இப்படியும் எழுதலாம்

         இதுவரை ஐம்பதுக்கும் மேலான சிறுகதைகள் எழுதி இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எல்லாமே ஒவ்வொரு மனநிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதியவை. அதனால் எனக்கு எல்லாமே தேறும் வகைதான். ஆனால் வாசிப்பவர்களுக்கு எப்படி என்று இதுவரை யாரும் சொன்னதாக நினைவில்லை. அதற்காக எனது கதைகள் எல்லாம்  தமிழ் எழுத்தில் சிறந்தது என்றெல்லாம் சொல்ல வரவில்லை அடிக்க வருவார்கள். நான் என்ன மாதிரியான கதைகளை படிக்க நினைக்கிறன்றேனோ அதையே எழுதுகிறேன். அதிலே ஆர்வமும்கூட.

      படிப்பதைவிட தனது முயற்சியில் ஒன்றை எழுதிவிட்டு அது ஓரளவுக்கு தேறுகிற மாதிரி இருந்தால் அதில் இருக்கிற இன்பமே தனிதான். சில நேரங்களில் அனுபவித்தது உண்டு. இதில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விசயம் எழுதுபவர் என்னதான் எதையுமே எதிர்பாராமல் எழுதுகிறார் என்றாலும் மற்றவர்களின் அங்கீகாரமும் பர்ரட்டுகளும் அவரின் வாருங்கால எழுத்துக்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இருக்கும் .ஆனால் மற்றவர்கள் தன் எழுத்தை அங்கிகரிக்க வேண்டும் என்பதற்காக எழுதினால் தொடர முடியாதுதான்.


      சரி விசயத்துக்கு வருகிறேன் இதுவரை நான் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அறிவியல் புனைவுகளே. ஒரு அடிப்படையான அறிவியல் விசயம் அதனை விவரிக்க சில கற்பனை கதாப்பாத்திரங்கள் இப்படித்தான் என் கதைகள் நீளும். இந்த கற்பனைக்கு நான் எடுத்துக்கொள்ளும் இடங்கள் எல்லாமே உணமையானவை.அவை பெரும்பாலும் நான் வாழ்ந்து ரசித்த இடமாகவே இருக்கும்.சிலகதைகளில் வந்த பின்னுட்டங்கள் இது உண்மையா? கதையா? என்ற சந்தேகமே இந்த எனது முயற்சிக்கு வெற்றியும்கூட.

      இல்லாத ஒன்றை அப்படியே கற்பனையில் மனதில் விரிக்க நிறைய மெனக்கெட வேண்டும். ஆனால் ஏற்க்கனவே மனதில் ஆழமாக பதிந்த விசயங்களை அப்படியே எழுதும்போது கற்பனையில்  எழுதியதை விட கொஞ்சம் சிறப்பாகக்காட்டமுடியும் என்பது என் கருத்து. எல்லா கதைகளிலும் இந்த மாதிரி உண்மையானவைகளை சேர்த்து எழுதிவிட முடியாது. கதைக்கரு ஒத்துபோகவேண்டும்.

    நானும் சில கதைகளை இந்த வகையில் எழுதி இருக்கிறேன். இதுவரை படித்தவர்களுக்கு அது வெறும் என் கற்பனைதான்,ஆனால் இப்போது அதன் உண்மை உருவமும் உங்களுக்கு. இந்த விசயங்களை நான் எப்படி என் கதைகளோடு சேர்த்து இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாய் சில...

ஒரு ரகசியம்     என்ற கதையில் வரும் கோயில் ..

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி.
 
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
கோயிலுக்கு முன்னால் கிடக்கும் கல் தூண்கள்
                                                                பெருமாள் கோயில்

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும்



தூண்கள்    கதையில்

     ஊரின் தொடக்கமே அந்த பெருமாள் கோயில்தான். அடுத்து வீடு ஆரம்பம் என்றால் கொஞ்ச தூரம் தள்ளிதான்.  அந்த கோயிலை சுற்றியும் பெரிய கல் தூண்கள் ஒழுங்கற்று கிடக்கும்.பழமை வாய்ந்த அந்த கோயிலில் இருந்து பிடுங்கி வெளியில் போடபட்டவை அவை..........
                                                           
                                                          கல் தூண்கள்

    .........தன்னிலை மறந்து மெல்ல தூணின் மீது சரிய அவள் சேலையில் கண்ணாடியில் பார்த்த அழகிய முகம், அதை கட்டி நடந்தவிதம் எல்லாம் ஒருமுறை வந்தபோனது. மெல்ல சிரிப்பது போன்ற உணர்வு கண்டிப்பாக சந்தோசத்தில் இல்லை. அதுதான் கடைசி. அவளது தலை சரிந்து கன்னம் அந்த கல்லில் ஒட்டியது.


தெரியலை..கதையில்

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

                                                                            ஆறு 

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம்

நிஜம்கும் நிழல்கள்
  கதையில்

    ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.............
                                              ஆற்றங்கரையில் சிவன் கோயில்


                                                           கிணற்று உறை
                                              
 .........வழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது


      இதோடு இன்னும் பல கதைகளில் சில இடங்களில் இந்த மாதிரியானவற்றை  வர்ணித்து கதையோடு சேர்த்து இருப்பேன். இவை இல்லாமல் நான் பார்த்து ஏன் இப்படி? என்று யோசித்ததையும் எழுத மறக்கவில்லை.

     இதில் என்ன இருக்கிறது பெரும்பாலும் எல்லோரும் இந்த மாதிரிதான் எழுதுவார்கள் என்றால் பதில் இல்லை. நான் எப்படி எழுதுகிறேன் என்பதைதான் சொல்லி இருக்கிறேன்.  அறிவியல் புனைவுகளுக்காக வெறுமனே கற்பனை செய்து எழுதியதும் உண்டு.

      எழுதுவதில் இன்பமும் ஆர்வமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில விசயங்களை பார்க்கும்போது ஏன் எழுதுகிறோம் என்றும் யோசிப்பதோடு அதே யோசனை எழுதும் ஆர்வத்தையும் குறைத்து வெறுமனே படிக்கும் ஆர்வமே மிஞ்சுகிறது. எது எப்படியோ இன்னும் நிறைய எழுத வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.  


2 comments:

HVL said...

வித்யாசமான பதிவு. உங்கள் வரிகளையும் படத்தையும் இணைத்தது ரசிக்கும் படியாக இருந்தது.

கணேஷ் said...

படிச்சிட்டு சொன்னதுக்கு நன்றிங்க ))