இதுவரை ~ இனி....

   இதுவரை  ......

     இப்போதுதான் தொடங்கியதுபோல இருக்கிறது  வருடம் ஆனால் இன்றோடு முடிந்து புதிய வருடம் பிறக்க போகிறது. இந்த வருட தொடக்கம் என்று இல்லை எந்த வருட தொடக்கத்திலும் பொதுவாக எடுத்துகொள்ளும் உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கும் பழக்கம் இதுவரை இல்லை.எங்காவது தேதி எழுதும்போது வருடம் கொஞ்ச நாளைக்கு நினைவு இருந்தாலே போதும். மற்றபடி எல்லா நாலும் நன்னாலே.

    ஆனால் பொதுவாக எல்லோரும் புது வருடம் பிறக்கப்போகிறது என்பதுடன் அதோடு சில மாற்றங்களையும் எதிபார்ப்பது வழக்கம்தான். நான் இன்றையில் இருந்து இதை செய்வேன், அதை செய்ய மாட்டேன் இந்த மாதிரி. உணமையில் இப்படி செய்பவர்களில் 98% பேர் வெற்றி பெருவதில்லைதான். காரணம் பழக்கவழக்கம்  உடனே ஒரு புதியவருடத்திற்காக மாறிவிடுவது இல்லை என்பதே. மாற்றம் வேண்டுமானால் அதை இன்றுகூட வரவைக்கலாம்.

    சரி இந்த வருடம் எனது வலைப்பூ வாழ்க்கை எப்படி என்றால் சென்ற வருடம் போல இல்லைதான். ஆனால் சில முக்கியமான விஷயங்கள் நடந்தேறியது. கதைகளை தொகுத்து மின்புத்தமாக வெளியிட்டது, உருப்படியாக சில கதைகளை எழுதி திருப்தி அடைந்தது இந்த மாதிரி. வழக்கமான "என் கதையை படித்துவிட்டு கருத்துகள் சொல்ல மறுக்கிறார்கள்" என்ற புலம்பளோடு இந்த வருடமும் நிறைவடைகிறது.

   ஆனால் சொந்த வாழ்க்கையில் நிறையா மாற்றங்கள் எல்லாமே சந்தோசமானைவைகள் ஒரு சில தவிர்த்து. புதுவீடு கட்டியது, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஒரே ஒருமுறை லேசான கால்வலிக்கு மருத்துவமனை சென்றது போன்ற பல சந்தோசங்கள பல நிறைந்தே இருந்தது. பொதுவாக எதுக்கும் பெரியதாக அலட்டிகொள்வதில்லை என்பதாலோ என்னவோ எதையுமே பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு வருத்தபடுவதிலை. காரணம் எதுக்குமே தீர்வு நம்மிடம இருந்தே வெளிப்பட வேண்டும் கட்டாயம் வெளிப்படும் எனக்காக கடவுளோ மற்றவர்களோ உதவி செய்வார்கள் என்று நினைக்கும்போதுதான் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ஏமாற்றம் போன்ற பிரச்சினைகள் வருகிறது.


    அனேகமாக பிரச்சினைகள் வந்து இருந்தாலும் எனக்கும்சரி எல்லோர்க்குமே பொதுவான ஒரு விசயம் பிரச்சினைகள் இரண்டு விதம்  இயற்கையானவை அல்லது நம்மால் மற்றும் சகமனிதனால் நமக்கு வருபவை. முதல் வகையில் நோய் நொடிகளை சேர்த்து கொள்ளலாம். தகுந்த மருத்துவ உதவியை நாடினால் அதுவும் சுபமே. ஆனால் பெரிதும் பாதிக்கபடுவது மனிதனால் மனிதனுக்கு வரும் பிரச்சினைகள்.இதில் விஷயம் என்னவென்றால் நமக்குள்ளே பிரச்சினைகள் செய்துகொண்டு அதை தீர்க்க இல்லாத எல்லாம்வல்ல இறைவனை நாடுவதே.

      இந்த வகையான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வுதான். முடிந்தவரை மற்றவர்களிடத்தில் அன்பாக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். இப்படி செய்தாலே உலகத்தில் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடும்.சந்தேகம் என்றால் தனியாக உட்கார்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வரிசையாக எழுதுங்கள் அதில் எத்தனை உங்களது எதிரிகள் என்று கருதப்படும் நபர்களால் அல்லது வேலை செய்யும் இடத்தில இருந்து வருகிறது என்று பாருங்கள்.

     இதை சரி செய்வதில் இருக்கும் பெரும் பிரச்சினை "சரி நான் மற்றவர்களிடத்தில் நல்லவிதத்தில் நடந்து கொள்கிறேன் ஆனால் மற்றவர்கள் ஏன் என்னிடத்தில் அப்படி இல்லை" என்று யோசிப்பதே. இதுதான் மாறுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் முட்டுக்கட்டை. அவளும் குப்பையை தெருவில்தான் கொட்டுகிறாள் நானும் அங்குதான் கொட்டுவேன் என்பவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.  ஆனால் இப்படி இருப்பதில் ஒரே லாபம் மனதிருப்தி நான் நல்லவிதமாக இருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும். சிலருக்கு இது போதுமானதாக இருக்கும்.


    என்னைபொருத்தவரையில் அடித்து பிடித்து பணம் சம்பாரித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதில்லை. அன்றாடம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்து வாழ்க்கை சுபமாக கழிந்தாலே போதும்தான். வாழ்க்கையை வாழவேண்டும் அதுவும் அதன் போக்கிலேயே கட்டாயமாக இழுத்துக்கொண்டு திரியதேவை இல்லை. போதுமானவரை அன்போடு பழகி வருகின்ற வருடத்தில் பிறரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தாலும்கூட நம்மால் நமக்கு எதுவும் வராமல் பார்த்துகொண்டு வருடத்தை இனிதாக களிப்போம்.


   அதோடு இந்த வருடத்தில் சில விசயங்கள் "ஏன் இப்படி?" என்றிருந்தது. அதில் போனவருடமும் இந்தவருடமும் பொதுவாக இருப்பது என்னதான் கொட்டகொட்ட முழித்து படித்து கதைகளில் அறிவியல் சேர்த்து எழுதினாலும் படிக்க மாட்டிக்கிறார்கள் அதோடு ஒரு படம் சில வரிகள் கவிதை என்ற பெயரில் எழுதுவதையும், விழிப்புணர்வு பதிவு என்ற பெயரில் எழுதும் எழுத்துக்களைத்தான் ரசிக்கிறார்கள். என்ன காரணம் இதுவரை புரியாத ஒன்று. கொடுமை என்னவென்றால் இந்த விழிப்புணர்வு பதிவுதான் என்ன சொல்ல...எல்லாமே பொதுவான ஜனங்களுக்கு தெரிந்த விசயம்தான் அல்லது செய்திகளில் நாளிதழ்களில் வந்த விசயத்தை தனது கருத்தையும் நான்கு வரிகளாக சேர்த்து எழுதுகிறார்கள். கட்டாயம் இணையம் வந்து பதிவுகளை படிப்பவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளாமல் தூங்குவார்கள் என்பது போலதான் இருக்கும் அவர்களது எழுத்து.



    அடுத்து கோபம்வரும் விசயம் என்னவென்றால் இதை சொல்லும்முன் THE GRAND DESIGN புத்தகத்தில் படித்த ஒரு விசயத்தை சொல்கிறேன்.மத்திய ஆப்ரிக்காவில் வாழும் BOSHONGO இன மக்களிடையே ஒருகதை பழக்கத்தில் உண்டு.  தொடக்கத்தில் வெறுமனே மூன்று விசயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தில் இருந்ததாம். இருட்டு,தண்ணி, BUMBA எனும்  கடவுள். ஒருநாள் அந்த கடவுள் அதிக வயிற்றுவலி வர வாந்தி எடுக்கிறார் அதில் சூரியன் முதலில் வந்து அங்கிருந்த தண்ணியில் விழுகிறது. கொஞ்சநேரத்தில் அது உலர்ந்து கரைசேருகிறது.இன்னும் வலி நிக்காத அந்த கடவுள் தொடர்ந்து உவ்வே செய்ய மற்ற கொள்களான செவ்வாய்,புதன் எல்லாம் வரிசையாக வர அடுத்து வந்த உயிரினங்களை தொடர்ந்து கடைசியாக மனிதன் வந்து விழுகிறான்.

   இந்த விசயத்தை   இதுதான் இந்த முழு பிரபஞ்சம் உருவான unified Theory என்று சொன்னால் நம்புவீர்களா? இதே போல  சில படித்தவர்களே மூடநம்பிக்கைகளை வெளிப்படையாகவே எழுதி வருகிறார்கள். அவர்கள் இஷ்டம் எழுதட்டும் என்று இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் கோபத்துக்கு காரணம். ஒருவரை நீங்களே அதிகமாக ஊக்கப்டுத்தும்போது தனது வேலையில் அவர் மும்மரமாக இறங்குவார். அதோடு அந்த செயலுக்கு நீங்களும் உதவி போகிறீர்கள்.

   மூடநம்பிக்கையில் ஆவது ஒன்றுமில்லைதான். ஆனால் மக்களின் மனதில் அது அழமாக பதிந்து அகல மறுக்கும் ஒன்று. அதுக்குப்பிறகு நீங்கள் என்னதான் அவருக்கு அறிவியலை எளிமையாக கணிதம் கொண்டு விளக்கினாலும் இந்த பிரபஞ்சம் வாந்தி எடுக்கப்பட்டதுதான் என்பதே அவரது முடிவாய் இருக்கும். அந்த அளவு வலிமை வாய்ந்தது மூடநம்பிக்கைகள். 

    நான் சொல்லவருவது அதை எழுதுபவர்கள் அவர்களின் மன திருப்திக்காக எழுதட்டும் ஆனால் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு "அருமை, வாய்ப்பே இல்லை" போன்ற பின்னுட்டங்களை இடுங்கள். எதையும் முழுவதும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் அடிப்படையில் அறிவியல் கொண்டு யோசிக்கலாம். எல்லாமே சரியாக அறியப்படவேண்டியதுதான் ஆனால் அறிகின்ற விதம்தான் தவறாக இருக்க கூடாது.

      இந்த அறிவியல் காலத்திலும் அண்மையில் ஒரு பதிவு படிக்க நேர்ந்தது அதில் ஒரு எலியை தண்ணியில் இரண்டாக வெட்டினால்அதில் ஒன்று மிதக்கும் இன்னொரு பாகம் முங்குமாம்  இரண்டையும் எரித்து சாம்பலாகின பிறகு ஒன்றைவைத்து மார்பகத்தை பெரிதாக்கவும்,மற்றொன்றை வைத்து சிரிதாக்கவும் முடியும் என்ற அர்த்தத்தில் இருந்தது அது. இந்த விஷயத்திற்கும் நான் மேலே சொன்ன கதைக்கும் எதாவது வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். இரண்டுமே ஒரே எலி. முடிந்தவரை இந்த விளம்பரங்களை தவிர்க்கலாம் குவாண்டம் தத்துவத்தை விட இது வேகமாக பரவும் என்பது எல்லோர்க்கும் தெரிந்திருக்கும்.


      உங்கள் கண்முன் அறிவியல் விரிந்து கிடக்கிறது.  அனைத்தையுமே அதைகொண்டு பார்க்காவிட்டாலும் சில அடிப்படையான விசயங்களையாவது பார்த்து தேர்வு செய்துகொள்வது நல்லது.


     அடுத்து போனவருடத்தை விட இந்தவருடம் புத்தகவாசிப்பு என்னிடம் குறைந்தது. காரணம் இணையம்தான். ஆர்வம் அதிகம் இருந்தபோதும் பொழுது போக்கு அம்சங்கள் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. அதோடு இதுக்குமுன் இருந்தஇடம் புத்தக வாசிப்புக்கு துணையான ஒன்று. நடைபாதைகடையில் புத்தகங்கள மிக மலிவாக கிடைக்கும். ஒரு புத்தகம் நூறு ரூபாய். அதோடு படித்துவிட்டு திரும்பி கொடுத்தால் வாங்கும் புதிய புத்தகத்திற்கு 50% தள்ளுபடி வேறு. ஆனால் இப்போது இருக்கும் இடத்தில அதே புத்தகம் மூன்று மடங்கு விலையில் கிடைக்கிறது. வேறுவழியில்லாமல் வாங்கித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.


                                                 *************  

     இந்த வருடத்தில் நடந்த சில அறிவியல் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். இதே மாதிரி சுஜாதாவும் தனது கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அருமையான ஒன்று.அந்த அளவு சிறப்பாக விரிவாக இல்லாமல் பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய போது குறிப்பெடுத்த விசயங்களையே சொல்கிறேன். இந்த விசயங்களை ஏற்க்கனவே கட்டுரையாக கதையாக எழுதி இருக்கிறேன்.


1) முதலில் செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சியில் ஒரு படிக்கல்லாய் சில நிமிடங்கள் மட்டும் நினைவு இருக்கும் விதத்தில் மூளையின் சிறு பகுதியை முயற்சித்து இருக்கிறார்கள். அதாவது நமது மூளையில் நினைவுபகுதியாக விளங்குவது Pre frontal cortex. இதில்தான் அன்றாடம் நடக்கும் செயல்கள் thalamocorical loop, reciprocol loop போன்றவைகளால் பதியப்பட்டு தேவையான் போது திரும்பி கிடைக்கும்படி இருக்கும்.இதை அடிப்படையாக வைத்து சில பாலிமர் பொருளோடு ப்ரோடின்களை ஒட்டவைத்து அதை ஒரு வட்டவடிவமாக அமைத்து அதில் தகவல் சேமிப்பு 12 நொடிகள் இருக்குமாறு சோதித்து இருக்கிறார்கள். இதுக்கு தகவல் கடத்த தேவையான நியூரான்கள் எலிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது.

2) அடுத்தவிசயமும் மூளையோடு சம்பந்தபட்டதுதான். விபத்தில் இதயகோளறு ஏற்ப்பட்டவ்ரின் மூளையை எடுத்து அதை MRI மற்றும் பலவிதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி உண்மையான மனித மூளையின் வரைபடம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதுதான் முதன்முறை.

3) மனித இனத்தை அதிகம் பலிவாங்கிய நோய்களுள் ப்ளு காய்ச்சலும் ஒன்று. அதுக்கென சில மருந்துகள் இருந்தாலும் முழுதும் வீர்யம் மிக்கவைகளாக இல்லை. OXFORD UNIVERSITY யை சேர்ந்த விஞ்ஜானிகள்ஆய்வில் HINI, H3N2 போன்றவற்றின் பல்கிப்பெருக காரணமாக இருக்கும் இரண்டு ப்ரோடீன்களை அழிப்பதின் மூலம் அதை முழுமையாக தடுக்கலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தனர்.

4) இனிவரும் காலத்தில் மருத்துவ துறையில் முழுவதும் ஸ்டெம் செல்களின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தனியாக இதயத்தை ஸ்டெம் செல்களை கொண்டு வளர்த்து சாதனை செய்துவிட்டார்கள்.இதன்மூலம் இதய நோய் சம்பந்தபட்டவர்கள் கொஞ்சம் நிம்மதியடையாலம் வருங்காலத்தில்.

5) புதிய பதிவர்கள் அதிகம் வந்ததாலோ என்னவோ இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிகை இந்த வருடத்தில் இரண்டு பில்லியன்கள் ஆனதாக சொல்கிறார்கள்

6) இதுவரை பலமுறை பல் சோதனைகளை செய்ததில் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஐன்ஸ்டீன் தாத்தாவின் GENERAL RELATIVITY THEORY மீண்டுமொருமுறை நாசாவின் GRAVITY PROBE  - B என்ற செயற்கைகோளால் நிருபணம் செய்யபட்டுள்ளது.

7) அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தத்துவத்துக்கு கொஞ்சம் திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு கிளம்பியது CERN அமைப்பு அறிவித்த ஒளியை மிஞ்சும் வேகம் கொண்ட NETRINO எனும் துகள். ஆனால் கடைசியில் அதில் இருந்த சிறு தவறுகளால் நிருபனமற்று போனது. அதில் இன்னும் நுட்பமான முடிவுகளை செய்யுமாறு ஹவ்கிங் போன்றவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

8)    இதயம் பாதிப்புள்ளவர்கள் மாற்று சிகிச்சைக்கு அவர்களின் சொந்த ஸ்டெம் செல்கலையே பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தார்கள். வேறொருவரின் தானம் இதுக்கு தேவையில்லை.

9)  குழந்தையின்மைக்கு முக்கிய ஒரு காரணமாக இருக்கும் ஆண்மலட்டுதன்மைக்கு முடிவாக செயற்கையாக விந்து அணுக்களை உருவாக்கி இருந்தார்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த kyoto university ஐ சேர்ந்த அறிவியலர்கள்.

10) கடைசியாக  ஸ்டெம் செல்களை  வைத்து தனியாக உறுப்புகளை வளர வைக்க சோதனைகூடங்கள் இல்லாமல் ஒரு உயிரின் கருமுட்டையில் ஸ்டெம் செல்களை செலுத்தி அதை அதுனுல்லேயே முழுவதுமாக வளர வைக்கமுடியும் என்பதை நிருபித்து இருந்தார்கள். அதாவது மனித உறுப்புகளை உருவாக்க  ஸ்டெம் செல்களை பன்றியின் கருமுட்டையில் நுழைத்து அதை முழுவதும் வளரச் செய்யலாம் என்கிறார்கள்.   

     இவையெல்லாம் இந்த வருடத்தில் நடந்தேறிய நான் படித்த அறிவியல் விஷயங்கள். இதுதவிர பல அருமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடமும் நிறையா எதிர்பார்க்கலாம். முக்கியமாக நான் இயற்பியல் துறையில் எதிர்பார்ப்பது யாரவது இந்த unified theory யை உருவாக்கினால் பிறவிப்பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். குறைந்தது என் வாழ்நாளிலாவது கண்டுபிடித்தால் போதும்.

     இனி என்று பார்த்தால் முதல் பத்தியில் சொன்னது போல பெரியதாக எந்தொரு பெரிய உறுதிமொழிகளும் எடுத்துகொள்ளவிலை. வழக்கம்போல வாழ்க்கை போகின்ற போக்கில் வாழ்வதுதான எனக்கும் பிடிக்கும் அதையே செய்ய போகிறேன். பார்க்கலாம் என்ன நடகிறது என்று.

     சரி எதுஎப்படியோ இந்த புதுவருடம் எல்லோர்க்கும் இனிமையான ஒன்றாக அமையட்டும். அல்லது அதை அமைத்துவிடுங்கள் எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது. எல்லோர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிஜமாகும் நிழல்கள்...

      அந்த நகரத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அருகில் இருந்த கிராமங்கள் கட்டாயமாக அதோடு இணைத்துக்கொள்ளப்பட்டு அங்கிருக்கும் கிராமியத்தன்மையை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நகரமாக்கும் வேலையை அரசாங்கம் மெதுவாக செய்ய தொடங்கியிருந்தது. மக்களுக்கும் அது பிடித்துபோய்தான் இருந்தது. எதோ வயதான உடலைவிட்டுவிட்டு புதிய உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்வதை போல.பின்வரும் சம்பவங்கள்  நடந்தேரியதும் அப்படியொரு கிராமியம் அழிந்துகொண்டு இருக்கும் ஒரு நகரத்தில்தான்.

      மேம்படுத்தும் பணி என்ற பெயரில் சாலையின் இருபுறம் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெறிச்சோடி போய் இருக்க சில வீட்டுக்கு முன்னால் இருந்த மாட்டு தொழுவம் எல்லாம் இடம் மாறியிருந்தது. புகை கக்கிகொண்டு சில பேருந்துகள் வந்து போய்க்கொண்டு இருந்தன. புதிதாய் சில கடைகள். இன்னும் சில அறிகுறிகளோடு அந்த கிராமம் நகரமாக மாறும் முயற்சியில் இருந்தது.


      அது கிராமமாக இருந்தபோது ..........ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.


       பெரிய அளவில் வசதிகள் ஏதும் இதுவரை அந்த ஊரில் இருந்ததில்லை. ஒரு ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே. அதிலும் இரண்டு செவிலியர்கள் இருப்பார்கள் மருத்துவர் ஒருநாளைக்கு சில மணிநேரங்கள் மட்டும் வந்துவிட்டு போவார். இன்றுவரை அதை நம்பாமல் அருகில் இருக்கும் நகரத்தின் மருத்துவமனையை நாடியவ்ரே அதிகம்.  சில சிறிய அவசர சிகிச்சைகளுக்கு அங்கு சென்று வந்தார்கள்.


      அந்த ஆரம்ப சுகாதார மையத்தை பற்றி பேசும்போது கண்டிப்பாக புனி யை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவள் சிறுமியாக இருக்கும்போது அதன் கட்டுமான பணிகள் நடந்தது. அது முடிந்து செயல்பட தொடங்கிய காலத்தில் அவளின் ஊருக்கு வந்த செவிலியர்கள், அங்கு இருந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாமே அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிக்கு மனதில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது.




       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறை நாள் ஒன்றில் சும்மாவே அந்த மையத்துக்கு போய் இருந்தாள். அங்கு வேலை பார்த்தவர்கள் ஊர்க்கதை பேசிக்கொண்டு இருக்க அவர்களோடு புனி யும் சேர்ந்தாள். அழகான முகம் துறுதுறுவென்று கண்கள் பார்த்தவுடனே யாருக்கும் பிடித்துபோகும் அளவில்தான் புனி இருந்தாள்.அவள் வந்த வேலை வரும்வரை காத்து இருந்தாள். பேச்சுவாக்கில் அவர்கள் இவளின் படிப்பை பற்றி கேட்கும்போது அவள் கேட்க வந்ததை எல்லாம் கேட்டுவைத்தாள். அவளின் ஆசை எல்லாம் எப்படியாவது மருத்துவ வேலைக்கு போக வேண்டும் என்பதே. பேச்சின முடிவில் அவளுக்கு தெளிவு இருந்தது அவர்கள் வெறும் செவிளியர்களதான் நன்றாக படித்தால் மருத்துவராகக்கூட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

       ஒரு மாலையில் தன அப்பாவிடம் சொல்லிவைத்தாள்  மருத்துவ படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதுவும் முடித்துவிட்டு நம்ம ஊருலயே பணி செய்ய போவதாகவும். அதுக்கு அவர் முதலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் வரட்டும் அதுக்கு பிறகு பார்க்கலாம் என்றார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வர அடுத்து மருத்துவத்துக்கு வசதியான பிரிவையே மேல்நிலைப்பள்ளியிலும் படித்தாள். அதே நேரத்தில் ஊரில் விஷயம் கொஞ்சம் கிண்டலாக பரவி இருந்தது. புனி நமது ஊருக்கு மருத்துவராக வரத்தான் படிப்பதாக.


   
     இதுவரை சுகாதார மையத்தோடு புணியை இணைத்து பேசிவந்தவர்களுக்கு புதியதாக ஒன்று கிடைத்து இருந்தது. அது புனியின் காதல்
புனியை பற்றி பேசிவிட்டு கணேசை பற்றி சொல்லாமல் போவது சரியில்லைதான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் அது நடந்தது. ஒரே ஊரோக இருந்தாலும் அவன் எதிரில் வருகையில் ஒருபார்வை பார்த்துவிட்டு தலைகுனிவதும், அவள் பார்வையில் படும்படியாகவே அவன் எங்கேயும் செல்வதும்  இருவருக்குளும் மறைமுகமான சில விசயங்களை உறுதிபடுத்தி இருந்தன. அதுவரை சந்தித்தால் கொஞ்சமாக பேசிக்கொள்ளும் அவர்கள் ஒருகாலகட்டத்தில் வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்தது, ஒருகட்டத்தில் கணேஷ் காதலை சொன்னபோது வெறும் சிரிப்பை மட்டும் தந்துவிட்டு ஓடியவள் மறுநாள் வந்து நானும் என்று மட்டும் சொல்லி காதலை சம்மதித்து அவர்களின் ஒரு வருட காதலின் வளர்ச்சி அருமையான ஆற்றங்க கரையிலயே நடந்தது.

     அப்படி ஒரு சமயத்தில்தான் சில பார்த்துவிட அவர்களின் வீடு உட்பட எல்லோர்க்கும் தெரிய வந்தது. இரு வீட்டாரும் உறவினர்கள் என்பதால் கொஞ்சம் கண்டித்ததோடு இப்போது காதல் முக்கியமில்லை முதலில் இருவரும் ஒழுங்க படியுங்கள் என்று காதலுக்கு சொல்லாமல் சொல்லி சம்மதம் தெரிவித்ததில் கணேஷ் மற்றும் புனிக்கும் அளவில்லா சந்தோசம்.

      நான்கு வருடம கடந்த நிலையில் கணேஷ் தான் படித்த படிப்புக்க்கு வேலை கிடைக்க சென்றான். புனி தனது மருத்துவ படிப்பை முடித்து இருந்தாலும் அவளுக்கு இருந்த ஆர்வம காரணமாக உயிரியல் துறையில் சிறப்புபிரிவை தேர்ந்து எடுத்து படிப்பை தொடர்ந்தாள். நான் தொடக்கத்தில் சொன்ன கிராமியத்தை வெளியேற்றி நகரத்தை புகுத்தும் வேலை இந்த நான்கு வருடத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு இருந்தது.

                                                                   *****----*****


     தே நேரத்தில் அந்த ஊர் மற்றொரு விசயத்திற்கு பெருமை வாய்ந்ததாக மாறியிருந்தது. காரணம் சிவன் கோயிலுக்கு அருகில் அமைக்கபட்ட ஒரு சாமியாரின் ஆசிரமம்.சரியாக ஒருவருடம் இருக்கும் அந்த கோயிலுக்கு ஒரு சாமியாரும் மற்ற சிலரும் வந்து தனக்கு கனவில் கடவுள் வந்து இந்த ஊரில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய சொன்னதாக சொல்லி ஒரு ஆசிரமத்தை கட்டினார்கள். அது கோயில் இடம் என்பதாலும் தெய்வ காரியம் என்பதாலும் யாரும் ஒன்றும் சொல்லாமல்விட ஒரு கட்டிடம் ஆசிரமம் என்ற பெயரில் எழும்பியது.

     அது பிரபலம் ஆனதுக்கு காரணம் அங்கு இருந்த சாமியார். பிரச்சினை என்று செல்பவர்களுக்கு தியானத்தின் மூலம் தீர்வுகளை அவர்களின் மனக்கண்ணில் தோன்றவைப்பதுதான். முதலில் உள்ளூர் மக்களுக்கே ஆச்சர்யமாக இருந்தாலும் அனுபவித்தவர்கள் சொல்லும்போது எல்லோரும் நம்பித்தான் போனார்கள். அப்படியே மெல்ல பரவி சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெரிய வந்து போனார்கள்.

      அங்கு சில விதிகள் இருந்தன. தீர்த்தமோ, பிரசாதாமோ வழங்கப்பட மாட்டாது. அந்த சாமியாரை ஒரு குளிர்சாதன முறையில் குளிர்விக்கப்ட்டு இருக்கும் அறையில் சென்றுதான் பார்த்து பேசவேண்டும். அங்கு இருந்து எதையும் எடுக்கவோ ஏன் தொடக்கூட அனுமதியில்லை. உள்ளே வரும்போதும் சரி வெளியே போகும்போதும் அழுத்தம் நிறைந்த காற்றால் சுத்தபடுத்தபட்டே அனுப்பினார்கள். இது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிய சிலர் கேட்டு வைக்க அதுக்கு ஆசிரமாத்தாரின் பதில் எல்லாம் சாமியின் சுகாதாரம் மற்றும் மன அமைதி கருதியே என்றார்கள்.` 


      அந்த சாமியார் அங்கு பிரச்சினை என்று வருபவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்தான் அவர்களை எல்லாம் தெய்வச் செயல் என நம்பவைத்தது. அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர வேண்டும். மெதுவாக நமது பிரச்சினைகளை கேட்டுக்கொள்வார் முதலில். அதுக்குப்பிறகு சில நிமிட அமைதி இந்த நேரத்தில்தான் அவர் கடவுளிடம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்வார் என நம்பினார்கள். அந்த சில நிமிடங்கள் முடிந்த பிறகு எதிரில் அமர்ந்து இருப்பவர் கண்களை மூடி இருக்க அவரின் மனதில் என்ன செய்யவேண்டும் என்ற காட்சி அழகாக விரியும்.அப்படியே நிகழ்கால தோற்றம் எல்லாமே அதிலிருக்கும். இறுதியாக ஏதாவது ஒரு கடவுளிடம் உருவம் தோன்றி மறையும். சாமியார் அந்த சாமியிடம்தன் உதவியை நாடினார் என்றார்கள்.


      அவரின் புகழ் வெகுவாக அக்க்கம்பக்கம் எல்லாம் பரவி அதிகம்பேர் ஆசிரமம் வந்து சென்றார்கள்.அதோடு வாரம் ஒருமுறை வித்தியாசமான சிலிண்டர்களை சுமந்தபடி ஒரு வாகனம் வந்து போனது. அது சாமியின் மகிமையில் மக்கள் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.


                                                      

                                                          ******--------******

    புனி விடுமுறைக்கு வந்து இருந்தாள். அவள் மட்டும் வந்திருக்கிறாள் என்றால் நம்புவது கஷ்டம. ஏற்க்கனவே பேசி முடிவெடுத்து கணேஷ் ம் அதே நாட்களில் விடுமுறை என்று வந்து இருப்பான்.  அதே ஆற்றுப்பக்கம் அவர்களை நடந்தபடி சில நாள்கள் பார்க்கமுடியும். அவள் வந்த மறுநாளே ஆச்சர்யம் அதிக மக்கள் ஊருக்கு வந்துபோவத்தின் காரணம். அந்த சாமியாரின் சக்திகள் அறிந்த போது எல்லாம் பித்தலாட்டம்  என்று பெரியாதாக எடுத்துக்கொள்ளமல் இருந்தாள். நெருங்கிய தோழிகள் உட்பட எல்லோரும் பய பக்தியுடன் சொன்னதால் குழப்பம் அவளுக்கு.

     அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்  வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  









                                                                         இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......

மின்புத்தகம்


   அந்த நீளமான சாலை வளையும் இடத்தில புத்தககடை இருந்ததால்  அந்த உருவம் எப்படி சாலையில் இறங்கியது என்பதை கடையில் இருந்த  அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. எல்லாமே சில வினாடிகளில் முடிந்து இருக்க அது அவனது கடையை நோக்கி நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு கடையை மூடும் வேலையில் இருந்தவன் அதை நிறுத்திவிட்டு அந்த உருவத்தின் மீது கவனம் செலுத்தினான்.

   அது வானத்தில் இருந்து இறங்கிய விதத்திலியே அவனுக்கு புரிந்து பயந்து இருக்க இப்போது கடையை நெருங்க என்னசெய்வதென்று புரியாதநிலை. அதன் உருவம் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. உடைஏதும் இல்லை மேலே ஒரு மெல்லிய இலைபோல முழவதும் பரவி இருக்க உடல் அங்கங்கள் அதில் எம்பி ஒரு உருவத்தை காட்டியது. கிட்டதட்ட மனித உருவத்தை ஒத்துபோகும் ஒன்று. ஆனால் அதன் முக அமைப்பு இறங்கிய விதம கண்டிப்பாக அது மனித இனம் இல்லை என்பதை தெளிவாக்கியது.

  அவன் எதிர்பார்க்காதது அங்கு நிகழ தொடங்கியிருந்தது. அந்த உருவம் கடைக்கு எதிரில் வந்து நின்று புத்தக கடைக்குள் தனது பார்வையை விரித்து எதையோ தேட ஆரம்பித்து இருக்க அதன் பார்வை படும் இடத்தில எல்லாம் அவனும் பார்த்தான்

   சிலவினாடிகள் நகர்ந்த நிலையில் அதன் பார்வை அவனும் மீது விழ பயந்து பின்வாங்கினான். மெல்லிய கீச்சு குரலில் பேசியது. வாய் பெரியதாக பேசுவதற்கு சம்பந்தமாக அசையாமல் வெறும் சப்தம் மட்டும் வெளியில் வந்தது.

“எனக்கு ஒரு புத்தகம் வேண்டும்என்றது

“அப்பாடா அதுக்கு எதுக்கு இந்த வேசத்தில் வரணும் நான் கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன் ஏதோ வேற்றுகிரக வாசிதான்னு நினைச்சிஎன்றான்

“வேற்றுகிரகவாசிதான் நான் கேட்கிற புத்தகம் கிடைத்தால் கிளம்புவேன்

  மீண்டும் பயத்தில் பின்வாங்க “கணேஷ் சிறுகதைகள் அடங்கிய நான் இல்லாத நான் புத்தகம் கொடு கிளம்பனும் என்றது

   அவன் மெல்ல பின்னாடி திரும்பி பார்த்துகொண்டே அந்த
 புத்தகத்தை எடுத்து தூரத்தில் இருந்தபடியே தூக்கி எறிந்தான்

“இந்த புத்தகத்தை வேறு எங்காவது படிக்க வழி இருக்கா?

“இருக்கு இந்த இணைப்பில் படிக்கலாம் என்று சொல்லியபடி ஒரு காகிதத்தில் 


    எழுதி கொடுக்க அது எதுவும் சொல்லாமல் திரும்பி சாலையில் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் செல்லும் போது புத்தகத்தில் அந்த காகிதத்தை வைத்து தனது உடைக்குள் பொதித்து வைத்த சில வினாடிகளில் வேகமாக மேலே எலும்ப அவன் எடுத்த இரண்டு புத்தகங்களில் நான் இல்லாத நான் புத்தகம் ஒன்று அவன் கையில் இருக்க அதை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தான் 



  "நான் இல்லாத நான்"  எனது முதல் சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் இருபது கதைகளோடு ஒரு குறுநாவலும் இருக்கிறது.எல்லாமே கொஞ்சம் அறிவியல் கலந்த கற்பனைகள். சிலவை அன்றாடம் நிகழும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதியது.

   அறிவியல் வளர்ச்சியில் இப்படியும் நிகழ்ந்தால் என்பதை ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களோடு சொல்லியிருக்கிறேன் ரசிக்குபடி இருக்கும் என நினைக்கிறேன்.

    வலைப்பூவில் தேங்கி கிடந்த இந்த கதைகளை தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட முழு உதவிகளை செய்த எஸ்.கே அவர்களுக்கு எனது நன்றிகள்.

   தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்துக்களை சொல்லும் வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றிகள்.தொடர்ந்து எழுதுகிறேன் அடுத்த பாகம் மற்ற இருபது கதைகளோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.