சில சோதனைகள்....



   பல வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறேன்...படிப்பு முடிந்தது ..இதற்கு மேல் படிக்க வேண்டாம் என்ற முடிவோடுதான் இந்த ஊர் பயணம்.

   வீட்டில் வழக்கம்போல நான் பத்து கிலோ எடை கூடி இருந்தாலும் எளைச்சி போயிட்டியே என்று சொல்லும் சொந்தங்களின் அன்பில் நனைந்து.என் நண்பர்களை பார்க்க ஊருக்குள் சென்றேன்.

  எல்லோரும் ஒரு நல்ல வேலையில் இருந்தார்கள்.கிராமம் என்பதால் மக்களின் பாசத்துக்கு குறைவிருக்காது.எலோருக்கும் நல்லா இருக்கேன் என்று பதில் சொல்லி ஒருவழியாக நல விசாரிப்புகள் முடிந்து இருந்தது.

   அன்று மாலையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாட்டி நான் அமர்ந்து இருந்த திண்ணையில் என்னோடு அமர்ந்தார்கள்.சிறுவயதில் அவரிடம் கதை சொல்ல சொல்லி நச்சரித்து..ஒரு நிலையில்..என் அம்மாவிடம் வந்து புகார் செய்யும் அளவுக்கு போய் இருக்கிறது...நல்ல கதைகள் சொல்வார்..

என்ன படிப்பு எல்லாம் முடிஞ்சுச்சா?

"ஆமாம் பாட்டி" என்றேன்

"அது என்ன படிப்புப்பா..இப்படி நான்குவருசம் வீட்டிற்கு கூட சரியா வராம இருந்து படிக்கிறது?"

"எப்படி உங்களுக்கு புரியவைப்பேன் பாட்டி" என்றேன்

சரி விடு எனக்கு என்ன தெரியும் அதை பற்றி என்றார்கள்


   "இந்த இயற்கையில் இருக்கின்ற சில விசயங்ளில் இருந்து மூலத்தை பெற்று அதை எப்படி செயற்கையாக மாற்றி  பயனுள்ளதாக உபோயோகிப்பது என்பதை பற்றித்தான்..இதை bio mimicry வகையில் சேர்ப்பார்கள்" என்றேன்.

அதான் இயற்கையில் இருக்குல்லே பின்ன எதுக்கு செயற்கையாக உருவாக்கணும்? என்றார்கள்

காரணம் இருக்கு பாட்டி..இப்போ பாருங்க பறவையை பார்த்துதான் மனிதன் விமானம் படைத்தான் அதில் எவ்வளவு நன்மை என்றேன்


அப்ப நீ படிச்சது இதுதானா....இதைத்தான் எங்கள் காலத்தில் பாட்டாக படிசிட்டுங்களே அந்த பாட்டை படிக்கவா இவ்வளவு நாள் கஷ்ட்டபட்டே? என்றார்கள்


ஆமாம் நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான் என்று மட்டும் அப்போதைக்கு சொல்லி வைத்தேன்

காட்டில் விவசாய வேலைகள் எப்படி போகுது பாட்டி? என்றேன்

   எதுவும் சரியில்லை இப்போது எல்லாம் யாரு விவசாயம் பண்ண விரும்புறாங்க..எல்லாம் டவுன் பக்கம் போகனும்னுதான் ஆசை படுறாங்க.அப்படியே அவங்க செய்ய ஆசைபட்டாலும் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டிங்குது.அதிக சம்பளம் கேட்குறாங்க..என்னமோப்பா இனி இருக்கிற கொஞ்ச நாள் எப்படியோ நல்லபடியா பொய்ரிச்சுனா..நான் நிம்மதியாக போவேன் என்று சொன்ன பாட்டியின் குரலில் சோகம் இருந்தது.

விடுங்க பாட்டி எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் என்றேன்

   இது சரியாகாதுப்பா..உங்களை போன்ற படிச்சவங்க ஏதாவது புதுசா செஞ்சாத்தான் உண்டு இல்லேன்னா இதுக்கும் கிழேதான் போகும்...சரி நீதான் ஏதோ படிச்சு இருக்கியே..இந்த பாட்டிக்காக ஏதாவது செய்யகூடதுப்பா.களை எடுக்க ஆள் கிடைக்க மாட்டிங்குது..எப்படித்தான் விவசாயம் பார்க்கவோ தெரியலை என்றார்கள்

நான் இதுக்கு என்ன செய்ய முடியும் பாட்டி? என்றேன்

   நீதான் சொன்னியே இயற்கையில் உள்ளதை அப்படியே செயற்கையாக நனமைக்காக உபோயோகிப்போம்னு..அதே மாதிரி இந்த ஆடு எப்படி புல்லை திங்குதோ அதே மாதிரி அது காட்டில் இருக்கும் களையை மட்டும் தின்கிற மாதிரி எதையாவது கண்டுபிடிச்சா..களைவெட்டும் வேலை மிஞ்சும் என்றார்

இதை நீங்கள் எளிதாக சொல்லிவிட்டிர்கள் ஆனால் செய்வது கஷ்டம. என்றேன்


சரி நான் கிளம்புறேன் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பினார்கள்

  அன்றைய இரவில் பாட்டி சொன்ன விசயம் மனதில் ஓடியது..என்ன படித்து என்ன செய்ய இந்த மாதிரி மனிதர்களுக்கு உதவவில்லை என்றால் சரியா? ..,,ஏன் பாட்டி சொன்னது போல களை மட்டும் தின்னும் ஆட்டை செயற்கையாக.உருவாக்க முடியாதா?

   மறுநாள் என் நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தபோது..அவர்கள் முதலில் கொஞ்சம் சிரித்து விலகினாலும்...நான் கொஞ்சம் வற்புறுத்த இதில் கவனம் செலுத்தினார்கள்...முதலில் எங்களின் விவாதம் இது முறையாக சாத்தியமா என்பதுதான்.

   சாத்தியம் என்று முடிவானது.அதாவது செயற்கையாக இயங்கும் ஆட்டை உருவாக்கி அதன் முகப்பகுதியில் எந்த வகையான களைகளை அகற்றவேண்டுமோ..அதன் வாசனைக்கு ஏற்ப சில நுகரும் சென்சார்களை பொறுத்தி, அதில் இருந்து பெறப்படும் தகவலை ஒரு PLC (PROGRAMMABLE LOGIC CONTROLLER) ல் கொடுத்து அதன் அடிப்படையில் மற்றவற்றை இயக்குவது...

   அதன் வெளிப்புற உடல் அமைப்பை சில சட்டங்கள் மூலம் அமைப்பது முடிவானது, எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆட்டினை அளக்கவேண்டியது இருந்தது..ஆட்டில் முக்கியமாக கால்களுக்கு இடையே உள்ள தூரம்,அதன் உடலின் அமைப்பு போன்றவற்றை அளந்தோம்.

   அடுத்து இந்த PLC யை எப்படி செயல்பட வைப்பது??...நுகரும் சென்சார் அதற்குரிய வாசனையை உணர்ந்தவுடன் அது தனது தகவலை PLC க்கு அனுப்பும், அதற்கு ஏற்றாற்போல அதன் தலை,கால்கள எப்படி நகர வேண்டும் என்பதை அந்த PLC அதன்  RELAY க்களின் உதவியுடன் அதற்குரிய மோட்டார்களை இயக்கும்.

    மொத்தம் ஆறு மோட்டர்கள்.நான்கு அதன் கால்களுக்கு,ஒன்று கழுத்துக்கு, வாயின் அசைவிற்கு ஒன்று.இந்த மோட்டார்கள் எல்லாம் ஒரு பிரதான PLC தரும் கட்டளையின் கீழ் இயங்கும்..இந்த PLC க்கு பிரதான தகவல்களை கொடுப்பது நுகரும் சென்சார்கள்.தேவையான மின்சாரம் அதன் வயிற்றில் பொருத்தபட்டிருக்கும் பாட்ட்ரியில் இருந்து கிடைக்கும்...அதன் வயிற்றின் வெளிப்புறங்களில் சூரிய ஒளியில இருந்து மின்சாரம் எடுக்க உதவும் சிலேடுகள் பொறுத்தி அதில் இருந்து அந்த பாட்ரி இயங்குமாறு இருந்தது.

    வேலை தொடங்கியது.நாங்கள் தாயாரித்த வரைபடங்களை கொண்டு அருகில் இருந்த சில சிறு தொழிற்சாலைகளின் உதவியில் தேவையானவற்றை உருவாக்கினோம்.

    முதலில் சென்சார் எதுவும் பொருத்தாமல்.வெறும் ஆட்டை மட்டும் நடக்கின்றதா என்று சோதித்தோம்..இரண்டு அடி சென்ற குப்புற விழுந்தது..என்னவென்று பார்த்ததில் அதனால் புவிஈர்ப்பு விசையை சரியாக சாமளிக்க முடியவில்லை...காரணம் அதன் கால்கள அதன் உடலில் இருந்து செங்குத்தாக இருந்ததே ...அதை கொஞ்சம் மாற்றி அதன் உடலில் இருந்து  5 டிகிரி கோணத்தில் அமைத்து பார்த்ததில்..அந்த பிரச்சினை சரியானது...இது கிட்டத்தட்ட புதியதாக பிறந்த ஆட்டு குட்டி நடக்கும் முறை..ஆட்டு குட்டிகள் முதலில் நடைபழக கால்களை அகலமாக வைத்து கொள்ளும்..அதையே செய்தோம்.


    ஒருவழியாக நேராக நடந்தது...அடுத்து அதை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும்..நுகரும் சென்சார்களை அதன் மூக்கு இருக்கும் இடத்தில் பொறுத்தி அதன் இணைப்புகளை அதன் வயிற்று பகுதியில் இருக்கும் PLC யோடு இணைத்து அதில் இருந்து பெறும் தகவல்களை RELAY வுக்கு கொடுத்து அதன் கட்டளையில்  மோட்டர்கள் இயங்குமாறு செய்தோம்.

   ஒரு சில தாவரங்களின் வாசனையை நுகரும் விதத்தில் அந்த சென்சார் இருந்தது,குறிப்பிட்ட வாசனை வந்தவுடன் அந்த தகவல் PLC க்கு போகும் அது உடனே கட்டளை இட்டு அதன் கால்களை இயங்க செய்து அந்த செடிக்கு அருகில் செல்ல செய்யும், அருகில் சென்றவுடன் அடுத்த கட்டளையின் பெயரில் அதன் வாய் திறந்து அந்த களை செடியை பிடுங்கி வயிற்றுக்குள் செலுத்தும்...வயிற்றுக்குள் அந்த களைகளை சேமித்து வைப்பதற்கு பதில் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேளியேற்றுமாறு அமைத்தோம்..

   ஒருவழியாக சோதனை செய்ய ....சில செடிகளை தரையில் அங்கும் இங்கும் பரப்பி..ஆட்டை நடக்க செய்தோம்..கொஞ்ச தூரம் நடந்து நுகர்ந்ததும் சரியாக அதனை உள்ளே இழுத்தது.........அப்படியே தொடர்ந்து நாங்கள் போட்ட எல்லா செடிகளையும் தீர்த்தது.

   இதில் ஒரு பிரச்சினை..பெரிய நிலத்தில்  இதை கட்டுபடுத்துவது என்பதுதான்.இதற்காக அந்த சென்சாரின் நுகரும் தூரம், அதன் ஒரு எட்டுக்கு நகரும் தூரம்  மற்றும் நிலத்தின் மொத்த நீள,அகலம இவற்றை இணைக்க வேண்டியது இருந்தது..

  அதாவது நிலத்தின் நீள,அகல அளவுகளை கொடுத்தால், அதைவைத்து தானாகவே சென்சாரின் நீளவாக்க,பக்கவாக்க நுகரும் தூரம், அது ஒரு எட்டில் நடந்து கடக்கும் தூரம் இவற்றை கணக்கிட்டு எவ்வளவுதூரம் பயணிக்க வேண்டும்..எங்கு திரும்ப வேண்டும்..எங்கு முடிக்க வேண்டும் என்பதை  தீர்மானிக்கும்....அதாவது அதன் காலடிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி அந்த நிலத்தில் எத்தனை சால் செல்ல வேண்டும் அவ்வளவே...இதையும் சோதித்து பார்த்தோம்..சரியாக திரும்பியது..நின்றது..

  ஒருவழியாக அந்த பாட்டியின் நிலத்தில் சோதித்தோம்...சரியாக இருந்தது....அப்ப இது எல்லா களைகளையும் எடுக்கதா? என்று பாட்டி குறைபட்டு கொண்டார்கள்...இல்லை பாட்டி அதுக்கு நிறைய சென்சார்கள் பொறுத்தவேண்டியது இருக்கும் என்று சொல்லி சமாளித்தேன்..


   ஊருக்குள் எங்களின் ஆடு பிரபலம் ஆனது...முதல் சோதனையின் முடிவில் அதன் கால் இணைப்புகளில் சத்தம்வர ஆரம்பித்ததால்..அதற்கு எண்ணை அல்லது கிரீஸ் தடவப்பட்டது..

மறுநாள் சிலரின் ஆசைக்கு இணங்க பகல் முழுவதும் களை எடுப்பில் இருந்தது..

   மாலையில் ஒருவரின் நிலத்தில் களை எடுத்து கொண்டு இருக்க.என் நண்பர்களுடன் சேர்ந்து அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றி பேசிக்கொண்டே கொஞ்ச தூரம் நடந்தோம்.இப்போது அந்த ஆடு மட்டுமே தனியாக தனது வேலையை செய்து கொண்டு இருந்தது.

  சில மாற்றங்கள் செய்யலாம் என முடிவெடுத்து,அந்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சி...அது களையை மட்டும் திண்ணாமல் அங்கு இருந்த பயிர்களையும் தின்று கொண்டு இருந்தது....நண்பன் ஒருவன் ஓடி போய் அதை அணைத்தான்...

மறுநாள் காலையில் எங்கள் வீட்டின் முன் கூட்டம் கூடி இருந்தது..

   உங்கள் மகன் படித்ததை சோதித்து பார்க்க எங்களின் நிலம்தான் கிடைச்சுதா? என்ற வார்த்தைகளோடு அந்த நிலத்துக்காரர் சண்டைக்கு வந்து இருந்தார்.

   நானா உங்கள் நிலத்தில் இந்த ஆட்டை வைத்து களை எடுங்கள் என்று சொன்னேன்..நீங்கள் தான் வேண்டும் என்று என்னிடம் சொன்னிர்கள் இப்பொது ஒரு சிறு தவறு நிகழ்ந்து விட்டது அவ்வளவுதான்என்றேன்

   எது சிறு தவறு..நிலத்தில் உள்ள பாதி பயிர்களை வெட்டி போட்டு இருக்கு இது எப்படி சிறு தவறு என்று அவர் சண்டையை தொடர்ந்தார்...

   அந்த சென்சார்கள் தாவரங்களின் உணவு தயாரித்தலின் போது வெளிப்படும் oxygen யை ஆதாரமாக கொண்டு நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்திருக்கிறது...தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியில மட்டுமே carbon dioxide மற்றும் நீரை வைத்து உணவு தயாரித்து மீதம் இருக்கும் oxygen யை வெளியேற்றும்...ஆனால் இரவில் அது உணவு தயாரிக்க முடியாது என்பதால் அதற்கு தேவையான oxygen யை வெளி காற்றில் இருந்து எடுக்கும்..இந்த நேரத்தில் அதில் இருந்து oxygen வெளியில் வராது... இதனால் அந்த சென்சார்களில் கொஞ்சம் பிரச்சினை ஏற்ப்பட.. தொடர்ந்து தகவலை அனுப்பி எல்லாம் வெட்டுபட்டது.....


   அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் இதுதான் என் ஆடு செய்த தவறுக்கு காரணம் என்று.. அந்த ஆள் இன்னும் சண்டையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார் அந்த ஆடு அமைதியாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.. என்ன நடக்கின்றது என்று தெரியாமல்...


  

7 comments:

ஆனந்தி.. said...

கணேஷ்! இந்த கதையை இப்போ தான் படிக்க முடிஞ்சது...அந்த ஆட்டை உருவாக்கும் ஒவ்வொரு வரியையும் என்னாலே கற்பனை பண்ணி பார்க்க முடிஞ்சது..அந்த அளவுக்கு தெளிவாய்...எளிதாய்...விளக்கமாய்..சுவாரஸ்யமாய் இருந்தது எழுத்து நடை...முடிவு கூட வித்யாசமா இருந்தது....வெரி குட் கணேஷ்....

கணேஷ் said...

உங்களின் கருத்துக்கு நன்றி..

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆட்டை உருவாக்கி அதன் முகப்பகுதியில் எந்த வகையான களைகளை அகற்றவேண்டுமோ..அதன் வாசனைக்கு ஏற்ப சில நுகரும் சென்சார்களை பொறுத்தி, அதில் இருந்து பெறப்படும் தகவலை ஒரு PLC (PROGRAMMABLE LOGIC CONTROLLER) ல் கொடுத்து //

இதற்கு பதில் அந்த செடியின் வாசனை பதிவு பண்ணிட்டா அதை தவிற மத்த எல்லாத்தையும் அழிச்சிடுமில்ல? எல்லா பயிர்களின் வாசனையும் அதில் பதிச்சி வச்சிட்டா சுலபமா எல்லா வயல்லையும் பயண்படுத்தலாமில்ல? ரொம்ப நாள் அப்புறம் ஒரு நல்ல கதை... :)

கணேஷ் said...

அட்பவமே இது ஒரு வருஷம் முன்னாடி எழுதினது ))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆட்டை நுகரவைக்கிறதுதான் சிரமம் போல.... மரபணு மாற்றம் மூலமா நிஜ ஆட்டையே களை திங்க வெச்சிட்டா என்ன?

கணேஷ் said...

செய்யலாம்...ஆனா குறிப்பிட்ட புல்லை மட்டும் தின்கிற ஆட்டை உருவாக்குவதும் கஷ்டம்தானே ))

Madhavan Srinivasagopalan said...

அட.. இந்த புள்ளையப் பாரு..
உண்மையிலே ரொம்ப படிச்ச புள்ளை போல..