அவர்களும் அப்படித்தான் -1முந்தையப் பகுதியின் கதை "அவர்களும் அப்படித்தான்"

  
       “அப்போ கணவன் மனைவி இல்லேன்னா திரும்பி பூமிக்கு அனுப்பிருவிங்களா என்ன?”என்றேன் சந்தோசம் கலந்த குரலில்.

   “கண்டிப்பாக இல்லை, ஒருமுறை இங்கு வந்துவிட்டால் திரும்பி நானே போய் விட்டால்தான் உண்டு”

“இருந்தாலும் நாங்கள் கணவன் மனைவி இல்லையே?”


“அதான் எதோ சொன்னியே காதலி என்று பின்னே அது என்ன உறவு?”

  “அது வேறு திருமணத்துக்குப் பிறகுதான் மனைவி உறவு வரும் இப்பொது வெறுமனே நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். இனிதான் திருமணம் செய்ய வேண்டும்.”

“அப்போ காதலின்னா திருமணத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும் ஒரு சடங்கா உங்கள் இனத்தில்?”

  “அது எதுக்கு உனக்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் உங்கள் சோதனை கிரகம் வரும் அங்குப்  போய் விட்டபிறகு உன்வேலை முடிந்தது அவ்வளவுதானே?” கொஞ்சம் விரக்தி கலந்த கோபத்தில் கேட்டேன்.

“இதோ வந்து விட்டது சில நிமிடங்களுக்குள் நீ இறங்கலாம்”

அவளைப் பார்த்தேன் அங்கு நடப்பவைக்கும் அவளுக்கும் எந்தச்  சம்பந்தமும் இல்லையென்பது போல உட்கார்ந்துகொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே?”

“ஒண்ணுமில்ல” என்றாள் சோகமாக

“உடம்புக்கு ஏதும் பண்ணுதா? இந்த இடம் ஒத்துக்கலயா என்ன?”

‘அதெல்லம் ஒண்ணுமில்ல விடு”

“அப்போ ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“பின்னே இங்கே வந்து சந்தோசமா இருக்கச் சொல்றியா என்ன?”

   என்னிடம் பதில் இல்லை. அவள் சொல்வது சரிதான், நாங்கள் இருக்கும் நிலையில் நானும் கவலைப் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனாலும் என்னிடம் இருந்த கொஞ்ச விளையாட்டுத்தனமான குணம் இந்தப்  பயணத்தையும் ஒருவாறு ரசிக்க வைத்து இருக்கிறது. உண்மையில் அந்த விமானத்தில் ஏறும்போது இருந்த கவலையான, பயம்கலந்த மனநிலை இப்போது எனக்கு இல்லை.அந்த புதிய விண்கலம், அது இயங்கும் விதம், அந்த வேற்றுகிரகவாசி,எல்லாமே புதிய ஆர்வம் கலந்த விசயாமாகப்  பட்டதால் எனக்குள் இந்த மாற்றம். ஆனால் அவள் இன்னும் அதிக கவலையாக இருந்தாள். என்னுடன் பேச விருப்பமில்லை அவளுக்கு.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அது..

“என்ன சொல்கிறாள் உன் காதலி?” என்றது

“அது உனக்குத் தேவையில்லை.” என்றேன்

   “உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், நீங்கள்  ஏதும் சொல்லாமல் என்னால் உங்கள் மனதில் உள்ளவற்றை அறியமுடியும் என்று?”

“அப்போ அப்படியே அறிஞ்சிக்கோ”

“இப்போ என்ன உன் காதலி என்ன நினைக்கிறாள் என்பது உனக்குத்  தெரிய வேண்டும் அவ்வளவுதானே?”

  நான் ஏதும் பதில் சொல்லாமல் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அதன் முகத்தைப் பார்த்தேன். என்னில் இருந்த அதே அளவு ஆச்சரியம் அவளிடமும் இருந்தது. அவளும் அதன் முகத்தையே பார்த்தள் என்ன சொல்லப் போகிறது என்று.

  “சொல் சொல்லட்டுமா? உங்களின் அனுமதி இல்லாமல் ஒருவரின் மனதை ஒருவருக்கு வெளிப்படுத்துவது எனக்கு நாகரிகமாக இல்லை அதான் உன்னிடமே அனுமதி கேட்கிறேன்” என்றது

“சொல்” என்றேன் தயக்கமாக

    “இப்போது மட்டுமில்லை இந்த விண்கலத்தில் ஏறியதில் இருந்தே அவளின் மனதில் ஒரே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, அதுவும் முழுதும் உன்னைப்பற்றித்தான். உன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறாள் போல, இந்த பயணம் அவளது பல கனவுகளை சிதைத்து இருக்கிறது. அதில் முக்கியமாக உன்னோடு சேர்ந்து சந்தோசமாக வாழும் ஒரு வாழ்க்கை. நிறைய கனவுகள் அவளுக்கு எல்லாவற்றையும் ஒருமுறை நினைத்துப்பார்த்து நிறைவேறாத ஒரு முடிவில் மனதில் தானே அதனை அழித்துக்கொண்டு இருக்கிறாள்.”

   அவளைப் பார்த்தேன் கிழே பார்த்தபடி கண்களை பார்க்க மறுத்தாள். தொண்டையில் எச்சில் விழுங்கும் அசைவைத் தவிர வேறொரு எந்த அசைவும் இல்லை. அழுகப் போகிறாள் என்பது தெரிந்தது.

  “இன்னொரு விசயம் உன் காதலி என்னிடம் இருந்து எப்படித்  தப்பிக்கலாம் என்றெல்லாம் யோசித்து நான் எப்படி இந்த விமானத்தை இயக்குகிறேன் என்பதைத்  தொடக்கத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு இருக்கிறாள். இதுக்கும் காரணமும் நீதான். நான் சொன்னது போல உன்னுடன் வாழ வேண்டும் என்ற அதீத ஆசையே அவளை இவ்வாறு செய்தத் தூண்டியுள்ளது, ஆனால் அது வெறுமனே மனதில் இருக்கிற வரையில் உங்கள் இருவருக்கும் எந்தப்  பிரச்சினையும் இல்லை. செயல்படுத்த முயன்றால் நீங்களே உங்களின் அழிவைத் தேடும் ஒரு முயற்சி.

  “இப்ப மட்டும் என்ன நாங்க இங்கே சந்தோசமாக வாழவா போகிறோம் இல்லன்னா நீதான் எங்களை சந்தோசமாக வாழவைக்கப் போறியா?”

   “இங்கு உங்களுக்கு எந்தப்  பிரச்சினையும் இல்லை மரணம் வரையில் உங்கள் இஷ்டம், எப்படி வேண்டுமானலும் வாழலாம். அதுவும் சுதந்திரமாக நீங்களே உங்களுக்கு ஏதாவது ஒரு கட்டுப்பாட்டையோ விதிகளையோ ஏற்ப்படுத்தாதவரை”

   எதுவும் பதில் சொல்லவில்லை. முன்புபோல அதனுடன் பேசும் ஆர்வமும் இல்லை. எல்லாமே எனக்கு கொஞ்சம் மறினதுபோல இருந்தது அவளின் கவலைகளைக்  கேட்டதில் இருந்து.

    அவளைப் பார்க்க எனக்குள் ஏதோமாதிரி இருந்தது.ஊரில் இருந்தக்  காலத்தில் அப்படியொன்றும் என்னுடன் பேசியதில்லை எதிர்காலத்தைப் பற்றி. ஏன் அன்பைக்கூட வெளிப்படையாகக்  காட்டியது இல்லை. மௌனம் அல்லது வெட்கம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அணிந்து மறைத்தே வைத்தாள். நான்தான் அவளைக்  காதலிக்கிறேன் என்ற பெயரில் அதிகமாகத்  தொந்தரவு செய்து இருக்கிறேன்.

    அவள் பேச இயலாதத் தருணங்களில் புரிந்துகொள்ளாமல், என்மேல் உனக்கு காதல் இல்லை ஒன்றுமில்லை என்று சொல்லி அவளை அழவைத்து இருக்கிறேன். அப்படியிருந்தும் மறுபடியும் அவளே என்னிடம் வரும் காரணத்தை இப்போது புரிந்துகொள்ள முடிந்தது என்னால்.

 இந்த சிந்தனைகள் மனதில்  இருக்கும்போது......

    விண்கலம் ஒருசிறிய அதிர்வுகளுடன் சிறியச்  சத்தத்தை எழுப்பியது. பயம் கலந்தப்  பார்வையில் இருவருமே அந்த உருவத்தைப்  பார்க்க...

   “அந்தக்  கிரகம் வந்துவிட்டது இறங்குவதுக்கு முன் இந்தக்  கிரகத்தின் தட்பவெட்ப நிலைக்கு உங்களின் உடம்பை கொண்டுவரவேண்டும்” என்று சொன்னபடி இருக்கையில் இருந்து இறங்கிய அது தள்ளியிருந்த பொத்தான்களை தட்டியது.

“எங்களை இறக்கிவிட்டவுடன் உன் வேலை முடிந்ததா? தனியாக விட்டுவிட்டு போய்விடுவாயா?” என்றேன்

   “இல்லை உங்களுக்கு இந்த கிரகத்தைப் பற்றி சில அடிப்படைத் தகவல்களை சொல்லிவிட்டு சிலகாலம் உங்களைக்  கண்காணிக்கும் பணி  எனக்கு உண்டு” என்றது.

இப்பொது அந்த விண்கலத்தில் குளிர் பரவி, வெளிச்சம் மங்கிய நிலையில் பூமியின் மாலை நேரம் போல இருந்தது.

  வெளியே போகலாம் என்று சொன்னபடி கதவைத்திறந்து விட சிறிய சப்தத்துடன் திறந்த கதவின் வெளியே இருந்து சில்லென்று காற்று எங்களின் மீது மோதியது.

   அங்கேயும் கொஞ்சம் இருட்டுதான். குளிர்ந்தக்  காற்று பட்டவுடன் இதுவரையில் விண்கலத்தில் இருந்த எங்களின் கண்களில் கொஞ்சம் கண்ணீர் வழிந்தது. அதுதான் முதலில் இறங்கியது.தொடர்ந்து நான் இறங்கினேன்.என் கையை அவள் பிடித்துக்கொண்டு பின்னால் வந்தாள்.

    இறுக்கமில்லாத சாம்பல் போன்ற மண்ணில் கால் பதிய நடந்தோம். காற்று திசை மாறாமல் ஒரே சீராக வீசுவது போல இருந்தது. அங்கு நிலவுவது இரவா பகலா என்பதை அறிய வானத்தைப்  பார்த்தேன், வெள்ளிகள் தூரத்தில் மினுங்கின. இரவாக இருக்கலாம்.ஆனாலும் கொஞ்சம் வெளிச்சமாகவே இருந்தது. ஒருவேளை இப்போதுதான் அந்தக் கிரகத்தின் நட்சத்திரம் நாங்கள் இருக்கும் இடத்தைக் கடந்து போய் இருக்கலாம்.,

அது ஒரு இடத்தில் நிற்க நாங்களும் நின்றோம் சுற்றிப் பார்த்தது அது.

“இங்குப்  பக்கத்தில் நீங்கள் தங்குவதுக்கு எல்லா காரணிகளும் சரியாக இருக்கும்படி ஏதாவது இரு இடத்தைப்  பார்க்கவேண்டும்” என்றது

“அப்போ நீ எங்க தங்குவே?”

“என் விண்கலத்தில்”

“அப்போ நாங்கள் மட்டும் ஏன் வெளியில் தங்கவேண்டும்?”

“மறந்துவிட்டியா நீங்கள் இனிமேல் இங்குதான் இருக்க வேண்டும்”

   சொன்னவுடன் ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தது. அது என்ன திசை என்று யூகிக்க முடியவில்லை. அதுக்கு அந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தைச் சுற்றும்   ஒரு சுழற்சியைப்  பார்த்தால் போதும், நமது பூமியைப்  போல உதிக்கும் திசை கிழக்கு என வைத்துக் கொண்டால் மற்ற திசைகளைக் கணிப்பது எளிது.ஆனால் எங்கு தேடியும் நிலவு இல்லை. அவள் மட்டும் நல்ல மன நிலையில் இருந்தால் இந்நேரம்..

இங்கு நிலவு இல்லை- ஆனால்
நீயிருக்கிறாய் எனக்கு..

   என ஏதாவது மொக்கையாக ஒரு கவிதையைச் சொல்லி அவளைச் சந்தோசப்படுத்தி இருப்பேன். இப்போது அவள் இருக்கும் நிலைமையில் இதைச்  சொன்னால் என்னை விட்டுவிட்டு அந்தக்  கிரகத்தில் தனியாக கிளம்பினாலும் கிளம்பிவிடுவாள்.

    தூரத்தில் அடர்ந்த காடுகள் போல இருந்ததன. ஆனாலும் இதுவரையில் தரையில் சிறு செடிகளோ புற்களோ தென்படவில்லை. அது அந்த இடத்தை நோக்கி நடந்தது. மரங்கள் அசையவில்லை அங்கு நிலவிய வீசி அடிக்கும் காற்றிலும். அருகில் நெருங்கியிருந்தோம். அவள் அந்தக் காட்டை மட்டும் பார்க்காமல் எல்லாபக்கமும் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். எதுவும் பேசவில்லை இன்னும். அது எங்களை வழிநடத்த அதன் பின் இருவரும் சென்று கொண்டு இருந்தோம். கொஞ்சம் அருகில் போனபோதுதான் தெரிந்தது எந்த மரத்திலும் இலைகள் இல்லை என்று. வெறுமனே கிளைகளோடு மரம் நின்று போயிருந்தது. அங்கு காற்று வீசும் சப்தம் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. சிறு பூச்சிகள், பறவைகள் என எந்த ஜீவனும் இருப்பதாக அறிகுறிகள் இல்லை.

அது ஒரு இடத்தில் நின்றது. சுற்றியும் பார்த்துவிட்டு..

“இப்போதைக்கு இந்த இடம் எனது தேர்வு உங்களுக்கு” என்றது.

“இப்படியேவா தங்குவது?”

  “இல்லை நான் உங்களுக்கு கூடாரம் அமைத்துத் தருவேன். அதுக்குத்  தேவையான பொருள்களை விண்கலத்துக்குச் சென்று எடுத்துவருகிறேன் நீங்கள் எங்கும் நகராமல் இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

   அது போகும்வரை அதனையே பார்த்துக் கொண்டு இருந்த நாங்கள் திரும்பி மரங்களுக்குள் பார்வையைச்  செலுத்தினோம். கொஞ்சம் உயரமான மரங்கள் நமது பூமியில் தென்னை மரங்களுக்கு இடையில் கிளைகள் முளைத்தால் எப்படி இருக்கும் அது மாதிரி. பார்த்ததில் எல்லா மரங்களும் ஒரே ரகம் இல்லை என்பது தெரிந்தது.

  அவள் தரையில் உட்கார்ந்தாள். நானும் சற்றுத்தள்ளி அமர்ந்தேன். அவளைப் பார்க்கவில்லை. தலையைக்  கவிழ்த்து முனங்கால் மீது வைத்து எதையும் பார்க்க இஷ்டம் இல்லாதது போலத்  தன்னை வெளிப்படுத்தினாள்.

“ஏன் பேசமாற்றே?”

தலை நிமிர்ந்தவள் “என்ன பேச?”

“என் மீது என்ன தப்பு இருக்கிறது எல்லாமே எதோ நடப்பது போல நடந்து கொண்டிருக்கிறது”

“நான் உன்மீது தப்பு என்று எப்போ சொன்னேன்?”

“பின்னே ஏன் இப்படி பேசாமல் கொல்கிறாய்?”

  “நடப்பது எப்படியோ நடந்துவிட்டுப்  போகட்டும் ஆனால் நீ அதை எப்படி எதிர்கொள்கிறாய் என்பதில்தான் என் கோபம், இதில் உனக்கு ஒரு சந்தோசம், ஆர்வம் நீ படித்த அறிவியல்புனைவு கதைகளை உன் கண்முன்னால் அப்படியே விரிகிற உணர்வு உனக்கு அதைத்தவிர வேறொரு எண்ணமும் உனக்கில்லை அப்படித்தானே?”

    கிட்டதட்ட அவள் சொல்வது உண்மைதான்.தொடக்கத்தில் இருந்து நடப்பவை எல்லாமே நான் கற்பனையில் சிந்தித்துப்  பார்த்தவைகள் மட்டுமே. அது இப்போது எனக்கே நிகழும்போது  ஆர்வமாக எதிர்கொள்ள முடியுதே தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை. ஆனால் என்னோடு அவள் இருக்கிறாள். என்னைக்  காதலிக்கிறாள், திருமணம் செய்யவேண்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள். இதை நான் மறந்திருந்தேன். அவள் சொல்ல வருவதும் அதுதான் அந்த எண்ணம் இருந்திருந்தால் எப்படி இந்த பிரச்சினைகளில் மீள்வது என்பதை யோசிக்கத் தோன்றியிருக்கும்.

   இப்போது யோசித்தாலும் பயனில்லை என்றே தோன்றியது. கிரகம் வந்தாயிற்று. இன்னும் சில நாட்களில் அந்த வேற்றுகிரகவாசி எங்களைத்  தனித்து விட்டுச் சென்றுவிடலாம். அதுக்குப் பிறகு எங்களால் தப்பிக்க முடியாது. அதே நேரத்தில் இதே கிரகத்தில் எவ்வளவு நாட்கள் நலமுடன் எங்களால் வாழமுடியும் என்பதும் எங்களுக்குத்  தெரியாது.

“சரி இப்போ என்ன செய்ய சொல்லு?”

“ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிதான் இப்படிக்  கேட்குறியா?”

“சரி உண்மைக்கே அது சொன்னது போலத்  தப்பிக்கணும்னு யோசிச்சியா என்ன?”

“ஆமாம்”

“எந்த எண்ணத்தில் அப்படி  யோசிச்சே? எல்லாமே நமக்குப்  புதுசு? என்ன தெரியும் நமக்கு?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது எனக்குத் தேவை திரும்பிப்  போகவேண்டும்”

“இனி சாத்தியமில்லையே”

“அப்போ இங்கயே கிடந்து சாகலாம்”

“ஏன் இப்படிச் சொல்றே?”

“வேறெப்படிச் சொல்ல?”

“சரி தப்பிக்கலாம் ஆனால் அதன் முன்னாடி நாம் இருவருமே இதைப்பற்றி எப்போதுமே நினைத்துப் பார்க்ககூடாது”

“எப்படி தப்பிக்க இந்தக்  கிரகத்தில் இருந்து அப்படியே நமது பூமிக்கு குதிக்கச்  சொல்றியா?”

“அப்படி இல்ல எதாச்சும் ஒரு வழி இல்லாமலா போய்டபோகுது” என்றேன் நம்பிக்கையில்லாமல்.

  அதக்குள் அது நிறையா பொருள்களை ஒரு வண்டி போன்ற ஒன்றில் எடுத்து வந்தது. அந்த மரங்களுக்கு பக்கத்தில் அதை வைத்தது. சிலவினாடிகளில் அந்த வண்டியே ஒரு கூடாரமாக மாறியிருந்தது.

“இது ஒரு சிறு வண்டியோடு இணைக்கப்பட்ட கூடாரம் நீங்கள் எளிதில் பயணிக்க நாங்கள் உங்களுக்கு அளிக்கும் தொடக்கக் காலச் சலுகை” என்றது.

“நாங்கள் அந்தக்  கூடாரத்தையேப்  பார்த்துக் கொண்டிருந்தோம்.

“என்ன மறுபடியும் தப்பிக்க எண்ணம் வருகிறது போல?”

   திக்கென்றது மனதில் நினைப்பதை மட்டும்தானே அறியமுடியும் என்றது இப்போது எப்படி பேசிமுடித்ததைச்  சொல்கிறது என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது..

“இப்போது இரண்டு பேருமே சேர்ந்து பேசி இருக்கீங்களா என்ன?”

   எங்களிடம் ஏதும் பதில் இல்லை என்பது போல இருந்தோம். நீதான் இப்போது தப்பிப்பதைப்  பத்தி யோசிச்சியா? என்பதைப் போல அவளை பார்த்தேன் அவளும் அதை ஆமோதிப்பது போலத்  தலையைக்  குனிந்தாள்.

  “சரி தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் இருப்பதாக நீங்கள் யோசித்து இருக்கிறீர்கள் என்பதைச்  சொல்லுங்கள் நான் அது தேறுமா? தேறாதா? என்பதை இப்பயே சொல்லுகிறேன்” என்றது

  அதே அமைதி எங்களிடத்தில் உண்மையில் எப்படித்  தப்பிப்பது என்பதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

அது மீண்டும் கேட்டது..

“எப்படி தப்பிக்கப்  போறீங்க?”

தொடரும்...2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வேற்று கிரகத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க வழி தேடும் அறிவியல் புனைவுக் கதை, பரபரப்பாக இருக்கிறது.
அந்த 'அது'வுக்கும் அந்த கிரகத்திற்கும் ஏதாவதொரு
பெயர் வைத்துவிடுங்களேன்.

கணேஷ் said...

சரி கண்டிப்பாகப் பெயர் வைத்து விடுகிறேன்
நன்றி