சிறு .. சிறு..-1


     அவர் கடவுளை காண அனுப்பிய விண்கலத்துக்காக காத்து இருந்தார்..முழு நம்பிக்கை இருந்தது இந்தமுறை எப்படியும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று..அனுப்பிய இருவரும் திறமையானவர்கள். காலத்தில் பின்னோக்கி சென்று கடவுளையும்,அவர் பிரபஞ்சத்தை எப்படி படைத்தார் என்பதை காணுவதே இவரின் நோக்கம்

      அந்த விண்கலம் பெரிய சத்தத்துடன் அதற்குண்டான இடத்தில வந்து இறங்கியது,அதில் இருந்து இரண்டு பேர் வேகமாக இறங்கி வந்தனர். அவர்களின் முகத்தில் சொல்ல முடியாத ஒரு  சந்தோசம்.

"என்ன வெற்றியா?" என்றார்

"ஆம்"

"அப்ப கடவுளை பார்த்தீர்களா என்ன?"

"ம்ம் பார்த்தோம் அவர் எப்படி இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்பதையும் பார்த்தோம்" என்றார்கள்

"என் முயற்சிக்கு கிடைத்த பெறும் வெற்றி...சரி சொல்லுங்கள் எப்படி இருந்தார் கடவுள்?"

"அவர் எப்படி இருக்கிறார்? எப்படி பிரபஞ்சத்தை படைத்தார் என்பதக்கு முன்னாடி கடவுள் இப்ப ரெம்ப குழப்பத்தில் இருக்கிறார் ஒரு பெரிய அறை முழுவதும் புத்தகங்கள், சுவர் முழுவதும் நீளமான கணக்கீடுகள் என்று நிறையா யோசிக்கிறார்"

    "ஏன் அவர் தான் பிரபஞ்சத்தை படைத்து விட்டாரே பின்னே என்ன பிரச்சினை? எதுக்கு இத்தனை சிரமம் அவருக்கு?"

     "அவர் பிரபஞ்சத்தை படைக்கும்போது கூட இத்தனை கஷ்டம படவில்லையாம்"

"பின்ன என்னதான் பிரச்சினை கேட்டீர்களா நீங்கள்?"

      "கேட்டோம் அதுக்கு அவர் தான் எப்படி தோன்றினேன் அல்லது யாரால் தோற்றுவிக்க பட்டேன் என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டு இருப்பதாக சொல்லிவிட்டு அவரின் ஆய்வுகூட கதவை பூட்டிவிட்டார்" என்றார்கள்.

******

     "எப்போதும் உன்னிடம் இருக்கும் அந்த அழகான உதட்டோர புன்னகை இப்போதெல்லாம் இல்லையே ஏன்?" என்றேன்

"அப்படி ஒன்னும் இல்லையே" என்றாள்

     "இல்லை ஏதோ பிரச்சினை சொல்லு எதையோ மறைக்க பார்க்கின்றாய் என்னிடம் அது உன்னால் முடியாது"

    "அதான் சொன்னேனே ஒண்ணுமில்லை வழக்கம் போலத்தான் இருக்கிறேன்"என்றாள்

   " உன் வாயில் இருக்கிற servo motor க்கு ஏதும் பிரச்சினை இல்லையே?" என்றேன்

    "அய்யோ இல்லை ஏன் திடிர்னு இத்தனை கேள்வி, நான் சோதித்து பார்த்தேன் அது சரியாகத்தான் வேலை செய்கின்றது"

    "அப்ப ஏன் சில நேரங்களில் உன் இடுப்பில் நான் செய்யும் செல்ல தீண்டல்களுக்கு உன்னிடம் இருந்து வரும் அந்த வெக்கம் கலந்த சினுங்களான சிரிப்பு வரமாட்டேன்கிறது"

   "ஒஹ் அதுவா என் இடுப்பில் இருக்கும்  சென்சார்கள் இரண்டு நாள்களாக வேலை செய்யவில்லை"என்றாள் ரோமி என்ற இயந்திர பெண்.

******

" வா ஓடிபோயடலாம்"

"ஓடிபோவதால் பிரச்சினை தீராது கணேஷ்" என்றாள்

"இந்த நிலமையில் அதைத்தான் செய்யமுடியும் சொல்வதைகேள்"

"இல்லை என்னால் முடியாது, அப்படியே ஓடினாலும் கொஞ்ச தூரத்தில் நாம் பிடிபடுவோம்"

"அப்ப என்னதான் செய்ய சொல்றே"?"

"நாம ஆற்றுக்கு வந்து திங்க வாங்கின பிஸ்கட் பாக்கெட எங்கே?என்றாள்

     நல்ல வேலையாக அவளுககு காத்து இருந்த நேரத்தில் தின்றது போக கொஞ்சம் மீதி இருந்தது அதை எடுத்து அவளிடம் நீட்டுவதக்கும் எங்களை  தூரத்தில் பார்த்து விரட்டி ஓடி வந்த நாய்கள் குரைத்தபடி நெருங்கவும் சரியாக இருந்தது.

    ஒவ்வெரு ரொட்டியாக அவள் எடுத்து போட வந்த இரண்டு நாய்கள் தின்று கொண்டே செல்லமாக வால் ஆட்டின, கொஞ்ச நேரத்தில் அதன் தலையில் அவள் செல்லமாக தடவி கொடுக்க இன்னும் சந்தோசத்தில் துள்ளி குதித்தன.

"சொன்னேன்ல ஓடிப்போக வேண்டாம்னு" என்றாள்

   "ம்ம் சரிதான்" என்று சொல்லி ஆற்றில நடக்க எங்களுக்கு பின்னால் தீர்ந்து போன பிஸ்கட் கவரை வைத்து விளையாடி கொண்டு இருந்தன அந்த நாய்கள்.