தூண்கள்.


   ஊரின் தொடக்கமே அந்த பெருமாள் கோயில்தான். அடுத்து வீடு ஆரம்பம் என்றால் கொஞ்ச தூரம் தள்ளிதான்.  அந்த கோயிலை சுற்றியும் பெரிய கல் தூண்கள் ஒழுங்கற்று கிடக்கும்.பழமை வாய்ந்த அந்த கோயிலில் இருந்து பிடுங்கி வெளியில் போடபட்டவை அவை.

   அந்த கோயில் இருக்கும் திசையில் சாலையில் வந்தால் ஊரின் தொடக்கம் அவளின் வீட்டோடு ஆரம்பிக்கும். அதுவும் அவளின் வீட்டில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் சென்றுதான் தொடர்ச்சியான வீட்டமைப்பு இருந்தது.

   ஓட்டுவீடு இரண்டுபக்கம் திண்ணையோடு. உள்ளே ஒரு அறை அதை ஒட்டியே மூலையில் அடுப்பாங்கூடம். மற்றொரு இடத்தில ஒரு சில சாமிபடம் அதுக்கு அருகில் ஒரு பிரோ. பக்கவாட்டில் அவளால் பழைய புத்தகக்கடையில் இருந்து கெஞ்சி கெஞ்சி  படிக்க வாங்கி வந்த புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சுவரோடான ஒரு அலமாரி.அதன் ஓரத்தில் சிறிய கண்ணாடி, பவுடர் இன்னும் கொஞ்சம் அவளுக்கு தேவைப்பட்ட பொருள்கள் காலியாகின்ற நிலையில்.

    அந்த வீட்டில் வாழ்வது என்றால் மொத்தம் மூன்று உயிர்கள்.அவள்,அவளுடைய அம்மா மற்றும் லில்லி பூனை. இவர்களுக்கு இன்னும் கஷ்டம கொடுக்கவோ என்னவோ அப்பாவை சில ஆண்டுகள் முன் மூளை காய்ச்சல் நோய் கொண்டு போய் இருந்தது.

   அதுக்கு பிறகு அம்மாதான் காட்டுவேலைக்கு போய் சாப்பாட்டுக்கும் அவளின் படிப்புக்கும் கொஞ்சம் காசு சம்பாதித்தாள். சந்தோசமாக  போகாவிட்டாலும் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். வேலை செய்துவிட்டு வரும்போது வரப்பில் இருந்து வழுக்கி விழ அருகில் வாமடையில் இருந்த கல்லில் கால் மோதி ஒடிந்து போய் படுக்கையில் படுத்தாள். அம்மா விழுந்ததால் அவளின் புத்தக பையும் வீட்டின் ஒரு மூலையில் விழுக நேர்ந்தது.

    இதுவரை வாழ்க்கை ஒரு சோகமான கற்பனை போல போய்கொண்டு இருந்த அவளுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது கற்பனையில்லாத வாழ்க்கையின் உண்மை. இருந்த துட்டு தீர்ந்து போக வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்  போனாள்.

    எப்போதும் செய்வதுதான் என்றாலும் இப்போதெல்லாம் அதிக சிரத்தையுடன் அந்த பெருமாளிடம் வேண்ட ஆரம்பித்து இருந்தாள். இந்து அரநிலத்துறையில் இருந்து போடப்பட்ட ஒரு பூசாரி கடமைக்கு வந்து பூசை செய்துவிட்டு போவார்.சில நேரங்களில் இவள் மட்டுமே போவாள்.யாரச்சும் வருவார்கள் அதிசயமாக.

    காலையில் குளித்து முடித்து அவளுக்கு இருந்த மூன்று ஜோடி தாவானிகளில் எதாவது ஒன்றை அணிந்துகொண்டு நீளமான ஈரமுடியில் நுனியில் ஒரு முடிச்சு மட்டும் போட்டபடி கோயிலுக்கு போய்ட்டுவந்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போவாள்.அம்மாவின் கால் கொஞ்சம் தேரியிருந்தது. வீட்டுக்குள் மட்டும் சுவரை பிடித்துக்கொண்டு நடக்க முடியும்.

     பள்ளிபடிப்பு நின்றாலும் ஊரில் இருந்த பழைய புத்தக கடையில் எதாவது படிக்க புத்தகம் கேட்பாள் கடைக்காரர் முதலில் எப்படியும் மறுக்கவே செய்வார் சில நேரங்களில் கொஞ்சம் காசு கொடுப்பாள் மற்ற நேரங்களில் கெஞ்சுவாள் படித்துவிட்டு அப்படியே திருப்பிதருவதாக. அந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டு லில்லி பூனையை தனது மடியில வைத்த படி படிப்பது வழக்கம்.

   அவளது தனிமையை தீர்த்ததில் இந்த லில்லி பூனைக்கும் பங்குண்டு.சில நேரங்களில் அதோடு விளையாடுவாள்,கொஞ்சுவாள், பேசுவாள். குறைவாக பால் குடித்தபூனை என்றால் அது லில்லியாகதான் இருக்கும். அவள் சாப்பிடும்போது கொஞ்சம் சோறு போடுவாள் அமைதியாக திங்கும். அதுக்கும் அவளின் கஷ்டம புரிந்து இருந்ததுதான் உண்மை. கடவுளுக்கு புரியாத ஒன்று.

அன்று சாப்பிடும்போது ..

“அம்மா நாளைக்கு எனக்கு பிறந்தநாள்என்றாள்

  நிமர்ந்து அவளை பார்த்தபடியே அம்மா அழுக ஆரம்பித்து இருந்தாள் வழிந்த கண்ணீரை சேலையால் துடைத்து கொண்டாள்.

“இப்ப எதுக்கு அழறே

“நீ எனக்கு எதுக்கு மகளா பிறந்தே?

இருவருக்குள் மௌன பதில்கள்.

  “பிரோவுல பழைய பட்டுபுடவை ஒன்னு இருக்குல்ல அதை நாளைக்கு கட்டிக்கோ

“எதுக்குமா சேலை எனக்கு கெட்ட தெரியாது என்றாள்

“எப்படியும் கெட்டிதானே ஆகணும்..கல்யாணம் விசேசம் வந்தா

  “என்ன சொல்ற? எனக்கும் கல்யாணம் கட்டிவைக்க நினைக்கிறியா என்ன? நான் போனப்புறம் என்ன செய்வே தனியா?

  “அது என் வாழ்க்கை நீ எத்தனை நாளைக்குத்தான் இப்படி வாழ்வே உனக்கும் ஒரு வாழ்க்கை வாழனும்ல

   “உன்னை இந்த நிலையில் விட்டுட்டு நான் இன்னொரு வாழ்க்கை வாழமுடியாதும்மா

  “அப்ப கடைசி வரைக்கும் என்னையும் இந்த பூனையும் கட்டி அழபோரியா என்ன”? என்ற அம்மாவின் கேள்விக்கு வெறுமனே சோற்றை பிசைந்தாள்

   அன்றைய இரவில் லில்லியை தனது அருகில் வைத்து  அதன் தலையில் தடவி விட்டுக்கொண்டு தூங்க முயன்றாள். முடியவில்லை  தலைக்கு வைத்து படுத்து இருந்த கையின் மேல் கண்ணீர் வளிந்தது.இப்போது அவளின் அழுகைக்கு காரணம் ஏதும் தேவையாய் இல்லை.

    மறுநாள் காலையில் வேகமாக எழுந்தவள் குளித்து முடித்துவிட்டு அந்த பட்டுப்புடவையை எடுத்து கட்ட முயற்ச்சிக்கும்போது அம்மா எழுந்துகொள்ள தவறாக கெட்டுவதை பார்த்து சிரித்து கொண்டே சரியாக கட்ட சொல்லிகொடுக்க கட்டியிருந்தாள்.

    இதுவரை அவள் அம்மா பார்த்த மகளுக்கும் இப்போது பார்ப்பதுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள். காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கும்போது தலையில் கைவைத்தபடி ஏதும் சொல்லமல் அழுக மட்டும் செய்தாள்

    அம்மா அந்த பக்கம் புரண்டுபடுக்க கண்ணாடியில் தனது அழகை சேலையில் அளந்து பார்த்தாள்.மார்பு,இடுப்பு பகுதியில் சேலை சரியாக பொறுந்தியிருக்கிறதாஎன கண்ணாடியை இறக்கி பார்க்கும்போது அவளை அறியாமளியே ஒரு சந்தோஷ  வெட்கபுன்னகை அவளின் முகத்தில். லில்லிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கோயிலுக்கு கிளம்பினாள்.

    உள்ளே நுழைந்து நடக்க ஆரம்பித்த போது சேலையின் கீல்நுணி தரையில் பட்டு ஒரு சிறு சப்தம் வர புது அனுபவமாய் தொடர்ந்தாள்.வழக்கமான வேண்டுதல்தான்.சாமி கும்பிட்டு வெளியில் இருந்த கல்லில் உட்கார்ந்தாள்.சேலை முந்தானையை விரித்து வைத்த படி யோசிக்க ஆரம்பித்தாள். கண்டிப்பாக அவளின் யோசனை சேலையை பற்றியதாக இருக்கவில்லை.

வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது ..

“இன்னைக்கு வேலைக்கு போகாதே வீட்டுலேயே இரு?

“எதுக்கு நேத்து ஏதும் சொல்லிட்டு வரலை போகணும் என்றாள்

“பிரச்சினை இல்லை வீட்டுல இரு பிறந்த நாள் அதுவுமாஎன்றாள் அம்மா

    “அம்மா நான் கல்யாணம் ஏதும் பண்ணிக்கலை நீ இருக்கிற வரைக்கும் உன்னோடு இருந்துட்டு என்னோட மீதி காலத்தை தனியவே இருக்க போறேன்

    “ஏன் பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு? தனியா ஒரு பொண்ணு இருப்பது சுலபம் இல்லை. எனக்காக ஏதும் செய்ய வேண்டாம் இன்னும் கொஞ்சநாள்ல என் கால் சரியாயிடும் நான் வேலைக்கு போய் என்னை காப்பாத்திக்கிருவேன்

   “இல்லை நீ என்ன சொன்னாலும் எனக்கு கல்யாணம் வேண்டாம் முடிவு பண்ணிட்டேன். என்றாள்

   சேலையை அவிழ்த்து மடித்து திரும்பி பிரோவில் வைத்துவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு லில்லியை தேடினால் கிடைக்கவில்லை.புத்தகத்தை விரித்துவைத்தபடி தூணில் சாய்ந்தவளின் மனம் புத்தகத்தின் மீது செல்ல மறுத்தது.

   அடுத்த வந்த நாள்களில் அம்மாவின் கால் தேவலை ஆகியிருந்தது. வேலை செய்ய முடியாவிட்டாலும் நடக்க முடிந்தது.இதற்கு இடையில் திருமணத்துக்கு வற்புறுத்த தொடர்ந்து மறுத்து வந்தாள். எவ்வளவோ சொல்லியும் அழுதும் பார்த்தும் வீணாகித்தான் போனது அவளின் அம்மாவுக்கு.

    தான் இறந்த பிறகு அவளால் இந்த ஊர் உலகத்தில் தனி மனுஷியாக வாழமுடியாது என்பதை எவ்வளவுதான் எடுத்து சொல்லியும் கேட்காத மகளை என்ன செய்வது என்று தெரியாத ஒரு கவலைவேறு இப்போது அம்மாவுக்கு.சில மாதங்கள் போனால் சரியாகி முடிவை மாற்றிகொள்வாள் என்று அம்மா நினைத்தது   பல மாதங்கள் ஆகியும் நடக்கவே இல்லை. பல சண்டைகள் போற்றயிற்று பலனில்லை.

   கால் சரியாகி வீட்டில் சமையல் செய்யும் அளவுக்கு அம்மா தேரியிருந்தாள். இதையே காரணமாக வைத்து என்னால் சமாளிக்க முடியும் என சொல்லியும் பார்த்தாள் அப்பையும் அவள் சம்மதிப்பதாக இல்லை.

   அன்று மாலையில் வேலைவிட்டு வீட்டுக்கு வந்து குளித்து முடித்து சாப்பிட உட்கார்ந்தவள் லில்லியை தேடினாள்.அம்மா கட்டிலில் திரும்பி படுத்து இருந்தாள் வந்ததில் இருந்து ஏதும் பேசவில்லை.

“அம்மா லில்லியை எங்கே?

   பதில் இல்லை. சாப்பிட ஆரம்பித்து இரண்டு வாய் சாப்பிட்டவுடன் உணவின் சுவையில் வித்தியாசமான ஒரு மாற்றம். அம்மாவின் பதில் இல்லாமைக்கு காரணம் இப்போது அவளுக்கு புரிந்தது.அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்.

    சாப்பிடுவதை நிறுத்தவில்லை யாருக்காக வாழ நினைத்தோமோ அதுவே இல்லாத போது அவள் எடுக்க நினைத்த முடிவுதான் இது.ஆனால் அதை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து இருந்தாள்.

    லில்லி பூனை வெளியில் இருந்து வந்தது இவள் சாப்பிடுவதை பார்த்து உற்சாகத்தில் ஓடி வந்து தட்டின் அருகில் சுற்றியது. வழக்கமாக சோறு போடுபவள் இப்பொது போடததை பார்த்து கத்தி பரண்டி பார்த்தது அப்போதும் அவள் அதுக்கு சோறு கொடுக்கவில்லை.முழுவதும் தின்று முடித்து இருந்தாள்.

   லில்லியை எடுத்து மார்போடு அணைத்து தடவி கொடுத்தாள்.கண்ணீர் அதன் தலையில் விழுந்து நனைத்தது.இறக்கிவிட்டவள் கோயிலை நோக்கி போனாள்.

   திறந்து இருக்கவில்லை. வெளியில் இருந்தவரே வேண்டினாள் எப்போதும் வேண்டுவதுதான் “எல்லோரும் நல்லாருக்கணும் சாமீ யாருக்கும் ரெம்ப கஷ்டத்தை கொடுக்காதே எல்லோரையும் நல்லபடியே பார்த்துக்கோ இதுதான் அவளின் வேண்டுதல் எப்போதுமே இப்போதும்.

   வெளியில் வந்தாள் தலை சுற்றியது. அங்கு கிடந்த தூண்களில் ஒன்றில் உட்கார்ந்தாள்.இதுவரை தனது வாழ்க்கையில் இந்த கடவுள் ஆற்றிய பங்கு என்ன என்று யோசித்தாள் கண்டிப்பாக அவள் சாப்பிட்ட விஷம் செய்த உதவியை கூட கடவுள் செய்ய முடியாத நிலையில்தான் இருந்தார் அவளை பொருத்தவரை.

    உட்கார முடியாமல் தன்னிலை மறந்து மெல்ல தூணின் மீது சரிய அவள் சேலையில் கண்ணாடியில் பார்த்த அழகிய முகம், அதை கட்டி நடந்தவிதம் எல்லாம் ஒருமுறை வந்தபோனது. மெல்ல சிரிப்பது போன்ற உணர்வு கண்டிப்பாக சந்தோசத்தில் இல்லை. அதுதான் கடைசி. அவளது தலை சரிந்து கன்னம் அந்த கல்லில் ஒட்டியது. இறுதியாய் விட்ட கண்ணீர் அந்த கல்லின் வெப்பத்தில் கொஞ்ச தூரம் சென்றதும் மெல்ல மறைந்தது அவளை போல.

   லில்லி பூனை இன்னும் பரண்டியபடி முயற்சித்து கொண்டு இருந்தது இவள் இறுக்கமாக மூடிவைத்துவிட்டு வந்த அந்த சோத்து சட்டியை திறக்க.

5 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Very sad!

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
வேதனையாக இருக்கிறது.
உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

NIZAMUDEEN ///
Rathnavel //

கருத்துக்கு நன்றிங்க

HVL said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

இந்த பிரச்சனைக்கு தற்கொலை கொஞ்சம் அதிகமோ என்று மட்டும் எனக்குத் தோன்றியது.

கணேஷ் said...

நன்றிங்க

அந்த அம்மாவுக்கு அந்த நிலையில் வேற வழி தெரியவில்லை அதான்