அலையாடும் மனது

சொந்த ஊரில் ஏகப்பட்டப் பிரச்சினைகளின் உந்துதலில் எப்படியாவது நாலு காசு சம்பாரிச்சு நாமும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நினைப்போடு ஏதாவதொரு வழி கிடைக்காதா என்று தேடிய காலம். இது என் வயதுடைய அனைவருக்குமான பிரச்சினையாக இருந்தாலும், என்னைப்பொறுத்தவரையில் எல்லோருக்கும் ஒரு வழி கிடைத்து முன்னேறி போய்விட்டது போலவும், நான் மட்டும் இந்த நிலையிலியே இருப்பதாக உணர்ந்தேன். படித்த படிப்பிக்கேற்ற வேலை கிடைக்கும் அல்லது மனதுக்குப் பிடித்த வேலைகளில் சேரவேண்டும் என்ற நம்பிக்கையெல்லாம் மனதைவிட்டுப் போய் பல வருடங்கள் ஆகியிருந்தது. ஏதாவதொரு வேலைகிடைத்து சம்பளம் கிடைத்தால் ஊரைவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் மனது முழுதும் நிறைந்திருந்தது. அதற்கு யாரையெல்லாம் கேட்கவேண்டுமோ, யாரிடம் கேட்டாலும் உதவி கிடைக்காதோ எல்லோரிடமும் விசாரித்து வைத்திருந்தேன். எதாவது ஒரு வழி இல்லாவிட்டாலும், ஒரு சிறிய இடுக்காவது கிடைக்காதா? கிடைத்தால் எப்படியாவது உள்ளே நுழைந்து செல்லலாம் என்றெல்லாம் யோசனைகள்.


பக்கத்து ஊரில் ஒருவர் ஆஸ்திரேலியா போக உதவி செய்வதாகவும், ஏற்கனவே போனவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதால் முழுமையாக நம்பலாம், அதோடு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர் என்பதால் ஏமாற்றினாலும் நாளைக்கு ஏறிப்போய்க் கேள்வி கேட்கமுடியும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திப்பதென்ற முடிவில் இருந்தேன். வீட்டில் எதுவும் இதைப்பற்றி சொல்லவில்லை. மூன்று மாத விசாவில் சென்று அங்குபோய் சில தில்லுமுல்லுகளைச் செய்தால் ஐந்து வருடங்கள் அங்கேயே வேலை செய்துகொள்ளலாம். ஒரே பிரச்சினை இடையில் ஊருக்கு வந்தால் திரும்பிப் போக முடியாது. சுருக்கமாக ஐந்து வருட வனவாசம். என்ன நடந்தாலும், ஊரில் யார் இறந்தாலும், கல்யாணம், காடேத்து என எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும். கண்முன் பணமும் அது சார்ந்த வாழ்க்கை மட்டுமே இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படித்தான் போய் தனது சொந்த அம்மா இறந்ததுக்குக் கூட வரமுடியாமல் போனது. பணம் முக்கியமில்லை என்று நினைத்து வண்டியேறினால் வரமுடியாமல் இல்லை. வந்திருக்கலாம்தான் அம்மாவா?பணமா? என்ற எண்ணங்களில் அவருக்கு பணம்தான் முதலாவதாக இருந்திருக்க வேண்டும்.


முன்பணமாக ஐந்து லட்சம் கட்டவேண்டும் பயணச்சீட்டு மற்ற விசா செலவுகள் என்னுடையதுதான். அவர் வழிமுறைகளைச் சொல்லுவார், ஆஸ்திரேலியா வந்தவுடன் தங்க இடமும், மற்ற சட்டப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு, ஐந்து வருடங்கள் வேலை பார்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத்தான் அவ்வளவு பணம். இது சரியா? தவறா? என்ற பகுத்தறியும் எந்தவொரு வேலைகளிலும் மனது இறங்கவில்லை. எப்படியாவது ஐந்து லட்சம் தயார்செய்து அவரிடம் கொடுத்து கிளம்பிவிட வேண்டுமென்ற முழு முயற்சியில் இறங்கியிருந்தேன். இதுதான் என்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்தால் சந்தோஷமோ? பயமோ? சுத்தமாக இல்லை. எப்படியாவது போயாகவேண்டும் என்ற எண்ணம் எல்லாவற்றையும் மூடி மறைத்திருந்தது. வீட்டில் தெரியப்படுத்தியபோது முதலில் எதிர்ப்பைக் காட்டினாலும் எவ்வளவு நாளைக்குத்தான் வீட்டுக்குள் யாரிடமும் பேசாமல் குனிந்த தலை நிமிராமல் நடமாடுவான் இவன் என்று நினைத்தவர்கள் சரியென்றார்கள். சாப்பிடும் நேரம்தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இருப்பதில்லை. இருந்தால் தேவையில்லாத சண்டைகள் வாக்குவாதங்கள்தான் வந்து நிற்கும். அம்மா மட்டும்தான் சரியாகப் பேசுவதுபோல இருந்தாலும் முடிவாக அப்பா சொல்லும் அதே தண்டச்சோறு , உருப்பிடாதவன் என்ற பதத்தில்தான் பேசும் தோணி இருக்கும். எல்லாம் பழகி மரத்துப்போனதால் வீட்டுக்குள் கூட தலை குனிந்துதான் நடமாடும் நிலை. கண்களில் கூட அந்தக் கேள்விகள் இருக்குமென்பதால் கண்களைப் பார்பதைத் தவிர்த்திருந்தேன். ஊரில் நல்ல பையன், நன்றாகப் படிச்சவன், ஒழுக்கமானவன் என வாங்கிய எந்தப் பெயரும் நிலைத்திருக்கவில்லை. பணம் சம்பாதிக்கவில்லையென்றால் மனிதனே இல்லையென்ற மனநிலையில், நான் நல்லவனாக இருந்தால் என்ன ஒழுக்கமானவனாக இருந்தால் என்ன?.


ஆஸ்திரேலியா வந்து ஆறுமாதங்களுக்கு மேலாகிவிட்டது. முதல்வாரத்தில் மனதின் விசித்திரத்தை உணர்ந்தேன். என்னதான் தூற்றினாலும் அம்மாவை மனம் தேடியது, அப்பா எப்படி இருப்பார்? நம்மளைப் பற்றி எதாவது யோசித்திருப்பாரா? இல்லை பொய்த்தொலைந்தான் சனியன் என்று நிம்மதியாக இருந்திருப்பாரா? என்ற பலவித எண்ணங்களில் முழுவதும் நிரம்பிக்கிடந்தது. இருப்பது என்னமோ வெளிநாடு என்றாலும் உடல் இங்கும், உயிரும், மனமும் ஊரிலேயே விட்டுவந்ததாக உணர்வு. அடுத்துவந்த நாட்களில் வேலை தேடும் படலம், கிடைத்தவுடன் அதில் கொஞ்சம் ஒன்றிப்போய் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற லட்சியத்தின் முனைப்பில் எல்லமே கொஞ்சம் சரியாகப் போயிருந்தது. ஆனாலும் வேலைமுடிந்து சாயங்கால வேளைகள் மிகக் கொடுரமானவையாக இருந்தன. அசதியில் அலாதியாக அமர்ந்தாலும் மனது ஒளியை விட வேகமாகப் பயணித்து ஊருக்கே சென்றிருக்கும். உடன் இருந்தவர்கள் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் போகப்போக பழகிவிடும் என்ற அறிவுரையைச் சொன்னார்கள். புதிய நண்பர்கள், புதிய நாடு, புதிய வேலை என எல்லாமே நல்லவிதமாக அமைந்திருந்தது எனக்கே ஆச்சர்யம் கலந்த பொய்யாகத்தான் தெரிந்தது.


இரண்டு கிலோமீட்டர் நடந்தால் கடற்கரை. வாரத்தில் ஐந்து நாட்கள் எப்படியும் போய்விடுவேன். கடலின் முன் நின்றால் விழிகளில் பார்வை விரியும் தூரத்துக்கு மனதும் விரிந்து இலகுவாக மாறுவது எனக்குப்பிடித்திருந்தது. எவ்வளவு சிக்கலான விசயங்களில் மனது சிக்கியிருந்தாலும் கடல் மனதை மென்மைப்படுத்தி சிக்கலை நீக்கி தெளிவான இலகுவான ஒரு மனநிலையைக் கொடுத்துவிடும். ஒரு போதி மரம், கடவுளின் கருவறை, தாய்மடி, மனதைப் பக்குவப்படுத்தும் இயற்கையான தொழிற்கூடம் என எல்லாமும் அந்தக் கடல்தான். அங்கிருக்கும் மனிதர்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் மனம் சிதறினாலும் மீண்டும் அதே தூரமாக விரியும் கடலோடு மனம் லயித்துவிடும். கடல் என்னோடு பேசுமா? இல்லை. மனதோடு நான் பேச ஒரு பாலம்தான் அந்தக் கடல். ஒரு சாட்சி, ஒரு தூதுவர், எண்ணங்களை ஒழுங்கு படுத்துபவர் என வைத்துக்கொள்ளலாம். வெறுமனே உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும், மற்றவற்றை கடல் செய்யத்தொடங்கும். இந்தச் செயல்கள் அனைத்தும் ஒருவகையான தியானமாகத் தெரிந்தது. எனக்கும் மனதுக்கும் இடையேயுள்ள தூரம் குறைகின்றபோது ஒருவித இன்பக் கிளர்ச்சியயை உணரமுடிந்தது. இதுவரை அனுபவித்திராத ஒன்று. எப்போதும் ஒரு பாராங்கல்லைச் சுமந்த மனது நுரையாக அலைகளில் மிதந்து உலகத்தைப் பார்க்கிறது. சிரிக்கிறது, பேசுகிறது, அதிகமாக வாழ்க்கையைக் கற்றுத்தருகிறது. கடற்கரை மணல்களை விட எண்ணங்கள் மனதில் இருந்தாலும் எல்லாமே சரியாக, சீராக அடிக்கவைக்கப்பட்டது போல ஒரு பிம்பம். நான் சொல்லுவதை மனதும், மனம் சொல்வதை நானும் கேட்டிருந்தோம். சொல்வது கட்டளை, செய்வது வேலையென்றால் நாங்கள் சொல்லிக்கொள்வதே இல்லை என வைத்துக்கொள்ளுங்கள். உணர்வுப்பூர்வமான பாசை, அதில் நான் மற்றும் மனது என்ற பாகுபாடில்லை. எனக்குள் சுருங்கியிருக்கும் மனது கடலில் கலந்து விரிந்து என்னுடன் பேசுகிறது. சந்தோஷங்கள்,துக்கங்கள் என எல்லாமே எண்ணங்கள் வழியாக பரிமாறப்படும். இடையூறுகள் வந்தாலும் அடுத்த சில நிமிடங்கள் இணைந்துவிடுவோம். எனக்கான துணை, காதலி, உலகம் என எல்லாமே அதுதான். எது? கடலா? கடலில் விரியும் மனமா? இதில் எனக்கும் குழப்பம் நிலவியது. கடல் எனக்கேன் இவ்வளவு பிடித்திருக்கிறது. மனதை பரவ அனுமதிப்பதாலா? விடைகிடைக்க இரண்டையும் நான் பிரித்துப் பார்க்க வேண்டும் அது என்னால் முடியாத காரியம். அதில் விருப்பமும் இல்லை. மனம் கடலில் விரிகிறது அல்லது மனதுக்குள் கடல் சுருங்குகிறது எப்படியாகிலும் வைத்துக் கொள்ளுங்கள்.


பழுதுபட்ட இயந்திரத்தை ஒருவனிடம் சரிசெய்ய கொடுத்தால் என்ன செய்வானோ அதையேதான் கடலும் எனக்குச் செய்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பழுதே உனக்கில்லை நீயே மருத்துவர், நீயே நோயாளி என்ற பதிலோடு எண்ணில் ஐக்கியமாகியது. அதன்பிறகு மனதுக்கும் கடலுக்கும் இடையே ஒரு இடைவெளி இல்லாமல் போனது. சீற்றமான அலைகள் அடித்தாலும் நாங்கள் சந்திக்கின்றவேளைகளில் ஆழ்கடல் அமைதியே எங்களுக்குள் நிலவியது. தகவல் பரிமாற்றம் முற்றிலும் குறைந்து நான்தான் அது அதுதான் நான் என்றாகிப்போனது. நான் எதாவது பேசுவதாக இருந்தால் கண்ணாடி முன் நின்று எனக்கு நானே பேசிக்கொள்வதுபோல்தான். அதனால் நிழலாக ஒரு இடம் பார்த்து நேரம்போவது தெரியாமல் அமர்ந்துவிட்டு வருவேன். மற்ற எண்ணங்களும், நினைவுகளும் மனம் முழுதும் நிரம்பியிருந்தாலும் முடிவில் கடலுக்கும் எனக்குமான நினைவுகளென ஒன்றுமே இருக்காது.


வாரத்தில் குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு தொலைபேசியில் பேசுவேன். இந்த நாள் இந்நேரம் எனது அழைப்புக்கு அம்மா காத்துக்கொண்டிருப்பார். காரணம், நேரம் மாறுதலால் இருவருக்கும் சாதகமான ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்திருந்தோம். தேர்ந்தெடுத்தோம் என்பதைவிட அதுவே ஒரு வரமாகப் பேசியதில் அமைந்திருந்தது. ஆறுமாதத்தில் இரண்டுக்கு மேற்பட்ட முறைகள் அப்பாவிடம் பேசினேன். வேலை சம்பந்தமாக மேலோட்டமாக சன்னமான குரலில் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார். மனதில் குற்ற உணர்ச்சி இருக்குமா? தெரியாது. அவர் செய்தது தவறொன்றுமில்லைதான். பெற்ற மகனைக் கண்டிக்காத தகப்பன்தான் நல்லவன் என்றால் எந்த மகனும் முன்னேறியிருக்க முடியாது. அவரது மனதின் வெறுப்பை தெரியப்படுத்த சில வார்த்தைகளை அப்போதைக்குப் பிரயோகப்படுத்தி என்னைக் காயப்படுத்தியிருந்தாலும் எனது அப்பா அவர். அவரைப்பற்றி மனதளவில் நல்ல புரிதல்தான் எப்போதும். என்னைப்பொறுத்தவரை அந்தச் சூழ்நிலைகளில் இருந்து நான் விடுபடவேண்டும் என்ற எண்ணமே என்னை இங்குகொண்டு நிறுத்தியிருக்கிறது. ஊரில் நடக்கும் விசயங்களைப் பற்றி அம்மா பேசுவாள். சொந்தங்களின் நல்லது கெட்டது, என்னை அவ்வாறு நடத்தியதுக்கு மன வருத்தம் ஏதும் இருக்கிறதா? கேட்டாள். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லி வைத்தேன். அந்த கசப்பான அனுபவங்களை முற்றிலுமாக மறக்க நினைத்ததே அதற்கு காரணம்.


எப்போதும் பேசும் வழக்கமான நேரமில்லாத ஒரு வேளையில் அம்மாவின் அழைப்பு வந்திருந்தது. வேலையில் இருந்ததால் எடுக்கமுடியாமல், மாலையில் வீட்டுக்கு வந்து மீண்டும் அழைத்தேன். இயல்பாகவே பேசினார். வழக்கமான பேச்சுக்கள் முடிந்ததும் முன்பு அழைத்ததுக்கான காரணம் கேட்டேன். ஊரில் ஜெயா அத்தை மிகவும் முடியாமல் இருப்பதாகச் சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டதும் உனக்குத்தான் சொல்லவேண்டுமென்ற எண்ணத்தில் என்னையறிமால் அழைத்துவிட்டேன். எதோ வயித்துல கேன்சர் வந்திருக்காம் இனிமேல் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து பயனில்லை என்று வீட்டுக்குக் கொண்டுபோகச் சொல்லிவிட்ட்டார்கள். அதோடு அதிகபட்சமாக நான்கு நாள் உயிரோடு இருக்கலாம், காப்பற்ற வழியில்லை எனச் சொல்லிவிட்டதாக அம்மா சொல்லி முடித்தாள்.


அம்மா தன்னையறியாமல் எனக்கு தொலைபேசியில் அழைத்ததுக்கு காரணம் ஜெயா அத்தை. இத்தனைக்கும் சொந்தம்கூட கிடையாது. வேறு ஜாதி. ஒரே தெருவில் இரண்டு வீடு தள்ளி எதிரே இருக்கும் வீட்டில்தான் அத்தையும், அந்த மாமாவும் வசித்தார்கள். முறைப்படி அவரை மாமா என்றுதான் அழைத்திருக்க வேண்டும். ஆனால் இருவருக்குமான வயது வித்தியசம் பதினாறு வருடமாக இருந்ததால் சிறுபிள்ளை முதலே அவரை தாத்தா என்றே அழைத்தோம். அது அப்படியே பெரியவனாகியும் தொடர்ந்தது. அவர்களும் இந்த உறவு முறைக்கு ஏதும் சொல்லவில்லை. அவர்களுக்கு இதுவொரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை, காரணம் இதைவிட பெரிய பிரச்சினைகள் அவர்களிடத்தில் இருந்தது. முதலாவது வயது வித்தியாசம், அதனால் ஏற்பட்ட குழந்தையின்மை. தாத்தாவுக்கு காசநோய் பீடி குடித்ததினால் வந்திருந்தது. நோய்க்கு அரசு மருத்துவமனையில் கொடுத்திருந்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தார். ஆனாலும் பீடியை விட்டபாடில்லை. நானும் சொல்லிப் பார்த்திருக்கிறேன். விடமுடியாது, இந்தப்பழக்கம் தலையோடுதான் போகுமென்பார். தலையோடு போகுமென்றால் என்ன அர்த்தமென்று கேட்டதுக்கு, ஒருநாள் நான் மண்டையைக் கீழே போடும்போது போகும், அதாவது சாகும்வரை விடமுடியாது என்பதுதான் அவரது பதில். அதேமாதிரி அவரின் தலையோடுதான் போனது. சாப்பிடும் போது மூக்கில் ஏறி தொடர் இருமல் வந்த நிலையில் தண்ணி குடிக்கப்போய் மூச்சி இழுத்து இழுத்துவிட்டு அத்தையின் கண்முன்னே பத்தே நிமிசத்தில் இறந்துவிட்டார். கண் நிலைகுத்தி உட்கார்ந்த இடத்தில் அப்படியே சரிந்து விழுந்து இறந்ததாக அத்தை வந்து போனவர்களிடம் கண்ணீர் மல்கச் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாக் காரியங்களும் முடிந்து சாதாரணமான வாழ்வுக்குத் திரும்பும் போது அத்தையின் உடல் இன்னும் மெலிந்திருந்தது. ஏற்கனவே எலும்பில் கண்டிப்பாக சதை இருக்கவேண்டும் என்ற படைப்பின் கட்டாய விதிக்காகக் கொஞ்சமாக சதை எலும்பில் ஒட்டியிருந்தது. இப்போது அதுவும் கரைந்து படைப்பின் விதிக்கு எதிராகத் திரும்பிக்கொண்டிருந்தது.


காரணம் கேட்டால் ஒரு ஆளுக்கு சமைத்து என்ன சாப்பிட? அதனால் ஒருவேளைக்கு சமைக்கும் உணவையே மூன்று வேளைக்கும் கண்டும் காணாமலும் சாப்பிடுவதாகச் சொல்லுவாள். அம்மா என்றாவது சமைத்ததைக் கொண்டுபோய்க் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். தாத்தா பிரிவினால் ஏற்பட்ட கவலையில் உடம்பு இழைத்து விட்டதா? என்று நான் கேட்டதுக்கு, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை அவருக்கு நேர்ந்தது நல்ல சாவு. இல்லையென்றால் அவர் குடித்த பீடிக்கும், இருக்கின்ற நோய்க்கும் எப்படியெல்லாம் கடைசிக்காலத்தில் என்னைக் கஷ்ட்டப்படுத்தப் போகிறாரோ என்ற கவலை எனக்குள் இருக்கவே செய்தது. என் கஷ்ட்டம் ஒருபக்கம் இருந்தாலும் அவர் நோயினால் சிக்கி சீரழிந்து சாவதை அவரே தாங்கமாட்டார். கடவுளாகப் பார்த்து நல்ல சாவைக்கொடுத்திருக்கிறார். இனிமேல் நான் மட்டும் சத்தாகச் சாப்பிட்டு என்ன செய்யப்போகிறேன். அதே மாதிரி எனக்கொரு நல்ல சாவை கடவுள் எனக்கு கொடுக்காமலா போயிடுவான் என்பாள் சிரித்தபடியே.


என்னைத் தூக்கி வளர்த்தவள். குழந்தையில்லை என்பதால் என்னைக் கடனாக கேட்டாளாம். கொடுங்கள் வளர்த்து கொடுக்கிறேன் என்று அம்மாவிடம் கேட்டதற்கு, "இப்போ என்ன எதிரேதான் இருக்கான் நீங்களே வளர்த்துக்கோங்க" என்று சமாளிப்பாகச் சொல்லி கொடுக்க முடியாது என்பதை அம்மா அப்படிச் சொல்லியதாக அத்தை இந்நாள் வரை சொல்லிக் காட்டுவாள். சொந்த பிள்ளை போலதான் பாவித்தாள். தாத்தாவுக்கு அந்தளவுக்கு என்மேல் பாசமும், விருப்பமில்லையென்றாலும் அத்தை என்மேல் உயிராகத்தான் இருந்தாள். வேலையில்லாத காலத்தில் வீட்டில் நடந்த கசப்பான அனுபவங்களுக்கு ஒரே ஆறுதல் அத்தையின் வார்த்தைகள்தான். அவளால் சமையல்கட்டில் எனக்காக ருசியாக எதாவது செய்துகொடுப்பதைத் தவிர ஒன்றும் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரிந்திருந்தும் அவளின் அந்த ஆறுதல் வார்த்தைகளால் கொஞ்சம் நிம்மதி கிடைத்திருந்தது. வெளிநாடு போக காசு வேண்டுமென சொன்னபோது கட்டுக்குத்தகைக்கு விட்ட நிலங்களை விற்றுத் தருகிறேன் என்று சொன்னாள். அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் அவளின் பாசமிகு வார்த்தை ஒருவித நம்பிக்கையைக் கொடுத்தது. காரணம் அந்தக் கிராமத்தில் அவளுடைய இடத்தைக் குறுகிய காலத்தில் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கமாட்டார்கள். அதோடு அத்தையின் சொந்தங்களும் பிரச்சினைக்கு வருவார்கள். கட்டுக்குத்தகையில் வரும் பணம்தான் அத்தைக்கு வாழ்வாதாரம். என் வீட்டில் பிரச்சினை முற்றியிருந்த காலத்தில் அத்தை வீட்டில்தான் சாப்பாடு. சாப்பிட்டு வீட்டுக்கு போனபிறகு அம்மா வந்து நல்லா சாப்பிட்டானா? எனக் கேட்டுப்போனதாக மறுநாள் அத்தை சொல்லியிருக்கிறாள்.


அடுத்துவந்த இரண்டுநாள்கள் எதிலும் நாட்டமில்லமல் எண்ணங்கள் சோகமாக அத்தையின் நினைவுகளாகவே இருந்தன. வேலையில் தாமதமானதால் கடற்கரைக்கும் செல்லமுடியவில்லை. அம்மாவுக்கு அழைத்து கேட்டதில் இன்னும் அப்படியேதான் படுத்த படுக்கையாக இருக்கிறாள், ஒரு சொட்டு தண்ணி கூட தொண்டைக்கு கீழ் போகவில்லை. வேறு என்ன செய்யவென்று தெரியாமல் படுக்க வைத்திருக்கோம் என்றாள். அதன்பிறகு எதுவும் வழக்கமாகப் பேசும் விசயங்களைப் பற்றி பேசவில்லை. ஒருவரின் மரணத்துக்கு காத்திருப்பது எவ்வளவு வேதனையான விஷயம். அவருக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் மனதளவில் என்னவெல்லாம் நடக்குமென்பதை என்னால் யோசித்துப்பார்க்க முடிந்தது. தாத்தாவை கூப்பிட்ட அதே கடவுள் அத்தைய மட்டும் ஏன் இப்படிப் படுத்துகிறார்? இத்தனைக்கும் ஒருபாவமும் செய்யாதவள். அதற்குமேலும் என்னால் அந்தவிஷயத்தைப் பற்றி சிந்தனை செய்ய முடியவில்லை.


மனதளவில் உள்ள தளர்ச்சி என் நடையிலும் இருந்தது. கடற்கரை மணலில் மெதுவாகக் கால் பதிய நடந்து எப்போதும் அமரும் இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தேன். இந்த துக்க சிந்தனைகளின் எண்ணங்களால் கடலும் நானும் கொஞ்சம் தூரத்தில் விலகி இருந்தோம். முதன்முதலாக ஆஸ்திரேலியா வந்தபோது என்ன மனநிலையில், கஷ்ட்டங்களோடு அங்கு வந்து அமர்ந்தேனோ அதைவிட அதிகமாக மனது வலித்துக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயுள்ள தூரத்தினால் கடல் இரு கைகளையும் நீட்டி அழைப்பதைப் போல உணர்ந்தேன். எண்ணங்கள் பரிமாறிக்கொண்டதில் கடல் என்னுள் கரையத் தொடங்கிய அதே வினாடி பார்வையில் அதன் முடிவை நோக்கினேன் தூரமாக ஒரு நேர்கோட்டில் முடிவதாக இருந்தது. பார்வை அதற்குமேல் போகாதென்பதால் நானும் அதற்குள் விரிந்தேன். கடல் என்னை ஏற்றுக்கொண்டது. நானும் கரைந்து காணாமல் அதனுள் போகத் தொடங்கினேன்.


அத்தையின் சொந்த வீட்டில் வைக்காமல் அண்ணன் வீட்டில் வைத்திருந்தார்கள். வீட்டின் வாசலில் சிலர் நின்றிருக்க யாரையும் கண்டுகொள்ளாமல் அத்தை எங்கே என கண்கள் தேட ஆரம்பித்தது. படிகள் ஏறும்போதும் கவனம் படிகளில் இல்லாமல் வீட்டுக்குள் கண்கள் தேடியது. ஆறுமாதத்தில் எல்லாம் எப்படி நடந்தேறியிருக்க முடியும். ஏற்கனவே அடிக்கடி வயிறுவலி என்று படுப்பதும் அப்போதைக்கு மோரும், வெந்தயமும் குடித்தால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு அடுத்த நாளில் தெளிவாக நடமாடும் அத்தை இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாள். அதிகபட்சமாக அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குச் சென்று வயிற்று வலிக்கென மாத்திரைகளை வாங்கி அதையும் சரியாகத் திங்காமல் ஜன்னல்களில் நிரப்பி வைத்திருப்பாள். அந்த மருத்தவர்கள் ஒருமுறை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு வர அறிவுறுத்தியும் அதனைக் கேட்காமல் துட்டுப் பிடுங்க எல்லா வழியையும் சொல்லுவார்கள் என்று விளையாட்டாய் சொன்ன அத்தை இன்று மரணப் படுக்கையில் நிலைகுத்திய பார்வையோடு படுத்திருக்கிறாள்.


கட்டிலில் போட்டால் சீக்கிரம் உயிர்போகாது என்பதால் தரையில் பாய் போட்டு படுக்க வைத்திருந்தார்கள்.கழுத்து வரை போர்வை மூடியிருக்க எலும்புகள் நிறைந்த ஒரு உடல் அங்கு இருப்பதாக மட்டுமே காண முடிந்தது. எலும்பில் இருந்த சதைகள் இல்லாமல் தோல் நேராக எலும்பைத் தொட்டிருக்க வேண்டும். தலைமாட்டில் இரண்டு பேர் எப்படி என்னை எதிர்கொள்வது எனத் தெரியாமல் உட்கார்ந்திருந்தனர். உடம்பில் கண்கள் மட்டுமே அசைவதாகத் தெரிந்தது. வாசலில் வரும்போதே வந்த ஒரு கெட்ட வாடை அத்தையின் உடம்பில் இருந்தே வந்திருக்க வேண்டும். அருகே நெருங்க இன்னும் அதிகமாக இருந்தது.


சாப்பிட்டு பல வாரங்கள் ஆகியிருந்தது. வெறுமனே நீர் ஆகாரம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் அதுவும் கடந்த மூன்று வாரங்களாக. நீர் குடித்தே மூன்று நாள்கள் ஆகிறது என்றார்கள். கண்ணில் கண்ணீர் இரண்டு பக்கமும் வடிந்த நிலையில் விழிகள் அசைவதை என்னால் பாக்க முடிந்தது. கண்ணீர் கூட தொண்டைக்குள் போகக்கூடாது என்பதால் அதை அவள் கண்களின் வழியாக வெளியேற்றியிருக்க வேண்டும். முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. காலுக்குப் பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் கவனித்த நான் அவளின் கண்களில் படும் படி செல்ல எத்தனித்த நேரத்தில் அருகில் இருந்த பாட்டி "இங்க பாருப்பா உன் அத்தை" என்று போர்வையை விலக்கினாள், தொண்டையில் இருந்து மார்புக்கு நடுவில் சிறு சிறு கட்டிகளாக வந்து அது வெடித்து நீர் கசிந்த நிலையில் இருந்தது. அது அப்படியே அடிவயிறு வரை இருக்க வேண்டும். அங்கிருந்த வாடைக்கு இப்போது வலுவான காரணம் தெரிந்தது. தன்மேல் இருந்த போர்வையை விளக்கியது கூட தெரியாமல் கண்களைச் சுழற்றிக்கொண்டிருந்தாள்.


தலைமாட்டில் அமர்ந்து பார்வை படும்படி தலையைக் கொண்டுசென்றேன். எங்கோ வெறித்துப்பார்த்த விழிகள் என் கண்களைப் பார்த்துவிட்டது. அப்படியே அசையாமல் நின்றது. கண்ணீரின் அளவு சற்றென்று அதிகரித்தது. முகபாவனையில் சிறிய மாற்றத்தை என்னால் கவனிக்க முடிந்தது. என்கண்களிலும் நீர் கோர்த்திருந்தது. இந்நேரம் பழைய அத்தையாக இருந்திருந்தால் கன்னத்தோடு நாடிவரை தடவி முத்தம் கொடுத்திருப்பாளே? அந்த அத்தை எங்கே? உன் கையை கட்டிப்போட்டது யார்? துறுதுறுவென நடமாடும் கால்களை முடக்கியது யார்? என்றும் சந்தோசமாக இருக்கும் மனதை இவ்வளவு வதைக்கும் அவனால் உன் மூச்சை ஏன் நிறுத்த முடியவில்லை? உனது இளகிய மனது இதையெல்லாம் எப்படித்தாங்குகிறது? இப்போதும் நீ என்னை சிறு பிள்ளையைப்போல கொஞ்ச முயல்கிறாயா? கைகளைத் தூக்க முடியவில்லையா? அதற்காக வருத்தப்படாதே இதோ அதன் ஏக்கம் உன் கண்களில் தெரிகிறதே. நான் கண்டுவிட்டேன், சந்தோசப்பட்டுவிட்டேன் உன் வரவேற்பு எனக்குப் பிடித்திருக்கிறது. நீ சந்தோசமாக இரு. உடல்தான் புண்களால் அழுகி நாற்றமெடுக்கிறதே தவிர நீ இன்னும் மனதளவில் அப்படியேதான் இருக்கிறாய் அத்தையே. இதோ உன் கண்களில் மனதை படிக்கிறேன் நான். நீ தாத்தாவுக்கு எது நடக்கக்கூடாது என்று நினைத்தாயோ அதைவிட பல மடங்கு ரணத்தை அனுபவிக்கிறாயே? எப்படி தாங்குகிறாய்? வலிக்கிறதா? அல்லது பழகிவிட்டதா? இந்தக் கண்ணீர் எதற்கு அத்தை? வலிக்காகவா? இல்லை எனக்காகவா? நான் வந்தது உனக்கு சந்தோசமா இல்லியா? உடலை விட்டு மனதை பிரித்துவிடு. வலிகளை உடலுக்கு மட்டும்கொடு. மனதை சந்தோசப்படுத்து. நான் வந்திருக்கிறேன். நிம்மதியாக இரு என் அத்தையே. உயிர் இருக்கும் வரைதான் இந்த வலிகளும் சந்தோசங்களும் . அப்படியிருக்க நீ வலிகளை மட்டுமே கிரகித்து ஏன் அழுகிறாய்?. இருக்கப்போகிற மீதி காலத்துக்கும் மனதைச் சந்தோசப்படுத்து. வெளியில் வந்து உன் உடலைப் பார். இதுதான் உன் கடைசியான உருவம். ஒருமுறை ஊரைச் சுற்றிவா. பிடித்தவற்றைப் போய் பார்த்து ரசித்துவிட்டு வா. உன்னை ஏன் இந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள். அந்த வீட்டுக்குப் போய்விட்டு வா. சந்தோசம் தாளாமல் உடலிடம் சொல் என்னை உன்னால் இதற்குமேல் காயப்படுத்த முடியாதென்று. நான் உணர்ந்துவிட்டேன். இதோ இன்றோ நாளையோ என் உடலை நெருப்பு எரிக்கும், அதுவரைதான் எனது சந்தோஷமும் துக்கமும். அதுவரை என் இஷ்டம்தான் என் மனதுக்கு. அதை சந்தோசமாக மட்டுமே வைத்திருப்பேன் என்று சொல்லிவிடு என் அத்தையே. அத்தோடு இறுதியான சந்தோசத்தை முழுதும் உனக்குள் அனுபவி. முடிந்தால் எனக்கும் அதை உணர்த்து. அதைவிட்டுவிட்டு இப்படி மனதையும் உடலுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு துவண்டு படுத்து இருக்கிறாயே?. உயிர் பிரியும்வரை உன் மனது உனக்கு அடிமைதானே? பயம் வேண்டாம் உயிர் போனாலும் கடைசியாக நீ சந்தோஷித்த நினைவுகளோடு உனது எண்ணங்களும், கனவுகளும் முடங்கட்டுமே.


நெற்றியில் கையை வைத்து தலைக்கு பின்பக்கம் வரை தடவிக்கொடுத்தேன். கருப்பும் வெள்ளை முடியும் சரியாக கலந்திருந்தது. இன்னும் என் முகத்திலிருந்து அவள் கண்களை எடுக்கவே இல்லை. எனக்கு ஏன் இந்த கஷ்டம்? இந்த உயிர் இன்னும் ஏன் பிரிய மாட்டேங்கிறது? என்ற கேள்விகளை அந்தப்பார்வைகளில் உணர்த்தினாள். அதான் நீ என்ன செய்யவேண்டுமென நான் சொல்லிவிட்டேனே? இன்னும் ஏன் தயங்குகிறாய்? சந்தோசமாக உன் உயிரை நீயே வழியனுப்பு. அதைவிடுத்து நீ இப்படி ஈனக்குரலில் முனங்க முனங்க இன்னும் ரணங்கள் அதிகமாகுமே தவிர குறையாது. வேண்டுமானால் நானும் உன்னுடன் சேர்ந்து வழியனுப்புகிறேன். இதோ உன்னைச் சந்தித்து பேசிவிட்டேன். உனது கடைசி ஆசைகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்குமா? எனக்குத் தெரியாது. ஆனால் என் மனதின் ஒரு ஆசைகளில் உனது இறுதிக்காலத்தில் உன்னோடு நான் இருக்க வேண்டும். சந்தோசங்களை மட்டுமே எனக்கு கொடுத்த உனது கடைசிக் காலத்தில் உடனிருபப்தை என்னால் எப்படித் தவிர்க்க முடியும். சுய உணர்வு நன்றாகவே இருக்கிறது. உணர்ச்சிகள் வேலை செய்கிறது. தொண்டைக்குழி மிகச் சிரமப்பட்டு ஒருமுறை மேலும் கீழும் ஏறி இறங்கியது. எச்சில் விழுங்கியிருக்க வேண்டும். அந்த வேதனை கண்ணில் தெரிந்தது. மிகவும் சிரமப்படுகிறாள். அவ்வளவு யோசித்த எனக்கே ஒருநிமிடம் இந்தக் கஷ்ட்டத்திலும் உயிர் இன்னும் ஏன் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது தெரியவில்லை என்ற எண்ணம் வந்த போனது.


வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட இல்லையென்று மறைவாக சொன்னவர்கள் எல்லாம் வாயடைத்து போக அத்தையின் வயிற்றில் புல் போல ஏதோ வளந்திருப்பதாகச் சொன்னார்கள். புண்கள் அழுகி அதில் புழுவும் வந்தாகிவிட்டது. கடைசியாக ஊர் வாயையும் மூடித்தான் விட்டிருந்தாள். அவளைப்பொறுத்தவரை எதிலும் தோல்விகள் இல்லைதான். இன்னும் என்ன சாதிக்க உயிரைக் கையில் பிடித்திருக்கிறாள்?. இறைவா இதற்கு மேலும் வலிகளைத் தராதே என்று ஒருகணம் என் பங்குக்கு வேண்டினேன். மீண்டும் உற்றுப்பார்த்த கண்களில் சலனம் இருந்தது. வேறு எங்கோ பார்த்திருந்தாள். எனக்கான நேரம் முடிந்துவிட்டது போலும். முகத்தை ஆழமாக ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். இந்தவிதமான காத்திருப்புகள் மிகவும் கொடுமையானவை. ஒருவரின் உயிர்போக எத்தனை பேர் வேண்டுதல்கள், காத்திருப்புகள். அந்தக் கடவுளே அத்தைக்காக வேண்டியிருக்க வேண்டும். அப்படித்தான் இருந்தது அவளின் நிலமை. வாசலைக் கடந்து வந்திருந்த போதிலும் அங்கு பரவியிருந்த வாடையில் அத்தை நிரம்பியிருந்தாள். எரித்தால்தான் போகும்அந்த வாடை. படிகளைக் கடந்து கீழிறங்கினேன். கூட்டம் இப்போது அதிகமாயிருந்தது. கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் வந்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அவர்கள் எல்லோரிடத்திலும் என்னிடம் பேசியதுபோல அத்தை பேசுவாளா தெரியாது.


அனேகமா இன்று இரவே பிரியலாம், மறுநாள் எரிப்பார்கள். வரும் நாட்களில் அத்தையின் சுவடுகள் இல்லாமல் போகும். சில நாட்கள் நினைவுகளிலும், பலரின் அனுதாபப் பேச்சுக்களிலும் அடிபடுவாள். சுற்றுவட்டாரத்தில் யாரவது இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் நினைவுபடுத்தப்படுவாள். யாருக்காவது கடுமையான வயிற்றுவலி வந்தால் ஜெயாவுக்கு ஆனதுபோல் ஆகிவிடப்போகிறது என்னவென்று உடனே பாருங்கள் என்று எச்சரிக்கை செய்ய உதவுவாள். எல்லாக் காரணிகளையும் வைத்துப்பார்க்கும்போது அத்தை நல்வாழ்வை ஒன்றைத்தான் வாழ்ந்திருக்கிறாள். அவளின் சகாப்தம் இத்தோடு முடிகிறது. என்னவெல்லாம் மனதில் பூட்டிவைத்தாளோ? எவ்வளவு இருக்கங்களைச் சுமந்தாளோ? எல்லாம் காற்றில் பறக்கும் பஞ்சாய் பறக்கப்போகிறது. மிகப்பெரிய விடுதலை. ஆனால் ஜெயாவைப் பொறுத்தவரை விடுதலையென்பது பெரிய தண்டனைக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. அந்த தண்டனையால்தான் அவளுடைய மரணமே அவளுக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுக்க இருக்கிறது. அவளுக்கு மட்டுமில்லாது அந்த ஊர்காரர்களுக்கே சந்தோசமான சாவுதான். அவளின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்த அனைவருக்கும் இப்போது அவள் படும் கஷ்ட்டங்கள் சகிக்கமுடியாதவை. ஊர்த்தெய்வங்களை சிலர் வேண்ட, சிலர் கடிந்தும் கொண்டார்கள். புரிந்த கொள்ளமுடியாத ஒரு அமைதியான சூழ்நிலை அங்கு நிலவியிருந்தது.



கடற்கரையிலிருந்து கிளம்பவேண்டும் என நினைத்தபோது இரவாகியிருந்தது. இறுதியாகக் கடலை ஒருமுறை கண்களால் சுழற்றிப்பார்த்தேன். இந்தமுறையும் எவ்வளவு பெரிய குணப்படுத்துதலை எனக்குச் செய்திருக்கிறது. அதற்காக நன்றிகளைச் சொன்னேன். இதென்ன புதுப்பழக்கம் நன்றியெல்லாம். ஆமாம் இன்றைக்கு இறந்த ஜெயாவின் உடலை நாளைக்கு ஊரின் சுடுகாட்டில் எரித்து மறுநாள் இதோ என் முன் விரிந்திருக்கும் கடலின் ஏதோ ஒரு கரையில் அவளின் அஸ்தியைக் கரைக்கலாம். இங்கிருந்து நானும் கடலில் கால்வைத்து அந்த துக்க நிகழ்வில் பங்கெடுக்கலாம். ஒரே நீர், ஒரே கடல். ஒரே உயிர். ஒரே மனம்.


இரவு நேரம் அதிகமாகியிருந்தது. மறுநாள் வேலைக்கு செல்லவேண்டும். விடுமுறை போட்டால் சம்பளம் அதிகமாகப் பிடித்தம் செய்யப்படும். இவையெல்லம் ஒருபுறமிருக்க எனது மனது நாளைய வாழ்க்கையை எண்ணியது. வீட்டை நோக்கி நடந்தேன். யதார்த்த நிஜமான வாழ்க்கையென்பது அதுதானே, அதைத்தானே வாழக்கையென்று அறுதியிட்டு வைத்திருக்கிறார்கள்.


கண்களை மூடிய நிலையில் இந்நேரம் அத்தை இறந்திருப்பாளா? இல்லை இன்னும் கண்களை உருட்டிப் பார்த்துக்கொண்டே யாரையாவது தேடிக்கொண்டிருப்பாளா? மனதை அந்த விஷயங்களில் இருந்தும் நினைவுகளில் இருந்தும் மீட்டெடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. கடலை நினைப்பதைத் தவிர்க்க மிகவும் கஷ்ட்டப்பட்டேன். எப்படித் தூங்கினேன் தெரியாது.


மறுநாள் மாலையில் அம்மா அழைத்து நேற்று இரவே அத்தை இறந்துவிட்டதாகவும், காலையில் பத்துமணிக்கே எரித்துவிட்டார்கள், நாளைக்கு அஸ்த்தியை கரைக்க சிப்பிகுளம் கடலுக்கு செல்வதாகச் சொன்னாள்.


நாளை வேலை முடிந்ததும் சீக்கிரமாகவே கண்டிப்பாகக் கடலுக்குச் செல்லவேண்டும்.





மனதுடன் ஒரு நாள்

 நேற்று சரியாக 11 மணியளவில் பெருங்களத்தூர் அடுத்து GST  சாலையில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நடந்த சம்பவம். எப்போதுமே பரபரப்பாக இருக்கும், அதுவும் முக்கியமாக அதிக எண்ணிக்கையில் லாரிகள் செல்லும் வழித்தடம். நான் நின்றிருக்கும் இடத்துக்கு சற்றே எதிரில் ஒரு இடைவெளி U turn போடுவதற்காக இருக்க, அந்த இடத்துக்கு   மெதுவாக பைக்கில் வந்து நின்றார்ஒருவர். சில நிமிடங்கள் இடம், வலம் வண்டிகள் வருகிறதா எனப் பார்த்தபிறகு திரும்ப முயல அப்படியே நின்ற இடத்தில் சாய்ந்தார். நான் நின்றிருந்த சாலையில் அதிகமாக வண்டிகள் சென்றதால் அவர் இருக்கும் இடத்திற்கு கடந்து செல்ல இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும். அதுவரை அவர் விழுந்த இடத்தில் அப்படியே அசையாமல் கிடந்தார். நானும் மற்றவரும் சேர்ந்து வண்டியைத்  தூக்கும்போதுதான் தெரிந்தது அதிகமான போதையில் இருக்கிறார் என்பது. என்கூட உதவிக்கு வந்தவர் இவ்வளவு குடித்துவிட்டு வண்டி ஓட்டி இவங்களும் சாவாங்க, மத்தவங்களையும் சாகடிப்பாங்க என்ற விரக்தியோடு தூக்கி விட்டவுடன் போய் விட்டார். எழுந்து நின்றவரால் நிலையாக வண்டியைப் பிடித்துக்கொண்டு நிற்க முடியவில்லை. ஒருவழியாக வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் ஒரு பார்வையைப்  பார்த்தபடி வண்டியை மீண்டும் எடுக்கப் போகும்போதுதான் வண்டி off ஆகியிருந்ததே தெரிந்தது. 


Start செய்யமால் வண்டியை ஓட்டுவதற்கு  முயன்று கொண்டிருக்க, வண்டி off ஆகியிருக்கிறது என்பதை நான் தான் தோளில் கைவைத்து அவரிடம் சொன்னேன். அதனை start செய்ய கீழே இறங்கும்போதும் மீண்டும் ஒருமுறை விழும் நிலைக்குப் போனார். ஒருவழியாக stand போட்டு ஆட்டோ ஸ்டார்ட் செய்ய வண்டியில் உயிரில்லை. பின்பு மிதித்துப்  பார்க்க வண்டி “எனக்கென்ன” என்றது. இத்தனையும் அந்த சாலையின் ஓரத்தில்தான் நடந்து கொண்டிருந்தது. போகிறவர்கள் எல்லாம் கொஞ்சம் விலகி எதோ ஒன்றை பார்ப்பதைப் போல பார்த்துவிட்டுப்  போனார்கள்.


எதிரே மூடியிருந்த கடையின் திண்ணையைக்  காட்டி சிறிது நேரம் அமர்ந்து விட்டுத்  தெளிந்தவுடன் போங்கள் என்று சொன்னதுக்கு, “ரெம்பத்  தெளிவா இருக்கேன் சார் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை வண்டிதான் மக்கர் பண்ணுது சரியாகிடுச்சுனா நான் போய்டுவேன் ஒன்னும் பிரச்சினையில்லை” என்றார் தள்ளாடியபடி. குறைந்தது இருபது தடவைக்கு மேலாவது   மிதித்திருப்பார். ஆனாலும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.நானும் முயற்சித்துப்  பார்த்தேன் ஆகவில்லை. அப்படியே சில நிமிடங்கள் மௌனமாகக்  கழிய, மீண்டும் முயற்சித்தார் இப்போதும் ஆகவில்லை.


“எங்க போனும்?” நான் கேட்டேன்.

“ஆவடி சார் “ என்றார் போதையில் சிரித்தபடி.

“அவ்வளவு தூரம் எப்படி இந்த நிலைமையில் போவீங்க? பக்கத்துல உங்க நண்பர்கள் இருந்தால் சொல்லுங்க வர சொல்றேன்?”

“சார் நீங்க பயப்படாதீங்க நான் தெளிவா இருக்கேன் நான் போய்டுவேன்” என்றார்.

“சரி அரைமணிநேரம் அங்க உட்கார்ந்துட்டு போங்க ரெம்ப தடுமாறுது”

“சார் கவலையே படாதீங்க நான் போய்டுவேன், என்ன இந்த வண்டிதான் பிரச்சினை பண்ணுது” என்று சொல்லியபடியே மீண்டும் மிதிக்க ஆரம்பித்திருந்தார்.


கொஞ்ச நேரத்தில் ஸ்டார்ட் ஆகி உடனே நின்றுபோனது. அது அவருக்கு ஒரு உத்வேகமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் பலம்கொண்டு முயற்சித்து ஒருவழியாக ஸ்டார்ட் செய்துவிட்டார். வண்டிமீது தள்ளாடியபடி ஏறி அமரும் போதே ஒருபக்கமாக சரிந்து விழுவது போல போக கால்களை வைத்து சமாளித்தார். இன்னும் stand எடுக்கவில்லை. வண்டியில் அமர்ந்த நிலையில் பின் பக்கம் நின்றிருந்த என்னை நோக்கி “சார் கவலைப் பாடாதீங்க நான் போய்டுவேன், நீங்க போங்க நான் போய்டுவேன் ஒன்னும் பிரச்சினையில்லை” என்பதைத்  திருப்பத்  திரும்ப சொன்னார்.


நானிருக்கும் பக்கம் கொஞ்சம் சாய்ந்து எனக்கு கைகொடுக்க வர மீண்டும் வண்டி அங்கிருந்த divider மீது சாய்ந்து நின்றது.மீண்டும் தன் காலால் நேராக கொண்டுவந்து, கீழே இறங்கி stand ஐ  எடுத்து மேலே தள்ளாடியபடி அமர்ந்து கடைசியாக என்னிடம் வரேன் சார் நான் போய்டுவேன் நீங்க கவலைப் பாடாதீங்க நீங்க போங்க என்றார்.


கிளம்பியதும் கொஞ்ச நேரம் அவரின் முதுகையும் வண்டி ஓட்டுவதையும் பார்த்துக்கொண்டிருந்தேன். வண்டி நிலையாக செல்லவில்லை. அதுவும் வண்டலூரில் இருந்து ஆவடி வரை எப்படி இதே நிலையில் பயணிக்கப்போகிறார் என்ற சிந்தனையில் நான் மூழ்கத் தொடங்கியிருந்தேன். அவர் அந்த நிலைமையில் அங்கிருந்து சென்றதை இன்னும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எதாவது செய்து அவரை நிறுத்தி வைத்திருக்கலாம். அதிக பட்சமாக வண்டியின் சாவியைப் பிடிங்கியாவது நிறுத்தியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல்  விட்டது மனதில் ஏதோ செய்தது. 


என்னதான் தெரியாத மூன்றாவது மனிதனாக இருந்தாலும் அங்கு வந்து விழுந்தது , அதன்பின் அவர் நடந்த கொண்ட விதம்  என்னை கொஞ்சம் பாதித்திருந்தது. எத்தனையோ பேர்கள் இதே சென்னையில்  இந்த நிலையில் அல்லது இதைவிட மோசமான நிலைமையில்  சாலைகளில் பயணித்துக் கொண்டிருப்பார்கள்தான், ஏன் சிலர் விபத்துக்களிலும் சிக்கலாம், மரணிக்கலாம். தினந்தோறும் செய்திகளிலும், நேரடியாகவும் சந்தித்த நிகழ்வுகள்தான்  என்றாலும் இந்த விசயம் கொஞ்சம் வித்தியாசமாக என்னுள் மாறியிருந்தது. 


பத்துநிமிடம் அவருடன் பேசியிருந்தாலும், அவருடைய போதைகலந்த கண்கள், பதற்றத்தில் வேர்த்திருந்த முகம், கீழே விழுந்ததில்  ஆடையில் ஒட்டியிருந்த மண் என எல்லாமே என் மனதில் ஆழாமாகப்  பதிந்திருந்தது. எனக்குத்தான் இவ்வளவு பதட்டமும், கவலையும் இருந்திருக்குமா? ஒருவேளை அவருக்கு இது தினம் நடக்கும் ஒரு சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம். தினமும் வேலை முடிந்தவுடன் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ கவலைகளை மறக்க அல்லது பணியில் இருக்கும் மன அழுத்தத்தைப்  போக்க இவ்வாறு  செய்பவராகவும் இருக்கலாம்.வேலை செய்யும் நிறுவனத்தின் ஆடையில்தான் இருந்தார். வேலை முடித்துவிட்டு சென்று குடித்துவிட்டு வந்திருக்கிறார். துணைக்கு யாரும் இல்லாமல் தனியாக வந்துவிட்டார்.


என்னுடைய பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்தேன்.இரவு வேலையென்பதால் பேருந்தில் சிறிது நேரம் தூங்குவது வழக்கம். ஆனால் இன்று என்னால் முடியாது. மனது முழுதும் அந்த நிகழ்வுதான் இருந்தது. அனேகமாக வண்டலூர்  பாலம் ஏறி இறங்கியதும் விழுந்திருப்பாரோ? பெருங்களத்தூரில் சரியில்லாத குண்டும் குழியுமான  சாலைகளில் தடிமாறி விழுந்திருந்தால்  அங்கு எப்போதும் இருக்கும் வாகன கூட்ட நெரிசலில் என்னவாகியிருப்பார்? அப்படியே விழுந்திருந்தாலும் யாரவது தூக்கிவிட்டிருப்பார்களா? எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வீடு போய்ச் சேர்ந்துவிடுவரா? என்ற எண்ணங்கள் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டே இருந்தன. குறைந்தபட்சம் இவ்வளவு அக்கறை கொள்பவன் அவரிடம் அலைபேசி எண்ணாவது வாங்கியிருக்கலாம். வீடு போய் பத்திரமாக சேர்ந்தார இல்லையா என்பதைத் தெரிந்துவிட்டிருந்தால் இந்த மன உளைச்சல் எனக்குள் இருந்திருக்காது.


இந்நேரம் எங்கு சென்று கொண்டிருப்பார்? ஏதாவதொரு இடத்தில காவல் துறையிடம் மாட்டியிருந்தால் சந்தோசம்தான். அவர்கள் விசாரணை என்கிற பெயரில் நிறுத்திவைத்து காலம் தாழ்த்தி அனுப்புவார்கள். கொஞ்சம் போதை இறங்கியிருக்க வாய்ப்பு இருக்கலாம். கைது செய்து அல்லது அவரது நிலையைப் பார்த்தபிறகு இருந்துவிட்டு காலையில் செல்லுமாறு சொல்லியிருந்தாலும் நிம்மதிதான். அதிகபட்ச வாய்ப்பாகத்  தண்டனை என்ற பெயரில் பணம் மட்டும் வாங்கிவிட்டு அவரை விட்டிருந்தால் எனது மன ஓட்டம் இன்னும் அவரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


வீட்டுக்குத்  தெரியுமா? அவர் இந்த நிலையில் வந்துகொண்டிருக்கிறார் என்று. அந்த முனையில் இருக்கும் மனைவியோ,அம்மாவோ, பிள்ளைகளோ எவ்வளவு பயத்திலும் துன்பத்திலும் இருப்பார்கள். யாரென்று தெரியாத நான்  இவ்வளவு யோசனைகளில் சிக்கித்தவிக்கும் போது அவரின் குடும்பத்தினரின் மனநிலை இன்னும் என்னை கவலைகொள்ளச் செய்தது. பேசாமல் வீட்டில் போய் குடித்திருக்கலாம் அல்லது குடிக்காத நண்பன் ஒருவனைத்  துணைக்கு அழைத்து வந்திருக்கலாம்.


பேருந்து பயணம் முழுதும் அவரின் பயண முடிவுதான் என்னை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. சரியாக நாற்பது நிமிடங்கள் கடந்திருக்கும். இந்நேரம் அவர் சரியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லமல் சென்றிருந்தால் அவர் வீட்டுக்கு அருகில் சென்றிருக்கலாம். அல்லது நான் முதலில் நினைத்தது போல வண்டலூர் பாலத்துக்கு அடியிலேயே விழுந்து கிடக்கலாம். எதுவுமே இதுதானென்று என்னால் முழுமையாக யூகிக்க முடியவில்லை. நல்லவிதமாக நேர்மறையான எண்ணமாக இருக்கட்டுமே என்று கண்டிப்பாக வீடுபோய் சேர்ந்துவிடுவார் என்று மனதை சமாதானம் செய்ய முயன்றாலும், அப்படியில்லாமல் இப்படி ஆகியிருக்கலாமே என்று மனது பல்வேறு கற்பனை நிகழ்வுகளைக்  கட்டவிழ்த்து விடுகிறது. அதில் அவரின் மரணமும் அடங்கும். இறந்துபோனால் நாளைக்கு செய்த்தித்தாள், தொலைக்காட்சி செய்திகள் என ஏதாவதொரு இடத்தில் அவரின் விவரம் வரும் என்ற எல்லை வரை சிந்தனைகள்  போய்க்  கொண்டிருந்தது. நான் ஏன் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன்? ஒருவேளை அவரின் மேல் உள்ள அக்கறை என்ற  பெயரில் மனது வக்கிர எண்ணங்களால் சந்தோசம் அடைகின்றதோ?  அல்லது உண்மையில் அவரின் நிலைமையைப் பார்த்ததில் எனக்குள் வந்த இரக்கமா? எதையும் சரியாக முடிவெடுக்க முடியவில்லை. 

பேருந்து பயணம் முடிந்து நிறுவனத்தின் வேலையில் எட்டு மணிநேரம் மூழ்கிப்போனேன். வேலையில் இருந்த பிரச்சினையில் அந்த மனிதரின் நினைவுகள் சுத்தமாக மனதில் இல்லாமல் இருந்தது. மனதுக்கு தேவையானது ஏதாவதொரு விசயம். மனமானது வெறுமனே இருக்க விரும்பாது. எதையாவது ஒன்றை சிந்தித்தோ, எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் எண்ணங்களும், சிந்தனைகளும் மாறலாம், ஆனால் ஒருபோதும் வெறுமனே அமைதி கொள்ளாது. என்னதான் தியானம் செய்து மனதை ஒருமுகபடுத்தினாலும் அதுவும் ஒருவிதமான கட்டுபடுத்தும் முறைதான். தியானம் முடிந்ததும் மெல்ல மெல்ல மீண்டெழும் அதே எண்ணங்களை தடுக்க முடியாது. நீண்ட பயிற்சியில் நீங்கள் சொல்வதை மனது கேக்கும் நேரம் குறையுமே தவிர உங்களால் ஒரு வெறுமையான மனதை உருவாக்கிக்கொள்ள முடியாது. 


வேலை முடிந்து திரும்பி பேருந்தில் வரும்போதுகூட வேறு எண்ணங்கள் இருந்ததே தவிர அவரைப்பற்றிய விஷயங்கள் எதுவுமில்லை. பேருந்தில் இறங்கியதும் அந்த இடம் கண்ணில் பட்டது. அங்கிருந்த மண்ணில் கால்தடம், வண்டி விழுந்திருந்த கோடுகள் என சட்டென எல்லாமே நினைவுக்குள் புகுந்து கொண்டது. மீண்டும் அதே கேள்விகள், அவருக்கு என்னவாகியிருக்கும்? இப்போது உயிரோடு இருப்பாரா? வீடுபோய் சேர்ந்திருப்பாரா? என்ற எண்ணங்கள். ஆனால் இரவில் இருந்த வீரியம் இப்போதில்லை. ஒரு ஓரத்தில் லேசாக வந்து போவதுபோல உணர்வு. உண்மையில் அவருக்கு என்ன ஆகியிருக்கும் என்ற ஆர்வம் கொஞ்சம் குறைந்தேதான் இருந்தது. ஒருகட்டத்தில் நேற்று ஏன் அவரைப்பற்றி அவ்வளவு கவலைப்பட்டோம்? அவர் செய்தது தவறுதானே? குடித்துவிட்டு ஏன் வண்டி ஓட்டுகிறார்? அதற்கான தண்டனையை அவர்தானே  அனுபவிக்க வேண்டும். அதற்குபோய் ஏன் நான் அவ்வளவு யோசித்தேன். இந்நேரம் அவர் எப்படியிருந்தாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விகளெல்லாம் ஏன் நேற்றே வரவில்லை? வந்திருந்தால் மன நிம்மதி இருந்திருக்குமே?.


நடந்து வந்ததில் மளிகைக்கடை வந்திருந்தது. மனைவி குறுஞ்செய்தியில்  அனுப்பியிருந்த பொருள்களை வாங்கவேண்டும். பணம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்கத் தொடங்கினேன். இப்போது மனதில் வேறு எண்ணங்கள் குடியேறின. அந்த மனிதர் உலகில் வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் என் மனதில் இருந்து முழுவதும் விலகத்தொடங்கியிருந்தார். கொஞ்ச நாள்களில் அப்படியொரு சம்பவம் நடந்ததே நினைவில் இல்லாமல் போகலாம். என்றாவது ஒருநாள் அதே மனிதர் மீண்டும் அதே இடத்தில் வந்து விழுந்து மீண்டும் எண்ணங்களை கிளரிவிடலாம். அதுவரை அவர் என்னுள் இறந்துபோய்விடுகிறார்.


இன்றைய நாளைக்கான எண்ணங்களும்,சிந்தனைகளும் மனதுக்குள் சூழ்ந்தன. மனது விசித்திரமானதுதான். மறதி என்ற மருந்தால் மனது  ஒவ்வொரு வினாடியும் தன்னை புத்தம் புதியதாகப்  புதுப்பித்துக்கொண்டு இருப்பதை இப்போதைக்கு என் மனதில் நினைத்து வியந்து கொண்டிருக்கிறேன்.