அருள்

     பளிங்குத்தரையில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்  அந்த பெண் தள்ளியதில் நின்றிருந்த சிறுமி வழுக்கி அருகில் இருந்த சுவற்றில் முன்தலையை மோதி அப்படியே பின்னோக்கி விழுந்தாள். கிழே கிடந்தவளை பார்த்து எதோ அந்த வீட்டுப்பெண் கோபமாக திட்டிவிட்டு உள்ளே செல்லும்போது அடிபட்ட தலையில் தடவி ரத்தம் வருகிறதா என பார்த்துகொண்டாள். வரவில்லைபோலும் மீண்டும் மீண்டும் தடவி அது வீங்குகிறதா என்பதை ஒரு கையால் பார்த்துகொண்டே மற்றொரு கையால் அந்த அழுக்கு தண்ணீரில் தவறி போட்ட வெள்ளை சட்டையை மீண்டும் துவைக்க வாளிக்குள் எடுத்து போட்டாள்.


     அதற்க்காகத்தான் அந்த பெண் கோபத்தில் தள்ளிவிட்டதும் திட்டியதும் என்பதை எதிர்வரிசையில் இரண்டாவது வீட்டின் மாடியில் இருந்து பார்த்த எனக்கு  புரிந்தது. தரையை கழுவி, துடைத்தபின் கிழே விழுந்த சட்டையை அலசி போட்டுவிட்டு வெளியேறி தெருவில் நடந்த அந்த சிறுமி இன்னும் தலையை தடவிகொண்டேதான் இருந்தாள் . வீங்கியிருக்க வேண்டும். வயது பதினான்கு இருக்கும், காலையில் மட்டும் அந்த வீட்டுக்கு வந்து வேலை செய்வாள். பள்ளி சென்று கொண்டிருக்க வேண்டும். சில நாள்களில் அவள் பள்ளி சீருடை ஸ்வெட்டர் அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். இரண்டு புறமும் வரிசையாக வீடுகளை கொண்ட அந்த நீளமான தெருவின் முடிவில் அவளது வீடு இருந்தது. சொந்தமான இடம் இல்லை. யாரோ வீடுகட்டாமல் விட்ட இடத்தில் இவர்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைத்து இருந்தார்கள்.

      அவள் தெருவை கடந்துபோகும் போது சயாங்காலம் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விழாவுக்கு பந்தல் போடுவதை சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றாள். இப்போது என் கவனம் அந்த சிறுமியில் இருந்து விலகி அந்த பந்தல் மீதும் அதை எப்படி போடுகிறார்கள் என்பதின் மீதும் சென்றது. விடுமுறை நாள் என்பதால் டெல்லி குளிருக்கு வெயிலில் மொட்டைமாடியில் உட்கார்ந்து இருந்த எனக்கு இந்த மாதிரி சில காட்சிகள் நேரத்தை கடத்திச்சென்று கொண்டிருந்தன.

       நேரம் கடந்து போயிருந்தது வேலையில் மூழ்கி இருந்த எனக்கு நான்கு மணியளவில் காலையில் தயாரான பந்தல் தோரணங்கள் எதுக்கென்ன்று அங்கிருந்து ஒலிபெருக்கியில் வந்த செய்தி உணர்த்தியது. எல்லாம் பஜனைகூட்டத்துக்கு. ஒரு அம்மன் சிலை இருக்க ஒரு சாமியார் அல்லது குழு பாடகர்கள் வந்து இரவு ஒரு மணிவரை பாட்டிசைத்து துதிப்பார்கள் இறைவனின் அருளுக்காக. இது அதிக குளிர் நேரம் என்பதால் சீக்கிரம் தொடங்கியிருப்பார்கள். யராவது ஒரு வீட்டில் உள்ளவர் இதை முன்னிறுத்தி நடத்துவார்கள்.


      அந்த கூடாரத்தை சுற்றி கூட்டம் கூடிக்கொண்டிருக்க அதன் ஒருபக்கத்தில் எல்லோர்க்கும் சாப்பாடு தயார் செய்வதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அனேகமாக இரவு பத்து மணிவரை நீடிக்கலாம். எனது அறையில் இருந்து அங்கு நடப்பதை பார்க்க முடிந்தது. வந்தவர்கள் தனக்கு பிடித்த இடங்களில் அமர அந்த பாடகர் அல்லது சாமியார் அருகில் இருந்த அம்மன் சிலையை தொட்டு கும்பிட்டுவிட்டு பாட ஆரம்பித்தார். இடையிடையே சிறு கதைகள் சொல்ல கூட்டம் பக்தி மழையில் நனைந்து இருந்தது அவர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் அந்த படகரோடு சேர்ந்து பாடிய விதத்தில் இருந்து தெரிந்தது.

         சிலமணிநேரங்கள் கடந்து இருக்க இன்னும் அதே உற்சாகத்தோடு பாடிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன் இப்போது கூடுதலாக சில விசயங்கள் எனது பார்வைக்கு கிடைத்தன. சிலர் பக்தி பரவசத்தில் அமர்ந்து இருந்தபடியே கைகளை கூப்பி உடலை அசைத்து ஆடிக்கொண்டு இருந்தனர். முக்கியமாக பெண்கள். அந்த கூடாரத்தின் வெளியில் சற்று தள்ளி அதாவது சமையல் ஆகி கொண்டிருக்கும்  இடத்துக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் இருந்தது. அவர்களின் கையில் இருந்த பொருள்களை பார்த்த போது அவர்கள் கண்டிப்பாக கடவுளின் அருளை பெற வந்தவர்கள் இல்லை எனபது தெளிவாகியது.



             உணவு படைப்பதற்காக தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து கொண்டு இருந்த  பின் வந்த கூட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அதில் நான் காலையில் பார்த்த சிறுமியும் இருந்தாள்.ஆனால் அவள் நின்றிருந்த இடம்வேறு. பஜனை நடக்கும் பந்தலின் ஒரு ஓரத்தில் நின்று எல்லோரின் பக்தியை அளந்து கொண்டு இருந்தாள். முக்கியமாக தன்னை காலையில் தள்ளிவிட்ட எஜமானியம்மாவின் பக்தி அவரை அறியாமல் உடலை ஆடசெய்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சிறுமி எதுக்கு சிரித்தாள் என்று என்னால் குறிப்பாக ஒரு காரணம் கொண்டு யோசிக்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் அங்கு நின்று இருந்தவள் பின் தன் கூட்டத்தோடு போய்ச்சேர்ந்தாள்.

             பஜனை முடிந்து இருந்தது. பிரசாதமாக அந்த பாடகர் அல்லது சாமியார் ஒரு சிகப்பு கயிறையும் கொஞ்சம் லட்டும் கொடுக்க எல்லோரும் வரிசையாக வந்து வாங்கி சென்றார்கள். சிலர் மறக்காமல் கண்ணில் ஒத்திகொள்ள தவறவில்லை. சிலர் அந்த சாமியாரையே கட்டிவிட சொன்னார்கள்.ரசிகர்களாக அல்லது பக்தர்களாக மாறியிருக்ககூடும். அதே நேரத்தில் சமையல் செய்தவர்கள் விரைவாக  வரிசையில் சில பெஞ்சுகளை போட்டு உணவுகளை பரிமாறிக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள்.

            எல்லோரும் தனக்கு பிடித்த உணவுகளை பரிமாறி தின்று முடித்த பிறகு காலி தட்டுக்களை போடும் இடத்தில் கையில் பாத்திரங்களோடு இருந்த அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி கை கழுவிவிட்டு வந்தார்கள். கடவுள் இவர்களின் பக்திக்கு இல்லாவிட்டாலும் அங்கு சமைக்கப்பட்டிருந்த விதமான சமையளுக்காகவது கண்டிப்பாக அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்ம் அவ்வளவு சமையல் வகைகள். பக்தி செய்யும் இடத்தில் இவ்வளவு விதமான ருசிகள் எதுக்காக என்று யோசித்தும் என்னால் விடை காணமுடியவில்லை.அங்கு காத்து இருந்தவர்களின் நேரம் இப்போது நெருங்கி இருந்தது. ஆம் சாப்பிடுவோரின் கூட்டம் குறைந்து கொண்டே இருக்க அவர்களுக்கும் ஒருவித ஆர்வம.

         இந்த ஆர்வம கலந்த ஆசை சில் நேரங்களில் நிறைவேறாமல்கூட போய் விடும். சமையல் மீதி இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்காமல் மீதி இருப்பதை சமைத்தவர்கள் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.அல்லது உணவு பற்றாக்குறை ஆகிவிடும். அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற ஏக்கம் அல்லது வேண்டுதல் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. எப்போதாவது கிடைக்கும் நல்ல விருந்து சாப்பாடு இது.


       பஜனைக்கு வராமல் வெறுமனே சாப்பிட மட்டும்வந்தவர்களோடு சேர்த்து பார்க்கும்போது இதுதான் கடைசியாக இருக்கவேண்டும் அந்த கூட்டம் இப்போது கொஞ்சம் முன்னாடி வந்து இருப்பதில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் நடவடிக்கைககளை பார்க்கும்போது முதலில் சாப்பிட்டுவிட்டு பின் மீதுவதை எடுத்துபோகலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் போல.

          இப்போது கூட்டம் எல்லாம் கலைந்து போய் கொண்டு இருந்தது.  நான் இருக்கும் வீட்டை கடந்து செல்லும் சிலர் நான் மேலே இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதை கவனிக்க தவறவில்லை. இப்போது சமையல் செய்தவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் சமையல்காரர்களோடு ஏதோ பேசுவது தெரிந்தது. மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. அவர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த வெவ்வேறான பாத்திரங்களை பிரித்துவைத்து கொண்டு இருந்தனர்..

           இருவர் வந்திருந்த சாமியாருக்கு பணம் கொடுத்து அவரை வழியனுப்பும் வேலையில் இருக்க அந்த சாமியார் விடைபெறும்போது பெரியதாக சிரித்தார். அவர் சென்றுவிட காசு கொடுத்து கடவுளின் அருளை வளர்த்த அல்லது பெற்ற திருப்தியில் வழியனுப்பியவர்கள் திரும்புகையில் அந்த கூட்டம் இப்போது பஜனை நடந்த கூடாரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். ஒருவேளை அவர்கள் எதாவது சொன்னால் சமைப்பவர்கள் சாப்பாடு கொடுக்கலாம் என்பதால் அவர்கள் முகம் எதிர் வருபவர்களை நோக்கி இருக்க கண்டுகொள்ளாமலே சென்றனர். இப்போது இவர்களுக்கு அருள்புரிய இருப்பது இரண்டு பேர் மட்டுமே. ஒன்று அங்கு பஜனை செய்ப்பட்ட கடவுள், இன்னொன்று சமையல்காரர்கள். அவர்களின் குழந்தைகள் மடியில் கிடந்து தூங்கி போக அதிக குளிராமல் இருக்க தாய் துணியால்  இழுத்தி மூடியிருந்த நிலையில் காத்து இருந்தார்கள்.


            கடைசியில் யார் அருள் அவர்களுக்கு கிடைத்தது என்பதை பார்க்கவில்லை. ஒருவேளை கிடைக்காமலும் போய் இருக்கலாம். தூங்கிப்போனேன்.மறுநாள் காலையில் அந்த பந்தல் இல்லை. உணவு தட்டுகள் தெருவில் சிதறி கிடக்க அதில் மிதிக்காமல் கவனமாக நடந்து எப்போதும் போல அந்த சிறுமி வேலைக்கு வந்தாள். உற்றுப்பார்த்தேன் தலையில் அந்த சிறிய வீக்கம் இன்னும் இருந்தது.



0 comments: