முளைக்காத விதைகள்




      பனை ஓலை மட்டையில் இருந்து எடுக்கப்பட்ட நாரினால் நெய்யப்பட்டக் கட்டிலில் ஒவ்வொரு முறையும் நாராயணன் திரும்பிப் படுக்கும்போது ஏற்படும் சத்தம்தான் அவருக்குத் தூங்கும்போதான தாலாட்டு. கடந்த ஏழு வருடங்களாக அவருக்குச் சொர்க்கமாகவும் நரகமாகவும் ஏன் ஏழேழு லோகமாகவும் இருப்பது அந்தக் கட்டில் மட்டும்தான். அவரின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கும் ஒரேயொரு வஸ்து அந்தப் பனை ஓலை நாரினால் செய்த கட்டில் மட்டுமே.


            பனை மரத்திலிருந்து பச்சையாக வெட்டப்பட்ட ஓலைகளை மூன்று அல்லது நான்கு ஓலைகள் சேர்த்து வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, அதன் மீது கனமான கல்லை வைத்து மட்டைகளை முதலில் நேராக ஆக்குவார்கள். மட்டை காயாமல் இருக்க, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதன் மேல் நீர்த் தெளிக்கப்படும். இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது மட்டமாவது மட்டுமில்லாமல் நார் கிழிபடும் பக்குவத்துக்கும் வந்துவிடும். ஊற்றப்பட்ட நீரினால் ஏற்பட்ட பதமும், காய்ந்தும் காயாமலும் இருக்கின்ற நிலையில் மேற்புற நாரானது வழுவழுவென்று மாறியிருக்கும். ஒரு சிறு கத்தியால் தேவையான அகலத்தில் வரிசையாகக் கோடு போலப் போட்டுவிட்டு  நாரைக் கிழித்தால், அருமையான நீளமான பனை நார் கிடைத்துவிடும்.


            இந்த நாரினை ஒன்றோடு ஒன்று இணைத்தால் பெரிய கயிறு மாதிரி இருக்கும். இதை வைத்து வீட்டுக்குப் பயன்படும் பொட்டி, சொளவு, முதற்கொண்டு எல்லவிதமான உபகரணங்களும் செய்யலாம். கட்டில் பின்னுவதெற்கென்று நீளமான நாறுகள் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள் அப்படியொன்றால் பின்னப்பட்ட கட்டில்தான் தற்போது நாராயணன் தூங்குவது வாழ்வது எல்லாமே.


              நாராயணனின் உண்மையான வயது 61 ஆக இருந்தாலும், அவரைக் காண்பவர்கள் அல்லது புதியதாக ஊருக்கு வருபவர்கள் அவருக்கு நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வயதுதானென நினைப்பார்கள். அவ்வளவு கட்டுக்கோப்பான உடல் மட்டுமல்லாமல், அவரின் சுறுசுறுப்புத் தன்மையும் காரணம். தனது ஐம்பத்தைந்து வயதுவரை விவசாய வேலைகள் மட்டுமே செய்து வந்தவர். அனைத்து விவசாய வேலைகளும் அத்துபடி. அதிலும் வாய்க்கால் இழுப்பது, நெல் விதைப்பது, உரமிடுவது போன்றவற்றில் இவரின் பக்குவமான வேலைகள் அதிகப் பிரசித்தி. உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூருக்கும் அழைத்துச் சென்று விதைக்கச் சொல்வார்கள், காரணம் கைராசி .


                நீங்கள் நினைக்கலாம் விதைப்பதில் அப்படியென்ன இருக்கிறதென்று? விதைக்கும்போது, அனைவரும் ஓன்று போல விதைப்பதாகவே  தோன்றும். நான்கு நாளில் முளைவிட்டுப் பயிர் பசுமைதட்டும்போதுதான் வித்தியாசம் தெரியத்தொடங்கும், நாராயணன் விதைப்புக்கும் மற்றவர்களின் விதைப்புக்கும். நாராயணன் விதைத்தது ஆள் வைத்துக் கையால் நட்டியது போல ஒரே மாதிரி  இருக்கும். மற்றவர்களின் விதைப்பில் ஆங்காங்குக் கும்பல் கும்பலாகப் பயிர்கள் இருக்கும். நாராயணின் மவுசுக்கு இதுதான் காரணம். அதேபோலத்தான் உழுத நிலத்தில் வாய்க்கால் போடுவதும். நாராயணன் தனக்குக் கீழ் நான்கு முதல் ஐந்து ஆட்கள் வைத்து ஒரு குழுவாக வேலை செய்வார். எங்கு வேலை செய்ய வேண்டுமோ அங்கு இவர்கள் குழு செல்லும். முதலில் வாய்க்கால் போட வேண்டிய நிலத்தைத் தன் கண்களால் அளவெடுப்பார். அந்தப் பார்வையில் அந்த நிலத்தின் மேடு பள்ள அளவுகளும் அடங்கும். அந்த நிலத்துக்காரரிடம் எந்தப் பக்கம் தண்ணி தலை வைக்கும் என்று கேட்பார். அதாவது எந்தப் பக்கத்தில் இருந்து நிலத்துக்கு நீர்பாய்ச்சல் இருக்கும் என்ற கேள்வி. அவருக்கு அந்தத் திசையைக் காட்டியவுடன் ஒரு முடிவோடு தனது முனங்கால் உயரத்துக்கு இருக்கும் ராசியான மம்பட்டியை எடுத்துக்கொண்டு நிலத்தில் இறங்குவார். அதுவரை கூட வந்தவர்கள் நிலத்துக்கு வெளியே தயாராகிக் கொண்டிருப்பார்கள். இடது பக்கம் ஒரு தடவை வலது பக்கம் ஒருதடவையென மம்பட்டியால் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டே பின் பக்கமாக அவர் நகர, நூல் பிடித்தாற்போல் ஒரு பெரிய வாய்க்கால் அந்த நிலத்தில் விழுந்திருக்கும் . அதன்பின் கூட வந்தவர்கள் அதற்குத் தகுந்தாற்போல் கிளை வாய்க்கால்களையும் பாத்திகளையும் அமைப்பார்கள். அவர் வாய்க்கால் இழுத்தால் தண்ணீர் பாய்ச்சும்போது எந்தவொரு சிரமும் இல்லாமல் நீர்பாய்ச்சல் வேகமாக இருக்கும். அந்தளவுக்கு நிலத்தின் மேடு தாவுகளை உள்வாங்கி வாய்க்கால், பாத்திகளை அமைப்பார்.


               இப்போதெல்லாம் இதில் எந்த வேலைகளையும் அவர் செய்வதில்லை. செய்வதில்லையென்பதைவிட அவரை யாரும் அழைப்பதில்லை. காரணம் விவசாயம் முன்புபோலச் செழிப்பாக இல்லை. இருந்தாலும் எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. கலப்பையில் புனல் வைத்து நேராக அவர்களே விதைத்து விடுகிறார்கள். பாத்திபோடும் கலப்பையும் வந்தாகிவிட்டது. உழுது முடித்த கையோடு வேண்டிய கோணத்தில் கலப்பையை வைத்துக் கோடு போட்டால் முடிந்தது வேலை. அதோடு மட்டுமில்லாமல் நாராயணின் மனைவி இறந்த பிறகு மனதளவில் நொடித்துப்போய்க் கூப்பிட்ட வேலைக்குச் செல்லாமல் மறுத்துக்கொண்டே இருந்ததினால், ஒரு கட்டத்தில் யாரும் அவரைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர்.


              இரண்டே ஆண்பிள்ளைகள், குடும்பமாகச் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர்.தனது சொந்த வேலைகள் போகத்தான், நாராயணன் மற்றவர்களுக்குக் கூலிக்குச் செல்வார். மற்ற சிறிய வேலைகளை அவரது மகன்கள் பார்த்துக்கொள்வர். அமிர்தம்மாள் அவருக்கு ஆமாம் போடும் இல்லத்தரசி. கணவனின் பேச்சுக்கு எப்போதுமே மறு பேச்சு பேசியதில்லை. அவரின் மேலுள்ள மரியாதை ஒருபக்கம், அவர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்குமென்ற  நம்பிக்கை ஒருபக்கம். அந்த நம்பிக்கையை நெஞ்சுவலியால் தனது மாரைப் பிடித்துக்கொண்டே நிலைக்கதவில் சரிந்து சாயும்வரை மனதில் வைத்திருந்தாள். சரிந்தவள் அப்படியே முன்னிருந்த இரண்டு படிக்கட்டில் உருண்டு வாசலில் வந்து விழுந்த பிறகுதான் நாராயணனும் அவரது மூத்த மகனும் பார்த்தார்கள். கண்கள் நிலை குத்தியிருக்கக் கை இன்னும் மாரிலே அழுந்தியிருந்தது. நாராயணனுக்குப் புரியாமலில்லை, இருந்தும் வேகமாக ஓடிச்சென்று தொட்டியில் இருந்து குவளையில் நீர்கொண்டுவந்து அமிர்தத்தின் முகத்தில் தெளித்தார். ஒரு சலனமும் இல்லாமல் சுருண்டு கிடந்தாள் அமிர்தம். தெளித்த நீர் முகத்தின் இருப்பக்கமும் மெல்ல வழிந்தோடியது. விழுந்திருந்த இடத்திலிருந்து தூக்கி அருகில் திண்ணையில் படுக்க வைத்தார். இறுக்கமாக இருந்த கைகளை இழுத்து உடம்புக்குப் பக்கவாட்டில் இணையாக வைத்துக் காலை நேராக நீட்டிவிட்டார். அவரையறியாமல் கண்களில் நீரோட, தனது தோளில் இருந்த துண்டால் துடைத்துகொண்டே தனது மகனைப் பார்த்தார். ஏற்கனவே அவன் படிக்கட்டில் உட்கார்ந்த படி விசும்பிக்கொண்டிருந்தான்.எல்லோருக்கும் சொல்லியனுப்பிச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து அமிர்தத்தை நல்லபடியாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அந்த நிமிடத்திலிருந்து நாராயணன் யாருடனும் சரியாக பேசுவதில்லை.கேட்ட கேள்விகளுக்கு நறுக்காகப் பதில்சொல்லிவிட்டு இருந்துவிடுவார். ஏழாம் நாள் காரியம் முடித்து, அமிர்தத்துக்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்தாகிவிட்டது. எல்லாம் முடிந்த கையேடு வீட்டிற்கு வந்து தொழுவில் கிடந்த அந்த நார் கட்டிலை எடுத்துப் போட்டு,  பின் வாசல் திண்ணையில் படுத்தவர் மாலைதான் எழுந்தார். அன்றிலிருந்தே அந்தக் கட்டில் அவரோடு பிரியாத ஒன்றாகிப்போனது.


                விவசாயம் நொடிந்தநிலையில், பெரியமகன் பக்கத்து ஊரில் ஒருவர் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகிறார் என்றறிந்து அவர் மூலம் வெளிநாடு சென்றான். பணம்  சம்பாரித்துக் கொடுத்தால் போதுமென்பதால், அவ்வளவு சிரமம் இல்லாமல்போனது. அவன் வெளிநாடு போனதால் அவன் மனைவி, தனது தாயின் ஊரில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கினாள். அவள் சொன்ன காரணம், அம்மாவின் அருகில் இருந்தால் கொஞ்சம் ஒத்தையாக இருக்குமென்பது.சின்ன மகன் தனது மனைவியோடு நாராயணன் வீட்டில் இருந்தான். இவையனைத்தும் நாராயணின் பங்களிப்பு இல்லாமலே நடந்தேறியது. அவரும் எதையும் கண்டுகொள்ளவில்லை.


                சில வாரங்களாகச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கட்டிலே கெதியென்று கடத்தினார் நாரயணன்.ஊருக்குள்கூடச் செல்லவில்லை.அடுப்பங்கரைக்குச்  சென்று அமர்ந்தால் மருமகள் சோறுபோடுவாள். போட்டதைத் தின்றுவிட்டு வந்து, சிறிதுநேரம் பின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டே படுத்திருப்பார். பகலில் தூங்கிப் பழக்கமில்லையென்பதால் அப்படியே படுத்திருப்பார். சாயங்காலம் எழுந்திருந்து பிஞ்சைப்பக்கம் போய்த் தரிசாய்க் கிடைக்கும் தனது நிலங்களைப் பார்த்துவிட்டு வருவார். அது அவருக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய வலியைத்தான் கொடுத்தது. சின்னமகன் அருகில் இருக்கும் ஒரு மில்லில் வேலைக்குப் போய்வந்தான். மாதச்சம்பளம், குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது.இவருக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை.அதுவே அவருக்குப் பெரிய அசதியாக இருந்தது.போதாக்குறைக்கு மருமகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம். அது மாற்றமா இல்லை முதலிலிருந்தே அவள் அப்படித்தானா என்றெல்லாம் அவர் யோசித்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவின்போது மேலே பார்த்து, அந்த அப்பளம் இரண்டை எடுமா என்று சொல்ல, சும்மா படுத்துத் தூங்குறவருக்கு எதுக்குக் கூட்டும், அப்பளமும் வெறும் சோறும் குழம்பும் பத்தாதோ? என வெடுக்கென்று கேட்க அடுத்த வாய்கூட வைக்காமல் அப்படியே எழுந்துவந்தார்.இதைப்பற்றி அவரது மகனிடம் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை.


                அன்றிலிருந்து சாப்பிட அடுப்பங்கரைக்குச் செல்வதில்லை. சாப்பாடு ஒரு தட்டில் அவரின் கட்டிலுக்கு அருகேயே வந்துவிடும். அந்தத் தட்டிலியே குழம்பு,கூட்டு,தயிர் எல்லாமே சேர்ந்து ஒரு குவியலாக இருக்கும். செம்பில் தண்ணீர், அருகே வைத்துவிட்டுச் சென்றுவிடுவாள் மருமகள்.எல்லாவற்றையும் சத்தத்தினால் உணர்ந்தவர் உடனே எழுந்து சாப்பிட  மாட்டார்.சிறிதுநேரம் தனது நிலையிலே படுத்திருப்பார். பின்னர் மெல்ல எழுந்து செம்பிலுள்ள நீரால் கையைக் கழுவிவிட்டுக் கொஞ்சம் தொண்டையை நனைத்தபிறகு சாப்பிட ஆரம்பிப்பார். அவர் படுத்திருக்கும் அந்தச் சிறிதுநேரம்தான் அவரின் கர்வம்,திமிர் தன்மானம் எல்லாமே. என்ன இருந்தாலும் அவரொரு விவசாயி. கண்டிப்பாக இதெல்லாம் நிறையவே இருக்கத்தானே செய்யும். அப்படியிருக்க அவர் இந்த நிலையில் சாப்பிடவே கூடாதே, என்று நீங்கள் கேட்டால்? வயிற்றில் எரியும் அடுப்பில் மேலே சொன்ன எல்லாமே பொசிங்கித்தானே போகவேண்டும் அதானே உலக நியதி. ‘பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும்’ என்பதை உண்மையாக்கும்விதமாக அடுத்து நடந்தவைகள் அவருக்குச் சோதனையாக அமைந்தன. மருமகளோடு சேர்ந்து மகனும் அவரை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.அதை அவரும் நன்றாகவே உணர்ந்திருந்தார். இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் சொந்தவூருக்கு வராமல் அப்படியே தனது மனைவியின் வீட்டில் தங்கிய நிலையில் விடுமுறை முடிந்து திரும்பிச் சென்றுவிட்டான் என்றறிருந்து இன்னமும் துயரப்பட்டார். ஒவ்வொரு நாளையும் தலையைக் குனித்தபடியே வாழ்வது அவருக்கு என்னவோபோலிருந்தது. இதுக்கு விடுதலைதான் என்ன? மரணம்தானா? என்றெல்லாம் அவரது மனம் யோசிக்கத் தொடங்கியிருந்தது.


                அடுத்துவந்த ஒருவாரம் முழுக்கச் சரியான மழை. ஊரைச் சுற்றியிருந்த காற்றாற்றில் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடியது.முன்பெல்லாம் வருடமொருமுறை தண்ணீர் வந்துவிடும். 20 நாட்கள் முதல் 50 நாட்கள் தண்ணீர் ஓடும்.நிலங்களுக்குள் நீர் கசிந்து நீர்மட்டம் உயர்ந்து வற்றாத கிணறுகளால் விவசாயம் செழித்திருக்கும் பூமிதான், இப்போது வறண்டு போய்க்கிடக்கிறது.எங்கோ பேய்ந்த பேய் மழையால் மீண்டும் தண்ணீர் ஓடியது. ஊருக்குள் ஒரே சந்தோசம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கரைபுரண்டோடும் தண்ணீரைப் பார்க்கக் கரையோரம் மக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தார்கள்.நாராயணனும் போனார். கரையோரத்தில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஊர்ப் பெருசுகள் வந்தமர்ந்தார்கள். நாராயணனின் நிலைபற்றி ஊருக்குள் தெரிந்திருந்ததால் அதைப்பற்றி ஏதும் துக்கம் விசாரிக்காமல், பொதுவான விஷயங்களிலேயே  அவர்களின் பேச்சு இருந்தது. அதில் முக்கியமானது என்றால் நீச்சல் திருவிழாவை நடத்துவதென்பது. ஒவ்வொருமுறை வெள்ளம் கரைபுரண்டோடும்போதும் இந்தத் திருவிழா அந்த ஊரில் நடக்கும்.ஒரு ஆளுக்குமேல் தண்ணி போகும் அந்த ஆற்றில் அக்கரைக்கும் இக்கரைக்கும் ஒரே நேர்கோட்டில் ஒரு கயிறு கட்டப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஊரின் அக்கரைக்குச் சென்று அந்தக் கயிறு கட்டிய இடத்திலிருந்து ஆற்றுக்குள் இறங்கி மறுகரைக்கு வரவேண்டும். அப்படிக் கரை சேர்பவர்கள் அந்தப் பந்தயக்கயிற்றிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படும். வெற்றிபெற்றவர்களுக்கு ஊர்ப் பொதுவிலிருந்து பரிசுத்தொகை வழங்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு நீர் கரைபுரண்டுவோடுவதால் இந்தமுறை போட்டியை நடத்தியே ஆகவேண்டுமென முடிவெடுத்திருந்தார்கள். அதற்கு நாராயணனும் சம்மதித்திருந்தார். அவருக்கு இதிலொரு நிம்மதி அல்லது மனதைத் திருப்பும் விசயம்.


               போட்டிபற்றி ஊருக்குள் சாட்டியாகிவிட்டது.வெளியூரில் தங்கி வேலைபார்ப்பவர்களுக்கும் தகவல் போய்ச்சேர வழிசெய்திருந்தார்கள்.இந்தப்போட்டிக்கு விதிமுறைகளெல்லாம் கடுமையாக இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் கண்டிப்பாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். பாதுகாப்புக்குப் போட்டிக்கயிறு கட்டப்பட்ட இடத்திலிருந்து குறிப்பிட்டத் தூரம் தள்ளி மற்றொரு கயிறு கட்டி அதில் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஆட்கள் நின்றிருப்பார்கள். ஆற்று நீரின் வேகத்திலிருந்து தப்பிக்க, அவர்கள் அந்தக் கயிறிலிருந்து துணைக்கயிறுப் போட்டு அதைத் தனது இடுப்போடு கட்டியிருப்பார்கள். அவர்களின் வேலை, யாரவது நீரில் மாட்டி அடித்துக்கொண்டு போனாலோ, சுழியில் மாட்டித் திணறினாலோ காப்பாற்றுவது. சொல்வதென்றால் யாரும் அந்தக் கயிற்றைத் தாண்டிச் செல்லமுடியாது அல்லது நீரால் அடித்துச் செல்ல முடியாத வண்ணமிருக்கும் அவர்களின் பணி. யார் ஒருவரை அவர்களைக் காப்பற்றுகிறார்களோ அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.எனவே அவர்களும் அந்தப் பாதுகாப்புப் பணியில் இணைந்து விடுவார்கள். அதோடு மட்டுமில்லாமல் சிவப்புநிறத்துணி எல்லோருடைய தலையிலும் கட்டியிருக்கும். தனக்கு ஏதாவதொரு ஆபத்து ஏற்படுவதாகத் தெரிந்தால் அந்தத் துணியைக் கையில் தூக்கிக் காட்டினால் போதுமானது அவர்களைக் காப்பாற்ற அந்தப் பாதுகாப்புக் கயிற்றிலிருந்து ஆட்கள் விரைவார்கள். இவ்வளவு பாதுகாப்பு இருந்ததினால் எல்லோரும் தைரியமாக, சிலர் விளையாட்டாக இந்தப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.


              போட்டி நடக்கும் நாள் வந்தது. இதற்குப் பெயர் கொடுக்கும் சாமாச்சாரமெல்லாம் கிடையாது. பங்கேற்பவர்கள் ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் சென்று திரும்ப வேண்டும் அவ்வளவே.எல்லோரும் தயாராகி அக்கரைக்குச் செல்லக் காத்திருந்தார்கள். அவர்களோடு நாராயணனும் நின்றது, பலருக்குச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் அவரின் மேல் அன்புகொண்டவர்களுக்குக் கவலையாக இருந்தது. அதில் ஒருவர் சென்று நாராயணனின் கையைப்பிடித்து வெளியே வருமாறு இழுத்தார் ஆனால் அவர் மறுத்ததோடு மட்டுமில்லாமல் நான் நீச்சல் சொல்லிக்கொடுத்த பொடுசுகள் எல்லாம் இறங்கும்போது, நான் இறங்கினால் என்ன என்று சிரித்தபடி கேட்டது அவர்களுக்கு ஒருவித ஆறுதலைக் கொடுத்தது.இவ்வளவு நாள் அடங்கிக்கிடந்த நாராயணனின் மனதுக்கு இதுவொரு சந்தோசமாக இருக்கட்டுமே என்றெண்ணி அதன்பிறகு யாரும் தடுக்கவில்லை. அங்கு நடந்தவற்றையெல்லாம் மகனும் மருமகளும் பார்க்காமலில்லை. இவரும் அவர்களை ஒருமுறை கண்டும்காணாது போலப் பார்த்துக்கொண்டார். ஆற்றில் இறங்கியவர்களோடு இறங்கி அக்கரைக்குச் சென்றவரால் உணர முடிந்தது தனது மனம்  மட்டுமில்லாமல் உடலும் அதிகமாவே சக்தியை இழந்திருப்பதை. வெளியே காட்டிக்கொள்ளவில்லை.


               எல்லோரும் வந்துசேர்ந்தபிறகு மொத்தமாக ஆற்றில் இறங்க வேண்டும்.இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ளவர்களைப் பார்த்தால் உருவமில்லாத பொம்மைகள் நிற்பது  போலத்தான் தெரியும்.அந்தக் கூட்டத்தில் தனது மகனின் முகம் தெரிகிறதா? என்று பார்த்துவிட்டு ஏமாந்துபோனார். எல்லோரும் உள்ளே குதித்தார்கள். ஆற்றின் இழுப்புக்கு முதலில் எல்லோருமே சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுப் பின் மீண்டும் தனது முயற்சியால் பந்தயக்கயிறை ஒட்டிவர முயன்றார்கள். நாராயணன் தனது முழு அறிவையும் பலத்தையும் காட்டினார். பந்தயக்கயிற்றில் இருந்து அவர் இரண்டாவதாக இருந்தார். அவருக்குத் தெரியும் இந்தப் போட்டி அவருக்கு அவ்வளவு கடினம் இல்லையென்று.ஒருகட்டத்தில் காலைக் கீழே வைத்தால் அடியிலிருக்கும் மண் நீரின் வேகத்தினால் அடித்துச்சென்று நாம் உள்ளே போக நேரிடும். இப்போது நீரோட்டத்துக்கு எதிராக நீந்துவதே சரியானது.


              நாராயணன் பாதித்தூரத்தில் இருக்கும்போது தனது பார்வையைக் கரையை நோக்கிச் செலுத்த, இப்போது முகம் நன்றாகவே தெரிந்தது. அதிலும் மகன் மற்றும் மருமகளின் முகம் சட்டென்று அவரது பார்வையை இடறியது. மனதுக்குள் எண்ணற்றக் கேள்விகள் அந்த நீரின் இழுப்பைக் காட்டிலும் அவரது மனம் அவரைப் பின்னோக்கி இழுத்தது. இப்போது இவ்வளவு சீக்கிரம் முதல் ஆளாய்க் கரைக்குச்சென்று என்ன செய்யப் போகிறாய்? முதல் பரிசு வாங்குவேன். வாங்கி? வீட்டில் கொடுப்பேன் அல்லது செலவு செய்வேன். சரி செய்து? மீண்டும் அதே தட்டு, அதே கட்டில், அதே வசைப்பாட்டுத்தானே நிரந்தரம் என்ற எண்ணங்கள் மனது முழுதும் நிரம்ப, அவர் இப்போது பந்தயக்கயிறை விட்டு வெகுதொலைவில் இருந்தார்.இன்னும் கொஞ்சத் தூரம் சென்றால் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்கள் இவரைத் தண்ணியில் அடித்துச் செல்லப்படுகிறார் என்றென்னிப் பிடிக்க நேரிடும். அதனால் மீண்டும் மனதைக் கட்டுப்படுத்திப் பந்தயக்கயிறை நோக்கி நகர்ந்தார். மீண்டும் அதே கேள்விகள் பதில்கள். சஞ்சலம். துக்கம் என எல்லாமே நடு ஆற்றில் வரக்காரணமென்ன?இறுதியில் அந்த எண்ணமும் வராமலில்லை.நாம் ஏன் ஆற்றோடு போகக்கூடாது? கரைக்குப்போய் மட்டும் என்ன செய்யப்போகிறோம்? ஒருவேளை இப்படியே மூழ்கிவிட்டால் பாதுகாப்புக்கு இருக்கிறவர்கள் நம்மைக் காப்பற்றிவிடுவார்கள். அப்படியே மூழ்கினாலும் எங்கே செல்வது? பக்கத்து ஊருக்கா? அதற்குக் கரைக்குப்போய்ச் சாலைவழியாகவே செல்லலாமே? இல்லை இன்றோடு இந்தக் கேள்விகளையும் பதில்களையும் முடித்துக்கொளவதாக முடிவெடுத்தார்.ஒருவேளை இறந்துவிட்டால் அடுத்தாண்டில் இருந்து இந்தப் போட்டி நடக்காமல் போய்விட்டால்? இப்போதே பல வருடம் கழித்து தண்ணீர் வந்திருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து வருமோ? அதுவரை இந்த ஊர் நம்மைக் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்காது. எனவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இப்போது நாராயணின் மனதில் ஒருமனதாகக் குடியேறியிருந்தது.


            உடலை மெல்லத் தளர்த்தி, நீரின் போக்குக்குப் போவதுபோலப் பாசாங்கு செய்தார்.சில நிமிடங்கள் நீருக்கடியில் இருந்து மூழ்கி மீள்வது போல மீண்டும் மீண்டும் செய்தார்.அவரை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்யச் சிறிது நேரம் நீரோடு எதிர் நீச்சல் போட்டார். கரை இப்போது கொஞ்சம் அருகில் இருந்தது.இதுதான் சரியான நேரம்,இடமெனக் கருதியவர் நீருக்குள் சென்று எப்படியாவது பாதுகாப்புக்கு இருக்கிறவர்களைத் தாண்டிவிடவேண்டும் இல்லையென்றால் அவர்களால் காப்பற்றப்படுவோம் என்ற யோசித்தவாறுத் தனது தலையிலிருக்கும் சிகப்புத் துணியை அவிழ்த்துத் தனது வேட்டிக்குள் வெளியே தெரியாத வண்ணம் வைத்தார். பாதுகாப்புக்கு நிற்பவர்களின் கால்கள் தெரிய ஆரம்பிக்க அவர்களுக்குள் இருக்கிற இடைவெளியைப் பயன்படுத்தி அவர்களைக் கடந்து சென்றார்.சரி இப்போது என்ன செய்ய? மேலே போலாமா? கண்டுபிடித்துவிட மாட்டார்களா? வேறென்ன செய்ய? தன்னைத்தானே நீருக்குள் அமிழ்த்தினார். சற்றுக் கடினமாகதான் இருந்தது. ஆனால் கரையேறினால் தினம்தினம் அடையும் கஷ்டத்துக்கு முன்னால் இது கடுகே என்றெண்ணம் அவரின் மனதில் உதித்தது. அடுத்த சுவாசத்திற்கு அவரின் நுரையீரல் காத்திருக்க அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வண்ணமாக அவர் இன்னும் நீரில் அமிழ்ந்திருந்தார். ஒரு மடக்கு நீரைக் குடிக்கப் புரையேறி மூக்கின் வழியாக நீர் உள்ளே சென்றது. நாம் இறந்த பிறகு இவர்கள் கையில் கிடைத்துவிடுவோமா என்ற பயம் அவருக்குள் இருந்தது. பாதிச் சக்தியை இழந்த நிலையில், நீரானது அவரை உருட்டிக்கொண்டு சென்றது.

               நுரையீரல் முழுதும் நீர் நிரம்ப ஆரம்பிக்க மனதில் அமிர்தத்தின் முகமும், அந்தக் கட்டிலும் கண்முன் வந்து போனது.இறுதியாக ஒரு சுழியில் சிக்கியது அவரின் மனதில் பதிந்தது. அதுதான் கடைசி. சுழியின் சுழற்சியில் அந்த இடத்திலிருந்த மண்ணையெல்லாம் இழுத்து அங்குவொரு  கேணியைத் தோண்ட ஆரம்பிக்க, தோண்டிய மண்ணையெல்லம் அருகில் மேடாகக் குவிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மேட்டுக்குள் ஒரு விவசாயி விதையாக விதைக்கப்பட்டிருந்தார். சில விதைகள் மண்ணைவிட்டு மேலெழுந்து முளைக்காது, சில விதைகள் முளைக்கவே விரும்பாது. இதில் நாரயணன் இரண்டாம் ரகம்.