சில விசயங்கள் - 9


  நெருங்கியே விட்டார்கள். முழுமையான humanoid robot  ஐ விண்வெளியில் சோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டம் இது. கிட்டதட்ட 15 வருட கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

   இந்த வருட தொடக்கத்தில் விண்ணுக்கு அனுப்பட்ட Robonaut 2  ரோபோட்க்கு உயிர் கொடுத்து சோதித்து இருக்கிறார்கள். இது தகவல்களை சரியாக பகிர்ந்ததோடு இல்லாமல் அதில் கண்களாக பொருத்தப்பட்ட camera வில் எடுக்கப்பட்ட படங்ககள் சரியாக வந்து சேர்வதாக சொல்கிறார்கள். எல்லாம் நினைத்தது போலவே திட்டமிட்டபடி அதான் செயல்பாடு இருப்பது சந்தோசம் அளிப்பதாக அதனை சேர்ந்தவர்கள் சொல்லும்போது அதை உருவாக்குவதில் இருந்த கஷ்டம் புரிகிறது.


  இந்த Robonaut 2  ரோபோட் நாசா மற்றும் General Motors உதவியுடன் இதை செய்து முடித்து இருக்கிறார்கள்.இதே போன்று Robonaut 1 ம் இருப்பது குறிப்பிட தக்கது.ஆனால் robonaut 2 க்கு கால்கள் இல்லாமல் சக்கரங்ககள் பொருத்தியிருகிறார்கள். இந்த வகை ரோபோட்களில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதை ஈர்ப்புவிசைக்கு ஏற்றபடி சாமளித்து தனது வேலைகளை செய்ய வைப்பது. ஆனால் நான்கு சக்கரங்கள் என்றால் அது எளிது. கால்களும் விரைவில் பொருத்துவார்கள்.

   இதில் இந்த அளவு வெற்றியை அடைந்ததை தொடர்ந்து இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டு வர திட்டம் வைத்து இருக்கிறார்கள்.நான் கற்பனை செய்ததுபோல மனிதர்களையே அனுப்பாமல் வெறுமனே ரோபோட் ஐ கொண்டே விண்வெளியில் எல்லா வேலைகளையும் முடிக்குமாறு வசதிகள்  சீக்கிரம் வந்துவிடுமென நினைக்கிறேன்.

    அதாவது எல்லாம் செய்வது என்றால் இரண்டு வாசல்கள் உள்ள வீட்டின் ஒரு வாசலில் இருந்து அம்மா மறு வாசலில் இருக்கும் சிறு மகளிடம் ஒரு பொருளை எடுத்துவர சொன்னால் எப்படி இருக்கும் என்பதின் ஒரு கற்பனை இதே போலத்தான் நான் சொல்லும் எல்லாம் வல்ல ரோபோட்டும்

“இடது பக்கம் திரும்பேன்

“ம்ம் திரும்பிட்டேன்மா

“அங்க என்ன இருக்கு?

“மஞ்சள் ,நீல கலர்ல செருப்பு...அப்புறம் ஒரு  சருவத்தால் அப்புறம் எண்ணெய் பாட்டிலு

“ம்ம்சரி அந்த எண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா

“அம்மா இதானு பாருங்க

“ம்ம் அதான் கொண்டு வா கொட்டிராதே

   இதில் அந்த குழந்தை விண்வெளியில் இருக்கும் ரோபோட் என்று வையுங்கள் நாம் இங்கு இருந்து கட்டளைகள் மூலம தகவல்களை பெற்று அதை வைத்தே அதனை இயக்கி காரியங்ககளை செய்ய வைப்பது. அனேகமாக இதுக்கும் அதிக நாள்கள் இல்லையென நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

                                 *****

   கோள்கள எல்லாம் ஏன் சூரியனை ஒரே மாதிரியாக அதுவும் சூரியன் சுழலும் திசையில் சுற்றுகிறது என்பதுக்கு ஒரு புது விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக எல்லா நடச்சதிரங்களை சுற்றும் கோள்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை போல சுற்றுவதில்லை. சில தனது நடச்சதிர சுழலும் திசைக்கு எதிராகவும் சுற்றும்.

   இதற்கு காரணமாக சொல்வது பொதுவாக ஒரு நடச்சதிரம் உருவாவதின் தொடக்கம் தூசுகள் அடைந்த மேக கூட்டதில் (gas,dust cloud) இருந்தே ஆரம்பிக்கிறது. அவை கொஞ்சம் நெருங்கி உரசி atom fusion ஏற்ப்பட்டு கொஞ்சம் எரிய ஆரம்பித்து இப்படியே தொடர்ந்து ஒரு நடச்சதிரமாக மாறும். இந்த நிலையில் அந்த மேக கூட்டம் ஈர்ப்பு விசையில் ஒரு பக்கமாக சுற்ற ஆரம்பித்து அதோடு இருக்கும் பெரிய அளவிலான பொருள்களையும் தனது திசையில் இழுத்து சென்று நாளடைவில் அந்த தூசு மேகங்கள் முழுவதும் எறிந்தோ அல்லது காணமல் போய் அதில் சிக்கி இருந்த பெரிய அளவிலான கோள்கள் மட்டும் இன்னும் அதே திசையில் சுற்றுவதாக சொல்கிறார்கள்.

   எப்படியோ நமது பூமி சரியான தூரத்தில் சிக்கி கொண்டதால் இதை நான் எழுதி கொண்டு இருக்கிறேன். இது எப்படி சரியாக நடந்தது என்ற கேள்விக்கு எல்லாம் தற்செயல்தான் என்ற பதில்தான் இருக்கும். எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என்ற கேள்விக்கு இருக்கும் இப்போதைய பதிலை போல.

                         **********

     எல்லாம் சரியாய்,நேர்த்தியாய் அழகாய் எந்த வித குறையும் இல்லாமல் இருப்பது போல தோன்றுவது விடுமுறைகளில் வீட்டுக்கு போகும்போது பேருந்தில் ஊரை நெருங்கையில் கடைசியாக இருக்கும் சில மணி நேரங்கள்தான். சந்தோசத்தை விட வேறுவித உணர்வே இதுக்கு காரணம். நானும் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.

    பயணத்தில் சாலையில் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டாயம் நமது சிறு வயது நிகழ்வுகளையோ அல்லது ஏதோ ஒரு இனிமையான ஒன்றையே நினைவூட்டும். கண்டிப்பாக யாருடனும் பேசும் எண்ணம் அப்போது இருக்காது.

   அதே நேரத்தில் சுற்றியுள்ள பகுதிகளை நிகழ்ந்துள்ள மாற்றங்களை பார்த்து முதலில் இப்படி இருந்தது, அது இப்படி கிடந்தது இப்ப எப்படி ஆகியிரிச்சு, அதோடு இல்லாமல் ஆட்களின் பழக்க வழக்கங்களில் உள்ள சிறு மற்றங்களையும் நான் அதிகமாக உற்று பார்ப்பதுண்டு. எல்லாமே ஒரு வித புது உணர்வுதான் என்னதான் அதே இடம் அதே ஊர் என்றாலும் ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த மாதிரியான புதியமாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது.

                      **********

     விரிகோணம் என்ற கதை தொடங்கிய வேகத்திலியே நின்று விட்டது. காரணமாக நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கதையின் முடிவு அதில் என்னென்ன சேர்த்து எழுத வேண்டும் போன்ற குறிப்புகள் எழுதி வைத்து இருந்தாலும் அதை விரிவாக்கி எழுதும் எண்ணம் இல்லாமல்  இருக்கிறது.

   சொந்த ஊருக்கு போகும் சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை எழுத முழு மனது இல்லை. ஆர்வம் இல்லாமல் எழுதி இதை படியுங்கள் என்று கொடுக்க விரும்பவில்லை. திரும்பிவந்து நீளமாக எழுதி பல பதிவுகளாக ஒரே நேரத்தில் போடும் எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பெரிய தொடர்கதையை ஒரே நேரத்தில்  படிக்கும் வகையில்.

   கண்டிப்பாக அதுவரை இதற்கு முன்னாடி எழுதின பகுதிகளில் உள்ள கதை மறந்துவிடும். முன்கதை சுருக்கம் வேறு எழுதவேண்டும் என் நினைக்கிறேன். வந்து தொடர்ந்து எழுதுகிறேன்.

  

சில விசயங்கள் - 8


   இதுவரை நமது மனித மண்டையை குழப்பியது மட்டுமில்லாமல் செயற்கையாக ரோபோட்கள் வைத்தும் பிரபஞ்சத்தில் சோதனைகள் செய்ய தயாரகி விட்டார்கள்.

   காரணம் நான் விரிகோணம் கதையில் சொன்னதுதான். மனிதனால் விண்ணில் இருக்கும் எதிர்பாராத அபாயங்ககளை எதிர்கொண்டு நீண்ட நாள் உயிரோடு பயணிப்பது கஷ்டம். அந்த அபாயம் எந்த வடிவம் என்று தெரியாது எனபது வேறு விசயம். இந்த இடத்தில மனித உயிர்களை இழப்பதுக்கு பதில் ரோபோட்களை கட்டுபாட்டுகளுடன் செயல்படுத்துவதுதான் இவர்களின் எண்ணம்.

   சொல்லபோனால் எல்லாவிதமான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தும் சாத்திய கூறுக்கள் இருக்கவே செய்கிறது. சில தகவல்களை வைத்து செயல்படும் விதத்தில் ரோபோட்டை விண்ணுக்கு அனுப்பி அங்கு சென்ற பிறகு அங்குள்ள சூழ்நிலையை தெரிந்து கொண்டு அதுக்கு ஏற்ப நாம் இங்கு இருந்தே புதிய ப்ரோக்ரம் வடிவமைத்து  அதன்மூலம் அவற்றின் பணியை செய்ய வைக்கலாம் என நினக்கிறேன்.அவ்வளவு சுலபமும இல்லை.பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று


    இது சம்பந்தமாக நிறையா யோசிக்கிறார்கள். வேற்று கிரக மனிதர்களை கண்டறியும் நீண்ட பயணத்திற்கு கூட இதை பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. எத்தனை தலைமுறை ஆனாலும் பதில் கிடைக்கும் அனுப்பிய ரோபோட்டிடம் இருந்து. இது மட்டும் சீக்கிரம் நடந்தேறினால் நமது சொந்தக்காரர்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

                        *************

   என்னதான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுகிறேன் என்று சொன்னாலும் எழுதிய விசயங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அறியும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே எழுதியதை பற்றி சிலர் சேர்ந்து விவாதிப்பது ரெம்ப பிடிக்கும்.

   காரணம் அறிவியல் விசயம் அதுவும் இல்லாமல் நான் எழுதிய விசயங்களில் எல்லாம் முழுதும் தேர்ச்சி பெற்றவனும் இல்லை. புத்தகங்களில் கொஞ்சம் படித்து அதை சரியாக புரியும் வரை இணையத்தில் தேடி கற்றுகொள்வது வழக்கம்.  இந்த நிலையில் அதே விசயத்தை சிலர் சேந்து விவாதிக்கும்போது அது சம்பந்தமான அறிவு இன்னும் கொஞ்சம் விரிகிறது அவ்வளவுதான்.

    ஒரு  விசயத்தை பலபேர் விவாதிக்கும்போது தெரிந்ததுக்கு மேல் அது சம்பந்தமான புதிய புரிதல்கள் கிடைக்கவே செய்கின்றன.எப்படி brain storming என்ற பெயரில் யோசிப்பதாக நினைத்து  ஒரு அறையில் சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து   யோசிக்காமல் இருப்பதை போல இல்லாமல் நண்பர்களாக சேர்ந்து கருத்துகளை சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுதல் முக்கியமானதும்கூட
                            **********

   கோபம பொத்துக்கொண்டு வருகிறது சுஜாதாவை பற்றி யார் தவறாக சொன்னாலும். அவரது எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு அருமையான மனிதராக மனதில் பதிந்து இருப்பதே காரணம்.

   சிலருக்கு அவரை  பிடிக்கதாதுக்கு என்னதான் கரணங்கள் இருந்தாலும் நான் பார்த்தவரை பொறாமைதான்.அதுவும் தன்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தோடு ஒப்பிடகூடியது, அவரது எழுத்தை இலக்கிய வகையில் சேர்க்க முடியாது அல்லது வராது இந்த மாதிரி.

   இன்னும் சிலர் சில அறிவியல் கதைகளை எழுதிவிட்டு அதை வைத்து அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். இதில் அவ்ர்களுக்கென்று குழு வேறு கொடுமை.

   அவர்கள் முன்னிறுத்தும் கருத்துக்கள் அவரது எழுத்துக்களை இலக்கியத்தில் சேர்க்க முடியாதாம், வணிக எழுத்தாளர் இந்த மாதிரியே. என்னை பொறுத்தவரையில் இது பொறாமையின் உச்சகட்டம்தான்.
அவரும் இலக்கியம் எழுதியிருந்தால் கண்டிப்பாக நாம் தமிழ் எழுத்துலகில் அறிவியல் சம்பந்தமான எழுத்தை இழந்திருப்போம் என்றே தோன்றுகிறது. நிறைய அறிவியல் விசயங்கள் எளிமை படுத்தபட்டு கதைகளில் கட்டுரைகளில் வாயிலாக கொடுத்தவர் சுஜாதா. கண்டிப்பாக எந்த ஒரு இலக்கியவாதியும் செய்து இருப்பார்களா தெரியவில்லை.

   சுஜாதா இருந்த காலத்திலும் சரி இப்போதும் சரி எல்லோரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர்.பொறாமை பிடித்தவர்களுக்கும் இது தெரிந்தும் அதை மறைத்து குறை சொல்லுகிறார்கள். ஒருவேளை அவர் இல்லாத காரணமாக இருக்கலாம் என் தோன்றுகிறது.

   அவர் இருந்து அதை படிக்க நேரிட்டாலும் அவரின் கருத்து “எனக்கு சிரிப்பு வருகிறது இவர்களை பார்க்கும்போது என்றேதான் இருக்கும். அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயம இல்லை. இவர்கள் திருந்தினால் சரி அல்லது அந்த மாதிரி விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தாலே போதும்.

சிறு சிறு .. - 2

    சின்னதாக கதைகள் எழுத நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இந்த சிறு சிறு. இதை விட சுவராசியமாக சுஜாதா அவர்கள் சொன்ன 55 வார்த்தைகள் அடங்கிய கதையை "என் பக்கம்" த்தில் படிக்க நேர்ந்தது. அவரும் ஒரு அருமையான கதையை எழுதியிருந்தார்.

    சின்னதாக கதை எழுதியிருந்தாலும் ஒரு குறிபிட்ட விதியை கொண்டு எழுதியிருக்கவில்லை.இது கொஞ்சம் ஆர்வமானதும் கூட. இதை பற்றி buzz ல் போட்டபோது சில கதைகள் கிடைத்தன அதையும் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

முதலில் ஜெயந்த் கிருஷ்ணா அவர்களின் கதை

                                                              நிலா 

     பல இரவுகள் பல நிறங்களில் என்னை கடந்து சென்றிருக்கின்றன. அதில் ஏராளமான இரவுகளில் என்னுடன் இருந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அதிகமாக பேசியதில்லை, பின்னர் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் வித விதமாய் உடையணிந்து வந்தவளை முதல் முதலாய் சேலையில் வந்த அவளை பார்த்த கணம் என்றோ என்னை மறந்து போன என் அவளின் முகம் தோன்றி மறைய முதல் முறையாய் அவளிடம் உன் பெயரென்ன என்று கேட்டேன். நிலா என்றாள். மாலையில் தோன்றி காலையில் மறைவதால் இருக்கலாம்

*******


அடுத்து அனு அவர்களின் கதை 


                                                                அவன்

           மூன்று வருடங்களாக தான் அவனைத் தெரியும் எனக்கு.. ஆனால், உயிரோடு கலந்து விட்டான்..

           சந்தோஷ உலகை காட்டியவன், இன்று தன் பிரிவால் அமிலத்தை வாரி இறைக்கிறான்..

சோகத்தை சிரிப்பால் நீக்கியவன், இன்று என் அழுகைக்கு காரணமாகிறான்..

           கோபத்தை முத்தத்தால் அழித்தவன், இன்று இதயத்தில் வெறுமையை நிரப்புகிறான்..

           அவனில்லாத நேரங்களை நினைக்கவும் முடியாமல், என்னெதிரில் வந்த பஸ்ஸை நெருங்கினேன்..

           பஸ்ஸை நிறுத்தி, “டாடா மம்மி” என்று அழுதபடியே முதல் முறையாக பள்ளி செல்லும் என் மகனை கண்ணீருடனே வழியனுப்பினேன்.


*******

என்னுடையது  ..


                                                    ஒரே ரகசியம்

     வேறுவழியில்லாமல் லில்லிபூனையை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டியதிருந்தது. மூளையோடு தொடர்பை ஏற்படுத்தினேன்.

     கேள்விகளை உள்ளனுப்ப அதன் சேமித்து வைக்கபட்ட்ட தகவல்களில் இருந்து எனக்கு பதில் கிடைக்கும். இதுவரை இந்தமுறை மனிதமூளைக்குள் மட்டுமே சோதித்து பார்க்கப்ட்டிருக்கிறது. விலங்கின் மூளையை அறிய முயற்சி.

“உங்களுடைய அறிவுத்திறமை எந்த அளவு?”

“எங்களின் பிறப்பின் ரகசியம் தெரிந்து இருக்கிறோம்”

“என்ன உங்களுக்கும் அந்த பிரச்சினையா?”

     “பிரபஞ்சத்தின் ரகசியத்தையும் கண்டறிய எங்களினம் முயல்கிறது பலவிதிகளுண்டு நெருங்கிவிட்டோம்”

“பிரபஞ்சத்தை தோற்றுவித்தது யார்? உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா?”

"............"

(54 வார்த்தைகள் என்னுடையது கடைசி வார்த்தை உங்களது அது “ஆம்” “இல்லை“ கதை முடியும் ... (வி.சொ.பொ. முடிவை போல )


 *****

இரண்டாம் கதை  

                                                             ஒரு தேடல்...

    பிரபஞ்சத்தில் வேற்றுகிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டறியும் தானியங்கி விண்கலமது.

     அம்சம் என்றால் தனாகவே தனதுவழியை தீர்மானிக்கும்.விண்வெளியில் தனக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்.

    நீரின் அமைவு ஆதாரத்தை வைத்தே ஒருகிரகத்தை நெருங்கி இறங்கி சோதனை செய்து தகவலை அனுப்பும்.

    ஏவினார்கள். பல வருடங்கள் கடந்த நிலையில் ஒருவருடமாக அதை கண்காணிக்கும் பணியை கைவிட்டிருந்தார்கள்.

    திடிரென்று வினகலத்தில் இருந்து தகவல் வந்தது எல்லோர்க்கும் ஆச்சர்யம். அது இருக்கும் தொலைவு இருப்பிடம் கண்டறியும் முயற்சிக்காக தூரத்தை பார்த்தபோது

550km என்றிருந்தது
.



விரிகோணம் - 2


  இதற்கு  முந்தைய பாகங்கள் படிக்க...
  

  

    இருந்தாலும் இது சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் என பட்டது. அது தேறினால் கண்டிப்பாக இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.  

   அது எந்த விதத்திலாவது வயதாகுவதை குறைப்பது. இதன்மூலம் கிட்டதட்ட மரணமில்லா மனிதர்களை உருவாக்குவது சாத்தியம் என்பது அவரின் எண்ணம். செல்களின் பிரிதலை கட்டுபடுத்தி அதனை கட்டுக்குள் கொண்டுவருவது இந்த மாதிரி ஏதவது செய்து அதிக காலத்துக்கு மரணத்தை தள்ளி போடுவதே நோக்கம். வைத்தியை கடிதத்துடன் தொடர்பு கொண்டதும் இந்த ஒரு விசயத்துக்காகத்தான்.

   அதே நேரத்தில் அவரது இரண்டாவது முறையில் இருந்த சில சிக்கல்கள்களும் வைத்தியின் உதவியை நாட காரணமாக இருந்தது. அவருக்கே அந்த இரண்டாவது முறையான ஒளியின் வேக பயணத்தில் நம்பிக்கை இல்லை. இதுவரை அறிவியலில் தீர்க்கபடாத சிக்கல்கள் நிறைந்த ஒன்று.

    ஒளியின் வேகபயணம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதன் அடிப்படையில் வேறொன்றை செய்ய முயன்றுகொண்டு இருந்தார். wormhole ஐ வைத்து வேகமாக பயணிப்பது. இந்த wormhole  கற்பனை வடிவில் மட்டும் இருந்தாலும் ஒளியின் வேக பயணத்தை முயல்வதை விட இதன் மேல்  அவருக்கு நம்பிக்கை இருந்தது. காரணம் ஐன்ஸ்டீன் relativity theory ன் மூலம் இதை விளக்கியிருப்பதே.


    எப்படி கருந்துளைகள் இருக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் சொன்னபோது முதலில் கற்பனை மட்டும் என்று நம்பி பின் அது இருப்பதை உணர்ந்ததை போல இந்த wormhole விசயமும் இருக்கலாம் என்பது அவரது நம்பிக்கை. relativity theory ள் சொல்லியபடி space time ல் அதிக ஈர்ப்பு விசை மாற்றத்தினால் ஏற்ப்படும் ஒரு துளை அல்லது ஒரு வெளிப்பகுதி என்று இதை சொன்னாலும் பெரிய அளவிலான இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இது இருக்ககூடும் என்பது புத்திக்கு சரியாகப்படவில்லை.

    இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இருக்ககூடும் என் நம்பியதுக்கு காரணம் அந்த அளவிற்கு அதிக ஈர்ப்பு விசை செயல்பட்டால்தான் இந்த துளைகளை ஏற்ப்படுத்தமுடியும். அதோடு இதை ஏற்ப்படுத்தும் அணுக்களும் அதை சார்ந்தவற்றையும் மனிதன் இன்னும் சரியாக கண்டுபிடித்து புரிந்துகொள்ளவில்லை.

    இவற்றை ஏற்படுத்த காரணமாக இருப்பதை அந்நியமானது அல்லது விசித்திரமானது என்பதே மனிதனின் இன்றைய கணிப்பு. இந்த அளவு ஈர்ப்பு விசையை செயற்கையாக ஏற்ப்படுத்தி சோதிப்பது என்பதும் இயலாத காரியம் என்பதால் இது சம்பந்தமான எந்த ஒரு சோதனை முயற்சியும் இல்லை.

    ஆனால் அது சாத்தியமாக்குவதில் நம்பிக்கை வைத்து இருந்தார் புத்தி.அதாவது தேவையான திசையில், பாதையில் warm hole ளை உருவாக்கி அதில் வேகமாக பயணிப்பது. அது விண்கலத்துக்கு சற்று முன் தோற்றுவிக்கப்பட்டு விண்கலத்தை தனது வழியில் இழுத்து செல்லும் ஆனால் அதன் கட்டுப்பாடு விண்கலத்தில்தான் இருக்கும்.

    எப்படியென்றால் ஒரு பெரிய காந்தம் ஒரு குண்டூசியை தனது பக்கம் இழுக்கிறது ஆனால் அது ஒட்டுவதுக்கு முன்னால் அது நகர்ந்து செல்கிறது மீண்டும் இழுக்கிறது குண்டூசி நகர அந்த காந்தமும் தொடர்ந்து நகரும். இதுதான் புத்தி செய்ய போவதும். காந்தத்திற்கு பதில் அதிக அளவிலான ஈர்ப்பு விசையை பயன்படுத்த திட்டம்.அந்த ஈர்ப்பு விசை warm hole உள்ளத்துக்கு நிகராக இருந்து விண்கலத்தை தனதுபாதையில் இழுத்துசெல்லும்.


    அந்த அளவுக்கு ஈர்ப்பு விசையை ஏற்படுத்த புத்தி வைத்திருக்கும் திட்டம் மிக எளிதானதுதான்.ஆனால் இதுவரை யாரும் யோசித்து முயற்சிக்காத ஒன்று.  

                            ************

   புனி ஆய்வுகூடத்திற்கு வரும்போது வைத்தி இல்லை.நேராக சோதினை கூடத்தில் இருந்த ஆய்வு குடுவைகளில் தன எடுத்துவந்த லில்லியின் tissue களை பத்திரபடுத்தி அதனை சோதிப்பதுக்கான வேலைகளில் இறங்கினாள்.வைத்தி வரும் முன் செய்து விட்டால் அவருக்கு பதில் சொல்லும் வேலை மிச்சம் என்பது அவளது எண்ணம்.

    முதலில் அவளது சந்தேகம் எதாவது வைரஸ் தாக்கி இருக்கலாம் அதனால் லில்லிக்கு சோர்வு போன்ற நோய் இருக்கும் என்பதுதான்.ரத்தத்தை சோதித்து பார்த்தாள் பொதுவான சில சோதனைகள் செய்து பார்த்ததில்  ரத்தத்தில் அதிக அளவில் வைரஸின் தாக்கம் இருந்தது.

    அடுத்த கட்டம் அந்த வைரஸின் தன்மையை அறியும் சோதனை. சில மணி நேரத்தில் முடிந்து இருந்தது. முடிவு புனி எதிர்பார்க்காத ஒன்று. அரிதாக பூனைகளை தாக்கி உயிரிழப்புகளை ஏற்ப்படுத்தும் Feline leukemia virus (FeLV) என்ற ஒன்று தாக்கியிருந்தது. இது பூனைகளில் இருந்து எளிதாக மனிதர்களுக்கும் பரவுவதோடு. மனிதர்களுக்கு இது உயிர்கொல்லி நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை படித்து இருக்கிறாள்

   உடனே லில்லியை குணப்படுத்தவேண்டும் அதுவரை அதை கவனமாக கையாள வேண்டும். அம்மாவுக்கு தெரிந்தால் இன்றே எங்காவது காட்டில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். எப்படி குணபடுத்துவது என்ற குழப்பத்தில் புனி இருந்தாள்.

கண்டிப்பாக புனியை காப்பற்ற வைத்தியின் உதவி தேவை. அவரிடம் சொல்ல நினைத்து இருந்தாள். அந்த வைரஸின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    இது சம்பந்தமாக அங்கு இருந்த புத்தகம் மற்றும் கணினியில் தேடினாள். குணப்படுத்தும் மருத்துவ முறை இருந்தது. Lymphocyte T-Cell Immune Modulator என்ற முறையில் ரத்தத்தில் உள்ள பாதிக்கபட்ட செல்களை நீக்கிவிட்டு செல்களை புதுப்பிக்கும் முறைகளில் ஒன்று. இது இங்கு சாத்தியமகுவது சந்தேகமே. 

      வைத்தி வாசலில் வந்து கொண்டு இருந்தார். கதவில் இருந்த பெட்டியில் அந்த கடிதம் இருக்க வரும்போது எடுத்து பிரித்தபடி வர அவரை பார்த்தவுடன் புனி எழுந்து அந்த சோகத்திலும் மெல்ல சிரித்து வைத்தாள்.

   கடிதம் எங்கு இருந்து வந்தது என்பதை பார்த்த வைத்திக்கு ஆச்சர்யம் வேகமாக பிரித்து படித்தார். அது அரசாங்கத்திடம் இருந்த வந்த ஒன்று. வைத்தி செயற்கை முறையில் சோதனை முறையில் உயிர்களை உருவாக்கி சோதனை செய்ய அனுமதி கேட்டு இருந்தார் அது சம்பந்தமான அரசிடம் இருந்து வந்த பதில் கடிதம்தான் அது.

   அரசு சோதனை செய்வதுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதில் வைத்திக்கு சந்தோசம்தான் என்றாலும் அதில் இருந்த ஒரு நிபந்தனை வைத்திக்கு முட்டுகல்லாக இருந்தது.

 

(தொடரும்)

விரிகோணம் - 1


   இதுக்கு  முந்தைய பாகம்

   “நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து இருப்போம்?

“ஏன் திடிர்னு கேட்கிரிங்க?

“உனக்கு தெரிஞ்சு அப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு சொல்லு போதும்

    “நான் படிச்சதை மட்டும் வச்சி பார்த்தா அதுக்கு வாய்ப்பு இல்லை ஏன்னா நமது செல்கள் எல்லாமே oxygen வச்சிதான் உயிர் வாழமுடியும். அதுவுமில்லமா சுவாசிக்கும்போது 75% nitrogen, இன்னும் பிற வாயுக்கள உள்ளே சென்றாலும் நுரையீரலில் உள்ள alivoli எனும் வாயு மாற்றம் செய்யும் அமைப்பு oxygen க்கு பதிலாக வேற வாயுவை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸ்டை வெளியிடாது. இது தவிர நமது மூளையில் இருக்கும் சுவாசத்துக்கான சென்சார்கள் எப்போதுமே ரத்தத்தில் உள்ள oxygen அளவை வைத்து நமது சுவாசத்தை கட்டுபடுத்தும் அதனால அதுவும் ஒத்துழைக்காது. எல்லாத்தையும் வச்சி பார்க்கும்போது வாய்ப்பு இல்லைன்னு தோணுது என்று முடிக்கும்போது அவளின் சத்தம் கொஞ்சம் குறைந்து இருந்தது. வைத்தியின் மீது இருந்த  பயமே காரணம்.

   “சரி நீ மேலே சொன்ன எல்லா விசயத்தையும் சரிபண்ணிட்டா சாத்தியம்தானே?” என்றார்

   “கண்டிப்பாக ஆனால் நான் சொன்னதை மாற்றம் செய்வது எப்படி? அதுதானே நமது பிறப்பின் ரகசியம்?

“மாற்றலாம் எல்லாத்தையும்என்றார் வைத்தி மெல்ல சிரித்து கொண்டே

“எனக்கு தெரிஞ்சு அது மனித நிலையில் சாத்தியம் இல்லைன்னு தோணுது

   “அதான் கேட்டேன் உன்னிடம் வேறு வாயுவை சுவாசித்தால் அந்த உயிரினம் எப்படி இருக்கும்னு மனிதர்கள் மாதிரி இல்லாம?

   “கற்பனை பண்ணி பார்க்கவும் எந்த வாயுவை சுவாசித்தால் என்று தெறிய வேண்டுமே?

“சரி இப்ப கார்பன் டை ஆக்ஸ்சடை சுவாசிக்குமாறு இருந்தால்?

   “ம்ம... என்ன கார்பன் உடம்பில் அதிகமாகி சதைகளுக்கு பதில் மிக கடினமான ஒரு அமைப்பு இருக்கும். ரத்தம் இருப்பது சந்தேகம். அதுக்கு பதில் உணவை கடத்த வேறேதாவது தனியாக இருக்கும். உருவ அமைப்பு சொல்ல முடியலை. ஆனால் சுவாசம் நம்மை போல இருக்கணும்னு இல்ல சுவாச இடைவெளி அதிகமாக இருக்கலாம். கிட்டதட்ட மணி நேரத்துக்கு ஒன்று அல்லது அதுக்கு மேல் அதனால் வாழ்நாள் அதிகமாகும். வேற இனபெருக்க முறை கண்டிப்பாக மாறியிருக்கும். எனக்கு தெரிஞ்சு இவ்வளவுதான் யோசிக்க முடியுது என்றாள்

   “ம்ம நீ சொன்னதுல எதுவுமே நடக்கமா வேற மாதிரியும் இருக்கலாம் என்று சொல்லி விட்டு அவரது அறைக்குள் போனார் வைத்தி.

   புனிக்கு குழப்பமாக இருந்தது. அவரது பதிலால் கொஞ்ச பயமும் கூட எங்கே தவறாக ஏதும் சொல்லி விட்டோமோ என்று. உண்மையில் அவர் சொன்ன விசயத்தை கற்பனை செய்து பார்க்க கஷ்ட்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. இயல்பாக நடந்து வரும் ஒன்றை அதுக்கு முரணாக வேறு விதத்தில் யோசிக்க சொன்னதே காரணம்.

   மாலைவரை  வைத்தி அவரது அறையில் ஆய்வுகள் சம்பந்தமாக எதையோ படித்து கொண்டு இருக்க புனி நேரம் போகாமல் வெளியில் கொஞ்ச நேரம் புத்தகம் படிப்பதும் சோதனை கூடத்தில் சென்று வைத்தி முன்செய்த சில ஆய்வு முறைகளை பார்த்து நேரத்தை போக்கினாள்.

   அன்று வீடு திரும்பும்போது பாதிவழியில்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது காலையில் லில்லி காணமல் போனது. என்னவாயிருக்கும் எனறு யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தவள்.

 “அம்மா லில்லி வந்துச்சா? பார்த்தியா?

“ஆமாம் இப்ப அதான் குறைச்சல்?”

“சொல்லுமா பார்த்தியா இல்லியா?

“வந்துச்சி சத்தம் ஏதும் இல்ல கொஞ்ச நேரம் சுத்திட்டு போயிருச்சு

“எங்கே?”

“வேற வேலை இல்ல அது பின்னாடிபோறதுதனா என்ன?

    சோகமாக லில்லியை வீட்டுக்கு உள்ளேயே தேட ஆரம்பித்தாள். மத்தபடி அவளது குரலை கேட்டாலே காலை சுற்றி வரும் இப்போது வீட்டில் இருந்தால் வந்திருக்கும். எங்காவது வெளியில் போயிருக்கும் அல்லது அம்மா அடித்து இருப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு.

   பழைய துணிகள் வைத்து இருந்த இடத்தில சுருண்டு படுத்து இருந்தது லில்லி. பார்த்தவுடன் தூக்கினாள் வேறு எங்கோ பார்த்து மெதுவாக கத்தியது. பழைய நிலையில் அது இல்லை என்பதை பார்க்கும்போதே அவளுக்கு தெரிந்தது. கிண்ணத்தில் பால் ஊற்றி வைத்தாலும் சுத்தமாக குடிக்க மறுத்தது. என்ன நடந்தது என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் ஏன் இந்த லில்லி இப்படி செய்கிறது என்ற கோபம வேறு அவளுக்கு.

   லில்லியால் அன்றைய இரவு முழுதும் சோகமாகவே கழித்தாள்.அருகில் படுக்க வைத்து இருந்தாலும் காலையில் பார்க்கும்போது எங்கோ போய் இருந்தது. தேடிபார்க்க எண்ணி பழைய துணிகள் போடும் இடத்தில பார்க்க இருந்தது. “லில்லி என்று கத்தியவுடன் தலையை தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டது. காலையிலயே அதை கொஞ்சினால் அம்மா திட்டுவார்கள் என்பதால் வேலைக்கு கிளம்பபோனாள்.

   வெளியேறும் போதுதான் நினைவுக்கு வந்தது லில்லிக்கு என்ன ஆயிருக்கும் என்பதை அறிவதுக்கு அதன் ரத்தத்தை ஆய்வுக்கு எடுத்து செல்லலாம் என்று எண்ணி கொஞ்சம் ரத்தம் மற்றும் tissues எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஏன் இப்படி செய்கின்றது என்றாவது அவளால் தெரிந்து கொள்ளமுடியும்.

                                                                           ********

   புத்தி அந்த கரும்பலகைக்கு முன் உடகார்ந்தபடி புகைத்து கொண்டு இருந்தார்.அவரது எண்ணம் முழுவதும் அந்த பலகையில் இருந்த விசயத்தில் இருந்தது.

    புத்தி விண்ணியல் துறையில் குறிப்பிட்டு சொல்பவர்களில் ஒருவர் என்பதோடு தனியாக பல ஆராய்ச்சிகள் செய்து அறிவியல் துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து இருப்பவர். அவரது இப்போதைய ஆராய்ச்சியான வேற்றுகிரக உயிரன வாழ்க்கை பற்றி ஏற்க்கனவே வைத்திக்கு கடிதம் எழுதிய நிலையில் அடுத்த கட்ட நிலைமையை பற்றித்தான் அவரது யோசனை. அந்த பலகையில் இருந்ததும் அதுதான்.

   விண்ணில் எப்படி அதிக நாள்கள் மனிதன் ஆராய்ச்சிக்காக உயிரோடு பயணிப்பது அல்லது அதிக நாள்கள் என்பதை குறைக்க  பயண வேகத்தை ஒளியின் வேகத்திலியோ அதைவிட அதிகமாகவோ வைத்து பயணம் செய்வது  இதுதான் அவர் தேர்ந்து எடுத்த இரண்டு வழிகள்.

    முதல் ஒன்று அவரை பொருத்தவரை சாத்தியமாக தெரியவில்லை. இறப்பில்லாத மனிதன் முடியாத காரியம். பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் கிரகங்ககளுக்கு செல்ல கண்டிப்பாக மனிதன் சாதாரண வாழ்நாளை விட அதிகமாக உயிர் வாழ்வது அவசியம்.

    அதற்கு உண்டான வாய்ப்புகள் என்று அவர் பார்த்தது மனிதனுக்கு சாகாமல் இருக்க எதாவது ஒன்று கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அல்லது அவனை அப்படியே உயிரோடு உறைய வைத்து தேவைபடும்போது எழுப்பிவிட்டு தேவை பூர்த்தி ஆனதும் மீண்டும் உறைய வைக்கும்முறை. கடைசியாக உடல் தனியாக உயிர் தனியாக அனுப்பி தேவைபடும்போது இணைத்துக்கொண்டு வேலையை பார்க்கும்படியாக இது எல்லாமே அவருக்கு எது ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பது போல தோன்றவே எல்லாவற்றையும் கைவிட்டார்.

   இருந்தாலும் இது சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் எனபட்டது. அது தேறினால் கண்டிப்பாக இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.  

தொடரும்....

விரிகோணம்


   சில அறிவியல் விசயங்களை மையமாக வைத்து  கற்பனைசெய்து  சிறு திருப்பத்தோடு முடியும் சிறுகதைகளை இதுவரை எழுதிவந்தேன். இரண்டு தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். அதே வரிசையில் ஒரு தொடர்கதை. கொஞ்சம் வித்தியாசமாக நீளமாக எழுத எண்ணம் இருக்கிறது.

    முக்கியமாக இதில் வைத்தி,புனி,லில்லி பூனை,புத்தி, கணேஷ் என அனைவரும்  ஒன்று சேருகிறார்கள்.இதுவரை இவர்கள் நான் எழுதிய கதைகளில் தனித்தனியாக வந்த கற்பனை கதாபாத்திரங்கள். இதில் பல அறிவியல் விசயங்களை ஒரே கோர்வையாக வைத்து கதை நகரும்.

    ஏற்க்கனவே நான் இதுவரை எழுதிய கதைகளுக்கு அவ்வளவாக கருத்துக்களோ விமர்சனங்களோ சொல்லாமல், அந்த கதைகள் யார் எப்படி படித்தார்கள்,அதை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை பற்றிய கவலை எனக்கில்லாமல் செய்து இருந்தார்கள். அதே  வரிசையில் எனது மற்றுமொரு கதை.

   அதனால் இதையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்,எந்த விதத்தில் சேர்த்துகொள்ளபட்டது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை அதை நீங்கள் எனக்கு சொல்லாத வரை. என்னைபொறுத்தவரை வழக்கம்போல அண்மைய அறிவியல் விசயங்களை உள்ளடக்கிய என் கற்பனை கதை அவ்வளவே.

                              ************

                              விரிகோணம் 




அன்பின் வைத்தி,
    இல்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொண்டு விளக்கிவிட முடிகிறது. ஆனால் இருக்கலாம் என்ற விசயத்தில் அதை “இல்லை “இருக்கும் என் இரண்டு முடிவுகளில் கொண்டுவந்து விடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

    அப்படியொரு விசயத்தைபற்றிதான் ஒரு புதிய ஆராச்சியை தொடங்குகிறேன்.கடவுளின் அனுக்கிரகம் இரண்டாவது பட்சமாக இருந்தாலும் உங்களை போன்றோரின் உதவி இருந்தால் இன்னும் பக்கபலம். இது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளை என் வாழ்நாளில் செய்து அதில் இருந்து சில அனுபவங்களையும் பெற்று இருக்கிறேன்.

      அதன்படி இப்போது நான் செய்ய போவதுக்கு உங்கள் மற்றும் குழுவின் உதவி எனக்கு கண்டிப்பாக தேவை. எனது ஆய்வு என்னதான் முழுமையாக விண்ணியல் சம்பந்தமாக இருந்தாலும் உங்கள் மருத்துவ துறையின் சாதனைகள் பற்றி நன்கு அறிவேன்.

    நீங்களும் என்னைபோலவே காசுக்காக வேலைபார்ப்பதை விட்டுவிட்டு வாழ்க்கை லட்சியத்துக்காக ஆய்வுகள் செய்து பல சாதனைகளை செய்துள்ளீர்கள். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த உதவியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

     அனேகமாக இனி என் வாழ்நாள் அதிக பட்சம் பத்து வருடங்கள் குறைந்தது இருக்கும் அதற்குள் எதாவது ஒன்றை வாழ்வின் அர்த்தமாய் செய்துவிட நினைக்கிறேன்.

    எல்லோரும் அவர்களின் அறிவுக்கு ஏற்ப வித்தியாசமான முறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வேற்று கிரகத்தில் உயிர்களை பற்றி ஆராய்கிறார்கள். அவர்கள் இதுவரை முன் நிறுத்தும் ஆதாரம் எல்லாம் “இருக்கலாம் என்பதே.எனது ஆராச்சியின் நோக்கம் இந்த இருக்கலாம் என்பதை இல்லை அல்லது இருக்கு என்று மாற்றுவதே.

   அது ஒன்றும் சுலபம் இல்லைதான்.அறிவியல் கடவுளுக்கே தகுந்த விளக்கமான ஆதாரம் கேட்கும்நிலையில் நான் சில நம்பும் ஆதாரங்களை முன்வைத்து என் முடிவை சொன்னால் கண்டிப்பாக நிற்க்காமல் போவது உண்மை.

    ஒரு திடமான உணமையான முடிவு வேண்டும் இந்த விசயத்தில். இது சம்பந்தமான ஆய்வு கட்டங்களை மனதில் செயல்படுத்தி பார்த்தபொழுது என் விண்ணியல் அறிவுக்கு அப்பாற்பட்டு உயிரியல் துறையில் உள்ளவர்களின் அறிவும் அதிகம் தேவை.இங்குதான் உங்களின் உதவி தேவை.

   இப்போது நீங்கள் எதாவது ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தால் அது எப்போது முடியும், முடிந்த பிறகு என்னோடு இணைய முடியுமா? போன்ற விசயங்களை தெரிவியுங்கள்.

    அதுவரை எனது தரப்பில் எல்லா விசயங்களையும் தயார் செய்கிறேன்.ஒரு நீளமான யோசனையின் பின்னேதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.உங்களின் உதவியை விரைவில் நாடும்

                                                அன்புடன்,
                                                   புத்தி.

                      **********

    காலையில் எழுந்ததில் இருந்து லில்லி கண்ணில்படததால் தேடிபர்க்க தொடங்கியிருந்தாள். எப்போதும் அவளது காலை ராகம் போட்டபடி கத்திக்கொண்டு சுத்திவரும் லில்லி பூனை காணமல் போனது எதையோ இழந்தது போல இருந்தது அவளுக்கு.

“அம்மா லில்லி எங்கே?

“தெரியாது நீ வேலைக்கு கிளம்பலியா அதை எதுக்கு இப்ப தேடுறே?

   “இதோ கிளம்பிட்டேன் என்றவளின் மனது லில்லி எங்கே என்றே தேடியது.       

   புனி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு வைத்தியின் ஆய்வுகூடத்தில் வேலை பார்ப்பவள். நண்பர்களோடு வீண் அரட்டை,ஊர் சுத்தும் இளமையான வயதுதான் என்றாலும் அதில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இருந்தது இல்லை.அதனால்தான் படிப்பு முடிந்தவுடன் அருகில் இருக்கும் வைத்தியிடம் சேர்ந்தாள்.

    முதலில் அவளின் துறுதுறு கண்களையும், சுறுசுறுப்பையும் பார்த்த வைத்தி கண்டிப்பாக இவள் ஏதவது சேட்டைகள் செய்வாள் என்று எண்ணி தனது ஆராச்சி விசயங்களில் புனியை கொஞ்சம் கவனமாகத்தான் பார்த்துகொண்டார் .. ஆனால் போக போக அவளின் அறிவுகூர்மை கண்டு வைத்தியே வியந்ததுதான் உண்மை.

    வைத்தியின் அய்வுகூடம் மொத்தம் மூன்று அறைகளை கொண்டது. கொஞ்சம் நீளமான அகன்ற அறையில் ஆய்வுக்காக தேவைப்படும் எல்லா இயந்திரங்களும்,பொருள்களும் வைக்கபட்டு இருந்தது. உள்ளே நுழைந்ததும் தென்படும் அறையில் உட்கார்வதுக்கு சில நாற்காலிகள் பக்கவாட்டில் புத்தக அலமாரி. அதன் இடது பக்கம் ஒரு சிறிய அறை அதுதான் வைத்தியோடையது.

    மருத்துவதுறையில் சாதனைகள் புரிந்தவர்களில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். என்னதான் உலகத்தில்  மதிப்பு மரியாதை இருந்தாலும்  இவரின் எண்ணங்களுக்கு ஏற்ப சில ஆராய்ச்சிகளை சுதந்திரமாக மருத்துவமனைகளில் செய்ய முடியாததே இவரின் தனிப்பட்ட ஆய்வுகூடத்திற்கு காரணம்.

    தொடக்கத்தில் ஒரு பணியாள் உட்பட தனியாகவே ஆய்வுகள் செய்துவந்தார்.இரண்டுவருடங்களுக்கு முன்பே புனி வந்து கேட்க  மிகுந்த கெஞ்சல்களுக்கு பிறகு சேர்த்துகொண்டார். எப்போதுமே புனிக்கு வைத்தியின் மீது ஒரு பயம் உண்டு.அவரின் அறிவுக்கு மரியாதை கொடுத்தாலும் மனநிலை அறிந்து அவரை கிண்டலும் செய்வாள்.வெறுமனே சிரித்துமட்டுமே வைப்பார் வைத்தி.

   ஆய்வுகூடத்தில் நுழைந்தபோது வைத்தி அவரது அறையில் எதையோ படித்து கொண்டு இருந்தார்.சில வாரங்களாக புனிக்கு ஏதும் வேலை கொடுப்பதில்லை.சொல்லப்போனால் பேசுவதுகூட இல்லை. அவளுக்கு முன்னரே வந்தது இருப்பார் எப்போது போவார் என்பது அவளுக்கு தெரியாது.

    புனி தனக்கு தெரிந்த விசயங்களை சோதனைகூடத்தில் செய்து பார்த்துவந்தாள் அதுவும் நேரம் போக வேண்டுமே என்பதுக்காக.சில நாள்களில் வைத்தி சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை படிப்பாள்.

   இன்று லில்லி காணமல் போன கவலைவேறு ஏதும் பெருசாக செய்ய தோணாமல் வந்ததும் அங்கு இருந்த புத்தகத்தை திறந்து உட்கார்ந்தாள் படிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து வைத்தி வெளியில் வந்தார்.

“புனி மனிதர்கள் வேறு வாயுவை சுவாசித்தால் என்னாயிருக்கும்?

“புரியலியே என்ன சொல்ரிங்கன்னு?

    “நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து இருப்போம்?”+


(தொடரும்) 

அறுவடை


    இப்படித்தான் மனிதர்களா ? என்று நினைத்து தொடக்கத்தில் அவர்களோடு சேராமல் தனித்தே இருந்தேன்.சில வருடங்களில் இப்படித்தான் மனிதர்கள் என்பதை உணர்ந்த போது அவர்களோடு சேரும் எண்ணம் வந்தது.எங்களது தலமையின் அறிவுறைப்படி மனிதர்களுக்கு என்மீது எந்த ஒரு சந்தேகமும் வரக்கூடாது. அதற்கு நான் மனிதர்களோடு சகஜமாகப் பழகுவது ரெம்ப முக்கியம்.

    மனிதர்களின் சில குணங்களை வெறுத்தாலும் என்னை ஈர்த்தவையும் அவர்களிடம்  இருந்தன. உண்மையான அன்பு,பாசம்,பரிவு, முக்கியமாகக் காதல் எனும் உணர்ச்சி இது எல்லாமே எங்கள் இனத்திற்கு புதியதான ஒன்று.

   வேற்று இனத்தவனான எனக்கு கொடுக்கபட்ட வேலை பூமியில் சென்று "செல் விளைச்சலை"  மேர்ப்பார்வையிடுவது. நாங்கள் விதைத்த ஒரு செல் மனிதர்களாக வளரும்வரை காத்து இருப்போம். அதுவும் அவர்களின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலம் கடந்து இருக்க வேண்டும். அதாவது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருக்கும் மூளைதான்  இப்போதும் அவர்களிடம் இருக்கும் என்றாலும் அதன் சிந்திக்கும் திறன், செயல்படும் திறன் வேறு. அதுதான் எங்களுக்கு முக்கியம்.

   இந்த செல் வளர்ச்சியில் எங்காவது குறை நடந்தால் எனது குழுவுக்கு அறிவிக்க வேண்டும். அப்படித்தான் கொஞ்சகாலம் முன் மனிதர்களையே அளிக்க கூடிய டைனோசர்கள் தவறுதலான ஒரு செல் பரிணாம வளர்ச்சியில் உருவாக அதை அழிக்க எங்களது இனம் பெரும்பாடுபட்டது. ஒருவழியாக எரிகற்களை பூமி பக்கம் செயற்கையாகத் திருப்பி அதை அழித்தோம். இதுபோல் மனித இனத்திற்கு எந்த ஒரு இடையுறும் இல்லாதவகையில் பார்த்துவருவது என்னைப் போன்றவர்களின் வேலை.  

   இதற்காக கிட்டத்தட்ட மனிதனாகவே மாறி வாழ்ந்து வந்தேன்.  படிப்பது, வேலையில் அமர்ந்து காசு சம்பாரித்து வாழ்க்கை நடத்துவது என எல்லாமே மனித வாழ்க்கை. இது ஒன்றும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. எங்களின் அறிவுத்திறனோடு ஒப்பிடும்போது மனிதன் தூசுதான்.

   இருந்தும் இந்த மனித விளைச்சலுக்கு காரணம் அவர்களின் மூளையில் இருக்கும் நியூரான்கள், மற்றும் சில கிலியல் செல்கள். இந்த அமைப்பு எங்களுக்கு இல்லை.எப்படி மனித மூளைக்குள் வேதிவினையில் தகவலை கடத்துகிறதோ அதே வேலைக்குத்தான் எங்களுக்கும் அது தேவை.

    மனிதர்களைப் போல எங்களுக்கு பேசும்பழக்கம் இல்லை.தகவலை பரிமாற இந்த நியூரான்கள் தான் அவசியம்.போதுமானவரை எங்கள் கிரகத்திலியே உற்பத்தி செய்தாலும் எங்களின் இனப்பெருக்கத்தால் வேற்று கிரகத்தில் நியூரான் விளைச்சலுக்கு திட்டமிட்டு கிட்டதட்ட மூன்று கிரகங்களில் செயல்படுத்துகிறோம்.

   இது சுழற்சிமுறையில் நடக்கும்.எங்களின் தேவையை இந்த நடைமுறைகள் பூர்த்தியும் செய்தும் வந்தது. பூமி என சொல்லப்படும் இங்கு அறுவடைக்கான காலம் நெருங்கி இருந்தது. இந்த தருணத்தில் தான் என் மனதில் கொஞ்சம் மாற்றம். எங்கள் இனத்துக்கு மனம் ,உடல்,ஆத்மா என்று மனிதர்கள் சிந்தித்து வைத்து இருக்கும் விசயங்கள் தெரியாது. இன்னும் இந்த சித்தர்கள்,மந்திரம்,கடவுள், என்னவோ சொல்கிறார்கள் எனக்கு யோசிக்கவே கஷட்டமாக இருக்கிறது. எங்களுக்கு தேவை நீயுரான்கள் அதுக்கு இவை எந்த ஒரு தீங்கும் இல்லையென்பதால் கண்டுகொள்ளவில்லை. 


   ஆனால் எனது நோக்கத்தையே மாற்றும் சம்பவம் என்னையறியாமல் என்னுள் நடந்து வந்திருக்கிறது. அதை மனிதர்கள் காதல் என்கிறார்கள்.அவர்கள் சொல்வதை விட அனுபவிக்கும் போதுதான் சுகமாய் இருந்தது. காரணம் இதுவரை ஆணிடம் பழகியது போல் பெண்களிடம் பூமியில் பழகியது இல்லை. எல்லா பெண்களும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை என்பதை எனக்கு உணர்த்தினாள் அவள். சம்பளத்திற்காக ஒரு நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகிறேன். அங்குதான் அவளை பார்க்க நேர்ந்தது. எனக்கும் மனித ஆண் நண்பர்கள் நிறையா உண்டு. அவர்கள் சொல்லும்போது எல்லாம் இந்த காதல்  மீது பெரியதாக ஆர்வமோ ஆசையோ வந்தது இல்லை.

  அவளின் துறுதுறு கண்கள்,அதைசிமிட்டி  பேசும் அழகு எல்லாமே சேர்ந்து என்னை ஏதோ செய்தது.மற்ற பெண்களிடத்தில் பார்த்தது போல இல்லாமல் வர்ணம் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம். என் மனித நண்பர்கள் அதை பூனை கண், பாம்பு கண் என்றார்கள். என்னவோ எனக்கு அது பிடித்து இருந்தது.

   அவளை பார்ப்பதுக்கு சுற்றிய தினங்களில் எனக்கு கொடுக்கபட்ட வேலையே முற்றிலும் மறந்தேன். ஒருவழியாக அவளிடம் நட்பு கொண்டு பேசும் அளவுக்கு தேரியிருந்தேன். இருந்தாலும் இந்த மனித உணர்வுகள் பெண்களிடம் பழகும்போது மட்டும் ஏன்தான் இப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

   இதை எல்லாமே அவள் கண்கள்தான் செய்ய வைத்தது. நிறையமுறை சொல்லியிருக்கிறேன் உனது கண்கள் அழகாய் இருக்கு என்று அதுக்கு  அவள் வெட்கம் என்ற சொல்லும் ஒன்றால் தரையைப்பார்த்து குனிவது பிடிக்கும். இருவரும் ஏற்கனவே ஒருவருக்குள் ஒருவர் உணர்ந்து இருந்ததால் நான் முதலில் காதலை சொன்னபோது ஏதும் சொல்லாமல் முன்பு போலவே தரைபார்த்து “நானும் என்று மட்டும் சொன்னாள்.

    அடுத்து வந்த நாள்களில் என்நினைவு மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருந்தாள். அவள் இல்லாத நிமிடங்கள் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்தது.எல்லாமே புதிய ஒரு உணர்ச்சிகள்.சுகமானதும்கூட.இந்த நேரங்களில் நான் வந்ததுக்கான நோக்கம், என் பணி எல்லாமே மறந்து அவளுக்கான ஒரு தனி வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன்.

    இருட்டியிருந்தது. மாலையில் அவளின் நினைவுகளில் கலந்து இருந்த சமயம்.  நான் பார்த்து பழகின உருவம். திடுக்கிட்டு எழுந்தேன். இப்போதுதான் எனது வேலையை நான் முற்றிலும் மறந்து இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. எங்களின் தகவல் பரிமாற்றம் நியூரான்கள்வழி என்பதால் சத்தம் இருக்காது. நாங்கள் உள்ளுக்குள் உணர்ந்தாலே அதுக்கேற்ப விகிதத்தில் நியுரான்கள் வெளிப்பட்டு மற்றவர்களை அடையும் அதை உள்வாங்கி அதை வேறொரு தகவலாக புரிந்து கொள்ளும் அமைப்பு எங்களது.

  மனிதர்கள் எப்படி ஒலியை பயன்டுத்துகிறார்களோ நாங்கள் நியூரான்களை பயன்படுத்துவோம். சத்தமாக பேச அதிக நியூரான்கள் செலவழியும், சிதறிபோகும் அவற்றை எங்கள் இனத்தவர் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எப்படி மனிதன் கத்தி பேசுகிறானோ அந்த மாதிரி.

“என்ன திடீர் விஜயம் என்று கேட்டேன்.

   “உன்னிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லியே ஏன்? அறுவடை காலம் வேறு நேருங்கி விட்டது அதான் தலைமை உன்னை பார்த்து விட்டு வரும்படி உத்தரவு என்றான்  அவன்

   “ஒன்றுமில்லை எல்லாம் சரியாகதான் போகின்றது அதான் ஏதும் தெரிவிக்க வில்லை

   “ஏன் உன் நீயுரான்கள் ஒரு சுழற்சியில் வருகிறது மனிதர்களோடு சேர்ந்து நீயும் பொய்யை கத்துகொண்டியா?

“பொய் இல்லை” என்றேன் சமாளிக்கும் விதத்தில்.

   “சரி அறுவடை தேதி முடிவாகிவிட்டது நாளை அல்லது அடுத்த நாள் இருக்கும் அதுக்குள் நீ உன் உருவத்தை மாற்றிவிட்டு நமது இடம் வந்தது சேர். கொஞ்ச ஓய்வுக்கு பிறகு வேறு கிரகம் போக வேண்டியது இருக்கும்

“இல்லை இப்போதைக்கு அறுவடை இங்கு வேண்டாம்

  “ஏன் எல்லாம் சரியாதானே இருக்கு இதுதான் போதுமான சமயம். இதுக்குமேலும் மனிதனின் தரம் உயர்ந்து விட்டால் அவர்களது நீயுரன்களில் எதாவது மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது அதை நம்மால் சாமாளிப்பது கஷ்டம உனக்கு தெரியும்தானே

“தெரியும் அறுவடை செய்யுங்கள் ஆனால் நான் இங்குதான் இருப்பேன்

   “என்னாச்சு உனக்கு அறுவடையின் போது என்ன நடக்கும் என்று தெரியும் தானே?’

   “தெரியும் வழக்கம்போல ஒருவித  ஒளிக்கற்றைகள் வைத்து நியுரான்களை எடுத்துவிட்டு அடுத்த சில நிமிடங்களிளியே நெருப்பால் அழிப்போம் நான் நெருப்பில் அழிகிறேன் இங்கேயே நீ அறுவடையை சொன்ன தேதியில் ஆரம்பி

   “இதை தலைமைக்கு சொன்னால் இங்கேயே உன்னை அழிக்க ஆணை வரும் தெரியும்தானே?

   “அதான் நானும் சொல்கிறேன் இங்கேயே அழிகிறேன் என்று.இதற்கு மேல் ஏதும் பகிரவேண்டாம்

“சரி உன் இஷ்டம் முடிந்தால் முடிவை மாற்று.

   “இல்லை. எனக்கு ஒரு உதவி செய் எப்போது அறுவடை நேரம் எப்போது என்பதை சொல்

“நாளை மாலை

   போய் இருந்தது அந்த உருவம். பூமிக்கு வந்த பிறகு நான் அடையாத வருத்தம் துக்கம் அப்போது எனக்குள். எதுமே இல்லாமல் எல்லாமே அவலாகவே இருந்தாள்.

   மறுநாள் மதிய உணவு இடைவேளையில் நான் ஏதும் பேசாமல் இருக்க அவள் மட்டுமே பேசினாள். ஒருகட்டத்தில் காரணம் கேட்க ஒன்றுமில்லை என்றுமட்டும் சொல்லிவைத்தேன். வழக்கம்போல் உதட்டை சுழித்து கண்ணை சிமிட்டினாள்.

எப்போதும் சந்திக்கும் பூங்காவில் அமர்ந்து இருக்க அவளிடம்

“இந்த பூமி அழியும்போது என் பக்கத்தில் நீ இருந்தால் என்ன பண்ணுவே?

“பெருசா என்ன பண்ண உன் கையை இருக்க பிடிச்சிக்குவேன்

“இப்ப பிடிச்சிக்கோ

   “அடப்பாவி சும்மா பிடிக்க சொல்லு பிடிச்சிட்டு போறேன் அதுக்காக இந்த உலகத்தை எதுக்கு அழிய சொல்றே என்றாள் சிரித்து கொண்டே

   “இல்லை இப்ப அழியப்போகுது என்னுடைய ஆசையும் அதுதான் என்று சொல்லி அவளது கைகளை பற்றினேன்.

   “ஏன் ஏதேதோ பேசுறே? கவலையா என்னவோ மாதிரி இருக்க என்னாச்சு?” என்றாள்

    பதில் சொல்லவில்லை அறுவடைக்கான அறிகுறிகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன என் இனத்தவர்கள் செய்யும் வேலைகளை புரிந்து கொள்வது சிரமமாய் இருக்கவில்லை

   “பதில் சொல்லு ஏன் இப்படி....என்று சொல்லி முடிக்கும்போது அந்த ஒளிக்கற்றை எங்களை கடந்து சென்றது அதுக்கு பிறகு நியூரான்கள் இல்லாததால் தகவல் ஏதும் கடத்தாமல் பிரம்மை பிடித்தவள் போல அப்படியே அமர்ந்து இருந்தாள்.  அந்த அழகான பாம்பு கண் என்னையே பார்த்து கொண்டிருந்தது. கைகளில் கொஞ்சம் தளர்ச்சி. தூரத்தில் பெரிய நெருப்புவளையம் சுழன்று வருவது அவளது கண்களில் தெரிந்தது. அவளது பிடி தளர்ந்து இருந்தாலும் அவளது கைகளை  விரல்களுக்கு இடையில் அழுத்தமாகப் பிடித்திருந்தேன்.  கடைசியான அவளின் ஆசைக்காக.



(இந்த கதையின் மஞ்சள் கரு பிரபல பதிவர் டெரர் பாண்டியன் எழுதிய இந்தகதையில் இருந்து எடுத்தது. வெள்ளைகரு என்னுடையது ஒரு அழகான அறிவியல் புனைவை எழுதிய அவருக்கு நன்றிகள்)))