எதிர்பாராத
மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக்
கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போதைக்கு என்னால்
அதை மட்டுமே செய்ய முடிந்திருந்தது.
ஆனால் மனதிலோ
வெளியில் வெட்டும் மின்ன்லைவிட வேகமாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இருக்காதே
பின்னே, நான்குநாள் முன்புதான் இருந்த கொஞ்ச நிலத்தில் கம்பு போட எண்ணி அதை
விதைத்து இன்று காலை பார்த்தபோது முளைவிட்டு மண்ணைப் பிய்த்துக்கொண்டு வெளியில்
வந்திருந்தது. பரவாயில்லை விதைத்ததில் கழிவு இல்லாமல் நன்றாகவே முளைத்திருந்த சந்தோசம் போகும் முன்னே சாயங்காலம் இப்படியொரு
மழை.
காலையில் கண்ட
காட்சி பிரசவத்தில் குழந்தை வெளியில் வந்து என்னைப் பார்த்துச் சிரித்த மாதிரி
இருந்தது, ஆனால் மாலையில் அதே குழந்தைக்கு சீக்கு வந்து பிழைக்குமா இல்லியா
என்றவொரு இக்கட்டமான மனநிலையில் தான் என் மனது தவித்துக் கொண்டிருந்தது. அதை என்
மனைவியிடமிருந்து மறைக்கவே முகம் காட்டாமல் குறுக்கும்,நெடுக்குமான நடை.
அவளோ
வாசற்படியில் உட்கார்ந்துகொண்டு குழைந்தைக்கு மழையை கைகாட்டி விளையாட்டு
காட்டிக்கொண்டிருந்தாள்.அவள் பாடு அவளுக்கு. கொஞ்ச நேரம் குழைந்தையை சந்தோசப்
படுத்துவதில் அவளுக்கொரு குஷி. பெயர் சுமதி. திருமணதிற்கு முன்பு கனவெல்லாம் கண்டதில்லை
இவ்வாறெல்லாம் மனைவி அமையவேண்டுமென்று.
ஆனால் எனக்கு எந்தவொரு சிரமமும் இல்லாமல் தோதுவாக அமைந்தாள். நானும் அவளுக்கு
அப்படியே என்பதை அவளின் சந்தோஷம் கலந்த வாழ்க்கையில் இருந்து அறிந்து
கொண்டிருக்கிறேன்..
விவசாயத்தில்
கொஞ்சம் ஒத்தாசை செய்வாள். குழந்தை பிறந்தபிறகு செய்தாலும் நான் மறுத்திருக்கிறேன்.
இப்போது அவளின் உலகமென்றால் அவளும் அந்தக் குழந்தையும்தான்.
எனது இந்தத்
தவிப்பான நிலை அவளுக்கு தெரிய வேண்டாமென்றுதான் திண்ணையில் நடந்து
கொண்டிருக்கிறேன் .மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை அதே சுரத்தில் பேய்ந்து
கொண்டிருந்தது. யோசனையின் நடுவில் சட்டென்று வந்து போன மற்றொன்று சுரேஷ். எங்கள்
வீட்டு நாய். அதோடு சேர்ந்து எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பேர். இந்த மழைக்கெல்லாம்
எங்கும் போகாது. எங்கவது தொழுவில் ஒன்டியிருக்கும். மழை விட்ட பிறகு தனது செந்நிற உடலை உதறியபடி வெளியில் வரும்.
எப்போதுமே ஒரு
நாய் எங்களின் வீட்டை ஆக்கிரமித்திருக்கும். இப்போது இந்த சுரேஷ். அமைதியான மிக
ஒழுக்கமான நாய். மனதின் தேவைகளை அப்படியே படித்து நடந்துகொள்வதில் எனது மனதை கவர்ந்தவொன்று மனைவியிடையிலான சண்டையில்
அடிக்கடி ஒரு வார்த்தை தேவையில்லாமல் என் வாயில் இருந்து வந்து விழுந்து விடும்.
அது சுரேஷ் புரிஞ்சிகிட்ட அளவுகூட நீ என்னைப் புரிஞ்சிக்கல என்பதே. இதற்கு தனியாக
ஒரு சண்டை ஆரம்பிக்கும் அவளிடமிருந்து அப்போ அந்த சுரேஷ்கூட போய் வாழ
வேண்டியதுதானே என்ற பதிலோடு.
நாயின் பாசம்
எவ்வளவோ அவ்வளவு பாதுகாப்பும் அதனிடமிருந்து கிடைக்கவே செய்தது. அதுக்கு எஜமானின்
பாசப்பிணைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுவரை அதனை எங்கள் வீட்டில்
திட்டியதோ,அடித்ததோ கிடையாது அதுவும் அதனை புரிந்து கொண்டதுபோலவே நடந்து கொண்டிருக்கிறது.இரவு
நேரங்களில் பக்கத்து வீட்டு பூனையைக் காண நேர்ந்தால் கூட குலைத்து ஊரை கூட்டிவிடும்.ஒருவிதத்தில்
இரவு நேர சிரமமாக இருந்தாலும் ஒரு விவசாயின் வீட்டில் ஒரு நாயின் பாதுகாப்பு
என்பது இன்றியமையாது வார்த்தைகளால் கண்டிப்பாக விளக்க முடியாதது.
தட்டில் சோற்றைப்
போட்டுவிட்டு சுமதி கூப்பிட்டாள். மனதில் இருந்த அந்த மழையின் வலி இன்னும் அப்படியே
தான் இருந்தது.குழந்தை தூங்கியிருந்தான். இந்தக் கவலையில் நான் எதையும்
கவனிக்காமல் விட்டிருக்கிறேன். கையை கழுவி விட்டு சோற்றின் முன் அமர்ந்தேன்.
என்முக சோர்வு எதனால் என்பதை அவள் உணர்ந்து இருந்தாள். ஆனாலும் எதையும் கேட்டு
வைக்கவில்லை. சத்தமில்லாமல் சோற்றில் கைவைத்து பிணைந்து கொண்டு இருந்ததைப்
பார்த்தவள், “ இந்த மழையெல்லாம் ஒன்றும் செய்யாது கவலைப்படாமல் சாப்பிடுங்கள்,எல்லாம்
அந்தப் பெருமாள் பார்த்துக் கொள்வார்” என்றாள் என் மனைவி.
“சுரேஷ்
வந்துச்சா?” கேட்டேன்.
“இல்லை காணோம்,
சோறு போட்டு கூடையை வைத்து மூடி வச்சிருக்கேன் தூறல் நின்ன பிறகு வந்தால் நாய்
தொட்டியை தொறந்து விடனும்” என்றாள்.
வீட்டு வாசலில்
சுரேஷ் சாப்பிடுவதற்க்கென்றே ஒரு கல் தொட்டி ஒன்று இருக்கும். சோறுபோட்டுவிட்டால்
பசித்த நேரம் அது விருப்பத்துக்கு வந்து தின்று விட்டுப் போகும்.
அவளும் என்னோடு சேர்ந்து
சாப்பிடத் தொடங்கினாள். ஒருவித அமைதி. அது இருவரையும் பிரிப்பது போல இருந்ததோ என்னவோ
அவளே பேசினாள்.
“மழை நீர் கட்டாதபடி
வரப்பை வெட்டி விட்டாச்சில பின்ன என்ன பிரச்சினை?”
“இருந்தாலும்
ஏற்கனவே தண்ணி பாச்சின இடத்தில் மழை விழுந்தால் உடனே உள் இறங்கிவிடும் அதோடு நீர்
சேர்ந்து பாத்தியில் உள்ள கம்பு நாற்றை முக்கிவிடும். உடனே வடிந்தால் தேவலை
இல்லேன்னா பிரச்சினை.” என்றேன்.
“அதான் மழை
விட்ருச்சில ஒன்னும் பிரச்சினை இல்லை நிம்மதியாக தூங்குங்க என்று சொல்லிவிட்டு
பாத்திரங்களை கழுவிவைக்கப் போனாள்.
நானும் வெளியில்
பார்த்தேன் மழை நின்றிருந்தது. தூறல் பொசுபொசுவென்று காற்றின் திசையில் பறந்து
கொண்டிருந்தது. நாய் தொட்டியில் மூடியிருந்த கூடையை எடுத்து வைத்துவிட்டு சுரேஷ்
எங்கென சுற்றிப் பார்த்தேன் காணோம். சரி வந்தால் தின்றுவிட்டு போகட்டும் என்ற
யோசனையில் கண்ணயர்ந்தேன்.
காலையில் முதல்
வேலையாகச் சென்று மீதம் தேங்கியிருக்கும் நீரை வடிக்க வேண்டும் என்ற முனைப்போடு
வெளியில் வந்தேன். சுரேஷ் மழையில் நனைந்து கொஞ்சம் அழகாக மாறியிருக்கிறது.
தொட்டியில் சோற்றைக் காணோம். எப்போது தின்றதோ என்ற யோசனையில் வயலை நோக்கி நடக்க
ஆரம்பித்தேன். பின்னாடியே சுரேஷும் வந்தது.
வீட்டைவிட்டு
வயலுக்கு செல்லும் சாலையில் எதிரில் இருப்பதுதான் மனைவி நேற்று வேண்டிய பெருமாள்
கோயில். கொஞ்சம் பெரிய கோயில்தான். சந்தோசமோ துக்கமோ முதலில் தெரிவிப்பது அந்தப்
பெருமாளுக்குத்தான். பெரியதாக வேண்டுதல் எதையும் அவரிடம் இதுவரை வைத்தது இல்லை.
ஆனாலும் எங்களைக் காக்கிறார் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு இருந்தது.
கோயிலுக்கு அருகில் செல்லச் செல்ல மனதில் என்னையறியாமல் வேண்டுதல்கள் ஓடின.”பெருமாளே
இந்த வருடம் வெள்ளாமை நல்லா வரணும் எப்படியாச்சும் காப்பாத்து” இதுதான் என்னுடைய
அனேக வேண்டுதல்களில் முதலாக இருப்பது.
நினைத்தது போலவே
பாத்தியில் நீர் கெட்டி முளைவிட்ட கம்பு நாற்றை நீர் மூழ்கடித்திருந்தது.இன்னும்
சூரியன் மேகத்துக்குள் மறைந்ததுதான் இருந்தது. உடனே வெயில் சுள்ளென அடித்தால்
தேவலை. நீர் சீக்கிரம் வற்றிவிடும். அதுக்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை நிமிர்ந்து
பார்த்தேன். பெரிய பெரிய யானைகளைப் போல திரண்ட வெண்மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
மழை இனி கண்டிப்பாக வராது. வெயில் வரும் ஆனாலும் கொஞ்சம் நேரம் ஆகலாம். அதனால்
முடிந்த வரை வயலில் இருக்கும் நீரை வடித்து எடுக்க வேண்டும். நான் வயலில் இறங்க
சுரேஷும் பின் தொடர்ந்தது. அதன் கால் தடங்கள் கண்டிப்பாக நாற்றை நாசமாக்கும்
என்பதை சத்தமிட்டு வரப்பில் இருக்கச் சொன்னேன். இருந்தது.
வேலைமுடிந்து
வாய்க்காலுக்கு வந்தேன், புதிய சேறு கலந்த நீர் வயலில் இருந்து வடிந்து மெல்லிய
ஓடைபோன்று தாழ்வான இடத்துக்கு சென்று கொண்டிருந்தது கொஞ்சம் ஆறுதாலக இருந்தது.
நினைத்த அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்ப்பட போவதில்லை என்றவொரு நம்பிக்கையே காரணம்.
அங்கிருந்து பெருமாள் கோயிலின் கோபுரம் தெரிந்தது. ஒருநிமிடம் அதே வேண்டுதல்
மனதில் வந்து போனது.
வரப்பில் நடந்து
வீடு திரும்பும் போது சுப்பிரமணி எதிரில் வாயில் வேப்பங்குச்சியோடு வந்தார். அவருக்கு
எனது வயல் தாண்டி ஒரு 20 மரக்கா நிலம் இருக்கிறது.
நான் விதைக்கும் மூன்று நாள்கள் முன்னாடிதான் விதைத்தார். அதனால் அவருக்கு ஒன்றும்
பிரச்சினையில்லை என்ற நம்பிக்கையில்,
“என்ன அண்ணே
தண்ணி வடிகட்ட அவசியம் இருக்காது போல நான் இப்போதா என் பின்ஜையில் வடிச்சேன்”என்றேன்.
“எப்பா நீதான்
இப்போதா தண்ணி பாச்சின, என்னோடது வாடியில்ல போய் இருந்துச்சி இந்த மழை எனக்குத்தாம்பா”
என்றார் சிரித்தபடி.
நானும் பதிலுக்கு
சிரித்து வைத்தேன்.
“நீ நல்ல வடிச்சு
விட்ரு இல்லன நாத்து வராது.”என்றார்.
“வடிச்சிட்டேன்
இனி வெயில் வந்தால் தேவலை”என்றேன்.
கடந்து
போய்விட்டார். விவசாயம் என்பது ஒரு மந்திரச்செயல்தான். அதுவும் தெய்வம் நடத்தும்
ஒன்று. இயற்கை எல்லாம் செய்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. விவசாயி
என்பவன் இயற்கையெனும் கடவுளின் முன் ஒரு ஆயுதமற்ற போராட்டக்கள வீரன். அவனுக்கு
என்ன ஆயுதம் கொடுத்து போராட வைக்கவேண்டும் என்பதை கடவுளே முடிவு செய்கிறார். சில
நேரங்களில் நிராயுதபாணியாக ஆக்கி ம்ம் போ என்று சொன்னாலும் போக வேண்டியவன்தான்
விவசாயி. பின்னே ஒரு மழையானது எனக்கு தர்ம சங்கடமாகவும் நாலு வரப்புத் தள்ளி விதைத்திருக்கும்
சுப்பிரமணிக்கு வரமாகவும் அமைவதை என்னவென்று சொல்ல. நேரத்தில் சரியாக கிடைக்கும்
ஆயுதமே ஒரு வீரனின் வெற்றியைப் போர்க்களத்தில் தீர்மானிக்கும். அதுதான் இப்போது
சுப்பிரமணிக்கும் நடந்திருக்கிறது. எனக்கு என்ன வைத்திருக்கிறாரோ அந்தப் பெருமாள்
என்ற யோசைனையோடு வீடு வந்தேன்.
மகன் நேற்று
பெய்த மழையின் ஈரமண்ணை செரட்டையில் அமுக்கி கருப்பட்டி போல உருவமாக அதனை மாற்றி வரிசையாக வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
சுரேஷ் போனதும் அதனை தன் காலால் மிதித்து அழித்து அவனிடம் விளையாட்டுக் காட்டியது.
அவன் செய்ததை இடித்துவிட்டதை எண்ணி அப்பா பாருங்கப்பா இந்த சுரேஷை என்று கத்தியபடி
கையில் இருந்த சிரட்டையை நாயை நோக்கி எரிய அது இதெல்லாம் எனக்கு சுஜுபி என்றவாறு
லாவகமாக விலகி மீண்டும் இவனை தன்னோடு விளையாட வாருமாறு உடல் பாவனையில் சொல்லியது.
சத்தம் கேட்டு மனைவி வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். மகன் நாயை விரட்டிக்கொண்டு
பின் ஓட அதுவும் விளையாட்டு குசியில் அவனை அழைத்துச் சென்றது.
“என்ன ஒன்னும்
பிரச்சினை இல்லையே?”
“இல்ல தண்ணியை
வடிச்சிட்டு வந்திருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் வெயில் அடித்தால்
பிளைச்சிக்கும்”என்றேன்.
“அதெல்லாம்
ஒன்னும் ஆகாது,நேத்தே நான் பெருமாள்கிட்ட வேண்டிட்டேன் அவரும் வேண்டுதலை
ஏத்துக்கிட்டார்” என்றாள் சிரித்தபடி.
சரி சரி என்றபடி
திண்ணையில் அமர்ந்தேன். இக்கட்டான சூழ்நிலைகளில் தெய்வநம்பிக்கையை விட
அருகிலிருப்பவர்களின் ஆறுதல்கள் எவ்வளவு உயரிய மருந்து என்பதை மனைவியின்
வார்த்தைகளின் மூலம் முன்பே அதிகமுறை உணர்ந்திருந்தாலும், ஒவ்வொருமுறை
நடக்கும்போது ஒருவித மகிழ்ச்சி கலந்த தைரியம் நரம்புகளில் நகர்ந்து மூளைக்குச் சென்று
புத்துணர்வு தருவதின் பெயர் என்ன?
கடவுள்தான் இது இப்போது உனக்கு தேவை என்பதை வார்த்தைகளில் வெளிப்படுகிறாரோ என்றெல்லாம்
யோசனை சென்றது.
முதலில் மகன் ஓடிவர
பின்னாடியே சுரேஷ் அவனை விரட்டிக்கொண்டு வந்தது. அவன் வந்து என் கால் இடுக்கில்
நுழைந்துவிட சுரேஷ் மரியாதை நிமித்தம் கொஞ்சம் தள்ளி நின்றபடி இடுப்போடு சேர்த்து
வாலை ஆட்டியது.மனைவி தட்டில் சோறு கொண்டுபோக எங்களை மறந்து அவளின் பின்னே சென்றது.
மகன் விலகி இதுதான் சமயமென்று வீட்டுக்குள் ஓடினான்.
“கை கால்
கழுவிட்டு வந்து சாப்பிடுங்க” என்று சொன்னபடி மனைவி உள்ளே சென்று எடுத்து வைக்கலானாள்.
சூரியனின் கருணையை இப்போது பார்க்க முடிந்தது. வெயில் மஞ்சள் நிறமாக தனது மேனியைக் காட்டத் துவங்கியிருந்தது. கொஞ்சமா
அப்பாடா என்றிருந்தாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு மழையேதும் வராமல் இருக்க
வேண்டும்.
மாதங்கள் கடந்த
நிலையில், பெருமாள் கோயிலுக்கு பக்கவாட்டில் இருக்கும் களத்தில் ஒரே கூட்டம்.
அதுவும் அதிகாலையில். சத்தம் கேட்டுத்தான் என் மனைவி என்னை எழுப்பி என்னெவன்று
போய்பாருங்கள் என்றாள். அந்த கூட்டத்தில் சுப்பிரமணி நடுவில் தலையில் ரத்தம் வடிய உட்கார்ந்திருக்க
சுற்றி இருந்தவர்கள் அவரின் காயத்தை அமுக்கி ரத்தம் வெளியாகாமல் தடுக்கும்
முயற்சியில் இருந்தனர்.
என்னவென்று
கேட்டதில், இரவில் திருடர்கள் களத்தில் அடுக்கியிருந்த கம்பு மூட்டையை
திருடியிருக்கிறார்கள். காவலுக்குப் படுத்திருந்த சுப்பிரமணி தடுக்கச் செல்ல அடிவிழுந்திருக்கிறது.
எட்டு மூட்டைகளை திருடியிருக்கிறார்கள். தலையில் அடித்ததோடு மட்டுமில்லால்
துண்டைவைத்து வாயைக் கட்டி ஒருவன் சுப்பிரமணியை எங்கும் நகராதாவாறு பிடித்திருக்க
இது நடந்திருக்கிறது. வந்தவர்கள் எந்த ஊருக்காரர்கள் யாரென்று எந்த விவரமும்
சுப்பிரமணிக்கு பிடிபவில்லை. மாட்டுவண்டியை கொஞ்ச தூரத்தில் நிறுத்திவிட்டு
இங்கிருந்து மூட்டையை தூக்கிக்கொண்டுபோய் சேர்த்துவிட்டு நகர்ந்து
போய்விட்டார்கள்.
சுப்பிரமணியை கட்டிலோடு
சேர்த்து கட்டியதோடு,பின்மண்டையோடு சேர்த்து ஒரு துண்டை வாயியிலிருந்து சத்தம்
வராதபடி கட்டியிருக்கிறார்கள். காலையில் அந்த வழியே சென்றவர்கள்தான் அவரின் அந்த
நிலைமையைப் பார்த்து ஊருக்குள் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
தீயெனப் பரவிய
செய்தியால் ஊரே அங்கே கூடியிருந்தது.சுப்பிரமணியின் கண்ணில் நீர் வடிந்தோடியது.
கண்டிப்பாக தலையில் பட்ட அடி மட்டுமே அதற்கு காரணமில்லை. பல மாத உழைப்பு
மட்டுமில்லாமல், அக்கறையாக பார்த்து பார்த்து செய்த விவசாயத்தின் பலன் கண் முன்
திருடுபோனதின் இயலாமை, அதன் வலி இரண்டும் சேர்ந்து அவரை ஏதோ செய்கிறது. அந்த
நிலமையை யோசித்து மனதுக்குள் ஜீரணிக்கவே முடியாதவொரு நிலையில்தான் நானும் நின்றிருந்தேன்.
விவசாயமென்பது
நிலம்,நீர் மற்றும் உழைப்பின் மூலம் பூமி மேற்பரப்பில் பச்சைநிறத்தை சாயமாக பூசுவதோடு
மட்டும் நின்றுபோவதில்லை. அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அதெப்படி
மனதோடு ஒன்றர கலந்தவொன்றென்று. வெயில் அதிகமடித்தால் நிழலில் நின்றிருந்தாலும்
பயிர் வாடுவதைக் கண்டு தோல் எரிவதுபோல ஒரு உணர்ச்சி, நோய் வந்தால் என்ன
ஆச்சோ,ஏதாச்சோ என்றவொரு இனம்புரியாத பதட்டம் என எதையும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத
உணர்வுகளந்த விசயம்தான் அது.
பணலாபம் ஒரு
பக்கமிருந்தாலும்,வந்த காசை மீண்டும் போய் அதே மண்ணில் போடும் ஒரு சந்தோசத்துக்கு
முன் அந்த பண சந்தோசம் நெடுநாள் நிலைத்திருப்பதேயில்லை.
மனதுக்குள் ஒரு
சிறிய பயம் பரவத்துவங்கியது. காரணம் அடுத்த வாரமே நானும் இதே களத்தில்தான் கம்பைப்
போட்டு அடித்து மூட்டையாக்கி அடுக்கி வைக்க வேண்டும். இப்போது நடந்ததுபோல
நடந்தால்? இல்லை இல்லை நடக்காது. ஒருவாரத்தில் ரெண்டுமுறை திருடர்கள்
வரமாட்டார்கள். வந்தால் மாட்டிக்கொள்வார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்குமென
மனதைத் தேற்ற முயன்றாலும் மீண்டும் அந்த பயமே ஜெயித்தது.
சுரேஷ்
இருந்தாலாவது கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். அதுவும் இப்போது இல்லை. சுரேஷ் போன
துயரம் இன்னும் அகலாத மனதில் இந்த மாதிரியான ஒரு சம்பவத்தின் தாக்கம் அதிக ரணமாக
இருந்தது.
வாரங்களுக்கு
முன், உங்க நாய் அங்க ஒரு மாதிரி படுத்திருக்கு,ஏதோ பூச்சி கீச்சி
கடிச்சியிருக்கும்போல என்று சொன்னவுடன். விழுந்தடித்துகொண்டு ஓடினேன். அங்கு
நான்கு கால்களை தரையில் பரப்பி சுரேஷ் படுத்திருந்தது. கால்களை தரையில் தேய்த்திருக்கிற
அறிகுறிகள் அதனுருகில் தெரிந்தது. கண்கள் திறந்திருக்கும் நிலையிலும்
பார்வையில்லாதவாறு படுத்திருந்தது. யாரும் அருகில் செல்லாமல் விலகி நின்றிருந்த
நிலையில் நான் சென்று தூக்கினேன். மூச்சுக்காற்று சன்னமாக இருக்க மெதுவாக அதன்
வயிரின் குழி இறங்கி ஏறிக்கொண்டிருந்தது.
அங்கிருந்த ஒரு
பெரியவர் எதோ கடி போல இருக்கு, சிறியாநங்கை இருந்தா பிழிஞ்சி ஊத்துப்பா என்று
சொல்ல கொஞ்ச நேரத்தில் அதுவும் ஊற்றினேன். கொஞ்சம் உள்ளே போக மீதம் வாயின்
ஓரத்தில் வழிந்தது. அதன் உடம்பில் எந்தவொரு அசைவும் இல்லை. கண் திறந்திருக்கும்
நிலையில் மூச்சு மட்டும் மெல்லிய கீற்றாக உள்ளே சென்று திரும்பிக்கொண்டிருந்தது.
சில மணி நேர
காத்திருப்புக்குப் பின் அதுவும் நின்றது. ஆம் சுரேஷ் உடல் மட்டும் என்
முன்.உயிரில்லை. அழுகையாக வந்தது. நடுத்தெருவில் அழுக ஒரு மாதிரியிருந்தது.
தூக்கிக்கொண்டு வந்தேன்.
மனைவி பதறியபடி
வாசலுக்கு ஓடிவந்தாள் நான் சுரேஷை அப்படி தூக்கி வருவதைப் பார்த்தவுடன். மகன் அவளின்பின்
நின்றான். நடந்தவற்றைச் சொன்னேன். கண்ணீரை சேலையில் துடைத்துக்கொண்டாள். ஒரு
கையில் மம்பட்டியை எடுத்துக்கொண்டு வயலுக்கு செல்ல முற்படுகையில், நானும் வாரேன்பா
என்ற படி மகன் பின்தொடர்ந்தான்.
வயலின் ஒரு
ஓரத்தில் இருக்கும் மண் மேட்டின் கீழ் குழியைத் தோண்டி சுரேஷை உள்ளேபோட்டு மண்ணைப்
போடும்போது என்னவோ போலிருந்தது. மகன் குழிக்கு அருகில் அமர்ந்த நிலையில்
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான் ஏதும் பேசவில்லை. நடந்து முடிந்த
நாட்கள் நகரும் வேளையில் அதனை மறப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை எங்களுக்கு.
தினமும் இரண்டு வேலை சோறுபோடும் மனைவிக்கு எப்படியாகிலும் நினைவில் வந்துவிட்டு
செல்லும். இப்போதெல்லாம் அந்த தொட்டியில் போடும் சோற்றை கோழிகளும்,காக்கைகளுமே
தின்றுவிட்டு செல்கின்றன.
சுரேஷ் மாதிரியே
இன்னொரு நாய்க்குட்டி உனக்கு எடுத்துட்டு வாரேன் என்று சொல்லி மகனையும்,என்
மனதையும் சமாதானப்படுத்தினேன் பலமுறை. மகன் கேட்டான்,மனது கேட்கவேயில்லை. அதற்குள்
இந்தச் திருட்டுச் சம்பவம்.
அன்றிரவு நான்
களத்துக்குக் காவல் செல்ல வேண்டுமென்று கிளம்பும்போது யாரையாவது துணைக்கு கூப்பிட்டுப்
போங்க தனியா போகிறது எனக்கு என்னவோ மாதிரியிருக்கிறது என்றாள் மனைவி. அதெல்லாம்
ஒன்னும் பிரச்சினையில்லை போனவரம்தானே வந்துட்டு போனார்கள் இப்போ வர மாட்டார்கள்
என்ற என்னுடைய பொய்யான ஆறுதலை அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். எதிரில் தென்பட்ட
பெருமாள் கோயிலை நெருங்கும்போது அதே வேண்டுதல். பெருமாளே எல்லாம் நல்லபடியே
நடக்கட்டும். விவசாயம் நல்லா வரணும்.
தூக்கம்
வரவில்லை. அன்னாந்து பார்த்து நடசத்திரங்களின் மீது கவனத்தை வைத்திருந்தேன்.
மேகத்துக்குள் நுழைந்து நுழைந்து நிலவு யாருடனோ ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தது.
அதே நிலவுதான் நேரத்தையும் காட்டும் எனக்கு. இப்போது கீழிறங்கி மணி இரண்டுக்கு
மேல் இருக்கும் என்பதை காட்டியது.
எழுந்து சென்று
தார்பாய் போட்டு மூடியிருந்த மூட்டைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து மீண்டும்
படுத்தேன். இன்னும் ரெண்டுமனிநேரத்தில்
வெளிச்சம் கொஞ்சம் வந்துவிடும் அதற்கு பிறகு பிரச்சினையில்லை என்ற யோசனையில் இருக்கும்போது
அந்த உருவ அசைவு என் கண்ணில் பட்டது. எழுந்து வேகமாக கையில் வைத்திருந்த கம்பை
அதனை நோக்கி எறிந்தேன். அதன் மேல் விழாமல் தள்ளிப் போனது. இதுதான் சமயம்
எனக்காத்திருந்த மற்றொரு உருவம் என்னைக் கழுத்தோடு சேர்த்து பிடித்து கட்டிலில்
கிடத்தும் வேளைக்குள் நான்கு பேர் என்னைச் சுற்றி நின்றிருப்பதை என்னால் காண
முடிந்தது.
ஏதும் செய்ய
முடியாத நிலையில் கட்டிப்போட்டிருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் அங்கு வருவது
தெரிந்தது. மொத்தம் ஆறு பேர். முகம் முழுவதும் சாக்கு போன்ற ஒரு துணியால் சுற்றி
முடியிருந்தது. இரண்டு பேர் மட்டும் என்னருகில் இருக்க,மற்றவர்கள் தார்ப்பாயை
விளக்கி மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு களத்துக்கு பின்பக்கமாக உள்ள பாதையில்
செல்ல இருந்தார்கள்.
துள்ளினேன் ஏதும்
நடக்கவில்லை.கட்டில் மட்டும் ஆடியது.அருகிலுள்ளவர்கள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை.
இயலாமையில் கண்ணீர் வழிய தலையை ஆட்டினேன் வேகமாக. அப்போதுதான் அது என் கண்ணில்
பட்டது.
தூரத்தில் தெரிந்த
செந்நிற ஒளி அருகில் வர வர அதைப் பார்த்தவுடன் என் கண்கள் ஆச்சர்யத்தில்
விரிந்தது. அது சுரேஷ். ஆம் அதே செந்நிறம், அதே உருவம். ஆனால் இந்த ஒளி
எங்கிருந்து வந்தது அதன் உடம்புக்கு என்ற யோசிக்கும்போது அது தனது முதல்
எச்சரிக்கை பாணியில் குரைத்தது. அங்கிருந்தவர்கள் அதனை திருபிப் பார்த்துவிட்டு
கண்டுகொள்ளாமல் தனது வேலையில் இறங்கினார்கள்.
நெருங்கி
வந்தபோனது இன்னும் நன்றாக கவனித்தேன். ஆம் அது என்னுடைய சுரேஷ் தான். அப்போதுதான்
அது நிகழ்ந்தது. ஒரே பாய்ச்சல் என்னருகில் இருந்த இருவரின் மீதும் பாய்ந்து
அவர்களை அப்படியே கிழே விழச் செய்தது. இதனைக் கண்டதும் மூட்டையை தூக்க இருந்தவர்கள்
நாயை அடித்துவிரட்டும் முயற்சிக்கு தாவினார்கள். ஏதும் பழிக்கவில்லை.
சுரேஷின்
பாய்ச்சல் அப்படி. ஒரு மெல்லிய மின்னல் கீற்றின் வேகம் அதன் மீது இருந்தது. ஒரு
சாதாரண நாயினால் இப்படியொரு பாய்ச்சல் சாத்தியமேயில்லை. மின்னல் கோடுகளாய் அந்தக்
களம் கொஞ்சநேரம் காட்சியளித்தது. ஒருகட்டத்தில் தாமரிக்கமுடியாத அவர்கள் பிரிந்து
திசைக்கு ஒருவராய் ஓடினார்கள். ஆனாலும் விடுவதாயில்லை.
கிழே
தள்ளி,புரண்டு,பாய்ந்து என எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.
அங்கிருந்தவர்கள் கடி வாங்கியதில் நொண்டியபடி ஓடுவதை என்னால் காண முடிந்தது.
சுற்றி ஒருமுறை
வந்த சுரேஷ் யாருமில்லை என்றவுடன் வந்த பாதையில் திரும்ப எத்தனித்தது.
அது என்னை
கடக்கும் வேளையில் அதனிடம் எந்தவொரு சலனமுமில்லை. அதே செந்நிறம்,அதே நடை,அதே உடல்
திரும்பியும் நான் என்னை நானே உறுதி செய்தேன் அது சுரேஷ்தான். ஆனால் இந்தச் செயல்?
ஒரு திரும்பி பார்த்தல் கூட இல்லாத அந்த கம்பீர நடை எப்படி சாத்தியம். என்ன
நடக்கிறது இங்கு? எல்லாமே ஒரு மழையில் இடையில் வந்து போகும் மின்னலின் கீற்றைப்போல
நடந்து முடிந்திருக்கிறது.
ஏதும் புரியாமல்
அப்படியே கட்டிலில் கட்டுண்டு கிடந்தேன். விடிந்து வந்து பார்த்தவர்கள் இன்னொரு
திருட்டு போயிருக்கிறது என்று எண்ணினார்கள். இல்லை மூட்டைகளை பார்த்தேன் அவைகள்
அடுக்கியிருந்த நிலையில் அப்படியே இருந்தது.தார்ப்பாய் மட்டும் விலகியிருந்தது.
என்ன நடந்தது
என்று கேட்வர்களுக்கு நானேதும் பதில் சொல்லவேயில்லை. திருட வந்தவர்கள் ஏதோவொரு
எண்ணத்தில் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.
நான் ஏதும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. காரணம் இரவு நடந்த விசயத்தின் அதிர்ச்சி.
கண்கள் விரிந்த
நிலையில் சோகமாக என்னருகில் அமர்ந்த மனைவி எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்று
உடம்பை சோதனை செய்தாள். எதுவும் இல்லையென்றேன். அவளும் அவளின் பங்குக்கு
என்னெவன்று கேட்டாள் அவளுக்கும் அதே பதில்தான். மௌனம்.
மௌனம் களைய
ரெண்டு நாள்கள் ஆனது. அதற்கு இடையில் ஒரு நாள் பெருமாள் கோயில் சென்று கர்ப்பகிரகத்தின்
முன் நின்றபடியிருக்க என்னையறியாமல் கண்ணீர் வடிந்து கிழே பாறாங்கல்லின் மீது
விழுந்து, ஒரு நீர்த்துளி கல்லின் பரப்பில் படர்ந்து பெரிய ஈராமாக மாறுவதை மட்டுமே நான் கவனித்துக்
கொண்டிருந்தேன். இந்த முறை என்னிடம் எந்தவொரு வேண்டுதலும் இருந்திருக்கவில்லை.
இப்பவாது
என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்ட
மனைவிக்கு பதில் சொல்லும் விதமாக,
“அன்றிரவு சுரேஷ்
நாய் வந்து......... “ என்று ஆரம்பிக்கும்போதே அவளின் கண்ணில் நீர் கோர்த்தது.
1 comments:
romba nalla irukunga ganesh... eluthuvathai niruthatheenga...
Post a Comment