சில விசயங்கள் - 16

    அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தேன். அதில் எழுதியிருந்தது என்னவென்றால் ஆயிரம் வருடம் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால் தான்” என்பதுதான். இதைப் பார்த்தவுடன் பொதுவாக நமது மனதுக்குத் தோன்றுவது ஆற்றில் பெரும் வெள்ளம் வந்து ஊரை அழித்துவிடும் என்றுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்தாலும் ஊர் அழியும் என்ற ஒன்று இருக்கிறது. உண்மையில் அதுதான் நடந்தது.

    ஆம் தொடர்ந்து ஐந்து வருடம் இந்த ஆற்றில் ஒரு பொட்டுத் தண்ணீர் வரவில்லை. மணலுக்கடியில் இருந்த நீர் அதிக பட்சமாக இரண்டு வருடங்கள் வரை உதவியது. அதன்பிறகு ஏற்கனவே இருந்த கிணற்றில் முடிந்தவர்கள் ஆழ்துளை போட்டுப் பார்த்தார்கள். சிலருக்கு கைகொடுத்தது, பலருக்கு கைவிரித்தது. கிணற்றில் நீர் இருப்பர்வகளிடம் நீர் பெற்று சிலர் விவசாயம் செய்தனர். மொத்தமாக நீர் இல்லையென்ற நிலை வந்த போதுதான் நான் சொன்ன அழிவு நேர ஆரம்பித்தது.

   குடிக்கவே நீர் இல்லாத நிலையில் விவசாயத்திற்கு யோசிக்கவே முடியாத நிலை. அதனால் நீரினால் கொளிக்கும் வயல் வெளிகள் எல்லாம் வானத்தை ஏந்தி பார்க்கும் நிலங்களாக மாறின. இதனால் வருடம் முழுதும் விவசாயம் செய்பவர்கள் தத்தளித்தனர். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே வெள்ளாமை செய்ய முடிந்தது. மீதி காலங்களில் அவர்களின் நிலங்களைபோலவே வானத்தைப் பார்த்து தவம் இருந்தார்கள். நிலம் மழைக்கு,அவர்கள் கடவுளுக்காக. ஆனால் இரண்டிலுமே ஒன்றும் நடக்கவில்லை.

    சுத்தமாக மழையில்லை. இந்த வருடமாவது மழை வரும் என்ற நமபிக்கையில் விதைத்தவர்களுக்கு அந்த வருடம் ஏமாற்றம் மிஞ்சினாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் அடுத்தவருடமும் அதே முயற்சி மீண்டும் அதே தோல்வி பண இழப்பு.மூன்று வருடங்கள் தொடர் ஏமாற்றத்தில் கற்ற பாடம் அடுத்து வந்த ஆண்டுகளில் வருடம் முழுதும் எந்தவொரு வெள்ளாமையும் நடக்கவில்லை. விவசாயம் இல்லையென்றால் வாழ்வின் ஆதாரம் இல்லை. ஊரைவிட்டுக் காலி செய்தார்கள். வெளியூருக்குச் சென்றவர்கள் அவர்களின் தகுதிக்கு ஏற்றார்போல் வேலையை தொடர்ந்தார்கள். கடைகளில்,வாகனங்ககளில் என அவர்களின் வாழ்க்கை ஒட்டிக்கொண்டது.

     ஊரில் நிலங்கள் அதே தவநிலையில் இருந்தன.அனால் விவசாயிகள் இல்லை. அங்கே இருந்தவர்களும் தனது அடிப்படைத் தேவைகளுக்கான நீருக்கே அலைய வேண்டிய நிலையில் விவசாயத்தை மறந்தே இருந்தனர். இதற்கு இடையில் எப்போதாவது மழை முகம் காட்டினால் இந்த வருடம் ஏமாற்றாது என்ற நம்பிக்கையில் விவசாயம் பார்த்தவர்கள் சந்தித்தது பெரும் சேதம். முடியாதவர்கள் நிலபுலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு கிளம்பினார்கள்.

    எங்குமே எப்போதும் பசுமையாகக் காணக்கிடைத்த நிலங்களை தரிசாக பார்க்க ஒருவித மனோதைரியம் வேண்டும் அதுவும் விவசாயியாக இருந்தால். அந்த தைரியம் இருந்தவர்கள் மட்டும் அந்த ஊரில் இருந்தார்கள். ஏற்கனவே சேமித்து வைத்ததை வைத்து வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இதே நிலமை எவ்வளோ நாள் நீடிக்கும் என்று பார்க்க நினைத்தவர்களும் அதில் அடங்குவார்கள். அவர்களின் நம்பிக்கை என்றாவது ஒரு நாள் மழை பெய்யும் இந்த ஆற்றில் வெள்ளம் வரும் என்பதுதான். ஆனால் இதற்கிடையில்தான் நடந்து மணல் கொள்ளை. இதைப் பார்த்தவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போனது. மணலை சுத்தமாக வழித்து எடுத்தபிறகு எவ்வளவு நீர் வந்தாலும் ஆறு என்பது ஒரு வடிகாலைப் போல மாறிவிடும். அதில் வருகின்ற நீர் அப்போதைக்கு மட்டும் அந்த ஆற்றில் வடிந்து கடலில் சேருமே தவிர பூமிக்கு அடியில் தங்காது. ஆற்றுமணலில் நீர் தங்கினால்தான் உட்புற நிலங்களுக்கு நீர் கசிந்து அங்குள்ள கிணறுகளுக்கு பாசனம் கிடைக்கும்.

     ஆக இருந்த ஒரு நம்பிக்கையும் போன சமயத்தில் அரசாங்கம் கொண்டுவந்த நூறு நாள் வேலைத்திட்டம் வந்தது. உழைத்தவர்களை சோம்பேறிகளாக ஆக்கிய முக்கியமான ஒன்று. அதுவும் மழையில்லாத காலத்தில் வேறுவழியின்றி அந்த வேலைக்கு போக வேண்டிய நிலை வந்தாலும் மழை பெய்ந்த காலத்தில் யாரும் விவசாயம் பார்க்க முன் வரவில்லை. வறட்சியோடு சேர்த்து ஆள் இல்லாத திண்டாட்டமும் சேர மொத்தமும் சுருண்டு போய்விட்டது.

   அந்த வேலைத்திட்டம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். பெயர் கொடுத்துவிட்டு தான் நின்ற இடத்தில் இருக்கும் புல்லை மட்டும் அகற்றிவிட்டு சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். மீதி நேரம் நல்ல உறக்கம். உடல் நல்ல சுகம் கண்டதில் விவசாய வேலைகளை செய்ய முடியாமல் போனது. இந்த திட்டத்தை பற்றி தனியாக எழுதாலாம்.

    இவ்வளவு பிரச்சினையில் அந்த பெருமாளை நான் மட்டும் எழுத மறக்கவில்லை, அங்கிருந்தவர்களும் மறந்தே இருந்தனர். அப்போதைய நிலையில் அவர்களின் மனதில் இருந்த ஒரேயொரு விசயம் இன்றாவது மழை வராதா என்பதுதான்.

    மொத்தமாக ஐந்து வருட முடிவில் அதாவது போன வருடம் மோட்சம் கிடைத்தது. பாதியழிந்த அந்த ஊருக்கு ஒரு மோட்சம்.  நல்ல மழை பெய்தது. ஆற்றில் நீர் வந்தது. அதுவும் ஒரு மாத காலத்துக்கு நீர் ஓடியது.. இன்னொரு பிரச்சினை அங்கு விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை. முக்கியமாக கூலிக்கு வேலையாட்கள் இல்லை. இருந்தாலும் யாரும் உள்ளூர் வேலைக்கு வராமல் வெளியூர்களில் அதிக சம்பளத்துக்குச் சென்றனர். காரணம் குறைந்த வேலை நேரம் அதிகச் சம்பளம்.  அதிக சம்பளம் கொடுப்பவர்களையும் ஒன்றும் சொல்வதுக்கில்லை. அவர்களும் நிலத்தில் போட்டதை எப்படியாவது எடுத்தே ஆகவேண்டிய நிலை. இதே நிலையில் தான் இப்போதும் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

    மணலைக் கொள்ளையடித்துவிட்டு பழி ,பாவத்துக்கு அஞ்சினார்களோ தெரியவவில்லை ஆற்றில் குறிப்பிட்ட தூரத்துக்குள் சிறிய தடுப்பு அணைகளைக் கட்டினார்கள். நீர் வந்தால் வேகமாக கடந்து செல்லாமல் தடுப்புச் சுவற்றில் தடுத்து பெருகி அருகில் உள்ள நிலங்களுக்குள் கசிந்து செல்லும். ஒரு நல்ல விஷயம் மழைக்கு முன் அதை முடித்தது.

   இப்போது மீதியிருக்கும் விவசாயிகள் கொஞ்சம் சந்தோசத்தோடு விவசாய வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் இல்லாவிட்டாலும் முடிந்த வரை ஆற்றில் நீர் வந்ததுக்கவாது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி விட்டார்கள். ஒருவேளை ஊரை விட்டுப்போனவர்கள் திரும்பி வரலாம்.

   இந்த நிலையில் யாராவது அந்த பெருமாளையும் அதனோடு வந்த அந்த ஓலைச்சுவடியும் நினைத்துப் பார்த்திருப்பர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தோன்றியது.  ஒருவேளை அதில் சொல்லப்பட அழிவென்பது இதுவாக இருக்குமோ என்று. அதே நேரத்தில் அதில்  சொல்லப்பட அழிவென்பது இந்த நிலையோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அது ஒரு முறை நிகழ்ந்துவிட்டது, இனியேதும் நடக்குமா என்பதை இயற்கையும், அந்த பெருமளுமே சொல்ல முடியும்.

   அதே நேரத்தில் சிதிலமடைந்த அந்தக் கோயிலை செப்பனிட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே எட்டப்பர் வைத்த கற்களை கொஞ்சம் செப்பனிட போகிறார்கள். இந்த இரண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருந்தாலும் இருக்கலாம். இதுதான் நான் ரசித்த விசயங்களின் இப்போதைய நிலை.

    இந்த ஊருக்கு போயிருந்த போது ஆற்றில் வெள்ளம் ஓடுவதைப் பார்க்கும்போது அப்படியொரு ஆனந்தம். ஒருநாளைக்கு நான்கு முறை சென்று பார்த்துவிடுவேன் தண்ணி கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? என்று. சிறுவயதில் ஆற்றில் நீர் வந்தவுடன் இருந்த நிலையில் இப்போது பாதியைத்தான் உணர முடிந்தது. காரணம் ஆற்றில் மணல் இல்லாத பெரும் பள்ளங்கள் நீரும் அவ்வளவு சந்தோசமாக வேகமாக குடித்து ஓடமுடியாத நிலை. இதே மாதிரி அடுத்தவருடமும் தண்ணீர் வரவேண்டும் என்பதே என்னோடு சேரத்து பலரின் ஆசையும். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

ஆற்றில் வெள்ளம்  வந்தபோது எடுத்த புகைப்படங்கள். அப்போது எனக்குத் தெரியாது இதை எழுதப் போகிறேன் என்று. எப்படியோ இதற்கு பயன்பட்டது.












சில விசயங்கள் - 15


       முழுதும் கற்பனையில் கதையை ஒருவரால் எழுத முடியாது என்பதை சுஜாதா எழுதி வாசித்ததாக நினைவு. இது உண்மையும் கூட. அந்த வகையில் நான் அதிகம் பயன்படுத்தியது எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோயிலும், ஊரைச் சுற்றி ஓடும் ஆறும் தான். என்னதான் அதீத கற்பனை இருந்தாலும் அதனைக் கொஞ்சம் உயிருள்ளதாக மாற்ற நாம் கண்ணில் கண்ட நிகழ்வுகளின் பாதிப்பு, மனிதர்களின் குணங்கள், அல்லது நாம் ரசித்த அல்லது நம்மை  பாதித்த இடங்கள் இவற்றில் ஏதாவதொன்றை  கண்டிப்பாக நமக்கே தெரியாமல் ஒரு இடத்தில் வெளிப்படுத்தியே விடுவோம்.

   அந்த விதத்தில் நான் சேர்த்தது சிறுவயதில் அதிகமாக நான் ரசித்த இரண்டு விசயங்கள். ஒன்று ஊரை ஒட்டியே ஓடும் ஆறு, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோயில். இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய சம்பந்தம் உண்டு. கொஞ்சம் கதைபோல இருந்தாலும் இறுதியில் உணமையான ஏதோ ஒன்று தனித்து இருப்பதை உணரமுடியும். முதலில் அந்த ஆற்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.

    வைப்பாறு என்ற பெயருடன் கேரளத்தில் இருந்து உருவாகி எங்கள் ஊர் வழியாகப் பயணித்து கடலில் சேரும். ஆறு என்றால் எப்போதும் நொங்கும் நுரையுமாக தண்ணீர் செல்லாது. வருடத்தில் எப்படி ஒரு தீபாவளி,ஒரு பொங்கல், ஒரு பிறந்த நாளோ அதே மாதிரி வருடத்திற்கு ஒரு தடவை வெள்ளம் வரும். அப்படி வந்தால் நாங்கள் புண்ணியவான்கள். ஒருவகையில் காட்டாறு என்று கூட சொல்லலாம். ஆனால் அதனையொட்டியக் கிராமங்களுக்கு ஒரு ஜீவநதி. தண்ணீர் வரும் நேரம் மட்டுமில்லாமல் திறந்த மணல்வெளியில் தனக்குள் நீரை தேக்கிவைத்து கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிக்கவும் நீர் வழங்கும் ஓர் ஜீவ நதி.

   ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தண்ணி வரவே இல்லை யார் பெற்ற சாபமோ தெரியாது. இடையில் நடந்த மணல் கொள்ளையில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல மாறியது. ஆம்  ஆடை கிழிக்கப்பட்டு கந்தல் கோலமாக கிடக்கும் ஒரு அபலையை விட மோசமாக ஆக்கிவிட்டார்கள். உயிரோடுள்ள  உடலை ஒரு இரும்புக்கரம் கொண்டு துளைத்து ஒவ்வொரு உறுப்பாக வெளியே எடுத்து விற்ற பிறகுத் தூக்கிப் போட்ட ஒரு சடலம்தான் இப்போது இருக்கும் நான் ரசித்த ஆறு.

  முதலில் எங்கும் ஒரே சமமான சமவெளி. கடைசியாக வந்த வெள்ளம் வரைந்து விட்டுச்சென்ற ஓவியமாக சிறு பள்ள மேடுகள். அந்த ஓவியத்துக்கு வண்ணம் சேர்க்கும் விதமாக வெள்ளையான குருமணல், கொஞ்சம் மங்கலான சரல், கருப்பான கூழாங்கற்கள் என அங்கங்கே பரவிக்கிடக்கும். கரையில் இருந்து பார்த்தலே கால் வைப்பதுக்கு முன் கொஞ்சம் ரசிக்கத் தூண்டும் அழகு. கரையோரம் உள்ள ஊர்களின் குடிநீர் தேவைக்கு ஆங்காங்கே போடப்பட்டக் கிணறுகள். இதைத்தவிர ஒரு காக்கா நின்றால் கூட துல்லியமாகத் தெரியும் அளவுக்கு இருந்த ஆற்றின் நிலைமைதான் நான் மேலே சொன்ன உயிரோடு உறுப்புகளைப் பிடுங்கி போடப்பட்ட உடலைப்போல மாறியிருக்கிறது. மாற்றிவிட்டோம்.

    பனைமரத்தின் பாதியளவுக்குக் குதறி மணலை எடுத்துவிட்டார்கள். அதற்கு மேல் சுண்ணாம்புப் பாறைகள்  கண்ணில் பட்டதால் அத்தோடு நிறுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் பூமியின் மறுபக்கம் வரைத் தோண்டியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சுத்தமான ஆற்றுமணலில் பெரும்பாலும் எந்தவித மரமும் அதிகமான செடிகளும் முளைக்காது. அதிக பட்சமாக நாணல் எங்காவது பார்க்கலாம். மரங்கள் வளர வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆறு அங்கே இல்லை வெறும் மரங்கள் அதுவும் வேலி மரம் எனப்படும் கருவேலம் மரங்கள் இறந்த உடலை மொய்க்கும் புழுவைப் போல ஆற்றை படர்ந்திருக்கின்றன.

   காரணம், வெறும் மணலாக இருந்தால் இந்த மரம் வராது, அதிக ஆழம் தோண்டியதில் ஆற்றுமணல் முடிந்து சாதாரண மண் வெளியில் வந்ததுதான் இவை அதிகம் வளர்ந்ததுக்கு கரணம். தூரத்தில் இருந்து பார்த்தால் கரையெது ஆறெது எனத் தெரியாமல் போய்விட்டது.ஆற்றுமணலைப் பார்ப்பதென்பது அங்கே முடியாத காரியம்.    

   சரி இதுக்கும் அந்த பெருமாள் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சம்பந்தமில்லாத விசயத்தைதான் இதுவரையில் உங்களை வாசிக்க வைத்திருக்கிறேன். மணல் கொள்ளைக்கும் அந்த கோயிலுக்கும் சம்பந்தமில்லை ஆனால் ஆற்றுக்கும் அதுக்கும் இருக்கிறது. அதைச் சொல்ல வரப்போய்தான் கொஞ்சம் நிகழ்காலம் நீண்டுவிட்டது. ஆம் நான் சொல்ல வேண்டிய சம்பந்தப்பட்ட விஷயம் இறந்தகாலத்தில் நிகழ்ந்த ஒன்று. அதாவது எனது காலத்துக்கு முன் நடந்தது ஆனால் எனது காலத்தில் என்னால் செவிவழிக்  கேட்கப்பட்டது.

    அதே ஆற்றில் ஒருமுறை வெள்ளம் வரும்போது வெள்ளமென்றால் அக்கரைக்கும் இக்கரைக்கும் நொங்கும் நுரையுமாக நீர் ஓடியதாம். வெள்ளம் வடியும் காலத்தில் ஏதாவது ஒரு கரையோரத்தில் குறைந்த அளவு நீர் சென்று கொண்டிருக்கும். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரால் ஒரு பெரிய கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் சோதனை செய்துவிட்டு அது ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட ஒரு கற்சிலை என்பதை உறுதி செய்துகொண்டு ஊருக்குள் தெரியப்படுத்தியிருக்கிறார். வந்து அதனை கரைசேர்த்துவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சிலையில் இருந்து ஒரு ஓலைச்சுவடி பிரியாமல் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அதில் எழுதியிருந்த விசயம் என்னவென்றால்,” ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால்தான்” என்றிருந்ததாம்.

   அப்படியெடுத்து வரப்பட்ட சிலை பெருமாள் சிலை. பெருமாள் என்றால் ஒரு பொதுவான பெயரல்லவா அதனால் அந்தக் கடவுளின் பெயர் வெங்கடாஜலபதி அதாவது திருப்பதியில் இருக்கின்ற அதே சாமி என்று எனக்கு புரியும்படி எளிதாகச் சொன்னார்கள். அதனை வைத்துச் சிறியதாக ஒரு கோயில் கட்டினார்கள்.  ஆனால் அந்த ஓலைச்சுவடியை பற்றி யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை போல. அது கிடைத்த விசயத்தோடு அதன் பங்கு முடிந்திருந்தது.

    ஆனால் அந்தச் சிலை இன்னும் கம்பீரமாய் ஒரு பெரிய கோயிலை தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டுள்ளது. பெரிய கோயிலைக் கட்டியது அப்போதைய எட்டையபுர ராஜாவாம். அவர் அதிகமான ஆன்மிக திருப்பணிகளை எட்டையாபுரத்தை சுற்றிச் செய்திருந்தாலும் மிகப்பெரியவைகளில் ஒன்று இந்தக் கோயிலும் அடங்கும்.   

    கோயிலைக் கட்டியதோடு இல்லாமல் ஒரு பெரிய தேர் மற்றும் அதனை இழுக்க ஒரு யானை என அந்தக் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். வருடாவருடம் நடக்கும் திருவிழாவின் போது யானை கட்டித் தேர் இழுத்திருக்கிறார்கள். அந்தத் தேர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்வரை தேரடியில் இருந்தது. பின்னர்தான் அதனை பிய்த்து அடுப்பெரித்து விட்டார்கள். மிகப்பெரியது. கலைநயம் கொண்டது. 

    தேர் ஊரைச் சுற்றும்விதமாக வழித்தடங்கள் இருக்கும். அதாவது ஊருக்கு வெளியில் ஒரு நீள்வட்ட வடிவிலான ஒரு பாதை. திருவிழாக்கள் நடக்கும்போது மிக சிறப்பாக இருக்குமாம். அந்த ஊரில் அக்ரகாரம் ஒன்றும் இருந்தது. அந்த காலத்தில்தான் திருவிழா மிகச் சிறப்பாக நடந்ததாம். போகபோக கால மாற்றத்தில் மனிதர்கள் இடம்பெயர்ந்து அக்ரகாரம் காலியானது. அதன்பிறகு அந்தக் கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டது.

    இந்தக் கோயிலைப் பற்றி அதிகமாவே கதைகளில் வர்ணித்து இருக்கிறேன். அவ்வளவு அழகான அமைப்பைக் கொண்டது. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் மனிதன் அதையும் விட்டுவைக்கவில்லை. அதன் கோபுர கலசங்கள் கூட திருடப்பட்டன.வெளிப்புற சுவர்கள் இடிந்து விழ சிலரால் அது மீண்டும் கட்டப்பட்டது. இப்போது சென்று பார்க்கும்போது கோயில் கூரையில் உள்ள பெரிய அளவிலான பாறைகளால் செதுக்கப்பட்ட கற்கள் சரியும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றியிருக்கும் இந்த மாதிரியான கற்களில் அதிகமான சிற்பங்களைக் காணமுடியும்

    இப்போதைக்கு இங்கு நிறுத்திவிட்டு, அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதத்தையும், அந்த ஆற்றைப் பற்றிய பல விசயங்களையும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். உண்மையில் நான் சொல்ல வந்த விசயம் ரெண்டு பத்திகளில் அடங்கும் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஆறு போல நீண்டு பாய்ந்தது எப்படியென்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த பதிவில் கடல் சேர்த்துவிடுகிறேன். .