல் தோல்வி ஒன்றும் இல்லை.....எங்கள் காதல் பிரிந்தது எல்லாம் காலத்தின் கொடுமை...காலம் ரெம்ப வலிமையானது..."என்றேன்

“அப்படி எப்படி காலம் உங்களின் காதலை பிரித்தது”என்றாள்

       "நாங்களும் மற்ற காதலர்களை போலத்தான்...காதலை தொடங்கினோம்....தேவையில்லாத சந்திப்புகள்,பேச்சுக்கள்..பல வண்ண வண்ணத்து பூச்சிகளை மனதில் பறக்க விட்டோம்....வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருண்டை எல்லாம் சரியாக உருண்டது....ஒரு நேரத்தில் எங்களின் வீட்டில் காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்காலம் என்று நினைக்கும்போது...

      ”எப்படியும் வீட்டில் ஜாதகம் பார்ப்பார்கள் எனவே முதலில் நாமே ஜாதகம் பார்ப்போம்,சரியாக பொருந்தி இருந்தால் வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்போம்,இல்லை என்றால்...சம்மதம் இல்லாத திருமணம்” என்றாள் அவள்

      அவளின் கருத்தும் சரி என பட்டதால் ஜாதகம் பார்த்தோம் இருவரின் பொருத்தமும் சரியாக இருந்தது ஆனால் ஒரு பிரச்சினை...அவளின் வயது என் வயதை விட ஒரு வருடம் அதிகம்..இதற்கு வீட்டில் எப்படியும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்..இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்...

      சம்மதம் இல்லாத திருமணத்தில் பிரச்சினைகள் அதிகம்..முடிந்தவரை உறவினர் சம்மதத்தோடு திருமணம் செய்வது நலம்..என்ற என் கருத்தை அவளிடம் சொன்னேன்...

“அதற்கு அவள் என்ன சொன்னாள்?” என்றாள் மனைவி ஆர்வமாக


       இதற்கு தீர்வாக, அவள் பணிபுரியும் இடத்தில் இருந்து ஆய்வுக்காக விண்வெளிப்பயணம் செல்ல இருப்பதாகவும் அதில் தானும பங்கு எடுத்துக்கொண்டால் அவளின் வயது என் வயதை விட குறைய வாய்ப்பு இருப்பதாக சொன்னாள்.



“இது எப்படி சாத்தியம்?”என்றாள்  மனைவி


     "இதைத்தான் நானும் அவளிடம் கேட்டேன், சிறப்பு சார்பியல் தத்துவத்தின் (special relativity theory) படி, இரண்டு வெவேறு இரு நிலைகள் இருப்பதாக வைத்துகொள், அதில் ஒன்று நிலையாகவும் மற்றொன்று வேகமாக நகர்வதாக கொண்டால்......இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவர் கடிகாரத்துடன் இருந்து காலத்தை கணக்கிட்டால், நிலையாக இருப்பவரின் கடிகாரம் நகரும் அளவைவிட நகரும் நிலையில் உள்ளவரின் கடிகாரம் மெதுவாக நகரும்...இதை time dilation என்று சொல்வார்கள்" என்றேன்


"இது என்னங்க புதுக்கதையா இருக்கு?"என்றாள்

   "இல்லை இது ரெம்ப பழைய கதைதான் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து உண்மை என்று நிரூபித்து இருக்கிறார்கள்..இதைப்பற்றி அப்புறம் தெளிவாக சொல்கிறேன்." என்றேன்


   "இதை பற்றி எனக்கு தேவை இல்லை அவள் அடுத்து என்ன ஆனாள் என்பதை சொல்லுங்கள் முதலில்" என்றாள்


    "இந்த முறையில் அவள் பயணித்தால் அவளின் காலம் பூமியில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் குறையும்...அதாவது காலம் குறைந்தால் வயதும் குறைந்த மாதிரிதானே...அதான் அந்த பயணம் செய்யபோவதாக சொன்னாள். நானும் சிறு தயக்கத்திற்கு பின்..எப்படியும் எங்களின் காதல் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சரி என்றேன்".

"சரி அவள் அந்த பயணம் போனாளா?" என்றாள்

   "ஆமாம் போனாள்.... ஆனால் திரும்பி இன்றுவரை வரவே இல்லை..என்ன ஆச்சு என்றும் தெரியவில்லை."


"ஏன் ஏதும் விபத்து ஆகிவிட்டதா?"

    "இல்லை அதுபற்றி ஒரு தகவலும் இல்லை...இந்த நேரத்தில் தான் என் வீட்டில் திருமணத்திற்கு கட்டாய படுத்தினார்கள்..நான் திருமணம் வேண்டாம் என்று சொல்ல இந்த காரணத்தை சொன்னால் நம்ப மாட்டார்கள் ....அதான் உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விட்டேன்"

     "இப்போது வருத்தபடுவதற்க்கு காரணம் அவள் திரும்பி வந்துவிடுவாளோ என்ற பயமா? இல்லை உண்மையாக காதலித்து அவளை பிரிந்த சோகமா?" என்றாள் மனைவி

   "எங்களின் காதலுக்காக ஏதோ ஒன்று செய்ய போய் அவள் என்ன ஆனாள் என்று தெரியாத போது நான் மட்டும்  இங்கு குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கிறேன்..இத்தனைக்கும் அவளை உணமையாக காதலித்தும் இருக்கிறேன்....அதான் அவள் நினைவு வரும்போது  கொஞ்சம் மனது வலிக்கின்றது." என்றேன்

   என் மனைவிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கையில் இருந்த அந்த நாள்காட்டி காகிதத்தை கோபமாக கசக்கி கொண்டு இருந்தாள்.

    விளையாட சென்ற என் குழந்தை சந்தோசமாக ஒருவரை வழிகாட்டி அழைத்து வந்து கொண்டு இருந்தாள்...

     "அப்பா இவங்க உங்களை தேடி வந்து இருக்காங்க...இவங்க பேர்கூட என் பெயர்தான்...ரெம்ப அழகா இருக்காங்க...." என்றாள் என் மகள் அவளின் கையை பிடித்தபடியே

      அவளின் முகத்தை பார்த்த அந்த நொடியில் எழுந்து நின்றேன்...நான் சில வருடங்களுக்கு முன்னால் பார்த்து பார்த்து காதலித்த முகம்......என்னோடு ஒப்பிட்டால் கொஞ்சம் மாறியிருந்தாள்...அவளுக்கு எல்லாம் புரிந்து இருந்தது...எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது அந்த குழந்தைக்கு அவள் பெயரை வைத்து இருப்பது.....


    வசாலில் நின்று இருந்தாள்...அடுத்து என்ன செய்வது என்று அறியாமல்...எப்போதும் எனக்கு  அவளின் அழகான கண்களை பார்த்தால்...வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே  உருளும் ஒரு உருண்டை...இப்போது என் அடிவயிற்றில் மட்டும் வேகமாக உருண்டது.








(time dilation படிக்க கொஞ்சம் ஆர்வமான விசயம்...அதே நேரத்தில் கொஞ்சம் குழப்பமான விசயமும் கூட...இது எப்படி என்பது பற்றி  விளக்கமாக ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் தொடரில் சொல்கிறேன்... மேலே சொன்ன கதையில் அதிகம் சொல்லவில்லை...அதை விளக்கினால் கதை நீளும் என்பதால் இது மட்டும் இப்போதைக்கு.))

ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் – 1

   சில அறிவியல் விசயங்களை பகிர்ந்து கொள்ளும்போது ஏற்ப்படும் பிரச்சினைகளில் ஒன்று அதற்கு என்ன தலைப்பு வைப்பது என்பதே...

   வழக்கம் போல ஐன்ஸ்டீன் புராணம், கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் சொந்த சோககதை இவற்றை சேர்த்து எந்த தலைப்பில் எழுத.....குழப்பமான விஷயம்..எனவே இதே தலைப்பில் தொடரலாம் என நினைக்கிறேன்....

   போன இதே பகுதியில் ஒரு சிரிப்பு சொல்லியிருந்தேன்,அதை எத்தனை பேர் புரிந்து சிரித்தார்கள் என்பது அவர்களுக்குத்தான். தெரியும்...அந்த சிரிப்பு...

   ஒருமுறை Bohr தனது வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சென்று காவலரிடம் மாட்டிகொள்கிறார்...அந்த காவலர் Bohr டம் "நீங்கள் எவ்வளவு வேக(ம்)த்தில் வந்தீர்கள்?,எங்கே போகின்றீர்கள்?" என்று கேட்க அதுக்கு Bohr "எவ்வளவு வேகம் என்று தெரியாது ஆனால் எங்கு போகவேண்டும் என்று மட்டும்  தெரியும்" என்று சொன்னாராம்...!!!!!!

   காரணம் ...BOHR முக்கிய பங்கு வகித்த குவாண்டம் தத்துவத்தில் ஒரு அனுத்துகளின் இருப்பிடத்தை(position) அறிந்தால் அதன் திசைவேகத்தை(velocity) துல்லியமாக அளக்க முடியாது... இதுதான் மேலே சொன்ன சிரிப்பு...அந்த காருக்கு பதில் ஒரு அணுத்துகள் வைத்து பார்த்தால்..பொருந்தும்....சரி இனி கொஞ்சம் அறிவியல்...
 


   குவாண்டம் தத்துவத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர் இந்த bhor , ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் ஐன்ஸ்டீன் அவர்கள் இந்த தத்துவத்தை ஏற்றுகொள்ள மறுத்து விட்டார்...அதனால் அந்த தத்துவத்தை  சோதித்து நிருபிக்க ஏதாவது ஒரு சோதனையை செய்ய சொல்லிக்கொண்டே இருப்பார்......

   ஒரு சில விவாதங்களுக்கு பிறகு ஐன்ஸ்டீன் சொன்னதை..செய்து பார்த்து அதில் இருந்து சில விசயங்கள் பெற்று, இப்படியேதான் போய் கொண்டு இருந்தது...ஐன்ஸ்டீன் கடைசிவரை குவாண்டம் தத்துவத்தை ஒரு முழுமையான தத்துவமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை....அவரது கணிப்பு படி இதை கடந்த ஒரு முழுமையான தத்துவம் இருக்கின்றது ...அதன் மூலம் இந்த அனுத்துகளையும்..துல்லியமாக கணக்கிடலாம் என்பதே...

  என்னதான் அவர் ஒளி மின்விளைவின் (photo electric effect) ன் மூலம் குவாண்டம் தத்துவம் உருவாக ஒரு காரணமாக இருந்தாலும்..அடுத்த வந்த bohr  ன் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு அவருக்கு முழு திருப்தி அளிக்கவில்லை...அதற்கு காரணம் அனுத்துகளின் இருப்பிடம்.,நிறை,திசைவேகம் போன்றவற்றில் எதையாவது ஒன்றைத்தான் தெளிவாக சொல்ல முடியும்..மற்றவற்றை இருக்கலாம் என்றே சொல்ல முடியும்.... உறுதியாக சொல்ல முடியாது..

   ஒரு எலெக்ட்ரான் எங்கு என்ன செய்கின்றது என்பதை உறுதியாக சொல்ல முடியாதநிலை...position and momentum, time and energy இவற்றில் எதையாவது ஒன்றைத்தான் மிகச்சரியாக விளக்க முடியும்...சொல்லப்போனால்....அந்த எலேக்ட்ரோன்கள் ஒரு இடத்திற்கு வரும் ஆனா வராது...என்று மட்டுமே சொல்லலாம்...

   இதுதான் ஐன்ஸ்டீனுக்கு பிடிக்கவில்லை...அறிவியல் விதி ஒன்றை விளக்குமானால் அதை சத்தியமாக சொல்ல வேண்டும் சாத்தியமாக இல்லை என்பதே அவரது வாதம..இந்த சத்தியமான நிலை குவாண்டம் தத்துவத்தில் இல்லை... இதற்காக அவர் போடாத சண்டை இல்லை..செய்யாத சோதனைகள் இல்லை..



   இதையெல்லாம் விட அவரின் கோபத்தை அதிகமாக்கியது ஹசைன்பெர்க்ன் uncertainty principle தான்..அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

  ஐன்ஸ்டீனின் தனிமை கலந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்,அவரது சாதனைகள் எல்லாவற்றையும் பார்த்து அவரை உம்மனாமூஞ்சி என்று நினைத்தால் தவறு...அவர் மிக ரசித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன...படகு பயணம் அவருக்கு பிடிக்கும், வாயலின் ரசித்து வாசிப்பார்...அவருக்கு அதிகம் மன அழுத்தம் வந்து விட்டது என்றால்..தனது அறையைவிட்டு வெளியில் வந்து தெருவில் மெதுவாக உலா வருவார்....அது எந்த நேரமாக இருந்தாலும் சரி..


இனி வரும் பகுதிகளிலும் ஐன்ஸ்டீன் தாத்தாவின் அறிவியல் கலந்த புராணம் தொடரும்....இப்போதைக்கு இது மட்டும்...





சில சோதனைகள்....



   பல வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறேன்...படிப்பு முடிந்தது ..இதற்கு மேல் படிக்க வேண்டாம் என்ற முடிவோடுதான் இந்த ஊர் பயணம்.

   வீட்டில் வழக்கம்போல நான் பத்து கிலோ எடை கூடி இருந்தாலும் எளைச்சி போயிட்டியே என்று சொல்லும் சொந்தங்களின் அன்பில் நனைந்து.என் நண்பர்களை பார்க்க ஊருக்குள் சென்றேன்.

  எல்லோரும் ஒரு நல்ல வேலையில் இருந்தார்கள்.கிராமம் என்பதால் மக்களின் பாசத்துக்கு குறைவிருக்காது.எலோருக்கும் நல்லா இருக்கேன் என்று பதில் சொல்லி ஒருவழியாக நல விசாரிப்புகள் முடிந்து இருந்தது.

   அன்று மாலையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாட்டி நான் அமர்ந்து இருந்த திண்ணையில் என்னோடு அமர்ந்தார்கள்.சிறுவயதில் அவரிடம் கதை சொல்ல சொல்லி நச்சரித்து..ஒரு நிலையில்..என் அம்மாவிடம் வந்து புகார் செய்யும் அளவுக்கு போய் இருக்கிறது...நல்ல கதைகள் சொல்வார்..

என்ன படிப்பு எல்லாம் முடிஞ்சுச்சா?

"ஆமாம் பாட்டி" என்றேன்

"அது என்ன படிப்புப்பா..இப்படி நான்குவருசம் வீட்டிற்கு கூட சரியா வராம இருந்து படிக்கிறது?"

"எப்படி உங்களுக்கு புரியவைப்பேன் பாட்டி" என்றேன்

சரி விடு எனக்கு என்ன தெரியும் அதை பற்றி என்றார்கள்


   "இந்த இயற்கையில் இருக்கின்ற சில விசயங்ளில் இருந்து மூலத்தை பெற்று அதை எப்படி செயற்கையாக மாற்றி  பயனுள்ளதாக உபோயோகிப்பது என்பதை பற்றித்தான்..இதை bio mimicry வகையில் சேர்ப்பார்கள்" என்றேன்.

அதான் இயற்கையில் இருக்குல்லே பின்ன எதுக்கு செயற்கையாக உருவாக்கணும்? என்றார்கள்

காரணம் இருக்கு பாட்டி..இப்போ பாருங்க பறவையை பார்த்துதான் மனிதன் விமானம் படைத்தான் அதில் எவ்வளவு நன்மை என்றேன்


அப்ப நீ படிச்சது இதுதானா....இதைத்தான் எங்கள் காலத்தில் பாட்டாக படிசிட்டுங்களே அந்த பாட்டை படிக்கவா இவ்வளவு நாள் கஷ்ட்டபட்டே? என்றார்கள்


ஆமாம் நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான் என்று மட்டும் அப்போதைக்கு சொல்லி வைத்தேன்

காட்டில் விவசாய வேலைகள் எப்படி போகுது பாட்டி? என்றேன்

   எதுவும் சரியில்லை இப்போது எல்லாம் யாரு விவசாயம் பண்ண விரும்புறாங்க..எல்லாம் டவுன் பக்கம் போகனும்னுதான் ஆசை படுறாங்க.அப்படியே அவங்க செய்ய ஆசைபட்டாலும் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டிங்குது.அதிக சம்பளம் கேட்குறாங்க..என்னமோப்பா இனி இருக்கிற கொஞ்ச நாள் எப்படியோ நல்லபடியா பொய்ரிச்சுனா..நான் நிம்மதியாக போவேன் என்று சொன்ன பாட்டியின் குரலில் சோகம் இருந்தது.

விடுங்க பாட்டி எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் என்றேன்

   இது சரியாகாதுப்பா..உங்களை போன்ற படிச்சவங்க ஏதாவது புதுசா செஞ்சாத்தான் உண்டு இல்லேன்னா இதுக்கும் கிழேதான் போகும்...சரி நீதான் ஏதோ படிச்சு இருக்கியே..இந்த பாட்டிக்காக ஏதாவது செய்யகூடதுப்பா.களை எடுக்க ஆள் கிடைக்க மாட்டிங்குது..எப்படித்தான் விவசாயம் பார்க்கவோ தெரியலை என்றார்கள்

நான் இதுக்கு என்ன செய்ய முடியும் பாட்டி? என்றேன்

   நீதான் சொன்னியே இயற்கையில் உள்ளதை அப்படியே செயற்கையாக நனமைக்காக உபோயோகிப்போம்னு..அதே மாதிரி இந்த ஆடு எப்படி புல்லை திங்குதோ அதே மாதிரி அது காட்டில் இருக்கும் களையை மட்டும் தின்கிற மாதிரி எதையாவது கண்டுபிடிச்சா..களைவெட்டும் வேலை மிஞ்சும் என்றார்

இதை நீங்கள் எளிதாக சொல்லிவிட்டிர்கள் ஆனால் செய்வது கஷ்டம. என்றேன்


சரி நான் கிளம்புறேன் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பினார்கள்

  அன்றைய இரவில் பாட்டி சொன்ன விசயம் மனதில் ஓடியது..என்ன படித்து என்ன செய்ய இந்த மாதிரி மனிதர்களுக்கு உதவவில்லை என்றால் சரியா? ..,,ஏன் பாட்டி சொன்னது போல களை மட்டும் தின்னும் ஆட்டை செயற்கையாக.உருவாக்க முடியாதா?

   மறுநாள் என் நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தபோது..அவர்கள் முதலில் கொஞ்சம் சிரித்து விலகினாலும்...நான் கொஞ்சம் வற்புறுத்த இதில் கவனம் செலுத்தினார்கள்...முதலில் எங்களின் விவாதம் இது முறையாக சாத்தியமா என்பதுதான்.

   சாத்தியம் என்று முடிவானது.அதாவது செயற்கையாக இயங்கும் ஆட்டை உருவாக்கி அதன் முகப்பகுதியில் எந்த வகையான களைகளை அகற்றவேண்டுமோ..அதன் வாசனைக்கு ஏற்ப சில நுகரும் சென்சார்களை பொறுத்தி, அதில் இருந்து பெறப்படும் தகவலை ஒரு PLC (PROGRAMMABLE LOGIC CONTROLLER) ல் கொடுத்து அதன் அடிப்படையில் மற்றவற்றை இயக்குவது...

   அதன் வெளிப்புற உடல் அமைப்பை சில சட்டங்கள் மூலம் அமைப்பது முடிவானது, எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆட்டினை அளக்கவேண்டியது இருந்தது..ஆட்டில் முக்கியமாக கால்களுக்கு இடையே உள்ள தூரம்,அதன் உடலின் அமைப்பு போன்றவற்றை அளந்தோம்.

   அடுத்து இந்த PLC யை எப்படி செயல்பட வைப்பது??...நுகரும் சென்சார் அதற்குரிய வாசனையை உணர்ந்தவுடன் அது தனது தகவலை PLC க்கு அனுப்பும், அதற்கு ஏற்றாற்போல அதன் தலை,கால்கள எப்படி நகர வேண்டும் என்பதை அந்த PLC அதன்  RELAY க்களின் உதவியுடன் அதற்குரிய மோட்டார்களை இயக்கும்.

    மொத்தம் ஆறு மோட்டர்கள்.நான்கு அதன் கால்களுக்கு,ஒன்று கழுத்துக்கு, வாயின் அசைவிற்கு ஒன்று.இந்த மோட்டார்கள் எல்லாம் ஒரு பிரதான PLC தரும் கட்டளையின் கீழ் இயங்கும்..இந்த PLC க்கு பிரதான தகவல்களை கொடுப்பது நுகரும் சென்சார்கள்.தேவையான மின்சாரம் அதன் வயிற்றில் பொருத்தபட்டிருக்கும் பாட்ட்ரியில் இருந்து கிடைக்கும்...அதன் வயிற்றின் வெளிப்புறங்களில் சூரிய ஒளியில இருந்து மின்சாரம் எடுக்க உதவும் சிலேடுகள் பொறுத்தி அதில் இருந்து அந்த பாட்ரி இயங்குமாறு இருந்தது.

    வேலை தொடங்கியது.நாங்கள் தாயாரித்த வரைபடங்களை கொண்டு அருகில் இருந்த சில சிறு தொழிற்சாலைகளின் உதவியில் தேவையானவற்றை உருவாக்கினோம்.

    முதலில் சென்சார் எதுவும் பொருத்தாமல்.வெறும் ஆட்டை மட்டும் நடக்கின்றதா என்று சோதித்தோம்..இரண்டு அடி சென்ற குப்புற விழுந்தது..என்னவென்று பார்த்ததில் அதனால் புவிஈர்ப்பு விசையை சரியாக சாமளிக்க முடியவில்லை...காரணம் அதன் கால்கள அதன் உடலில் இருந்து செங்குத்தாக இருந்ததே ...அதை கொஞ்சம் மாற்றி அதன் உடலில் இருந்து  5 டிகிரி கோணத்தில் அமைத்து பார்த்ததில்..அந்த பிரச்சினை சரியானது...இது கிட்டத்தட்ட புதியதாக பிறந்த ஆட்டு குட்டி நடக்கும் முறை..ஆட்டு குட்டிகள் முதலில் நடைபழக கால்களை அகலமாக வைத்து கொள்ளும்..அதையே செய்தோம்.


    ஒருவழியாக நேராக நடந்தது...அடுத்து அதை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும்..நுகரும் சென்சார்களை அதன் மூக்கு இருக்கும் இடத்தில் பொறுத்தி அதன் இணைப்புகளை அதன் வயிற்று பகுதியில் இருக்கும் PLC யோடு இணைத்து அதில் இருந்து பெறும் தகவல்களை RELAY வுக்கு கொடுத்து அதன் கட்டளையில்  மோட்டர்கள் இயங்குமாறு செய்தோம்.

   ஒரு சில தாவரங்களின் வாசனையை நுகரும் விதத்தில் அந்த சென்சார் இருந்தது,குறிப்பிட்ட வாசனை வந்தவுடன் அந்த தகவல் PLC க்கு போகும் அது உடனே கட்டளை இட்டு அதன் கால்களை இயங்க செய்து அந்த செடிக்கு அருகில் செல்ல செய்யும், அருகில் சென்றவுடன் அடுத்த கட்டளையின் பெயரில் அதன் வாய் திறந்து அந்த களை செடியை பிடுங்கி வயிற்றுக்குள் செலுத்தும்...வயிற்றுக்குள் அந்த களைகளை சேமித்து வைப்பதற்கு பதில் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேளியேற்றுமாறு அமைத்தோம்..

   ஒருவழியாக சோதனை செய்ய ....சில செடிகளை தரையில் அங்கும் இங்கும் பரப்பி..ஆட்டை நடக்க செய்தோம்..கொஞ்ச தூரம் நடந்து நுகர்ந்ததும் சரியாக அதனை உள்ளே இழுத்தது.........அப்படியே தொடர்ந்து நாங்கள் போட்ட எல்லா செடிகளையும் தீர்த்தது.

   இதில் ஒரு பிரச்சினை..பெரிய நிலத்தில்  இதை கட்டுபடுத்துவது என்பதுதான்.இதற்காக அந்த சென்சாரின் நுகரும் தூரம், அதன் ஒரு எட்டுக்கு நகரும் தூரம்  மற்றும் நிலத்தின் மொத்த நீள,அகலம இவற்றை இணைக்க வேண்டியது இருந்தது..

  அதாவது நிலத்தின் நீள,அகல அளவுகளை கொடுத்தால், அதைவைத்து தானாகவே சென்சாரின் நீளவாக்க,பக்கவாக்க நுகரும் தூரம், அது ஒரு எட்டில் நடந்து கடக்கும் தூரம் இவற்றை கணக்கிட்டு எவ்வளவுதூரம் பயணிக்க வேண்டும்..எங்கு திரும்ப வேண்டும்..எங்கு முடிக்க வேண்டும் என்பதை  தீர்மானிக்கும்....அதாவது அதன் காலடிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி அந்த நிலத்தில் எத்தனை சால் செல்ல வேண்டும் அவ்வளவே...இதையும் சோதித்து பார்த்தோம்..சரியாக திரும்பியது..நின்றது..

  ஒருவழியாக அந்த பாட்டியின் நிலத்தில் சோதித்தோம்...சரியாக இருந்தது....அப்ப இது எல்லா களைகளையும் எடுக்கதா? என்று பாட்டி குறைபட்டு கொண்டார்கள்...இல்லை பாட்டி அதுக்கு நிறைய சென்சார்கள் பொறுத்தவேண்டியது இருக்கும் என்று சொல்லி சமாளித்தேன்..


   ஊருக்குள் எங்களின் ஆடு பிரபலம் ஆனது...முதல் சோதனையின் முடிவில் அதன் கால் இணைப்புகளில் சத்தம்வர ஆரம்பித்ததால்..அதற்கு எண்ணை அல்லது கிரீஸ் தடவப்பட்டது..

மறுநாள் சிலரின் ஆசைக்கு இணங்க பகல் முழுவதும் களை எடுப்பில் இருந்தது..

   மாலையில் ஒருவரின் நிலத்தில் களை எடுத்து கொண்டு இருக்க.என் நண்பர்களுடன் சேர்ந்து அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றி பேசிக்கொண்டே கொஞ்ச தூரம் நடந்தோம்.இப்போது அந்த ஆடு மட்டுமே தனியாக தனது வேலையை செய்து கொண்டு இருந்தது.

  சில மாற்றங்கள் செய்யலாம் என முடிவெடுத்து,அந்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சி...அது களையை மட்டும் திண்ணாமல் அங்கு இருந்த பயிர்களையும் தின்று கொண்டு இருந்தது....நண்பன் ஒருவன் ஓடி போய் அதை அணைத்தான்...

மறுநாள் காலையில் எங்கள் வீட்டின் முன் கூட்டம் கூடி இருந்தது..

   உங்கள் மகன் படித்ததை சோதித்து பார்க்க எங்களின் நிலம்தான் கிடைச்சுதா? என்ற வார்த்தைகளோடு அந்த நிலத்துக்காரர் சண்டைக்கு வந்து இருந்தார்.

   நானா உங்கள் நிலத்தில் இந்த ஆட்டை வைத்து களை எடுங்கள் என்று சொன்னேன்..நீங்கள் தான் வேண்டும் என்று என்னிடம் சொன்னிர்கள் இப்பொது ஒரு சிறு தவறு நிகழ்ந்து விட்டது அவ்வளவுதான்என்றேன்

   எது சிறு தவறு..நிலத்தில் உள்ள பாதி பயிர்களை வெட்டி போட்டு இருக்கு இது எப்படி சிறு தவறு என்று அவர் சண்டையை தொடர்ந்தார்...

   அந்த சென்சார்கள் தாவரங்களின் உணவு தயாரித்தலின் போது வெளிப்படும் oxygen யை ஆதாரமாக கொண்டு நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்திருக்கிறது...தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியில மட்டுமே carbon dioxide மற்றும் நீரை வைத்து உணவு தயாரித்து மீதம் இருக்கும் oxygen யை வெளியேற்றும்...ஆனால் இரவில் அது உணவு தயாரிக்க முடியாது என்பதால் அதற்கு தேவையான oxygen யை வெளி காற்றில் இருந்து எடுக்கும்..இந்த நேரத்தில் அதில் இருந்து oxygen வெளியில் வராது... இதனால் அந்த சென்சார்களில் கொஞ்சம் பிரச்சினை ஏற்ப்பட.. தொடர்ந்து தகவலை அனுப்பி எல்லாம் வெட்டுபட்டது.....


   அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் இதுதான் என் ஆடு செய்த தவறுக்கு காரணம் என்று.. அந்த ஆள் இன்னும் சண்டையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார் அந்த ஆடு அமைதியாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.. என்ன நடக்கின்றது என்று தெரியாமல்...


  

"செல்"லும் சொல்லும் - கதைகள்

     ஒரு தொடர்கதை..எழுதி இருக்கிறேன்...கொஞ்சம் genetic, cryptology,bio mimicry போன்றவை கலந்த ஒன்று..

   இதில் genetic முறையில் உருவாக்கப்பட்ட ஒருவித நாய் வருகின்றது...கொஞ்சம் ஜீனோவை நினைவுபடுத்தினாலும் இது genetic நாய்..கொஞ்சம் வேறுபட்டது...

    ஒருவகையில் சுஜாதா,மற்றும் ஜீனோ மீது கொண்ட ஒருவித ஆர்வத்தில் இதை எழுதி இருக்கிறேன்...

   சுஜாதா என்ற மாபெரும் மனிதர் எழுதுவதை போல தமிழில்  இந்த உலகத்தில் யாரும் எழுதிவிட முடியாது.....அவரது அறிவியல்,எழுத்துநடை..போன்றவைகளை அவர் உபோயிக்கும் விதம  எல்லாம் அவருக்கே சாத்தியம்...

  இந்த கதையை படித்து விட்டு சுஜாதாவின் கதையை எப்படி தொடரலாம் போன்ற சில கேள்விகள் கேட்காமல் இருந்தால் சந்தோசம்...
  
   இந்த கதையை அவரைபோன்று எழுதவில்லை...அப்படி நான் நினைப்பது சூரியனுக்கு தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் அடிக்கின்றதா? என்று தொட்டு பார்ப்பதற்கு சமம...

எனக்கு தெரிந்த கொஞ்சம் அறிவியல்,எனக்கு ஆர்வம உள்ளcryptography போன்றவற்றை வைத்து எழுதி இருக்கிறேன்...

கதையை முழுவதும் கொடுத்து,அதை  பகுதிகளாக  பிரித்து இருக்கிறேன்..

காரணம்..கொஞ்சம் நீளமான கதை..தொடர்நது படிக்க சிரமம்..எனவேதான் சிறு பகுதிகள்...அதோடு..சிலருக்கு முக்கியமான் வேலைகள்,.....அல்லது சித்தி,பெரியம்மா,சுந்தரி போன்ற அவசியமான தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டியது இருகலாம்...அப்படி நினைப்பவர்கள்..பார்த்துவிட்டு  மீண்டும் வந்து அவர்கள் விட்ட இடத்தில தொடர வசதியாக இருக்கும்....

அதோடு இதில் சொல்லி இருக்கும் அறிவியல் விசயங்கள் சில உண்மையானவை...அது உங்களுக்கு படிக்கும்போது புரியும்...


இணைப்புகள் கிழே...


      "செல்"லும் சொல்லும் 1

       "செல்"லும்  சொல்லும் 2


       "செல்"லும் சொல்லும்  3


       "செல்"லும் சொல்லும்  4
       

"செல்"லும் ..சொல்லும் 4

திரும்பும்போது "இந்த முயற்சி யாரை கொல்ல?" என்றாள்

"வேறு யாரை உன்னைத்தான்.".என்றான் கணேஷ்


அவள் எதுவும் பேசவில்லை

"அதான் பிழைத்து விட்டாயே என்ன கவலை" என்றது நிஷி.


"இதை வீட்டில் யாரிடமும் சொல்லாதே" என்றான்


"சரி" என்று இறங்கி கொண்டாள்

திரும்பி வீடு வரும் போது அவனுக்கு அழைப்பு....அந்த வாகனம் பிடிக்கப்பட்டு இருப்பதாக்...

வேகமாக அந்த காவல் நிலையத்திற்கு சென்றான்.அதே வாகனம் வெளியில் நின்று இருந்தது....சிறைக்குள்  இரண்டு பேர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

"ஏதாவது தகவல் சொன்னார்களா?" என்றான்

"இல்லை சொல்ல மறுக்கிறார்கள் எப்படியும் காலைக்குள் சொல்லவைத்து விடுவோம்" என்றார் அங்கு இருந்த அதிகாரி

"விவரம் சொன்னவுடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்

"என்ன குற்றத்தை ஒப்புகொண்டார்களா?" என்றது நிஷி

"இல்லை" என்றான்

"அவர்கள் புனிதாவை குறிவைத்தர்கள்..நாம் மாட்டிகொண்டோம்" என்றது நிஷி

"எல்லாம் நாளை காலையில் தெரியும்" என்றான்

அதற்குள் அந்த வாகனம் பற்றிய விவரம்.அந்த ஆட்களின் விவரம் பற்றி அறிந்த காவல்துறை அவர்கள் மூவரும் சந்திக்கும் இடத்தை கண்டுபிடித்து,அங்கு இருந்த அந்த செல்கள் அடங்கிய பெட்டியையும் கைப்பற்றியது.

மறுநாள் ஊடகங்களில் பிரபலமாக அந்த மூவரின் புகைப்படம் இருந்தது..கொலைக்கு காரணமாக.....அந்த அழியா செல்களின் மூலமாக உயிர் அழியாத ஒன்றை உருவாக்கினால் கடவுளின் கோட்பாட்டுக்கு பங்கம் வரும் என்பதால் ஒரு சிறு இயக்கத்தை சேர்ந்த அவர்கள்  அந்த செல்களை கடத்தியதாகவும்,அப்போது பிரச்சினை ஏற்பட்டதால் அந்த விஞ்ஞானியை கொல்ல நேர்ந்ததாகவும் அந்த மூவரும் ஒப்புகொண்டு  இருந்தனர்.

மறுநாள் அந்த பெட்டியை பாதுகாப்பாக திறக்கும் பொருட்டு அய்வுகூடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

முதல வாய்ப்பு புனிதாவுக்கு கொடுக்கப்பட்டது...அவள் இந்த கொலை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்ததில் இருந்து கொஞ்சம் நிம்மதியாக ..இனிமேல் இந்த வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தாள்..இதனால் அதன் முன் நின்று பார்த்துவிட்டு "எனக்கு எப்படி என்று தெரியாது..அந்த சந்தேக எழுத்துக்கள் கொஞ்சம் சிக்கலானவை" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்

ஒருமுறை அந்த எழுத்துக்கள் பொதிந்து இருக்கும் செல்களை பற்றி அறிய முனைந்தது நிஷி..

"எல்லாம் கொஞ்சம் புரிகின்ற மாதிரி இருந்தாலும் அந்த எழுத்துக்கள் பொதிந்த செல்கள் எங்கே என்பதுதான் இப்போது குழப்பம்" என்றது நிஷி

"ஒருவேளை இறுதியில் ஒட்டகசிவிங்கி படம் போட்டு இருப்பதால் அதன் செல்லை படித்தால் விடை கிடைக்குமா?" என்றான் கணேஷ்

"வாய்ப்பு இல்லை அதன் செல்களை படிப்பது தேவை இல்லாத விசயம் அதே நேரத்தில் இந்த படம் ஒன்றை உணர்த்துவதற்காக கொடுக்கப்பட்டு இருக்கின்றது..அதை கண்டுபிடிக்க வேண்டும்" என்றது நிஷி

நிஷி மெதுவாக அங்கு இருந்த மேசையில் உலாவியது...

"நிஷி ஏதாவது செய்" என்றான் கணேஷ்

அதை காதில வாங்காமல் அது உலாவியது...

வேகமாக ஓடி வந்து "நான் உடனே அந்த சடலத்தை பார்க்கவேண்டும்" என்றது நிஷி

"முதலில் என்னை அங்கு அழைத்து போ நான் அப்புறம் சொல்கிறேன்" என்றது

"புனி  சில செல்களை பிரித்து எடுக்க தேவையான  உபகரணங்களை எடுத்துகொண்டு நீயும் எங்களோடு வா" என்று நிஷி சொல்ல கிளம்பினார்கள்

"எதுக்கு நிஷி இப்போ அந்த சடலம்" என்றான் கணேஷ்

"அதில்தான் அந்த சங்கேத மொழி இருக்கும் செல்கள் இருக்கின்றன"

"எப்படி உறுதியாக சொல்கின்றாய்?"


"அந்த ஒட்டக சிவிங்கியின் படம் அதைத்தான் உணர்த்துகின்றது"

"எப்படி?" என்றான்

"bio mimicry என்ற ஒரு சமாச்சாரம் இருக்கிறது..அதாவது இயற்கையில் உள்ளவற்றை பார்த்து மனிதன் தனது அறிவால் தனது தேவை,முன்னேற்றத்துக்காக அதைபோல செயற்கையாக உருவக்கிகொள்வது..இந்த முறையில் மனிதன் சிலவற்றை உருவாக்கி மிகுந்த பயனும் பெற்று இருக்கிறான்" என்றது நிஷி

"நீ சொல்ல வருவது பறவையை கண்டான் விமானம் படைத்தான் என்ற பாடலின் அர்த்தத்தையா?" என்றான்

"ஆமாம் அதே விசயம்தான் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் எல்லாமே ஏற்கனவே  உங்கள் முன்னோர்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது..." என்றது நிஷி

"சரி இவர் என்ன அந்த முறையில் செய்து இருக்கிறார் இந்த செல்களின் விசயத்தில்?" என்றான்

"அதை போல ஒரு எளிய முறையை முயன்று இருக்கிறார்..ஒட்டகச்சிவிங்கி என்றதும் நினைவுக்கு வருவது அதன் கழுத்துதான்..அவர் அந்த எழுத்துக்களை அமைத்த செல்களை அவரது கழுத்தில் எங்காவது பொதித்து வைத்துஇருப்பதைத்தான் குறிப்பால் உணர்த்தி இருக்கின்றார்" என்றது நிஷி


"சரி அப்படியே அந்த செல்கள் கிடைத்தாலும் அதில் பெட்டியை திறக்க உதவும் எழுத்துக்கள் எப்படி கண்டுபிடிப்பது?" என்றான்

"அது புனிதாவுக்கு தெரியும்" என்றது நிஷி

"புனிதா நீ இவ்வளவு அறிவாளி என்று நான் நினைக்கவில்லை" என்றான்

"இதில் அறிவாளி என்பதுக்கு இடமில்லை இதே விசயத்தை ஒருவர் ஏற்க்கனவே செய்து இருக்கிறார்...venter என்பவர் தான் உருவாக்கிய செயற்கை genome ல் சில வார்த்தைகளை இந்த முறையில் எழுதி இருக்கிறார்..அதாவது செல்லில் இருக்கும் DNA உள்ள ATCG என்ற ந்யூக்ளியோடைடுகள் இணைந்தால் ஒருவித அமினோ அமிலங்களை உருவாக்கும்.அந்த அமினோ அமிலங்களின் பெயரில்தான் அவர் சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லி இருப்பார்...நமது வார்த்தைகளை சொல்ல தேவையான அமினோ அமிலங்களுக்கு ஏற்ப அந்த ந்யூக்ளியோடைடுகளை செயற்கையாக தேவையான படி மாற்றியமைக்க வேண்டும்..அவ்வளவுதான்  எனவே இதே முறையை பயன்படுத்தி இந்த எழுத்துக்களை கண்டு பிடிப்பது கஷ்டமில்லை" என்றாள்

அந்த சடலத்தின் கழுத்தை பார்த்தார்கள்  முன்புறத்தில் ஒரு இடத்தில மட்டும் கொஞ்சம் நிறம் மாறியிருந்தது

"நல்லவேளை பிரேத பரிசோதனையின் போது "Y" வெட்டு கொஞ்சம் நீளமாக வெட்டி இருந்தால் இதுவும் கூட சேர்ந்து போய் இருக்கும்...புனி அந்த இடத்தில உள்ள செலகளோடு சேர்த்து அவரது உடம்பின் சில செல்களையும் எடுத்துகொள் குழப்பம் வந்தால் இரண்டையும் பிரித்து அறிந்து கொள்ளலாம்" என்றது நிஷி

முதலில் அவருடைய செல்களை சோதனை செய்து குறிப்பு எடுத்தாள்...பின்னர் அந்த நிறம் மாறிய இடத்தில இருந்து எடுத்த செல்களை சோதித்தாள்...அதில் இருந்து அந்த செல்களின் உல் அமைப்பு செயற்கையான முறையில் வடிவமைக்கப்பட்டு அதான் வளர்ர்ச்சி தடை செய்யப்பட்டு இருந்தது...அதாவது இந்த எழுத்துக்களை குறிப்பிட மட்டுமே அந்த செல்கள்........அதில் உள்ள DNA வின் இணைப்பை ஆராயும்போது அவளுக்கு புரிந்தது..அதை இணைத்து இருக்கும் ATCG என்ற எழுத்துக்கள் எல்லாமே ஒரே கோர்வையாக இருந்ததன...

TCTTCC TCGCCT CCCTCG CCGCCA TCGTCC TCTTCC   TCGCCT 
புனிதா இந்த எழுத்துக்களை நிஷியிடம் கொடுத்தாள்

நிஷி அதை ஒருமுறை பார்த்துவிட்டு....இந்த மாதிரி இணைந்து இருந்தால் அதில் இருந்து வெளிப்படும் அமினோ அமிலங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்தது..அதை புனிதா எழுதினால்

Arginine,Glycine,Serine,Arginine,Arginine Serine Arginine Glycine Glycine   Serine   Glycine   Glycine  Serine  Arginine...

இதை எழுதிய புனிதா கொஞ்சம் குழம்பினால்..அவள் எதிர்பார்த்தது.. ஒரு வார்த்தை..ஆனால் இதில் இருப்பது அதிகமான அமினோ அமிலங்களின் பெயர் இதில் இருந்து எப்படி பெயரை கண்டு பிடிப்பது ???

"எப்படி நிஷி இதில் இருந்து கண்டுபிடிக்க?" என்றாள்

"இதில் ஒரே மாதிரி பெயர் கொண்ட அமிலங்களை சரியாக பிரித்து எழுது" என்றது

எழுதினாள்......

Arginine    Glycine    Serine   
Arginine    Glycine    Serine
Arginine    Glycine    Serine
Arginine    Glycine    Serine
Arginine    Glycine      ?



நிஷி ஒரு முறை அந்த வரிசைபடுத்திய வார்த்தைகளை பார்த்தது..

அந்த சந்தேக எழுத்து "Serine" என்றது,

"எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கின்றாய்,அதில் ஒன்று விடுபட்டு இருப்பதினால் அந்த முடிவுக்கு வந்தியா?" என்ன என்றாள்

"இல்லை நான் சில நாட்களுக்கு முன்னர் மனிதன் எந்த மாதிரியெல்லாம் சங்கேத வார்த்தைகளை அமைப்பான் என்ற சம்பந்தமான புத்தகம் படித்தேன்..அதன்படி இதுதான் சரி நீ முயற்சி செய்து பார்" என்றது நிஷி

அருகில் இருந்த கணேஷ் "வேகமாக அதை திறந்து இந்த விசயத்தை இப்பவே முடித்துவிட்டு போகலாம்" என்றான்

"எங்கே போக?" என்றாள்

"உன் வீட்டுக்கு"

"எதுக்கு?"என்றாள்

"உன் பெற்றோரிடம் என் கல்யாண விசயமாக பேசவேண்டும்."

புனிதா கொஞ்சம் ஆச்சர்யமாகி பின் சிரித்தாள்

"உங்களின் காதலுக்கு இதுவா நேரம் வேகமாக திறந்து அந்த செல்கள் வளர்ச்சி அடைந்து இருக்கின்றதா என்று பாருங்கள்..அதுதான் எனக்கு முக்கியம் என்னை போலவே ஒரு உயிர் பற்றி எனக்கு ஆர்வம அதிகம்" என்றது

"இதுதான் புனிதா நீ செய்யும் கடைசி  வேலை இந்த ஆய்வுகூடத்தில் அதற்கு பிறகு நீ இங்கு வேலை செய்து மீண்டும் இந்த மாதிரி பிரச்சினையில் மாட்ட வேண்டாம்" என்றான்

"சரி சரி நீ அவளை வீட்டில் பூட்டி வைத்துகொள் இப்போது அதை திறக்க சொல்" என்றது நிஷி

அந்த எழுத்துக்களை அங்கு இருந்த திரையில் அழுத்தினாள்.

சிறு சத்தத்துடன் அந்த பெட்டி திறந்தது,உள்ளே ஒரு சிறிய கண்ணாடி கிண்ணம்  ஒன்றில் ஒரு திரவம் போன்று இருந்தது..

"அதை உடனடியாக சோதித்து பார் ஏதும் செல்களில் வளர்ச்சி இருக்கின்றதா?" என்றது நிஷி ஆர்வமாக

அதை எடுத்து கொண்டு போய் நுண்நோக்கியில் பார்த்தாள்

"என்ன வளர்ந்து இருக்கா?"என்றது நிஷி

"இல்லை"!!!