கில்காமெஷ்

கில்காமெஷ் - க.நா.சு மொழிபெயர்ப்பு

உலகத்தின் ஆதிகாவியம் என்பதால் என்னதான் இருக்குமென்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி வாசித்த புத்தகம்.

ஊருகி நகரத்தின் மாபெரும் பலம் பொருந்திய மன்னனாக கில்காமெஷ் இருக்கிறான்.பல தேவர்கள்,தேவிகள் அவனுக்குப்  பல்வேறு சக்திகளையும் வரங்களையும் கொடுத்து சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகுந்த பலவானாகவும்,  ஆள்பவனாகவும் படைக்கிறார்கள்.

அவனும் அதற்கேற்றாற்போல் எல்லா வேலைகளையும் செய்கிறான் கோட்டைகள் எழுப்பி மக்களைக் காப்பாற்றுவதிலிருந்து  நீதிவழங்கும் சிறந்த அரசனாகவும் திகழ்கிறான்.

வழக்கம்போல  எதிரி இருக்கவேண்டுமே?  இவனை அழிக்க மற்றோரு பலம் பொருந்திய வீரனைப்படைத்து காட்டில் இருக்கும்படி செய்கிறார்கள். அவனும் காட்டில் மிகுந்த வீரமுடன், மனித வாசனையற்று மிருகக் குணத்தோடு வாழ்ந்துவருகிறான். அவனுக்கு மனித வாடை இல்லையென்பதால்  நாட்டுக்குள் கூப்பிட்டு வந்து கில்காமெஷை சாகடிக்க ஒரு அழகான பெண்ணை அவன் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அவனும் பெண்ணழகில் மயங்கி அவள் சொல்வதைக்கேட்டு நாட்டுக்குள் சென்று கில்காமெஷை எதிர்க்க, தோல்வியுற்று அவனுக்கு உயிர் நண்பனாகிறான். அவன் பெயர் எங்கிடு. தனியாக இருந்த கில்காமெஷுக்கு இப்போது துணையாக இன்னொரு பலசாலி நண்பன். கேட்கவா வேண்டும்,இரண்டு பெரும் சேர்ந்து பல சாகசங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாகப்போகும் கதையில்,காட்டிலிருக்கும் மற்றொரு பெரிய அரக்கனை கொல்லப்போகிறார்கள் இருவரும். அதற்கு எங்கிடு மிகுந்த உதவி செய்கிறான். இந்த வீர தீர செயலால் இருவரின் புகழ் உலகெங்கும் பரவிக்கிடக்கின்ற வேளையில் எங்கிடு நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறான். நண்பனின் இறப்பு கில்காமேஷை மிகவும் பாதிக்கிறது. அழுது புரண்டபிறகு ஒரு  முடிவுக்கு வருகிறான். அதுதான் மரணமில்லாத நிலையை அடைவது.

உயிர்நண்பனின் மரணம் கண்முன் நிகழ்ந்ததால் தானும் அதுபோல இறந்து புழுக்களுக்கு இரையாவதை எண்ணி அவனுக்குள் மரண பயம் இத்தகைய தேடலை அவனுக்குள் வரவழைக்கின்றது. பல ஆண்டுகள் காடுமலை என்று பாராமல் பயணித்து, பல தேவர்களை சந்தித்து அவர்களின்   வழிகாட்டுதலின் பெயரில் ஏற்கனவே சாக வரம்பெற்ற ஒருவரை கடல்கடந்து சந்திக்கிறான். அவன் பெயர் உத்னபிஷ்டிம்.

அவன் முதலில் கில்காமேசுக்கு மரணம் சம்பந்தமான எல்லா அறிவுரைகளையும் ( மனிதாகப் பிறந்தால் கண்டிப்பாக இறந்தே ஆகவேண்டும், பிறக்கும்போதே தேவர்கள் நமது இறப்பை தீர்மானித்திருப்பார்கள் இன்னும் சில) வழங்குகிறான் அதில் திருப்தி அடையாத கில்காமெஷுக்கு தான் எப்படி இந்த நிலையை அடைந்தேன் என்பதைச்   சொல்கிறான் உத்னபிஷ்டிம். மனிதர்களின் தொல்லை,பாவங்களைத்   தாங்காத தேவர்கள் அவர்களை அழிக்கப்  பிரளயத்தைத்  தோற்றுவிக்க முடிவு செய்கிறார்கள். இதனை பூமியில் வாழும் உத்னபிஷ்டிம்க்கு தேவர்களில் ஒருவர் ரகசியமாக    சொல்லிவிடுகிறார்,அதோடு எப்படி தப்பிப்பது என்பதையும் சொல்கிறார். அதன்படி அவன் பெரிய மரப்பேழை செய்து அதனுள் உயிரினங்களை ஆண்,பெண் என இரண்டு ஜோடிகளாகப்   பிடித்து அடைத்துவைத்து அந்த நீர்பிரளயத்திலிருந்து தப்பிக்கிறான். (இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? வேறெங்குமில்லை நமது நோவா செய்ததாக பைபிளில் சொன்னது  அப்படியே இங்கு நடக்கிறது)
கடைசியில் சாகாவரம் இல்லையென்பதை உணர்ந்த கில்கமெஷ் மிகுந்த வருத்தத்தோடு நாடு திரும்ப எத்தனிக்கையில் பாவம்பார்த்த உத்னபிஷ்டித்தின் மனைவி அவனுக்கு அதிகமான அன்பளிப்புகளை வாரிவழங்க கணவனுக்கு அறிவுறுத்துகிறாள். ஏனென்றால் கில்காமெஷ் அவ்வளவு சிரமப்பட்டு அங்கு வந்தடைந்திருக்கிறான். அவன் அன்பளிப்புக்கு பதிலாக, கடலுக்கடியில் இருக்கும் ஒரு பூவைப்  பற்றிச்   சொல்கிறான். அந்தப் பூவை தின்றால் கிழவனும் குமரனாகலாம் என்பதே. கில்காமெஷும் வேறுவழியில்லாமல் வந்ததுக்கு அந்தப் பூவைப் பறித்துச்சென்று நாட்டிலுள்ள வயதானவர்களுக்கு கொடுக்க எண்ணி சிரமத்ததோடு அந்தப் பூவை பறிக்கிறான்.

அந்தப் பூவோடு நாடு திரும்பும் வேளையில் தாகத்துக்கு நீர் குடிக்க ஒரு நல்ல நீர் கிணற்றில் இறங்கி பூவை ஓரமாக வைத்துவிட்டு நீர் அருந்தும் வேளையில் ஒரு பாம்பு அந்தப்   பூக்களைத்  தின்றுவிட்டு நீருக்குள் மறைந்து விடுகிறது.(பைபிளில் வந்து வஞ்சிக்கும் அதே பாம்பும்தான் போல)

விரக்தியின் உச்சிக்கு செல்லும் கில்காமெஷ் வெறும் கையோடு நாடு திரும்பி கொஞ்ச நாளில் உயிர்விடுகிறான். அவன் கட்டிய கோட்டைகளில் எழுத்துக்காளால் அவனது சரித்திரம்            பொறிக்கப்பட்டு பின்னாளில் கண்டெடுக்கப்பட்டு ஒரு நூலகத்  தொகுக்கப்பட்டதுதான் இந்த ஆதிகாவியம்.

சரி கதை முடிந்தது, ஆனால் இந்த ஆதிகாவியத்தில் வரும் விசயங்கள்தான் நம்மிடமிருக்கும் எல்லா புராண கால கதைகளுக்கும் அடிப்படை.

ஒரு பலசாலி மனிதன்/அரசன்/கடவுள் - தனது பெருமைகளை பறைசாற்ற நினைத்தல், அவைகளை அடுத்த சந்ததிக்கு பதியவைத்தல்  - ஒரு / பல எதிரிகள் - பெண்ணால் வஞ்சிக்கப்படுதல்  - மரண பயம் - மரணத்தைத்  தவிர்க்க தவம் / மெனக்கெடல் - சாகாவரம் பெற்று நிலைத்திருத்தல். இதுதான் புராண கதைளுக்கு அடித்தளம். இதோடு கொஞ்சம் கற்பனை வளம்சேர்த்தால் நல்ல வேதமோ, இதிகாசமோ தயார்.

சரி இந்தக் கதையிலிருந்து எனக்குத் தெரிந்த சில புராண நபர்களைச்  சொல்கிறேன்.  முதலில் சட்டென நியாபகம் வரும் நோவா. எனக்கு நன்கு தெரிந்த கதை. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அதே மரப்பேழை, இரண்டு ஜோடி உயிர்கள், புறாவை பறக்க விடுதல் என அப்படியே இருக்கிறது. வருடங்களோடு கணக்கிட்டால் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் வருகிறான் இந்த கில்காமெஷ். அவனுக்கே இந்தப் பேழை விசயம் மிக முன் நடந்ததாக சாகாவரம் பெற்ற உத்னபிஷ்டி சொல்லுகிறான். அபப்டியென்றால் பேழை விசயம் நடந்தது கில்காமேஷியின் காலத்துக்கும் வெகு முந்தையது.

    இங்கு ஆண்டுகளையும், நகரத்தின் பெயர்களையும்  பற்றி எழுதினால் ஒரு புராண ஆராய்ச்சி கட்டுரை போல இருக்குமென்பதால் தொடக்கத்திலிருந்தே அதை தவிர்த்து வந்திருக்கிறேன்.  உங்களுக்கு   ஆர்வமிருந்தால் புத்தகம் வாங்கி வாசிக்கலாம், இல்லையென்றால் இணையத்திலும் ஆங்கிலப்  பதிப்பு இலவசமாகக்  கிடைக்கின்றது.(காமிக்ஸ் வடிவிலும் ஒரு புத்தகம் பார்த்தேன்)

அடுத்து எங்கிடு = ரிஷ்யசிருங்கர், இதில் ரிஷ்யசிருங்கர் மானுக்குப் பிறந்தவர். எங்கிடு ஒரு தேவதையினால் படைக்கப்பெற்று மனோடு மானாக புல்லைத்தின்று வாழ்கிறான். இருவருக்குமே பூமியென்றால் காடுதான். பெண் வாசமே தெரியாது. உணவுகூட விலங்குகள் உண்பதுதான்.  இப்படியிருக்கும் இருவரையும் ஒரு காரணத்திற்காக நாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எங்கிடுவை கில்காமெஷொடு மோதவிடவேண்டும். ரிஷ்யசிருங்கர் வந்தால் நாட்டில் மழைபெய்து சுபிட்சம் வரும். இருவரையும் அழைத்துவர செய்யும் செயல்களும் ஒன்றுதான். இருவருமே பெண்கள் வாடையில்லாதவர்கள் ஆகையால் பெண்களால் அவர்களை மயக்கி அழைத்துவர வேண்டும். இருவர்களையுமே பெண்களே மயக்கி நாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்.  நமது கதையில் வேதம் படித்து மிகுந்த கற்றுத்  தேர்ந்தவராக இருக்கிறார் ரிஷ்யசிருங்கர். வாய்வழியாக வந்த கதைகள் கொஞ்சம் திரிந்து இந்த மாதிரியாக மாறியிருக்கலாம் மேலும் இடையில் கொஞ்சம் வேதங்களும்,ரிஷிகளும்,பிராமணாளும் கதையில் புகுந்திருக்கிறன்றனர்.(  நாட்டில் மழைபெய்ய மன்னன் பிராமணாளிடம் உதவி கேட்க அவர்கள் பெண்ணை வைத்து அவரை அழைத்து வரும் இந்த தலைசிறந்த அறிவுரையை வழங்குகிறார்கள்)

கில்காமெஷ் சாகாவரம் வேண்டி உத்னபிஷ்டிடம் நிற்கும்போது நடந்தவை நம்மூர் நசிகேந்தனுக்கு நடந்திருக்கிறது. உத்னபிஷ்டி சாகாவரம் வேண்டிவந்த கில்காமெஷுக்கு சோதனைகளை செய்ய முனைகிறார். அதில் முதல் சோதனையான குறிப்பிட்ட நாட்கள் தூங்காமலிருக்கும் சோதனையில் தோற்றுவிடுகிறார் கில்காமெஷ். அவன் சிரமப்பட்டு பயணம் செய்வதால் அயர்ந்து தூங்கி பலநாள் கழித்து எழுந்திருக்கிறான். இங்கும் எமன் நசிகேதனுக்கு பல சோதனைகள் வைக்கிறார் பின்புதான் ஆத்ம தத்துவத்தை அடைகிறான்.

கில்கமெஷ் செய்த குற்றங்களாக சொல்லப்பட்டவைகளில் ஒன்று பெண் போகம். அவன் நினைத்தால் எந்தப் பெண்ணையும் அடையலாம். பணக்காரன்,ஏழை எனப்   பாகுபாடின்றி அவனின் கைகல் அவர்கள் வீட்டிலுள்ள பெண்களின் மீது இருந்தது. அரசன்தான் எல்லாப் பெண்களுக்கும் முதல் புருஷன், நிஜ புருஷன் இரண்டாவதுதான் என்ற நோக்கில் அவன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இது கேரளாவில் நம்பூதிரிகள் செய்ததாக நான் வாசித்திருக்கிறேன். அவர்கள் நினைத்தால் எந்தப் பெண்ணையும் தடையின்றி அடையலாம், அப்படி இனங்காதவர்கள்  வேசி பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கப் பட்டார்கள், அல்லது தண்டிக்கப் பட்டார்கள். திருமணம் நடந்தால் முதலில் அந்தப் பெண் நம்பூதிரியின் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். இதே மாதிரியான விசயம் தமிழ் படமொன்றிலும் இடம்பெற்றிருக்கும்.

இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்தால் அதிகமாகக் காணகிடைக்கலாம், இங்கு இருப்பதைப் போலவே காற்றுக்கு,மழைக்கு,சூரியனுக்கு என தனித்தனியாக தேவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மக்கள் பூஜைகள் செய்தும்,பலிகொடுத்தும் தனக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொண்டார்கள்.

பண்டைய காலத்தில் கதைகள் சொல்லும் பாணியும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும் ஒன்றாக இருந்ததா? இல்லை இந்த ஆதிகாவியம்தான் செவி வழி கதைகளாகத்  திரிந்து பறந்து ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றாற்போல் வேதங்களாகவும், இதிகாசங்களாகவும் மாறியதா? யாருக்குத்தெரியும்.

இருந்துவிட்டுப்  போகட்டும் இந்தக்கதைகளை வெறும்கதைகளாகப்  படித்துவிட்டுக் கடந்துபோனால் எந்தவொரு பிரச்சினையுமில்லை, இதையே வாழ்க்கைமுறையாக, சட்டமாக மாற்றி வாழ நினைத்தால் பூமி தாங்காது.

இன்னொன்றைக்  கவனித்தால் தமிழ் இலக்கியங்களில் இதன் சுவடுகள் கொஞ்சம்கூட இல்லை. மாறாக இதற்கு எதிராகத்தான் இருக்கிறது.இது சம்பந்தமாகவும்  வாசிக்க வேண்டும்.