1
மறுபிறவி பற்றி கொஞ்சம் ஆர்வம் இருந்தால் போதும் இந்தக் கதையைப் படிக்கலாம். மறுபிறப்பு எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லது விளக்கப்படுகிறது என்பதை எனது பார்வையில் இருந்து சொல்லிவிடுகிறேன். ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் ஆத்மா என்ற ஒரு சமாச்சாரம் இருப்பது எல்லாரும் கேள்விபட்டதே. உங்களுக்கு நினைவூட்டும் விதமாக ஆத்மாவைப் பற்றி சிலவரிகள். உடலுக்கு எந்த விதமான முறையில் இழப்புகள் நேர்ந்தாலும் இந்த ஆத்மா மட்டும் அப்படியே இருக்கும். இதுக்கு எந்த பாதிப்பும் எதனாலும் ஏற்படாமல் நித்தியமாக இருக்கக் கூடியது.
மனிதனின் இறப்புக்குப் பின்னரோ அல்லது மனித உடல் அழிந்த பின்னரோ வெளியேறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த பிறவியில் கர்மபலன்களுக்கு ஏற்றவாறு அது அடுத்த பிறவிக்கு என்னவாகத் தகுதியாகிறது என்பதைப் பற்றி எனக்குப் போதுமான புரிதல் இல்லை. ஆனால் என்னைப்போல எப்போதும் நல்லவராக இருந்தால் மறுபிறப்பில் சுழலாமல் நித்திய ஆத்மாவோடு அதாவது இறைவனோடு சேர்ந்து விடலாம் என்று பகவத்கீதையில் எப்போதோ படித்த ஞாபகம்.
உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா அடுத்த பிறவி வரைக்கும் எங்கு இருக்கும்? என்னவாகி இருக்கும்? அதுக்கு நீதி முறையில் அடுத்த பிறவியை தேர்ந்தெடுத்து அழிப்பது யார் என்றால் கடவுள் என்ற பதிலோடு முடித்து கொள்வதில் இஷ்டமில்லை. அப்படியே அது மறுபிறப்புக்குத் தேரி ஒரு மனிதானாக மாறவேண்டும் என்றால் எந்த நிலையில் அது அவனோடு சேர்கிறது? எப்படி சேர்கிறது? அதாவது அவன் கருவில் zygote நிலையிலா? அல்லது கரு வளர்ச்சி அடைந்த நிலையிலா?
ஆத்மாவுக்கு அழிவில்லை, அது எதனாலும் மாற்றம் அடையாது என்றால் மறுபிறவி ஜல்லியடிப்புகள் எப்படி நிறைவேறுகின்றன? அவர்கள் சொல்லவருவது ஒருபிறவியில் இருந்து வரும் ஆத்மா அந்தப் பிறவியில் இருந்து சில தகவலை அது சேரப்போகும் அடுத்த பிறவியின் காலக்கட்டத்துக்கு எடுத்துச்செல்கிறது என்பதே. ஆத்மாவுக்கு மாற்றம் இருக்காதென்றால் அது தகவலைக் கடத்துமா??? ஒவ்வோர் உயிர்க்கும் ஓர் ஆத்மா என்றால் மக்கள் தொகை எப்போதுமே ஒரே எண்ணிக்கையில்தானே இருக்கவேண்டும். அதாவது ஆத்மா அழிவில்லாமல் சுழற்சியில் இருப்பதால் புதியதாகத் தோன்றும் நிறைய உயிர்களுக்கு ஆத்மா எங்கிருந்து வருகிறது அல்லது புதியதாக உருவாகிறது? இந்த மாதிரியான கேள்விகள் என்னைப் போலவே உங்களுக்கும் இருந்து விளக்கம் கிடைத்தும் யோசித்துப் பார்க்கும்போது அது போதுமானதாக இருக்காத பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?
மேலே கதையில் சொன்ன விசயங்கள் நான் படித்து எனக்குப் புரியாதவை. இதைப் படித்துவிட்டு நீ எப்படி சொல்லலாம்? இதுக்கு விளக்கம் இப்படி என்று யாரும் உதவ வேண்டாம் அல்லது விரட்டி மடக்கிப் பிடித்து இது பற்றி நீங்கள் எப்படி இப்படி சொல்ல போச்சி என்று கருத்து கேட்கவேண்டாம். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அடுத்தவரி உங்களுக்கே....
மேலே சொன்ன விஷயம் கற்பனை அன்றி வேறொன்றுமில்லை.
2
கண்டிப்பாக ஆத்துமா என்ற ஒன்று இருந்தேதான் ஆகவேண்டும். அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அப்படி இல்லையென்றால் எப்படி ஒரு பிறவியில் நடந்த விசயங்கள் அப்படியே அவரது மறுபிறவியில் நினைவுக்கு வருகிறது? ஆத்மா அழிவில்லாதது, உருவமற்றது போன்ற என்ன விளக்கம் இருந்தாலும் ஆதராம் இல்லாமல் இருப்பதால் அதை நம்புவது கடிமானாக இருக்கும் பட்சத்தில், போன பிறவியில் அல்லது பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் தொடர்புபடுத்திச் சொல்லும்போது அப்போது வாழ்ந்ததுக்கும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதுக்கும் ஏதோ ஒன்று பொதுவாக அல்லது மையமாக இருக்கத்தானே செய்கிறது.
அவ்வாறு இருக்காத பட்சத்தில் ஒரு காலத்தில் மண்ணோடு மக்கிப்போன அல்லது தீயில் எரிந்துபோன ஒரு மனித உடலின் அடங்கிய ஆசைகளும் எண்ணங்களும் கஷ்டங்களும் எப்படி பல காலம் கழித்து நினைவுக்கு கொண்டுவரப்படுகிறது? நான் ஒத்துக்கொள்கிறேன் ஆத்துமா இல்லையென்று, ஒரு பிறவியில் நடந்த பல விசயங்கள் எப்படி பலகாலம் கடந்த நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நினைவுக்கு ஏறுகிறது என்பதை நிரூபித்தால்...
3
உண்மை:
உண்மை:
முதன்முதலில் Caton என்பவர் 1875 ஆம் ஆண்டு விலங்குகளின் மூளையில் மின்சார மாற்றங்கள் நடைபெறுவதைக் கண்டுபிடித்தார். அடுத்து 50 வருஷங்கள் கழித்துத்தான் அதே மாதிரியான மின்சார மாற்ற நிகழ்வுகள் மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பதை Hans Berger கண்டுபிடித்துச் சொன்னார். சரி ஏன்? எப்படி அந்தச் சிறிய அளவு மின்சார சக்தி உருவாகிறது மனிதனுக்கும் விலங்குகளுக்கும்? இங்கு மனிதனுக்கு எப்படி உருவாகிறது என்பது கதைக்கு நிறைய ஒத்துப்போவதால் அதையும் அதோடு சேர்ந்த சில விசயங்களையும் எழுதுகிறேன்.
பல பில்லியன் நியூரான் செல்கள் சேர்ந்து உருவானதுதான் நம்முடைய மூளை. உடலின் எல்லா வேலைகளுக்கும் செயற்பாட்டுக்கும் கட்டளைகளைக் கொடுப்பது மூளை என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்தக் கட்டளைகளை எப்படி கொடுக்கிறது அல்லது கடத்துகிறது? இந்தக் கட்டளைகளை உருவாக்க நமது புலன்களில் இருந்து பெறப்படும் தகவல்களை எவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று பரிமாறி இறுதியான முடிவு ஒன்றை எடுக்கிறது? மூளையில் எல்லாவிதமான தகவல் பரிமாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிப்பது இந்த நியூரான் செல்களே. ஒவ்வொரு நியூரான் செல்லில் இருந்தும் மற்ற செல்லுக்குத் தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் ஒரு விளைவே இந்த சிறிய அளவிலான மின் அலை.
இந்த மின்னலைகள் மூளையின் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு மாறுபடும். எனவே இந்த அலைகளை அளந்து பார்ப்பதின் மூலம் மூளையின் தன்மையைக் கணிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. அதுவும் மிகவும் துல்லிய முறையான EEG (ElectroEncephaloGram). அதாவது மூளையின் செயற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அப்போது வெளியேறும் மின் அலைகளை அளந்து அதைவைத்துக் கணித்துவிட முடியும். அதுக்குத் தலையை ஓட்டினால் போல ஒரு மருத்துவக்கருவியைப் பொருத்தி வெளியிடப்படும் மின் அளவுகளை அளந்து கொள்கிறார்கள்.
இதில் நான் சொல்ல வருவது மூளையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனியான அலைநீளம் கொண்ட மின்னலைகள் உருவாகும். அதையும் வகைபிரித்து alpha, beta, gamma வைத்து இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தேடிப் படிக்கவும்.
கற்பனை:
மின்காந்த அலைகள் வெவ்வேறு அலைநீளங்களில் இருந்தால் அவை ஒன்றோடு இணைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரத்தில் ஒரே அலைநீளம் கொண்ட அலைகள் இணைந்து பயணிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட வானொலி நிகழ்ச்சி ஒன்று அதன் அலைநீளத்தில் வைத்துக் கேட்டால் மட்டுமே கேட்கும். அதே இடத்தில் இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை ஒரே அலைவரிசையில் அனுப்பினால் எப்படி இருக்கும்?
இரண்டும் ஒன்று சேர்ந்து கேட்பது போல இருக்கும். இதற்கு மிகத்துல்லியமான அலைநீள ஒற்றுமை வேண்டும். இதைக் கொஞ்ச நேரத்துக்கு மனதில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். காதல் கதை என்றால் பிரச்சினை இல்லை, ஆர்வமாகப் படிக்க முடியும் எதுவும் மறக்காது. ஆனால் இது கொஞ்சம் அறிவியல் கதை என்பதால் மறக்க வாய்ப்பு உள்ளது. அபப்டி மறந்துவிட்டால் அடுத்து சொல்லப்போவது உங்களுக்குப் புரியாமல் போகலாம். வழக்கம் போலக் கதையின் கடைசி முடிவுக்கு நீங்கள் போகலாம்.
இப்போது நமது மூளையில் உருவாகும் மின்விசைக்கு அலைநீளம் வைத்து அதைத் தரம் பிரித்து இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். அப்படி இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் சந்தோஷமான அல்லது துக்கமான நிகழ்ச்சிகளைத் தன் வாழ்வில் எதிர்கொள்கிறார். அப்போது அவரின் மூளையில் உருவாகும் மின் அலை ஒரு அலைநீளத்தில் இருக்கும். சில நேரங்களில் அவை மண்டை ஓட்டை தாண்டி வெளியில் இருக்கும் அணுக்களில் பயணிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு வடிவத்தில் அது தங்கி இருக்கலாம். அது அப்படியே காற்றிலேயே சுற்றித் திரிந்துகொண்டேதான் இருக்கும்.
எப்போதுவரை? அதே அலைநீளம் கொண்ட மற்றொன்று அதோடு சேர்ந்து அதையும் தனது போக்கில் இழுத்துச் செல்லும் வரை. புரிகிறதா? ஒருவரின் மூளையில் இருந்துவரும் மின்னலை வெளியில் இருக்கும் அணுக்களில் பயணித்தோ அல்லது தங்கி இருந்தோ அதே அலைநீளம் கொண்ட மற்றொருவரின் மூளையில் உருவாகும் மின்னலையோடு சேர்கிறது. புதியதாகச் சேரும் அந்த அலை என்னவாக இருந்தாலும் சரி அதை மூளை கிரகித்து அதன்படி செயல்படத் தொடங்கும். அதுக்குத் தேவை செயல்பட தகவல் மட்டுமே. இப்பொது புரிகிறதா மற்றொரு பிறவியில் நடந்த விஷயங்களை எப்படி ஒருவர் இப்போது தெளிவாகக் கூறமுடிகிறது என்பது?
இன்னும் காற்றில் அணுக்களில் முன்னோரின் தகவல்கள் சுற்றிகொண்டுதான் இருக்கின்றன. எப்போது உங்களது மூளையின் மின்னலைகள் அவற்றோடு ஒத்துபோகின்றனவோ அப்போது அத்தகவல்களை நீங்களும் மொழிப்பெயர்ப்பு செய்யலாம்.