பயணங்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே
தோன்றுகிறது. எதோ ஒரு காரணத்திற்காக நாம் செய்யும் பயணத்தில் இருக்கும் சில நல்ல
விசயங்களை கண்டிப்பாக எல்லோருமே அனுபவித்தே ஆகியிருக்கவேண்டும். அனுபவங்கள்
செய்யும் பயணத்தின் நோக்கத்தை பொறுத்து மாறுபடும். சிலர் பொழுதுபோக்குவதற்கு என்றே
செய்யும் உல்லாச பயணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் அன்றாட சுய தேவைகளுக்கான பயணங்களே அதிகம்.
அதிலும்
முக்கியமாக பேருந்து பயணம். அதிக தொலைவில்லாத பேருந்து பயணம் எனக்கு பிடித்தமான
ஒன்று.குறைந்தது 6~8 மணி நேரமாக இருந்தால் சலிக்காமல் இருக்கமுடியும். அதுக்கு
மேல் போனால் எப்போது இறங்குவோம் என்று இருக்கும்.பயணிக்கும்போது இருக்கும்
மனநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எங்கு செல்கிறோம் எதற்கு
செல்கிறோம் போன்ற விசயங்களே. ஒரு சந்தோஷமான நிகழ்வை எதிர்கொள்ள பயணிக்கிறோம்
என்றால் கண்டிப்பாக பயணம் முழுதும் அந்த எண்ணங்களே நிறைந்து இருக்கும் மனதில். இக்கட்டான அல்லது கவலையான
நினைவுகளோடு செய்யும் பயணங்களும் இருக்கவே
செய்கின்றன. என்னவென்றால் அந்த எண்ணங்கள் பயணிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிளியே
மறக்கடிக்கப்பட்டு மனதிற்கு கொஞ்சம் இதமாக்கும் சக்தி பயணங்களுக்கு உண்டு.
தனிமையான பயணங்கள் இன்னும் இனிமையானவை. நம்மை பற்றிய
எண்ணங்களை அசை போட்டுக்கொள்ள இதைவிட சிறந்த தருணம் வேறெதுவும் இருக்க
முடியாதுதான்.துக்கமோ சோகமோ முன்னர் நடந்த விசயங்ககளை பற்றி யோசித்து அதில்
முடிவுகளை எடுக்கும் தருணமாகவும் அது இருக்கும்.இதுவரை நான் சொன்னது ஒருவரின்
தனிப்பட்ட மனதின் எண்ணங்களை பயணங்கள் எப்படி மாற்றுகின்றன என்பதுதான்.
இது தவிர்ந்து யாராக இருந்தாலும் கண்டிப்பாக அனுபவித்தே
ஆகவேண்டிய சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன இந்த பேருந்து பயணத்தில் அதுவும்
நமது தமிழ்நாட்டில்.ஏறி அமர்ந்ததில் இருந்து இறங்கும் வரை நடக்கும் விசயங்கள்
பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே.
ஏறும்போதே நடத்துனர் கத்துவார் இடையில் எங்கும் நிக்காது
என்று. அதாவது நீங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் அடுத்து மதுரை தான்
நிக்கும் அதுக்கு அடுத்து நேரா நெல்லை என்றுதான் கூவிக்கொண்டு இருப்பார். ஆனால்
நேராக திருநெல்வேலியோ அல்லது மதுரையோ போகிறவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இடையில்
இறங்குபவர்களே அதிகமாக வாசலில் அடைத்து இருப்பார்கள். இப்படியே கொஞ்ச நேரம் கடந்துபோனவுடன்
நடத்துனர் உள்ளே எட்டிப்பார்ப்பார் உள்ளே ஈ ஆடிக்கொண்டு இருக்கும். அடுத்து அவர்
கூவுவது திருச்சி ஏறிக்கோங்க என்று. இப்போது கொஞ்சம் கூட்டம் நிறைந்து இருக்கும்.
இப்படியே நேரம் செல்ல கடைசியில் அந்த பேருந்து பயணிக்கும் வழியில் உள்ள அணைத்து
ஊருகளில் நின்று செல்லும்.
நான் மேலே சொன்னது அரசுபேருந்துகளில் இயல்பாக நடக்கும்
ஒன்று. தனியார் பேருந்துகளில் கொஞ்சம் தேவலை பயணசீட்டு முன்பதிவு செய்யும்போதே
அறிவிப்பு இருக்கும் இது எங்குமே இடையில் நிக்காது என்று. சொன்ன மாதிரியே இடையில்
எங்குமே ஊர்களில் நிறுத்துவதில்லை. காரணம் அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு
பயணசீட்டு முன்பதிவு ஆகிவிடுவதே . இதனால்தான் அவர்களால் இந்த மாதிரியான முடிவுகளை
எடுக்க முடிகின்றது. ஆனால் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஆகி, இடம் இல்லாமல்
இருந்தாலும் கடமைக்கு எல்லா ஊருகளுக்குள் சென்று திரும்புவது என்ன நேர்த்திகடனோ
தெரியவில்லை.
சரி பேருந்தில் ஏறி உள்ளே பார்த்தால் முதல் சீட்டில்
இருந்து கடைசி வரையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கைகள் எல்லாமே நிறைந்து எல்லாமே ஒற்றை
இருககைகளாக காலியாக இருக்கும். ஏதோ இரவில் வெளியில் இருக்கும் இயற்கை அழகை ரசித்து
விடிந்ததும் அதை கவிதையாக வடிப்பவர்கள் போலத்தான் அவர்கள் அந்த இருக்கைகளை
பிடித்து அமர்ந்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் பேருந்து கிளம்பிய
அரைமணிநேரத்தில் பேருந்து சத்தத்தை மிஞ்சும் குறட்டை சத்தம் வெளிவரும்.
நமக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் பெரியவிசயமாக இருந்தாலும் நாம்
கொண்டு போகும் பைகளை வைக்க இடம்கிடைப்பது அதைவிட கொஞ்சம் சிக்கலான விஷயம்.
எப்படித்தான் சுமந்து வருவார்களோ என்று ஆச்சரியப்படும் வகையில் கொண்டுவந்து
திணித்து இருப்பார்கள். அதுவும் அவர்கள் இருக்கை வேறு எங்கோ இருக்க அவர்கள் பைகள்
இங்கு வந்து வைத்துவிட்டு எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது போல
உட்கார்ந்துவிடுவதுதான் அவர்களின் வெற்றி.
எப்படியோ அதுக்கும் ஒரு சிறிய இடம்கிடைத்து உட்கார்ந்தால்
பக்க்கத்தில் உள்ளவரை கவனித்து நமது பணம் அல்லது முக்கியமான பொருள்களை எங்கெங்கே
எப்படி வைக்கவேண்டும் என்பதை பற்றி யோசிப்போம். அதற்குள் பேருந்து ஓரளவு நிறைந்து
இருக்கும். பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கும். யாரவது பெண்கள் ஏறினால் அவர்கள்
அமர இடம் இருக்காது அதான் இயற்கை பிரியர்கள் எல்லோரும் ஜன்னலோர இருக்கைகளை
பட்டாபோட்டு விட்டதால் பெண்கள் ஏறி அங்கு
இங்கும் தேடி தயங்கி நிற்கும்போது நடந்துனர் உள்ளே வருவார். அதற்கு முன் அவர்களே
இந்த இயற்கை பிரியர்களிடம் விண்ணப்பம் வைப்பார்கள் கொஞ்சம் மாறி உட்காருங்கள்
என்று. அவர் எதோ 1000 ரூபாய் கடன் கேட்கிறார் போல என்று நினைத்து எங்கோ வெளியில்
பார்ப்பார். அப்போது அந்த பெண் மனதில் என்ன திட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ள
எனக்கும் ரெம்ப நாள் ஆசை. யாராவது சொல்லுங்கள்.
நடந்துனர் வந்து ஒரு சிறிய கட்டபஞ்சாயத்து வைத்து அந்த
பொண்ணுக்கு இடம்பிடித்து கொடுப்பார். பெரும்பாலும் யாருமே இடம்மாறி
உட்காருவதில்லை. சிலர் அவர்கள் வருவதை பார்த்தவுடனே எழுந்து மாறி உட்கார்ந்துவிடுகிறார்கள்.
மாறி உட்காறாதவர்கள் இனிமேலாவது திருந்த முயற்ச்சியுங்கள்.
பேருந்து கிளம்பி கொஞ்சநேரத்தில் நடத்துனர் பயணசீட்டு
கொடுக்க வாருவார். அப்போதுதான் நாம் நமது செல்வசெழிப்பை காட்டுவோம்.
சொல்லிவைத்தற்போல் 500 ரூபாய் காட்டி அவரை கோபபடுத்தி அவர் யாருக்கு எவ்வளவு
சில்லறை கொடுக்கவேண்டும் என்பதை மறந்து குழம்பி ஒரு வழியாக அவர் எல்லாம் முடித்து
ஆட்களை என்னும்போது நீங்க கொடுத்த இந்த ரூபாய் கிழிஞ்சு இருக்கு பாருங்க இது
செல்லாது என்று கத்துவார் ஒருவர். வேண்டா வெறுப்பாக வந்து வேறு ரூபாய் கொடுக்க
அங்கு ஒரு கும்பல் தூங்க தயாராகி கொண்டு இருக்கும்.
இப்போது இரண்டு இருக்கைக்கு இடையில் இருக்கும் கைவைக்கும் கட்டைக்கு
ஒரு சின்ன பனிப்போரே நடக்கும். யாரு முதலில் அதிகமா கைவைத்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்களோ
அவர்களே பாக்கியாவான்கள்.என்ன சிரிப்பு என்றால் அடுத்த ஒருமணிநேரம கழித்து அவர்
கையை தனியாக வெட்டி எடுத்தாலும் தெரியாத அளவு தூங்கிகொண்டு இருப்பார். அதிலும்
பாதி பாதி இடத்திற்கு வார்த்தையில்லா சண்டை நடக்கும். கையை கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ந்துவது, கையை நகர்த்தி கொண்டே இருமுவது, வேண்டுமென்றே தூங்குவதுபோல்
நடித்துகொண்டு நமது கையை தள்ளிவைப்பது இதெல்லாம் அந்த நேரத்தில் நடக்கும்
ராஜதந்திர வேலைகள். நான் பொதுவாக முதலில் அவருக்கு எல்லா இடமும் கொடுத்துவிட்டு
தூங்கியவுடன் தேவையான இடம் பிடிப்பேன்
.
அடுத்து பின்சாயும் இருக்கையை பயன்படுத்துவதில். பின்னாடி
உட்கார்ந்து இருப்பவரை எந்தவித சட்டையும் செய்யாமல் டபக்கென்று பின்பக்கம்
சாய்த்து அவரை கோபபடுத்துவதில் என்ன இன்பமோ.அதிலும் பின்பக்கம் உள்ளவர் இவ்வளவு
ஏன் சாய்க்கிறிங்க என்று கேள்வி கேட்பார். அதுக்கு எந்த விதபதிலும் இருக்காது.
ஒருமுறை பின்பக்கம் பெண் உட்கார்ந்து இருக்க முன்பக்கம் என் அருகில் உட்கார்ந்து இருந்தவர்
முழுதும் சாய்த்து படுத்து தூங்க நினைக்க அந்த பெண் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க
என்னால உட்கார முடில என்று சத்தம் போட அப்புறம் நடந்துனர் வந்தும் பஞ்சாயத்து செய்தும்
பலனில்லை. அவர் அவரின் உரிமையை முழுதும் பயன்படுத்தி கொண்டார். அப்போது நடந்துனரிடம்
கேட்ட ஒரு கேள்வி என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது இவ்வளவு அதிகமாக சாய்க்க வேண்டாம்
என்றால் பின் ஏன் இருக்கையை இப்படி அமைக்கிறிர்கள் என்றார்.
அந்தப்பக்கம் பெண் விடுவதாக இல்லை. ஏன் என் மடியில் பாடுத்துக்க
வேண்டியது தானே இப்படி பண்ணுவதுக்கு என்று சொல்ல இவர் அது என்ன என் தல எழுத்தா
உங்க மடியில் படுக்கனும்னு என்று பதில் அளித்தார்.அந்த எண்ணம் வேற இருக்கா என்று
அந்தப்பெண் கேட்க இவர் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டார். அந்த பெண் எதோ
புலம்பிகொண்டே தூங்கிபோனார். விஷயம் என்னவென்றால் என் அருகில் அமர்ந்தவர் இடையில்
இறங்கிய பின்னும் அவர் இருக்கை பின் சாய்க்கபட்ட நிலையில் இருந்தும் அந்த பெண்
சந்தோசமாக தூங்கி கொண்டுதான் இருந்தார்.
இடையில் உணவுவிடுதியில் நிற்காத பேருந்துகள் இருந்தால்
சொல்லுங்கள் புண்ணியமாக போகும். முக்கியமான அழிம்புகள் அங்குதான் நடக்கிறது.
இறங்கி சிறுநீர் கழிக்கும் இடத்தை தவிர எல்லா இடத்திலேயும் கழிக்கிறார்கள். அதை
தடுக்க தனியாக காவல்காரன் வேறு. கையில்
லைட் வைத்துகொண்டு யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை பின்னால் இருந்து
வெளிச்சம் மற்றும் சத்தம் போட்டு காட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. சரி காசு
கொடுத்து போலாம் என்றால் வெளியில் இருப்பதுக்கும் அங்குபோவதுக்கும் ஒரே
வித்தியாசம் ஒரு குட்டச்சுவர் மட்டுமே.சுத்தம் வேறு இல்லை. என்ன நேர்த்திகடனோ
தெரியவவில்லை அங்கு வரும் பயணிகளை அந்த சுவரின் மீது கழிக்கவைப்பதில்
.
நள்ளிரவில் மசாலா நிறைந்த பொருள்களை வாங்கி ஆனந்தமாக
தின்பவரை அங்குதான் பார்க்கமுடியும்.அதுவும் கடந்த சில நிமிடங்கள் வரை நன்றாக
உறங்கி கொண்டிருந்தவரா இவர் என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரின் வேகம்
இருக்கும். எல்லாம் முடிந்து பேருந்து கிளம்பும்போதுதான் யாரவது ஓட்டுனரின்
அருகில் சென்று இருங்கள் இன்னும் ஒரு ஆள் வர வேண்டியது இருக்கு என்று சொல்லி
இன்னும் 10 நிமிடம் தாமதம் செய்வார். வரும் மனிதர் தனக்கும் இங்கு நிற்கும் பேருந்துக்கும்
எந்தவித சம்பந்தமே இல்லை என்பது போல நடந்து வருவார்.
எப்படியோ
ஒருவழியாக ஊர் வந்து இறங்கி பேருந்து கடந்து சென்ற பிறகு தன்னிலைக்கு வந்து
யோசித்து பார்த்தால் ஏதோ வேற்றுகிரக பயணம் மேற்க்கொண்டு திரும்பியது போல ஓர்
அனுபவம். அத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் கண்டிப்பாக இந்த மாதிரியான
பயணங்களில் மட்டுமே கிடைக்கும்.
************
இந்த வருடம் கோவில்பட்டி, எட்டையாபுரம் பக்கம் சுத்தமாக மழை
இல்லை. சென்னையில் பெய்த மழையில் கொஞ்சமாவது பெய்ந்து இருந்தால் அந்த பக்க
விவசாயிகள் சந்தோசப்பட்டு இருப்பார்கள். ஆனால் சுத்தமாக இல்லை.இன்னும் காத்து
இருக்கிறார்கள் மழை பெய்யும் என்று.
எப்போதும் வற்றாத கிணறுகள் கூட சுத்தமாக வற்றிவிட்டது.
ஆழ்துளை போட்டால் சுண்ணாம்புக்கல் பாறை வருகிறது. அப்படியே போட்டாலும் ஆழம் அதிகம்
ஆகிவிடுவதால் மோட்டரை இன்னும் கிழே இறக்கி வைக்கவேண்டும் அப்போதுதான் தண்ணியை
இழுக்கும்.தண்ணியின் ஆழம் அதிகம் என்பதால் வெளியேறும் அளவும் குறைவே. அதனால்
பாய்ச்சல் நேரமும் அதிகமாக ஒரு பிஞ்சையில் ஒரு பக்கம் இருந்து பாய்ச்சிக்கொண்டு
போய் முடிந்த பின்பு திரும்பி பார்த்தால் ஏற்க்கனவே பாய்ச்சி இருந்த எல்லாம்
வெயிலுக்கு காஞ்சி கருவாடாக போய் இருக்கும். வேறென்னே செய்ய திரும்பியும் முதலில்
இருந்து தொடர வேண்டும்.
தண்ணி வசதி இல்லாதவர்கள் கடவுளிடம் மழை வேண்டி காத்து
இருந்து காலம் போனதால் இப்போது மனம் மாறி விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.
இப்போது இருப்பவர்கள் கிணற்றில் கொஞ்சம் தண்ணி இருப்பவர்கள் மட்டுமே. ஏற்க்கனவே
அரசாங்க வேலை காரணமாக வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி கொண்டிருக்கும்
அவர்களுக்கு இந்த மழை இல்லாத பிரச்சினை ஒரு பெரிய இழப்பு. ஒருவேளை அந்த வேலை செய்யாமலே
சம்பளம் கிடைக்கும் திட்டம் ஓய்ந்தால் கொஞ்சம் விவசாயம் செழிக்க வாய்ப்பு
இருக்கிறது. இல்லையென்றால் வாய்ப்பு இல்லை. இதனால் கூலி ஆட்களின் சம்பளம் வேறு
கூடி விட்டது. வேலைக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் எங்களுக்கும் வேண்டும்
என்கிறார்கள். இவர்களை குறை சொல்ல முடியாது என்னை பொறுத்தவரை இவர்கள் மனசாட்சி
உள்ளவர்கள் உழைத்துவிட்டு சம்பளம் கேட்கிறார்கள்.
எப்படியோ ஒன்றும் மட்டும் உறுதி இந்த நிலை இன்னும்
நீடித்தால் அடுத்தவருசத்தில் அந்த பக்கம் கண்டிப்பாக விவசாயம் இருக்காது என்பதே
உண்மை. மழைக்கு, கடவுளுக்கு எல்லாம் காத்து இருந்த ஏமாந்த விவசாயிகள் ஒருநாள்
நம்மையும் ஏமாற்றுவார்கள். உணவு இல்லாமல் வாழமுடியாது. புரிகிறதா?
3 comments:
பயணம் பற்றிய அவதனிப்பு சுவாரஸ்யமான உண்மை. விவசாயிகளைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.
படித்துவிட்டு கருத்து சொன்னதுக்கு நன்றி ))
உங்களது நோக்கில் பேருந்து பயணத்தை எழுதியுள்ளீர்கள். ம்ம்.. நாங்கள் எழுதினால் வேறு மாதிரி இருக்கும்.
இரண்டாவது பகுதி என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. 100 நாள் வேலை திட்டத்தைத் தான் ‘வேலை செய்யாமலே சம்பளம் செய்யும் திட்டம்’ என்று சொல்கிறீர்களா? :) அந்தத் திட்டத்தால் விவசாய வேலைகள் பாதிக்கின்றன என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
Post a Comment