நிலை மாற்றம்...

    மண்டை ஓட்டு படத்தை வைத்து எதையோ  தேடிக்கொண்டு இருந்த தன் அப்பாவிடம், முகியின் ஓவியக்கண்காட்சிக்கு அழைத்து போகுமாறு கேட்டாள்..மதி

    "இல்லை எனக்கு முக்கியமான வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வா" என்றார் வைத்தி

    "இந்த மண்டை ஒட்டு படங்களை எத்தனை வருடங்கள்தான் ஆராய்ச்சி பண்ணுவிங்க உங்க மகளோட கொஞ்ச நேரம் ஒதுக்குங்க" என்று ஒருவழியாக சண்டை போட்டு அங்கு போக சம்மதிக்க வைத்தாள் மதி..

    வைத்தி இப்போது இருக்கும் மூளை சிகிச்சை மருத்துவர்களில் முதன்மையானவர்..இது சம்பந்தமாக பல விதமான ஆராய்ச்சிகள் செய்து பல விருதுகளை வாங்கி இருப்பவர்..தனது வீட்டின் ஒருபகுதியை தனது ஆராய்ச்சி கூடமாக மாற்றியிருந்தார்...அவரின் இப்போதைய ஆராய்ச்சி மூளை மாற்று அறுவை சிகிச்சை....அதை செய்யும் வழிமுறைகள், அதில் வரும் சிக்கல்கள் போன்றவற்றை பற்றி

    கண்காட்சி இடத்தில் அதிக கூட்டம்..ஓவியர் முகி மிக பிரபலமானவர்..அவரது இயற்கையுடன்  இக்கால நவீனத்துவம் நிறைந்த ஓவியங்கள் பிரபலம்..

     உள்ளே நுழைந்து மதி ஒவ்வொறு ஓவியமாக ரசித்து பார்த்துகொண்டு இருக்க..வைத்தி வேண்டாவெறுப்பாக அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தார்..சில இடங்களில் நின்று அவள் பார்த்த ஓவியத்தை பற்றி அவரிடம் விளக்கும் போது "உம" மட்டும்  கொட்டினார்...

    கடந்து செல்லும் வழியில் முகியை சுற்றி பலபேர் நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் தன் அப்பாவிடம் தன்னையும்  அறிமுகம் செய்து வைக்கச்சொல்ல...இருவரும் அவரை நெருங்கினார்கள்..

    அறிமுகம் செய்து கொண்ட வைத்தி..முகியின் ஓவியத்தின் மீது தனது மகளுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி சொல்லி தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார்...மதிக்கு சந்தோசம்....

    வீட்டிற்கு செல்லும் வழியில் "என்ன மண்டை ஓட்டு படங்களை விட முகியின் ஓவியம நன்றாகத்தானே இருக்கு?" என்றாள்

    "ஆமாம் நல்லத்தான் இருக்கு ஆனால் எனக்குத்தான் ஒண்ணுமே புரியலை" என்றார் வைத்தி சிரித்துக்கொண்டே...

    மறுநாள் வைத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு அவசர அழைப்பு வந்தது...

    பிரபல ஓவியர் முகி விபத்தில் சிக்கி அவரது கீழ்வயிற்று பகுதி முழுவதும் சிதைந்து விட்டதாகவும்..தலையில் சிறிய காயங்கள் இருப்பதாகவும் ஆனால் நினைவு இழந்து இருப்பதாகவும் சொன்னார்கள்...


   வைத்திக்கு அதிர்ச்சி..நேற்று இரவுதான் சிரித்து பேசினார்...விரைவாக முகி வைக்கபட்டு இருந்த அறைக்கு சென்றார்...

     அடிவயிற்றில் பெரிய ரத்தகறை படிந்த கட்டுடன் கிடத்தபட்டு இருந்தார்....முதலில் அவரது மூளை என்ன நிலையில் இருக்கின்றது என்பதை ஆராய வேண்டும்...

     சிறிய காயம என்பதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை..அதிர்ச்சியில் நினைவு இழந்து இருக்கலாம்..நினைவு வந்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்ற தனது அறிக்கையை சமர்பிக்கும்போது....முகியின் உடல்நிலையை பற்றி சக மருத்துவரிடம் கேட்டார்...

     நெஞ்சுபாகம் முதல் வயிறு வரை சிதைந்து இருப்பதாகவும்...இதனால் நுரையீரல் நசுங்கி பாதிப்பு அடைந்து இருக்கின்றது...தானக இயங்கும் சக்தி இல்லை...பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள்...

    வைத்திக்கு வருத்தம்..நேற்றுதான் தனது அன்பு மகளின் ஆசையை இந்த முகியோடு நிறைவேற்றினார்...இப்போது..

     வருத்தத்தோடு உட்கார்ந்து இருந்தார்...ஒரு யோசனை.... இவரது நெடுங்கால கனவும்கூட....முகியின் மூளையை ஏன் மாற்றி மற்றொருவருக்கு பொருத்தி அதை  செயல்பட வைக்கக்கூடாது...அவரது கடந்த கால ஆராய்ச்சிகளும் இதை பற்றி என்பதால் ஆர்வம அதிகமானது..

     சக மருத்துவரை அழைத்து பேசினார்..முகி உயிர் பிழைக்க இருக்கும் சாத்தியகூறுகளை பார்க்கும் போது அவர் பிழைக்க மாட்டார் என்றே சொன்னார்கள்...அவரது இந்த மூளை மாற்று விசயத்தை சொன்னபோது தயக்கத்தோடு சம்மதித்தார்கள்...

    முதலில் அதே மருத்துவமனையில் மூளை பெறும் பாதிப்புக்கு உள்ளாகி உடல் நன்றாக செயல்படும் விதத்தில் இருக்கும் ஒரு ஆளை தேர்ந்து எடுத்தார்கள்...அந்த ஆள் இளம் வயதுக்காரர்...மூளையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால தனது உடலின் செயல்பாட்டை இழந்து இருப்பவர்...

    வைத்தி யோசித்தது..முகியின் மூளையை இந்த ஆளுக்கு பொருத்துவதின் மூலம் ஒருவரின் உயிரை காப்பாற்றலாம்...அதே நேரத்தில் முகியின் ஓவியதிறனும் மறையாமல் இருக்கும்....

     வைத்தி அறுவை  சிகிச்சைக்கு முன் சக மருத்துவர்களுக்கு உணர்த்தியது......இது நாம் செய்ய போகும்  முதல் மூளை மாற்று அறுவை சிகிச்சை...முதலில் முகியின் மூளையை தனியாக பிரித்து எடுப்போம்..அப்படி எடுக்கும்போது முதலில் அவரது மூளைக்கு தங்கு தடையின்றி oxygen செல்லுமாறு பார்த்துகொள்ளவேண்டும்...அதன் neuron கள் பாதிப்பு அடையாமல் காப்பாத்துவது  முக்கியம் ....ஒரு வினாடி தடைபாட்டலும் நமது முயற்சி வீண்...அதே நேரத்தில் யாருக்கு முகியின் மூளையை பொறுத்த போகின்றோமா அவரது மூளையை முழுவதும் வெளியில் எடுப்பதற்கு முன்..ஏற்க்கனவே வெளியில் செயற்கையாக இயங்கி கொண்டு இருக்கும் முகியின் மூளையின் கட்டளைகளை அந்த நபரின் nerve cell களோடு இணைப்பதின் மூலம் அந்த நபரின் உடல் இயக்கங்களை  நாம் எளிதாக கட்டுபடுத்தலாம்....அப்புறம் அந்த நபரின் பாதிக்கப்பட்ட மூளையை முற்றிலும் அகற்றிவிட்டு முகியின் மூளையை இயங்க செய்வது .....

      ஆனால் இது எல்லாம் சாத்தியமாக இருவரின் neuron களும் சரியாக பொருந்த வேண்டும்...என்பது வைத்தியின் கருத்து ...


     செயலில் இறங்கினார்கள்...முதலில் முகியின் மூளையை செயற்கையான முறையில் சுவாசிக்க செய்தனர்..பின் அதன் nerve cell களை அகற்றி வெளியில் குறைந்த வெப்பநிலையில் வைத்தனர்...அடுத்து மற்ற நபரின்  சரியான nerve  cell களை கண்டறிந்து தனிமைபடுத்தி அதை வெளியில் செயற்கையாக சுவாசம் பெறும் முகியின் மூலையோடு இணைத்தனர்....அடுத்து அந்த நபரின் துண்டிக்கப்பட்ட மூளை அகற்றப்பட்டு முகியின் மூளை சரியாக பொருத்தப்பட்டு... இயக்கபட்டது ...

     அந்த நபரின் அனைத்து உடல் விசயங்களும் சோதனை செய்யபட்டது...ஏதாவது ஒரு neoron தகவலை சரியாக கடத்தவில்லை என்றாலும் அது ஏதாவது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதே அனைவரின் கவலை...அதிருஷ்டவசமாக எல்லாம் சரியாக பொருந்தி செயல்பட்டது...

     அவர்  கண் விழித்தார்...கைகள் அசைந்தன..எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்...கண்கள் முழுவதும் திறக்க கஷ்டப்பட்டார்....வைத்தி உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி...அந்த நபர் கொஞ்சநேரத்தில் பேச ஆரம்பித்தார்...

    அனைவரும் காண விரும்பியது முகியின் மூளையை வைத்து இருப்பவர் அவரைப்போலவே ஓவியம வரைவார? என்றுதான்...

    அவரை சில சோதனைகள் எடுக்க அழைத்து செல்லும்போது வைத்தி அந்த நபரிடம் சில வார்த்தைகள் பேசினார்...

"நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றார் வைத்தி..

    "தலையில் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கு...அப்புறம் என் கண்ணுக்கு கருப்பு வெள்ளையை தவிர மற்ற வண்ணங்கள் எதுவும் தெரியவில்லையே  ஏன்?" என்றார் அந்த நபர்..

     வைத்திக்கு எங்கு தவறு நடந்து இருக்கின்றது என்பது புரிந்தது.....ஒன்று விபத்தில் முகியின் மூளை அடிபட்டதில் ..அல்லது..அறுவை சிகிச்சையின் போது தவறான இணைப்பில் நபரின் பார்வை நரம்புகள் பாதிக்க பட்டு இருக்கின்றது....

      சில சோதனைகள் செய்த பின்னர் எல்லோரும் ஆர்வமாக காத்து இருக்கும் அறைக்கு அந்த நபர் கொண்டுவரப்பட்டார்.அங்கு வைத்தி இல்லை...அவரது முன் ஒரு வரைபலகையும்..தூரிகையும் இருந்தது...அங்கு இருந்த ஒருவர் "ஒரு நிலை மாற்றத்துக்கு பின் நீங்கள் வரையும் முதல் ஓவியத்தை வரையுங்கள்" என்று சொல்ல...

    அந்த நபர் கோபமாக பார்த்து கொண்டே .."எத்தனை தடவை சொல்வது எனக்கு கருப்பு வெள்ளையை தவிர வேற வண்ணங்கள் தெரியவில்லை என்று..இதில் எப்படி வண்ண ஓவியம வரைவது"..






(மூளை மாற்று அறுவை சிகிச்சை எனபது இப்போது சாத்தியமில்லைதான....இன்னும் இதற்கு எலிகளை வைத்துதான் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம்....ஆனால் சீக்கிரம் வரலாம்...இது என் கற்பனைதான்...ஆனால் மேலே நான் சொல்லி இருக்கும் பிரச்சினைகள் ஒரு மூளை மாற்று சிகிச்சை செய்யும்போது ஏற்ப்படும் சில அடிப்படையானவை ...மற்றபடி சிகிச்சை முறை என் கற்ப்பனை...)

ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் – 3




    கடந்த பகுதிகளில் குவாண்டம் தத்துவத்தை ஏன் ஐன்ஸ்டீன் ஒரு முழுமையான தத்துவம் இல்லை என்று மறுத்தார் என்பதை பார்த்தோம்...அதற்கு காரணம் துகளின் (எலெக்ட்ரான்) சுழற்சியை சரியாக சொல்லமுடியாது என்பதே..

    சரி ஏன் இப்படி? என்ன காரணம்?அப்படி எலக்ட்ரோனை அளக்க அது எங்கு போகின்றது? அதை எதுக்கு அளக்க வேண்டும்? போன்ற கேள்விகள் இருந்தால் போன பதிவுகளை நீங்கள் கொஞ்சம் தெளிவாக படித்து இருகிறீர்கள் என்று அர்த்தம..

    இல்லை இந்த கணேஷுக்கு வேற வேலை இல்லை...ஏதாவது அவனுக்கு மட்டுமே புரிகின்ற மாதிரி எழுதிகொண்டு நம்மிடம் கேள்விகள் கேட்பான் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து விட்டு மீண்டும் இதே பழைய பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்...

    மேலே நான் சொன்ன கேள்விகளுக்கு விடை புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் அணுவை பற்றி தெரிந்து இருக்கவேண்டும்..அணுவை பற்றி சொல்ல போகின்றேன் என்றவுடன் .....முதன் முதலில் கி.மு 400 வருடத்தில்......என்று ஆரம்பிக்க விரும்பவில்லை.....அந்த விசயங்கள் எல்லாம் நான் இங்கு சொல்ல போவதற்கு தேவையில்லாதவை ....

   ஏனென்றால்.... ஒருவர் மற்றொருவரிடம் ஆலமரத்தை பற்றி சொல்லும்போது இது 100 வருடத்திற்கு முன் இவரால் நட்டபட்டது..அதுக்கு முன்னாடி இது விதையாக இருந்தது..இந்த வருடத்தில் இது இவ்வளவு உயரம் இருந்தது..என்று சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர் அதே மரத்தடியில் குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்...


    அதனால் அணு என்றால் இப்போதைக்கு எப்படி நாம் காண்கிறோம் என்பதை மட்டும் பார்ப்போம்..அதுதான் நாம் இங்கு பார்க்கபோகும் விசயத்திற்கு தேவையும் கூட..


    நியுட்ரோன்,ப்ரோட்டான் இந்த இரண்டும சேர்ந்து அணுவின் மையத்தில் நியுக்லி என்ற பெயரில்  இருக்கும்... , இந்த நியுக்லி மையமாக வைத்து எலெக்ட்ரான் சுற்றி வரும்.இதுதான் இப்போதைய அணுவின் புரிதல்... இதில் எலெக்ட்ரான் ஒரு வட்டத்தில் சுற்றி வருவதாக சிறுவயதில் படித்து இருப்போம்..அது தவறு...ஏன்?

    இதில் தான் பிரச்சினை.....இதுக்குத்தான்..ஐன்ஸ்டீன் சண்டை போட்டார்.. உணமையில் அந்த எலேக்ட்ரோன்கள் எப்படி,எந்த பாதையில்  NUCLEI ஐ சுற்றுகின்றது என்பதை யாராலும் சொல்ல முடியாது..இதைத்தான் ஐன்ஸ்டீன் சரியாக சொல்லவேண்டும் என்றார்..

    கொஞ்சம் விரிவாக பார்ப்போம் .....நியுக்லியை எலெக்ட்ரான் சுற்றி வருகின்றது என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியுமே தவிர .... எந்த பாதையில்,எவ்வளவு வேகத்தில்.. என்ன நேரத்தில்.. அது எங்கு இருக்கின்றது என்பதை(அடக்கி ஒரே நேரத்தில்) சொல்ல  முடியாது.....இதில் எதையாவது ஒன்றை மட்டும்தான் துள்ளியமாக சொல்ல முடியும்...இதை மையமாக வைத்துதான் ஹெசின்பெர்க் uncertainty தத்துவத்தை வெளியிட்டார்..இதைத்தான் ஐன்ஸ்டீன் மறுத்தார் ....இருந்தும் நாம் அதை வட்ட வடிவமாக சொல்ல காரணம்..... நியுக்லியில் இருந்து எலெக்ட்ரான் சுற்றும் தூரங்களுக்கு இடையே உள்ள சக்தி நிலையை (ENERGY LEVELS) குறிப்பதற்கு மட்டுமே..

    ஏன் சரியாக சொல்ல முடியாது என்றால் சுற்றி வரும் எலக்ட்ரோன்களை நாம் அறிய  முயலும்போது அதன் இயல்பு தன்மை பாதிக்கும்..இப்போது அதன் உந்தத்தை நாம் துள்ளியமாக அளக்கும்போது அதன் இருப்பிடம் நமக்கு சரியாக தெரியாது... தெரியாது என்பதை விட அதை தெரிந்து கொள்ளும் நுட்பம் நம்மிடம் இல்லை..அதைத்தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்... 


    சரி இந்த மாதிரி எலேக்ட்ரோன்கள் ஒரு நிலையில் இருந்து மற்ற நிலைக்கு மாறும்போது என்ன நடக்கின்றது என்றால்.. (மேலே உள்ள படத்தை பெரிது படுத்தி பார்க்கவும்) நியுக்லியில் இருந்து விலகி தூரமான அடுத்த நிலைக்கு சென்றால் அந்த எலெக்ட்ரான் போட்டோனை கிரகிக்கும் அல்லது உள்வாங்கும்...அதே நேரத்தில் எலெக்ட்ரான் ஆனது நியுக்லியை நெருங்கிய சக்திநிலைக்கு தாவினால் அது (ஆற்றல்) போட்டோனை உமிழும்..அப்படி உமிழும் போட்டோன் அது ஏற்க்கனவே கிரகித்த போடோனின் அளவில் இருக்கும் என்கிறார்கள்..... அதுதான் நாம் காணும் ஒளி...எலக்ட்ரான் தாவும  சக்திநிலைக்கு ஏற்ப ஒளியின் தன்மை மாறும்... இப்படி போடோனை எலெக்ட்ரான் கிரகித்து உமிழவில்லை என்றால் நமது பிரபஞ்சத்தில் ஒளி கூடிகொண்டே போய் மிக பிரகாசமாய் இருக்கும்.........


   மேலே அணுவை  பற்றி சொன்னதில் ஒரு சிறு பகுதியைத்தான் பார்த்தோம் இன்னும் அதில் அடிப்படை துகள்கள் (பெர்மியன்கள்,போசொன்கள்.,லேப்ட்டன்கள்,க்ளுவான்கள்) என்ற பெயரில் பல ன் கள் உள்ளன....

    இதுவரை பார்த்த விசயங்களில் இருந்து  குவாண்டம் தத்துவம் என்பது மிகசிறிய அளவுகளுக்கான அணுக்கள் மற்றும் துகள்களுக்கான (sub atomic particles) ஒன்று என்பது தெரிந்து இருக்கும்...

   மேலே சொன்னவை குவாண்டம் தத்துவத்தில் உள்ள சில அடிப்படையான விசயங்கள்..இதில் பல பிரிவுகள் பல விசயங்களை விளக்குகின்றன...அவற்றை அடுத்து வரும் பகுதிகளில் கொஞ்சம் பார்க்கலாம்..

  

 







கிழித்த கடிதங்கள் - 2

துடிப்பை நிறுத்த போகும் எந்த

இதயமும் முன்னே சொல்வதில்லை 

நான் நிற்கப்போகிறேன் அதனால்

இறக்கபோகிறாய் என்று.....



ஆனால் பாழாய்ப்போன என்

இதயம் மட்டும் தினம் தினம் என்னை

இம்சை செய்கின்றது  -   நீயில்லை

என்றால் நின்றுவிடுவேன் என்று....



    படித்தவள் அப்படியே கடிதத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்... 

நான் பேச வாய் திறப்பதற்குள் அவள் பேச ஆரம்பித்தாள்...

        "கணேஷ் உன்னிடம் போனமுறை அப்படி நடந்து இருக்ககூடாது......ச்சே..நீ எழுதி கொடுத்த கவிதையை கூட கிழித்து போட்டு விட்டேன்.......உன் காதல் இந்த கவிதையில்  தெரியுது .....என்னை மன்னித்துவிடு இப்போதுதான் உன்னை புரிந்துகொண்டேன் இனிமேல் அப்படி செய்யமாட்டேன்" என்றாள்

       "இல்லை...போனமுறை நீ எனது கவிதையை கிழித்துப்போட்டு விட்டதால்...உனக்கு எந்தவிதமான  கவிதை பிடிக்கும் என்பதை அறிய நான் வேறொருவர் எழுதிய கவிதையை கொண்டுவந்தேன்.... அதுதான் நீ இப்ப  படிச்சது...இந்த கவிதை உனக்கு பிடித்து இருந்தால் இதே மாதிரியான கவிதைகள் நான் உனக்கு எழுதி தருகிறேன்" என்றேன்..


      முறைத்து பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் வேகமாக சென்றுவிட்டாள்...நான் கொடுத்த கவிதை சிறுகாகித துண்டுகளாக என்னை சுற்றி  காற்றில் பறந்துகொண்டு இருந்தது....

உண்மையில்...

     என்னைத்தேடிவந்த மூவரில் ஒருவர் என்னவளின் அப்பா.....மற்ற இருவர் ஊரில் உள்ள பெரியவர்கள்...வீட்டிற்குள் இருந்து வரும்போதே வெளியில் நின்று இருந்தவர்களை பார்த்தவுடன் பயம் தொற்றி கொண்டது..


      விடுமுறைக்கு வந்ததில்.... நேற்றுதான் யாருக்கும் தெரியாமல் நாங்கள் சந்தித்து பேசினோம்...நிறையா விசயங்கள் சொன்னாள்..அவளின் கண்களில் காதல் அதிகமாய் இருந்தது... அதே எண்ணத்தில் அன்றைய இரவு தூக்கத்தில் என் பெயரை சொல்லி ஏதாவது உளறி இருப்பாள்..அந்த விசயமாகத்தான் அவளது அப்பா  ஊர் பெரியவர்களை அழைத்து வந்து இருக்கிறார் என்பதே என் பயத்தின் காரணம்....


      நல விசாரிப்புகளுக்கு பின் "எங்களோடு கொஞ்சம் வரமுடியுமா?" என்று கேட்டார்கள்...கொஞ்சம் மனம் நிம்மதி .....நல்லவேளை காதல விசயம் இல்லை.."வருகிறேன்" என்று சொல்லி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்....


     போகிற வழியில் கேட்டார்கள்..."நீ சங்கேத பாசை அலலது மறைத்து எழுதுதல் (encryption) முறையில் கதைகள் எழுதிகின்றாயமே?"


      "அது எப்படி உங்களுக்கு தெரியும்..... ஆமாம் சும்மா  கற்ப்பனை செய்து எழுதுகிறேன்" என்றேன்


      "அதே மாதிரி சங்கேத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று நமது ஊரிலும் இருக்கின்றது இதுவரை யாரும் அதை முயற்சிக்கவில்லை நீ முயற்சித்து பாரேன்" என்றார்கள்


      "நான் எழுதுகின்ற கதைகளில் அந்த எழுத்துக்களை அமைப்பதும்,அதை விடுவிப்பதும் என கற்பனையே..ஆனால் ஒரு உணமையான ஒன்றை என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை" என்றேன்


"இல்லை ஒருமுறை முயற்சி செய்துதான் பாரேன" என்றார்கள்..


"சரி எங்கு இருக்கின்றது" என்றேன்..



"நம்ம ஊர் சிவன் கோயிலில் ஒரு அறை கதவு மூடி இருக்கு அதை திறக்க வேண்டும்"


      போகின்ற வழியில் என்னவள் திண்ணையில் உட்கார்ந்து இருந்தாள்....அந்த இடத்தை கடக்கும்போது அவளை பார்த்தேன்...என்னை கண்டுகொள்ளவே இல்லை...யரோ போகிறார்கள் என்று திரும்பி உட்கார்ந்து இருந்தாள்...அடிப்பாவி... எப்படி எல்லாம்  நடிக்கிறாள் என்று நினைத்துகொண்டேன்


      கோயிலுக்கு போய் ஆறு ஏழு வருடங்கள் ஆகி இருந்தது...எந்த கோயிலுக்கும் போனதில்லை...விருப்பமில்லை அந்த சிவன் கோயில்  கோபுரங்கள் கொண்ட பெரிய  கோயில்..


     உள்ளே ஒரு மூலையில் அந்த கதவு இருந்தது...ஒரு சிறிய அறைக்கு சொந்தமானது ..முழுவதும் ஒரு கல்லால் செய்து இருந்தார்கள்...அதில் சில தமிழ் எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் கோணலாக எழுதபட்டு இருந்தது......அந்த எழுத்துக்களுக்கு மேல் இரண்டு காலடி தடங்கள் ....பள்ளமாக செதுக்கப்பட்டு இருந்தது ... அது சாதாரண மனிதனுடையது.......அதில் இருந்த எழுத்துக்கள்


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி


இதை பார்த்தபிறகு பின்னாடி நின்று இருந்தவர்களை பார்த்தேன்...


"என்ன முடியுமா?" என்றார்கள்


"கொஞ்ச நேரம் ஆகும் முயற்சி செய்கிறேன்" என்றேன்


"சரி" என்று வெளியில் சென்று விட்டார்கள்..


     அந்த எழுத்துக்களை ஒரு முறை பார்த்தேன் அதைவைத்து ஒரு வார்த்தைக்கு பதில் நிறையா வார்த்தைகள் அமைக்கும் வாய்ப்புகள் இருந்தன.....அப்படி அமைத்தாலும் அதை வைத்து எப்படி திறப்பது..கதவில் இருப்பது வெறும் ஒரு ஜோடி காலடி தடங்கள மட்டுமே.....மற்ற படி எல்லாமே சமபரப்பு...


       பொதுவாக சங்கேத பாசை என்றால் விசயத்தை முழுமையாக மறைத்து வைத்து இருக்க வேண்டும் அல்லது அதை குறிப்பால் உணர்த்தவேண்டும் ..இந்த இரண்டை தவிர வேறு எந்த முறையிலும் அமைக்க முடியாது


      இந்த எழுத்துக்களை பார்க்கும்போது இரண்டாம் வகை...எதையோ உணர்த்துகின்றது...அந்த எழுத்துக்களில் விசயம் இல்லை..ஆனால் அந்த எழுத்துக்கள் உணர்த்துகின்றன...


      அந்த இரண்டு காலடித்தடம்...ஒரு வேலை மனிதனின் காலை அங்கு வைத்தால் திறக்குமோ..அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் எதுக்கு....அந்த இரண்டு காலடிகளுக்கும் எழுத்துக்கும் தொடர்பு உண்டு....


       காலடி சம்பந்தமான விசயங்களை அந்த எழுத்துக்களோடு சேர்த்துபர்த்தேன்...பாதம்,அடி,ஈரடி,கால்..போன்ற வார்த்தைகள்...எதுவும் சேரவில்லை...அந்த எழுத்துக்கள் எப்படி கதவை திறக்க வேண்டும் எனபதை  சொல்கிறது...அந்த எழுத்தை வைத்து திறக்க முடியாது என்பது எனக்கு புரிந்து இருந்தது ....


     அந்த இரண்டு அடிகள்,சில எழுத்துக்கள் மட்டும்தான்  என் மனதில்.....இந்த இரண்டையும் எப்படி சேர்ப்பது...


      அந்த இரண்டு அடிகள் அல்லது ஈரடி...ஒருவேளை அந்த எழுத்துக்களை ஈரடிமான எண் வரிசையில் அமைத்தால்...பார்த்தேன்...ஆச்சர்யம் அதில் வரும் எழுத்துக்களில் முதல்  எழுத்தை  பார்த்தால் ஒரு அர்த்தம் கொடுத்தது......மற்ற எழுத்துக்கள் கொடுக்க வில்லை.....


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி   
இதை அமைத்தால் ....


ம்


ள் உ க சு


ப மி ச ம தி


வு உ அ க பூ பொ ன் ந


ம் தி   ப  ம கெ   ச  சு  மி  றி  கி




     கிடைத்த வார்த்தை "தள்ளவும்"  அப்படிஎன்றால் இந்த கதவுக்கு ஒரு பூட்டும் இல்லை..சும்மா தள்ளினலே திறக்கும்...இதைத்தான் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்து இருக்கிறார்கள்..கடவுள் விசயம் என்றாலே எதையும் யோசிக்காமலேயே முரட்டு தனமாக பின்பற்றுபவர்கள இதை செய்து இருக்க  வாய்ப்பு இல்லை...


வெளியில் வந்தேன்...ஆர்வமாக கேட்டார்கள் "என்ன விடை கிடைத்ததா?"


    அது சும்மா தள்ளினாலே திறக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை...காரணம் என்னவளின் அப்பா வேறு இருந்தார்..இப்போது எனது திறமையை நிரூபித்தால் பின்னாளில் காதலுக்கு உதவும் என்று எண்ணி...


"அதை நான் திறந்துவிட்டேன் போய் தள்ளுங்கள் திறக்கும்" என்றேன்
போய் தள்ளினார்கள் அந்த பாறை கதவு பின்னோக்கி நகர்ந்தது

யாரோ...

    சொத்து என்றால் அவனது உடலை தவிர வேறொன்றும் இல்லை..அவனது இருப்பிடம் ஊருக்கு வெளியில்.. அவன் தங்கியிருந்த இருந்த இடத்திற்கு வலது புறம பழைய புத்தக கடையும்,எதிரில் ஒரு டீ கடையும் இருந்தது...

    கொஞ்சம் தள்ளி பேருந்து நிறுத்தம்...வீடுகள் ஏதும் அருகில் இல்லை..இவனது கூடாரம் ஒரு கனமான சாக்கு போன்ற ஒன்றை மூன்று கம்புகளால் தூக்கி நிறுத்தி அதன் பக்கவாட்டில் காற்று தூக்காமல் இருக்க கல்களை வைத்து இருந்தான்...

    அவன் அந்த ஊருக்கு எப்படி வந்தான் என்று யாருக்கும் தெரியாது..வந்த போது அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை...தொடக்கத்தில் சுற்றி திரிந்தவன் இப்போது கூடாரம் அமைத்து இருக்கிறான் என்பது மட்டும் தெரியும்....

    அமைதியானவன்..யாருடனும் பேசுவது இல்லை...தொடக்கத்தில் எதிரில் இருந்த டீகடையில் கொடுத்ததை சாப்பிட்டவன்..இப்பொது அந்த பழைய புத்தக கடையில் சிறு வேலைகள் செய்வதால் அந்த கடைக்காரர் அவனுக்கு உணவு கொடுத்தார்...கடின வேலை ஒன்றும் செய்ய மாட்டான்..புத்தகங்களை அடுக்குவது..எடை போடுவது..போன்ற வேலைகள்...

    நிறைய படிப்பான்...அவனுக்கு பிடித்த புத்தகங்கள் ஏதும் கிடைத்தால் கூடாரத்துக்கு எடுத்துவந்துவிடுவான்....சில நேரங்களில் அவன் கூடாரத்தில் இருந்து பார்த்தாலே டீ கடையில் ஒட்டி இருக்கும் நாளிதழ் விளம்பரத்துக்கான சுவரொட்டி தெரியும்..அதில் ஏதும் முக்கியமான விசயம் இருந்தால் போய் படித்துவிட்டு வருவான்...

    சில நேரங்களில் சத்தமாக கத்துவான்...காரணம் வயிற்றுவலி..அவனது இரண்டு சிறுநீரகத்திலும் பிரச்சினை....முதல்முறை சோதனை செய்தபோது இரண்டு சிறுநீரகங்களும் படிப்படியாக செயல் இழந்து வருவதாக சொன்னார்கள்.....வலி தொடராமல் இருக்க மாத்திரை சாப்பிட சொன்னார்கள்..மற்றபடி அதை குணப்படுத்த சிறுநீரகத்தை மாற்றவேண்டும்...அது இவனால் முடியாது...வலிக்கு மாத்திரை வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்லாமல் வந்தவன் இப்போது இந்த கூடாரத்தில்.... 


    இறப்பின் வருகையை பற்றி கவலை பட்டதில்லை...தொடக்கத்தில் தான் இறக்கபோகிறோம் என்பதை தனிமையில் யோசித்து அழுது இருக்கிறான்...இப்போது இல்லை...

   அவனை பொறுத்தவரை கடவுள் வேண்டபடாதவர்..இல்லாதவர்...நம்பிக்கை இல்லை..ஒரு நேரத்தில் கடவுள் அவனிடத்தில் நேராக வந்தாலும் சந்திக்க நினைக்கமாட்டான்..உலகத்தில் நடக்கும் எதையும் கடவுளால் நடக்கின்றது என்பதை அவனால் நினைக்க கூட முடியாது...கடவுள் வெறும் வார்த்தைகளில்,நம்பிக்கைகளில் சில நேரங்களில் பணத்தில் வாழ்பவர் அவ்வளவே...

   வாழ்க்கையின் எந்த வலிகளையும் கடவுளிடம் சொன்னதில்லை.... எதிரில் இருக்கும் மனிதர்களே ஒன்றும் செய்ய முடியாதபோது எங்கோ இருக்கும் கண்ணில் காணாத கடவுள் அவனுக்காக ஒன்றும் செய்யமுடியாது என்பதை நன்றாக உணர்ந்து இருந்தான்...

    அவன் வலியால் கத்தும்போது சத்தம் கேட்டு இரண்டு பேர் வீடுகளில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அவர்களது கடமையை அத்தோடு முடித்து கொள்வார்கள்...டீ கடையில் இருக்கும் ஒரு வெள்ளை நாய்  கூடாரம் வந்து எட்டி பார்க்கும...இவன் வயிற்றை பிடித்துக்கொண்டு உருளும்போது அது வெளியில்  இருக்கும் ..சிறிது நேரம் நின்று விட்டு செல்லும்...

    மறுநாள் அந்த நாயை அன்பாக பார்ப்பான்..அடுத்த வந்த நாள்களில் அவனுக்கு கொடுக்கும் உணவில் கொஞ்சம் அதுக்கு போய் இருந்தது...சாப்பிடும் போது அது வராவிட்டாலும்...அதுக்கு தனியாக எடுத்து வைத்து இருப்பான்..கொஞ்ச நாளில் அந்த நாய் தனது இருப்பிடத்தை அவனது கூடாரத்துக்கு மாற்றியிருந்தது...

    அவனிடம் பேசும்போது மற்ற எல்லாவற்றிக்கும் பதில் அளிப்பான்...அவனைபற்றி கேட்க ஆரம்பித்தால் பதில் கிடைக்காது..வெறும் மௌனம்தான்...இப்பொது எல்லாம் வெளியில் சுற்றுவதில்லை...வேலை இல்லாத நேரத்தில் கூடாரத்தில் புத்தகம் படிப்பான்...சில நேரங்களில் வழியால் துடிப்பான்.....

   அதிகாலை..அந்த நாய் வெளியில் இல்லை..வலியால் துடித்தான்..இந்த முறை அதிகமாக இருந்தது...முதலிலேயே மாத்திரை சாப்ப்பிட்டு இருந்தான்...கேட்கவில்லை...வலியதிகம்...கொஞ்சம் வெளிச்சம் வந்து இருந்தது..எழுந்திரிக்க முடியவில்லை..மூச்சு இறைத்தது..அப்படியே கொஞ்சநேரம் துடித்தான்...

    வலி குறைந்து இருந்தும் அவனால் எழுந்து நடக்க முடியவில்லை....கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தான்....இறக்க போகிறோம் என்று தெரிந்து இருந்தது...நாயை தேடினான் கிடைக்கவில்லை...அப்படியே சரிந்து படித்தபடி ரோட்டை வெறித்தான்... அந்த பார்வையில் அன்றைய தினசரியின் முக்கிய செய்தி சுவரொட்டியில் ஒட்டபட்டிருப்பது தெரிந்தது.....

   அதில் எதோ கோயிலில் ஒருவர் கடவுளுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்து இருப்பதும்,அதன் மதிப்பு பல கோடிகள் என்றும் இருந்தது....படித்துவிட்டு திரும்பினான்..சிரிப்பு வந்தது...மெல்ல சிரித்தான்...கடவுள் தனது வாழ்வில் மரணத்திற்கு முன்னான இந்த சிரிப்பைதவிர வேறொன்றும் செய்யவில்லை....மூச்சின் வேகம் குறைந்தது..ஒரு கவலை..... நாயை காணவில்லை ..அதை பார்க்கவேண்டும்...இன்னும் அவனது சிரிப்பு இருந்தது..இது கடைசி சிரிப்பு அதுவும் கடவுளை நினைத்து...சிரித்தான்....இப்போது அவனுக்கு வலி சுத்தமாக  இல்லை.... 

கிழித்த கடிதங்கள்...1

உன் விழிகளால் நீ
இதயத்தில் வரைந்த
காதல் கோலங்களை
கவிதைகளாய் மாற்றி எழுதினேன்..

எழுதிமுடித்த அடுத்தகணமே
எழுத்துக்கள் அனைத்தும்
செத்துவிழுந்தன என்ன
காரணம் என்று தெரியாமல் நான்.

கேட்டேன் எழுத்திடம் காரணம்
எந்த விழிகளால்  - நீ
கவிதைகள் எழுதினாயோ அதே
விழிகள் படித்தால்  நாங்கள்
உயிர்பெறுவோம்  என்றன

இதோ இந்த கவிதை உயிர்பெற்றது நீ
இதை படித்த வேளையில்...

  இதை படித்து முடித்தவுடன் என்னை முறைத்து பார்த்தபடி என்ன இது? என்றாள்

கவிதைஎன்றேன்

நான் உன்னிடம் என்ன சொன்னேன் என்றாள்

   “அறிவியல் கலக்காமல் நம் காதலை பற்றி ஒரு கவிதை எழுத சொன்னேஎன்றேன்

இதுலதான் அறிவியல் இருக்கே என்றாள்


இல்லையே நான் அப்படி எழுதவில்லையே என்றேன்


இதோ இந்த கவிதை உயிர்பெற்றது நீ
இதை படித்த வேலையில்...


இதில் நீ சொல்லி இருப்பது என்ன?

    “உன் பார்வை பட்டதும் நான் எழுதிய கவிதைகள் உயிர்பெற்றதை எழுதி இருக்கிறேன் என்றேன்


     “அப்ப என் கண்ணில் இருந்து போட்டோன் துகளா வருது...அது போய் எலெக்ட்ரானை தாக்கி தள்ளி அதன் மூலம் மின்சாரத்தை உண்டுபண்ணி உயிர் கொடுக்க? என்றாள்

    “நான் அந்த அர்த்தத்தில் இப்படி எழுதவில்லை..நீதான் கற்பனை செய்து கொள்கிறாய் என்றேன்

     “எனக்கு தெரியும் இந்த கவிதை photoelectric effect சம்பந்தமான அர்த்தத்தில்தன் இருக்கு.....அதுவும் இல்லாம..... இது ஐன்ஸ்டீன் கண்டுபிடிச்சது..அதை வச்சுத்தான் நீ இதை எழுதி இருக்கே என்றாள்


    நான்  photoelectric ஐ சம்பந்தபடுத்தி கவிதையை எழுதவில்லை என்பதை அவளுக்கு எப்படி புரியவைக்க போகிறேன் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது...


     “எல்லோரும் நாய்க்கு, கரப்பான் பூசசிக்கு எல்லாம் என்ன அழகா இலக்கிய கவிதை எழுதறாங்க...ஆனா நீ எனக்கு ஒரு காதல் கவிதை எழுத சொன்னா அதுலேயும் அறிவியல் கலந்து எழுதறே என்று சொல்லி அதை கிழித்து போட்டுவிட்டு கோபமாக கிளம்பி சென்றாள்.




கடைசி நிமிடங்கள்...

      “நான் கடவுள் வந்து இருக்கிறேன் என்ற குரல் வெளியில் இருந்து கேட்டது....

   சரி யாரோ வழக்கம் போல சாமிவேடம் போட்டு வந்து இருப்பார் என்று எண்ணி வெளியில் வந்து பார்க்கவில்லை...

   மீண்டும் அதே குரல்.....இந்த முறை நான் கேட்டபோது உணரமுடிந்தது.....அது மிக தொலைவில் இருந்து வருகின்றது என்று...வெளியில் சென்று பார்த்தேன்... வானத்தின் ஒரு பகுதியை ஒரு ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மிகப்பெரிய உருவம் மறைத்து இருந்தது...

   என்னைபோல சில வெளியில் வந்து அதை பார்த்து கொண்டு இருந்தார்கள்...மற்றவர்கள் வீட்டுக்கு உள்ளே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்...

    அந்த நேரத்தில் பூமி கொஞ்சம் மெதுவாக அசைய எல்லோரும் பயந்துகொண்டு வெளியில் வந்த போதுதான் தெரிந்தது...அங்கு அவ்வளவு பெரிய உருவம் இருப்பது....எல்லோரும் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்த்து கொண்டு இருக்க....


    "இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர போகிறேன்...இன்னும் சில நிமிடங்கள் உங்களுக்கு இருக்கும்..அதற்கு பிறகு இதை அழித்து புதியதாய் உருவாக்குவேன்"

  எல்லோருக்கும் பயம் சூழ்ந்தது...அங்கும் இங்கும் ஓடினார்கள்...கத்தினார்கள்..

    "உங்களை படைத்ததின் விளைவு ...இன்று என்னையே நெருங்கி விட்டீர்கள்...எனது படைப்பின் ரகசியத்தையே ஆராயும் அளவுக்கு வந்து விட்டீர்கள்...உங்களுக்கு சரியான எண்ணிகையில் குரோமோசோம்களை வைத்ததில் இருந்து அனுவில் துகள்களின் எடையை தீர்மானித்தது வரை எல்லாம் செய்தது நானே..."

   எல்லோரும் அமைதியாக அந்த குரலை கேட்டனர்...சாதாரண மனிதனை படைக்க இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்தது எதற்கு? என்ற என் சந்தேகத்தை கேட்கநினைத்தேன்...ஏதோ ஒரு பயம் தடுத்தது...

    "இனி நான் படைக்க போகும் பிரபஞ்சம், அதில் உருவாகும் எந்த ஒரு உயிரினங்களின் அறிவுக்கும் எட்டாத படி இருக்கும்...அவர்கள் என்னை பற்றியோ எனது படைப்பை பற்றியோ அறியவே முடியாத படி இருப்பார்கள்..." என்று சொன்ன படி.....கையில் மடிக்கணினி போல இருந்த ஒன்றை எடுத்து அதில் ஈர்ப்பு விசை என்ற பக்கத்திற்கு சென்று...அதில்  ஈர்ப்பு விசையை "இயக்கு" "முடக்கு" என்ற இடத்தில் அவரது தேர்வு "முடக்கு" என்ற பொத்தனில் இருந்தது...

   "இதோ உங்களுக்கான கடைசி நிமிடங்கள்" என்று சொன்னவுடன்..எல்லோரும் அதிக சத்தத்துடன் கத்தினார்கள்..ஆச்சர்யம் என்னவென்றால் கடவுள் வந்ததில் இருந்து ஒருவர்கூட இறைவனே உன்னை சரணடைகிறேன் என்று தானாக முன்வரவில்லை..

   கடைசி நிமிடங்கள்.... அழுதார்கள், சிலர் தனது உறவினர்களை பதுகாபப்தில் இருந்தார்கள்,சிலர் இதை நம்பவில்லை..சிலர் அங்கும் இங்கு ஓடி பாதுகாப்பான இடம் தேடினார்கள்..அதே நேரத்தில் கடவுள் அந்த பொத்தனை அழுத்த முனைந்தார்....

   வேகமாக படியுங்கள் ..... நேரம் இல்லை...உங்களுக்கு நான் அந்த சில நிமிடங்களில்  என்ன செய்தேன் என்ற கேள்வி இருக்கலாம்.....இதை எழுதி கொண்.....

    "கிளிக்."