அவர்களும் அப்படித்தான் -1



முந்தையப் பகுதியின் கதை "அவர்களும் அப்படித்தான்"

  
       “அப்போ கணவன் மனைவி இல்லேன்னா திரும்பி பூமிக்கு அனுப்பிருவிங்களா என்ன?”என்றேன் சந்தோசம் கலந்த குரலில்.

   “கண்டிப்பாக இல்லை, ஒருமுறை இங்கு வந்துவிட்டால் திரும்பி நானே போய் விட்டால்தான் உண்டு”

“இருந்தாலும் நாங்கள் கணவன் மனைவி இல்லையே?”


“அதான் எதோ சொன்னியே காதலி என்று பின்னே அது என்ன உறவு?”

  “அது வேறு திருமணத்துக்குப் பிறகுதான் மனைவி உறவு வரும் இப்பொது வெறுமனே நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். இனிதான் திருமணம் செய்ய வேண்டும்.”

“அப்போ காதலின்னா திருமணத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும் ஒரு சடங்கா உங்கள் இனத்தில்?”

  “அது எதுக்கு உனக்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் உங்கள் சோதனை கிரகம் வரும் அங்குப்  போய் விட்டபிறகு உன்வேலை முடிந்தது அவ்வளவுதானே?” கொஞ்சம் விரக்தி கலந்த கோபத்தில் கேட்டேன்.

“இதோ வந்து விட்டது சில நிமிடங்களுக்குள் நீ இறங்கலாம்”

அவளைப் பார்த்தேன் அங்கு நடப்பவைக்கும் அவளுக்கும் எந்தச்  சம்பந்தமும் இல்லையென்பது போல உட்கார்ந்துகொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே?”

“ஒண்ணுமில்ல” என்றாள் சோகமாக

“உடம்புக்கு ஏதும் பண்ணுதா? இந்த இடம் ஒத்துக்கலயா என்ன?”

‘அதெல்லம் ஒண்ணுமில்ல விடு”

“அப்போ ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“பின்னே இங்கே வந்து சந்தோசமா இருக்கச் சொல்றியா என்ன?”

   என்னிடம் பதில் இல்லை. அவள் சொல்வது சரிதான், நாங்கள் இருக்கும் நிலையில் நானும் கவலைப் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனாலும் என்னிடம் இருந்த கொஞ்ச விளையாட்டுத்தனமான குணம் இந்தப்  பயணத்தையும் ஒருவாறு ரசிக்க வைத்து இருக்கிறது. உண்மையில் அந்த விமானத்தில் ஏறும்போது இருந்த கவலையான, பயம்கலந்த மனநிலை இப்போது எனக்கு இல்லை.அந்த புதிய விண்கலம், அது இயங்கும் விதம், அந்த வேற்றுகிரகவாசி,எல்லாமே புதிய ஆர்வம் கலந்த விசயாமாகப்  பட்டதால் எனக்குள் இந்த மாற்றம். ஆனால் அவள் இன்னும் அதிக கவலையாக இருந்தாள். என்னுடன் பேச விருப்பமில்லை அவளுக்கு.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அது..

“என்ன சொல்கிறாள் உன் காதலி?” என்றது

“அது உனக்குத் தேவையில்லை.” என்றேன்

   “உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், நீங்கள்  ஏதும் சொல்லாமல் என்னால் உங்கள் மனதில் உள்ளவற்றை அறியமுடியும் என்று?”

“அப்போ அப்படியே அறிஞ்சிக்கோ”

“இப்போ என்ன உன் காதலி என்ன நினைக்கிறாள் என்பது உனக்குத்  தெரிய வேண்டும் அவ்வளவுதானே?”

  நான் ஏதும் பதில் சொல்லாமல் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அதன் முகத்தைப் பார்த்தேன். என்னில் இருந்த அதே அளவு ஆச்சரியம் அவளிடமும் இருந்தது. அவளும் அதன் முகத்தையே பார்த்தள் என்ன சொல்லப் போகிறது என்று.

  “சொல் சொல்லட்டுமா? உங்களின் அனுமதி இல்லாமல் ஒருவரின் மனதை ஒருவருக்கு வெளிப்படுத்துவது எனக்கு நாகரிகமாக இல்லை அதான் உன்னிடமே அனுமதி கேட்கிறேன்” என்றது

“சொல்” என்றேன் தயக்கமாக

    “இப்போது மட்டுமில்லை இந்த விண்கலத்தில் ஏறியதில் இருந்தே அவளின் மனதில் ஒரே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, அதுவும் முழுதும் உன்னைப்பற்றித்தான். உன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறாள் போல, இந்த பயணம் அவளது பல கனவுகளை சிதைத்து இருக்கிறது. அதில் முக்கியமாக உன்னோடு சேர்ந்து சந்தோசமாக வாழும் ஒரு வாழ்க்கை. நிறைய கனவுகள் அவளுக்கு எல்லாவற்றையும் ஒருமுறை நினைத்துப்பார்த்து நிறைவேறாத ஒரு முடிவில் மனதில் தானே அதனை அழித்துக்கொண்டு இருக்கிறாள்.”

   அவளைப் பார்த்தேன் கிழே பார்த்தபடி கண்களை பார்க்க மறுத்தாள். தொண்டையில் எச்சில் விழுங்கும் அசைவைத் தவிர வேறொரு எந்த அசைவும் இல்லை. அழுகப் போகிறாள் என்பது தெரிந்தது.

  “இன்னொரு விசயம் உன் காதலி என்னிடம் இருந்து எப்படித்  தப்பிக்கலாம் என்றெல்லாம் யோசித்து நான் எப்படி இந்த விமானத்தை இயக்குகிறேன் என்பதைத்  தொடக்கத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு இருக்கிறாள். இதுக்கும் காரணமும் நீதான். நான் சொன்னது போல உன்னுடன் வாழ வேண்டும் என்ற அதீத ஆசையே அவளை இவ்வாறு செய்தத் தூண்டியுள்ளது, ஆனால் அது வெறுமனே மனதில் இருக்கிற வரையில் உங்கள் இருவருக்கும் எந்தப்  பிரச்சினையும் இல்லை. செயல்படுத்த முயன்றால் நீங்களே உங்களின் அழிவைத் தேடும் ஒரு முயற்சி.

  “இப்ப மட்டும் என்ன நாங்க இங்கே சந்தோசமாக வாழவா போகிறோம் இல்லன்னா நீதான் எங்களை சந்தோசமாக வாழவைக்கப் போறியா?”

   “இங்கு உங்களுக்கு எந்தப்  பிரச்சினையும் இல்லை மரணம் வரையில் உங்கள் இஷ்டம், எப்படி வேண்டுமானலும் வாழலாம். அதுவும் சுதந்திரமாக நீங்களே உங்களுக்கு ஏதாவது ஒரு கட்டுப்பாட்டையோ விதிகளையோ ஏற்ப்படுத்தாதவரை”

   எதுவும் பதில் சொல்லவில்லை. முன்புபோல அதனுடன் பேசும் ஆர்வமும் இல்லை. எல்லாமே எனக்கு கொஞ்சம் மறினதுபோல இருந்தது அவளின் கவலைகளைக்  கேட்டதில் இருந்து.

    அவளைப் பார்க்க எனக்குள் ஏதோமாதிரி இருந்தது.ஊரில் இருந்தக்  காலத்தில் அப்படியொன்றும் என்னுடன் பேசியதில்லை எதிர்காலத்தைப் பற்றி. ஏன் அன்பைக்கூட வெளிப்படையாகக்  காட்டியது இல்லை. மௌனம் அல்லது வெட்கம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அணிந்து மறைத்தே வைத்தாள். நான்தான் அவளைக்  காதலிக்கிறேன் என்ற பெயரில் அதிகமாகத்  தொந்தரவு செய்து இருக்கிறேன்.

    அவள் பேச இயலாதத் தருணங்களில் புரிந்துகொள்ளாமல், என்மேல் உனக்கு காதல் இல்லை ஒன்றுமில்லை என்று சொல்லி அவளை அழவைத்து இருக்கிறேன். அப்படியிருந்தும் மறுபடியும் அவளே என்னிடம் வரும் காரணத்தை இப்போது புரிந்துகொள்ள முடிந்தது என்னால்.

 இந்த சிந்தனைகள் மனதில்  இருக்கும்போது......

    விண்கலம் ஒருசிறிய அதிர்வுகளுடன் சிறியச்  சத்தத்தை எழுப்பியது. பயம் கலந்தப்  பார்வையில் இருவருமே அந்த உருவத்தைப்  பார்க்க...

   “அந்தக்  கிரகம் வந்துவிட்டது இறங்குவதுக்கு முன் இந்தக்  கிரகத்தின் தட்பவெட்ப நிலைக்கு உங்களின் உடம்பை கொண்டுவரவேண்டும்” என்று சொன்னபடி இருக்கையில் இருந்து இறங்கிய அது தள்ளியிருந்த பொத்தான்களை தட்டியது.

“எங்களை இறக்கிவிட்டவுடன் உன் வேலை முடிந்ததா? தனியாக விட்டுவிட்டு போய்விடுவாயா?” என்றேன்

   “இல்லை உங்களுக்கு இந்த கிரகத்தைப் பற்றி சில அடிப்படைத் தகவல்களை சொல்லிவிட்டு சிலகாலம் உங்களைக்  கண்காணிக்கும் பணி  எனக்கு உண்டு” என்றது.

இப்பொது அந்த விண்கலத்தில் குளிர் பரவி, வெளிச்சம் மங்கிய நிலையில் பூமியின் மாலை நேரம் போல இருந்தது.

  வெளியே போகலாம் என்று சொன்னபடி கதவைத்திறந்து விட சிறிய சப்தத்துடன் திறந்த கதவின் வெளியே இருந்து சில்லென்று காற்று எங்களின் மீது மோதியது.

   அங்கேயும் கொஞ்சம் இருட்டுதான். குளிர்ந்தக்  காற்று பட்டவுடன் இதுவரையில் விண்கலத்தில் இருந்த எங்களின் கண்களில் கொஞ்சம் கண்ணீர் வழிந்தது. அதுதான் முதலில் இறங்கியது.தொடர்ந்து நான் இறங்கினேன்.என் கையை அவள் பிடித்துக்கொண்டு பின்னால் வந்தாள்.

    இறுக்கமில்லாத சாம்பல் போன்ற மண்ணில் கால் பதிய நடந்தோம். காற்று திசை மாறாமல் ஒரே சீராக வீசுவது போல இருந்தது. அங்கு நிலவுவது இரவா பகலா என்பதை அறிய வானத்தைப்  பார்த்தேன், வெள்ளிகள் தூரத்தில் மினுங்கின. இரவாக இருக்கலாம்.ஆனாலும் கொஞ்சம் வெளிச்சமாகவே இருந்தது. ஒருவேளை இப்போதுதான் அந்தக் கிரகத்தின் நட்சத்திரம் நாங்கள் இருக்கும் இடத்தைக் கடந்து போய் இருக்கலாம்.,

அது ஒரு இடத்தில் நிற்க நாங்களும் நின்றோம் சுற்றிப் பார்த்தது அது.

“இங்குப்  பக்கத்தில் நீங்கள் தங்குவதுக்கு எல்லா காரணிகளும் சரியாக இருக்கும்படி ஏதாவது இரு இடத்தைப்  பார்க்கவேண்டும்” என்றது

“அப்போ நீ எங்க தங்குவே?”

“என் விண்கலத்தில்”

“அப்போ நாங்கள் மட்டும் ஏன் வெளியில் தங்கவேண்டும்?”

“மறந்துவிட்டியா நீங்கள் இனிமேல் இங்குதான் இருக்க வேண்டும்”

   சொன்னவுடன் ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தது. அது என்ன திசை என்று யூகிக்க முடியவில்லை. அதுக்கு அந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தைச் சுற்றும்   ஒரு சுழற்சியைப்  பார்த்தால் போதும், நமது பூமியைப்  போல உதிக்கும் திசை கிழக்கு என வைத்துக் கொண்டால் மற்ற திசைகளைக் கணிப்பது எளிது.ஆனால் எங்கு தேடியும் நிலவு இல்லை. அவள் மட்டும் நல்ல மன நிலையில் இருந்தால் இந்நேரம்..

இங்கு நிலவு இல்லை- ஆனால்
நீயிருக்கிறாய் எனக்கு..

   என ஏதாவது மொக்கையாக ஒரு கவிதையைச் சொல்லி அவளைச் சந்தோசப்படுத்தி இருப்பேன். இப்போது அவள் இருக்கும் நிலைமையில் இதைச்  சொன்னால் என்னை விட்டுவிட்டு அந்தக்  கிரகத்தில் தனியாக கிளம்பினாலும் கிளம்பிவிடுவாள்.

    தூரத்தில் அடர்ந்த காடுகள் போல இருந்ததன. ஆனாலும் இதுவரையில் தரையில் சிறு செடிகளோ புற்களோ தென்படவில்லை. அது அந்த இடத்தை நோக்கி நடந்தது. மரங்கள் அசையவில்லை அங்கு நிலவிய வீசி அடிக்கும் காற்றிலும். அருகில் நெருங்கியிருந்தோம். அவள் அந்தக் காட்டை மட்டும் பார்க்காமல் எல்லாபக்கமும் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். எதுவும் பேசவில்லை இன்னும். அது எங்களை வழிநடத்த அதன் பின் இருவரும் சென்று கொண்டு இருந்தோம். கொஞ்சம் அருகில் போனபோதுதான் தெரிந்தது எந்த மரத்திலும் இலைகள் இல்லை என்று. வெறுமனே கிளைகளோடு மரம் நின்று போயிருந்தது. அங்கு காற்று வீசும் சப்தம் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. சிறு பூச்சிகள், பறவைகள் என எந்த ஜீவனும் இருப்பதாக அறிகுறிகள் இல்லை.

அது ஒரு இடத்தில் நின்றது. சுற்றியும் பார்த்துவிட்டு..

“இப்போதைக்கு இந்த இடம் எனது தேர்வு உங்களுக்கு” என்றது.

“இப்படியேவா தங்குவது?”

  “இல்லை நான் உங்களுக்கு கூடாரம் அமைத்துத் தருவேன். அதுக்குத்  தேவையான பொருள்களை விண்கலத்துக்குச் சென்று எடுத்துவருகிறேன் நீங்கள் எங்கும் நகராமல் இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

   அது போகும்வரை அதனையே பார்த்துக் கொண்டு இருந்த நாங்கள் திரும்பி மரங்களுக்குள் பார்வையைச்  செலுத்தினோம். கொஞ்சம் உயரமான மரங்கள் நமது பூமியில் தென்னை மரங்களுக்கு இடையில் கிளைகள் முளைத்தால் எப்படி இருக்கும் அது மாதிரி. பார்த்ததில் எல்லா மரங்களும் ஒரே ரகம் இல்லை என்பது தெரிந்தது.

  அவள் தரையில் உட்கார்ந்தாள். நானும் சற்றுத்தள்ளி அமர்ந்தேன். அவளைப் பார்க்கவில்லை. தலையைக்  கவிழ்த்து முனங்கால் மீது வைத்து எதையும் பார்க்க இஷ்டம் இல்லாதது போலத்  தன்னை வெளிப்படுத்தினாள்.

“ஏன் பேசமாற்றே?”

தலை நிமிர்ந்தவள் “என்ன பேச?”

“என் மீது என்ன தப்பு இருக்கிறது எல்லாமே எதோ நடப்பது போல நடந்து கொண்டிருக்கிறது”

“நான் உன்மீது தப்பு என்று எப்போ சொன்னேன்?”

“பின்னே ஏன் இப்படி பேசாமல் கொல்கிறாய்?”

  “நடப்பது எப்படியோ நடந்துவிட்டுப்  போகட்டும் ஆனால் நீ அதை எப்படி எதிர்கொள்கிறாய் என்பதில்தான் என் கோபம், இதில் உனக்கு ஒரு சந்தோசம், ஆர்வம் நீ படித்த அறிவியல்புனைவு கதைகளை உன் கண்முன்னால் அப்படியே விரிகிற உணர்வு உனக்கு அதைத்தவிர வேறொரு எண்ணமும் உனக்கில்லை அப்படித்தானே?”

    கிட்டதட்ட அவள் சொல்வது உண்மைதான்.தொடக்கத்தில் இருந்து நடப்பவை எல்லாமே நான் கற்பனையில் சிந்தித்துப்  பார்த்தவைகள் மட்டுமே. அது இப்போது எனக்கே நிகழும்போது  ஆர்வமாக எதிர்கொள்ள முடியுதே தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை. ஆனால் என்னோடு அவள் இருக்கிறாள். என்னைக்  காதலிக்கிறாள், திருமணம் செய்யவேண்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள். இதை நான் மறந்திருந்தேன். அவள் சொல்ல வருவதும் அதுதான் அந்த எண்ணம் இருந்திருந்தால் எப்படி இந்த பிரச்சினைகளில் மீள்வது என்பதை யோசிக்கத் தோன்றியிருக்கும்.

   இப்போது யோசித்தாலும் பயனில்லை என்றே தோன்றியது. கிரகம் வந்தாயிற்று. இன்னும் சில நாட்களில் அந்த வேற்றுகிரகவாசி எங்களைத்  தனித்து விட்டுச் சென்றுவிடலாம். அதுக்குப் பிறகு எங்களால் தப்பிக்க முடியாது. அதே நேரத்தில் இதே கிரகத்தில் எவ்வளவு நாட்கள் நலமுடன் எங்களால் வாழமுடியும் என்பதும் எங்களுக்குத்  தெரியாது.

“சரி இப்போ என்ன செய்ய சொல்லு?”

“ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிதான் இப்படிக்  கேட்குறியா?”

“சரி உண்மைக்கே அது சொன்னது போலத்  தப்பிக்கணும்னு யோசிச்சியா என்ன?”

“ஆமாம்”

“எந்த எண்ணத்தில் அப்படி  யோசிச்சே? எல்லாமே நமக்குப்  புதுசு? என்ன தெரியும் நமக்கு?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது எனக்குத் தேவை திரும்பிப்  போகவேண்டும்”

“இனி சாத்தியமில்லையே”

“அப்போ இங்கயே கிடந்து சாகலாம்”

“ஏன் இப்படிச் சொல்றே?”

“வேறெப்படிச் சொல்ல?”

“சரி தப்பிக்கலாம் ஆனால் அதன் முன்னாடி நாம் இருவருமே இதைப்பற்றி எப்போதுமே நினைத்துப் பார்க்ககூடாது”

“எப்படி தப்பிக்க இந்தக்  கிரகத்தில் இருந்து அப்படியே நமது பூமிக்கு குதிக்கச்  சொல்றியா?”

“அப்படி இல்ல எதாச்சும் ஒரு வழி இல்லாமலா போய்டபோகுது” என்றேன் நம்பிக்கையில்லாமல்.

  அதக்குள் அது நிறையா பொருள்களை ஒரு வண்டி போன்ற ஒன்றில் எடுத்து வந்தது. அந்த மரங்களுக்கு பக்கத்தில் அதை வைத்தது. சிலவினாடிகளில் அந்த வண்டியே ஒரு கூடாரமாக மாறியிருந்தது.

“இது ஒரு சிறு வண்டியோடு இணைக்கப்பட்ட கூடாரம் நீங்கள் எளிதில் பயணிக்க நாங்கள் உங்களுக்கு அளிக்கும் தொடக்கக் காலச் சலுகை” என்றது.

“நாங்கள் அந்தக்  கூடாரத்தையேப்  பார்த்துக் கொண்டிருந்தோம்.

“என்ன மறுபடியும் தப்பிக்க எண்ணம் வருகிறது போல?”

   திக்கென்றது மனதில் நினைப்பதை மட்டும்தானே அறியமுடியும் என்றது இப்போது எப்படி பேசிமுடித்ததைச்  சொல்கிறது என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது..

“இப்போது இரண்டு பேருமே சேர்ந்து பேசி இருக்கீங்களா என்ன?”

   எங்களிடம் ஏதும் பதில் இல்லை என்பது போல இருந்தோம். நீதான் இப்போது தப்பிப்பதைப்  பத்தி யோசிச்சியா? என்பதைப் போல அவளை பார்த்தேன் அவளும் அதை ஆமோதிப்பது போலத்  தலையைக்  குனிந்தாள்.

  “சரி தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் இருப்பதாக நீங்கள் யோசித்து இருக்கிறீர்கள் என்பதைச்  சொல்லுங்கள் நான் அது தேறுமா? தேறாதா? என்பதை இப்பயே சொல்லுகிறேன்” என்றது

  அதே அமைதி எங்களிடத்தில் உண்மையில் எப்படித்  தப்பிப்பது என்பதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

அது மீண்டும் கேட்டது..

“எப்படி தப்பிக்கப்  போறீங்க?”

தொடரும்...



அவர்களும் அப்படித்தான்

    நீங்கள் மதுரையில் இருந்து தூத்துகுடிக்குத் தரைவழியாகச் செல்லும்போது எப்படியும் கண்டிப்பாக அந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். சொல்லவேண்டும் என்றால் இந்த இரண்டு ஊருக்குச் சரியாக நடுவில்தான் அந்தக் காட்டாறு இருக்கிறது.  முன்பெல்லாம் வருடம் ஒருமுறையாவது மழை பெய்யும் காலங்களில் தண்ணி பெருக்கெடுத்து ஓடும்.இப்போது அவ்வளவு மழையும் இல்லை அந்த ஆற்றில் சரியாக நீரும் வருவது இல்லை. மணல் திருட்டைத்  தவிர வேறொன்றும் அந்த ஆற்றில் இப்போது இல்லை.

     உங்களுக்குக் கொஞ்சம் வரலாறு தெரிந்து இருந்தாலே, உலகில் எல்லா வளர்ந்த நாகரிகமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இந்த மாதிரியான சில முக்கியமான ஆற்றுபடுக்கைகைளில் இருந்துதான் வந்து இருக்கின்றன என்று தெரிந்து இருப்பீர்கள்.

     அந்த ஆறு சுற்றி ஓட அமைந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் நானும்.வீட்டில் இருந்து இரண்டு நிமிடத்தில் நடந்தால் ஆற்றில் இறங்கலாம்.சில விசயங்களை எவ்வளவுதான் திறமையாக வார்த்தைகளில்,எழுத்துகளில் கொண்டுவர முடிந்தாலும் அது நிறைவாக அமைந்துவிடுவது இல்லை.அதில் ஒன்றுதான் இந்த ஆற்றோடு நான் பகிர்ந்து கொண்ட சந்தோஷமான தருணங்களும்.

      சிறுவயதில் விளையாடி,குளித்து,தனிமையில் உடகார்ந்து அதோடு என் உறவை வளர்த்திருந்தேன்.இப்போதும் அருமையான ஒரு விசயத்துக்கு அதை உறவு கொண்டாடுகிறேன்.காதலிக்க. ஆம் என் காதல் தொடங்கியும், நடந்து கொண்டிருப்பதும் அதில்தான்.

     அவள் பக்கத்து தெருதான் தூரத்துச் சொந்தம். சிறுவயதில் நான் தோமே என்று உட்கார்ந்து இருந்தாலும் அவளின் சேட்டைகளை ரசித்தவன். அப்போது அதைவிட வேறென்றும் இருந்ததில்லை. கல்லூரியில் படிக்கும்போதுதான் மாறியிருக்கிறோம். அவள் வேறு கல்லூரி. வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவோம். சந்தித்துக்கொள்ள இருந்த தயக்கம்,வெக்கம் எல்லாமே இருவருக்கும் புதியதாக இருந்தது. அவள் சொந்தமாக இருந்தும்.

     ஒரு கட்டத்தில் இருவரும் காதலை உறுதிபடித்தியபிறகு மீண்டும் நாங்கள் சிறுவயதில் இருந்து வாழ ஆரம்பித்தோம் என்றே சொல்லவேண்டும். அவள் ரசித்தவை,நான் ரசித்தவற்றில்  அந்த ஆறு பொதுவாக இருந்தது. இப்போதும் நண்பர்களோடு போவதுபோல ஆற்றில் சென்று தனிமையில் அமர்வது ஏதோவொரு தனிச்சுகம் இருவருக்கும். காதலின் கொஞ்சல்கள்,கெஞ்சல்கள்,சண்டைகள் என எல்லாவற்றையும் அந்த ஆறு கேட்டு இருக்கும்.

      இந்த விடுமுறைக்கும் வந்து இருந்தாள். சாயங்காலம் போகவேண்டும் என பேசியிருந்தோம். நாங்கள் மட்டும் போகமுடியாது என்பதால் அதுக்கு இரண்டு நண்பர்களை சேர்த்துக் கொள்வது வழக்கம்.அன்றும் அப்படியே போனோம்.
பார்த்த பத்துநிமிடத்துக்கு முகம் முழுதும் வெட்கத்தை வைத்து இருந்தாலும் எப்போதுமே அவளின் கண்களில் வெட்கம் இருக்கவே செய்யும். ஏனென்று கேட்டால் இதுவரை சிரிப்பை தவிர எனக்கு ஏதும் பதில் கிடைத்ததாக நினைவில்லை.

“அம்மா விடவே இல்ல தெரியுமா?” என்றாள்

“ஏன்?”

“தெர்ல எப்படியோ சொல்லிட்டு வந்துட்டேன் உனக்கென்ன யாரு கேட்கறாங்க?”

“எனக்கென்னமோ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சிருச்சி போல ஆனா ஒன்னும் கேட்கல”

“அடப்பாவி என்னடா சொல்றே?”

“இதுல என்ன இருக்கு என்னைக்காச்சும் தெரிஞ்சுதானே ஆகனும் அது இப்பயே தெரிஞ்சிட்டு போகுது”என்றேன்
.
“நீ சொல்றே ஆனா எனக்குப் பயமா இருக்கு”

      கொஞ்ச தூரத்துக்கு எதுவும் பேசவில்லை.காற்று மெதுவாக வீச நடந்து கொண்டு இருந்தோம்.கொஞ்சம் இருட்ட தொடங்கியிருந்தது.மணல் திருட்டால் ஆற்றை காயபப்டுத்தி இருந்தார்கள். அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் உட்கார்ந்தோம்.

     அப்போது எங்கள் கண்ணில் பட்டது எதிர்த்திசையில் கொஞ்ச தூரத்தில் ஒளியில் மிளிர்ந்த ஒரு கூடாரம். இங்கு இருந்து பாக்க அப்படித்தான் தெரிந்தது.எங்கள் இருவருக்குமே தெரியும் யாரும் அங்கு வந்து தங்கியிருக்க மாட்டார்கள் என்று. அதற்கு அவசியம் இல்லை. அப்படியென்றால் அந்த கூடாரம் போன்ற இடம்???

“என்னது அது புதுசா?”

“கூடாரம் மாதிரி இருக்குல?” என்றேன்

“ஆமாம் இங்கு வந்து யாரு இருக்கப் போறா?”

“ஒருவேளை ஆடு மேய்க்கிரவங்க கெடை போட்டு இருப்பங்களோ?” கேட்டாள்

“அப்படியே இருந்தாலும் இந்த நடு ஆத்தில் மின்சாரம் எப்படி இருக்கும்?”

   இருவரும் அங்குபோய்ப் பார்க்க முடிவெடுத்து நடந்தோம். அது எங்கள் சொந்த கிராமம் அதோடு அருகில் இருக்கிற கிராமத்து மக்கள் கொஞ்சம் பரிச்சியமானவர்களே அதனால் பயமோ,தயக்கமோ இல்லை.

    அருகில் சென்ற போதுதான் தெரிந்தது அதன் முழு உருவமும். ஏற்கனவே அது ஒரு மண் அள்ளப்பட்ட குழியில் இருந்தது. அண்டார்டிக்காவில் குளிருக்குத் தற்காலிகமாகப் போடப்படும் கூடாரம் போல இருந்தது.ஆனால் அளவில் பெரியது. ஆள் நடமாட்டம் இல்லாமல் விளக்கு மட்டும் சுற்றி எரிந்து கொண்டு இருந்தது. நாங்கள்தான் முதலில் பார்க்கிறோமோ அல்லது இதுக்குமுன் யாராச்சும் பார்த்து இருப்பார்களோ தெரியவில்லை.

     இன்னும் அருகில் சென்றவுடன் அந்தச் சத்தம் கேட்டது. அது ஒரு இயந்திரம் அமைதியாகத் தூரத்தில் ஓடுவதுபோல ம்ம்ம்ம் என்ற அழுத்தமான சத்தம்.ஆள் நடமாட்டம் தெரியவில்லை.கொஞ்சம் இருட்டியிருந்தது.அவள் என் கையை பிடித்தாள். ஆச்சர்யம், சந்தோசம் பிடிக்கச் சொன்னால்கூட வேறெங்கோ பார்வையைப் பார்த்துவிட்டு ஏதும் கேட்க்காதது போல இருப்பவள் இப்போது பிடித்து இருந்தாள் காரணம் பயம்.

  எனக்கும் பயம் இருந்தது. அவளின் பரிசத்தில் கொஞ்சம் சந்தோசமாக மாறியதில் அது தெரியவில்லை.

“வா போய்டலாம், நேரம் அதிகமாயிடுச்சு” என்றாள் உள்ளே போகவேண்டாம் என்ற எண்ணத்தில்.

“இரு என்ன இருக்குனு பார்த்துட்டுப் போய்டலாம் நம்ம ஊருல இப்படி என்ன இருக்கு?”

“வேண்டாம் எனக்குப் பயமாக இருக்கு ஏதாவது நடந்துரப் போகுது” இன்னும் அழுத்தமாக கையை பற்றி இழுப்பதுபோல.

     உள்ளே எட்டிப்பார்த்தேன் அந்தக் கூடாரம் முழுதும் ஒரே அறையாக இருந்தது. தனியறை என்று எதுவும் இல்லை. அது நான்கு அடி உயரமுள்ள ஒரு இயந்திரம் போன்ற பகுதியின் மீது இருந்தது.அதில் இருந்துதான் சத்தம் வந்து கொண்டு இருந்தது. உள்ளே இன்னும் வெளிச்சமாக இருந்தது. ஆட்கள் யாரும் இல்லை

       கதவிடுக்கில் உள்ளே எட்டிப்பார்த்தபடியே திறந்து உள்ளே போனோம்.அவளும் உள்ளே வந்தாள் பயந்தபடியே.
முதலில் தென்பட்டது ஒரு சிறிய சுவர் போன்ற பகுதியில் வயர்கள் விரவிகிடந்த சில கணினிகள் உள்ள இடம்.அதில் யாரோ உட்கார்ந்து இருப்பதுபோல இருக்கவே இன்னும் எங்களுக்குப் பயம் அதிகமானது. காரணம் அதன் உருவமும் அது உட்கர்ந்து இருந்த விதமும்தான். எல்லாக்  கணினி திரையிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே வரைபடமாக இருந்தது. கூடாரத்தின் மற்றப் பகுதியில் சிறு செவ்வக வடிவ பெட்டிகளாக இடத்தை அடைத்து இருந்தன. அங்கு அந்த உருவத்தைத் தவிர வேறு ஏதும் இல்லை மனிதர்களாகச் சொல்லும்படி.

        அது நாங்கள் வந்ததை உணர்ந்து இருக்கவேண்டும். எந்தவித சலனமும் இல்லாமல் சாதாரணமாகவே அது திரும்பியது. அப்போது அதன் முகத்தை எங்களால் பார்க்க முடிந்தது. அது மனித இனம் இல்லை எங்களைப் பார்த்ததில் எந்தவித உணர்ச்சியையும் அதன் முகத்தில் பார்க்க முடியவில்லை அல்லது அது காட்டவில்லை.

      முகம் என்று சொன்னால் நம்மைப் போன்று அமைப்பு இருந்தாலும் அளவு,உறுப்புகளின் வடிவம் அனைத்தும் வேறு. மூக்கு வெளியில் இல்லாமல் வெறுமனே துளை மட்டுமே இருந்தது. சப்பையாக இருந்தும் வாய் இருக்கும் இடத்தில் கொஞ்சம் தடிமனான உதடு இருப்பது தெரிந்தது.
அவள் என்கையை இழுத்துகொண்டு ஓட முயற்சிக்கும்போது கதவு மூடியது. திரும்பும் நேரத்தில் அது எங்களின் அருகில் வந்திருந்தது. இறுக்கமான நீச்சல் உடைபோல ஏதோ ஒன்று அதன் உடம்பில் தெரிந்தது. உண்மையான தோல் நிறத்தை பார்க்கமுடியவில்லை. கண்களில் இமை இல்லை கருவிழி எது என்று பிரித்து அறிய முடியாத எதோ ஒரு நிறத்தில் இருந்தது. அது முகத்தை எங்களின் பக்கம் திருப்பி வைத்ததில் இருந்து அது எங்களைத்தான் பாக்கிறது என்பதை உணர்ந்து அசையாமல் நின்றோம். இதுவரை அவளின்  முகத்தில் வெட்கத்தைப் பார்த்தவன் முதன்முறை கலவரத்தைப் பார்க்கமுடிந்தது.

“யார் நீங்க ஏன் இந்த வேஷம் போட்டு இருக்கீங்க? என்ன செய்றிங்க இங்க?” என்று கொஞ்சம் பயம் கலந்த குரலில் கேட்டேன்.

     கொஞ்சம் அமைதி அதன் உடம்பில் எந்த அசைவும் இல்லை. எதோ பயத்தில் பேசிவைத்தேன் அதுக்கு என்பாசை புரியுமா? அல்லது அதால் பேசமுயடியுமா? என்பது கூடத் தெரியாமல்.

“அது உனக்குத் தேவை இல்லாதது” அது சொன்னது. குரல் மெல்லியதாக ஒரு மனிதன் குரல் போல இல்லாமல் செயற்கையாக இருந்தாலும் அதுக்கு எப்படித் தமிழ் தெரிந்தது என்ற ஆச்சர்யத்தில் இருக்கும்போது...

“எனக்கு நீங்கள் பேசும் மொழி ஒரு பிரச்சினை இல்லை” என்றது.

“மனிதனா?” கேட்டேன்

“இல்லை”

“அப்போ?’

“அதான் சொன்னேனே தேவை இல்லை என்று”

“சரி கதவத்  திறங்க நாங்கள் போகிறோம்” என்றேன்

“நீங்கள் போக முடியாது போகவேண்டிய இடம் வேறு”

“புரியல எங்க போனும் நாங்க?”

“போகவேண்டிய இடத்துக்கு நான் அனுப்பி வைக்கிறேன் அதுக்குத்தான் நான் இங்க வந்து இறங்கி இருக்கேன்”

“இறங்கியா? அப்படினா புரியல?”

“உனக்கு எதையும் புரியவைக்க எனக்கு அவசியம் இல்லை.”

“என்ன பண்ணனும் நாங்க?’

“நான் சொல்வதைக் கேட்டால் உயிரோடு பத்திரமாக இருக்கலாம் வேறொன்றும் செய்யப் போவதில்லை.”

“விட்டுவிடுங்கள் நாங்கள் போகவேண்டும்”

       அதனிடம் இருந்து பதில் இல்லை.திரும்பி சென்று அந்தக் கணினி போன்ற இயந்திரத்தின் முன் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் எதோ செய்தது.பின் எங்களிடம் திரும்பி வந்தது.

“இன்றிலிருந்து நீங்கள் இருவரும் ஊரில் இருந்து காணமல் போனவர்கள்.”

“ஏன்?”

“கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சொன்ன அது அங்கும் இங்கும் நடந்தபடி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. இவள் அழுதே விட்டாள் சத்தமில்லாமல். எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. அது தனது வேலையில் மும்முரமாக இருந்தது.

“எங்களை விடு போகவேண்டும்” என்று கொஞ்சம் கத்தினேன். ஆனால் அதுக்குக் கேட்காதது போல அது தனது வேலையைச் செய்துகொண்டு இருந்தது. அரைமணிநேரம் கழிந்தபிறகு எங்களின்பக்கம் வந்தது.

‘இப்போது பூமியில் இருந்து கிளம்பிப்  போகபோகிறோம்”

“என்னது பூமியை விட்டா” என்ற எனக்கு மயக்கமே வந்தது.

“கிளம்பும்போது கிழே விழுந்து உருளாமல் இருக்க வேண்டுமானால் வந்து அமர்ந்து பாதுகாப்புக் கவசத்தை அணியுங்கள்” என்று சொன்னபடி அது அமர்ந்தது.

தயங்கி நின்றவர்கள் கொஞ்சம் அந்தக் கூடாரம் ஆட ஆரம்பித்தவுடன் வேகமாகச் சென்று அதன் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தோம்.அது எங்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசத்தை அணிவித்தது.

“இது உன் மனைவியா?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம் ஏதும் சொல்லவில்லை.

“அப்படி இருந்தால் உங்களுக்கு ஒரு புதியனுபவம் காத்து இருக்கிறது பயம் வேண்டாம்” என்றது

“என்ன அனுபவம்?எங்கே?”

“எங்கள் சோதனைக்  கிரகத்தில்”

“சோதனைக்  கிரகமா?”

“ஆமாம் இப்பொது நான் உன்னிடத்தில் விளக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்களை அழைத்துச் செல்வது ஒரு சோதனைக்கு. நீங்கள் மட்டும் இல்லை பூமியில் பல்வேறு இடத்தில் இருந்து எங்கள் விண்கலம் நிறையா மனிதர்களை சந்தர்ப்பத்தில் பிடித்துக்  கொண்டு வருவார்கள். எனக்குக்  கொஞ்சம் அதிர்ஷ்டம் போல நீங்களாகவே வந்து விட்டீர்கள்”

“அப்போ நாங்கள் இனி பூமிக்கு திரும்பவே முடியாதா?”

“முடியாது கவலை வேண்டாம் அதுவும் பூமி போல ஒரு கிரகம்தான் எதுவும் உங்களுக்கு ஆகாமல் கவனித்துக் கொள்வது என் கடமை.”

“என்ன கிரகம்? எங்கு இருக்கிறது? எதுக்கு மனிதர்கள் அங்கு வேண்டும்?”

“எங்கள் சொந்த கிரகம் நீங்கள் கணக்கிட முடியாத தொலைவில் இருக்கிறது, ஆனால் நாங்கள் இப்போது கண்டு பிடித்திருக்கும் புதிய ஒன்று இங்கு அருகில் இருக்கிறது. அங்கு எங்களுக்குத்  தேவையான வசதிகளை ஏற்படுத்தவேண்டும் அதுக்குத்தான் இந்த முயற்சி.”

“அப்படினா நாங்கள் உங்களுக்கு அடிமையாக வாழ வேண்டுமா? அல்லது வேலை செய்ய வேண்டுமா?”

“ஏதும் செய்ய வேண்டாம் வந்து அங்கு இருந்து வாழ்ந்தாலே போதும் அந்தக்  கிரகத்தைப்  பற்றியும் எங்களுக்குத்  தெரிந்துவிடும் அதே நேரத்தில் கொஞ்ச காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து எங்களுக்கு இந்தக்  கிரகம் வாழ உகந்ததா இல்லியா என்பதைக்  கண்டுபிடித்து எங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்” என்றது.

“அப்படின்னா நீங்களும் எங்களைப்  போன்ற மனிதர்களா என்ன?”

“அதிக ஒற்றுமை இல்லாவிட்டாலும் அடிப்படையில் உயிர்வாழ தேவையான காரணிகள் உங்களுக்கும் எங்களுக்கும் ஒன்றுதான். அதில் முக்கியமாகச்  சுவாசித்தல் மட்டும்.

“உங்கள் உடம்பும் கார்பன் அடிப்படை மூலக்கூறுகளால் ஆனதா?”

“நீ அதிகம் தொந்தரவு செய்கிறாய், உனக்குப்  பயம் இல்லையா? எப்படிக்  கேள்வி கேட்கிறாய் இந்த நிலைமையில்?” இதைக்  கேட்கும்போது எந்தக்  கோப உணர்ச்சியும் அதன் முகத்தில் இல்லை அல்லது எனக்குத்  தெரியவில்லை.

“பயம் இருக்கிறது ஒரு ஓரமாய், ஆனால் இந்தப்  புதிய கிரகம், விண்கலம், நம்மை விட வித்தியாசமான உயிர்கள் இவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம் அதான் கேட்டேன்” என்றேன்.

“ஆர்வம் வர கொஞ்சமாவது இதுபற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டுமே உனக்கு எந்த அளவில் இருக்கிறது? இதுபற்றி எந்த அளவுக்குத் தெரியும்?”

“எனக்கு ஒன்றும் தெரியாது எங்க ஊரில் சுஜாதா ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தார் அய்யோ இல்லை..இல்லை.... இருக்கிறார். அவருக்கு வேலையே இதான் எல்லாம் தெரிந்தும் முழுதும் சொல்லாமல் இப்படி அரைகுறையாக ஒரு விசயத்தைப்  போகிற போக்கில் சொல்லிவிட்டு போயிருவார். அவ்வளவுதான் அதைப்பற்றி முழுதும் தெரிந்துகொள்ள நாங்கள் படும்பாடு இருக்கே......!!!. அதுக்குத்  தேவையான புத்தகத்தின் பேரையும் சொல்லிடுவார் முடிஞ்சா படிச்சிட்டு புரிஞ்சிகோங்கனு அடுத்த வேலை அந்தப்  புத்தகத்தைத்  தேடிபிடித்துப்  படிப்பதுதான் என் வேலை. அப்படித்  தெரிந்து கொண்டதுதான் சில விசயங்கள்.”

      நாங்கள் இருவரும் பேசிகொள்வதை ஏதோ மூன்றாம் மனுஷியாகக்  கவனித்துகொண்டு இருந்தவளை பார்த்தேன், கண்களில் இன்னும் பயம் அப்படியே இருந்தது.இந்த நிலைமையிலும் உனக்கு இந்தப்  பேச்சு தேவையா என்பது போல இருந்தது அவளின் பார்வை.

“இந்த மாதிரி கேள்விகளைக்  கேட்குறதுக்குப்  பதிலா எவ்வளவு நேரம் இந்த விண்கல பயணம்? அங்கு இருந்து எப்படித்  திரும்புவது இதைப்பற்றிக்  கேட்டுதொலையேன்?” என்றாள் கோபமாக.

அவள் சொன்னது  எனக்கும் சரியென்று பட்டது.

“எவ்வளவு நேரம் இந்தப்  பயணம் தொடரும்? கொஞ்ச காலம் கழித்து எங்களைத்  திரும்பி வந்து விட்டுவிடுவிங்க தானே?”

“திரும்பியா?? அதான் சொன்னேன்ல இனிமேல் நீங்க அங்கேதான் இருக்கணும் அதுதான் உங்கள் கிரகம்”

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்துகொண்டோம்.அவளின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

“சரி இந்தப்  பயணம் எப்போது முடியும்?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில், நாம் இப்போது ஒளியின் வேகத்தைவிடப்  பலமடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் இன்னும் கொஞ்சம் நீ தொந்தரவு செய்துகொண்டு இருந்தால் கிரகம் வந்துவிடும்”

“என்னது ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமா?” என்று ஆர்வத்தில் கத்தியே விட்டேன். அவள் மீண்டும் அதே பார்வை.. இந்த நேரத்தில் இது ரெம்ப முக்கியமா என்பதுபோலப்  பார்த்தாள்.

“ஆமாம் ஒளியின் வேகத்தில் சென்றால் பலவருடம் பிடிக்கும் இந்தத்  தூரத்தை சில மணிநேரத்தில் கடக்கும் வேகத்தில்தான் நாம் இப்போது சென்று கொண்டிருக்கிறோம்” என்றது.

“அதான் ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுமே பயணிக்க முடியாதே?”

“யார் சொன்னது? உங்கள் சுஜாதாவா?”

“இல்லை ஐன்ஸ்டீன்”

“சரிதான் ஆனால் கொஞ்சம் சுலபமாக யோசித்தால் ஒளியின் முன்னால் செல்ல முடியுமே?”

“எப்படி அதான் கேட்கிறேன்?’

“இப்போது ஒளியின் வேகத்தில் செல்ல முடியாது சரி ஆனால் அந்த ஒளியே உன்னை உந்தித்  தள்ளிக்கொண்டு போகிறது அதுவும் அது பயணிக்கும் வேகத்தில் என்றால் சாத்தியம்தானே”

“ஆம்” என்று எங்கோ பார்த்தேன் யோசித்துகொண்டே.

“அப்போ இந்த விண்கலமும் அந்த முறையில்தான் இயங்குகிறதா என்ன?”

“அதான் சொன்னேனே இது ஒளியின் வேகத்தை விடப்  பலமடங்கு வேகம் என்று இது வேற முறையில் இயங்குகிறது”

“அப்படின்னா அந்த ஒளியின் வேகத்தில் பயணிக்கும் முறை உங்களுக்கு எப்படித்  தெரியும்?”

“அது எங்கள் கிரகத்தில் உள்ள நெடுந்தூர பயணங்களுக்கு உபயோகிக்கின்றோம்”

“எப்படிச்  சாத்தியம்?”

“அதைச்  சொல்ல முடியாது மற்றொருமுறை சந்திக்கும்போது தெளிவாகச்  சொல்லுகிறேன்” என்றது.

“சரி இந்த விண்கலமாவது எப்படி இயங்குகிறது என்பதைச்  சொல்லுங்க?’

      ஒருமுறை திரும்பி என்னவோ மாதிரி பார்த்தது. அதன் முகபாவனையையோ உணர்ச்சியையோ கண்டு அர்த்தம் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்னால். இதே இடத்தில் என்னவளாக இருந்தால் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஒருவேளை என்னவளை போல அந்த வேற்றுகிரகவாசிக்கு முகத்தில் உணர்ச்சிகளைக்  காட்ட தெரியாதோ என்னமோ?

  “இது ஒருவித ஈர்ப்புவிசையில் இயங்குகிறது. ஈர்புவிசைக்குத்  தேவையான கிராவிடான் துகள்களை ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஒன்றுசேர்க்கும் போது அங்கு அதிக ஈர்ப்பு விசை ஏற்படும் அப்போது அது பக்கத்தில் இருக்கும் பொருளை தன்னோக்கி இழுக்கும், இதுதான் இந்த விண்கலம் பயணிக்கும் தத்துவம்.”

“ஈர்ப்பு விசைக்குத்  தேவையான துகளை நீங்கள் கண்டுபிடித்து அதை உபோயோக படுத்தியும் விட்டிங்கலா?”

“இந்த விண்கலத்தின் முன்பகுதியில் அந்த அமைப்பு இருக்கிறது. அந்தத்  துகள்களைச்  செயற்கையாக ஒரு மாற்றம் செய்து வெளியில் இருந்து பிரித்து எடுத்து ஒரு இடத்தில் குவியச்செய்யும் உடனே அங்கு அதிக ஈர்ப்பு உண்டாகும்போது இந்த விண்கலம் அதைநோக்கி பயணிக்கும். இது நடப்பது மிகக்குறைவான நேரத்தில் என்பதால் நம்மால் வேகமாகப்  பயணிக்க முடிகிறது.”

“ஒரு காந்தத்தைப்  பின்தொடரும் இரும்பு துண்டு போலவா?”

“அது எனக்குத்  தெரியாது” என்றது

      தனது இடத்தில் இருந்து எழுந்து பின்பக்கமாகச்  சென்று எதையோ சரிபார்த்துக்கொண்டு இருந்தது. ஒன்றுமட்டும் தெளிவாகப்  புரிந்தது இது போகும் வேகம், இடம் எல்லாவற்றையும் பாக்கும்போது கண்டிப்பாக நான் நினைத்தால்கூடக்  கண்டிப்பாகத்  திரும்பி பூமிக்கு வரமுடியாது என்று. அதை யோசித்துகொண்டே அவள் இருந்த பக்கம் திரும்பினேன். ஒருகையால் மற்றொரு கையின் விரலை பிடித்துகொண்டு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள்.

“என்னாச்சு என்ன யோசிக்கிறே?”

“இல்ல இந்நேரம் எங்கவீட்டுல தேடியிருப்பாங்க, நீயும் நானும் சேர்ந்து காணோம்னு தெரிஞ்சிருக்கும்ல?”

“அப்போ நம்மளை இவன் வேற்றுகிரகத்துக்குக்  கடத்திட்டுபோறது உனக்குப்  பிரச்சினை இல்லை என்னோடு காணமபோயிட்டேனு உங்க வீட்டுக்குத்  தெரியிரதுதான் கவலையா இப்போ?”

“அப்படி இல்லை”

“உணமைக்கே காதலிச்சியா என்னைய? ஒருகட்டத்தில் வீட்டில் சம்மதம் இல்லமா நாம தனியா போய்க்  கலியாணம் பண்ணிக்கிற சூழ்நிலை வந்திருந்தா நீ வந்து இருக்க மாட்டியா?”

“அதுவேற இதுவேற. இந்த நிலையில் நம்ம காதல் சண்டை தேவையா சொல்லு”என்றாள் கோபமாக

மீண்டும் வந்து அமர்ந்த அது, என்னாச்சு உங்களுக்குள் ஏதும் பிரச்சினையா?” என்றது

“இல்லையே” என்றேன்

“இல்லாமல் இருப்பது நல்லது ஏனென்றால் உங்களுக்குள் பிரச்சினை என்றால் அது எங்களுக்கு நஷ்ட்டம்”

“உங்களுக்கு ஏன் நஷ்ட்டம்?”

“ஆமாம் உங்களை இங்கு அழைத்துவருவது நீங்கள் இனப்பெருக்கம் செய்து இந்தக்  கிரகத்தில் இருக்க வேண்டும் என்றே. உங்களுக்குள் சண்டை பிரிவு என்றால் என்ன செய்ய?”

இப்போது அவள் இருக்கும் பக்கம் திரும்பினேன். நான் திரும்புகிறேன் என்று தெரிந்து வேறு எங்கோ பார்வையைப் பார்த்தாள்.

“சரி அவள் உன் மனைவிதானே?”

“இல்லை காதலி”

“காதலின்னா?”

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் அதனால் அவள் என் காதலி”

“இதுபற்றிய குறிப்பு எங்கள் கிரகத்தில் எனக்குக்  குறிப்பிடப்படவில்லையே? எங்களின் கணக்கு கணவன் மனைவிகளை அழைத்துவரவேண்டும். அப்போ நீங்கள் கணவன் மனைவி இல்லையா?”

“அப்போ கணவன் மனைவி இல்லேன்னா திரும்பி பூமிக்கு அனுப்பிருவிங்களா என்ன?”என்றேன் சந்தோசம் கலந்த குரலில்.


தொடரும்.....


சில விசயங்கள் - 13

  பயணங்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. எதோ ஒரு காரணத்திற்காக நாம் செய்யும் பயணத்தில் இருக்கும் சில நல்ல விசயங்களை கண்டிப்பாக எல்லோருமே அனுபவித்தே ஆகியிருக்கவேண்டும். அனுபவங்கள் செய்யும் பயணத்தின் நோக்கத்தை பொறுத்து மாறுபடும். சிலர் பொழுதுபோக்குவதற்கு என்றே செய்யும் உல்லாச பயணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால்  அன்றாட சுய தேவைகளுக்கான பயணங்களே அதிகம்.
  
  அதிலும் முக்கியமாக பேருந்து பயணம். அதிக தொலைவில்லாத பேருந்து பயணம் எனக்கு பிடித்தமான ஒன்று.குறைந்தது 6~8 மணி நேரமாக இருந்தால் சலிக்காமல் இருக்கமுடியும். அதுக்கு மேல் போனால் எப்போது இறங்குவோம் என்று இருக்கும்.பயணிக்கும்போது இருக்கும் மனநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எங்கு செல்கிறோம் எதற்கு செல்கிறோம் போன்ற விசயங்களே. ஒரு சந்தோஷமான நிகழ்வை எதிர்கொள்ள பயணிக்கிறோம் என்றால் கண்டிப்பாக பயணம் முழுதும் அந்த எண்ணங்களே நிறைந்து  இருக்கும் மனதில். இக்கட்டான அல்லது கவலையான நினைவுகளோடு செய்யும் பயணங்களும்  இருக்கவே செய்கின்றன. என்னவென்றால் அந்த எண்ணங்கள் பயணிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிளியே மறக்கடிக்கப்பட்டு மனதிற்கு கொஞ்சம் இதமாக்கும் சக்தி பயணங்களுக்கு உண்டு.

  தனிமையான பயணங்கள் இன்னும் இனிமையானவை. நம்மை பற்றிய எண்ணங்களை அசை போட்டுக்கொள்ள இதைவிட சிறந்த தருணம் வேறெதுவும் இருக்க முடியாதுதான்.துக்கமோ சோகமோ முன்னர் நடந்த விசயங்ககளை பற்றி யோசித்து அதில் முடிவுகளை எடுக்கும் தருணமாகவும் அது இருக்கும்.இதுவரை நான் சொன்னது ஒருவரின் தனிப்பட்ட மனதின் எண்ணங்களை பயணங்கள் எப்படி மாற்றுகின்றன என்பதுதான்.

   இது தவிர்ந்து யாராக இருந்தாலும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டிய சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன இந்த பேருந்து பயணத்தில் அதுவும் நமது தமிழ்நாட்டில்.ஏறி அமர்ந்ததில் இருந்து இறங்கும் வரை நடக்கும் விசயங்கள் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே.

   ஏறும்போதே நடத்துனர் கத்துவார் இடையில் எங்கும் நிக்காது என்று. அதாவது நீங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் அடுத்து மதுரை தான் நிக்கும் அதுக்கு அடுத்து நேரா நெல்லை என்றுதான் கூவிக்கொண்டு இருப்பார். ஆனால் நேராக திருநெல்வேலியோ அல்லது மதுரையோ போகிறவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இடையில் இறங்குபவர்களே அதிகமாக வாசலில் அடைத்து இருப்பார்கள். இப்படியே கொஞ்ச நேரம் கடந்துபோனவுடன் நடத்துனர் உள்ளே எட்டிப்பார்ப்பார் உள்ளே ஈ ஆடிக்கொண்டு இருக்கும். அடுத்து அவர் கூவுவது திருச்சி ஏறிக்கோங்க என்று. இப்போது கொஞ்சம் கூட்டம் நிறைந்து இருக்கும். இப்படியே நேரம் செல்ல கடைசியில் அந்த பேருந்து பயணிக்கும் வழியில் உள்ள அணைத்து ஊருகளில் நின்று செல்லும்.

    நான் மேலே சொன்னது அரசுபேருந்துகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. தனியார் பேருந்துகளில் கொஞ்சம் தேவலை பயணசீட்டு முன்பதிவு செய்யும்போதே அறிவிப்பு இருக்கும் இது எங்குமே இடையில் நிக்காது என்று. சொன்ன மாதிரியே இடையில் எங்குமே ஊர்களில் நிறுத்துவதில்லை. காரணம் அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு பயணசீட்டு முன்பதிவு ஆகிவிடுவதே . இதனால்தான் அவர்களால் இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க முடிகின்றது. ஆனால் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஆகி, இடம் இல்லாமல் இருந்தாலும் கடமைக்கு எல்லா ஊருகளுக்குள் சென்று திரும்புவது என்ன நேர்த்திகடனோ தெரியவில்லை.

   சரி பேருந்தில் ஏறி உள்ளே பார்த்தால் முதல் சீட்டில் இருந்து கடைசி வரையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கைகள் எல்லாமே நிறைந்து எல்லாமே ஒற்றை இருககைகளாக காலியாக இருக்கும். ஏதோ இரவில் வெளியில் இருக்கும் இயற்கை அழகை ரசித்து விடிந்ததும் அதை கவிதையாக வடிப்பவர்கள் போலத்தான் அவர்கள் அந்த இருக்கைகளை பிடித்து அமர்ந்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் பேருந்து கிளம்பிய அரைமணிநேரத்தில் பேருந்து சத்தத்தை மிஞ்சும் குறட்டை சத்தம் வெளிவரும்.

   நமக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் பெரியவிசயமாக இருந்தாலும் நாம் கொண்டு போகும் பைகளை வைக்க இடம்கிடைப்பது அதைவிட கொஞ்சம் சிக்கலான விஷயம். எப்படித்தான் சுமந்து வருவார்களோ என்று ஆச்சரியப்படும் வகையில் கொண்டுவந்து திணித்து இருப்பார்கள். அதுவும் அவர்கள் இருக்கை வேறு எங்கோ இருக்க அவர்கள் பைகள் இங்கு வந்து வைத்துவிட்டு எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது போல உட்கார்ந்துவிடுவதுதான் அவர்களின் வெற்றி.

  எப்படியோ அதுக்கும் ஒரு சிறிய இடம்கிடைத்து உட்கார்ந்தால் பக்க்கத்தில் உள்ளவரை கவனித்து நமது பணம் அல்லது முக்கியமான பொருள்களை எங்கெங்கே எப்படி வைக்கவேண்டும் என்பதை பற்றி யோசிப்போம். அதற்குள் பேருந்து ஓரளவு நிறைந்து இருக்கும். பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கும். யாரவது பெண்கள் ஏறினால் அவர்கள் அமர இடம் இருக்காது அதான் இயற்கை  பிரியர்கள் எல்லோரும் ஜன்னலோர இருக்கைகளை பட்டாபோட்டு விட்டதால் பெண்கள்  ஏறி அங்கு இங்கும் தேடி தயங்கி நிற்கும்போது நடந்துனர் உள்ளே வருவார். அதற்கு முன் அவர்களே இந்த இயற்கை பிரியர்களிடம் விண்ணப்பம் வைப்பார்கள் கொஞ்சம் மாறி உட்காருங்கள் என்று. அவர் எதோ 1000 ரூபாய் கடன் கேட்கிறார் போல என்று நினைத்து எங்கோ வெளியில் பார்ப்பார். அப்போது அந்த பெண் மனதில் என்ன திட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ரெம்ப நாள் ஆசை. யாராவது சொல்லுங்கள்.

    நடந்துனர் வந்து ஒரு சிறிய கட்டபஞ்சாயத்து வைத்து அந்த பொண்ணுக்கு இடம்பிடித்து கொடுப்பார். பெரும்பாலும் யாருமே இடம்மாறி உட்காருவதில்லை. சிலர் அவர்கள் வருவதை பார்த்தவுடனே எழுந்து மாறி உட்கார்ந்துவிடுகிறார்கள். மாறி உட்காறாதவர்கள் இனிமேலாவது திருந்த முயற்ச்சியுங்கள்.

  பேருந்து கிளம்பி கொஞ்சநேரத்தில் நடத்துனர் பயணசீட்டு கொடுக்க வாருவார். அப்போதுதான் நாம் நமது செல்வசெழிப்பை காட்டுவோம். சொல்லிவைத்தற்போல் 500 ரூபாய் காட்டி அவரை கோபபடுத்தி அவர் யாருக்கு எவ்வளவு சில்லறை கொடுக்கவேண்டும் என்பதை மறந்து குழம்பி ஒரு வழியாக அவர் எல்லாம் முடித்து ஆட்களை என்னும்போது நீங்க கொடுத்த இந்த ரூபாய் கிழிஞ்சு இருக்கு பாருங்க இது செல்லாது என்று கத்துவார் ஒருவர். வேண்டா வெறுப்பாக வந்து வேறு ரூபாய் கொடுக்க அங்கு ஒரு கும்பல் தூங்க தயாராகி கொண்டு இருக்கும்.

   இப்போது இரண்டு இருக்கைக்கு இடையில் இருக்கும் கைவைக்கும் கட்டைக்கு ஒரு சின்ன பனிப்போரே நடக்கும். யாரு முதலில் அதிகமா கைவைத்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்களோ அவர்களே பாக்கியாவான்கள்.என்ன சிரிப்பு என்றால் அடுத்த ஒருமணிநேரம கழித்து அவர் கையை தனியாக வெட்டி எடுத்தாலும் தெரியாத அளவு தூங்கிகொண்டு இருப்பார். அதிலும் பாதி பாதி இடத்திற்கு வார்த்தையில்லா சண்டை நடக்கும். கையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துவது, கையை நகர்த்தி கொண்டே இருமுவது, வேண்டுமென்றே தூங்குவதுபோல் நடித்துகொண்டு நமது கையை தள்ளிவைப்பது இதெல்லாம் அந்த நேரத்தில் நடக்கும் ராஜதந்திர வேலைகள். நான் பொதுவாக முதலில் அவருக்கு எல்லா இடமும் கொடுத்துவிட்டு தூங்கியவுடன் தேவையான இடம் பிடிப்பேன்
.
    அடுத்து பின்சாயும் இருக்கையை பயன்படுத்துவதில். பின்னாடி உட்கார்ந்து இருப்பவரை எந்தவித சட்டையும் செய்யாமல் டபக்கென்று பின்பக்கம் சாய்த்து அவரை கோபபடுத்துவதில் என்ன இன்பமோ.அதிலும் பின்பக்கம் உள்ளவர் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்று கேள்வி கேட்பார். அதுக்கு எந்த விதபதிலும் இருக்காது. ஒருமுறை பின்பக்கம் பெண் உட்கார்ந்து இருக்க முன்பக்கம் என் அருகில் உட்கார்ந்து இருந்தவர் முழுதும் சாய்த்து படுத்து தூங்க நினைக்க அந்த பெண் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்னால உட்கார முடில என்று சத்தம் போட அப்புறம் நடந்துனர் வந்தும் பஞ்சாயத்து செய்தும் பலனில்லை. அவர் அவரின் உரிமையை முழுதும் பயன்படுத்தி கொண்டார். அப்போது நடந்துனரிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது இவ்வளவு அதிகமாக சாய்க்க வேண்டாம் என்றால் பின் ஏன் இருக்கையை இப்படி அமைக்கிறிர்கள் என்றார்.

   அந்தப்பக்கம் பெண் விடுவதாக இல்லை. ஏன் என் மடியில் பாடுத்துக்க வேண்டியது தானே இப்படி பண்ணுவதுக்கு என்று சொல்ல இவர் அது என்ன என் தல எழுத்தா உங்க மடியில் படுக்கனும்னு என்று பதில் அளித்தார்.அந்த எண்ணம் வேற இருக்கா என்று அந்தப்பெண் கேட்க இவர் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டார். அந்த பெண் எதோ புலம்பிகொண்டே தூங்கிபோனார். விஷயம் என்னவென்றால் என் அருகில் அமர்ந்தவர் இடையில் இறங்கிய பின்னும் அவர் இருக்கை பின் சாய்க்கபட்ட நிலையில் இருந்தும் அந்த பெண் சந்தோசமாக தூங்கி கொண்டுதான் இருந்தார்.

    இடையில் உணவுவிடுதியில் நிற்காத பேருந்துகள் இருந்தால் சொல்லுங்கள் புண்ணியமாக போகும். முக்கியமான அழிம்புகள் அங்குதான் நடக்கிறது. இறங்கி சிறுநீர் கழிக்கும் இடத்தை தவிர எல்லா இடத்திலேயும் கழிக்கிறார்கள். அதை தடுக்க  தனியாக காவல்காரன் வேறு. கையில் லைட் வைத்துகொண்டு யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை பின்னால் இருந்து வெளிச்சம் மற்றும் சத்தம் போட்டு காட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. சரி காசு கொடுத்து போலாம் என்றால் வெளியில் இருப்பதுக்கும் அங்குபோவதுக்கும் ஒரே வித்தியாசம் ஒரு குட்டச்சுவர் மட்டுமே.சுத்தம் வேறு இல்லை. என்ன நேர்த்திகடனோ தெரியவவில்லை அங்கு வரும் பயணிகளை அந்த சுவரின் மீது கழிக்கவைப்பதில்
.
    நள்ளிரவில் மசாலா நிறைந்த பொருள்களை வாங்கி ஆனந்தமாக தின்பவரை அங்குதான் பார்க்கமுடியும்.அதுவும் கடந்த சில நிமிடங்கள் வரை நன்றாக உறங்கி கொண்டிருந்தவரா இவர் என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரின் வேகம் இருக்கும். எல்லாம் முடிந்து பேருந்து கிளம்பும்போதுதான் யாரவது ஓட்டுனரின் அருகில் சென்று இருங்கள் இன்னும் ஒரு ஆள் வர வேண்டியது இருக்கு என்று சொல்லி இன்னும் 10 நிமிடம் தாமதம் செய்வார். வரும் மனிதர் தனக்கும் இங்கு நிற்கும் பேருந்துக்கும் எந்தவித சம்பந்தமே இல்லை என்பது போல நடந்து வருவார்.
   
   எப்படியோ ஒருவழியாக ஊர் வந்து இறங்கி பேருந்து கடந்து சென்ற பிறகு தன்னிலைக்கு வந்து யோசித்து பார்த்தால் ஏதோ வேற்றுகிரக பயணம் மேற்க்கொண்டு திரும்பியது போல ஓர் அனுபவம். அத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் கண்டிப்பாக இந்த மாதிரியான பயணங்களில் மட்டுமே கிடைக்கும்.

                                            
                                          ************

    இந்த வருடம் கோவில்பட்டி, எட்டையாபுரம் பக்கம் சுத்தமாக மழை இல்லை. சென்னையில் பெய்த மழையில் கொஞ்சமாவது பெய்ந்து இருந்தால் அந்த பக்க விவசாயிகள் சந்தோசப்பட்டு இருப்பார்கள். ஆனால் சுத்தமாக இல்லை.இன்னும் காத்து இருக்கிறார்கள் மழை பெய்யும் என்று.
எப்போதும் வற்றாத கிணறுகள் கூட சுத்தமாக வற்றிவிட்டது. ஆழ்துளை போட்டால் சுண்ணாம்புக்கல் பாறை வருகிறது. அப்படியே போட்டாலும் ஆழம் அதிகம் ஆகிவிடுவதால் மோட்டரை இன்னும் கிழே இறக்கி வைக்கவேண்டும் அப்போதுதான் தண்ணியை இழுக்கும்.தண்ணியின் ஆழம் அதிகம் என்பதால் வெளியேறும் அளவும் குறைவே. அதனால் பாய்ச்சல் நேரமும் அதிகமாக ஒரு பிஞ்சையில் ஒரு பக்கம் இருந்து பாய்ச்சிக்கொண்டு போய் முடிந்த பின்பு திரும்பி பார்த்தால் ஏற்க்கனவே பாய்ச்சி இருந்த எல்லாம் வெயிலுக்கு காஞ்சி கருவாடாக போய் இருக்கும். வேறென்னே செய்ய திரும்பியும் முதலில் இருந்து தொடர வேண்டும்.

   தண்ணி வசதி இல்லாதவர்கள் கடவுளிடம் மழை வேண்டி காத்து இருந்து காலம் போனதால் இப்போது மனம் மாறி விவசாயத்தையே விட்டு விட்டார்கள். இப்போது இருப்பவர்கள் கிணற்றில் கொஞ்சம் தண்ணி இருப்பவர்கள் மட்டுமே. ஏற்க்கனவே அரசாங்க வேலை காரணமாக வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த மழை இல்லாத பிரச்சினை ஒரு பெரிய இழப்பு. ஒருவேளை அந்த வேலை செய்யாமலே சம்பளம் கிடைக்கும் திட்டம் ஓய்ந்தால் கொஞ்சம் விவசாயம் செழிக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் வாய்ப்பு இல்லை. இதனால் கூலி ஆட்களின் சம்பளம் வேறு கூடி விட்டது. வேலைக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு அரசாங்கம்  கொடுக்கும் சம்பளம் எங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள். இவர்களை குறை சொல்ல முடியாது என்னை பொறுத்தவரை இவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் உழைத்துவிட்டு சம்பளம் கேட்கிறார்கள்.


   எப்படியோ ஒன்றும் மட்டும் உறுதி இந்த நிலை இன்னும் நீடித்தால் அடுத்தவருசத்தில் அந்த பக்கம் கண்டிப்பாக விவசாயம் இருக்காது என்பதே உண்மை. மழைக்கு, கடவுளுக்கு எல்லாம் காத்து இருந்த ஏமாந்த விவசாயிகள் ஒருநாள் நம்மையும் ஏமாற்றுவார்கள். உணவு இல்லாமல் வாழமுடியாது. புரிகிறதா? 




காலத்தின் காலம்



    தொடரும் முன்  சில  விசயங்களை ஒருமனதாக நீங்கள் நம்பியாகவேண்டும்...

- ஒரு கதையில் நான் எழுதியது போல இறந்த காலத்தை நாம் கடந்து வந்துவிட்டாலும் இப்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்றால் இறந்த கால உலகம் என்பது நிகழ்காலமாக இருந்துகொண்டு இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட காலத்தில் இருந்த  இடம்,பொருள் என எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் நீங்கள் மட்டும் புதியவர். அதனால் அவர்களுக்கு நீங்கள் ஒரு வேற்றுகிரக வாசியைப்போல.

- இயற்பியல் விதிகள் என்பது எல்லா இடங்களுக்கும் பொதுவானது. அதுக்கு கால மாற்றங்கள் ஒரு பொருட்டல்ல. இறந்த காலத்திலும் நீங்கள் சென்று இப்போது உள்ள விதிகளை நிரூபிக்கலாம் அல்லது அதை வைத்து எதாவது செய்யலாம்
.
- விடை கிடைக்காத கேள்விகளில்தான் எப்போதும் ஒரு மர்மம மறைந்து இருக்க முடியும். எடுத்துக்காட்டாக கடவுள். உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டால் அதில் ஒரு கேள்விக்கான விடையை கண்டிப்பாக அந்த கடவுள் சொல்லி இருப்பார்.  இங்கும் உங்களுக்கு விடையில்லாத சில கேள்விகளை விட்டே செல்கிறேன். அதற்கு விடை இல்லை என்பதைவிட எனக்கு தெரியாது என்பதே சரி.

இனி தொடரலாம்....

       எப்போதுமே தேடல்களில் தோல்வி கிடைப்பதில்லை. அலுப்பு தோன்றுமே தவிர தீவிராமான தேடலில் கண்டிப்பாக ஒரு நேரத்தில் வெற்றியே கிடைக்கும். காலம் தள்ளி போகலாம்.  அப்படியான தேடலில் ஒன்றுதான் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிவதற்க்கான தேடல்.
மொத்தமாக பார்த்தால் இரண்டு வகை தேடலில் இருந்தார்கள். ஒன்று பூமியில் மட்டும் அதுவும் மனிதனின் மனதுக்குள் கடவுளை உணர்ந்தால் எல்லா ரகசியமும் தெரிந்து விட்டதாகவும் இனி அறிய ஒன்னும் இல்லை என்ற வகையில் ஒரு பிரிவினர் இருந்தனர்.

    இதில் முக்கிய பங்களிப்பு என்றால்  உங்களுக்கு பரிச்சயமான உண்மையான கடவுள், சாமியார்கள், போலியான சாமியார்கள்  எல்லாம் அடங்குவார்கள். கடவுளின் கிருபை, சாமியார்களின் திறமையான செயல்களை நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது மறைத்து வைக்கபட்டுள்ள கேமராக்கள் மூலம் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதைப்பற்றி தொடராமல் அடுத்த வகை தேடலுக்கு செல்கிறேன்.

     மற்றொன்றான  பூமியில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை ஆராயும் இலக்கில் வெளியில் தேடுவதில் எனக்கு இதில் நிறையா நம்பிக்கை உண்டு. முதலாம் ஒன்றில் சுத்தமாக இல்லை.

    அதாவது இந்த பிரபஞ்சத்தை சில விதிகளை கொண்டு விளக்குவது , இது இப்படி இருக்கலாம் என்று முதலில் அனுமானித்து சொல்லிவிட்டு பின்னர் அதனை கணித சமன்பாடுகள் கொண்டோ சில விதிகளை மையமாக வைத்தோ  இப்படித்தான் என்று நிரூபிப்பது  என்பது எப்போதுமே என்னை கவரும் ஒன்று.

     ஏனென்றால் இப்போது ஒரு விதியோ அல்லது சிறு கணித சமன்பாடோ இந்த பிரபஞ்சம் முதலில் இப்படித்தான் உருவாகியது என்று உங்களுக்கு நிருபித்துவிட்டால் அதுதான் கடவுள்  என நம்பியாக வேண்டும். இல்லாமல் இந்த விதியில்தான் உருவாக வேண்டும் என்று யாரோ ஒருவர் செய்து இருக்கிறார் என்றால் ஏற்க்கனவே நான் சொல்லி நீங்கள் ஒருமனதாக நம்பியபடி  எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க கண்டிப்பாக உங்களுக்கு கடவுள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். எனவே இந்த கேள்வியை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

   இந்த தேடல் முறையில் பல முயற்சிகள் நடந்து கொண்டு இருந்தாலும்  இங்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

     பிரபஞ்சத்தின் பிறப்பை அது உருவாகிய காலத்துக்கு பின்னோக்கி சென்று பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமமானது. ஆனால் அந்த இடத்துக்கு நமது கற்பனை நிறைந்த அறிவின் மூலம் பயணித்து இப்படி இருந்திருக்கலாம் என்று இப்போதைக்கு சொல்லிவிட்டு அதை யாரவது வந்து நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம்.

      அதோடு ஏன் பின்னோக்கி செல்கிறோம் முன்னோக்கி சென்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு விடையை காணத்தான் ஒரு பிரிவினர் சில  முயற்சிகளை  செய்துகொண்டு இருந்தனர்.

      அதன்படி காலத்தில் முன்னோக்கி சென்று அப்போது இருக்கும் பிரபஞ்ச மாற்றங்களை வைத்தும், ஏற்க்கனவே இருக்கும் பிரபஞ்ச விளக்க விதிகளை அதனோடு ஒப்பிட்டுப்பார்த்து தெளிவு பெறுவது. இதன்மூலம் சில முடிவுபெறாத விஷயங்கள் விளங்க வரலாம் அல்லது எதாவது புதியதாக நிகழ்ந்து நாம் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்கள் பொய்யென மாறி புதிய  ஒன்று கிடக்கலாம்.

     அந்த நம்பிக்கையில் இரண்டு பேர் அந்த இயந்திரத்தில் ஏறி பறக்க தயாராய் இருந்தார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் என்றால் அங்கு இருக்கும் நிலையை அப்படியே இங்கு இருப்பவர்களுக்கு விவரிப்பது அதன்பின் ஆய்வுகளுக்கு பின் இங்கு இருந்து அனுப்பப்படும் ஆணைகளுக்கு ஏற்ப்ப அங்கு செயல்படுவது.

      இந்த வேலைக்கு ஏன் ரோபோட்டை அனுப்ப கூடாது என்றால் எல்லா நிலைமையிலும் யோசித்து செயலப்டுவது என்பது அவைகளுக்கு இன்னும் கற்றுத்தரவில்லை. ஒருவேளை மனிதனின் பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்.

அவர்களுக்குள் நடந்த உரையாடலை இங்கே தருகிறேன்...

"எல்லாம் சரியாக இருக்கிறதா? பிரபஞ்சம்? நமது  பூமி?

     "பிரபஞ்சம் ரெம்பவே விரிவடைந்து இருக்கிறது...ஆனால்..நமது பூமி இருக்கிறது அங்கு மனிதர்கள் இல்லை?"

"அப்படின்னா எங்கே போனது மனித இனம்?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"புதியதாக கிரகம் இருக்கிறது அதுவும் சூரியனை சுற்றுகிறது அதில் இருக்கிறார்கள்"

"ஏற்கனவே இருந்த ஒன்றா?"

"இல்லை புதியது..அதோடு சூரியன் ரெம்ப பெருசா விம்மி இருக்கிறது"

"அதான் அவர்கள் கிரகம் மாற்ற காரணம். எப்படி மாற்றினார்கள் என்று அறிய முடிகிறதா?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"ஈர்ப்பு விசைக்கான  துகளை கண்டறியும் சாத்தியம் இருக்கிறது, அதை அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம் அதன் உதவியோடு இந்த கிரக மாற்றத்தை செய்து இருக்கலாம்"

"எப்படி?"

"இங்கு நிறைய அடிப்படை அணுத்துகள்கள் புதியதாக இருக்கின்றன, ஒருவேளை பிரபஞ்ச விரிதலிலும், கால மாற்றத்திலும் இவைகள் வந்து இருக்கலாம். அதை ஆராய்ந்து அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம்"

"சரி அது ஒருபுறம் இருக்கட்டும் பிரபஞ்சத்தின் தோற்றத்தினை அறியும் வேலையை ஆரம்பியுங்கள்"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"நமது விதிகளின்படி சரியான அளவில் விரிந்து இருக்கிறது, அதோடு பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை கிட்டத்தட்ட நமது விதிகளின் முடிவு சரியாக இருக்கும்"

"அப்படியென்றால்  big bang முறையை சரியானதாக எடுத்துக்கொண்டால் அந்த முதல் அணுவை யார் தோற்றுவித்தது என்பதுக்கு விடை கிடக்கிறதா? "

"ஆய்வில் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை நான் கொடுக்கும் தகவல்களை வைத்து  நீங்களே முயற்சி செய்து பாருங்கள்."

(பூமியில் இருந்து நீண்ட மணிநேர இடைவெளி)

"சரியாக வரவில்லை. சரி அப்படியே அந்த புதிய கிரக நமது வாசிகள் என்ன ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனித்தால் உதவியாக இருக்கும்"

"முயற்சிக்கிறோம்."

   அந்த  எதிர்காலத்தில் இருக்கும் கிரகத்துக்கு சென்றபோது சில மாற்றங்களை காண முடிந்தது. முதலில் இவர்களின் ஆவலான எப்படி புதிய கிரகத்தை சூரிய மண்டலத்தில் உருவாக்கினார்கள் என்பதற்கான விடையை தேடினார்கள், கிடைத்தது....

     ஈர்ப்பு விசைக்கான துகளை கண்டுபிடித்தபிறகு அவர்களால் விரும்பிய இடத்தில் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தவோ குறைக்கவோ முடிந்து இருக்கிறது. அப்படி  செய்து வேறு எங்கோ சுற்றிகொண்டிருந்த வாழத்தகுந்த கிரகம் ஒன்றை நகர்த்தி இங்கு வந்து சுத்த விட்டு இருக்கிறார்கள்.

    அதாவது  அந்த கிரகத்தின் முன்னால் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தி அதுக்கு ஒரு வழியை அமைத்து இழுத்துவந்து இருக்கிறார்கள். நாய்க்குட்டிக்கு பிஸ்கட் கொடுத்து அழைத்து வருவது போல.

     அடுத்து முதல் அணு எப்படி வந்து இருக்கும் என்பதுக்கும் அவர்களிடத்தில் விடை இருந்தது. கண்டுபிடித்தது என்னவென்றால் parallel universe இருக்கிறது.அதாவது நமக்கு இணையான ஒரு பிரபஞ்சம் நமக்கு பக்கத்திலேயே இருக்கிறது.

    அங்கும்  சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதற்கான விதியை கண்டுபிடித்து விட்டார்கள். அதனை சோதனை செய்யும் பொருட்டு முயற்சி செய்த்ததில் நமது பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது.

     அதன்படி அவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவாகியது அல்லது எப்படி உருவாக்குவது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் யார்? ஏன்? உருவாக்கினார்கள் என்பதற்கான விடை இன்னும் நமது இனத்துக்கோ ஏன் அவர்களுக்கோ தெரிந்து இருக்காது.

     அதுவரை நமது பிரபஞ்ச பிறப்பு என்பது  மற்றவர்களின் சோதனை முயற்சியில் உருவானது. சுருக்கமாக நமது கடவுள் இப்போதைக்கு பக்கத்து பிரபஞ்சத்தில்  அவர் எப்படி உருவானார் அல்லது உருவாக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஒருவேளை காலம் அனுமதித்தால் அவர்கள் நம்மிடம் வந்து சொல்லலாம் அலல்து நாம் முயற்சி செய்து அவர்களிடம்  சென்று அறிந்துவிட்டு வரலாம்.

எப்போதும்  எப்படியேனும் ஒரு கேள்வி விடை இல்லமே இருக்கிறது. அதற்க்கான சரியான விடை சொல்லுபவர் வந்து சொல்லாதவரையில்