விடையறியா மனது.

ஐந்து மணிக்கெல்லாம் பால் ஊற்றுபவர் வந்துவிட்டுப்  போய்விடுவார். அவர் கண்ணில் படவில்லையென்றால் அதற்குப்பிறகுதான் நடந்திருக்க வேண்டும். உணவகத்தோடு டீ கடையும் சேர்ந்து இருக்கும், அங்கு  காலை உணவு மட்டுமே கிடைக்கும்.  மற்ற நேரங்களில் டீயும், வடையும்தான். காலையில் வேலை விசயமாக  வேறு ஊர்களுக்குச்  செல்பவர்கள் வந்து சாப்பிடுவார்கள் என்பதால்  சீக்கிரமே எழுந்து வேலைகளைப்  பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவருக்குத்  தோதுவாக  பால்காரரும் அந்தக்  கடைக்கு முதலில்  வந்து பாலை ஊற்றிவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்வார். அந்த வழியாகச் சென்ற மற்றொருவர்தான் முதலில் பார்த்துவிட்டு நகந்தவர், பின் சந்தேகத்தில் உற்றுப்பார்க்க விசயம் தெரிய ஆரம்பித்தது. முதலில் வீட்டுக்குப் போகாமல் ஏன் இங்கே இப்படி படுத்திருக்கிறாள்? என்று நினைத்தவர், படுத்திருந்த நிலையைப் பார்த்ததும்தான் அருகில் சென்று திரும்பவும் சோதித்திருக்கிறார். கடைக்காரரும் வீட்டுக்குள் வேலையாக இருந்தேன்  எந்தவொரு சத்தமும் கேட்கவில்லையே என்ற கருத்தை அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

மணி சரியாக ஆறு இருக்கும், சிறிய கூட்டம் கூடியிருந்தது. எல்லோரும் வேண்டுமென்றே பார்க்கவந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒருவித வேலை இருந்தது. அங்கிருந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அந்தச் சாலைக்கு வந்துதான் செல்ல வேண்டும்.தூத்துக்குடியில் இருந்து மதுரைக்குச் செல்லும் புறவழிச்சாலையில் ஓரிடம். உள்ளூர் பேருந்தாகிலும், வெளியூர்களுக்கு நீண்டதூரம் செல்லும் பேருந்துக்கும் எல்லோரும் வரவேண்டிய இடம் அந்தச் சாலையின் சந்திப்பே. போவதற்கு ஒன்று,வருவதற்கு ஒன்றென மொத்தமாக இரண்டுவழி சாலையில் இருபக்கமும் சொல்லிவைத்தாற்போல்  சரிசமமாகக் கடைகள் இருக்க, சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த புளிய மரங்கள் ஒரு இடத்தில் கூட வெயிலை விடமாட்டேன் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தன. எப்போதும் நிழல் சூழ்ந்து குளிர்ச்சியாக இருக்கும் அங்கு மக்கள் கூட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்து மாலை ஏழு மணிக்கெல்லாம் வெறிச்சோடி விடும். ஒரு கிராமாத்தானுக்கு ஆறுமணிக்கு மேல் வெளியில் அதிகமாக வேலை இருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் விசயமது. அவசர வேலையின்றி அந்த இடத்தில் இரவில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இருக்காது. கடை வைத்திருப்பவர்களும் உள்ளே அடங்கியிருப்பார்கள். புளிய மரங்கள் மட்டுமே காற்றுடன் பேசி கொண்டிருக்கும் இரவின் தனிமையைப் போக்க அதற்கும் வேறு வழியில்லை.

கூட்டத்தின் நடுவே கிடந்தாள். விலகியிருந்த ஆடையை எடுத்து உடல் முழுதும் நன்றாக மூடியிருந்தார்கள். இடதுபக்கம் சரிந்து குப்புறப் படுத்துக் கிடந்தாள். உடலில் வேறெந்த அசைவும் இல்லை. வாயிலிருந்து ரத்தம் வடிந்து நின்றதில், உறைந்த ரத்தம் வாய்க்கும் மண்ணுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருந்தது. கால்கள் இழுத்து மண்ணில் கோடுகள் தெரிந்ததால் இறக்கும் முன் துடித்திருக்க வேண்டும். அவளது தோள்பட்டையில் மாட்டியிருக்கும் மூட்டை அவளின் முதுகுக்குப் பின்புறம் கையில் இருந்து கழன்று விழாமல் சரிந்து இருந்தது. அவளுடைய மற்றொரு முக்கியமான சொத்தாகப் பிளாஸ்டிக் பொம்மையொன்றை ஒரு மொழ நீளத்திற்கு எப்போதுமே வைத்திருப்பாள். அப்போதைய பிரச்சினையில் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.  கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் அங்கிருந்த  ஒருவனை நோக்கி முகம் தெரிகிற மாதிரி பிரட்டி போட்டு உயிர் இருக்கிறதா பார் என்றார். பார்த்தான். இல்லை.  உடலில் வேறெங்கும் பெரிய அளவில் அடியில்லை. மண்டையில் அடித்து வாயில் ரத்தம் வந்திருந்தது. தரைக்கும் அவளது உடலுக்கும் சிக்கலான இடைவெளியில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்கள் இப்போது மிகச் சுதந்திரமாக அவளின் முகத்தில்  சுற்றி வந்தன.

எப்போது நடந்திருக்கும்? யார் அடித்துப் போட்டுவிட்டுப்போனார்கள்? எப்படி இறந்தாள்? என்ற கேள்விகளுக்கு யாரிடத்திலும் பதில் இல்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இருந்தது. காரணம் அவள் யாரென்று அங்குள்ளவர்கள் அனைவருக்குமே  தெரியும். போலீசுக்குச் சொன்னால் தூக்கிக் கொண்டுபோய் என்ன செய்வார்கள் என்பதையும் நன்கறிவார்கள்.  அடித்துபோட்டவன் வண்டியை நிறுத்தாமல் போய்விட்டான், யாரும் அதைப் பார்க்கவும் இல்லை. அது தெரிந்திருந்தாலாவது காவல்துறை உதவி தேவைப்படும்.  குறைந்தது விபத்துக்குத் தண்டனை கிடைத்த நிம்மதியாவது கிட்டும்.  யாருக்கு?

ஆம் யாருக்கு? அவளுக்குச் சொந்தமென்று யாருமில்லை பல வருடங்களாகத் தன் குழந்தையென்று கையில் சுமந்து கொண்டிருந்த பொம்மையைத் தவிர.  இலங்கையிலிருந்து வந்திருந்த அகதிகளில் அவளும் ஒருத்தி. முகாமில் தங்கியிருந்த அகதிகள் தன் உழைப்பால் அந்த இடத்தையும் தங்களது வாழ்வையும் மேன்படுத்தியிருந்த அதே வேளையில் முடியாத இவள், சாலை சந்திப்பில் ஒருவேளை உணவுக்காகச் சுற்றிக்கொண்டிருந்தாள்.  அந்த இடத்திற்கும் அகதிகள் முகாமிற்கும் இரண்டு கி.மீ. தொலைவு இருக்கும்.  தினமும் நடந்துதான் வருவாள் போவாள் அதுவும் அந்தப் பொம்மையை ஒரு கையால் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டே.  ஆச்சர்யமான விஷயம் அவள் சாலை விதிகளை ஒரு போதும் மீறியதில்லை.  வரும்போது இடப்பக்கமும்,போகும்போது வலது பக்கமாகவே போவாள்.  அப்படி இடதுபக்கத்திலிருந்து  வலது பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு வரும்போதுதான் வாகனத்தால் அடித்துத் தூக்கி எறியப்பட்டு இறந்திருந்தாள்.

அங்கிருந்த கிராமங்களில் உள்ள குழந்தைகள் சரியாய் சாப்பிட மறுக்கும் வேளைகளில், தாய்மார்கள் பயம்காட்ட உபோயோகிப்பது இவளைத்தான். காரணம் இவளது உருவமும்,உடையும்.  அவள் அணிந்திருப்பது இந்த உடைதான் என்பதை யாராலும் சரியாகச் சொல்லிவிட முடியாது. ஆனால் கண்டிப்பாக மூன்றுக்கும் மேலான உடையைச் சம்பந்தமில்லாமல் தனது உடலில் உடுத்தியிருப்பாள் அழுக்கு படிந்த நிலையில்.  சீவாத தலையும் அவளது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மூட்டையும் எந்தவொரு சிறு குழந்தைக்கும் எளிதில் பயத்தை வரவைக்கத்தான் செய்யும்.  அவளாக எந்தக் குழந்தையையும் நேரில் பார்த்துப் பயம் காட்டியதில்லை.  அவளுக்குக் குழந்தையென்றால் அவ்வளவு உயிர்.  ஆசையில் அழகான குழந்தைகளைப் பார்த்தால்  சிரித்துவிட்டுப் போவாளே தவிரப் பயம்காட்டி மிரள வைத்ததில்லை.

தனது குழந்தையின் மரணமே அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தது. எந்த நிலைக்கு? மற்றவர்கள் கிறுக்கி,பைத்தியம் என்று சொல்லும் நிலைக்கு.  அவளுக்கு அதெல்லாம் தெரியுமா? புரியுமா? மனநிலை பாதித்தவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வதென்பது அவ்வளவு சாதாரணக் காரியமொன்றுமில்லை.  சரி மனநிலை சரியாக இருக்கும் ஒருவரின் எண்ணங்களை மட்டும் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமா? இல்லை முடியாது. அவளின் செய்கையை வைத்து அவளைப் பைத்தியம் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அவள் செய்யும் அன்றாட வேலைகள்தான் அவைகள்.  அதற்கு  மனிதர்கள் பைத்தியம் என்று பெயர்வைத்தால் அவளுக்கென்ன கவலை? அவளுக்கு ஒருபோதும் கவலையென்று ஒன்று இருந்ததேதில்லை. வேகமாக வேலைக்குப் போகவேண்டும்? அவசரமாகக் கடைக்குப் போகவேண்டும் இல்லையென்றால் கடையை மூடிவிடுவார்கள், ஆஸ்பத்திரி மூடிவிடுவார்கள் அதற்குள் போகவேண்டும், இத்தனை மணிக்கு இந்தப் பேருந்து வரும் நேரத்திற்குப் போகவேண்டும்.  இவ்வளவு மொய் செய்ய வேண்டும், இதை இவ்வளவு விலைக்கு விற்க வேண்டும், வாங்க வேண்டும்,மதியம் ஆகிவிட்டது சாப்பிட வேண்டும். காலையில் குளிக்க வேண்டும் என்ற எதைப் பற்றியும் அவள் கவலைப்பட்டதேயில்லை.

கவலைப்படுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்ற உன்னத மனநிலைக்கு எப்போதோ வந்திருந்தாள். இந்த மனநிலையானது நன்றாக இருக்கும் மனிதர்களுக்குக் கூட இன்னும் வந்திருக்கவில்லை. அவளின் குழந்தை உடல் சிதறி தனது கணவனோடு சேர்ந்து இறந்தபோது அவள் படாத கவலையா வேறு யாரும் பட்டிருக்கப் போகிறார்கள்? என்ன கவலைப் பட்டும் குண்டுவெடிப்பில் சிதறிக்கிடந்த உடல்களை அவளால் ஒன்றிணைத்து உயிர் தர முடிந்ததா? எவ்வளவு அழுது தீர்த்திருப்பாள்? கவலைக்கு ஒரு முடிவென்றிருந்தால் அதையெல்லாம் அவள் தாண்டியல்லவா போயிருக்க வேண்டும்.  அப்படியிருந்தும் எந்தவொரு பயனுமில்லை என்பதைத் தெரிந்துதான் கவலையென்ற உணர்வே அவளிடத்திலிருந்து விலகியிருந்தது அல்லது விலக்கியிருந்தாள்.

அங்கும் இங்கும் வெடித்துச் சிதறிக்கிடந்த உறுப்புக்குவியல்களில் தனக்கான ஒன்றைத் தேடி எடுப்பதென்பது எவ்வளவு அசாதாரணமான விசயம்.  அதையும் செய்தாள். ஒருகட்டத்தில் கண்ணீர் நின்றுபோனது.  கீழே கிடந்த சிதறல்கள் ஒவ்வொன்றும் சம்மட்டியால் அவளது மனதின் எண்ணங்களை அடித்து அப்போதிருந்த அவளின் நிலையை மாற்றின.  அவளுடைய  உலகின் பார்வை அப்படியே தலைகீழாய் மாறிப்போனது.  இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை.  மனதும்கூட முற்றிலுமாக மாறியிருந்தது.  முன்பிருந்த அவளில்லை என்பதை  மனதில் தோன்றும் புதிய எண்ணங்களே அவளுக்கு உணர்த்தின.  ஒரு சூனியப்  பிரதேசமாய் மாறியிருந்தது.  அதில் சுகம்,துக்கம் என எல்லாமே சமமாக நின்றன.  எல்லாம் முடிந்த பிறகு யாருடனும் பேசவில்லை.  குழந்தையின் நினைப்பு இன்னும் மனதில் ரணமாய் அமிழ்ந்திருந்தது. என்ன அடி அடித்தும் அதுமட்டும் மனதை விட்டு விலகவில்லை.  அவள் ஒரு தாய். கருவில் சுமந்ததிலிருந்து மனதிலும் பாசம்வைத்து  சுமந்தவள். அங்கு ஓரமாய்க் கிடந்த உயிரான மகள் விளையாடி மகிழ்ந்த பொம்மையை எடுத்துக் கொஞ்சி  தனது மனதின் வேதனைகளைத்  தீத்துக்கொண்டவள் பின்பு அதையே தனது மகளாகப் பாவிக்க ஆரம்பித்திருந்தாள்.  பாப்பாவுக்குப் பசிக்கும் உணவு கொடென்று பக்கத்து வீட்டில் கேட்டபோதுதான் அவளிடமிருந்த மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியவந்தது.  அவளுக்கென்று ஒரு தனியுலகம். அங்கு அவளும் அவளுடைய குழந்தையும் மட்டும்தான்.  வேறுயாருக்கும் இடமில்லையென்பதில் உறுதியாக இருந்தாள்.

தனது கணவனையும்,மகளையும் கொன்ற அந்த நிலத்தில் வாழ்வதில்லை என்ற முடிவோடு கிளம்பியவள், அலைந்து திரிந்து வந்து சேர்ந்த கடைசி இடம்தான் அகதிகள் முகாம். இந்நாள்வரையில்  அவளின் இரண்டாவது குழந்தையைக் கைவிடவில்லை. ஏற்கனவே ஒரு குழந்தையை எப்படி இழந்தாளென்பது அவளுக்குத் தெரியும். அதனால் ஒருபோதும் அந்தக் குழந்தையைக் கீழே இறக்கி வைப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தாள். மற்ற மனிதர்களைப் பொறுத்தவரை அவள் மனநிலை பாதித்தவள். ஆனால் அவளைப் பொறுத்தவரையில்  கொலைகாரத்  தேசத்தை வெறுத்து ஒதுக்கி வேண்டாமென்று மற்றொரு இடத்திற்கு வந்திருக்கிறாள்.  பாவிகளான  மனிதர்களின்மீதும் வெறுப்புதான், இருந்தாலும் அந்த வெறுப்பை அவளால் எவ்வளவு காட்டமுடியுமோ அவ்வளவு காட்டியே வந்தாள். யாருடனும் பேசமாட்டாள். பார்வையும் ஒருவித வெறுப்பின் தன்மையிலியே இருக்கும்.

தன்னைத்தானே அளித்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லாமல், உயிர்வாழ இந்தவொரு வாழ்க்கை நிலையைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.  தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதென்பது அவள் மனதைப்பொறுத்தவரை இயலாத ஒன்று. அப்படிச் செய்தால் அவளுக்கும், அவளின் குடும்பத்தைக் கொன்றவர்களுக்கும்  என்ன வித்தியாசம் இருக்கப்போகிறதென்பது அவளுடைய எண்ணம். அவர்களைப்போல கொலைகாரியாக மாற ஒருபோதும் இதுவரை முயற்சித்தது இல்லை. வயிற்றில் எரியும் அடுப்புமட்டும் இல்லையென்றால், எங்கோ  மூலையில் ஒரு உயிராக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போயிருப்பாள். எரிகின்ற அடுப்புக்கு விறகுக்காக இத்தனை பாடு படவேண்டியதிருந்தது.  தினமும் காலையில் எழுந்து மெதுவாக நடந்து வந்து சேர்பவள், முதலாவதாகத் திறந்திருக்கும் டீ கடையில் டீ குடித்துவிட்டுதான் மற்றவேலை.  ஒருநாளும் காசு கொடுக்காமல் எந்தவொரு பொருளையும் கடைகளிலிருந்து வாங்கியதில்லை.  ஐந்து ரூபாய்க்கு ஒரு ரூபாய் கொடுப்பாளே தவிர இலவசமாக வாங்கியதில்லை.  அந்தக் காசு அங்கு தினந்தோறும் வந்துசெல்பவர்கள், கூடியிருப்பவர்களிடம் பாப்பாவுக்குப் பசிக்கிறது என்ற இருவார்த்தையில் கிடைத்தது. அதோடு மட்டுமில்லாமல் சாலையில் தாறுமாறாக ஏறி நிற்கும் மனிதர்களை விலகு விலகு என்று ஒரு கையை ஆட்டி அப்புறப்படுத்துவாள்.  யாரும் சாலையில் அடிபட்டு விபத்துக்குள்ளாகக் கூடாது என்றவொரு எண்ணம். அவளைப்பொறுத்தவரையில் அது அவள் செய்யும் வேலையும் கூட. இதற்காகவாவது இந்த மனிதர்கள் எனக்குக் கேட்கும்போது காசு தரவேண்டும் என்றெண்ணியிருந்தாள். மகளைப் பிரித்த இவர்களிடமிருந்து காசை வாங்குவதில் அவளுக்கென்று எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இருக்கவில்லை. இது அவர்களின் கடமை.  காசு கேட்கும்போது கூட ஒருவித தைரியம் கலந்த திமிர் அவளிடத்தில் இருக்கும். ஒரு சில நேரத்தில் அண்ணா காசு என்றும் கேட்பாள்.  இதைத்தவிர அவள் வேறேதும் யாரிடமும் பேசியதில்லை.

அவளது மனதின் எண்ணங்களில் , அவளும் குழந்தையும் இந்த உலகிலிருந்து மாறுபட்டவர்கள். இதுவொரு பைத்தியக்கார உலகம்.  ஏதாவதொரு கரணம் சொல்லி ஒரு குடும்பத்தைக்கூடச் சிதறடித்துக் கொல்லக்கூடியது.  இதனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்பதின் வெளிப்பாடே  இத்தகைய நடவடிக்கைகள். அதனை இந்த மனிதர்கள் பைத்தியம் என்று சொன்னால் அதனால் அவளுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை. அவளுக்குத் துணையாக அந்தப் பொம்மை குழந்தை எப்போதுமே இருந்தது.  தனியாகப் புளியமரத்தின் நிழலில் உட்கார்ந்து அதனைக் கொஞ்சுவாள் ஆனால் சத்தம் வெளியில் கேட்காது. டீ கொடுப்பாள்.  பிஸ்கேட் துண்டுகள்,சேவு,மிச்சர்  உட்பட  பொம்மையைப் பொத்திவைத்திருந்த துணிக்குள் சிதறிக்கிடக்கும். யாரவது பாப்பாவைக் காட்டச் சொன்னால் கொஞ்சமாகத் துணியை விலக்கி அந்தப் பிளாஸ்டிக் பொம்மையின் முகத்தை மட்டும் காட்டுவாள். பார்ப்பவர்கள் இவளைப் பார்த்துச் சரியான பைத்தியக்காரி என்றெண்ணத்தில் சிரிக்க அவளும் பதிலுக்குச் சிரித்து வைப்பாள்.  ஆனால் அவள் சிரிப்பின் அர்த்தம் அங்குள்ளவர்களுக்கு மர்மமாக விளங்காமலே இருந்தது.

பக்கத்து ஊரில் உள்ள வெட்டியானுக்குச் சொல்லியனுப்பினார்கள்.  எல்லாம் தயாரானதும் தூக்கிக் கொண்டுபோய் எரித்துவிடுவதாக முடிவு. அதற்குள் அங்கு வந்துசெல்பவர்கள் பாதிப்பேர் அவளைக் கண்டு சென்றிருந்தனர்.  பைத்தியம் செத்துப்போச்சு என்பதே அவர்களின் மனதின் வெளிப்பாடு. அவர்களைப்பொறுத்தவரை அவள் செத்தது ஒரு நிகழ்வு.  ஒரு சிலர் உண்மையாகவே வருத்தப்பட்டார்கள்.  எங்கிருந்தோ தப்பித்து இங்குவந்து விபத்தில் செத்துவிட்டாளே என்றவொரு வருத்தம். ஆனால் ஒருவரும் தூக்கியெறியப்பட்ட அந்தப் பொம்மை குழந்தையைக் கண்டுகொள்ளவேயில்லை.  அவளின் இறுதி மூச்சுவரை தன்னருகில் அந்தக் குழந்தை இல்லாததைக் கண்டு  அதை  அவள் தேடியிருக்கக் கூடும்.  ஒருவேளை அந்தப் பொம்மை விழுந்த இடம் அவள் கண்ணில் பட்டு அதனை நோக்கி நகர முற்பட்டு தோல்வியோடு இறந்திருக்காலம்.  உண்மையான மகளை தன் கண்முன் இழந்தவளுக்கு  பொம்மையொன்றும்  அந்தளவுக்கு மீண்டுமொரு துக்கத்தை ஏற்படுத்தியிருக்காதுதான். இருந்தாலும் இறக்கும்போது பொம்மை அவளுடன் இருந்திருந்தால் நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு வேறொரு உலகத்தில் நுழைந்திருப்பாள்.

அவளுக்கான ஒருவிடுதலை.  மக்கள் அவளின் மீது வைத்திருந்த ஒரு பிம்பத்துக்கும், இவள் உலகத்தின்மீது வைத்திருந்த ஒரு அனுமானத்திற்கும் சேர்ந்ததான விடுதலை.  இரண்டுமே சரியானதில்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாளா? என்பது பற்றி  தெரியாது.  தூக்கிச் செல்ல வண்டி வந்தது.  வேட்டியை விரித்து அதில் புரட்டிப் போட்டுத் தூக்கி வைத்தார்கள்.  இரண்டு மாலைகள் அவளது உடலில் விழுந்திருந்தது.  யார் போட்டதென்பது அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  இது அவளுக்கான மரியாதையா? இல்லை சாத்திர சம்பிரதாயமா?.  வண்டி நகர்ந்து சுடுகாட்டை அடைந்ததும் இறக்கி வைத்தார்கள்.  மொத்தமாகப் பத்துபேர்களுக்குள்தான் இருப்பார்கள். விசயம் தெரிந்து முகாமில் இருந்து வந்தவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.  தூக்கி வைத்து மற்ற ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்தார்கள்.

அவளிடமிருந்து பிரிக்கப்பட்டவைகளில்  மூட்டை மட்டும் தனியாக இருந்தது.  அதைத் திறந்து பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.  அங்கிருந்த பெரியவர்களில் சிலர் வெட்டியானுக்குச் சில ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார்கள்.  எரிய ஆரம்பித்திருந்தது. அழுக்குச் சட்டைகள் முதலிலும், குளிர்ந்த உடல்,அப்புறம் எலும்பு என எல்லாமே எரியத் தொடங்கியிருந்தது.  அந்த மனம் எரியுமா? அதுதான் எப்போதே மரத்து உணர்ச்சிகளற்ற ஒன்றாக மாறிப்போனதே.  அதனால் எரிந்தாலும்,கனலில் வெந்தாலும் வேதனையை அனுபவிக்கப்போவதில்லை.  ஒருவேளை எங்காவது காற்றில் கலந்திருக்கும் அவளுடைய ஆத்மாவோ மனமோ அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவள் விட்டுச் சென்ற அந்தப் பொம்மை சாலையோரத்தில் துணி போர்த்தியபடி இன்னும் அப்படியே கிடந்தது.  இனி யாரும் அதற்கு ரொட்டியும், பாலும் தரப்போவதில்லை.  வெயிலிலும்,மழையிலும் காய்ந்து மக்கிப்போகலாம். ஏதவதொரு ஏழைக்  குழந்தை,  நாட்கள் கழிந்தபின் காற்றில் உருண்டு வரும் அந்தப் பொம்மையை எடுத்து விளையாடி உயிர் கொடுக்கலாம்.

இப்போது அவள் பிரவேசித்திருப்பது வேறொரு உலகம்.  அந்த உலகத்தில் அவள் இழந்த  குழந்தையும்,கணவனும் இவளின் வருகைக்கு எதிர்பார்த்திருந்திருப்பார்கள்.  சிதறிக்கிடந்த குழந்தையை வாரி அணைக்கமுடியாத அவளின் ஏக்கம் இப்போது தீர்ந்திருக்கும். இவ்வளவு நாள் எங்கம்மா போனே? என்ற குழந்தையின் கேள்விக்கான பதிலில்தான் உலக மக்களின் யோக்கியதை இருக்கிறது.  அதற்கான விடை அவளிடமிருந்து வந்தாலும் இந்த உலகம் திருந்தவா போகிறது.  எல்லாவற்றிக்கும் விடையை தன்னுள் வைத்துக்கொண்டுதானே  தனது பயணத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

கவலையில்லாத அந்த மனம் சாந்தி  அடையும் அதே வேளையில், இனி இந்தச் சாலையை விலகு விலகு என்று சொல்லி ஒழுங்குபடுத்துவது யாரென்ற எண்ணத்திலிருந்து விடுபற்றிருக்குமா? தெரியவில்லை. இனியொரு பைத்தியக்காரியை யாரும் உருவாக்காமல் இருக்கவேண்டும்.  அதுதான் மனநிலையில் சரியாக இருப்பதுபோல் இருக்கும் மனிதர்களுக்கும் நல்லது.  இவளாவது தனது செய்கையின் மூலம் யார் மனநிலை பாதித்தவர்கள் என்பதை உணர்த்தினாள், இன்னொருமுறை மனிதர்கள் தங்களின் சூழ்நிலையினால் உருவாக்குபவள் நேரடியாகவே உங்களின் மனதிற்கு எதிராகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தால் கண்டிப்பாக விடையிருக்காது.  அந்த விடையை நீங்கள் தேட ஆரம்பித்தீர்கள் என்றால் இந்த உலகைப் பொறுத்தவரையில் நீங்களும் மனநிலை பாதித்தவர்கள்தான்.

அந்த இரண்டு மாலைகளை  போட்டவர்களும், இறுதிச் சடங்கைச் செய்யப் பணம் கொடுத்தவர்களும் இதனை உணர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்.

கடைசி வரை அந்தப் பைத்தியக்காரியின் மனதில் என்னதான் இருந்தது? என்ற கேள்வி, சுடுகாட்டில் இறுதியாகத் தூக்கி எறியப்பட்டு அருகிலிருந்த கருவேல மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவளது அழுக்கு மூட்டையைப் போலவே ஒவ்வொருவரின் மனதிலும் தொங்கி நிற்கும்.  அதே மூட்டைதான் பைத்தியக்காரி இந்த உலகத்துக்கு விட்டுச்சென்ற ஒரே சொத்தும், விடையும் கூட.