மனசு எங்கே ?

(உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))

    அந்த பெண் சொன்னதை கேட்டதில் இருந்து இருவரும் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார்கள்..இது எப்படி சாத்தியம்?ஒருவேளை அந்த பெண் பொய் சொல்கின்றாளா? என்ற சந்தேகம் இருவருக்கும்...

   தனியாக உட்கார்ந்து ..அழகாய் அமைதியாக எதையோ  யோசித்துக்கொண்டு இருந்தாள்..

   வைத்தி அவள  சொன்னதை ஒருமுறை உறுதி படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் அவளிடத்தில் ..

 “நீ சொல்வது நம்பும்மாதிரி இல்லையே? சரியாகத்தான் சொல்றியா?

    “ஆமாம்... எனக்கு இந்த பிரச்சினை இல்லையென்றால் எதுக்கு உங்களை தேடிவருகிறேன்? என்றாள்

   உனக்கு என்ன நடந்தது இந்த பிரச்சினை எத்தனை நாள்களாக இருக்கு என்ன பாதிப்புகள்னு கொஞ்சம் தெளிவாக சொல்லேன்? கேட்டார்

    “என்ன நடந்தது தெரியல.. சில நாள்காளகத்தான் இருக்கு....எதோ மனசே இல்லாத மாதிரி இருக்கும்..ஒரே வெறுமையாய்...எல்லாமே இருண்ட மாதிரி..என்னுள் எந்த எண்ணமும் ஓடாது...என்னால் எதையும் யோசிக்கவோ?சிந்திக்கவோ முடியாது...என்மனசே என்கிட்டே இல்லாமல் என்னைவிட்டு எங்கோ போய்விட்ட மாதிரி ஒரு நிலை..அடிக்கடி அவதிபடுகிறேன்..அதான் என் மனசு என்னிடம் இருக்கா இல்லையான்னு உங்களின் உதவியால் சோதித்து பார்க்கலாம்னு வந்தேன்என்றாள்


   வைத்திக்கு மீண்டும் அதே குழப்பம்....மனசு எங்கே போகும்? தன்னுள் இல்லை என்கிறாளே?...அப்போதுதான் அவருக்கு சில நாள்களுக்கு முன்அவர் மனிதனுள் மனசு எங்கே இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க எடுத்துக்  கொண்ட முயற்சி நினைவுக்கு வந்தது...சில காரணங்களுக்காக இடையிலேயே கைவிட்டு இருந்தார்...


  புனி இன்னும் அந்த பெண் சொன்னது உண்மையா இல்லையா என்ற சிந்தனையில்.இருந்தாள்..அருகில் வைத்தி வந்தார்..

என்ன செய்ய போறீங்க டாக்டர்? கேட்டாள் புனி

அதான் யோசிக்கிறேன் கேட்கவே வித்தியாசமா இருக்கே?

அந்த பெண் நல்லாதானே இருக்கா..இல்ல ஒரு  மாதிரியா..??

    “இல்லை.. அவள் மனநிலையில் எந்த வித பிரச்சினையும் இல்லை..அருமையாக கவிதை எழுதுவாலாம், நான் பேசியபோதும் நன்றாக புரிந்துகொண்டு பேசினாளே” என்றார்

அப்ப அந்த பெண்ணுக்கு உங்களின் முடிவு என்ன?

    “நான் கொஞ்சநாள் முன்னாடி மனத்தைக் கண்டறிய சில சோதனை முயற்சிகள் செய்து கைவிட்டேன். அதை மீண்டும் முயற்சிக்கலாம் நினைக்கிறேன்

மனசை கண்டறிய முயற்சியா எப்படி?என்றாள் ஆச்சர்யமாக..

      “மூளையில் ஒரு பகுதி அல்லது அதில் ஏற்படும்  எண்ணங்களே மனசு...அப்படி மூளையில் எண்ணங்கள் ஏற்படும்போதோ  அல்லது ஒரு தகவலை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு nerve cell கள் கடத்தும் போது வேதியல் ரசாயன மாற்றத்தால் neuron களில் ஏற்ப்படும் குறைந்த அளவு மின் சக்தியை வைத்து எண்ணங்கள் எங்கு இருந்து வருகின்றன என்பதை கண்டறிய nanotechnology முறையில் இரத்த செல்களை விட மிக நுண்ணிய அளவிலான சிப்களை உருவாக்கி இருந்தேன்...இந்த சிப்கள் குறைந்த அளவு மின்சார அளவைக்கூட கண்டுபிடித்து அது இருக்கும் இடத்திற்கு செல்லகூடியது..இதை ரத்தத்தில் கலந்த சில நிமிடங்களில் எங்கு மின்சார தூண்டுதல் இருக்குமோ அதை நோக்கி தானாக பயணிக்கும்...இதை வைத்து மனசு எங்கு இருக்கிறது என்பதை ஒருவாறு கணிக்கலாம்

      “அப்படி என்றால் மூளையில் நடக்கும் எல்லா தகவல் பரிமாற்றத்தின் போதும் இந்த மின்சார தூண்டுதல் இருக்குமே பின்னே எப்படி இந்த சிப்கள் சரியாக மனதை கண்டுபிடிக்கும்..அதோடு இதே மாதிரிதான் EEG (electroencephalograph) ஒன்னு இருக்கே இதுவும் நீங்க சொல்ற மாதிரிதான் மூளையில் நடக்கும் மின் அதிர்வுகளை அளந்து சிகிச்சை அல்லது ஆராய்ச்சி செய்யும் முறை இந்த முறையில் இது சாத்தியமில்லையா என்ன? என்றாள் புனி

      “இல்லை neuron கள் neurotransmitters மூலம் ஏற்படுத்தும் மின்சார விசை ஒரே அளவாக இருப்பது இல்லை...என்னை பொறுத்தவரை மிக ஆழ்ந்த எண்ணங்களின் போது அதிக மின்சாரம் வெளிபடுத்த வாய்ப்புண்டு...நாம் சோதனையின் போது அந்த மாதிரியான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மேலும். நீ சொல்லும் EEG முறையில் வெளியில் இருந்து மொத்தமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மின்சார உணர்வுகளை  அளக்க முடியும்..ஆனால நான் உருவாக்கிய சிப் மூளையின் எல்லா முடுக்குகளிலும் செல்லக்கூடியது..அதோடு இந்த சிப் எங்கு செல்கின்றது என்பதை வெளியில் இருந்தே நாம் திரையில் அது கொடுக்கும் தகவலின் மூலம் காண முடியும்.

இதை ஏற்கனவே சோதித்துப் பார்த்து இருக்கிங்களா? என்றாள்

    “ஆமாம் ஒருமுறை சோதித்து பார்த்தேன்..செலுத்திய வேகத்தில் வேகமாக சென்று மூளையின் ஒரு பகுதியில் போய் எல்லாம் நின்று விட்டது அந்த இடத்தில்  பல பகுதிகள் உள்ளடக்கி இருந்ததால் என்னால் சரியாக முடிவை எடுக்க முடியவில்லை என்றார்

"இந்த முறை சரியாக இருக்குமா என்ன?"

சோதித்துதான் பார்க்க வேண்டும் என்றார்

   அந்த பெண்ணை அழைத்து செய்யபோவதை விளக்கி..சம்மதம் பெற்று அவளது உடலில் அந்த மிக நுண்ணிய சிப்களை செலுத்தியவுடன் ..முதலில் ரத்தத்தோடு வேகமாக பயணித்தாலும அது மூளையை நோக்கி செல்லவே இல்லை..இதை பார்த்த புனிக்கும் வைத்திக்கும் ஆச்சர்யம்.
.
இவள் சொன்னது உணமைதான் என்றார் வைத்தி.

   சிறிது நேரம் பார்த்தும் பயனில்லை என்பதால் ..வைத்தி சோகமாக திரும்பி வந்து யோசித்து கொண்டு இருக்க..புனி அவரின் அருகில் வந்து நிற்க ...அவர்களுக்குள் என்ன நடக்கின்றது என்பதே புரியாமல் அந்த பெண் அப்பாவியாய் உட்கார்ந்து இருந்தாள்..

புனி வேகமாக அவளை நோக்கி சென்று..

நீ யாரையாச்சும் காதலிக்கின்றாயா என்ன?

அவள் ஆமாம் என்பது போல தலையாட்டினாள்

  புனி மெல்ல சிரித்தாள் ...வைத்தி கண்டுபிடிக்க முடியாத ஒன்றை தான் கண்டுபிடித்தவிட்ட சந்தோசம் அந்த சிரிப்பில் இருந்தது..



((கதையில் மனதை கண்டறியும் முறை கற்பனை..EEG முறை மருத்துவ வழக்கத்தில் இருக்கும் ஒன்று..))

"புனி"தன்

   ((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))

  புத்தகத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்த வைத்தியின் எதிரில் தயங்கிய படி நின்றவளை..நிமிர்ந்து என்ன? என்பது போல பார்த்தார்..

  "நான் ஒரு முயற்சி செய்தேன் கொஞ்சம் உருப்படியாக வருவது போல இருக்கு அதை சரியா முடிக்க  உங்க உதவி வேணும்" என்றாள்

"என்ன பண்ணியிருக்கே?"

   "குரங்குக்கும் மனுசனுக்கும் குரோமோசோம்களில் இருக்கும் வித்தியாசத்தை கொஞ்சம் செயற்கையாக மாறுபடுத்தி அதில் இருந்து  வேறொரு உயிரினம் உருவாகிறதா  பார்த்தேன் சாத்தியம் இருப்பது போல இருக்கு"


"இது எப்படி சாத்தியம்?" கேட்டார் வைத்தி

    "குரங்குக்கு உள்ள மொத்தம் 24 குரோமோசோம் நமக்கு 23, குரங்கின் 11&12 குரோமோசோம் தான் சுருங்கி மாற்றம அடைஞ்சி நமக்கு  2-ஆவது  குரோமோசோமா  இருக்கு..... இன்னும் சில குரோமொசோம்களில் மாற்றங்கள் இருந்தாலும் இந்த இரண்டு குரோமொசோம்கள் எப்படி சேர்ந்து தடித்து ஒன்றாக மாறி மனிதனில் பல  மாற்றங்களை தந்ததோ அதே மாதிரி இப்ப மனுசனுக்குள் இருக்கும் இரண்டு குரோமோசோமை  செயற்கையாக  மாற்றி அதை  ஒரு உயிராக வளரவைத்தால் என்ன? என்று செய்துபார்த்தேன். அந்த வகையில் மாற்றம்  செய்து ஒரு செல்லை உருவாக்கி விட்டேன். அதை முழுவதும் வளர வைக்கவேண்டும்..."

"அப்ப நீ உருவாக்கி இருக்கும் செல்லுக்கு 22 குரோமோசோம்தானா?"

  "ஆமாம்..இதுக்கு கருவில் இணைய பொருத்தமாக இன்னொரு ஜோடி  குரோமோசோமை (கருமுட்டையில் கொண்ட) வடிவமைத்து, இருக்கிறேன். எனவே, இந்த  இரண்டையும் in-vitro முறையில் இணைக்கும்போது இனைவதில் எந்த ஒரு பிரச்சினையும் வராது ..."என்றாள்

  வைத்தி அவளை  ஆச்சர்யமாக பார்த்தார்..என்ன வேலை செய்து இருக்கிறாள் இவள்..!

  "அப்படியே வளரவைத்தாலும்  இது முழு கருவாக வளரும் என்பதில்  முழு நம்பிக்கை எனக்கில்லை" என்றார்

"முயற்சி செய்து பார்க்கலாமே" என்றாள்

  சரி என்றவர் அதற்குத் தயாரானார். இரண்டு செல்களையும் சரியாக இணைத்து கருவாக வளரவைத்ததில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்தது. கவனமான கண்காணிப்பில் பல மாதங்கள் கடந்து இருந்தன.

    அவர்களின் பெரிய ஆச்சர்யம் அந்த கரு அதிக வேகமாக வளர்ந்ததுதான். சாதாரன மனிதக்கரு ஆறு மாதத்தில் என்ன வளர்ச்சி இருக்க வேண்டுமோ, அது  இதில் மூன்று மாதங்களில் வளர்ந்து இருந்தது. வளரும் உருவம் மனித அமைப்பைக்  கொண்டு இருந்தாலும் அதன் கணிக்க முடியாத வளர்ச்சியால் அவர்களுக்கு இந்த கரு எப்போது முழுமை அடையும் என்பதில் குழப்பம் இருந்தது...
    குழந்தையாக வளர்ந்து அதை வெளியில் எடுத்து செல்லை சோதித்து பார்த்தபோது இருந்த மொத்த குரோமோசோம்களின்  எண்ணிக்கை 44 -ஆக  இருப்பதை உறுதி செய்து ஆச்சர்யபட்டார்கள்.



     புனி உனது ஆசை நிறைவேறி விட்டது என்றார்...இதுக்கு ஒரு பெயர் வைக்கலாமா என்றாள்...அப்போது அது கையை காலை ஆட்டியபடி இருந்தது....
 

"இதை நீ கண்டு பிடிச்சதால் புனிதன் என்று  வைக்கலாமே?" 

     அவளும் சிரித்து கொண்டே சம்மதித்தாள்.... அதன் நிறம் கொஞ்சம் வேறமாதிரியாக இருந்தது. அவர்கள் காத்து இருந்தது அதிலுள்ள சிறப்பு அம்சம் என்ன இருக்கின்றது என்பதை அறியத்தான்.

      மறுநாள் சோதித்து பார்த்தபோது வைத்திக்கு அதிர்ச்சி. அதன் உடலில்   எந்த பொருள்கள் சென்றாலும் அது உருகி அழிந்தது.... ரத்தம் எடுக்க ஊசியை குத்தியபோதுதன் உணர்ந்தார். எலும்பு அமைப்புகளை பார்க்கும்போது என்ன செய்தாலும் உடைக்க முடியாதவை. சொல்லப்போனால் உலகத்தில் இப்போது இருக்கும் எந்த ஒன்றை வைத்தும் புனிதனை அழிக்க முடியாது என்பதை சரியாக  வைத்தி உணர்ந்து இருந்தார்.

    இருவரும் கவலையில் இருந்தனர்....
ஏதாவது பிரச்சினை என்றால் புனிதனை அழிப்பது சாத்தியமில்லை. அதே நேரத்தில் அவனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லையென்றால் ஒருவிதத்தில் வெற்றி. எதுவும் புனிதனின் வளர்ச்சிக்கு பிறகுதான் தெரியும்.

     உணவுமுறையில் எதுவுமே சரியில்லை...கண்ணில் படுவதை பிய்த்து திங்க ஆரம்பித்து இருந்தான்...கையை கட்டி போட்டும் பயனில்லை..புனிதனை பற்றி எதையுமே புரிந்துகொள்வது முடியாமல் போனது..அவனை வெளியில் இப்படியே நடமாடாமல் அடக்கி வைத்து இருப்பது முடியாத காரியம்..அதே நேரத்தில் ஏதாவது செய்து அழிப்பதுவும் சாத்தியமில்லை....


     என்னதான் யோசித்தும் புனிதனைப் புரிய முடியவில்லை என்பதால் அழிக்க முடிந்த வழிகளை யோசித்தார்கள்..புனிதனை உருவாக்கியதில் புனிக்கு முதலில் கொஞ்சம் சந்தோசம். இருந்தாலும் இப்போது பெரிய கவலையில் இருந்தாள்...புனிதனை அழிக்க முடியவில்லை என்பதை நினைத்து ...

      நாட்கள் கழிய புனிதனின் சேட்டைகள் அதிகமானது...செயல்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன..வேகமான வளர்ச்சியால் சில நாள்களில் நடக்க ஆரம்பித்து இருந்தான்..

"இவனை அழிக்க ஒரு வழியுமில்லையா டாக்டர் ?"

"அதான் நானும் முயற்சித்து தோத்துட்டேன்" என்றார்

"எல்லாம் என் தப்புதான்..இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்"

"ஒரே வழி இருக்கு"என்றார்

"என்ன வழி?"

"புனிதனின் கதையை முடிக்க ஒருவனால் மட்டுமே முடியும்"

   "யாரது? அவனிடம் சொல்லி வேகமா முடிக்க சொல்லுங்க அடுத்து இவன் என்ன செய்வான்னு நினைக்கவே பயமா இருக்கு" என்றாள்


"சரி கணேஷிடம் பேசி "புனி"தன் கதையை முடிக்க சொல்கிறேன்."என்றார்.





(இதில் "புனி"தன் கதை என்பது கணேஷ் மேலே  எழுதிய கதை ....புனிதனின் உயிர் இல்லை..)

உண்மையா..

நாம இப்படி தனியா சந்திச்சு பேசி எவ்வளவு நாள் ஆச்சு?


     ”
ஆமாம் .இந்த தனிமையில் என்ன பேசணுமா பேசிக்கோ,ஏதாவது கொடுக்கணும்னு நினச்சா கொடுக்கலாம்" என்றேன்

    ”
பேச நிறையா இருக்கு கணேஷ் ஆனா கொடுக்க ஒண்ணுமே எடுத்துவரலியே நீ முதலலயே சொல்லி இருக்கலாம்ல?”

நீ புரியாம சொல்றியா இல்லை புரிஞ்சுதான் தெரியாத மாதிரி நடிக்கிறியா?”

    ”
நான் எதுக்கு நடிக்கணும் ஏதாவது கொடுன்னா என்ன கொடுக்கிறது அதான் ஒன்னும் எடுத்துட்டு வரலியே..நீதான் புக அதிகம் படிச்சு படிச்சு யாருக்குமே புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே என்றாள் அப்பாவியாய்

    ”
சரி விடு நீ திருந்தமாட்டே ஏதோ நிறையா பேசனும்னு சொன்னியே அதையாவது சொல்லித்தொலை"

    ”
ரெண்டு பேருக்குள்ள உணமையான அன்போ காதலோ இருந்தா ஒருவரை பத்தி நினைக்கும்போது அது மற்றவருக்கும் தெரியுமா என்ன?”

எதுக்கு கேட்குறே? ஏதாவது படத்துல பார்த்தியா என்ன?”

    ”
இல்லை எப்பாவது உன் நினைப்பு வருமா...... அப்ப யோசிப்பேன் உன்னை மனசுல நினைக்கும்போது அது உனக்கு தெரிஞ்சு நீயும் என்னை நினைப்பியான்னு ஒரு சந்தேகம் அதான்..
 

     
நீ சொல்றது ESP(extra sensory power) மாதிரி...டெலிபதி இது எல்லாம் சும்மா நடக்காது...சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க..ஆனா உணமையில்லை...நன்மையோ தீமையோ உன் மனதால் உனக்கு மட்டுமே பலன்..மத்தபடி அதைவச்சு தகவல் அனுப்புறது, ஏதாவது சாமியார் மனதால் கட்டியை,நோயை குணபடுத்துகிறேன் சொல்றதும் எல்லாம் சும்மா..அந்த மாதிரிதான் என்னை நினைச்சதும்..அதிகமா மனசுல என்ன நினைக்கிறியோ அதன் தாக்கம் இருக்கும்...என்று சொல்லி முடிக்கும் முன்.
 
  உன்கிட்டே போய் இதை சொன்னேன் பாரு..எவ்வளவு ஆசையா காதலோடு சொன்னா நீ அது இதுன்னு சொல்லி உன் புத்தியை காட்றே...உன்னைபோய் தினமும் நினச்சு நீயும் என்னை நினப்பேன்னு இருந்தேன் என்னை சொல்லணும் என்றாள் கோபமாய்..

  சரி சரி இது உண்மையா பொய்யான்னு தெரியணும் அவ்வளவுதானே..இன்னைக்கு ராத்திரி  என்னை அதே மாதிரி நினை நீ நினைக்கிறது எனக்கு தெரியுதான்னு பார்க்குறேன் சரியா?”

 
   வேறெதுவும் பேசாமல் பிரிந்தோம்...எனக்கு இதன் மேல் நம்பிக்கையில்லை என்றாலும் அவளுக்காக சொல்லிவைத்தேன்...இன்று என்ன நடந்தாலும் நாளைக்கு அவளிடம் ஆமாம் நீ நினைச்சது எனக்கு தெரிஞ்சதுன்னு பொய் சொல்ல வேண்டும் சந்தோசபடுவாள்...வீடு வந்து சேர்ந்தேன்

    படுக்கும்முன் நினைவில் வந்தாள்...எவ்வளவு அதிகமாக காதலிக்கிறாள்.அவளிடத்தில் முதலிலேயே ஆமாம் என்று பொய் சொல்லிருக்கலாம் ரெம்ப சந்தோஷபட்டிருப்பாள்....இப்போது என்னை நினைக்க ஆரம்பித்து இருப்பாள்...மெதுவாக கண் மூடினேன்..மனம் வெறுமையாக மாறியது..கடைசியாக இருந்தது அவள் நினைவுதான்...எப்போது மறந்தேன்...தூங்கினேன்' தெரியாது...

  கனமான போர்வை விலகியதால் டெல்லி காலைகுளிரின் தாக்கத்தால் வேகமாக இழுத்து மூட முயலும்போதுதான் பார்த்தேன்..மணி 7:15 ஆகியிருந்தது..அலுவலகம் போக வேண்டும்...நேரம் ஆகிவிட்டது...எழுந்தேன்..வலப்புற சுவற்றில் ஐன்ஸ்டீன் சிரித்து கொண்டு இருந்தார்...கடைசியாய் மறந்துபோன அவளின் நினைவோடு ஏதோ ஒன்று மனதில் ஆழமாய் மீதம் இருப்பதாக ஒரு உணர்வு ...நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது...இது கனவா இல்லை உணமையில் அவள் நேற்றிரவு என்னை நினைத்து இருப்பாளா? பின்னர் அவளிடம் இது பற்றி கேட்க வேண்டும்..

சில கண்ணீர்கள்..

ஏதாவது சொல்லித்தான் தொலையேன்

என்ன செய்யன்னு...தெரிந்தால் சொல்ல மாட்டேனா என்ன? என்றேன்

நிலமையை கொஞ்சம் முழுசா புரிஞ்சு யோசி என்றாள்

  மூன்று வருட காதலை திருமணத்தில் எப்படி முடிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் இருந்தோம்..இதுவரை வீட்டுக்கு தெரியாமல் காதலித்தது பெரிய விசயமாக இல்லை..திருமணத்திற்காக சம்மதம் பெறுவதின் கஷ்டம இப்போது புரிந்தது..எப்படி சொல்ல?மறுத்தால் என்ன செய்ய?முதலில் யார் வீட்டில் சொல்வது?

    “என் வீட்டில் முதலில் சொல்லி உன் பெற்றோரிடம் பேச சொல்கிறேன் இதில் ஏதும் பிரச்சினை வந்தால் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்றேன்.

சொல் என்ன நடக்கின்றது பார்க்கலாம் என்றாள் சோகமாய்.

   ஒருவிதமாக என் பெற்றோரிடம் சொல்ல கொஞ்சம் எதிர்ப்புக்கு பிறகு ஒருவழியாக சம்மதித்து அவளின் வீட்டில் பேசபோனோம்...அவளின் அப்பாவிடம் சொன்னவுடன் அவளை அழைத்து கேட்டார் ...பேச்சில் கோபம் இருந்தது...

   யோசித்து விட்டு சொல்வதாக சொல்ல திரும்பினோம்,அடுத்து வந்த நாள்களில் நாங்கள் சந்திக்கவில்லை...இரண்டு நாள்கள் கழித்து அவளின் அப்பா வந்து ஜாதக பொறுத்தம் பார்க்கலாம் பொருந்தி இருந்தால் சம்மதம் என்று சொல்லிவிட்டு சென்றார்...

மறுமுறை நாங்கள் சந்திக்கும் போது அவள் சோகமாகவே இருந்தாள்...

    “அதான் திருமணத்திற்கு சம்மதிச்சிட்டுங்களே பின்னே ஏன் உம்னு இருக்கே?

இல்லே ஜாதகம் சரியா பொருந்தலைன்னா என்ன செய்ய?

இதுவேற பிரச்சினையா? என்றேன்

   “ஒன்று செய்யலாம் நாமே ஜாதகம் பார்க்கலாம் ஏதும் பிரச்சினை இருக்கா இல்லையா தெரிஞ்சிகிட்டா நிமதியாக இருப்பேன் என்றாள்


சரி என்ற சொல்ல ஒரு நாள் இருவரும் ஜாதகத்தை எடுத்து கொண்டு பார்க்க சென்றோம்..

   குடும்ப ஜோதிடர்தான்... சிறிய அறை நாங்கள் போனபோது தனியாகத்தான் இருந்தார்..எங்கள் காதலை பற்றியும் அதுக்கு பிறகு வீட்டில் நடந்ததை பற்றியும் சொன்னோம்..சரி பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு..

    “இல்லை இந்த இரண்டு ஜாதககாரர்களும் திருமணம் செய்ய கூடாது என்றார் அவரது பாணியில்..அதற்குண்டான விளக்கங்களை அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ..அருகில் நின்று இருந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள்..அதை பார்த்தவுடன் அவர் சொல்வதை நிறுத்திவிட்டு...

ஏன் இப்ப அழுகிறாள்? என்னிடம் கேட்டார்.

நான் அவளை பார்க்க கண்களில் கண்ணீர் வழிந்த நிலையில் அழுது கொண்டு இருந்தாள்..

    “நான் இவனை ரெம்ப காதலிக்கிறேன் பிரிந்து வாழ்வது கஷ்டம..ஜாதகம் வேறு பொறுத்தம் இல்லை என்று சொல்றீங்க... வார்த்தை உடைந்தது..

நான் என்ன செய்ய இருப்பதை சொன்னேன் என்றார் ஜோதிடர்,

    “நீங்கள் நினைத்தால் எங்கள் காதலை சேர்த்து வைக்கலாம் ..எங்கள் வீட்டில் இருந்து பார்க்க வருவார்கள் அவர்களிடம் பொருத்தம் இருப்பதாக சொன்னால் தான் எங்கள் திருமணம் நடக்கும்..இவனை தவிர வேறு யாரயும் பிடிக்காது...திருமணமும் செய்ய மாட்டேன்..என்றாள் அழுது கொண்டே.

   அவர் கொஞ்ச நேரம் தலையை குனிந்து யோசித்தார்....முதன்முறை அவள் அழுது பார்க்கிறேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..ஏதும் பேசவில்லை..

சரி வீட்டில் இருந்து வந்து கேட்டால் பொய் சொல்கிறேன் என்றார்.

அவருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வெளியில் வந்தோம்...

எதுக்கு அப்படி அழுதே?

   “பின்னே என்ன செய்ய சும்மா சொன்னா அவரு கேட்பாரா என்ன அதான் அழுத மாதிரி நடிச்சேன்என்றாள்

அடிப்பாவி நடிச்சியா நான் பயந்து போனேன்..

    “அழுகலைன்னா அவர் மனசு எப்படி மாறும்..இன்னும் முழுசா அவரை நம்ப முடியாது..வீட்டில் இருந்து வந்து கேட்கும்போது அவர் பொய் சொன்னால்தான் ஆச்சு..இல்லேன்னா நாமும் எங்கேயாவது ஓட வேண்டியதுதான்

இல்லை அவர் நீ அழுததை நம்பிட்டார்.கண்டிப்பா பொய் சொல்லுவார்..

   அடுத்து வந்த நாளில் இருவீட்டாரும் போய் கேட்க எல்லாம் பொருந்தி இருப்பதாக் சொன்னதால் திருமணத்திற்கான வேலைகளை தொடங்கினார்கள்...

   திருமணத்திற்கு ஜோதிடரும் வந்து இருந்தார்..ஒருவழியாக திருமணம் முடிந்தது..இரண்டு வாரங்கள் கழித்து வெளியில் செல்லும் போது அந்த ஜோதிடரை பார்க்க நேர்ந்தது...நல விசாரிப்புக்கு பின்..

    “நீங்கள் பொய் சொன்னதுக்கு நன்றி..என்றுமே மறக்க மாட்டேன் என்று சொல்லிகொண்டே அப்போதும் அழுதாள்.

    “இதிலே என்ன இருக்கு எதிர்காலத்தில் நீங்கள் நல்லா இருந்தா போதும் அழாதேம்மா..எல்லாம் சரியா இருக்கும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..

    “அடிப்பாவி அப்பதான் காரியம் ஆகணும் அழுதே இப்ப எதுக்கு இந்த நடுத்த தெருவில் அழுகை

    இது நடிப்பு இல்லை..அவர் மட்டும் பொய் சொல்லியிருக்கவில்லை என்றால் இப்போது நமது நிலையை யோசித்து பார்..எவ்வளவு கஷ்டபட்டுருப்போம் அதான் என்னையறியாமலே அழுதுட்டேன் என்றாள் சோகமாக.

சில விசயங்கள - 1

   இதில் கொஞ்சம் ஐன்ஸ்டீன் புராணம்.....அவரின் கண்டுபிடிப்புகள், தனிமை கலந்த அறிவியல் ஆராய்ச்சிகளை வைத்து சிலருக்கு அவர் உம்னாமூஞ்சி என்று நினைக்கத்தோன்றும்...உணமையில் ஐன்ஸ்டீன் நகைச்சுவை உணர்வு கொண்டவர்..

  அதோடு இல்லாமல் அவருக்கு இசையும் இயற்க்கையும் ரெம்ப பிடிக்கும்,நன்றாக வயலின் வாசிப்பார்..முறையாக கற்றவரும்கூட...அவரின் முதல் காதல் மனைவிக்கு இவரின் இசை பிடிக்குமாம்..இனிமையான இசையால் காதலியை மயக்கி இருக்கிறார்..

   அவர்களுக்கு திருமணம் நடந்து...சில காரணங்களுக்காக பிரிய நேர்ந்தது பின் அவருக்கு கிடைத்த நோபெல் பரிசை அவரின் காதல மனைவிக்கு கொடுத்தார்..காதலிக்கும்போதே சொல்லி இருந்தாராம்..பரிசு கிடைத்தால் கொடுப்பதாக..அதுக்கு பிறகு வேறொரு திருமணமும் செய்து கொண்டார்..

  கிழே உள்ள படத்தை பாருங்கள்..இது 1951 ஆம் ஆண்டு அவரின் 72 வது பிறந்தநாளின் போது எடுக்கபட்டது...அவர் இப்படி நாக்கை கிண்டலாக வெளியில் (நீ)காட்டுவதற்கு காரணம்..அப்போது ஐன்ஸ்டீன் புகழின் உச்சியில் இருந்தார்..அன்றைய நாளில் பத்திரிக்கைகாரர்கள் அவரை புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரை அழகாய் சிரிக்க சொல்லி நகர விடாமல் சூழ்ந்து கொண்டனர்..அதனால் எடுக்கும் புகைப்படத்தை கிண்டலாக மாற்ற தனது நாக்கை வெளியில் நீட்டியிருக்கிறார்


   இது அவர் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்..மற்றபடி எல்லா புகைப்படங்களும் சாதாரணமானவை..இது ஒன்றுதான் அவரின் சந்தோஷமான முகபாவத்தை எடுத்து சொல்லும் படம்...புகழ்பெற்றதும்கூட..

   அடுத்து அவர் சொல்லும் நகைச்சுவை வாக்கியங்கள்...நிறையா சொல்லி இருந்தாலும் ஒன்றை பார்ப்போம்... அவர் 1905ஆம் ஆண்டு தனது special theory of relativity (SR) வெளியிடுகிறார்..சிலர் அதை யாருக்கும் புரியவில்லை..ஐன்ஸ்டீன் அதை சரியாக விளக்கவில்லை அல்லது விளக்க வேண்டும் என்று சொல்ல..மனிதர் எளிமையாக ஒரு வாக்கியத்தை சொல்கிறார்..அது..


"Put your hand on a hot stove for a minute, and it seems like an hour.
 Sit with a pretty girl for an hour, and it seems like a minute.
 THAT'S relativity."

   இதன்மூலம் சொல்ல வருவது time is relative எனபதுதான்....SR ன் படி பார்த்தால் காலம் தனித்து இருக்காது..ஒன்றை சார்ந்து மாறுபடும்...அல்லது அறிவியல் விதிகள் (LAW OF SCIENCE) எல்லா இடங்களிலும் பொதுவானதாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக இருக்கலாம்...

    அவருக்கு காதலின் அனுபவம் இருந்திருப்ப்பதால் இதை சொல்லியிருப்பார் ....இருந்தாலும் நகச்சுவை நிறைந்த எளிமையான விளக்கம்..

    இதுவரை ஒரு பெண்ணோடு அமர்ந்து வீணாக  நேரத்தை போக்கி பழக்கம் இல்லை..எனவே நான் நேரடியாகவே SR படித்து புரிந்து கொண்டேன்..

   அடுத்து கொஞ்சம் கவிதை மாதிரி....ஏற்க்கனவே காதல் கவிதைகள் எழுத  காதலில் விழவேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறேன்..இந்த நான்கு வரிகளுக்காக ஒரு பெண்ணின் பின் சுற்றி..அவளை திரும்பிபார்க்க வைத்து காதலை சொல்லி..அவளுக்கு முகத்தில் வர்ணம் பூச கிரீம் வாங்கி கொடுத்து அழகாக்கி அதுக்குப்பிறகு வர்ணித்து கவிதைகள் படைப்பதற்கு...காசில்லாமல் கற்பனையில் எழுதுவது தேவலை..கற்ப்பனை காசா பணமா?.....போதும் நான் ஏதாவது சொல்ல கவிதைகள் எழுதி காதலை வழர்ப்போர்கள் சண்டைக்கு வருவார்கள்..

எழுத வார்த்தைகள்
கிடைக்காததால்  - என்
மனதில் உணர்வுகுப்பைகளாய்
உன் காதல்..
*******

கவிதைகள் எழுதிவிட்டு
என் பெயர் போட
தயங்குகிறேன் எழுதும்
கவிதைகள்  -உன்
விழிகளிடம் கற்றதால்..

*******
கண்களை மூடினால
இமைகளில் நீ இருந்தும்
வெளியில் தேடுகிறேன் உன்னை..

*******
முயற்சித்து தோற்றுத்தான்
போகிறேன். உன்
விழிபேசும் மொழிகளை
சரியாக மொழிபெயர்க்க...
**

திரும்பி போகிறேன்...

      அந்த இயந்திரம் தயாராக இருந்தது..ஏறி அமர்ந்தான்.. எந்த ஆண்டுக்கு  பின்னோக்கி போகவேண்டுமோ அதில் அழுத்தினான்..கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போதுதான் நினைவு வந்தது கிளம்பும் தருணத்தில்  அவன இருந்த நிகழ்காலத்தை குறித்து வைக்க மறந்து விட்டான்...விமானம் தொடர்ந்து இலக்கை நோக்கி வேகமாக பறந்தது..

      தலைப்பை வைத்தவுடன் எழுத தூண்டியது இதை மையமாக வைத்து ஒரு கதையை ஆனால் சில கடந்த நினைவுகளை எழுத சொல்லி இருப்பதால் இதை மற்றொன்றில் பார்க்கலாம்..நான் வலைப்பூ ஆரம்பித்து ஒருவருடம் ஆகின்றது..தொடங்கியதில் இருந்து சொல்வதும் கடந்த ஆண்டில் நடந்தவற்றை சொல்வதும் ஒன்றுதான்...

   சரி கடந்த வருடத்தில் உருப்படியாக என்ன எழுதினாய் என்று தனிமடலில் கேட்டு இருந்தால் ஒண்ணுமே இல்லைஎன்று சொல்லி முடித்து இருப்பேன்..ஆனால் அக்கா கௌசல்யா அவர்கள் பதிவாக எழுத சொன்னதால் இரண்டு  வார்த்தையில் ஒரு பதிவு எழுதி சாதனை படைக்கவிரும்பவில்லை..

தொடங்க காரணம்

      புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டென்பதால் அது சம்பந்தமான சந்தேகங்களை இணையத்தில் தேடிபடித்து...சில நல்ல விசயங்களை தேவைக்கு பிரதி எடுத்துகொள்வதுமுண்டு..இந்த பழக்கம் அதிகமாக....பின்  இணையத்திளியே சேமித்து வைத்து தேவையான போது படிக்கலாம் என்ற எண்ணம வர..இந்த வலைப்பூ என்ற ஒன்றை தொடங்கினேன்..

      தொடக்கத்தில் எனக்குத் தேவையான சில அறிவியல் விசயங்களை சேகரித்து பதிவாக வைத்து இருந்தேன்..அபோதைக்கு வலைப்பூ பற்றி முழுவிசயம் தெரியாது.....அடுத்து சிலரது வலைப்பூக்கள் படித்து நானும் இந்த மாதிரி எழுதினால் என்ன என்று முயற்சிதததின் விளைவு இப்போது இதை எழுதி கொண்டு இருக்கிறேன்..

     நான் முதலில் எனக்காக சேகரித்த விசயங்கள் இன்றும் முதல் பதிவாக இருக்கின்றன..சரி எழுத ஆரம்பித்தது பற்றி சொல்கிறேன்...

      சுஜாதா என்ற ஒரு மாபெரும் மனிதரின் உபயம் எனக்கு பிடித்த அறிவியலை இன்னும் எளிமையாக புரியவைத்தது...இங்கு நான் எழுதியது எழுத போவதுக்கும் காரணகர்த்த அவர்தான்...நிறைய கற்றுகொடுத்திருக்கிறார்..அறிவுரைகள்.....இதை படிக்கலாம்,படிக்க கூடாது...இப்படி செய்யலாம்,கூடாது...இன்னும் நிறைய....அவர் எழுத்துகளில் குறிப்பிட்ட புத்தக பெயர்களை குறித்து வைத்து எவ்வளவு சீக்கிரம் அதை படிக்க முடியுமோ முடித்து விடுவேன்..

       இப்படித்தான் தொடங்கியது எனது வாசிக்கும் பழக்கம்..அறிவியல் மீது இருந்த ஆர்வம அறிவியல் புனைவு கதைகளின் மீது செல்ல..நானே பல புத்தகங்கள் தேர்ந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..

      வாசிக்கும் பழக்கம அதிகமானதால் என்னவோ கொஞ்சம் எழுதும் ஆர்வமும் வந்தது..அறிவியல் சார்ந்த விசயங்களையே படித்ததால் அதையே எழுத எண்ணி தொடக்கத்தில் சில கட்டுரைகள் எழுதினேன்...அறிவியல் கட்டுரைகள் எழுதினால் யாரும் நேரம் ஒதுக்கி படிப்பதில்லை...அதற்கு பதில் அவர்களுக்கு பெரியம்மா,மருமகள் போன்ற நெடுந்தொடர்கள்,அல்லது படங்கள் பார்ப்பதே ஒரு சிறந்த விசயமாக இருந்து இருக்கலாம்..

எனது வலைப்பூ

      நான் எழுத ஆரம்பித்தபோது நான்கு மாதங்கள் வரை என்னை பின்பற்றியவர்கள் எண்ணிக்கை மொத்தம் 3 பேர்தான்..எனக்கு வந்த முதல் பின்னுட்டம் நினைவிருக்கின்றது..நமது பட்டாஜி எழுதியது..

    பின்னர்தான் தெரிந்து கொண்டேன் எழுதினால் மட்டும்போதாது..மற்ற இடங்களுக்கு சென்று வாக்கு,கருத்துக்கள் இடவேண்டும் அப்போதுதான் அவர்களும் எனது பதிவுகளை படிப்பார்கள் என்று...

     தொடக்கத்தில் கொஞ்சம் முயற்சி செய்து பின் அதையும் கைவிட்டேன்..என் மனநிலை தான் காரணம்..அடுத்த வந்த காலத்தில்  மாதங்களுக்கு ஒன்று இரண்டு அல்லது நான்கு பதிவுகள் வரை எழுதினேன்..

     வாக்குகள்  அதிகம் பெறுவதில் சுத்தமாக எதிர்பார்ப்பு இல்லை..பல நாட்கள் கழித்தே  இன்டலி போன்ற தளங்களில் இணைந்தேன்..இன்னும் எனது பல பதிவுகள் இணைக்காமலேயே இருகின்றன..

      இந்தநிலையில்  தொடர்ந்து பதிவுகள் எழுத காரணம் சுஜாதா சொன்ன ஒரு  விசயம் ஒருவரால் வருஷத்தின் 365 நாள்களும் மொக்கையாக எழுத முடியாதுஎன்பதே . மேலும் மற்ற பதிவர்களை படித்ததில் இருந்து நான் கொஞ்சம் சரியாகதான் எழுதுகிறேன் என்பதை தெரிந்து இருந்தேன்..

     வாக்குகள் பின்னுட்டங்கள் மீது எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் மற்றவர்கள் நான் எழுதுவதை படிக்கவேண்டும் என்ற எண்ணம நிறைய இருந்தது..அதே நேரத்தில் நான் நன்றாக எழுதினால் கண்டிப்பாக படிப்பார்கள் என்பதில் தெளிவாக இருந்தேன்... ...காரணம் சுஜாதா சொல்லுவார் எனக்கு இருக்கும் புகழ் பெயர் இது எல்லாம் எனக்கு இல்லை நான் எழுதும் எழுத்துக்கு..படிப்பவர்களுக்கு என் எழுத்துதான் பிடித்து இருக்கின்றதே தவிர நான் இல்லைஇதே போல என் எழுத்து நன்றாக இருந்தால் எப்படியும் படிப்பவர்கள் படிப்பார்கள்..இதை இன்று வரை பின்பற்றுகிறேன்

     அதோடு இல்லாமல் ஐன்ஸ்டீன்  "உங்களுக்கு ஒரு விசயம நன்றாக புரிந்து இருக்கின்றது என்றால் அதை உங்களது பாட்டியிடம் விளக்கி அதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டால்  அந்த விசயத்தை நீங்கள் புரிந்து இருப்பதாக எடுத்துகொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார் எதிர்காலத்தில் என் பேரனோ பேத்தியோ என்னைபோலவே ஐன்ஸ்டீன் விரும்பியாக இருந்துவிட்டால் நான் எழுதும் அறிவியல் பதிவுகள் எல்லாம் வரப்போகும் மனைவிக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்...அவள் சிரமப்படாமல் புரிந்து கொள்வாள்... அல்லது இதோ உன் தாத்தா மெனக்கட்டு இதை எழுதி இருக்கார் படித்து தெரிந்துகொள் என்று சொல்லி தப்பிக்கலாம்.. மேலே சொன்ன காரணங்களுக்காகவது நான் எழுதியாக வேண்டும்...


     எழுதுவதால் வாசிக்கும் பழக்கம் குறைந்து இருக்கின்றது...ஆனாலும்.என்னால் சுஜாதாவின் தாரக மந்திரமான தினமும் ஒரு பக்கம் கண்டிப்பாக எதையாது படிக்கவேண்டும் என்பதை ஒருநாளும் மீற முடியாது...

பி(ப)டித்தவை

   வலைப்பூக்களில் படிக்க  விசயங்கள் இருக்கின்றன. நான் தொடரும் நபர்களில் அறிவியல் விசயங்களை நண்பர் சமுத்ரா அழகாக எழுதுகின்றார்.இவரின் கவிதையும் வித்தியாசமானவை...பட்டாஜி விசயங்களை நாசூக்காக புரிய வைப்பது பிடிக்கும்,பிரியமுடன் ரமேஷ் எழுதும் சிறுகதைகள் படிக்க பிடிக்கும்,கவிதைகளில் வெரும்பயன் எழுதுவது பிடிக்கும், அடுத்து உருகி உருகி காதல் கவிதைகள் எழுதும் கௌசல்யா அக்கா,கவிநா போன்றவர்களின் கவிதைகள் பிடிக்கும்.

     நான்கு சுவற்றுக்குள்  புத்தகம் மட்டும் படிக்கும் பழக்கமதான் என்னுடையது, வலைப்பூவின் மூலம் நிறையா உறவுகள் கிடைத்து இருக்கிறார்கள்..அருமையான அக்கா ஆனந்தி.  நிறையா அறிவுரைகள் கொடுப்பார்கள்,இவர் எழுதும் யதார்த்த கவிதை பிடிக்கும்.அடுத்து சௌந்தர் நல்ல நண்பன்...இன்னும்பலபேர்...நீளும் என்பதால் போதும்...

   என் எழுத்து என்றால்,....இலக்கியத்துக்கும் எனக்கும் தூரம் அதிகம்,முயற்சி செய்தும் வரமாட்டேன் என்கிறது..அதனால் சொல்லவருவதை மற்றவர்கள எளிதாக புரிந்து கொள்ள சாதாரண எழுத்தே போதுமானது என்றாகிவிட்டது...,கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கற்ப்பனை சேர்த்து கதையாக எழுதுவதால்  கட்டுரைகளை படிப்பதைவிட கொஞ்சம்  படிக்கிறார்கள்..

நன்றிகள்

    உலவு தலத்தில் இருந்து என்னை செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பதிவரக தேர்ந்து எடுத்து இரண்டு அருமையான புத்தகங்களை பரிசளித்தார்கள்..என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த ப.ராமசாமி, ரமேஷ் அவர்களுக்கும் என் நன்றிகள்

    எதிர்பார்ப்பு என்றால் இன்னும் உருப்படியாக நிறைய எழுத வேண்டும்..நல்ல விசயங்களை மற்றவர்கள் விரும்பி படிக்கும்படி கொடுக்கவேண்டும் என்பதுதான் ..அதைத்தான்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்..

     இதுவரை எழுதியதில் பிடித்தது என்றால் இந்த பதிவுதான் பல நாட்களாக சொல்ல நினைத்த விசயங்களை ஒரே  இடத்தில சொல்லி விட்டேன்.இதுவரை யாரும் தொடர்பதிவுக்கு அழைத்தது இல்லை..இது என் முதல் தொடர்பதிவு..

     என் வலைப்பூவுக்கு வந்து படித்துவிட்டு ஏதாவது கருத்துகள் சொன்னால் உடனே அதை ஏற்றிருக்கிறேன் ..வாசிப்பவ்ர்களிடம் வேறேதும் எதிர்பார்ப்புகள் இல்லையென்பதால் நான் இன்னும் நன்றாக எழுத நல்ல கருத்துகள் இருந்தால் உதவியாக இருக்கும்.

     அதோடு இதுவரை பலபேர் நான் எழுத மிக உதவியிருக்கிறார்கள் அவர்களுக்கும் என் நன்றிகள். என்னால் முடிந்தவரை நல்ல விசயங்களை இனி வரும் காலங்களில் எழுதுகிறேன்.

  வலையுலகத்தில் சில விதிகள் இருக்கின்றதாம்...ஒரு தொடர்பதிவு எழுதினால் சிலரை எழுத அழைக்கவேண்டும் எனபதுதான் அது..நானும் சிலரை அழைக்கிறேன்..அதோடு இதேமாதிரி யாருவேண்டுமானாலும் கடந்த கால நினைவுகளை எழுதலாம்..யாரும் அழைக்க வேண்டும் என்றில்லை...எழுதுங்கள்.

சமுத்ரா
டெரர் பாண்டியன் 
ஆனந்தி அக்கா
லட்சுமி அம்மா
சசிகுமார்
பிரபாகரன்

தமிழ் மூளை

((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))




   அந்த பெண் உள்ளே நுழையும்போது வைத்தியும் புனியும்  படித்துக்கொண்டு இருந்தார்கள்.அவள் வந்து அமைதியாக எதிரில் நின்ற பிறகுதான் கவனித்தார்கள்.. பேசத்தொடங்கினாள்

"உங்களின் உதவி வேண்டும்?"

"எதுக்கு என்ன பிரச்சினைக்கு?"என்றார்

    புனியும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பெண் சொல்வதை கேட்க ஆர்வமானாள்..

    "எனக்கு வர வர மொழியை படிக்க எழுதுவதில் சிரமம் இருக்கின்றது...என்ன எழுத்து இருக்கின்றது என்பதில் இருந்து படித்தவற்றை புரிந்துகொள்வது வரை  பிரச்சினை...இதனால் எதையும் கற்றுகொள்ள முடியவில்லை...பகிரமுடியவில்லை..இந்த பிரச்சினை முன்னர் இருந்தே எனக்குள் இருந்து இருக்கின்றது வீரியம் இப்போதுதான் அதிகமாக இருக்கு...அதான் உங்களிடம் வந்தேன் ஏதாவது செய்து சரிபடுத்துங்கள்"

"உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?"கேட்டார்

     "தமிழ் மட்டும் நன்றாக தெரியும் மற்ற மொழிகள் சொல்லி கொள்ளும்படி இல்லை"

"நீங்கள் படிக்க முனைவது தமிழ சார்ந்தவை மட்டும்தானே?"

"ஆமாம்"என்றாள்

     "சரி பிரச்சினை இல்லை சரிசெய்து விடலாம்.. சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்..ஆனால் அதுக்கு பிறகு நீங்கள் தமிழை சரியான முறையில் பேசலாம் எழுதலாம்..மற்ற மொழிகள் பற்றி உறுதியாக சொல்ல முடியாது இதற்கு சம்மதம் என்றால் ஒருவாரம் கழித்து வாருங்கள்"

    "சம்மதம்தான் தமிழ் மட்டும்போதும்" மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்

"நீங்கள் எதுக்குமே மறுப்பு தெரிவிக்க மாட்டிங்களா டாக்டர்?" கேட்டாள் புனி

    "எதுக்கு தெரிவிக்கணும் எல்லாமே அறிவியல் சார்ந்த மருத்துவத்தில் சாத்தியமாக இருக்கும் போது"

    "சரி இதை எப்படி செய்ய போகின்றிர்கள்...அதுவும் அறுவை சிகிச்சையின் மூலம நல்லா தமிழ் பேசமுடியுமா என்ன?"


"தமிழ் மட்டுமில்லை எந்த மொழி வேண்டுமானாலும் பேச செய்யலாம்"

    "இப்ப தமிழ் நாட்டுல தமிழ் இருக்கிற நிலைமைக்கு உங்களின் இந்த முறை ரெம்ப பயனுள்ளதாக இருக்கும்" என்றாள் சிரித்துக்கொண்டே

    "இந்த ஒருவாரத்தில் தமிழில் உள்ள வார்த்தைகள், இலக்கண முறை கொண்ட எல்லா தகவலையும் சேகரித்து எனக்கு கொடு முக்கியமாக பழைய தமிழாக இருந்தால் நல்லா இருக்கும்"என்றார்

      "முதலில் என்ன செய்ய போகின்றீர்கள் என்பதை சொல்லுங்கள் எனக்கும் ஆர்வம் அதிகம்"கேட்டாள்

   மொழிகளை பேச புரிந்து கொள்ள நமக்கு உதவுவது மூளையில் உள்ள left mid temporal lobe தான், இதற்கு அடுத்த படியாக உதவுவது frontal and parietal cortex இதில் left mid temporal lobe ல் ஏதாவது பிரச்சினை என்றால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வரும்... நாம் செய்ய போவது தமிழின் எல்லா வார்த்தைகளையும் அந்த பெண்ணின் மூளை புரிந்து கொள்ள ஏதுவாக  தமிழ் வார்த்தைகள் அடங்கிய ஒரு சிறிய chip ஐ left mid temporal lobe ல் பொருத்தி அதை மூளையோடு சரியாக சேர்ந்து இயங்கும்படி செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது...அதோடு பல புதிய வார்த்தைகளையும் அந்த பெண் நமது சிப ன் மூலம் தெரிந்திருப்பாள்..நல்ல தமிழ் பேசுவாள் எழுதுவாள்...

    "அப்படின்னா தமிழ் நாட்டில் தமிழை வளர்க்க நவீன முறை இதுவகாத்தான் இருக்கும் "

"முயற்சி செய்வோம்"என்றார்

    புனி தேடிபிடித்த  தமிழ் வார்த்தைகளை மூளையில் பொருத்துவதறக்கான சிப் ல் ஏற்றி தயார் செய்து இருந்தாள்...வைத்தி அறுவைசிகிச்சை சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று இருந்தார்....

   அந்த பெண் வந்தாள் ...அறுவை சிகிச்சையின் போது அந்த சிப்போடு பொருத்த வேண்டிய மூளையின் சரியான நீயுரான்ளை மற்றும் நரம்புகளை  இணைத்து சிப்பில் இருந்து தகவல் சரியாக கடத்தபடுகின்றதா எனபதை ஒருமுறை சோதித்து பார்த்துவிட்டு  முடித்தார் வைத்தி.

    முழித்தபிறகு அவளது கையில் ஒரு தமிழ் புத்தகம் கொடுத்து சில நிமிடங்கள்வரை வாசிக்க சொல்லிவிட்டு..


"என்ன புரிகின்றதா? முந்தைய நிலைக்கு இப்ப எப்படி இருக்கு?"கேட்டார்

"எளிமையாக இருக்கு" என்றாள் அந்த பெண்

     "உங்களுக்கு நான் பொருத்திய சிப்பில் அதிகம் பழமையான வார்த்தைகள்...நீங்கள் ஆதிகால தமிழையும் எளிதாக புரிந்து கொள்ளலாம்" என்றார்

நன்றி சொல்லிவிட்டு அவள் கிளம்பிசென்ற சிலமணி நேரத்தில்...

     "நாம் அந்த பெண்ணுக்கு பெரிய தவறை செய்துவிட்டோம்.இதை பற்றி நாம் முன்னமே கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்...அவள் பாவம்". என்றார் கவலையாக

"ஏன் டாக்டர் ஏதாவது சிகிச்சையில் தவறு நடந்து விட்டதா என்ன?"

    "இல்லை சிகிச்சை எல்லாம் சரிதான்...அவளுக்கு இப்போது இருப்பது நல்ல செயற்கையான தமிழ் அறிவு அதைவைத்து கொண்டு இப்போதைய தமிழ்நாட்டு சூழலில்  எப்படி சமாளிக்க போகிறாள்...இப்போ இருக்கிற தமிழின் நிலமைதான் உனக்கு தெரியுமே...இதை நாம் முதலிலேயே யோசிக்க்காம்ல் இந்த தவறை செய்து விட்டோமே என்ற கவலைதான் எனக்கு"



 


(இந்த பிரச்சினை யாருக்காவது இருந்தால் வைத்தியின் முகவரி கிடைக்கும்..கொடுக்கிறேன் சரிசெய்து கொள்ளுங்கள்..புனியின் முகவரி கிடையாது))))